அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 9
30. வெய்யிலினால் அல்ல
1983- கார்காலம்
வாழும் நாட்கள் அதிகம் இல்லாத காலம் எதிரே தெரிந்தது. நினைத்து நினைத்துப் பொழிந்தது மழை. வாடைக்காற்று மரங்களை உசுப்பி விட்டதில் சுள்ளிகள், குழை, கொப்புகள் ஈரலிப்புடன் வீதிகளில் இறைந்து கிடந்தன. அவற்றை மிதித்து நசித்துத் திரிந்தன சிங்கள இராணுவ வாகனங்கள்.
மழைப்பச்சைக்குள் அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. அவற்றின் உறுமலும், துப்பாக்கிகளின் சடசடப்பும் தான் அந்த யமன்களைக் காட்டித்தந்தன.
இரவெல்லாம் மழை தூறி காலையில் வெளித்திருந்தது. சீதளம் நிறைந்த வாடைக்காற்றை ஆழ உள்ளிழுத்து வெளிவிட்டேன். புத்துணர்ச்சியைத் தரத் தவறவில்லை வாடைக்காற்று. உரும்பிராய்க்கு ஒருக்கால் போக வேண்டும். நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது சிங்கள இராணுவம். என்றாலும் அரசியற் பணிகளை ஒதுக்கி வைக்க முடியாது.
ஒழுங்கைகள் தான் பாதை என்றாலும் ஓரிடத்திலாவது தார் வீதியைக் கடக்க வேண்டும். அப்படித் தொட வேண்டிய இடம் கோண்டாவில் டிப்போ சந்தி. காற்று எப்படியோ அச்சம் தரும் சேதியைச் சொல்லி விடும். அது சொல்லியதோ என்னவோ, ஒழுங்கையில் ஊரும் அட்டைகள் சில்லில் நசியாமல் கவனம் பார்த்து சைக்கிள் ஓடினேன்.
இருபது யார் இடைவெளி கூட இல்லை. ஒரு 'யமன்' நின்றது. எப்படி அத்தவறு நேர்ந்தது? என் கவனம் பிகசியது எங்கு? யோசிக்க ஒரு கணம் கூட அவகாசம் இல்லை. சட்டென என்ன செய்துவிட முடியும்? பக்கத்தில் இருந்த வீட்டு வாசலில் சைக்கிளை விட்டேன். என் வேகத்தில் சைக்கிள் ஓடி ஒரு வேலியை முட்டியது. சைக்கிளை அப்படியே கவிழ விட்டு, வேலி ஏறிப் பாய்ந்தேன்.
பின்னால் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் சீறியபடி என்னைத் துரத்தத் தொடங்கின. பற்றைக்காடு, பிறகு தோட்ட வெளி. பற்றைக் காட்டுக்குள் புகுந்ததில், சிங்கள இராணுவத்துக்கு என்னைக் கண்டு பிடிக்க முடியாது. இலக்குத் தெரியாது குண்டுகள் பொழிந்தன.
என்வேகம் எனக்குத் தெரியவில்லை. எங்கு வந்து சேர்ந்தேன் என்பதும் தெரியவில்லை. துப்பாக்கி குண்டுகள் துரத்தாத இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
தோட்டங்களினூடாக என் ஓட்டமும் நடையும் அரை மணித்தியாலத்துக்கு இருந்தது. உச்சிச் சிலுவையுடன் தெரிந்தது ஒரு தேவாலயம். இப்படி ஒரு தேவாலயத்தை எங்கேயோ கண்டிருக்கிறேன். சோளகக் காற்று வாழையிலைகளைத் தாறு மாறாகக் கிழித்து கொண்டிருந்த காலம் அது. இப்பொழுதோ சில்லென்று வீசுகிறது வாடைக்காற்று. சட்டென இடம் ஞாபகம் வரவில்லை.
வந்துவிட்டது. உரும்பிராயை அடைந்து விட்டேன். இங்கிருந்து மணியண்ணர் வீடு அதிக தூரம் அல்ல.
