Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியா நோக்கி வருகையில் கூட நிலா வெளிச்சம் வந்தது..

இந்தியா நோக்கி வருகையில் கூட நிலா வெளிச்சம் வந்தது..
அ.இரவி

 

வீடு நெடும் தூரம் - தொடர் 11

34. தோட்டக்காணி 

1984 - பின்பனிக்காலம்

'உனக்கென்னடாப்பா. படுக்கைக்கு ஏசி அறை. இறைச்சிச் சாப்பாடு, ஆப்பிள் பழம். ஊருக்குப் போயும் இதெல்லாம் தேவைப்படும் தானே? இனி 'பாங்க்' தான் நாங்கள் கொள்ளையடிக்க வேணும்.'

சிறிக்கு நக்கல் துண்டுகள் நாக்கில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் கோபப்பட என்ன இருக்கிறது? அவன் ஆற்றமையால் சொல்கிறான். நொந்து போன அவன் மனது நக்கலா வெளிப்படுது. எனக்கு அவனையிட்டு கவலை வந்தது.

அவனுக்குக் கனக்க விசயங்கள் தெரியாது. இடையில் சேர்ந்தவன் அவன். அமைப்புக்காகத் தோட்டம் கொத்தியது தெரியாது. குண்டு நிரப்பி துவக்குடன் காட்டுக்குள் அலைந்தது தெரியாது. சாமம் சாமமா சுவரொட்டி ஓட்ட சைக்கிளில் உலைந்தது தெரியாது. ஆமி குண்டுகளை தீர்க்கிறபோது பத்தை மேவிப் பாய்ந்தது தெரியாது. ஒரு கணப் பிசகலில் நான் உயிர் தப்பி இப்போ உலவுவது எதுவும் அவனுக்குத் தெரிய நியாயம் இல்லை.

அவனுக்குத் தெரிந்தது குளிரூட்டப்பட்ட அறை, ஆட்டிறைச்சிக்கறி, ஆப்பிள் பழம், சொகுசான படுக்கை, மரக்குளிர் சூழ்ந்த பங்களா.

'இதை அச்சடிக்கவே மாட்டோம்' என்றது மொழியரசி அச்சகம். 'அச்சடித்தவர் பெயர் போடாமல் அச்சடிக்க முடியாது' என்றது ஜெயா அச்சகம். 'நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர்....' என்று நெடுந்தீவிலிருந்து இருபத்தைந்து மைலுக்கு அப்பால் உள்ள அளவெட்டியில் அச்சடித்தேன். நேற்றே தந்திருக்க வேண்டும். தொழிலாளர் வேலை செய்யக் கூடாத மே மாத முதல் நாள் காலை பத்து மணிக்கு அச்சடித்துத் தருகிறார்கள்.

அறுபது மைல் அப்பால் உள்ள கிளிநொச்சியில் மேதின ஊர்வலம். துண்டுப் பிரசுரக் கட்டுக்களையும் கொண்டு வியர்க்க வியர்க்க சைக்கிள் உழக்குகிறேன். நாடகக் குழுவினரையும் சேர்த்துக் கொண்டு பேருந்து பிடித்து மத்தியானத்திற்குச் சற்றுப் பின்பாக கிளிநொச்சியில் இறங்குகிறேன்.

கிளிநொச்சி றொட்ரிக்கோ மைதானத்தில் மேதினக் கூட்டம். கூடமுடியாது என்று பொலிஸ்காரன்கள் பற்றன் பொல்லுகள் கொண்டுவந்து அடித்தான்கள். அடித்த நோவு தோள்மூட்டிலிருந்து கண கணவென்று பரவ, வீதி நாடகம் செய்ய இறங்கினோம். சனம் குழும ஒன்றும் பேசாது போலிஸ்காரன் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால் இவையெல்லாவற்றையும் சிறி பார்த்ததில்லை. சிறி சொல்கிறான் 'பாங்க் தான் நாங்கள் கொள்ளை அடிக்க வேணும்.'

