அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 16
43. இராணுவச் சுற்றி வளைப்பு
1984 முதவேனிற்காலம்
'என்ன மச்சான்?' என்று ஒரு கை என் முதுகைத் தட்டியது. உடல் சட்டென உதறல் எடுத்து நடுங்கினேன்.
'என்னடாப்பா கனக்க யோசிக்கிறாய்?'
அட இது இவன் குணம். கண்டும் எவ்வளவு காலமாச்சு. நிறையக் கறுத்துப் போயிருந்தான்.
'எப்பிடி இருக்கிறாய்?' என்று கேட்டேன்.
'வாவன் ரீ குடிச்சுக் கொண்டு கதைப்பம்' இழுத்தான் குணம்..
'இப்பதான்ரா குடிச்சனான்.'
'பரவாயில்லை வா'
தட்டில் சூசியம், வாய்ப்பன், போண்டா, உழுந்துவடை, கடலை வடை என நிறைந்து வந்தது. 'ரண்டு ரீ தாங்கோ. சாப்பிடு மச்சான்' என்றான் குணம். கடலைவடையைப் பிய்த்து வாய்க்குள்ளை போட்டு குணம் சொன்னான்:
'மேசன் வேலை செய்துதான் குடும்பத்தைப் பாக்கிறன். அடுத்த வருசத்துக்கிடையிலை ஒரு தங்கச்சியை கல்யாணம் முடிச்சுக் குடுக்க வேணும்.'
இரண்டு வருசத்துக் கிடையிலை இரண்டு அண்ணன்மாரையும் அவன் இழந்திருந்தான்.
ஹெலி எப்போது வந்தாலும் குண்டுகளைக் கக்குகிறது. மூத்தண்ணருக்கு அது தெரியும். ஹெலியின் சடசடப்புக் கேட்டவுடன், அருகில் உள்ள பெரிய மரத்தடிக்குப் போய் விடுவார். மரத்தைக் கட்டிப்பிடித்தபடி, ஹெலிக்கு முகம், உடல் எதுவும் கொடுக்காதபடி சுற்றிச் சுற்றி வருவார். புளியமரமோ, வேப்ப மரமோ, ஆலமரமோ, வாகை மரமோ எந்த மரமானாலும் இவரைக் காபந்து பண்ணி விடும்.
அன்று ஹெலி சடசடத்து வருகிறது. மேசன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் மூத்தண்ணர். மரம் ஒன்றைத் தேடி இறங்கி ஓடுவதற்காக, சைக்கிளில் இருந்து காலைத் தூக்கினார். சாரம் 'பிறிவிலுக்குள்' சிக்கிக் கொண்டதில் காலை எடுக்க முடியவில்லை. சைக்கிளைப் போட்டுவிட்டு சாரத்தையும் கழற்றி விட்டு ஓடவேண்டும். அரைகுறை அம்மணத்துடன் அப்படி ஓட முடியுமா? அப்படி ஓடி விடலாமோ என்றும் யோசித்திருக்கலாம். ஒரு யோசனைக்கும் மிச்சம் வைக்காமல் ஒரு குண்டு அவர் தலையில் இறங்கியது.....
சின்னண்ணரும் மச்சான்மார் இரண்டு பேரும் ட்றக்ரரில் நெல் ஏற்றிக்கொண்டு வந்திருக்கினம். வாற வழியிலை பத்தைகளுக்கை பதுங்கியிருந்த ஆமி, ட்றக்ரரை மறிச்சிருக்கிறாங்கள். சின்னண்ணர் ட்றக்ரரை நிற்பாட்டியிருக்கிறார். மச்சான்மார் குதிச்சு ஓடியிருக்கிறாங்கள். ஆமி சுடத் தொடங்கியிருக்கு. ஒருத்தனுக்கு சூடு பட்டுட்டுது. மற்றவன் தப்பியிருக்கிறான். சின்னண்ணர் சீற்றிலேயே சரிஞ்சிருக்கிறார். சின்னண்ணையையும், சூடு வாங்கின மச்சானையும் ட்றக்ரரிலையே போட்டு பத்த வைச்சிருக்கிறாங்கள்.
