அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 10
31. நெடுந்தீவு
1984 முன்பனிக்காலம்
மைம்மல் பொழுதுக்கு கரையை அடைந்தோம். ஏழெட்டு நாட்கள் அந்தத் தீவுக்கரையில் ஒதுங்கினோம். தோழர் சண்ணின் கொட்டில் அது. சுற்றி முருகைக் கற்கள் அடுக்கிய வேலி. மழை பொழிந்து பொருமிப் போய்க் கிடந்தன முருகைக் கற்கள். மழை கண்டு வீங்கிச் செழித்துக் கிடந்தன கற்றாழைகள். பட்டிப்பூ பூத்திராத கடற்கரை அது. சுடும் வெய்யில் கண்டால்தான் அது கண்மலரும். இப்பொழுதோவென்றால் பாட்டம் பாட்டமாகப் பொழிகிறது மழை. முருகைக்கல் வேலியால் எட்டிப் பார்த்தால் வெளியழாவிக் கிடக்கிறது கடல். சோவென்று கொட்டுகிற மழையில் கடல் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. 'நேவி போட்' தெரிய எந்த அசுமாத்தமும் இல்லை. அவன் துப்பாக்கி சடசடத்து நெருப்பைக் கக்கினால்தான் 'அட உங்கார் நேவிக்காரன்' என்று தெரியும். தெரியும்வரை உயிர் தரித்திருக்குமா?
அதற்கு அஞ்சி காற்று அடங்கட்டும், மழை ஓயட்டும், கடல் வெளிக்கட்டும் என்று காத்திருந்தோம். காலையில் ஒரு மணித்தியாலம் கடல் கடந்து வருகிற தோணியில் 'ஈழநாடு' பத்திரிகை வருகிறது. அது ஒன்றுதான் அந்தத் தீவுக்கு ஏதும் செய்தி காவியது.
அப்படி ஒரு திடுக்கிடும் செய்தியை நின்ற நிலையில் நாம் வாசித்தோம். செய்தி இதுதான். 'யாழ் பல்கலைக்கழகத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து இடம் பெயர்ந்த பல்லைக்கழக மாணவர்கள் நேற்று இரவு கடத்தப்பட்டனர்.'
இது சரியா? பிழையா? இதில் ஏதும் அராஜகம் உள்ளதா, இல்லையா? இது போராட்டத்திற்குக் குந்தகமா, சாதகமா? என்று ஏதும் முடிவெடுக்க யார் கடத்தினார்கள்? எதற்காகக் கடத்தினார்கள்? என்பது எமக்குத் தெரியாதிருந்தது.
ஓய்ந்து போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்த அந்தத் தீவில் வேறேதும் எங்களுக்குச் சுவாரஸ்யமாக இல்லை. உணவு கூடச் சுவையாக இல்லை. சம்பலோடு அரைறாத்தல் றோஸ்பாண் வருகிறது. காலைச் சாப்பாடென்று அதைத் தின்பதில் வாய் உளைந்து போகிறது.
மத்தியானத்துக்கு மரக்கறி ஏதும் இல்லாமல் மீன் தண்ணியோடு (அதைக் குழம்பு என்று கூறக்கூடாது.) குத்துப் பச்சையரிசிச் சோற்றை உண்கிறோம். இரவென்றால் பாண் வரும் சிலவேளை. கட்டி கட்டியாப் புட்டும் வரும். இடிச்ச சம்பலோடை அல்லது வாழைப்பழத்தோடை.
ஒன்றிரண்டு நாள் சுவாராஸ்யமாக இருந்தது அந்தத் தீவு. பகல் முழுக்க 304 கார்ட்ஸ் அடி. இரவு லாம்பு வெளிச்சத்தில் அது விளையாட முடியாது. இரண்டு மூன்று நாட்களுக்குள் அதுவும் 'அழாப்பு குழாப்பிலும்' அடிபிடியிலும் முடிந்தது.
பொழுதுபடவே குளிரைக் கக்கத் தொடங்குகிறது கடல். பழஞ்சாக்கை காலுக்குப் போர்த்துக் கிடக்கிறோம். அஃதொன்றுக்கும் மசியாது குளிர் குத்துகிறது. எப்பொழுதுமே கடல் கறுத்துக் கிடக்கிறது. மழை பொழியக் காத்துக் கிடக்கிறது வானம்.
