Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்வளர்க்கும் கல்லூரி

<p>தமிழ்வளர்க்கும் கல்லூரி</p>
பா.செயப்பிரகாசம்

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 2  

முன்புறம் அலை குதிக்கும் தெப்பக்குளம். பின்புறம் பெருகியோடும் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில் அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்த இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும். வைகைக்கு - கரை எல்லைகள் தவிர கால எல்லை கிடையாது. தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக் காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல் என்ற பேர் கல்லூரிக்கு! கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், அபி என தமிழில் தடம்பதித்த   கவிஞர்கள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம். அப்போது தமிழ் இளங்கலை (பி.ஏ) இறுதியாண்டில் கவிஞர் நா.காமராசன். நான்   தமிழ் இளங்கலையில் இரண்டாமாண்டு மாணவன். எஸ்.கே.எஸ். சாகுல் அமீது என அறியப்பட்ட இன்குலாப் இளங்கலை முதலாண்டில் சேருகிறார்.  அவருடைய வகுப்பு நண்பர், முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவைத் தலைவருமான மறைந்த கா.காளிமுத்து. அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சோலைப் பறைவைகள். 

தமிழ்நாட்டில் மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - மூன்று கலாசாலைகள் அன்றைய அறுபதுகளில் தமிழ் வளர்ப்பில் முன்னணியில்   இயங்கின.

நினைவுகள் பழுதுபடாதிருக்குமானால் அது 1963. சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியர் கவிஞர் மீராவின் மாணவராய் புகுமுக வகுப்பு (Pre university course) முடித்த எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது, தமிழ்க் காப்பில் முன்னிற்கும் தியாகராசர் கல்லூரியில் 1963-ல் இளங்கலை (பி.ஏ) சேருகிறார்.

இளங்கலை முடிக்கும்வரை எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது எழுதியவை யாப்பு சார்ந்த மரபுக் கவிதைகள்.

'மண்னின் குழந்தைகளாய்- இங்கு

வாழும் உயிர்களுக்கு

<p>தமிழ்வளர்க்கும் கல்லூரி</p>

விண்ணின் ஒளிமுலையில்-இருந்து

வீழும் வெயில் பாலே.

முதிர வைப்பாய் அரும்பை-அனல்

முத்தம் கொடுப்பதனால்

முதிரவைத்தல் முறையோ –அந்த

ஊமை மலர்க் குலத்தை.

 

சுரண்டிக் கொழுப்பவர்கள்- உன்

சூட்டில் பொசுங்க வில்லை

சுரண்டப்படுபவர் தாம்- உன்

சூட்டில் பொசுங்குகிறார்.

'வெயில்' தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.

***

'பாடகன் வருகின்றான்' - மற்றொரு கவிதை.

'பாலைவனத்தின் சோலைகளே –ஒரு

பாடகன் வருகின்றான் அவன்

பயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு

பாடல் தருகின்றான்

'நீலவானத்திற் கப்பால் –எதையோ

நினைத்துப் போகின்றான்

நீண்ட உலகத் துயர் களைய

நெஞ்சை நனைத்துப் போகின்றான்'

மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார். பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர்   வீரியமான சொல்லாடல்களைக் கைவசப்படுத்தினார். 

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) இஸ்லாமியரில் கீழ் சாதி என ஒதுக்கப்பட்ட ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 'நாவிதக்குடி' - அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பவை. தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு -மரைக்காயர் முஸ்லிம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது. நாவித முஸ்லிம் இளைஞர்களின் அயராத முயற்சியால் 'நாவிதக்குடி' என்னும் அந்தப் பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள் எதிர்ப்புக் கங்கு சீராய் வளர்ந்தது என்பதின் நிரூபணம் அவர் எழுதிய யாப்புசார் கவிதைகளும், யாப்பு வழிப்படாத புதுக்கவிதைகளும். மரபுக் கவிதையானாலும் புதுக்கவிதையானாலும் எதை விதைத்தாலும் எதிர்க்கருத்தியல் பீறிட்டமைக்கு ஒடுக்கப்பட்டோர் குரலிலிருந்து உருவான வேர் காரணம்.