அந்த மச்சானைத்தான் தங்கச்சிக்கும் பேசி வைச்சது. எல்லாம் அப்பிடியே போச்சு. இதெல்லாத்தையும் ஆரிட்டைச் சொல்லி அழ? உடனை இயக்கத்துக்கு ஒடு. எல்லா சிங்கள ஆமிகளையும் சுட்டுத்தள்ளு எண்டுதான் மனசு சொல்லிச்சுது. செய்திருக்கலாம். பேந்து தங்கச்சிமாருக்கு ஆர் இருக்கினம்? தங்கச்சிமாரைப் பார்க்க வேணும் எண்டு சொல்லுறன். ஆனால் நானும் சின்னண்ணன் மாதிரிப் போவன் எண்டுதான் மனசு சொல்லுது....'
இவற்றைச் சொல்கிற குணத்துக்கு கண் கலங்கவில்லை. நெஞ்சு கலங்கிக் கிடந்தது.
'சரி என்ரை கதைகளை விடு. நீ இப்ப என்ன செய்யிறாய்? ஏ.எல்லிலை நல்ல றிசல்ட் எல்லே எடுத்தனி. இப்ப யூனிவேர்சிற்றியாக்கும்....ஆ?'
'இல்லை, யூனிவேர்சிற்றிக்கு ஒரு வருசம் போயிட்டு இப்ப நிண்டிட்டன்.'
'ஏன்ராப்பா?'
'நீயும் செய்ய வேண்டிய வேலையை உனக்காக, எனக்காக எல்லாருக்குமாக நானும் இப்ப செய்யிறன்' என்று சொன்னால் அதைக் குணத்தாலை புரிந்து கொள்ள முடியுமா?
'குணம் வரட்டா? எனக்கு அவசர வேலையிருக்கு. பிறகு சந்திக்கிறன். தங்கச்சியின்ரை கலியாண வீட்டுக்கு அறிவி. வருவன். வாறன்ரா'
'எங்கை அறிவிக்கிறது?'
குணத்தின் முகத்தைப் பார்த்துச் சின்னச் சிரிப்பு வைத்தேன்...
பத்தரைக்கு வருகிறோம் என்ற வள்ளியும், நாச்சியாரும் பதினொன்றே காலுக்கு வந்தனர். சாந்தி தியேட்டர் ஒழுங்கையில் யாரும் கவனியாத பக்கமாக சைக்கிளில் அலைந்து திரிந்தேன். முன்னே விட்ட நீட்டுப் பின்னலில் வள்ளி சட்டெனத் தெரிந்தாள். தூரத்திலிருந்தே வள்ளியின் புன்னகை என்னைத் தொட்டது.
'வந்த பஸ் பிறேக்டவுண்' என்றாள் வள்ளி. அவள் சேலை கட்டியிருந்தாள். 'என்ன சீலையோடை?' என்று கேட்டேன். 'சந்தேகம் இருக்காதெல்லோ?' என்றாள் வள்ளி. அதற்குமே அளவான புன்முறுவலைத் தந்தாள் நாச்சியார்.
'வாங்கோ அங்காலை போய்க் கதைப்பம்' என்று சொல்லித் தேநீர்க் கடைக்குக் கூட்டிப் போனேன்.
'மூண்டு பிளேன்ரீ தாங்கோ' என்று விட்டு 'வேறை ஏதும் சாப்பிடிறிங்களோ?' என்றேன். சடாரென 'வேண்டாம் வேண்டாம்' என்று இருவர் தலையும் ஆடியது.
'ரீச்சர் வீட்டை போனால் மற்றாக்கள் வந்து நிப்பினம்' என்றேன். ரீச்சர் வீட்டில்தான் வள்ளியை முதன்முதல் கண்டேன். லாம்பு வெளிச்சத்தில் இரவு கண்டமுகம். நீட்டுப் பின்னலும் மூக்குத்தியும்தான் உடன் மனதில் பதிந்தது. வறை மாதிரி வறுத்த முட்டைப் பொரியலை பாணுக்குச் செய்து தந்தாள் வள்ளி. 'இது வள்ளியின்ரை ஸ்பெசல்' என்று கூறி ரீச்சர் சிரித்தார்.
