Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காலத்தின் கவிதை இயல்

<p>காலத்தின் கவிதை இயல்</p>
பா.செயப்பிரகாசம்

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 3  

கவிதை இயலின் எழுச்சிக்காலம் அது. 70கள், 80கள் வசந்தத்தின் இடிமுழுக்கத்தை எடுத்து வந்தவை. இந்திய மொழிகளில் ஏறக்குறைய பெரும்பான்மை மொழிகளின் கலை இலக்கிய வெளிப்பாடு புரட்சியின் உந்துதல் தரும் உரைநடை, கவிதை, உருவகம் என எழுத்தாகவும், நாடகம், கூத்து, பாடல் என நிகழ்த்து கலைகளாயும் எழுச்சிகொண்ட காலம். அக்காலத்தின் கவிதை இலக்கியப் பிரதிநிதியாய் இன்குலாப் எழுந்து வந்தார். 'மனுசங்கடா, நாங்க மனுசங்காடா' 1982-ல் அவர் எழுதிப் பாடிய கவிதைப் பாடல்.

இக் காலகட்டத்தில் கவிதையின் பாடுபொருள், சொல்முறை, வடிவம், போன்றவை வேறொரு எல்லை நோக்கி நகர்ந்தன. தமக்குள் வட்டமிட்டு, கும்மியடித்து செல்வாக்குச் செலுத்திய கலைப்பார்வை கொண்டோரிடமிருந்து மாறுபட்டு - இக்காலக் கவிதையியல் சென்று சேரும் மக்கள் பரப்பினை முதன்மைப்படுத்தி இயங்கிற்று. மொத்தக் கவிதைகளும் இக்கவிதையியலின்   சான்று. இதன் ஒரு துளி இன்குலாப்பின் 'நாடோடிகள்' கவிதை.

                'மூலைக் கோடியில் ஊரின் கடைசியில்

                மணலின் விரிப்பில்

                பந்தங்கள் ஏற்றி ஆடுகின்றாரே

                பந்தயம் போட்டுப் பாடுகின்றாரே

                இவர்கள் தேசியகீதம்

<p>காலத்தின் கவிதை இயல்</p>

                பாடத் தெரியாமல்

                தெம்மாங்கு பாடத் தெரிந்த

                நாடோடிகள்.

                ***

                கூடுகட்டத் தெரியாத

                குயில்களைப் போல்

                வீடுகட்டத் தெரியாத

                கூடாரக் குயில்கள்'

விளிம்புநிலை நோக்கிய சிந்தனை நடந்தது. அழகியல் பகட்டற்று கவிதை வெளிப்பட்டது.

'ஒரு கவிதை அதற்குரிய கலைநியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் படைப்புக்கள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிக் கவிதைப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக எனது கவிதை இருந்து வந்துள்ளது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நேர்ந்தது.'

தன்படைப்புக்கள் பற்றி சுயவிமர்சனம் கொண்டிருந்தார். சுயவிமர்சனப் பார்வை கொள்ள, பிறர் தன்படைப்பு மீது வைக்கும் விமர்சனத்தைப் பங்கீடு கொள்ள அவர் தயங்கியதில்லை. தன்னளவில் நேர்மைகொண்ட ஒருவர் படைப்பாக்க விசயத்திலும் அவ்வாறுதான் இயங்க இயலும். சில கலை இலக்கியவாதிகள் போல் சுயமதிப்பீடு என்றால் காசுக்கு எத்தனை என்று கேட்கும் தன்மோகம் இல்லை. சுயமதிப்பீடு கொண்டதால் அவர் கவிதையின் வேறொரு தளத்துக்கு நகர்ந்தார்.

'என் குறைகளை நான் உணரும்போதும் பிறர் உணர்த்தும் போதும் ஏற்கத் தயங்கியதில்லை. இதை எழுதி என்னை நான் அம்பலப்படுத்திக் கொள்வது குறித்து எனக்கொரு கூச்சமுமில்லை'

இந்த நேரத்தில் 'இன்குலாப் எழுதியவைகளில் ஒரு வரியைக் கூட கவிதை என என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது' என்று வெளிப்பட்ட ஜெயமோகனின் முரட்டு முன்மொழிவையும் மறந்துவிடுவதற்கில்லை. அத்தனையும் கவிதைக் கனிகள் என்று சொல்கிற புகழ்வையும் அவர் ஏற்கவில்லை.

'இவை கவிதைகளே இல்லை என்பவர்களுக்கு எனது மௌனத்தை மட்டுமே விடையாக்கிக் கொள்கிறேன். என் கவிதைகளுக்கு நானே பரிந்துரை, விளக்கவுரை செய்கிற தவறுகளை ஒரு போதும் செய்யமாட்டேன். எனது நிறத்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகுமட்டும் பூப்பேன்'

இது கவிதை என்போருக்கும் கவிதையில்லை என்போருக்குமிடையில் ஒரு எல்லையில் அவர் ஜீவித்துக்கொண்டிருப்பார்.