அப்படி ஏதும் சலிப்புத் தராமல் ஐந்தாறு நாட்களின் பின் ஒரு நாள் வானம் நீலம் பாரித்துக் கிடந்தது. எந்தத் தயக்கமும் இல்லாமல் சூரியன் ஒளிர்ந்தான். கடல் பொங்கிப் பூரித்துத் தளதளத்துக் கிடந்தது. இதுவரை நாளும் இருந்த ஊரா இது?
இல்லை. சரசரத்த பனையின் சிரிப்பைப் பார். பிடரி சிலிர்க்க துள்ளி ஓடுகிற குதிரைகளைப் பார். பச்சைப் புல்படர்ந்த நிலத்தைப் பார். முருகைக்கல் வேலியா இத்தனை அழகு? ஒழுங்கையில் நடந்து ஜெற்றியோட இருக்கிற தேநீர்க்கடையில் 'ஈழநாடு' பத்திரிகை வாங்க ஏலுமாக இருக்கிறதே! பத்திரிகை வாங்கப்போன இடத்தில் கடல் கூட என்னுடன் சிரித்துக் கதை பேசிற்றே!
இன்றைக்கு 'வண்டி' கட்டப் போறம் என்று தெரிந்து விட்டது. இப்படி வெளித்த பிறகு கடல் தெளிந்த பிறகு 'நேவி போட்' இல்லை என்று அறிந்த பிறகு, இந்தத் தீவுக்குப் பாரமாய் யார் இருப்பார்? இன்னும் இன்னுமென நாம் இருந்துவிட்டால் கடலில் அமிழ்ந்து விடாதா இத்தீவு?
குதிரைகள் மேய்கிற குளக்கரைக்கு தோழர் லோகநாதன் கூட்டிப் போனார். 'வடிவா கும்மியடிச்சுத் தோயுங்கோ' என்று குளத்துக்குள் எம்மை விட்டார். அடிமண்ணும் தெரிகிற தெளிந்த நீர். செம்பாட்டு நிறமோ சேத்துத் தண்ணியோ காட்டாமல் ஒரு குளம் இருக்க முடியுமா?
மைம்மல் பொழுதில் கடற்கரைக்கு தென்னைகள் நிறைந்த அந்த ஒற்றை வழிப் பாதையால் போகலாம். நிலவால் எங்கள் நிழல்கள் விழுந்துவிடாமல் தென்னைகள் மறித்தன. வண்டியில் ஏறுகிற போது நிழல் கடலில் வீழ்ந்ததை மறிக்க தென்னைகள் அங்கு இல்லை. வண்டியின் ஓட்டியாக தேவன் அங்கு இருந்தான். வெற்றிலை பாக்கு சப்பிய வாய் எப்பவும் தேவனுக்கு. சள சளத்துக் கதைக்க அது ருசித்துக் கொடுக்கிறது.
வண்டி சீறிப் பாய்ந்ததில், உப்புத் தண்ணீர் பிசிறி அடித்ததில், மண்ணெண்ணெய்ப் புகை கக்கியதில் நான் ஓங்காளித்து சத்தி எடுக்கத் தொடங்கினேன். 'தேவன் கொஞ்சம் மெல்லமாய் ஓட்டு' என்றார் தோழர் விசு.
மெல்லமாய் ஓட்டித்தான் என்ன? வயிற்றிலிருந்த அத்தனையும் வாய் வழியாக வெளியில் வந்தன. இனி வர ஒன்றுமில்லை என்ற பிறகு சுருண்டு படுத்தேன். அது கட்டி அடுக்கப்பட்ட 'ஈழநாடு' பேப்பர்களின் மீது. பரந்த கடலை ஆட்சி செய்த நிலாவும், தோழர் விசுவும், அகிலனும் என்னை அனுதாபமாகப் பார்த்தார்கள்.
'ஈழநாடு' பத்திரிகைத் துண்டுகளில் ஒரு துளி தண்ணீர் படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். 83 யூலை தமிழ் இனப்படுகொலை பற்றிய தெளிவான விபரங்கள் அதில் இருந்தன.