கிளியக்கா, 'வாங்கோ தம்பி' என்று விட்டு, உடனே குசினிக்குள் போனா. அதுதான் எப்பொழுதும் நடக்கிறது. மணியண்ணை எவ்வளவு கொம்மியுனிசம் பேசினாலும், கிளியாக்காவின் நெற்றியிலும், உச்சியிலும் குங்குமம் மினுங்கும். வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி தவிர எதுவும் சமைபடாது. கூட கற்பூர வாசம் இருக்கும்.
கிளியக்கா குசினிக்குள்ளிருந்து திரும்பி வந்த போது கையிலிருந்த கோப்பையில் அரிசிமாப்புட்டும், சம்பலும் வாழைப்பழமும் இருந்தன. 'சாப்பிடுங்கோ தம்பி, சரவணன் இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்பதான் போனவர். இப்ப வந்திடுவர்' என்றா கிளியக்கா.
எனக்கு அப்போது புட்டு தேவையாக இருந்தது. மனம் மிகப் பதகளித்து விட்டேன். ஒரு குண்டு முதுகைத் துளைத்திருந்தாலும் அம்மா அப்பாவுக்கு மகன் இல்லை. என் தாய்த்தேசத்துக்கு ஒரு தனயன் இல்லை. தமிழீழத்தைக் காணாது செத்த பாவியருள் ஒருவனாயிருப்பேன்.
கிளியக்கா திரும்பி வந்தபோது மூக்குப்பேணியில் தேநீர் இருந்தது. 'அக்கா' என்று ஆசையாகக் கூப்பிட்டேன். சிங்கள இராணுவம் துரத்தியதைச் சொல்லவில்லை.
'என்ன தோழர் இவ்வளவு நேரம்? நேரம் பிந்திற ஆள் இல்லையே நீர்?' கேட்டுக் கொண்டு வந்தார் தோழர் சரவணன். 'வாரும்' என்று கூட்டிப் போனார். 'எங்கை சைக்கிளைக் காணேல்லை?' என்றார். நடந்ததைச் சொன்னேன். 'நல்லகாலம். அரும்பொட்டிலை தப்பீட்டீர். எவ்வளவு இக்கட்டுக்கை வேலை செய்யவேண்டி இருக்கு' என்றார்.
'தோழர் ஈபிஆர்எல்எவ் செழியன் உங்களை அவசரமாக சந்திக்க வேணும் என்டவர்' என்றார் சரவணன். போன வீட்டின் பின்பக்கத்தில் செழியன் காத்து நின்றார். 'தோழர் உங்களோடதான் இதைக் கதைக்க வேணும் எண்டு அவசரப்பட்டன்' என்று எடுத்த எடுப்பில் சொன்னார் செழியன்.
செழியனிடம் எப்பொழுதும் எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. காற்றைக்கூட நோகப்படுத்தாத, சேதப்படுத்தாத வார்த்தைகள் அவருடையவை. உயர்தர மாணவனாக இருந்தவேளை ஈழமாணவர் பொது மன்றத்தில் ஒன்றாக இணைந்து பணி புரிந்தோம். டேவிற்சன், சிறீதரன், அற்புதராசா, தாஸ், என்று இன்னும் சிலர். செழியன் அப்பொழுது சிவகுமார் என்ற தன் உண்மைப் பெயருடன் இயங்கினார். செழியனைக் காணும் கணமெல்லாம் 'தோழமை' என்னை முழுமையாகப் பற்றிக் கொள்கிறது.
'சொல்லுங்கோ தோழர், என்ன விசயம்?' என்றேன் செழியனிடம்.
'கவலைக்குரிய விசயம் தோழர். இது எங்கன்ரை விடுதலைப் போராட்டத்துக்கு மிக ஊறு விளைவிக்கும் காரியம். மட்டக்களப்பு சிறையுடைப்பு சம்பவம் தொடர்பான விசயம் தோழர். மட்டக்களப்பு சிறை உடைப்பை ஈபிஆர்எல்எவ் தான் செய்திருக்கு. முழுக்க ஈபிஆர்எல்எவ் தான் செய்தது என்று சொல்ல வரேல்லை. ஆனால்,...'
உடனே இடைமறித்து, 'புளொட் தாங்கள் தான் செய்தது எண்டு போஸ்ரர் ஒட்டியிருக்கிறார்களே' என்றேன்.
