அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 7
22. இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை
1982 இளவேனிற் காலம்
பிரதேசக்குழுக் கூட்டத்தில் தோழர் விசு அதற்கு அனுமதி பெற்றிருந்தார். காங்கேசந்துறை சீமேன்ற் பக்றறியின் மூன்றாவது தள வேலைகள். ஜெயமானே என்ற சிங்களவர் அதற்குப் பொறுப்பாக இருக்கிறார். தமிழீழத்தின் நிலவளம் கபளீகரம் செய்யப்படுகிறது.
காங்கேசந்துறை சீமேன்ற் பக்றறியைச் சுற்றி மாவிட்டபுரம் கீரிமலை என்று எல்லா இடங்களிலும் நிலம் தோண்டப்படுகிறது. அதற்குள்ளிருந்து சுண்ணாம்புக்கல், முருகைக்கல் எல்லாம் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் இன்னொரு கடல் அங்கு தெரிகிறது.
எமது நிலம் சுரண்டப்படுகிறது. அதிலிருந்து உற்பத்தியாகும் சீமேந்து, சிறிலங்காவில் கட்டிடங்கள் கட்ட டிரெயினில் ஏற்றப்படுகிறது.
சீமேந்து உற்பத்தியைப் பெருக்கவும், துரிதப்படுத்தவும் மூன்றாவது தளம், இரவு பகலாக நூற்றுக்கணக்கானோரின் உழைப்பில் உயரே எழுகிறது. இரவுவேலைக்கென்று படித்தவர் படிக்காதவர் என்று அத்தனை இளைஞர்களும் போகிறார்கள். பாலா போகிறான், அகிலன் போகிறான்...
மூன்றாவது தளத்தை குண்டு வைத்து முற்றிலுமாகத் தகர்ப்பது. தனித்து நாங்கள் செய்யலாம். ஆனால் இராணுவ ரீதியாக ஒரு சொட்டு வலிமையும் எமக்குக் கிடையாது.
'புளொட்' இயக்கம் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தாக்கி அத்தனை ஆயுதங்களையும் எடுத்திருக்கிறது. கிளிநொச்சி மக்கள் வங்கியைக் கொள்ளையடித்து இலட்சக் கணக்கில் பணம் நகைகளை எடுத்திருக்கிறது. சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதி என்று பத்திரிகைகள் சொல்கின்றன. இவற்றையெல்லாம் கச்சிதமாகத் திட்டமிட்டு நடாத்தி முடித்தவர் சுந்தரம்.
புளொட்டுடன் சேர்ந்தே இந்த வேலையைச் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. சுந்தரத்தின் அகால மரணம், மூன்றாவது தளத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க இப்போது இயலாது என்ற செய்தியைச் சொல்லிற்று.
இது மண்ணின் பிரச்சினை. எனவே மக்களின் பிரச்சினை. இதை மக்களிடம் கொண்டுபோனால் என்ன? அவர்களுக்குத் தெரியப்படுத்தி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும். தோழர் விசு அதைத்தான் யோசித்தார்.
இரவு ஒன்பதுமணிக்கு என்னிடம் பிரசுரங்கள் வந்துவிட்டன. கோயிலுக்குப் பூக்கள் கொண்டு போவது போல் ஓலைப் பையில் தோழர் பல்லவன் அதைக் கொண்டு வந்து தந்தான்.
அது தெளிவாகவும், கவனமாகவும் எழுதப்பட்டிருந்த பிரசுரம். சீமேந்துத் தொழிற்சாலையின் மூன்றாவது தளம். அது எப்படி எம் நிலத்தைச் சுரண்டுகிறது? அதனூடாக எம் வாழ்வாதாரத்தைச் சுரண்டுகிறது. அதற்கான சிந்தனையையும் செயற்பாட்டையும் வேண்டி நின்றது பிரசுரம்.