'வள்ளி இப்பதான் நீங்களாகவே முன்னுக்குப் போய்க் கதைக்கத் தொடங்கிறியள். இயல்பாக இருங்கோ. உங்களாலை ஏலும்' அதனை வள்ளி தலை சாய்த்து மாறாப் புன்னகையுடன் கேட்டு நின்றாள். இன்னும் என்னென்ன விசயங்கள் கதைக்க வேண்டும்;, எப்படி அவர்களை அமைப்பாக்க வேண்டும் என்ற விசயங்களை விளக்கிச் சொன்னேன்.
'நீங்கள் பெண்கள் அமைப்புக்கான சஞ்சிகை வெளியிடுறது பற்றிக் கேட்டீங்கள். அதுபற்றி அமைப்போடை கதைச்சனான். அவையள் உங்களோடை கதைப்பினம். பெண்கள் அமைப்புக்குப் பொறுப்பா துளசியை நியமிச்சிருக்கு' என்றேன்.
மேலும் விபரங்கள் கூறினேன். பெண்கள் அமைப்புடன் இனி மினக்கெட முடியாது. வேலைகள் பகிரப்படுகின்றன. அரசியல் வகுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மற்றும் பெண்கள் அமைப்பு பெண்களால் வழிநடத்தப்பட்டு தனித்துவத்துடன் இயங்கவேண்டும். மத்திய குழுவில் இரண்டு மூன்று பெண்களாவது இடம்பெறுதல் முக்கியம்....
மூக்குத்தி சற்று ஒளி இழந்து, முகத்தில் புன்னகை நிழல் ஆகிப்போன வள்ளி என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கண்ணுக்குள் ஒரு கணம் என் கண்ணைச் சொருகினேன். வள்ளியின் தலை சட்டெனக் குனிந்தது. நாச்சியார் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறதா எனச் சரி பார்த்தேன். 'சரி வெளிக்கிடுங்கோ நான் வாறன்' என்று புறப்பட்டேன். 'போட்டு வாங்கோ' என்று வள்ளி நிமிர்ந்தாள் இன்னும் பூக்காத ஒரு மொட்டின் சிரிப்பு அவளிடம் இருந்தது....
நகரத்தை விட்டு மிக விரைவாக வெளியேற வேண்டும். திடீரென சிங்கள இராணுவம் நகரத்தைச் சுற்றி வளைக்கலாம். அகப்படுகிற அத்தனை இளந்தாரிகளையும் அள்ளிக் கொண்டு இராணுவ முகாம்களுக்குப் போய் சல்லடை போட்டுத் தேடும். இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று அல்ல. இயக்கம் மாதிரி இருந்தாலே சிங்கள இராணுவத்துக்குப் போதும்.
ஒரு நாள் புதிய சந்தைக் கட்டடத்தின் மூன்றாம் மாடியில் நின்றேன். ஏதோ உள்ளுணர்வு உந்திற்று. திசையெங்கும் கண்களை எறிந்தேன். நகரத்தைச் சுற்றி வளைத்து நின்றது சிங்கள இராணுவம். என்ன செய்யலாம்?
சைக்கிளை விட்ட இடத்தில் விட்டேன். விறுக்விறுக்கென என் நடை தார்வீதியை உராஞ்சியது. தெரியும். தப்ப முடியாது. இதுதான் சுதந்திரமான காற்றைச் சுவாசிக்கும் கடைசி நாள்.
என் நடையின் இடையில் எதிர்ப்பட்டது 'கொழும்பு ரெஸ்ற்றோரன்ற்' என்ற மதுபான விடுதி. ஆபத்துக்குப் பாவமில்லை. உள் நுழைந்தேன். பொக்கற்றில் காசு இருக்கிறது. 'காப்போத்தல் சாராயம் வேணும்' என்றேன். அப்படி அங்கு கேட்பது சரியோ தெரியாது. வந்து நின்ற பணியாள் முழுசினார். 'சாராயம்' என்று திரும்பக் கேட்டேன். அதாவது பலிக்கலாம்.
