Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எனது கோயில் எது என்று சொல்வேன்

எனது கோயில் எது என்று சொல்வேன்
இரவி அருணாசலம்

 

கையெழுத்து

சென்ற வாரம் சென்னை சாந்தி திரையரங்கு தன ஓய்வை அறிவித்துக் கொண்டது. அதனால் துன்பப்பட்டுத் துடித்த இலட்சக்கணக்கான சிவாஜி இரசிகர்களில் நான் ஒருவன். சிவாஜி அளவு அவரது பிள்ளைகளிலும் பார்க்க சாந்தி திரை அரங்கையும் நேசித்தோம். அஃது ஒன்றே மெருகு குறையாமல் சிவாஜியின் திரைப்படங்களை திரையிட்டன.

அப்போது எனது அம்மம்மாவும் அம்மாவும் வடதிசை பார்த்துச் சிதம்பரத்தானைக் கும்பிடுவது வழக்கம். அவர்களது பெரும்பாலான நேர்த்தியும் சிதம்பரத்தானுக்குத்தான். நானும் கடல் கடந்த வடதிசையைப் பார்ப்பேன். அது சிதம்பரத்தானுக்கு அல்ல. சிவாஜி கணேசனுக்கு.

என் நினைவில் நின்ற வகையில் 'ஓம் படம்தான் பார்க்கிறேன்' என்று உணர்ந்த படங்கள் இரண்டு. அப்போது நாங்கள் கீரிமலையில் வசிக்கிறோம். 1966ஆம் ஆண்டு. 'டபிள் டெக்கர்' பஸ் ஏறிப் போனோம். அப்போது தகரக் கொட்டகை என அறியப்பட்ட வின்சர் மடுவத்தில் 'திருவிளையாடல்' பார்த்தோம். இன்னொரு புராணப் படம் 'வெலிங்டன் டால்கீஸ்' இல் ஓடியது. சிவாஜி நடித்தது. அதன் பெயர் 'பழனி'. அது முருகனைக் குறித்த பெயர்தானே. எனவே பக்திப் படம் என நினைத்தோம். அது சிவாஜியைக் குறித்த பெயர். கவலை ததும்பிய 'கறுப்பு - வெள்ளைப்' படம் அது. அந்த ஏமாற்றத்தை வழி நெடுக அம்மா புலம்பித் தீர்த்தார்.

அப்போதிருந்து இரண்டு இரண்டு படங்களாகப் பார்க்கத் தொடங்கினோம். நாங்கள் நால்வர். அம்மாவுக்கு எம்.ஜி.ஆர்.இன் அழகையும் 'மதுரை வீரன்' திரைப்படத்தையும் பிடித்திருந்தாலும் சிவாஜி என்றால் கொள்ளை விருப்பம். அம்மாவின் மிக்க அன்புக்குரிய (நானோயா மாமா என்று எங்களால் அழைக்கப்பட்ட) அண்ணனையும் தன்னையும் 'பாசமலர்' படத்தின் சிவாஜி - சாவித்திரி என உணர்ந்த பின்னர் சிவாஜி மீதான நேசம் கடலளவு பெருகி இருக்காதா?

எனவே யாழ்ப்பாணம் சென்று படம் பார்ப்பது எனில் சிவாஜியின் இரண்டு படங்கள் திரையரங்கில் ஓட வேண்டும். அவ்வாறு நாங்கள் பார்த்த படங்கள்:

1.(1969) தங்கச் சுரங்கம் (வின்சர்) - திருடன் (ராணி) 

2.(1972) வியட்நாம் வீடு (வெலிங்டன்) - சவாலே சமாளி (ராணி) 

எனது கோயில் எது என்று சொல்வேன்

3.(1972) பாபு (ராஜா) - பட்டிக்காடா பட்டணமா (ராணி)

4.(1975) ராஜ ராஜ சோழன் (வின்சர்) – நீதி (ராணி)

மேலும் சிவாஜி அல்லாத வேறு நடிகர் நடித்து இரண்டிரண்டாக பார்த்த படங்கள்:

1.(1971) கற்பூரம் (ராஜா) - பணமா பாசமா (ராணி)

2.(1974) தெய்வம் (லிடோ) - கோமாதா என் குலமாதா (வெலிங்டன்)

மற்றும் நல்லூர் கந்தசாமிக் கோயில் தேரில் அன்று கோயிலுக்குப் போய் வரும் வழியில் பார்த்த படங்கள் சில. அனைத்தும் ராணி திரையரங்கில் பார்த்தோம். ஏனென்றால் ராணி திரையரங்கின் முன்தான் பஸ்நிலையம் உள்ளது. கடைசி பஸ்ஸைத் தவற விடும் சந்தர்ப்பம் அங்கு இருக்காது. பார்த்த படங்கள்:

