அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 13
40. தோழர் வள்ளி
1984 இளவேனிற் காலம்
'நெடுந்தீவுக்கு வள்ளியையும் நாச்சியாரையும் கூட்டிச் செல்லவும். இறங்குதுறையில் தோழர் தியாகு நிற்பார். இதில் செலவுக்குத் தேவையான பணம் இருக்கிறது.' என்வலப்பிற்குள் ஒரு துண்டும் இரண்டு இருபது ரூபாத்தாள்களும் இருந்தன.
வள்ளிக்குச் சொல்லிவிட்டதில் நாச்சியாரும் வள்ளியும் பேருந்து நிலையத்தில் காத்து நின்றனர். 'என்ன வேளைக்கே வந்திட்டீங்கள் போலை' என்றேன்.
'என்ன உங்களை மாதிரி நாங்கள் பிந்தி வாற ஆக்களோ?' வெடுக்கெனக் கேட்டாள் வள்ளி.
'நீங்கள் வெள்ளன வந்ததற்கு நான் பொறுப்பில்லை. எப்ப எண்டாலும் நான் பிந்தி வந்திருக்கிறனோ? நான் எல்லாத்திலையும் வலு ஒழுங்கு' என்று குறும்பாகச் சிரித்தேன்.
'ஓமோம் உங்கன்ரை ஒழுங்கு தெரியுதுதானே?' என்று சேர்ட்டைப் பார்த்தாள். சேர்ட் லோங்சிற்குள் விடப்பட்டிருக்கவில்லை. நாச்சியார் மூக்கு விரித்துச் சிரித்தபடி இருந்தாள்.
வள்ளியிடம் சில தீர்மானங்கள் இருந்தன. சேர்ட் லோங்சிற்குள் விடப்பட்டிருக்க வேண்டும். வேட்டி என்றால் மாத்திரமே வெளியில் சேர்ட். முழுக்கை சேர்ட், என்றால் மடித்து முழங்கைக்கு மேல் விடப்பட வேண்டும். அல்லது முழுதாக விட்டு பொத்தான் பூட்ட வேண்டும். முழங்கைக்குக் கீழ் மடித்து விடுவதோ, அல்லது மடித்து விடாமல் உருட்டி விடுவதோ 'பீடிக் கள்ளர்கள்' செய்கிற வேலை.
கன்ன உச்சி பிரிபட்டிருக்க வேண்டும். ஆண்களின் தலைமயிரில் நடு உச்சி பிரித்தால் பெட்டையன். மேவி இழுத்தால் காவாலி. பெண்களுக்கு நடு உச்சி வேண்டும். கன்ன உச்சி 'பொம்பிளைக் காவாலி'. கத்தையான மீசைதான் ஆண்மையின் சின்னம். மீசை இல்லாதவன் 'பொம்பிளை.' தாடி, பரதேசிகளின் கோலம். சந்தனப் பொட்டு ஆண்களைப் பெண்களாய்க் காட்டும். விபூதிக்குறி போதும். அதுவும் ஒற்றைக் கீறு....
எல்லாம் புரிகிறது. 'அதென்ன 'பீடிக்கள்ளன்'?' என்றேன்.
'எனக்குத் தெரியாது. காவாலி எண்டதிலும் பார்க்க மோசமான ஒருத்தன். அதுக்கு 'பீடிக்கள்ளன்' எண்டது நான் வைச்ச பெயர்.'
அதன் பிறகு சில 'பீடிக்கள்ளர்களை' தெருவில் நானும் கண்டேன். இப்பொழுது நானும் 'பீடிக்கள்ளன்' ஆகிறேனோ?
'சீச்சி....உங்களை நான் அப்பிடிச் சொல்லுவனா?' என்று என் கண் பார்த்தாள். கறுத்தப் பெட்டை அவள். நெளிந்து நீண்ட தன் கூந்தலினால் என்னை அவள் கட்டிப்போட முயல்கிறாள் போல. மூக்குத்தி மின்னலினால் நான் மோகமுற மூர்க்கமாத் தாக்குகிறாள் போல.