ஒரு கிளாசில் அரைவாசிக்குச் சாராயம் வந்தது. 'பிளேன் சோடாவா, ரொனிக்வாற்றரா, கோக்கா?' என்று சாராயத்தை வைத்து விட்டுக் கேட்டான் பணியாள். பிளேன்சோடா காய்ச்சலுக்கு. ரொனிக்வாற்றர் என்றால் என்னவென்று தெரியாது. 'கோக்' என்றேன். அதுவென்றால் குடிக்கலாம்.
கோக் போத்தல் வந்தது. வைத்துவிட்டு 'வைற்சுக்கு?' என்று கேட்டு நின்றான். தாமதம் இல்லாமல் 'இறைச்சிக் கறி' என்றேன். அப்படியும் அங்கு சொல்லக் கூடாதாக்கும். அதற்கும் முழுசிப் பார்த்தான்.
வெளியில் இராணுவத் தடதடப்புக் கேட்டது. பார்த்தேன். பத்து யார் இடைவெளிக்கு ஒரு இராணுவம். பார்வையை அங்கு எறிதல் தகாது.
சாராயத்தில் கோக்கை விட்டு குடிப்பதுபோல் வாயை வைத்தேன். அந்த மணத்தில் 'ப்ளக்' என்று வயிற்றிலிருந்து கச்சலுடன் தொண்டைக்கு வந்தது. மிண்டி விழுங்கி விட்டு கோக்கைக் குடித்தேன். இறைச்சிக்கறி வந்தது. அதை வாய்க்குள் அனுப்புவதில் எந்தத் தாமதமும் இல்லை.
இரண்டு இராணுவம் உள்ளே வந்து குசினி வரை போனாங்கள். அவன்களைப் பயந்தபடி பார்த்து குடியிலும் இறைச்சி சப்புவதிலும் கவனமானேன். அம் மதுவிடுதி சட்டென அமைதி கண்டது. மேசையில் மொய்த்திருந்த இலையான்கள் தம் பறப்பை மறந்து முணுமுணுத்தபடி ஊர்ந்தன.
போன இராணுவம் திரும்பி வந்து ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்தது. நான் அப்போது சாராயத்தின் ஒரு மிடறை வாய்க்குள் கவிழ்த்தேன். எனக்கு நேரம் போய்க் கொண்டிருந்தது. இதற்குள் நுழைந்து ஒரு மணிந்தியாலம் ஆகி விட்டதா?
சாராயக் கிளாசுடன் மலசலகூடத்துக்குச் சென்றேன். தலையில் கொஞ்சம் ஊற்றி தலைமயிர் முழுக்கப் படும்படி நனைத்து சேர்ட்டிலும் தெளித்தேன் சாராயத்தை. வந்து இருந்து காயவிட்டு பத்து நிமிடத்தில் எழுந்தேன்.
கதிரையிலிருந்து எழுந்த போதே மெல்லிய தள்ளாட்ட நடை வந்தது, முப்பத்தியேழு ரூபா என்றது பில். அமைப்பு தந்த, என் முகம் பொருத்திய முருகேசன் என்றவரின் அடையாள அட்டையை இராணுவத்திடம் காட்டினேன். சாராயம் குடித்துவிட்டு வருகிற ஒருவரின் அடையாளம் இராணுவத்தானிற்கு ஏன் தேவைப்படுகிறது? பார்க்காமல் தந்துவிட்டு 'நகிண்ட' என்றான். வந்த மினி பஸ்ஸில் தாவி ஏறினேன். எந்த ஊருக்கு அது போகிறதோ?
எனக்கு ஒன்று திடமாகத் தெரிந்தது. சுதந்திரமான காற்றைச் சுவாசித்தபடி வாழ இன்னும் சில நாட்கள் எனக்கு இருக்கின்றன...
44. ஊர் சுற்றி வளைப்பு
1984 கூதிர் காலம்
காலையில் நகரம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. இரவிலிருந்து விடிய வரை ஊரடங்குச் சட்டமாக இருந்த நேரத்தில் நகரத்தின் மையத்தில் ஒரு சாகசம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குண்டுகள் ஒன்றும் வெடிக்காமல், வெடிச்சத்தம் ஏதும் கேளாமல் அது நிகழ்ந்தது.