'அதுதான் தோழர் பிரச்சினை. புளொட்டுக்கு அதிலை பங்கில்லை எண்டு நான் சொல்ல வரேல்லை. ஆனா முழுக்க முழுக்கத் தாங்கள் தான் செய்தது எண்டு சொன்னால் அது பொய். அது பிழை. தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின்ரை ஆக்கள் கூட சிறை உடைப்பிலை பங்கு பற்றியிருக்கினம்.'
'அதை மறுத்து நீங்கள் ஒரு போஸ்ரர் ஒட்ட வேண்டியது தானே?' என்றேன். பிறகு சிரித்துக் கொண்டு, 'நீங்கள் எது செய்யிறியளோ இல்லையோ போஸ்ரர் எழுதுறதிலை உங்களை வெல்ல ஆர் இருக்கினம்' என்றும் சொன்னேன்.
செழியனிடம் சின்னச் சிரிப்பு சட்டென வெட்டி 'இது பகிடி விடுற நேரமில்லைத் தோழர்' என்றார். 'எங்கன்ரை அமைப்புத் தோழர்கள் போஸ்ரர் ஒட்டினவையள்தான். புளொட்காரர் என்ன செய்தினமெண்டால் சுழிபுரத்திலை வைத்து போஸ்ரர்களையும் பறித்துக் கிழித்து தோழர்களுக்கும் அடி கொடுத்துக் கலைத்து விட்டிருக்கினம். எங்கன்ரை தோழர்கள் சும்மா விடுவினமோ? மானிப்பாயடியாலை வந்த புளொட் போராளிகளுக்கு செம்மையான சாத்து சாத்தியிருக்கிறார்கள். அது பெரிய பூகம்பமாப் போச்சு.
புளொட்டின்ரை சுந்தரம் படைப்பிரிவு எண்ட குறூப் இருக்குத்தானே? அவங்கள் சுழிபுரத்திலை எங்கன்ரை தோழர்களை பனைமரத்திலை கட்டி தாறுமாறா விளாசி இருக்கிறார்கள். ஒருநாள் முழுக்க அப்பிடியே கட்டுப்பட்டுக் கிடந்தினம் எங்கன்ரை தோழர்கள். இதுக்கு எங்கன்ரை தோழர்கள் ஏதாவது செய்யவேணும் எண்டு கறுவிக் கொண்டிருக்கினம். இது இப்பிடியே தொடர்ந்து கொலையிலைதான் முடியப் போகுது. என்னத்துக்காகப் போராடி இப்ப என்னத்திலை வந்து நிக்கிறம் தோழர்? இதை இப்பிடியே தொடர விடக்கூடாது. வேறை ஒரு அமைப்பாலை தான் புளொட்டை அணுகி இதுக்கு ஒரு தீர்வு காணவேணும் எண்டு தீர்மானிச்சம். நான் உங்களத்தான் உடனை யோசிச்சனான்' செழியன் சொன்னார்.
நெஞ்சில் பதட்டம் வந்தது. என்ன செய்யப் போகிறோம் நாம்? நமது எதிரி சிங்களப் பேரினவாத அரசு இல்லையா? நமக்கு நாமே தானா எதிரி? எமது துப்பாகிகள் எம்மை குறிவைக்கின்றனவா? அரசியல் இல்லாத துப்பாக்கிகள் என்று இதைத்தான் சொல்கிறார்களா?
இனி மெனக்கெடக் கூடாது. தோழர் சரவணனின் சைக்கிளை இரவல் வாங்கினேன். இப்பொழுது புழுதி பறக்கிற ஒழுங்கையாக இல்லை. செழித்துக் கிடக்கின்ற மரங்களின் இடையே இருந்து சிங்கள இராணுவத்தின் கண்கள் உறுத்துப் பார்க்கலாம். இம்முறை என் அவதானிப்பு மிக மிக நுணுகியதாக இருந்தது.