விடிய ஐந்தரைக்கு எழும்ப வேண்டும். ஆறு, ஆறே காலுக்கு சீமேன்ற் பக்றறியின் வடக்கு வாசலுக்குப் போய்விடவேண்டும். ஏழு மணிக்கு வேலை தொடங்கி விடும். ஆறு மணியிலிருந்து தொழிலாளர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். வடக்கு வாசலால் வேலைத் தலத்துக்கு நுழைகிற ஒவ்வொருவரின் கையிலும் துண்டுப் பிரசுரம் இருப்பதற்கு நான் பொறுப்பு.
நித்திரை வராது என்றாலும் பத்து மணிக்குப் பாயை விரித்தேன். அப்பா வந்து தட்டினார். 'இறைகுமாரன் உன்னைத் தேடி வந்திருக்கிறார்.....'
எழுந்து வெளியில் வந்தேன். 'நித்திரையிலை உம்மைக் குழப்பிப் போட்டன் போலை.....' என்று தாடிக்குள் மெல்லிய சிரிப்பு வந்தது இறைவனண்ணரிடம்.
'இல்லை இல்லை' என்று தாறாமாறாகத் தலை ஆட்டி விட்டு 'சொல்லுங்கோ அண்ணை என்ன விசயம்?' என்றேன்.
'தமிழ்நாட்டிலை இருந்து அரு.கோபாலன் வந்திருக்கிறார். உங்களுக்குத் தெரியும்தானே? அவர் எங்கன்ரை போராட்டத்திலை வலு விசுவாசம். வாற புதன்கிழமை வீரசிங்கம் மண்டபத்திலை அவரின்ரை உரை ஒண்டிருக்கு. அண்டைக்கு 'திருவிழா' நாடகத்தைப் போட ஏலுமோ எண்டு கேக்கத்தான் வந்தனான். செலவெல்லாம் தாறம். எப்பிடியும் போடப்பாருங்கோ. தமிழ் நாட்டிலையும் போய் எங்களுக்காக அவர் வேலை செய்வார்....'
'ஓமண்ணை எப்பிடியும் போடுறம். அது எங்கன்ரை கடமை. உங்களுக்காகக் கட்டாயம் செய்வம்...' இறைவனண்ணர் என் முதுகைத் தட்டி இன்னொருக்கால் மலர்ந்து சிரித்தார். 'வாறன் தம்பி....'
'லோங்ஸ்' போட்டு அவரை நான் அறியேன். சாரம் அல்லது வேட்டி. ஆனால் எப்பவும் வெள்ளை சேர்ட். 77ஆம் ஆண்டே அமிர்தலிங்கத்துடன் கருத்து மோதல். தோழர் வ.பொன்னம்பலத்தை இணைத்தது தொடர்பாக. எப்பொழுதும் தமிழீழம் என்ற சொல்லுடன் இறைவனண்ணரின் முகமும் இருந்தது. இறைவனண்ணரின் முகத்துடன் உமா அண்ணரின் முகமும் கூடத் தொடர்ந்தது.....
நிலம் வெளுக்கத் தொடங்கிய பிறகு சைக்கிளில் ஓலைப்பையை வைத்துக் கொண்டு உழக்கினேன். சீமேன்ற் பக்றறியின் வடக்கு வாசல் காங்கேசந்துறை - கீரிமலை வீதியில் கடலைப் பார்த்தபடி இருந்தது.
சிங்கள நேவி அடிக்கடி பயணம் செய்கிற பாதை அது, எனது எதுவும் பக்றறியில் வேலை செய்கிறவன் என்று காட்டாது. அவனுக்குக் 'கொட்டியா' என்று காட்டக்கூடிய ஏதுக்கள் என்னிடம் நிறைய இருந்தன. மேலும் நான் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டும் நிற்பவன் ஆகிறேன்...
அஞ்சியபடியே பிரசுரம் விநியோகித்தேன். நேவியோ ஆமியோ வந்தால் ஓட ஒரு பாதை இல்லை. மூலையில் அகப்பட்டுக்கொண்ட எலியாக என்னை அமுக்குவான். எதுவோ நடக்கட்டும் பார்ப்பம்.....