பேரூந்து நிலையத்தின் முன்னால் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு வங்கி. அதனைச் செய்தவர்கள் கைதேர்ந்த கொள்ளைக்காரர்களாக இருக்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட விதம் எந்த ஆங்கிலப் படத்திலும் பார்க்கக் கிடைக்காத ஒன்று. ஒருவரும் வெருட்டுப் படவில்லை. ஒரு சூடும் விழவில்லை. வங்கியின் இரவுநேரக் காவலாளிகள் இருவரையும் இருத்தி வைத்து கொள்ளையர்களில் ஒருவன் ஆறு மணித்தியாலங்களாக அரசியல் வகுப்பு எடுத்திருக்கிறான். 'தங்கள் நோக்கம் என்ன? ஏன் கொள்ளையடிக்கிறோம்? புரட்சி எப்படி மலரும்? மக்களின் பங்களிப்பு என்ன மாதிரி? இராணுவ வேலைத்திட்டம் எவ்வகையானது?....'
எத்தனை பேர் உட்புகுந்தார்களோ தெரியாது. ஆறு, ஏழு மணித்தியாலங்களாகக் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருந்தது. வெல்டிங் மிசினால் இரும்புக் கதவுகளை உருக்கித் திறந்தும், சப்தம் எழாதபடி ஒவ்வொன்றாக உடைத்துத் திறந்தும், மேலும் என்னால் ஊகிக்க முடியாத பல காரியங்கள் செய்வதற்கும் அத்தனை மணித்தியாலங்களும் தேவைப்பட்டன.
சென்றவர்கள் களைத்ததனாலோ அல்லது தம் கொள்ளளவுக்கு இவ்வளவும் போதும் என்றோ அல்லது நேரம் ஆகிவிட்டபடியாலோ கொள்ளையை முடித்துக் கொண்டு போய்விட்டனர். பண நோட்டுக்கள், தங்கக் கட்டிகள், தங்க நகைகள் என்று கொள்ளையின் பெறுமதி இருபது கோடி ரூபாவுக்கு மேல் என்றனர். இலங்கை, தன் வரலாற்றில் இத்தனை பெரும் கொள்ளையை ஒரு போதும் சந்தித்ததில்லை.
குடுவையில் இருந்த தேனைக் குடித்தவர்கள் போக, புறங்கையை வேறு இரண்டு இயக்கங்கள் நக்கின. அவையும் சில கோடிகள் என்று சிலர் பேசிக் கொண்டனர். இந்தக் கொள்ளையர்கள் மகா கெட்டிக்காரர் என்று ஊரும் உலகும் சொல்லிற்று.
'தம்பி விசயம் கேள்விப்பட்டீங்கள் தானே? எனக்கென்னவோ சம்சயமா இருக்கு. கொள்ளையடிச்சதை மீட்கவென்று ரவுணைச் சுற்றி இருக்கிற எல்லா ஊருக்கையும் ஆமி புகுவாங்கள்....' என்றா சரோ அக்கா. அவாவின் கண்கள் என்மீது இரக்கமாக ஊர்ந்தன.
அம்மாவிடம் போவோம் என்று அந்தக்கணம் நினைத்தேன். அப்பாவைப் பார்க்க வேண்டும். அம்மாவிடமிருந்து ஒரு வாய் சோறு உண்ண வேண்டும். அம்மாவிடம் சென்றும் ஐந்தாறு மாதங்கள் ஆகி விட்டன.
பத்து மைல் சைக்கிள் உழக்கினேன். தன் வெக்கையைக் குறைத்து 'இப்பொழுது திருப்தியா?' என்று சூரியன் சிரித்தான். என்றாலும் கன்னத்தில் வேர்வை இறங்கியது. 'கறுத்துப் போனாயப்பு' என்றா அம்மா. காற்றுப் படர்ந்து வேர்வை தீர சேர்ட்டைக் கழட்டினேன். அம்மா 'மெலிஞ்சும் போனாயப்பு' என்றா. எல்லாத் தாய்மாருக்கும் அவர்கள் மகன்கள் தாம் சமைத்த தீன் உண்ணாது மெலிந்து கொண்டே போகிறார்கள்....