சூரியனின் கீழ், முழுநிலவின் கீழ் இரண்டு முழு நாட்கள் பத்தைகள் நிறைந்த ஒரு காணியைத் துப்புரவு செய்கிறோம். பத்தைகள் வெளித்தால் ஆயிரம் கண்டுத் தறை அதில் தோன்றும். சுருட்டி வைத்த பற்றைகள் சடபடவென எரிகிறது. எரிகிற வெளிச்சத்தில் தோழர் விசுவின் முகம் விரிந்திருப்பதைக் காண்கிறேன். ஒரு புடையன் சர்ரென ஊர்ந்து ஓடிய போதும் அச்சம் வரவில்லை. யாருக்கும் எதற்கும் அஞ்சாத ஒரு போருக்குத் தயாராகி விட்டோம். பயமற்ற வாழ்வுக்கான போர் அது.

'குறுக்கு வழி எதுவும் இல்லையெடாப்பா. போராட்டத்துக்காகக் கொள்ளையடிக்கிறது எண்டது குறுக்கு வழிதான். எங்கன்ரை காலிலை தங்கி மக்களைச் சார்ந்து நிக்கவேணும். அவையளையும் மெல்ல மெல்லப் பங்காளிகளாக்க வேணும்.....' தோழர் விசு இதைப் பற்றைக்குள் நின்றும் சொன்னார். குமரன் தேத்தண்ணி கொண்டு வந்தான். அது ஆறுமுன்னர் பாணும் பருப்புக் கறியும் வந்தன. அதைக் கொண்டு வந்தவன் ஜோர்ஜ், சூரியன் சுட்டுப் பொசுக்குகிறான். பொசுக்கட்டும். இரவுக்கு முழு நிலவு வரும். குளிரை அது விசிறும்.

இனி ஒரு மழை பெய்யட்டும். காணியில் ஈரம் சுவறட்டும். பிறகு சாறலாம். தோட்டம் கொத்தலாம். பயிர் விதைக்கலாம். அதிலிருந்து உழைப்பு எடுக்கலாம். ஆகக் கனகாசு இல்லாட்டியும் அது அரசியல் வேலைக்கு உதவும். வங்கி எதனையும் உடைக்கத் தேவையில்லை. நாங்கள் கொள்ளையர்கள் அல்லர்; போராளிகள்.

'தெரியாமல்தான் கேக்கிறன். இதுக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?' என் அவசரம் ஒரு நிமிசத்தில் கிணறு தோண்ட வேண்டும். அடுத்த நிமிசத்தில் நீர் பாயவும் வேண்டும்.

'சுடூது மடியைப் பிடி என்று வேலை செய்யேலாது தோழர். நான் தான் சொன்னேனே அங்குலம் அங்குலமா முன்னேறினாலும் அது ஆழமா இருக்க வேணும். ஒண்டைக் கவனியுங்கோ.

இது மாத்திரம் தோட்டமில்லை. ஒவ்வொரு ஊரிலையும் ஆகக் குறைஞ்சது ஆயிரம் கண்டுத் தறையாவது நாங்கள் செய்ய வேணும். ஏலுமெண்டால் ஒவ்வொரு ஊரிலையும், தேத்தண்ணிக் கடைகளோ, பலசரக்குக் கடைகளோ துவக்க வேணும். உழைக்கிறதுக்கு எவ்வளவோ வழியிருக்கு. அதை விட்டிட்டு நாங்கள் கொள்ளையர்களாக மாற ஏலாது.'

'அப்ப அரசியலை விட்டிட்டு தோட்டம் கொத்திக் கொண்டும், கடைகளை நடத்திக்கொண்டும் இருக்கிறதோ?'