யாதொன்றும் நிகழவில்லை. சர்ரென சைக்கிள் அளவெட்டிக்குத் திரும்பியது. குறுணிக்கற்களின் மேல் சைக்கிள் தன் உற்சாகத்தை 'சர்சர்சர்' என சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டது. ஒரு வெடிகுண்டு செய்யவேண்டிய வேலையை நானும் என் தோழர்கள் சிலருமாகச் செய்து முடித்திருக்கிறோம். ஒரு நெருப்பைக் கிள்ளி எறிந்து விட்டிருக்கிறோம். அது பரபரவெனப் பற்றிப் பிடித்து முளாசி எரியும்.
கலட்டி தாண்டி அம்மாள் கோயிலடியில் மிதந்தேன். நவரத்தினமண்ணை என் சைக்கிள் கான்ரிலைப் பிடித்தார். 'தம்பி விசயம் கேள்விப்பட்டியே? பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயிலடியிலை உமாவையும் இறைவனையும் சுட்டுப் போட்டிருக்காம்...'
'ஆ....' என்று ஏங்கிப்போனேன். 'என்னண்ணை சொல்லுறியள்?...'
'ஓம் தம்பி சாமம்போலை கொண்டுபோய்ச் சுட்டிருக்கிறாங்கள்...'
பெருமாக்கடலைப் பிள்ளையார் கோயிலின் வயல் வெளிக்கு என் சைக்கிள் ஓடியது. இராத்திரி, தாடிக்குள்ளால் சிறு புன்னகை தந்து என் முதுகைத் தடவியவர், சூரியனைப் பார்த்து தாடி நிமிர்த்திக் கிடந்தார். முகம் குப்புறக் கிடந்த உமாண்ணரின் பிடரி சிதறிக் கிடந்தது.
யாருக்கு என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள்? எனக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை. மேசையிலிருந்து நட்புடன் பேச வேண்டியவர்களுடன் ஆயுதத்தால் பேசுகிறோம்....
கும்பிழாவளைப் பிள்ளையார் கோயிலின் கொடியேற்றத் திருவிழா ஆரவாரம் தொடங்கியது. திருவிழாவுக்கு மேசை விரிக்க இந்த முறை இறைவனண்ணர் இல்லை. இராத் திருவிழாவுக்கு இறைவனண்ணரும் ஒரு கடை நடாத்தினார். அந்தக் கடையில் அரசியல் புத்தகங்கள் இருந்தன. தமிழீழத்தில் செய்யப்பட்டன என்று கைவினைப் பொருட்கள் இருந்தன. சனங்கள்தான் அவர் கடைமுன் நிற்கவில்லை...
தோழர் விசுவை பத்து மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். வீடு போனதும், குளித்ததும் வெளிக்கிட்டதும் என்று பத்து மணிக்கு அங்கு நின்று விட்டேன்.
'கேள்விப்பட்டீங்கள் தானே' என்றேன். 'ஓமெடாப்பா' என்றார். முகம் கறுத்தும் கண் சிவந்தும் இருந்தன.
'என்னடாப்பா.... சுந்தரம் செத்து நாலுமாசம் கூட ஆகேல்லை. இப்ப உமாவும் இறைவனும், சுந்தரத்தின்ரை கொலைக்குப் பழிதீர்க்கச் செய்ததா நான் நினைக்கேல்லை. ஆயுதம் இருந்தால் எதுவும் செய்யலாம் எண்டு நம்பிற கும்பல் ஒண்டு உருவாகுது.... இதெல்லாம் எங்கன்ரை போராட்டத்தை எவ்வளவு சிதைக்கும் தெரியுமே? சனங்கள் இனி ஆயுதப் போராட்டத்தை நம்ப மாட்டினம்.... கருத்தைக் கருத்தாலை எதிர்கொள்ள வேணும்.... எல்லாத்துக்கும் ஆயுதம் எண்டால் எங்கை போய் முடியப் போகுது?... உமாவும் இறைவனும் உண்மையா தேசியத்தை நேசிச்சு வேலை செய்தவர்கள்....ம்... இதை விடக்கூடாது... நாங்கள் இதைக் கண்டிக்க வேணும். மக்களுக்கு எல்லாத்தையும் சொல்ல வேணும்....'