அப்பா என்னைக் கண்டவுடன் 'வா ராசா' என்று விட்டு கூடையைக் கொளுவிக் கொண்டு சைக்கிளில் இறங்கினார். ரொமி என் வயிற்றில் முழங்கால் வைத்து மூஞ்சையை நக்கியது....
'நான் கிறு கிறுவெண்டு சமைக்கிறன்.... நீ குசினிக்கை கதிரையைப் போட்டு என்னோடை இருந்து கதை' என்றா அம்மா. அம்மிக் கல்லுக்குப் பக்கத்திலை அம்மா கதிரையை போட்டா.
'உன்னைக் காணாமல் எவ்வளவு ஏங்கிறன் ராசா.... என்ரை எலும்பெல்லாம் உருகுது. றோட்டிலை ஒருகார் மெல்லமாய் போனாலே உன்னைத்தான் கொண்டு வாறாங்களோ எண்டு அந்தரிச்சுப் போறன். உடனை வயித்தாலை போகுது.... ஒவ்வொரு நிமிசமும் அம்மாளை நேர்ந்தபடி......' என்ரை மோனைக் காப்பாத்து...,' அம்மாளுக்கும் எத்தினை மோன்களைக் காப்பாற்ற முடியும்? முரளியின்ரை அம்மா மாம்பழக்கா... எவ்வளவு உருக் குலைஞ்சு போனா... முரளியைப் பிடிச்சு ஒரு வருசமாச்சு..... அவனைப் பலாலி எண்டு, ஆனையிறவு எண்டு, வெலிக்கட எண்டு, பூசா எண்டு ஒரே உலைச்சல்... முரளியை இன்னும் விடேல்லை. மாம்பழக்கா என்ன மாதிரி அவனைப் பொத்திப்பொத்தி வளத்தவா... இவ்வளவுத்துக்கும் அவன் ஒரு இயக்கத்திலையும் இல்லை. நீ இன்னும் பிடிபடாமல் இருக்கிறாய் எண்டால் நான் கும்பிடுற அம்மாள்தான் காரணம்.... நீ ஒருக்கால் அம்மாளைக் கும்பிட்டுப் போ....'
அம்மாவின் கைகளும் வாயும் பரபரவென இயங்கின. அப்பா வாற அரவம் கேட்டது. 'இந்தாரும்...' கூடையை அம்மா முன் வைத்தார். அதனுள் இருந்து எடுத்து அம்மா மீன் வகைகளைச் சட்டிக்குள் போட்டா. 'ராசாவுக்கு ஒண்டும் குடுக்கேல்லையோ?' என்று கேட்டுவிட்டு தேசிக்காயை கரைத்தார்.
'வீரசிங்கத்தைக் கண்டன்' என்றார் அப்பா
'என்னவாம்?' அம்மா.
'வசந்தனை இப்போதைக்கு விடமாட்டாங்கள் போலை'
அம்மா எனக்குச் சொல்லத் தொடங்கினா. 'உனக்கு வசந்தனை ஆமிக்காரர் பிடிச்சது தெரியுமே?'
'ஒம்' என்று தலை ஆட்டினேன். 'அவனிட்டை என்ன கேட்டவங்கள் எண்டு தெரியுமே?' அம்மா கேட்டா.
'தெரியாது' என்றேன்.
'நீ எங்கை? எங்கெங்கை நீ திரியிறனி? இயக்கத்திலை நீ என்ன வேலை செய்யிறாய்? எல்லாம் வசந்தனுக்குத் தெரியும் எண்டு கேட்டுக் கேட்டுச் சித்திரவதை செய்யிறாங்கள்... பூமாதேவி கதறிக் கதறி அழுகிறாள். என்னைப் போலை அவளுக்கு ஒரு மகன் தானே?..'
'அவன் வசந்தனைப் பார்.... இவ்வளவு சித்திரவதைப்பட்டும் தேப்பன் வீரசிங்கத்திட்டை சொல்லிவிட்டிருக்கிறான்... உன்னை வீட்டிலை நிக்கவேண்டாம். அளவெட்டிப் பக்கமே வர வேண்டாம்.... எண்டு...' அப்பா சொன்னார்.
