Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

என் தாய் எரியுண்டு கிடக்கிறாள்..

என் தாய் எரியுண்டு கிடக்கிறாள்..
அ.இரவி

 

வீடு நெடும் தூரம் - தொடர் 5

14. புதிய ஜனநாயகப் புரட்சி 

1980 கார்காலம்

எனக்கு அது ஒளியாகத் தெரிந்தது. வழிகாட்டியது. என்றாலும் ஓரிடத்தில் நான் குழம்பினேன். சீமேன்ற் பக்ரறியின் கன்ரீனில் 'ரீ' குடித்துக் கொண்டிருக்கிறபோது தோழர் விசு சொன்னார். 'இந்தப் போராட்டத்திலை எல்லாரும் பங்குபற்ற வேணும். முதலாளி தொழிலாளி எண்டோ, சாதி அடிப்படையான வேறுபாடோ இல்லை. எல்லாருமாச் சேர்ந்து போராடவேணும்.'

என்ன சொல்கிறார் விசு? முதலாளிகள் எப்படிப் போராடுவார்கள்? அப்படியென்றால் இது முதலாளிகளுக்கு எதிரான போராட்டமில்லையா? நாங்கள் அமைக்கிற தமிழீழம் ஒரு கொம்மியுனிஸ்ற் நாடாக இருக்காதோ? கொம்மியுனிஸ்ற் நாடாக இல்லாத ஒன்றுக்கு இரத்தம் சிந்தி நாங்கள் ஏன் போராட வேண்டும்?

சாயம் குறைந்த, வெறும் பால் தெரிந்த 'ரீ' நன்றாக இல்லை. பின்னேர, வெய்யிலுக்கு சேர்ட்டுக்குள்ளால் வேர்வை வடிகிறது. நான் கேட்டேன் 'மில்க்வைற் முதலாளியும் சேர்ந்து போராடுவார் எண்டு நம்புறீங்களோ? அவருக்கு எதிரா இந்தப் போராட்டம் இருக்காதோ?'

சொற்களைப் பொறுக்கி எடுத்து விசு அழுத்தமாகச் சொன்னார்: 'ஓம்  மில்க்வைற் அதிபரும் சேர்ந்துதான் போராட வேணும். அவருக்கு எதிரா இந்தப் போராட்டம் இல்லை. ஒன்றை விளங்கிக் கொள். இது வர்க்கப் போராட்டம் அல்ல. தேசிய விடுதலைப் போராட்டம்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் எல்லாரையும்தான் நசுக்குது. அது முதலாளி தொழிலாளி எண்டு பார்க்கேல்லை. சாதி அடிப்படையில பிரிக்கேல்லை. மில்க்வைற் அதிபரையும் அவர் தமிழன் எண்டபடியாலை நசுக்குது. அவரும் தனக்குத் தெரிஞ்ச வழியிலை போராடித்தான் ஆகவேணும்.'

'எனக்கு இதை ஏற்கிறது கஷ்ரமா இருக்குது. அவர் தமிழன் எண்டபடியாலை தமிழ்த் தொழிலாளர்களை சுரண்டாமல் விடுகிறாரோ? அவரெண்டில்லை, எல்லாத் தமிழ் முதலாளிகளும் சுரண்டிக் கொண்டுதானே இருக்கினம்.'

விசுவின் முகத்தில் ஆற்றாமை தெரிந்தது. 'நான் என்ன சொல்லிறன் எண்டு உனக்கு விளங்கேல்லையெடாப்பா. இது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம். ஏனைய தேசிய சக்திகளையும் கூட்டுச் சேர்த்து ஐக்கிய முன்னணியாக்கி, தொழிலாளி வர்க்கம் முன்னணியாக நின்று போராட்டம் நடத்த வேணும். தமிழீழம் கிடைக்கட்டும். அதுக்குப் பிறகு அது எப்பிடி இருக்க வேணும் என்டதைத் தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்'

'என்ன கதை கதைக்கிறீங்கள்? மக்கள் தீர்மானிக்க முதலாளிகள் விடவா போகினம்? முதலாளிகளுக்கு முண்டு கொடுக்கிற சக்திகள் விடவா போகுது?'