இறைவனண்ணரினதும் உமாண்ணரினதும் உடல்களை எடுத்துக் கொண்டு சுடலையை நோக்கி ஊர்திகள் புறப்பட்டன. மிகக் கனக்கும் மனத்துடன் சைக்கிளை உருட்டிச் சென்றேன். ஒரு பாடல் வந்தது. கனத்த மனம் சடாரென உருகிக் கண்ணீராய்க் கொட்டியது....
'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ'
24. பரந்தன் கருத்தரங்கம்
1982 இளவேனிற்காலம்
பரந்தன் இரயில்வே ஸ்ரேசனிலை இருந்து மேற்குப் பக்கமாக ஒரு மைல் நடக்கவேண்டி இருந்தது. விடிய யாழ்தேவியில் வந்தேன். சிறுபோக வயல் குளிர்மையான காற்றில் அலை பரவிற்று. சூரியன் அரைப்பனை ஏறியிருந்தான். மனது புழுக்கமாக இருந்தது. புதிய உலகம் செய்யப் புறப்பட்டிருக்கிறம்...
தத்துவத் தெளிவோடை, தீர்க்கமான பார்வையோடை, தெளிவான இலக்கோடை, எதற்குமே சளைக்காத தோழர்களோடை, இதோ ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிற சூரியனின் பார்வையோடை....
முளை எழுகிற நெல் வயலின் குளிர்ச்சி பரவி என்னுள் இறங்கிற்று. சாள்சின் ரியூற்றரிக்குள் கால் வைத்தேன். 'சொன்ன மாதிரி நேரத்துக்கு வந்திட்டாயெடாப்பா' என்றார் தோழர் விசு. 'பின்னை உங்களை மாதிரியா? சொன்ன நேரத்துக்கு எப்ப வந்திருக்கிறியள்?'
'ஹாஹ் ஹாஹ்ஹா.....' என்று பெலத்துச் சிரித்தார்.
'அதுதான்ராப்பா இராத்திரியே இஞ்சை வந்து தங்கீட்டன்...'
எல்லோரிடமும் அந்த உற்சாகம் இருந்தது. ஒரு முகமும் சோர்ந்து போய்க் காணவில்லை. யாழ்தேவியின் வேகம் போல, இளஞ்சூரியனின் மெல்லிய சூடு போல, வயல்காற்றின் குளிர்மை போல எல்லோர் முகங்களும் இருந்தன.
முற்றுத்தரிப்புக்கள் அக்கருத்தரங்கிற்குத் தேவைப்படவில்லை. 'கமாக்களே' தேவைப்பட்டன. அதிலும் பார்க்கக் கேள்விக் குறிகளே அதிகம் தேவைப்பட்டன. தோழர் சண்ணிடம் இவ்வளவு வரலாற்றறிவு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
'இலங்கைத்தீவு போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர் வருகையின் போது யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்ற மூன்று பிரிவுகளக ஆளப்பட்டிருந்தன. வன்னி இராச்சியம் என்ற ஒன்றும் பின்னர் இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தையும் வன்னி இராச்சியத்தையும் தமிழர் ஆண்டனர். ஆங்கிலேயர் வருகையின் போது எஞ்சியிருந்தது கண்டி இராச்சியமே. இறுதியாகக் கண்டியை ஆண்ட சிறீ விக்கிரம ராஜசிங்கனது கையொப்பம் தமிழிலேயே இடப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் தமது நிர்வாக வசதி கருதி அனைத்து இராச்சியங்களையும் ஒன்றுபடுத்தி இலங்கை என்ற ஒரு நாடாக்கினர்....'
தோழர் சாள்ஸ் பருப்புக்கறியும் பாணும் தந்த மதியத்திற்குப் பிற்பாடு ஒரு கண் அயர ஏதுமில்லை. அந்த ஒரு மணித்தியாலத்தில் சற்றே தலை சரித்தோரும், அல்ல என்று சர சரத்தோரும், ஒருக்கால் முகம் கழுவி நிமிர்ந்து உட்கார அடுத்த அமர்வு தொடங்கிற்று.
'ஆண்ட தமிழினம் மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு என்பதற்காக நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழ் இனம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஒடுக்கப்படுகிறோம்....' என்று தோழர் இராகவன் தன் அமர்வைத் தொடங்கினார்.