எப்பொழுது அவளைச் சந்தித்தாலும் புறப்படுகையில் எனக்கு ஒரு கேள்வி வைத்திருக்கிறாள். 'இனி எப்ப வருவீங்கள்?' என் பாலைவனப் பயணத்தில் அது ஒரு துளி குளிர் நீர்.
குறிகட்டுவான் ஏறுதுறைக்குப் போகும் வரை ஒன்றும் பறைய முடியவில்லை. மினிபஸ்ஸில் அவ்வளவு நெருக்குவாரம். மினிபஸ்ஸிலிருந்து இறங்கிய போது பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. 'ரண்டு மணிக்குத்தான் அடுத்த படகு' என்றார் சுருட்டைப் பற்ற வைத்தவர்.
'பசிக்குது' என்று உடனேயே சொன்னாள் வள்ளி. சாப்பாட்டுக்கு அமைப்பு தந்த காசில் கை வைக்கலாமா? பாணும், பருப்பும், பிளேன்ரீயும் என்றால் பாதகமில்லை. சோறும் மீன்குழம்பும் என்றால்?
வள்ளிக்கு மீன் சாப்பாடு ஒன்றுதான் அமிர்தம். அது தின்று உடன் சொக்கிப்போய் நித்திரை ஆகிவிட வேண்டும். எந்த வெக்கையிலும் 'சொக்கிப்போற' நித்திரைக்கு அவள் போர்வை வைத்திருக்கிறாள். போர்வையின் ஒரு மூலையில் முடிச்சு இருக்கிறது. கால்மாட்டில் எப்போதும் அம்முடிச்சு இருக்கும்படி பார்த்துக் கொண்டாள். போர்வையில் கால்பட்ட பக்கம் முகத்தைத் தொடக் கூடாது. கால் எத்தனை நரகல்களை அரியண்டங்களை உழக்கியிருக்கும்? காலைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவுகிறாள் தான். என்றாலும் நீரினால் முற்று முழுதாக அவற்றைப் போக்கி விடமுடியுமா?
மூவரும் மீன் சாப்பாடு உண்டு, பின் கடற்கரையில் கால் அளைந்தோம். எப்பொழுதும் பார், கடல் வசீகரமாயிருக்கிறது. கண் எட்டாத அந்தப் பிரமாண்டம் எத்தனை மகத்துவங்களையும், திரவியங்களையும் தன்னுள் பொத்தி வைத்திருக்கிறது. ஆதி மானுடர் சொன்ன இரகசியங்களையும் செய்த சாகசங்களையும் தான் விழுங்கி எவ்வளவு அமுக்கமாக இருக்கிறது கடல்.
வள்ளியும் நாச்சியாரும் கொக்குப் பறவைகள் போல கடல் அளைந்து விளையாடினர். ஊருக்கு அலைகளை அனுப்பி கடல் சொன்ன செய்திகளை இருவரும் விளங்கவேயில்லை. தூரத்துக் கடலில் படகு சாம்பலாகத் தெரிந்தது.
'குமுதினி' படகில் எதிர் எதிராக வாங்குப் பலகைகள் போடப்பட்டிருந்தன. வள்ளி ஓடிப்போய் கடலை எதிர்க்குமாறு மூலையில் நாச்சியாரையும் அமர்த்திக் கொண்டு இருந்தாள். எதிரே இருந்தேன் நான். படகு அப்படியே திரும்பிப் புறப்படும்போது போகும் திசைக்கு எதிராக கடல் தன்னை விட்டு நீங்குவதைப் பார்த்தாள் வள்ளி. 'ம்...ம்' என்று சிணுங்கிவிட்டு என்னைத் தம்பக்கம் வரும்படி அழைத்தாள். தந்தையைப் போல் கனிவு கொண்ட சிரிப்புடன் இடம் மாறினேன்.