'நான் சொல்லுறதை நீ விளங்கிறாய் இல்லை. அந்தரப்படுறாய். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கப் போறதே தொழிலாள வர்க்கம்தான். ஒண்டை விளங்கிக் கொள். தமிழீழம்தான் எங்கன்ரை இறுதி இலக்கெண்டில்லை. முழு இலங்கைக்குமான புரட்சிதான் எங்கன்ரை இலக்கு. அதைக்கூட இறுதி இலக்கெண்டு சொல்ல மாட்டன். மார்க்ஸ் என்ன சொல்லுறார்? 'சோசலிசத்தை அடைவதற்கான முதற்படியாய் தேசிய ஜனநாயகத்தை அடைய வேண்டும்' எண்டிறார். தேசிய ஜனநாயகத்தில் இருந்தே சர்வ தேசியவாதத்திற்கு வழி அமைக்க வேண்டும் என்றும் சொல்லுறார். தேசிய ஜனநாயகம், சோசலிசம், கொம்மியுனிசம் என்பதுதான் மார்க்சினது இலட்சியத்தின் படிமுறைகள். அப்பிடிப் பார்க்கிற போது எங்களுக்கு முதலிலை தேசிய ஜனநாயகம் வேணுமெடாப்பா. இப்ப இலங்கையிலை தேசிய இனங்களுக்கிடையிலை ஜனநாயகம் இருக்கோ? சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழரின் உயிரை, உடைமையை, நிலத்தை அழிக்குது. கலாச்சாரத்தைச் சீரழிக்குது. முதலிலை நாங்கள் தேசிய ஜனநாயகத்துக்காகப் போராட வேணும். அது முக்கியமெடாப்பா'

'நீங்கள் என்ன கதைக்கிறீங்கள்? எனக்கு ஒரு மண்ணும் விளங்கேல்ல'

'என்னென்டாடெப்பா...' விசு சொல்லத் தொடங்கினார். இன்னொரு 'ரீ'யும் இடையிலை வந்தது. இரண்டு வடையும் வாயினுள் போனது. சூரிய வெளிச்சம் கொஞ்சம் சுவரிலை பட்டபோதும் கன்ரீனிலை ரியூப் லைற்றை எரிய விட்டார்கள். அது பக் பக்கென்று நாலைந்து தரம் கண்ணை மூடி மூடித் திறந்து விட்டு ஒளிர்ந்தது.

'முழு இலங்கைக்குமான புரட்சியிலை தமிழீழம் முதற்படி. இப்ப உள்ள முரண்பாடுகளிலை பிரதான முரண்பாடு என்ன? தேசிய இன முரண்பாடு. அதாவது சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை ஒடுக்குது. மற்றது முக்கியமானது தமிழரைக் காட்டித்தான் சிங்கள அரசு சிங்கள மக்களை ஏமாற்றி வருகுது. சிங்கள மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கு தெரியுமா? சாப்பிட வழியில்லை. வேலை இல்லை. இருக்கிறதுக்கு வீடில்லை. தமிழரிலும் பார்க்க சிங்கள மக்கள்தான் வறுமையாலை கஷ்ரப்படினம். ஆனால் சிங்கள மக்கள் ஒரு போராட்டம் கூட நடத்தேல்லை. ஏன்? சிங்கள அரசு தமிழரைப் பூதமாக் காட்டி இனவாதம் பேசி சிங்கள மக்களை மயக்கத்திலை வைச்சிருக்கு. முதலிலை தமிழீழம் கிடைச்சு தமிழர் விடுதலை அடைஞ்சால்தான் சிங்கள மக்களுக்கு தங்களின்ரை உண்மை நிலை விளங்கும்.'

'அதுக்கும் முதலாளிகளோடை சேர்ந்த போராட்டம் எண்டதுக்கும் என்ன சம்பந்தம்?'

'சம்பந்தம் இருக்கு. பிரதான முரண்பாடு என்ன என்று பார்த்தால் விளங்கும். எது மேலோங்கி நிற்குது? மக்கள் என்ன மனநிலையிலை இருக்கினம்? முதலாளிகள் தங்களைச் சுரண்டுகிறார்கள் என்று எத்தனை வீதம் பேர் நினைக்கினம்? சாதி ரீதியாக நாங்கள் ஒடுக்கப்படுறம் எண்டு நம்புகிற சனம் எவ்வளவு? ஆனால் இலங்கையிலை வாற அத்தனை தமிழரும் சிங்கள அரசால் ஒடுக்கப்படினம். சாதி அடிப்படையில சிங்கள அரசு வேறுபாடு காட்டேல்லை. சிங்கள அரசுக்குத் தெரிஞ்சதெல்லாம் இவன் தமிழன். அவ்வளவுதான். அதுக்காக சாதிப்பிரச்சினை இல்லையெண்டோ, முதலாளிமார் சுரண்டேல்லை எண்டோநான் வாதிக்க வரேல்லை.'