'இதிலைதான் பிழை விடிறாய். இருப்பத்திநாலு மணித்தியாலமும் தோட்டம் கொத்தவோ, கடையை நடத்தவோ தேவையில்லை. மற்றது முன்னணித் தோழர்கள் அதோடை மினக்கெட வேணுமெண்டுமில்லை. அதற்கான ஊழியர்களைக் கண்டு பிடிச்சு, அவையளிட்டை பொறுப்பைக் குடுத்திட்டு முன்னணித் தோழர்கள் அரசியல் வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான். மற்றது ஒவ்வொரு கிளைகளும் இதைப் பொறுப்பேற்க வேணும். இந்தத் தோட்டத்தை இஞ்சத்தையான் கிளைதானே பொறுப்பெடுத்திருக்கு.'

ஒரு மௌனம் அங்கு ஊர்ந்தது. சூரியன் தன் காரியம் முடிந்ததென்று மேற்கில் விழுந்தான். எங்கள் காரியங்களும் முடியும் தறுவாயில் இருந்தன. ஒன்றுக்கும் உதவாத மஞ்சமுன்னா மரம் ஒன்று பறியவேண்டும். அதன் குழையை ஆடும் சாப்பிடுவதில்லை. ஐவரின் உடலிலும் வியர்வை ஆறாகப் பெருகி ஊத்திண்ட நேரம், மஞ்சமுன்னா சரிந்தது. அம்மரத்தை வேரோடு கெல்லி எறிந்த போது அக்காணி தோட்டத்துக்குத் தயாராகி விட்டது.

முழுநிலவு காலித்து ஒரு பனை ஏறியிருந்த வேளை மண்வெட்டி, கோடாலி, அலவாங்கு, பிக்கான், கத்தி இவைகளைக் கழுவவும், ஒரு குளிப்பு முடிக்கவும் தோட்டத்துக் கிணற்றடிக்குப் போனோம். பாண் பருப்புடன் சந்தன சவர்க்காரமும் வாங்கியிருந்தான் ஜோர்ஜ். கமகமக்கத் தேய்த்தோம். இரவுக்கு ரொட்டியும் மாட்டிறைச்சிக்கறியும் வந்தது. அந்த இரவு உணவுக்குப் பிறகு தோழர் விசு சொன்னார்: 'எனக்கு வேறை ஒரு யோசனையும் இருக்கு'

'என்ன?'

'நாங்கள் காசுக்கு ஒவ்வொரு வீடு வீடாக ஏறினால் என்ன? அவையள் ஒரு ரூபா, தந்தாலும் சரி, பத்து ரூபா தந்தாலும் சரி. காசு எங்களுக்கு முக்கியமில்லை. எங்கன்ரை அரசியலை கொண்டு போறதுக்கு அது நல்ல வழி. அவையளையும் பங்காளராக்க முடியும். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?'

36. ஓடத்தொடங்கினேன்

1984 பின்பனிக்காலம்

சாம்பல் இருட்டாய் இருந்தது கடல்வெளி. வேறு வள்ளங்களும் றோலர்களும் அசைந்தன. நடுக்கடல் காண ஒன்றும் தெரியவில்லை. திடுமென நேவி போட் தென்படலாம். அடுத்த கதையில்லை. சடசடக்கும் அவன் துப்பாக்கி, பீரங்கி கொண்டும் இந்த றோலரைப் பிளக்கலாம். நட்சத்திரமும் வந்து வெளிச்சம் தராது, இருண்டு கிடந்த அந்த நள்ளிரவுக்கு, கடல்வெளியில் பயம் வந்து என் நெஞ்சைக் கவ்வியது.

இந்தியா நோக்கி வருகையில் கூட நிலா வெளிச்சம் வந்தது. தமிழ்நாட்டுக் கரையின் மஞ்சள் ஒளி வானில் பூசப்பட்டிருக்க, தேவன் வெகுவேகமாக வள்ளத்தை ஒட்டினான். அது நீரைக் கிழித்ததில் ஆக நான்கு மணித்தியாலங்களேதான். மூன்று மணித்தியாலங்களின் பின் சாம்பிராணி, சந்தனம், கற்பூரம் என்ற கலவையான வாசனை, கடல் வாசனையை மேவி மூக்கைத் தாக்கிற்று.