'எதிர் எதிராக அமர்ந்து கொள்கிறோம்.
யன்னல்கள் எல்லாம் சிறகுகளாக....
இன்னும் கடலும் அழகு
மலையும் அழகு
நதியும் கூட அழகுதான்...'
சேரனின் கவிதை வரி கடலில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்து வள்ளியின் மூக்குத்தி மின்னிற்று.
சுற்றுலா போகிற பரவசம் வள்ளியின் கன்னத்தில் வழிந்து இறங்கி ஓடிற்று. நீர்க்காகங்கள் மிதந்ததையும் கடல் நீர் தளும்பித் தளும்பி அலைந்ததையும், படகு கடலைக் கிழித்ததில் கடைந்த வெண்ணுரையையும் கண்கள் அகல விரியப் பார்த்துக் கொண்டு வந்தாள் வள்ளி. கடலில் எதிரொளித்த சூரிய வெளிச்சம் அவள் முகத்தில் ஒளிர்ந்தது.
'உல்லாசப் பயணம் போறீங்கள் போல' என்று நக்கலாகக் கேட்டேன் அவளிடம். 'ஓமோம்' என்று தலையாட்டி கண்மூடிச் சுகித்தாள் அவள். மேலும் உரையை எவ்வாறு தொடர்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முதுகின் பின்னால் குறிகட்டுவான் ஏறுதுறை கழிந்து கொண்டிருந்தது. தின்ற மீன் சாப்பாடும் கடற் காற்றும் அயர்ச்சியைத் தந்தது. கண் அயரலாமோ வேண்டாமோ எனக்குமைந்தேன்.
'நித்திரையோ?' வள்ளி கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
'கொஞ்சம் அயர்ந்து போனன்'
'எனக்குப் பயமாயிருக்கு'
'என்னத்துக்குப் பயம்?'
'நானும் கலந்து கொள்கிற முதல் அரசியல் வகுப்பல்லோ இது?'
'அதுக்கு என்ன பயம்?'
'என்னவோ பயமாயிருக்கு. நீங்கள் இருக்கிறீங்கள் எண்டு தான் கொஞ்சம் கலக்கம் குறையுது.'
'ரண்டு மூண்டு வகுப்புகளுக்கு என்னோடை வருவியள். பிறகு நீங்கள் தானே வகுப்புகளை எடுக்க வேண்டிவரும்'
'அது பெண்கள் அமைப்புக்குத்தானே? அது பயமில்லை.'
'அப்பிடி மாத்திரம் குறுக்க ஏலாது. ஆம்பிளைகளுக்கும் நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டி வரும்'
'அது என்னெண்டு எடுக்கிறது? நான் மாட்டன்'
'ஆண்களும் பெண்களும் 'சரிநிகர் சமம்' எண்டு சொல்லுறம். பிறகு வகுப்பு எடுக்கிறதுக்கு என்ன பஞ்சி?'
'உது சொல்லலாம். செயலிலை எல்லோ வேணும்?'
'இண்டைக்கு நீங்கள் வகுப்பு எடுங்கோ. நான் பக்கத்திலை இருந்து பாக்கிறன், சரியா?'
'அய்யோ வேண்டாம். அது நான் பிறகு எடுப்பன். இண்டைக்கு நீங்கள் எடுங்கோ'
'ஏன் பயப்பிடுறீங்கள்? 'துணிந்தால் துயரமில்லை துக்கமில்லை வெட்கமில்லை பணிந்தால்தான் அடக்கி வைப்பார் உலகிலே, மகளே, பாய்ந்தாலோ அடங்கி நிற்பார் காலிலே' எண்டொரு சினிமாப் பாட்டு இருக்கு. நீங்கள் துணிய வேணும் வள்ளி. ஆம்பிளைகளைச் சார்ந்தோ, ஆம்பிளைகளிலை தங்கியோ நிற்கக்கூடாது. இதை நான் சொல்லுறது கூட ஒரு விதத்திலை மேலாதிக்கம் தான். நீங்களாத்தான் அந்த உணர்வுகளுக்கு வரவேணும். பெண்களே முயற்சி செய்து, பெண்களே தேடி, பெண்களே போராடி தங்களுக்குரிய இடத்தை அவர்கள் அடைய வேணும். ஆணாதிக்கம் ஒருபோதும் அதை வழங்காது.'