யாழ்ப்பாணம் நியூமாக்கெற்றில் நானும் அகிலனும் யெலோலைன் ரவுசர் துணிகள், பற்றிகள், லக்ஸ் சவர்க்காரங்கள் வாங்கினோம். தோழர் விசு மின்னலாக சடக்கென அங்கு தோன்றினார். 'நீ முதல் இதை நெடுந்தீவுக்குக் கொண்டுபோ. நான் அடுத்தடுத்த பஸ்ஸில வாறன். எல்லாரும் ஒருமிக்கப்போய் அம்பிட்டால் வீணான வில்லங்கம்'.
குறிகட்டுவானுக்குப் போற பஸ்ஸில் ஏறினோம். குறிகட்டுவானிலிருந்து படகில் நெடுந்தீவுக்குப் போகவேண்டும். படகில் ஏறுமட்டும் பயம். வழியில் ஆமி மறிக்கலாம். சோதிக்கலாம்.
ஆமி மறித்தது. சோதித்தது. தமிழ் வாசிக்கத் தெரிந்திருக்கவில்லை. 'பேப்பர் எதற்கு?' கேள்வி எழும் என்று தெரிந்ததால் பதில் தயாராக இருந்தது. 'கடைக்குச் சாமான்கள் கட்ட.....' குறிகட்டுவான் கடலில் 'குமுதினி' என்ற படகில் கால் வைத்த பிறகு பயம் என்று ஏதுமில்லை.
கட்டிக் காத்துவந்த பத்திரிகைத் துண்டுகளின்மேல் இப்போது கிடக்கிறேன். வெண்ணிலா தன் குளிரும் மௌனச் சிறகால் ஆசையாகத் தடவுகிறது. சளசளவென்று கதைத்தபடி விசு, அகிலன், ரஞ்சித், தேவன். சர்ரென நீரைக் கிழித்து வேகம் கொண்டது வண்டி.
பனைக்கரங்கள் அசைத்து வழியனுப்பி வைத்த தீவு மறைந்துபோக நிலவொளியில் கடல் மட்டும் ததும்பி நிற்கிறது. போகும் திசையில் செம்மஞ்சள் ஒளி வானில் படரக் கண்டேன். 'இந்தா இராமேஸ்வரம் தெரிகிறது' என்றான் தேவன். 'தேவன், கவனமாகச் செய்யுங்கோ. எந்த சிக்கலும் இல்லாமல் இராகவனை மீட்டிட வேணும்' என்றார் விசு.
தோழர் இராகவனை நீதிமன்றத்துக்குக் கூட்டிவரப் போகிறார்கள். போலிஸ்காரனுடன் பஸ்ஸில வரப்போகிற அவரை இடையில் வைத்துக் கடத்தத் திட்டம். தேவன்தான் அதைச் செய்யப் போகிறான். அது ஒன்றும் கடினமான காரியமல்ல.
கரவெட்டியைச் சுற்றி வளைத்ததில் தோழர் இராகவன் தோட்டத்தில் வைத்து பிடிபட்டிருக்கிறார். சிங்கள இராணுவத்திற்கு தோழர் இராகவன் ஒரு தோட்டக்காரன். ஆனால் அடையாள அட்டை இல்லை. அவ்வளவுதான். குருநகர் இராணுவ முகாமில் அடைத்து வைத்து விட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு போகிறார்கள்.
சளசளத்த கதையில், சைக்கிள் ஓட்டுவதில், வண்டி ஓட்டுவதில் காட்டுகிற வேகத்தை தேவன் இதிலும் காட்டுவான். வெற்றி கொள்வான்.
கடலைக் கிழித்து வேகம் கொண்ட தேவனின் வண்டி இராமேஸ்வரக் கரையில் மணலையும் கிழித்து மேலேறியது. 'கவனம் தேவன் வேகம் முக்கியம். நிதானம் அதைவிட முக்கியம்' என்றார் விசு. எல்லோரும் வள்ளத்தை ஒரு பிடி பிடித்துக் கடலுள் தள்ளினோம். கைகாட்டி தேவன், அலையடிக்க வண்டியை வட்டமடித்து கடலுள் சீறினான். திமிறிப் பீறி எழுந்தது கடல்.