இதுவென்றால் ஆபத்தைத் தேடி ஓடி வருகிறோம். இருண்டு கிடந்தது ஈழக்கரை. எந்த வெளிச்சப் பொட்டோ, ஏதாகிலும் ஒரு மணமோ எம் கவனம் ஈர்க்கவில்லை. நாம் போகும் பாதை சரிதானா? கும்மிருட்டு எதனையும் எமக்குக் கூறவில்லை.

அந்த இருளிலிருந்து சிறியின் குரல் எழுந்தது. 'தோழர் என்ன பயமாக்கிடக்கோ? ஒண்டையும் பறையக் காணம்? அம்மாவின்ரை சீலையில் செல்லமா இருந்திட்டு, அத்தாச்சியின்ரை சொகுசு மெத்தையிலை படுத்திட்டு இப்பிடி வந்தா பயமாத்தான் இருக்கும். அது பிழையில்லை. ஏதோ மணக்குது. பயத்திலை வயித்தாலை போட்டுதோ?' குரலில் நக்கல் ஒழுகியது.

'இனியும் பொறுக்கேலாது' என்று எதுவும் நான் யோசிக்கவில்லை. உடன் வலது கையின் விரல்கள் மடங்கின. இடது கை அவன் சேர்ட் கொலரைப் பிடித்தது. பல்லு மின்னின திக்கு பார்த்து, மூக்கைக் குறி வைத்து முஷ்டிக்கை இறங்கியது. மார்க்சும் போ! லெனினும் போ! மாசேதுங்கும் போ! எல்லா மண்ணும் போ!

எனது கையை குமார் எப்பிடிப் பிடித்தான் என்று எனக்குத் தெரியாது. 'தோழர் உது கூடாது. எதுவெண்டாலும் கரைக்குப் போனபிறகு கதைப்பம். எல்லாத்தையும் நானும் கவனிச்சுக் கொண்டு வாறன். கடலுக்கை நிண்டு இப்ப ஒரு சண்டையும் வேண்டாம்' என்று குமார் சொன்னான். என் கை இறங்கிற்று. கோபம் இறங்கிற்று. அகிலன் என் முதுகில் கை வைத்தான்.

பதட்டத்தில் என் கை கால்கள் நடுங்கின. இது கடல். நேவி வருவான் என்று எதுவும் சுடவில்லை. சிறியின் மூஞ்சையில் குத்தி விட்டேன். இது சரியா? இப்படித்தான் ஆகும், அது நியதி. சரி அடுத்தது என்ன?

அதை யோசிக்க முடியவில்லை. கரைக்கு றோலர் வர முடியாது. நடுக்கடலில் தத்தளிக்கும். தோழர் சண்ணின் ஏற்பாட்டில் கரையில் இருந்து வள்ளம் வந்து நடுக்கடலில் காத்து நிற்கும். அதை எப்படிக் காண்பது?

அப்படி ஒரு வள்ளம் வந்து நிற்கும் சிலமன் இல்லை. இந்த அறிக்கைக் கட்டுக்களையும், புத்தகக் கட்டுக்களையும், சஞ்சிகை கட்டுக்களையும் என்ன செய்வது? நாங்கள் எப்படிக் கரைக்குப் போவது? ஒரு நூறு மீட்டர் நீந்தினேன் அல்ல. அப்பால் கடலுள் மூழ்குவதா? அகிலன் ஒரு அடி கூட நீந்துவானோ தெரியாது. என்ன செய்யலாம்?

கடல் அலை 'களுக் களுக்' என்று வந்து அடிக்க, றோலர் திசையெங்கும் உலைந்து உலைந்து தேடியது. குமார் இனி இயலாது என்று கடலுள் குதித்தான். அரை மைல் வரக்கூடிய கரை சேர்ந்து வத்தை ஒன்றை வலித்துக் கொண்டு வந்தான். வத்தை நாலைந்து தரம் கரைக்குப் போய் வந்தது. அந்த நாலைந்து தடவைகளில் நாங்கள் போனோம். புத்தகக் கட்டுக்கள் போயின.