'செத்தும் கொடுத்த சீதக்காதியின்' பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை. சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. சீதக்காதிகள்   இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி 'ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை' புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

'என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்' என்பார் இன்குலாப்.

புனைபெயர் வரித்துக் கொள்ளல் 

மரபுக்கவிதை வடிவத்தில் காலடிவைத்த எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது,    புனைபெயர் சூட்டிக்கொண்டவுடன் புதுக் கவிதையில் பயணித்தார்.   இளங்கலை முடித்த ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor) பணி. 1967-ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக நடத்திய 'கார்க்கி' இதழில் எஸ்.கே.சாகுல் அமீது -இன்குலாப் ஆகிறார். அதே கார்க்கியில் அந்நாட்களில் பா. செயப்பிரகாசம் சூரியதீபன் ஆனார். சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற அப்போதிருந்தே (1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயர் அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர்   ஆகியது போல், எஸ்.கே.எஸ். சாகுல் அமீது மறைந்து இன்குலாப்   இயற்பெயராகியது.    

'ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்' என்கிறார்.

தியாகராசர் கல்லூரியில் பயின்றபோது அக்காலத்தின் இளைய தலைமுறை   எப்படி உருவாகிற்றோ அப்படியே தி.மு.க. பற்றாளர்களாக நாங்கள் உருவானோம். சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை எம்மிடம் மார்க்சியத்திற்கு உறுதியான அடித்தளம் அமைத்தது. அரசதிகாரத்திலிருந்த தி.மு.க. வின் பண்ணை ஆதரவுப் போக்கு எம்மை மார்க்ஸீயச் சிந்தனையின் பக்கம் நடத்தியது.

'ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறிவிட்டுச் செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும் ' என்பார் இது பற்றி.

'ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்திபூர்வ முன்னேற்பாடு' என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதலுக்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் வலுவான துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி, மார்க்ஸிய சார்புடையவராய் ஆகியதும், பின்னர் புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசிய விடுதலையில் ஊன்றி நிற்பதுவும் அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

புரட்சிகர மா.லெ. சிந்தனைகளுக்குள் ஈர்க்கப்பட்டு நகர்ந்த வேளையில், இன்குலாபும் நானும் வேறு வேறு குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர விடுதலை முனைப்பில் ஒன்றாய்ப் பயணப்பட்டிருந்தோம். புரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்தபோது 'மனிதன்' 'புதிய மனிதன்' என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் அவராக இருக்காதே தவிர, முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கினார். ஆனால் 'புதிய மனிதன்' இதழில் சிறப்பாசிரியர் இன்குலாப் என இருக்கும்.

மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் 'மனஓசை' என்ற கலை இலக்கிய சமூக அரசியல் மாத இதழ் 1981- நவம்பர் முதல் பத்தாண்டுக் காலம் நடைபோட்டது. நிலவும் கருத்தியலுக்கு எதிராய் எதிர்க் கருத்தியலை முன்னிறுத்தி 'மனஓசை' நடந்த பத்தாண்டுக்காலமும் அதன் ஆசிரியராய் பின்னிருந்து இயக்கினேன். அப்போது அரசுப் பணியிலிருந்தேன். அதனால் தலைமறைவு ஆசிரியர். சூரியதீபன் என்னும் புனை பெயர் பலவழிகளிலும் உதவியது.   

'மன ஓசை' முதல் இதழில் இன்குலாப் தொடங்கிய 'விடியல் கீற்றுக்கள்' என்ற தொடர் ஒரு முக்கியமான பதிவு. மரபுவழிப்பட்ட கவிதைகளிலிருந்து புதுக்கவிதை உருவாகி வந்தது எப்படி என்பதையும், புதுக்கவிதையின் சிந்தனா வேகத்தை நாட்டுப்பாடல் இலக்கிய வகைகளில் இணைத்து, தமிழகத்தின் சனநாயகப் புரட்சிக்கான இலக்கியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் பதிவிட்டிருந்தார். அக்கட்டுரையில் அவரே குறிப்பிடுவது போல் 'இருண்டவீட்டில் சிம்னி விளக்கு ஒன்று இருளுடன் போராடி ஒளி தருவது போல்' கோடிகாட்டின அக்குறிப்புகள்.

தொடரும்..

1/13/2017 11:04:22 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்