Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மண்ணில் அந்த நாட்களின் நினைவுகள்

<p>மண்ணில் அந்த நாட்களின் நினைவுகள்</p>
ஆதிலட்சுமி சிவகுமார்

 

மாவீரர்நாள் நெருங்கநெருங்க மனம் கனத்துக் கிடக்கிறது.....

தாயகத்தின் நினைவுகள் நெஞ்சில் ஆறாத புண்ணாய் வலிக்கின்றன. மனக்கண்ணில் அந்த நினைவுகள் அலையலையாய் கிளம்புகின்றன. 1989இல் மணலாற்றுக் காட்டுமுகாமில் முதல்முதலாக கடைப்பிடிக்கப்பட்ட மாவீரர்நாளைத் தொடர்ந்து... ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாள் தமிழ்மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்நாள் ஒரு தூய்மையான நாள். தாயகத்தின் விடுதலைக்காய் பல்வேறு வழிகளில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களை ஒருசேர மதிப்பளித்துப் போற்றுவதே இந்நாள் என நாம் உணர்கின்றோம்.

தமிழர்களின் வரலாற்றில் மானமும் வீரமும் முதன்மையானவையாக இருந்துவந்துள்ளன. நினைவுக்கற்களை அமைப்பதும், நடுகற்களை வழிபடுவதும் தமிழர்களின் வரலாற்றில் பண்பாடாக இருந்து வந்துள்ளதை சங்ககாலம் எடுத்துரைக்கின்றது. இதன்வழியே தான் பறிபோய்க்கொண்டிருக்கும் தமிழர் நிலத்தை மீட்க இந்த மாவீரர்கள் தங்களை தற்கொடையாக்கினார்கள்.

ஆண் பெண்ணென்ற வேற்றுமைகளுக்கப்பால் இவர்களின் ஈகம் பெரியது. தமது அடுத்த தலைமுறை அடிமைகளாகவும் நிலமற்றவர்களாகவும் வாழக்கூடாதென்பதற்காக, உன்னதமான தங்கள் உயிர்களை அர்ப்பணித்துச் சென்ற இவர்களை நினைந்து தொழுவது எமது கடமையாக உள்ளது.

கடந்த மாவீரர் நாட்களை மனது அசைபோட்டுப் பார்க்கின்றது.

நவம்பர் 20ஆம் நாள் புலிகளின் குரல் வானொலியின் ஆண்டுவிழா நடைபெறும். மறுநாள் நவம்பர் 21 மாவீரர் வாரம் தொடங்கும். வீதிகள் மஞ்சள் சிவப்பு கொடிகளால் நிறையும். முக்கிய சந்திகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். மாவீரர் பாடல்கள் ஒலிக்கும்...

பாடசாலைகள், பணிமனைகள், அரசஅலுவலகங்கள், வணிகநிலையங்கள்  எல்லாம் தேசிக்கொடி ஏற்றுவார்கள். மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிப்பார்கள். மலர்தூவி வணக்கம் செலுத்துவார்கள். மாவீரர்களின் மகிமைகள் குறித்து சிறப்புரைகளையும் நிகழ்த்துவார்கள்....

அந்த நாட்கள் அனைத்துமே சிறப்பான நாட்களாக அமையும். ஆங்காங்கே இருக்கின்ற மாவீரர் நினைவுப்பந்தல்களில் திருவுருவப் படங்கள் அழகாக அடுக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும். வீதியால் செல்பவர்கள் அந்தப் பந்தல்களை பார்வையிட்டுச் செல்வார்கள்...

மாவீரர் வார நாட்களில் அந்தந்த வலயங்களில் மாவீரர்களின் பெற்றோரும் உற்றோரும் உறவினர்களும் மதிப்பளிக்கப்படுவார்கள். மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று, மக்கள் பரபரப்பாக காணப்படுவார்கள். பூக்களை சேகரிப்பதிலும் மாலைகள் தொடுப்பதிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்....

அன்றுமாலை இடம்பெறும் தேசியத்தலைவரின் உரையை எதிர்பார்த்து, உலகமே காத்திருக்கும். ஊடகங்கள் செவிகளைத்தீட்டி அந்த உரையை அலசக் காத்திருக்கும்.

அந்தந்த துயிலும் இல்லங்களை நோக்கி மக்கள் சாரிசாரியாக நகர்ந்துகொண்டிருப்பார்கள். தமிழீழக் காவற்றுறையினர் மக்களை ஒழுங்குபடுத்துவதிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள்.

துயரமும் பெருமிதமும் ஒருங்கிணைய மாவீரர் இல்லங்களில் மக்கள் கூடுவர். தங்கள் பிள்ளைகளினதும் தங்களின் உறவினரதும் பழகியவர்களினதும் கல்லறைகளை தேடிக் கண்டுபிடிப்பர்.

தங்கள் உறவுகளின் கல்லறையருகே நெஞ்சுபொறுக்க இயலாமல் கதறி அழும் உறவுகளின் குரல் உயிரைப் பிழிந்தெடுக்கும். குழந்தைகள்கூட தம் பிஞ்சுக்கரங்களால் மாவீரர் கல்லறைகளில் மலர்களை வைப்பார்கள். அந்தளவுக்கு அவர்களிடம் மாவீரர்களின் மீதான பற்று இருந்தது. போர்க்காலங்களில் துயிலுமில்லங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்க விமானங்கள் வட்டமிட்டும், தாழப்பறந்தும் செல்லும்.

ஆனால், அத்தனைக்கும் நடுவிலும் மாவீரர் துயிலுமில்லம் மக்களால் நிறையும். நேரம் நெருங்கநெருங்க மக்கள் உணர்வுகளிற் திளைப்பார்கள். அங்கு தேசியத்தலைவர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை இடம்பெறும். அத்தனை மக்கள் கூடினாலும், அமைதியாக இருந்து அந்த உரையை அத்தனைபேரும் செவிமடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து அனைவரும் தங்களின் உறவுகளுக்கும், உரித்துடையோருக்கும் தீபமேற்றுவார்கள்.

'தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே....' பாடல் ஒலிக்கத்தொடங்க, விம்மல்களும் வெடிக்கும் அழுகையுமாக அந்தநேரம் அமையும். அடக்கிவைத்த துயரெல்லாம் இறக்கி வைத்தவர்களாக, பிள்ளைகளின் பிரிவுகள் மனதை அழுத்த எரியும் தீபங்களில் தங்கள் பிள்ளைகளின் முகங்களை மக்கள் தேடுவார்கள்.

அந்த மாவீரர் நாட்களின் கனதியை இன்று நினைத்துப் பார்க்கின்றது நெஞ்சம். கூடவே மாவிலாற்றில் தொடங்கி, நந்திக்கடல்வரை நிகழ்ந்த அந்தக் கொடுரமான போரின் வடுக்களும் நினைவில் எழுகின்றன. விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்பின் இன்று உயிரிழந்த தம் பிள்ளைகளை நினைந்து, தீபமேற்றுவதோ அல்லது வழிபாடு நடத்துவதோ குற்றச்செயலாக சொல்லப்படுகிறது.

உயிரீந்த ஒவ்வொரு மாவீரரும் தமது கனவுகளை தம் தலைமுறையினரிடம் கையளித்துச் சென்றிருக்கின்றார்கள். மாவீரர்களின் கனவுகள் நிச்சயம் நனவாக வேண்டும்.

11/24/2016 7:14:22 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்