1. மாட்டுக்கார வேலன் (1968)

2. எங்க ஊர் ராஜா (1969)

3. இரு கோடுகள் (1970)

4. குலவிளக்கு (1971)

பின்னைக் காலத்தில் நல்லூர் தேரிலன்று நண்பர்களுடன் வந்து பார்த்த படம் அன்னக்கிளி (1977) அது ஸ்ரீதர் திரையரங்கு. தண்டவாளத்தை ஒட்டிய திரை அரங்கு அது என்பதனால் தொடரூந்து செல்கிறபோது திரையரங்கு அதிரும்.

தீபாவளிக்கு புது உடுப்பு எடுக்க வருகிறபோது படம் பார்க்கத் தவறுவதில்லை. அருணோதயம் (1971), தெய்வமகன் (1972) அவ்வாறு பார்த்தவை. இரண்டு படங்களையும் நமக்குத் தந்தது, லிடோ திரையரங்கு.

படம் பார்க்கிறபோது இரண்டு வகைக் கணக்கு என்னிடம் உண்டு. 1.திரையரங்கின் நுழைவுச் சீட்டு. 

1. கலரி: ஒரு ரூபா.

2. செக்கண்ட் கிளாஸ்: ஒன்றரை ரூபா

3. முதலாம் வகுப்பு: இரண்டு ரூபா

4. ரிசேர்வ்: இரண்டரை ரூபா.

5. பல்கனி: மூன்று ரூபா

யாழ்ப்பாணத்தில் வின்சர், வெலிங்டன், ராஜா, ராணி, மனோகரா, லிடோ, ரியோ, சாந்தி, ஹரன், ஸ்ரீதர் என்று பத்து திரையரங்குகள் இருந்தன. இவற்றில் வெலிங்டன், ராணி, லிடோ, ரியோ ஆகியவற்றில் பல்கனி கிடையாது. எனவே ராணி திரையரங்கு 'ரிசேர்வ்' என்பதனை டி.சி. எனவும் ஒ.டி.சி. எனவும் பிரித்தது. டி.சி: இரண்டரை ரூபா. ஒ.டி.சி: மூன்று ரூபா எனவும் ஆக்கியது. சாந்தி திரையரங்கில் இரண்டு பல்கனி என்பதனைச் சொல்லாமல் விட்டால் தவறு. ஆக உயரத்தில் உள்ளதைச் 'சுப்பர் பல்கனி' என்றனர். என் முதல் காதலியுடன் அதிலிருந்துதான் இரண்டாம் படம் பார்த்தேன். (தூங்காதே தம்பி தூங்காதே) முதல் படம்: (1985) பூவிலங்கு (மனோகரா திரையரங்கு)

இரண்டாம் கணக்கு இதுதான்: அளவெட்டியிலிருந்து 10 மைல் தொலைவில் இருந்தது யாழ்ப்பாணப் பட்டினம். காரில் போவதாயின், 12ரூபா. பஸ் 5,6 ரூபாவுடன் முடித்துவிடும். இரண்டு குடும்பங்கள் ஏறிச் செல்வதென்றால் எப்போதும் கார்தான்.

கார் என்றால் எப்போதும் நாகராசண்ணர்தான். பச்சை சோமசெட் கார் அவருடையது. இராசரத்தின அண்ணர், சற் மொடல் கார் வைத்திருந்தார். வூல்சிலி மிசினை கம்பி போட்டு உருட்டி ஸ்டார்ட் பண்ணுவதுபோல இந்தக் காரை ஸ்டார்ட் பண்ண வேண்டும். முன்னுக்கு இருப்பவர் மண்ணெண்ணெய் கலனை தன் மடியில் வைத்திருக்க வேண்டும். இராசரத்தின அண்ணர் சேர்ட் போட்டிருக்க மாட்டார், வெள்ளைச் சால்வைத் துண்டுதான்.

ஒருநாள் முட்டாள்தனமான காரியம் செய்தேன். 'மகாகவி'யிடம் போய் காரைக் 'ஹயருக்குக்' கேட்டேன். என் நல்ல காலமோ, தெரியவில்லை. அவர் என்னை மரியாதையாக அனுப்பி வைத்தார்.

சிவாஜியின் சாந்தி திரையரங்கு மூடப்படுகிறது. மிகுந்த வேதனை. வியாபார உலகில் என் பங்கு என்ன? ஒன்றுமில்லை. ஆயினும் துயரைப் பகிர்தல் முக்கியம் அல்லவா?

5/22/2016 3:22:49 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்