வெளியில் இருள் சூழத் தொடங்கிவிட்டது. கன்ரீனின் உள்ளே இருந்த வெளிச்சம் இருளைக் காணவிடவில்லை. 'ம் ம்....' என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு மெது மெதுவாகப் புரியத் தொடங்கியது. இப்படி தோழர் செந்தில் விளக்கம் சொன்னதில்லை. அவர் இரவு வகுப்பு எடுக்க முன்னர் பின்னேரங்களில் புத்தகங்களை மனப்பாடம் செய்துவிட்டு வந்திருப்பார் போல் தோன்றியது. இங்கு பார், தோழர் விசு என்னமாய்ப் புரிய வைக்கிறார்.

'சீனப் புரட்சியிலை என்ன நடந்தது? யப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரா தொழிலாளிகள், முதலாளிகள், கூலி விவசாயிகள், நிலப்பிரபுக்கள், கடல் தொழிலாளர், சம்மாட்டிமார் என்று எல்லாரும் கூடித்தான் நிண்டினம். ஆனால் மாவோவின்ரை தலைமையிலை சீனக் கொம்மியுனிஸ்ற் கட்சியே புரட்சியை நடத்திச்சுது. அதாலை புரட்சிக்குப் பிறகு கொம்மியுனிஸ்ற் கட்சியே ஆட்சியை நடாத்திச்சது. பிறகு கலாச்சாரப் புரட்சி மூலமாகத்தான் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஒழிக்கப்பட்டார்கள். அதிலை நிறையத் தவறுகள் நடந்திருக்கு. அது இப்ப இங்கை தேவையில்லை. அதைப் பற்றிப் பிறகு கதைப்பம்.'

'எனக்குக் கொஞ்சம் விளங்கிற மாதிரி இருக்கு. ஆனால் மனசு ஏனோ ஏற்க மறுக்குது. எங்கன்ரை போராட்டம் பூர்ஷ்வாக்கு எதிராகவும் இருக்க வேணும் எண்டுதான் நான் நினைக்கிறேன்...' என்றேன்.

விசுவிற்குக் கொஞ்சம் சிரிப்பு வந்தது. 'அது என்னென்டாடாப்பா நீ முந்தி கொஞ்சநாள் சீனக் கொம்மியுனிஸ்ற் வகுப்புகளுக்குப் போனி எல்லோ? முதலாளி முதலாளி எண்டு அவங்கள் சொல்லி உனக்கு உரு ஏத்தி இருக்கிறார்கள். தமிழீழத்திலை முதலாளி வர்க்கம் எண்டு ஒண்டும் இல்லையெடாப்பா. நீ 'பூர்ஷ்வா' எண்டு சொல்லவே எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. பூர்ஷ்வா எண்ட சொல்லே ரஷ்யாவிலை இருந்து இறக்குமதியான சொல். அது இங்கை தேவையில்லையெடாப்பா. தமிழீழத்திலை பெரிய தொழிற்சாலை எண்டு எதைச் சொல்லுவாய்? இதைத்தான்ரா. இந்த சீமேன்ற் பக்றியை. ஆனால் இது ஒரு அரசாங்கக் கூட்டுத்தாபனம். ஒரு முதலாளியின்ரை இல்லை. மில்க்வைற்றை பெரிய தொழிற்சாலை எண்டு சொல்லுவியோ? இல்லையெடாப்பா. அங்கை ஒரு ஐம்பது பேர் கூட வேலை செய்யேல்லை. பிறகென்னென்டெடாப்பா பூர்ஷ்வா எண்டு கதைப்பான்?'

எனக்கு இப்பொழுது வெட்கமாகப் போய்விட்டது. 'ம்....' என்று சொல்வதையும் நிறுத்தி விட்டேன். பேசாமல் விசுவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தேன்.

'யாழ்ப்பாணத்திலை சாதி ஒரு பிரச்சினை தான்ராப்பா. சாதிக்கெதிராக சீனக் கொம்மியுனிஸ்ற் கட்சியின்ரை போராட்டம் முக்கியமான போராட்டமெடாப்பா. நிற்சாமத்திலை நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டத்திலை ஆயுதங்கள் கூடப் பயன்பட்டிருக்கு எண்டால் பாரன். இலங்கையிலை நடந்த முதல் ஆயுதப் போராட்டம் எண்டால் அதைத்தான் சொல்ல வேணும். எழுபத்துதொன்று ஏப்பிரில் கிளர்ச்சி எல்லாம் அதுக்குப் பிறகுதான். கவிஞர் சுபத்திரன் ஒரு கவிதை சொல்லியிருக்கிறார்.

'எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்

நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்'

சாதி ஒரு பிரச்சினைதான். நாங்கள் தமிழீழம் அடைஞ்ச பிறகு சாதிப் பிரச்சினையைத்தான் முதலிலை கையிலை எடுக்க வேணும். போராட்டத்துக்குள்ளை ஒரு போராட்டம் எண்ட மாதிரித்தான் அதை நான் பார்க்கிறேன். அப்பிடி கூலி விவசாயிகளின்ரை பிரச்சினை இருக்கு. சரியெடப்பா நேரம் போகுது. வெளிக்கிடு. என்னை ஒருக்காக் குவார்ட்டர்சிலை விட்டிட்டுப் போ, மாவோவின்ரை 'புதிய ஜனநாயகப் புரட்சி' எண்ட புத்தகம் இருக்கு. அதைத் தாறன். வெளிக்கிடு. 'பாய்க்கை' எடுத்துக்கொண்டு வாரன்.'

 17. யாழ் பொதுசன நூலகம்

1981 இளவேனிற்காலம்

பாயை விட்டு நிலத்தில் உருண்டாயிற்று. அந்தக் காலையிலும் வியர்த்தது. சாமம் சாமமா முழித்து இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்' நெடுங்கதையை வாசித்து முடித்து விட்டிருந்தேன். கீழ் வெண்மணியில் நாற்பது கூலி விவசாயிகள் உயிருடன் குடிசைகளில் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரம்.....

இதை வாசித்த பிறகு எப்படி நித்திரை என்மேல் படரும்? புரண்டு புரண்டு கிடந்தேன். என் மயக்க நிலை எனக்குத் தெரிகிறது. குடிசைகள் கொழுந்து விட்டெரிந்தன. நாகம்மா குழறுகிறா..... 'அய்யோ அய்யோ என்ரைமோன் கந்தன் உள்ளுக்கை.. அணையுங்கோ.... அணையுங்கோ.'

எங்கள் கிணற்றிலிருந்து இரண்டு பெரிய வாளிக்கை தண்ணி நிரப்பிக் கொண்டு ஓடுறன்..... அது நாகம்மாவின்ரை வீடாத் தெரியேல்லை. தம்பிப்பிள்ளையண்ணரின் வீடு. தண்ணி தளம்பித் தளம்பி வழியுது. முளாசி எரியுது. சின்னா தான் கத்துறா... 'அய்யோ எரியுது... எரியுது... நூர்த்து விடுங்கோ.... நூர்த்து விடுங்கோ....' நெருப்பு வெக்கை என்னை வேர்க்கப் பண்ணுது....

வேர்த்து ஒழுக பாயில் இருந்து நிலத்துக்கு உருண்டேன்... முளாசி எரிகிற தம்பிப்பிள்ளையண்ணரின் கொட்டிலில் தண்ணி வாளியுடன் நிற்கிறேன்..... வேர்வை ஒழுகப் பாயில் உருள்கிறேன். சாடையான மயக்கச் சுழிப்பில் இரண்டினுள்ளும் சுழல்கிறேன்.

சடசடவென அப்பா என்னைத் தட்டி எழுப்புகிறார். 'ராசா... ராசா....' மிருதுவாக ஒலிக்கிற அப்பாவின் குரல் இப்போது கடூரமாய் ஒலிக்கிறது.... 'ராசா, பப்ளிக் லைப்பிரரியை எல்லோ கொளுத்திப் போட்டாங்களாம்.' 

'என்னது...?'

கனவுக்கும் நனவுக்கும் பேதம் தெரியவில்லை. இன்னும்

வாளி நிரப்பித் தண்ணீரைக் கொண்டு போய் ஊற்ற வேண்டுமா? நாகம்மா வீட்டுக்கா, பப்ளிக் லைபிரரிக்கா அல்லது கீழ வெண்மணிக்கா?

அப்பா உசுப்பினார். பாயிலிருந்து எழுந்து இருந்தேன். 'என்னப்பா?'

'எங்கன்ரை பப்ளிக் லைபிரரியை எல்லே சிங்களவங்கள் கொளுத்திப் போட்டாங்கள்....'

'ஆ......'

பிறகும் மயக்க நிலை. சேர்ட் போட்டதும் தெரியாது. சைக்கிள் எடுத்ததும் தெரியாது. அப்பா கத்தினார்.

'தேத்தண்ணியை குடிச்சிட்டுப்போ....'