சோவென மழை கொட்டிக் கொட்டி ஊர் குளமாக இருந்தது. எப்படித்தான் அந்த வேகம் பிடித்தேனோ? அம்மா அப்பாவிடம் ஓடி வந்தேன். ஒரு படகும், இரண்டு மினி பஸ்களும் மாறி மாறி ஏறி, பிறகு ஒரு சைக்கிள் மிதித்து வீடு வந்தேன். ரொமி வாலை ஆட்டியது. வேலிக்கதியால்கள் குழையால் செழித்து மழைத்தண்ணியால் குளித்து நின்றன.

'தந்தி கிடைக்கேல்லையோ?' என்று அப்பா பதட்டத்தோடு கேட்டார். 'உன்னை வர வேண்டாம் என்று அம்பிகாபதி வீட்டுக்கு தந்தி அடிச்சசானான். கிடைக்கேல்லையோ?'

எதுவும் தெரியாது என்று தலையாட்டினேன். 'ஏன் ராசா வந்தனி?' என்று அம்மா நடுங்கிக் கேட்டா. 'உன்னைத் தேடி அந்தத் துலைவான்கள் எல்லோ வந்திட்டான்கள். துவக்குப் பிடியாலை அப்பாவுக்கும் அடி. இஞ்சை பார் கன்றிப் போய்க்கிடக்கு.'

அப்பாவின் முதுகிலை அது இருந்தது. 'நீ ஓடு ராசா. வீட்டிலை நிக்காதை வந்து பிடிப்பாங்கள். ஓடு ராசா'

அண்டையிலை இருந்து நான் ஓடத் தொடங்கினேன். ஆத்துப் பறந்து, ஓடத் தொடங்கினேன். வந்த வேகத்திற்கு அந்தப் பசிக்கு அம்மாவின் கையால் ஒரு வாய் உண்டேன். அப்பா சேர்ட் பொக்கற்றுக்குள் இரண்டு ஐநூறு ரூபா தாளைச் சொருகினார்.

பிறகு எங்கை சாப்பாடு? எங்கை படுக்கை? எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் அலைந்தேன். உலைந்தேன். இன்றிராத்தானா கடைசி இரா? இதுதானா கடைசிப் படுக்கை? இந்த உணவுடன் இனி உணவு இராணுவ முகாமிலா? அதுவும் இல்லையா? அல்லது ஆளே இல்லையா?

தாண்டிப்போக மாத்திரம் தார் வீதியை என் சைக்கிள் சந்தித்தது. உடம்பில் நரம்புகள் ஓடித்திரிந்தாற்போல ஊரெங்கும் ஒழுங்கைகள் திரிந்தன. குச்சொழுங்கை, கையொழுங்கை, ஒற்றையடிப்பாதை, மணல் ஒழுங்கை, வெள்ளவாய்க்கால்,

கிறவல் ஒழுங்கை, வண்டிப்பாதை என்ற யாவற்றிலும் என் சைக்கிள் உருண்டது. எந்த ஒழுங்கையிலும் ஒன்று இருந்தது. அது பனையோலை மணம்.

ஒரு நாள் அது நடந்தது. சுண்ணாகம் தாண்டி வருகிறேன். மருதனாமடம் காணமுன் ஒரு முடக்கு. அங்கால் ஒன்றும் தெரியவில்லை. முடக்கு திரும்பினேன். எதிரே சடக்! ஆர்மி! போற வாறவர்களை இறக்கி 'ஐடென்றி கார்ட்' பார்க்கிறார்கள். என் கதி அவ்வளவுதான். பக்கத்தில் பார்த்தால் சைக்கிள் கடை. சைக்கிளை நேரே அக்கடைக்கு விட்டேன். 'பம்' எடுத்து காற்றடித்தேன். சாவகாசமாகச் சைக்கிளை உருட்டி வந்த வழி திரும்பிப் போனேன்.

10/13/2012 4:04:04 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்