தோழர் இராகவனின் பட்டறிவு, தனிநபர் பயங்கரவாதம், அராஜகம் என்பனபால் அவரது உரையைத் திருப்பிற்று. என் நெஞ்சு மனசார அதை இரசிக்கவில்லை. இந்த ஒருநாள் அமர்வு அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதாக அமைந்தால் பெறுமதி மிக்கது. தோழர் விசுவும் அதனையே நினைத்தார் போல. இராகவனின் கருத்துக்கள் நிறைவுற்றதும் விசு தன் கருத்துக்களை முன் வைத்தார்.
'நாங்கள் தனித்து நின்று போராடப் போவதில்லை. போராடவும் முடியாது. தேசிய சக்திகள் அனைத்துடனும் ஐக்கிய முன்னணி அமைத்துத்தான் போராட முடியும். இங்கு சாதி ரீதியாகவும், பிரதேசரீதியாகவும், வர்க்கரீதியாகவும், வேறும் காரணங்களுக்காக சிறுசிறு குழுக்களாகவும் பல்வேறு தேசிய சக்திகள் உள்ளன. அனைவரையும் நாம் ஒரு நோக்கிற்காகக் கூட்டுச் சேர்க்க வேண்டும். அப்படிச் சொல்வதும் தவறு. நாம் அனைவரும் ஒரு நோக்கிற்காகக் கூட்டுச் சேர வேண்டும். இதில் தலைமை வகிக்கப்போவது யார் என்ற கேள்வி எழும். தலைமை என்ற சொல்லையே இதில் நாம் தவிர்க்கலாம். இதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கப்போவது யார் என்ற கேள்வியே எழும். அதை அந்தந்த சக்திகளின் பலம்தான் தீர்மானிக்கும். நாங்கள் எங்களை அதை நோக்கிப் பலப்படுத்துவோம். இங்கு தனிநபர் பயங்கரவாதம். அராஜகம் போன்ற சொற்களை அதனதன் வரையறைகளுடன் விளக்க வேண்டும். ஒரு தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமாகவே அந்த ஐயப்பாட்டை நாம் போக்க முடியும். நாங்கள் ஐக்கிய முன்னணித் தத்துவத்திலை உறுதியாக இருப்பம். ஐக்கிய முன்னணி என்பது அப்படியே இரண்டறக் கலப்பது அல்ல. உனக்கு எனக்கும் இடையிலை என்னென்ன விசயத்திலை உடன்பாடு, என்னென்ன விசயத்திலை முரண்பாடு? இது இரண்டு பேருக்கும் தெளிவாத் தெரிய வேணும். இது கணிதத்திலை ஒரு தொடை போல (கரும்பலகையில் அதனைக் கீறிக் காட்டினார்.)
அந்தத் தெளிவோடை உடன்பாடான விசயங்களிலை சேர்ந்து வேலை செய்யிறது. இதுதான் ஐக்கிய முன்னணித் தந்திரம். இதை வெறும் தத்துவமாகவும் நாங்கள் பார்க்க ஏலாது. அனுபவத்திற் கூடாகவும் நாங்கள் பார்க்க வேணும். இப்ப சடார் புடாரெண்டு போய் ஐக்கியமுன்னணியைக் கட்ட ஏலாது. அதற்குரிய தேவையைக் காலம் தான் தீர்மானிக்கும். அதுவரைக்கும் நாங்கள் எங்களைப் பலப்படுத்துவம். ஆனால் ஒன்றிலை நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேணும். போராட்டத்துக்காக நாங்கள் ஐக்கியப்பட வேணும். ஐக்கியத்துக்காக நாங்கள் போராட வேணும்...'
வயலோரம் இருந்த ரியூற்றறியின் வாங்குகளும். மேசைகளும் அறியாதன எல்லாம் அறிகின்றன. தமிழும், சமயமும், கணிதமும், விஞ்ஞானமும் சமூகக்கல்வியும், சரித்திரமும் என்று அறிந்த வாங்குகளும் மேசைகளும் இப்போது அறிவது அடுத்த உலகத்திற் கானது. புதியதோர் உலகம்!