இதுவும் இன்னொரு கனவா? 'குருதிப்புனல்' இப்படி என்னை அலைக்கழிக்கிறதா? நனவிலி நிலையில் என் சீவியம் போகிறது. இதோ நான் சைக்கிளில் வேகம் எடுக்கிறேன். எங்கே போகிறேன்? பப்ளிக் லைபிரரிக்கா? கீழ்வெண்மணிக்கா?

பத்து மைல் சைக்கிள் உழக்கியதில் அங்கு நின்றேன். என் வெண்மணித்தாய் அங்கு எரியுண்டு கிடந்தாள். யாழ் பொதுசன நூலகத்தின் வெண்மையில் கருமை படர்ந்தும் அப்பியும் கிடந்தது. பலர் அங்கு வந்து விட்டிருந்தார்கள். பொதுசன நூலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அழுதன பல முகங்கள். ஆத்திரம் கொண்டு கண்கள் சிவந்தும் இருந்தன சிலருக்கு.

பிரமாண்டமான என் தாய் எரியுண்டு கிடக்கிறாள்... அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஏன் அழவேண்டும்? ஆவேசம் என்னுள் உருண்டு புரண்டு ஓட என் தாயை மூன்று முறை சுற்றினேன். 'அம்மா அம்மா' என்று அரற்றினேன்.

அப்பொழுது பெயர்ந்திருந்தது சோளகம். எரிந்திருந்த புத்தகங்களின் சாம்பலை அது எடுத்துக் கொண்டோடியது. ஊர் உலகமெல்லாம் அதைக் கொண்டு திரிந்து புரண்டு புரண்டு அழுதது சோளகம். பண்ணைக் கடல் அதன் துக்கக் கண்ணீரைக் கரைப்பதாக இல்லை. ஏட்டுச் சுவடிகளின் சாம்பல் துகள்கள் மேலும் மேலும் பறந்து திரிந்தன. அவை என் வாயையும் கண்ணையும் அப்பியதில் வாய் கரித்தது. கண்ணீர் ஒழுகிற்று....

திரும்பச் சைக்கிளில் வேகம் கொண்டேன். அப்பொழுதுதான் தெரிந்தது. சுண்ணாகத்தின் சந்தைப் பகுதியும், கடை கண்ணிகளும் எரிந்து கிடந்தன. அதுவும் சிங்கள அனுமான்களின் தீப்பந்த விளையாட்டு, தமிழர் தலைகளில் மேலும் மேலும் வைக்கின்றன நெருப்புக் கொள்ளிகளை....

தோழர் விசுவின் குவார்ட்டசிற்கு வந்து விட்டிருந்தேன். முகம் இருண்டு கிடந்தார் தோழர் விசு. 'நான் எதிர்பார்க்கேல்லையெடாப்பா. தமிழ்ச் சனங்களிலை தான் கைவைப்பாங்கள், சுட்டுப்  பொசுக்குவாங்கள் எண்டு மாத்திரம்தான் நான் நினைச்சன். பப்ளிக் லைபிரரியை எரிப்பாங்கள் எண்டு என்னென்டெடா நினைக்க முடியும்? சொல்லு பாப்பம். அவங்கள் திட்டமிட்டிட்டாங்கள். தமிழரை மாத்திரம் அழிச்சால் பத்தாது. தமிழர் நிலங்களை பறிச்சால் மாத்திரம் போதாது. தமிழன்ரை கலை, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும் அழிக்க வேணும். அவங்கள் திட்டமிட்டு வேலை செய்றாங்கள். இப்ப பார் தமிழர்களின்ரை மூளையை எரிச்சிட்டாங்கள். நாங்கள்தான் 'மோட்டுச் சிங்களவர் மோட்டுச் சிங்களவர்' எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறம். ஆனால் எங்களைத்தான் அவங்கள் 'மோடையாவா' ஆக்கிப் போட்டு தாங்கள் கெட்டித்தனமா வேலை செய்கிறாங்கள். சரியான வெப்பியாரமா இருக்கெடா. பப்ளிக் லைபிறரிக்கு ஏண்டா நெருப்பு வைக்க வேணும்? அழுகை அழுகையா வருகுதடா. ஆனால் அழக்கூடாது. அழவே கூடாது. நாங்கள் கத்தியையும் தீட்ட வேணும். புத்தியையும் தீட்ட வேணும். அதுக்குரிய காலம் வந்திட்டு தெடா....'

'என்னாலை இனி ஒரு கணம் சும்மா இருக்கேலாது. நான் என்ன செய்ய வேணும்? சொல்லுங்கோ' 

'சொல்லுறன்'.

தொடரும்..

8/12/2012 4:48:59 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்