32. இராமேஸ்வரம்
1984-பின் பனிக்காலம்
மழை தூறிக் கறுத்துக்கிடந்த கடலிலிருந்து மீண்டேன். தமிழ்நாட்டு இராமேஸ்வரக் கடலில் ரோலறில் ஏறி நாம் மிதந்தோம். குமார், சிறி, அகிலன் இவர்களும் என்னோடு, அசைந்து அசைந்து ரோலர் போயிற்று. ஆறு மணித்தியாலப் பயணம் என்றார்கள். இந்தியன் நேவிக்குப் பயப்பட ஒன்றுமில்லை. பிடித்தாலும் 'யெலோலைன் ரவுசர் துணி' அவர்களைச் சமாளிக்கும். இலங்கை நேவி கண்டால்.....? இந்து சமுத்திரத்திற்கு தமிழர் இரத்தம் மிகச் சிறிய துளி. ஆனால் என் தேசமும், தேகமும் அப்போதெல்லாம் அதிர்கிறது....
தோழர் சண்ணிடம் ஏற்கனவே அறிவித்தாயிற்று. 'இந்த நாள் இந்த நேரம் நெடுந்தீவுக் கடலுக்குள் வந்து விடுகிறோம்' அது விடியற்புறம் நான்கு மணி. நிற்க வேண்டிய இடத்தின் குறிப்பையும் கொடுத்ததுதான்.
பிறகு சொன்னான் 'உங்களைத் திருப்பிக் கொண்டு போய் இராமேஸ்வரத்திலை விடுறேனுங்க'
குமார் ஒருவனைத் தவிர எங்கள் ஒருவருக்கும் நீண்ட தூர நீச்சல் தெரியாது. போக, அரசியல் அறிக்கைகள் 'இலக்கு' அரசியல் சஞ்சிகை கட்டுக்கட்டாகக் கிடக்கின்றன. அவற்றை எவ்வாறு காவிச்செல்ல இயலும்?
சென்னையில் அச்சடித்த அந்தப் புத்தகங்களை இராமேஸ்வரக் கரைக்குக் காவிக்கொண்டுவர முதுகுத்தோல் உரிந்தது, அந்தப் புத்தகக் கட்டுக்களை திருவள்ளுவர் பேருந்தில் ஏற்றி மதுரையில் இறக்கினோம். மீனாட்சியம்மன் கோயில் தெற்கு மாசித்தெரு ஒன்றின் லொட்ஜில் அப் புத்தகக் கட்டுக்கள் காத்திருந்தன. கட்டுக்கள் இராமேஸ்வரக் கரைக்கு நகரக் காசு வேண்டும். காசுக்காகக் காத்திருந்தோம். தோழர் சண் ஈழக்கரையில் நிற்கிறார். அவர் காசு அனுப்ப வேண்டும். அவர் அனுப்புகிறாரில்லை. அல்லது வந்து சேர்கிறதாக இல்லை.
அதனால் காலைச் சாப்பாடில்லை. நான்கு பேருக்கு பேசினில் சோறு கறி வாங்கி ஒன்பது பேர் மத்தியானம் சாப்பிட்டோம். இராவுக்கு இரண்டு ரூபாவுக்கு ஓர் உணவு உண்டு. இரண்டு பரோட்டாவும் வெறும் குழம்பும். தண்ணீர் நிறையக் குடித்ததில் வயிறு அடங்கிப் போனது.
பத்து நாட்களிலும் ஒரு நாள் தப்பாது மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளில் உலா வந்தோம். மீனாட்சியம்மனின் பொன் வேய்ந்த கூரை, திருப்பரங்குன்றக் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று பார்த்தபோது தெரிந்தது. மாலைச் சூரியனின் கண்பட்டு தகதகவென மின்னியது. மறுபுறம் பார்த்தால் அட்டையைப் போல நீட்டு ரயில் ஊர்ந்தது. நெற்றியிலிருந்து குபுகுபுவெனப் புகை.