பின்வழியால் யாழ் பல்கலைக்கழகத்தினுள்ளே புகுந்தேன். சத்தியமூர்த்தியை அல்லது கேதீசைச் சந்திக்கவேண்டும். சத்தியமூர்த்தி பல்கலைக்கழகத்தில் எப்போதும் நிற்பவன் அல்லன். செருப்புப் போட்டு, செம்பாட்டு மண்ணை மிதித்தபடி மக்களுடன் அரசியல் வேலை செய்பவன். கேதீஸ், கண்ணாடிக்குள்ளால் தன் சிரித்த கண்களைக் காட்டியபடி கன்ரீனுக்குள் நிற்பான்.
நின்றான். 'மச்சான், அவசரமா உங்கன்ரை அமைப்பின் மேல்மட்டத்திலை உள்ள ஓராளைச் சந்திக்க வேணும்' என்றேன். 'அப்பிடியென்றால் நீ சுழிபுரம்தான் போகவேணும்' என்றான் கேதீஸ். 'சுழிபுரம் தான்ரா பிரச்சினையே' என்றேன். செழியன் சொன்னதை அப்படியே கேதீசிடம் ஒப்புவித்தேன்.
'என்னடாப்பா இது புதுப்பிரச்சினையாயிருக்கு' என்றான் கேதீஸ் - பிறகு சிரித்த முகமாக இருக்கவில்லை கேதீசுக்கு. 'நாங்கள் எதுக்காகப் போராட வெளிக்கிட்டு இப்ப எங்கை வந்து நிக்கிறம்' இப்ப கொஞ்சப்பேர் புளொட்டைக் குழப்ப எண்டு வந்து நிக்கிறாங்கள். அதை அனுமதிக்க ஏலாது மச்சான். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பக்கத்தாலை வேலை செய்து அமைப்பை வளர்க்கிறம். இவங்கள் மற்றப் பக்கத்தாலை அழிச்சுக் கொண்டு வாறாங்கள். அதுக்கு ஒரு முடிவு கட்டவேணும் மச்சான். இப்ப உடனை ஆரையும் சந்திக்கிறது கஷ்டம். ஆமியும் திரியிறாங்கள். நீ ஒண்டு செய். நாளைக்குக் காலமை பத்துமணிக்கு செழியனைப் கூட்டிக் கொண்டு இஞ்சை யூனிவேர்சிற்றிக்கு வா. நான் அரேஞ்ச் பண்ணிறன், சரியாடாப்பா. நீ ஒண்டுக்கு யோசியாதை. வெல்லுவம்.'
கேதீஸ் சொல்லச் சொல்ல அவன் குரல்வளை மேலும் கீழும் ஏறி இறங்கியது 'மச்சான் ஒரு பிளேன்ரீ குடியன்ரா.'
பல்கலைக்கழகத்திலிருந்து நாச்சிமார் கோயிலுக்குப் போகிற வீதியில் வலது பக்கம் இருந்தது அந்த ஒழுங்கை. கேதீசின் சைக்கிள் சுளுவாக அதற்குள் இறங்கியது.
வீட்டின் பின்பக்கம் கேதீஸ் கூட்டிச் சென்றான். உள்ளே நாங்கள் அமர்ந்திருந்த சிறிது நேரத்தில் ஒருவர் உள் நுழைந்தார். 'இவர் ஜான் மாஸ்ரர்' என்றான் கேதீஸ்.
'கேள்விப்பட்டிருக்கிறேன்' என்றேன். இணக்கமான சிரிப்பைக் காட்டினார் செழியன்.
'விசயம் கேள்விப்பட்டன். மிகுந்த மனவருத்தமாக இருந்தது. யார் சரி, யார் பிழை என்பதல்ல முக்கியம். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. எங்களுக்கான பொது எதிரி ஒன்றுதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறம். ஆனால் எங்களை மீறியும் சில காரியங்கள் நடந்து விடுகின்றன. எவ்வளவு சுத்தமான, ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், அவற்றிலிருந்தும் கழிவுகள் வெளிவரத்தானே செய்கின்றன. அதுவும் எவ்வளவு நாற்றத்தோடை. அப்பிடி எல்லா அமைப்புக்களிலையும் சில கழிவுகள் தீயசக்திகளாக வெளிப்படுது. அப்பிடிப்பட்ட கழிவுகளின்ரை வேலைதான் இது. அதற்காக இதை நியாயப்படுத்துறன் என்று நினைக்காதையுங்கோ. அவசியம் இப்படியான சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும்' சிறுபுன்னகையுடன் ஜான் மாஸ்ரர் இதனைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் நம்பத் தொடங்கினேன். 'வளம் நிறைந்த பாதையில் இலக்கு தெளிந்த நேர்கோட்டில் சகபயணிகளாக நாம் பயணிக்கிறோம்.' இதோ, மூன்று வெவ்வேறு அமைப்புத் தோழர்கள், சுமுகமான சூழலில் உரையாடுகிறோம். காற்று நிறைந்து, வெளிச்சம் பிரகாசிக்கின்ற வெளி இங்கு உருவாகி இருக்கிறது. நெஞ்சில் ஒரு வலி வர யாரும் விட்டதில்லை.