அவர் கையிலெடுத்த புதிய கவிதையியலிலிருந்து 2000 க்குப் பின் சன்னம் சன்னமாய் நிகழ்த்து கலைக்குள் பிரவேசித்தார். நெறியாளர் அ. மங்கையுடன் இணைந்து அவ்வை, குறிஞ்சிப்பாட்டு, மணிமேகலை போன்ற நாடக படைப்பில் அவர் பணி திரும்பியது. இத்தகைய பயணத்தில் அ.மங்கையும் அவரும் இணைந்து புதிய நாடக நெறியியலை உருவாக்கினர். மராட்டியத்தில் வி.ஸ. காண்டேகரின் யயாதி, கோவிந்தாச்சார்யாவின் 'மஹாபாரதத்தில் பெண்ணியம், தமிழில் புதுமைப்பித்தனின் சாபவிமோட்சனம் போன்று மறுவாசிப்பில் நாடக உருக்கொண்டவை இவை. இங்கு எப்போதும் கலைஞனின் ஒருதுறைப் பணி என்பது பல்துறைப் பணியாய், பல்துறை சார்ந்தும் படைப்பு அனுபவமாய் சிறகு விரிக்கும். பன்முகத் தன்மை எனப்படுவது ஓரொரு கலைஞனும் தன் படைப்புத்திறனைக் கூட்டல் கணக்கிலேயே வைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு.

நாங்கள் ஒரு சாலைக் கல்விப் பறவைகள், சமகாலப் படைப்பாளிகள், ஒரே திசையில் முன்னும் பின்னுமாக பறந்தாலும் இணைகோட்டில் பயணித்தோம்.   வேறெந்த இலக்கியக்காரனையும் பற்றிப் பேசுவதிலும் இவரைப் பற்றிப் பேசுவதில் நெடுங்கால நெருக்கமும் கருத்துக்களும் உண்டு.

அவர் தனது திறமையை மட்டுமே நம்பியதில்லை. நேர்மையை நம்பினார். சொல்லும் செயலும் ஒன்றான வாழ்வின்மீது நம்பிக்கை வைத்தார். திறமை எல்லாக் காலத்தும் துணை வராது என்பதை நம்மைப் போல் அவரும் அறிந்திருந்தார். திறமையினால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திவிடலாம் என்ற வல்லமை பின்னர் 'ராஜதந்திரமாக' மாறுகிறது. திறமை, ராஜதந்திரம் என்ற குணமாற்றம் கொள்கிற எல்லைதான் – வஞ்சனை, சூழ்ச்சி, துரோகம், ஏமாற்று, உள்ளீடற்ற உச்சரிப்பு, தன்னலம் போன்ற கீழ்மைகளில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

சுயமுரண்களற்ற சொல்லை வாழ்வை அமைத்துக்கொண்டார். நேர்கோட்டுத் தன்மை கொண்ட கொள்கை ரீதியான வாழ்வு கொண்டிருந்தார்.

ராஜதந்திர முன்னகர்வுகளில் மேலேறுகையில், வேறொன்று நிகழ்கிறது. தன்திறன்கள் கொஞ்சமாய்க் கரைதல் என்னும் பின்தள்ளிப் போதல் தன்னறியாமல் நடக்கிறது. 

                'எந்த சுரண்டல் சாம்ராஜ்யங்களின்

                தர்பார் மண்டபங்களில்

                நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ

                அந்த சாம்ராஜ்யங்கள் பரிவாரங்கள்

                வேதங்கள் பஜனைகள் எல்லாம்

                இந்த யுகப் பிரளயத்தின்

                கந்தக அலைகளால் சாம்பலாகின்றன'

உயர்த்திப் பிடிக்கிற உன்னதங்களும், புராணங்களும், வீரயுகப் பஜனைகளும் மக்கள்யுகத்துக்கு என்ன பொருத்தப்பாடு கொள்ள முடியும் என்கிற காலம் பற்றிய கணிப்பு வேண்டும். முந்திய பெருமிதங்களில் மனங்களை மூழ்கடித்து தலைஎழுந்து வரமுடியாமல் செய்வதல்லால் இதெல்லாம் வேறென்ன? சமகாலத்தின் கந்தக அலைகள் இவையத்தனையையும் சாம்பலாக்கும் என்பதனை 'கண்மணி ராஜம்' கவிதை இராஜராஜனையும் மீதம் வைக்காமல் எரித்துப் பொசுக்கியது. சிலையான பின்னும் மக்களாட்சி மகத்துவத்தை கேலிக்காட்படுத்தல் எவ்வகையில் நியாயம் எனக் கேட்கிற கேள்வியில் அறம் பொதிந்துள்ளது.

தொடரும்...

1/21/2017 2:55:30 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்