'கேக்க சுகமாகவும், சந்தோசமாகவும் இருக்கு. ஆனால் உடனை இது நடக்கச் சாத்தியம் இருக்கா?' நாச்சியார் இப்பொழுது தான் வாயைத் திறந்தாள். மேலும் அவளது முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
'அது பெண்களின் திரள்வையும் ஆளுமையையும் பொறுத்த விசயம். உறக்கத்திலிருந்து எழுந்த பெண்கள், உறக்கத்திலிருக்கும் பெண்களை விரைவாகத் தட்டி எழுப்பும் முயற்சியில் இறங்க வேண்டும். எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தோடை பெண்கள் விடுதலை, சாதி விடுதலை போன்றவையும் இணைந்தே செயல்படவேண்டும்.'
'நீங்கள் சொல்லுறது எல்லாம் சரியா இருக்கு. அதுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டாள் நாச்சியார்.
'அதை நான் சொல்லக்கூடாது. நீங்களாத் தேட வேண்டும். முக்கியமாக பலவற்றிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும்' என்றேன்.
நாச்சியார் 'எதிலிருந்து விடுபட வேணும்?.... என்று கேட்டாள்.
'வள்ளி தன்ரை மூக்குத்தியிலை இருந்து....' என்று சொல்லிச் சிரித்தேன்..... 'சும்மா பகிடி விடாதையுங்கோ' என்று ஆத்திரப் பட்டாள் நாச்சியார். வள்ளிக்கு வெட்கம் வந்ததோ என்னவோ என் முகம் பார்க்கவில்லை.
'இல்லை, அதிலையும் ஒரு விசயமிருக்கு' என்றேன்
'அம்பை எண்ட ஒரு பெண் எழுத்தாளர், பெண் விடுதலையும் பேசுறவர். அவர் சொல்றது அப்பிடியே எனக்கு மனப்பாடமாயிருக்கு. சொல்றன் கேளுங்கோ' என்று சொல்லத் தொடங்கினேன்.
திரண்டிருந்த கடல்வெளி என்னை மேலும் பொங்கச் செய்தது. தனித்துப் புகாராகத் தெரிந்த ஒரு தீவில் கண்வைத்துப் பேசத் தொடங்கினேன். நாடக பாணியில் அதனைச் சொல்லலாயினேன்.
'விடுபடுங்கள் விடுபடுங்கள் விடுபடுங்கள். சமையலறை, நகைகள், குழந்தைகள் அதிலெல்லாம் ஒரு பலமுமில்லை. அதிகாரம் அதிலிருந்து வரவில்லை. எல்லாவற்றையும் துறவுங்கள். விடுபடுங்கள். அறுங்கள். எல்லாவற்றையும் துறந்து நீங்கள்தான் அறுபட்டு, நீங்கள்தான் விடுபட்டு நீங்கள்தான் பலம் பெறுகிறீர்கள். நித்தமும் சமையல் என்று இல்லாவிட்டால், நிறையக் குழந்தைகளை உதைக்க விட்ட வயிறும் இல்லாவிட்டால் அரிசி, மா, சர்க்கரை, உப்பு, எண்ணெய், புளி, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் என்று யோசித்திருக்காவிட்டால் மண்டை எல்லாம் யோசனைகள் அடைத்திருக்காவிட்டால், மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால் நீங்கள் அப்பிள் பழம் விழுவதைப் பார்த்திருப்பீர்கள். நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க முன்னம் கண்டு பிடித்திருப்பீர்கள். நீராவி பாத்திரத்தை இயக்குவதையும் பார்த்திருப்பீர்கள். ரைட்ஸ் சகோதரர்கள் வானில் பறக்கமுன்னம் பறந்திருப்பீர்கள்....'