அம்மா கண்ணீர் வரச்சொன்னா 'ராசா, உன்ரை இயக்கத்திட்டைச் சொல்லி இந்தியாவுக்குப் போய் நில்லன் அப்பன்... நீயும் பாதுகாப்பாய் இருப்பாய். நாங்களும் நிம்மதியா இருப்பம்....'
நான் கசந்து போய்ச் சிரித்தேன்... 'என்னெண்டம்மா? இப்பிடி எல்லாத் தாய்மாரும் சொன்னால் நாங்கள் இந்தியாவிலையா போய் இயக்கம் நடத்திறது?'
'அம்மாளே' என்று அம்மா கையெடுத்து மேலை பார்த்துக் கும்பிட்டா. அப்பா குசினியை விட்டு வெளியேறிப் போனார்.
கிணற்றடியில் 'சோம்சோம்' என்று அள்ளி அள்ளித் தோய்ந்தேன். தோய்ந்த தண்ணீர் அவமாகப் போகாமல் எலுமிச்சம் பாத்திக்கு வாய்க்கால் வெட்டி விட்டேன். புசுபுசு வென்று நிலம் தண்ணீரை உறிஞ்சியது.
விளைமீன் குழம்பு, றால் பொரியல், கத்தரிக்காய் வெள்ளைக்கறி, கீளிமீன் சொதி இவற்றுடன் சோறு உண்ணக் கிடைத்தது. அம்மா பார்த்துப் பார்த்துப் போட்டா. 'நல்லாச் சாப்பிடு ராசா.... இப்பிடித் தீன் இனி எப்பதான் தின்னப் போறியோ?'
அப்பவே தின்ன முடியாமற் போயிற்று. அந்த அமிர்தத்தை ஐந்து வாய் உண்டேனா? நாகம்மாக்காவின் குசுகுசுப்புக் குரல் கேட்டது. 'ராசா-ராசா-தம்பி-மோனை-அப்பன் பங்கார் ஆமிக்காரங்கள் வாறாங்கள் அப்பு-வைரவர் கோயிலடியிலை றக்கை விட்டிட்டு நடந்து வாறாங்கள் - ஒடணை அப்பு' நடுங்குது குரல்.
கையை உதறினேன். கிழக்கு வாசல் திறந்து பத்தைக்குள் பாய்ந்தேன். சாரம் மட்டும் கட்டின வெறும் மேலில் பீநாறிப்பத்தை கீறியது. காலை தாறுமாறாகக் கீறி இரத்தம் கசியப் பண்ணியது நாயுருவி. 'ஆமிக்காரங்கள் ரவுண்ட்டப் பண்ணிறத்துக்கிடையிலை அந்த இடத்தை விட்டுப் பாய்ந்திட வேண்டும்.'
காரை முட்களையும், தகரைப் பற்றைகளையும் பின்னுக்கு வேகமாக ஓடவிட்டு நான் பாய்ந்தேன். என்னைக் கவ்விப்பிடித்த பற்றைகளுக்குள்ளால் என் வேகம் மிக அதிகம். பொன்னிப் புலவெளி தாண்டி நான் போய்ச் சேர்ந்தது பத்தை நாம்பிரான் கோயில் பக்கம்.
சடசடத்துக் கொண்டு வந்தது ஹெலி. எல்லாம் மிக வேகமாக நடந்தேறுகின்றன. இவ்வளவு விரைவில் எப்படி இராணுவம் வந்திருக்க முடியும்? இராணுவத்துக்கு தகவல் போனது எவ்வாறு?
சுற்றிச்சுற்றி வருகிற ஹெலியின் கண்களில் இருந்து தப்ப முடியாது. ஹெலிக்கு முதுகு காட்டி முதலை போல ஊர்ந்து மரவள்ளித்தோட்டத்துக்குள் புகுந்தேன். மேலே இலைகள் கொழித்து மரவள்ளித்தோட்டம் தன் பச்சைக் குடையால் என்னை மறைத்தது. சடசடவென்று மரவள்ளித்தோட்டத்தைப் பார்த்துக் குண்டுகள் தீர்ந்தன.