'நல்லது தோழர். எங்கன்ரை அமைப்பு சார்பாக உங்கன்ரை அமைப்பிட்டை மன்னிப்புக் கேட்கிறேன். இனி எங்கன்ரை அமைப்பிலை இருந்து எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு வராது என்று உறுதி அளிக்கிறன். அந்த உறுதியை நீங்களும் தரவேணும் தோழர்' என்றார் ஜான்மாஸ்ரர்.
'ஓம் அந்த உறுதியை நான் தாறன். அமைப்பிட்டை இருந்து அந்த உறுதியைப் பெற்றுக் கொண்டுதான் உங்களோட கதைக்க வந்தனான். சந்தோசம் தோழர். இப்பிடி சுமுகமாக எல்லாம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கேல்லை. தொடர்ந்து இப்படி ஒன்றாகப் பயணிப்பம். எனக்கு ஒரு யோசினை தோன்றுது. இப்பதான் அந்த யோசினை வந்தது. அதை உங்களோட பகிரலாம் என்று நம்பிறன். மாதத்திற்கு ஒருமுறையாவது எல்லா அமைப்புகளினதும் இரண்டு பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி, எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி உரையாடினால் என்ன? யாவரினதும் இலக்கு ஒன்று. அதை அடைகிற வழிமுறைகள்தான் வெவ்வேறை. நாங்கள் அப்படிக் கூடிக் கதைப்பது ஆரோக்கியமாக இருக்கும் எண்டு நம்பிறன்.' செழியன் சொன்னார்.
ஜான் மாஸ்ரர், 'நீங்கள் சொல்லுறது கேக்க நல்லா இருக்கு. ஆனால் எல்லா அமைப்புக்களும் இதற்கு உடன்படுமோ தெரியேல்லை. எங்கன்ரை மத்திய குழுவிலை இதைப் பற்றிக் கதைக்க வேணும். சம்மதம் கிடைக்கும் என்றுதான் நம்பிறன்' என்றார்.
'நானும் மத்திய குழுவிலை கதைக்க வேணும். எனக்கு இப்ப உடனை வந்த யோசினை இது. வராத அமைப்புகளை விட்டு விட்டு மற்றவர்கள் கூடிக் கூடலாம். நிறையப் பிரச்சினைகள் இதனால் தீர்ந்து போகும்' செழியன் தொடர்ந்தார்.
'நல்ல யோசினை. பாப்பம். சரி, எனக்கு வேறை ஒரு வேலை இருக்கு. நான் போக வேணும். பிறகு சந்திப்பம். நன்றி தோழர்.' எழுந்து செழியனிடம் கைகுலுக்கினார் ஜான் மாஸ்ரர். என்கையைப் பிடித்துக் கொண்டு, 'உங்களோட சில விசயங்களைச் சேர்ந்து செய்யிறதைப் பற்றி யோசிக்கிறம். அது பற்றி உங்களோட கதைக்க வேணும். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கு?' என்று கேட்டார்.
'எப்ப என்றாலும் பரவாயில்லை. கேதீசிட்டை சொல்லி அனுப்புங்கோ' என்றேன்.
வெளியில் வந்தோம். வாடையின் சீதளக் காற்று மூச்சை நிறைத்தது. அது அள்ளிக்கொண்டு வந்தது கடலின் மிருதுவான மணத்தை. மனம் நிறைந்து போக செழியனைப் பார்த்து புன்னகை வைத்தேன்.
தொடரும்...