திருமலை நாயக்கர் மண்டபத்தின் ஒலி ஒளிக்காட்சியில் அம்மன்னனின் வாழ்வு சொல்லப்பட்டது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் ஒரு ஞாயிறுமாலைக்கான சனம் மோத 'மண்வாசனை' பார்த்தோம். அதன் பிறகு ஈழத்திலிருந்து காசு வந்ததாக இருக்க வேண்டும்.
ஒன்பது பேரில் நாங்கள் நால்வர்தான் ஈழம் போகிறோம். மற்றவர்கள் இங்கிருந்து பணிபுரிவார்கள். மதுரை ரயிலில் புத்தகக் கட்டுக்களுடன் ஏறினோம். ரயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கிற நேரமட்டில் ஒரு போலீஸ்காரன் ரோர்ச் லைற்றுடன் வந்தான். எந்த லைற்றும் எரியாத ரயில் அது. போலீஸ்காரன் கையிலிருக்கும் பொல்லால் புத்தகக் கட்டுக்களை அடித்துக் கத்தினான்.
குமார் எழும்பிப்போய் ஏதோ கதைத்தான். திரும்பி வந்து இருந்தபோது 'எவ்வளவு குடுத்தாய்?' என்று சிறி கேட்டான். குமார் கேட்காத மாதிரி கண்களை மூடி இருந்தான். மங்கல் லைற் எரித்தது.
இராமேஸ்வரத்தில் இறங்கி குதிரை வண்டியில் புத்தகக் கட்டுகளை ஏற்றினோம். ஒரு லொட்ஜில் நாங்கள் நின்றது நான்கு நாட்கள். ஈழக்கரைக்குப் போக 'வண்டி' இன்னும் கிடைக்கவில்லை. மணலில் கால் புதைந்து இராமேஸ்வரம் கோயிலுக்குப் போனதுபோக மகிழ, அங்கு ஒன்றும் இல்லை. கடற்கரை மணலில் கும்பிகும்பியாக மலம் கழித்து அங்கங்கே கிடந்த அரியண்டம்தான் இருந்தது.
'இராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ' என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கிற தேத்தண்ணிக் கடையில் எங்களுக்குச் சாப்பாடு இருந்தது. மத்தியானத்துக்குச் சோறும் மரக்கறியும். இரவுக்குப் பணிசும் ரீயும். ஐந்து ரூபாவுக்கு அது முடிந்தது. லொட்ஜுக்கான செலவு போக வேறொரு செலவும் எங்களுக்கு இல்லை.
இரவு வண்டி ஏறப்போவது பகல் ஒரு மணிக்குத் தெரிந்தது. என்னிடம் இருந்த இரண்டு ரூபாயில் சந்தன மாலை வாங்கினேன். இன்னும் சில ரூபாய்கள் சிறியிடம் வாங்கி, சலூனில் மீசை தாடி வெட்டி தலைமயிரையும் ஓர் அங்குலம் மொட்டையாக்கினேன். அதுதான் இந்தியாவுக்கு நான் செய்த இறுதிச் செலவு.
தமிழ்நாட்டில் சிறீலங்காச் சீஐடீக்கள் உலாவலாம். அவர்கள் ஈழத்தில் என்னை அடையாளம் காணலாம். 'ஆர் நானா? ஆயுதமா? இயக்கமா? போராட்டமா? தமிழீழமா? அது என்ன? அடியேனுக்கு அஃதொன்றும் தெரியாதே! எல்லாம் சிவமயம்' ஊருக்குப் போனவுடன் திருநீற்றுப் பூச்சிடவும், சந்தனப் பொட்டிடவும் வேண்டும்.
'மத்தியானத்திற்குப் பிறகு ஒன்றும் சாப்பிடக்கூடாது' என்று தனது ரோஸ்நிறச் சொண்டினால் சிறி கட்டளையிட்டுச் சொன்னான். கட்டளையிட்டுப் பழக்கப்பட்டவன் அவன். 'நடுக்கடலிலை சத்தி எடுப்பீங்கள்'
ஓம் அது உண்மை. வருகிற போது நான் சத்தி எடுத்து சுருண்டு படுத்து இராமேஸ்வரம் கரையை அடைந்திருந்தேன்.