ஹெலியின் பறப்பு அப்பால் போன பிறகு நான் பற்றைக்குள் நுழைந்து தூரத்துப் பாதைகளைப் பார்த்தபடி இருந்தேன். நிறைய மணி நேரம், தன் காலால் ஊர்ந்து ஊர்ந்து சூரியனைத் தொட்டும் காற்றைத் தடவியும் கழித்தன. தோட்ட ஒழுங்கையில் சைக்கிள் ஒன்று வருவது தெரிந்தது. தோட்டக்காரர் வருகிறார். என்றாலும் பற்றைக்குள் இன்னும் ஒடுங்கிப் போய் இருந்தேன்.
சைக்கிள் கிட்டக்கிட்ட வருகிறது. இது நான் கண்ட ஒருவருடைய ஓட்டம். சைக்கிளில் குத்துண்ன நிமிர்ந்த நெஞ்சு வருகிறது. ஓம் அது அப்பா. காற்றில் முணுமுணுப்புக்குரல் கேட்கிறது 'ராசா...ராசா...'
நான் பற்றைக்குள்ளால் எழும்பி ஒழுங்கைக்கு வந்து 'இஞ்சை இருக்கிறன் அப்பா' என்று கையை உயர்த்தினேன். அப்பா கிட்ட வந்து சைக்கிளை கூடையுடன் சரியவிட்டு 'உனக்கு ஒண்டும் நடக்கேல்லையே ராசா' என்று என் முதுகை, நெஞ்சைத் தடவினார்.
குனிந்து கூடையைத் தூக்கித் தந்தார். அதற்குள் சேர்ட்டும் லோங்சும் சோற்றுப் பார்சலும் இருந்தன. 'அங்காலை வராதை ராசா. பனைகளுக்குப் பின்னாலை ஆமிக்காரங்கள் ஒளிச்சு நிக்கிறாங்கள். உடுப்பை மாற்றிக் கொண்டு சைக்கிளைக் கொண்டு போ. நான் நடந்து போவன். இப்ப சாப்பிடுறதெண்டால் சாப்பிடு. இல்லை, வேண்டாம். இரண்டு மூண்டு மைல் தள்ளிப்போய் எங்கையெண்டாலும் இருந்து சாப்பிடு. கவனம் ராசா. அம்மாளை நேர்ந்து கொண்டு போ. வெளிநாட்டுக்குப் போ எண்டாலும் போறாய் இல்லை. அம்மா உன்னாலை உருக்குலைஞ்சு போறா. வீட்டடியிலை ஒரு கார் சிலோ பணிணினாலும் விழுந்தடிச்சு றோட்டுக்கு ஓடுறா. சரி, இப்ப உதைக் கதைக்க நேரமில்லை. நீ வெளிக்கிடு அப்பன். கவனம் ராசா.... அம்மாளை நேர்ந்து கொண்டு போ....'
இருட்டி வருகிற பொழுதுக்குள்ளும் அப்பாவின் கண்ணீர் தெரிகிறது. அதைப் பார்க்க இயலவில்லை. கண்களை மூடினேன். காதை எதைக்கொண்டு பொத்துவது? குரலின் தளதளப்பு காதைக் குடைகிறது. திரும்பிப் பார்த்தேன். கறுத்த உருவமாக அப்பா நின்றார்....
நெஞ்சு கனமேறி இறுகிப் போயிற்று. இப்போதைக்கு இது இளகாது. என்ன செய்து நித்திரை கொள்ளமுடியும்? இரவின் பேச்சுத் துணைக்கு ஒருவன் வேண்டும்? நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அவன். பிரான்சிஸின் அறைக்குப் போனேன்.
அறையில் அவன் நின்றான். 'எனக்கு இண்டைக்கு ஏலாதண்ணை. நல்லா நித்திரை வருது' என்றான். 'ஏன் இராத்திரி எங்கையும் கொள்ளையடிக்கப் போனியோ?' என்று கேட்டேன்.
'இராத்திரி நடந்தது கேள்விப்பட்டீங்கள் தானே? ஆர் செய்தது எண்டு நினைக்கிறீங்கள் அண்ணை?' என்று மேற்கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தான் பிரான்சிஸ்.
'காவலாளிமாருக்குக் கதை குடுத்துக் கொண்டு நிண்டது ஆரெண்டு நினைக்கிறீங்கள்?'
தொடரும்...