'அரியாசனத்தில் அரசனோடு சரியாசனம் இருந்து இராமாயணம் எழுதியிருப்பீர்கள். இராமனைத் தீக்குளிக்க வைத்திருப்பீர்கள். கோவலன் கண்ணகியைக் கைவிட்ட கணத்திலிலேயே மரண தண்டனை விதித்திருப்பீர்கள். ஆனால் சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலிலும், காதிலும், கழுத்திலும், தலையிலும் உறுத்திய நகையிலும் பலம் அதிகமாய் இருக்குதென்று நம்பினீர்கள்...'
வள்ளியும் நாச்சியாரும் இப்பொழுது தாங்கள் படகில் இருப்பதனை மறந்துவிட்டனர். எதிரே பரந்து விரிந்த கடலை அவர்கள் காணவில்லை. நீண்ட மௌனத்தில் அடர்த்தியான தர்க்கங்கள் கொட்டிக் கிடந்தன. மேலும் சில தீவுகள் அங்கு பரந்திருக்கக் கண்டேன்.
சற்று நேரத்தில் வள்ளி கேட்டாள். 'எங்கன்ரை பெண்கள் அமைப்புக்கெண்டு சஞ்சிகை தொடங்கினால் என்ன? அதுக்கு நான் பெயரையும் வைச்சிட்டன் 'சக்தி''
பின்னேரம் தொடங்கிய அரசியல் வகுப்பு முடிய இரவாகி விட்டிருந்தது. தோழர் தியாகுவின் வீட்டில் இராச் சாப்பாடு உண்ட பிறகு வள்ளி கேட்டாள் 'இந்த நிலவுக்குக் கடற்கரைக்குப்போக வேணும் போலை இருக்கு. வாறீங்களா?'
'எனக்குச் சோம்பலா இருக்கு. நான் படுக்கப்போறன்.' என்றாள் நாச்சியார்.
நெஞ்சில் ஒரு திருப்தி நிலவியிருக்க என்னில் கண்டேன். எதனால் அது விளைந்தது? படகினில் ஒலிக்கவிட்ட என் உரையா? திறம்பட நடத்திய அரசியல் வகுப்பா? வள்ளியினது அருகாமையின் பெருமிதமா? எனக்கும் கடற்கரைப் பயணம் தேவையாக இருந்தது. 'நான் வாறன்.'
வள்ளியின் நீண்ட கூந்தலை கடற்காற்று ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டிருந்தது. அவள் அதை அள்ளிக் கொண்டையாக முடிந்தாள். ஒரு தேங்காய் போலிருந்தது கொண்டை. அக்கணம் என் நெஞ்சுள் தீ இறங்கிற்று. நெருப்புத் துண்டங்கள் உடலெங்கும் சிதறி நான் அவிந்தேன். கடற்காற்றினாலோ நிலாக் குளிர்மையாலோ என்னை ஆற்ற முடியவில்லை.
சின்ன இரகசியம் பேசிக்கொண்டிருந்தன அலைகள். நமக்கென வந்திருந்த அந்த நிலவு பார்த்திருக்க, கடற்கரை மணலில் மௌனம் பூண்டிருந்தோம்.
'என்ன பேசாமல் இருக்கிறீங்கள்' என்றாள் வள்ளி.
'நிறையக் கதைத்துக் களைத்துப் போனேன்' என்றேன்.
'மௌனம்தான் நிலவுக்கும் கடலுக்கும் இந்த அழகிக்கும் நான் தரத்தக்க நிவேதனம்' என்றும் சொன்னேன்.
வள்ளி திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் அப்படித் திரும்பிப் பார்த்திருக்கக் கூடாது. மெல்ல மெல்ல அவளிடம் தோற்கத் தொடங்கி விட்டேன்.