அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 14
41. தோழர் பிரான்சிஸ்
1984 முதுவேனிற் காலம்
'பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஓர் தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
ஏதாகிலும் நாவாய் வரும் சிலமன்?'
மு.பொவின் இக்கவிதையை இப்பொழுது அடிக்கடி முணுமுணுக்கிறேன். என்னுள் தனித்து எழுகிறது. தனிந்து விடப்பட்டேனா? ஆளற்ற ஒரு தீவில் றொபின்சன் குரூசோ போல தனித்த ஒருவனாய் நிற்கிறேன். அழுது விடுவேனோ என்று அஞ்சினேன்.
வறண்ட பாலையில் வெப்பக்காற்று ஓங்கி ஓங்கி அடிக்கிறது. குளிர் செய்யவும், சோளகமாக வீசவும் தோழர் விசு இங்கில்லை. தமிழ்நாட்டில். பின்தளம் அதுதான். ஆனால் இவ்வளவு காலமும் அங்கேயா நிற்கப் போகிறார்?
இப்பொழுது உத்தரவுகள் மாத்திரமே வருகின்றன. ஒரு சொல் உரையாட ஒன்றுமில்லை. எவருமில்லை. ஒன்றுதான் வேலை இருந்தது. அரசியல் வகுப்புக்கள் எடுக்க வேண்டும். விவாதங்களோ, தோழமை நிறைந்த உரையாடலோ இல்லாத ஒரு வெட்டவெளியில் நிற்கின்றேன்.
'அமைப்பு கட்டப்படுகிறது. அரசியல் வகுப்புக்கள் எடுக்க வேண்டும். நெடுந்தீவிற்குப் போ' போகிறேன்.
'ஊர்காவற்துறையில் தங்கு' தங்குகிறேன்.
'கொடிகாமம் போ' 'கரவெட்டியிலை வகுப்பு எடுக்க வேணும்' 'சில தோழர்களை பண்டத்தரிப்பிலை சந்திக்க வேணும்' 'காட்டுக்குள்ளாலைதான் போக வேணும். பாதை கொஞ்சம் பயம் தான். விசுவமடுவிலை கொஞ்சநாள் தங்க வேணும். ஆயத்தமா இரு....'
'அண்ணை' என்று கூப்பிட்டு பிரான்சிஸ் வந்தான். அமைப்பு கட்டாயப்படுத்தியும் 'தோழர்' என்று அவன் அழைத்ததில்லை. 'என்ன தோழர்?' என்று கேட்டேன். 'அண்ணை உந்தத் 'தோழர்' எண்ட சொல்லை விடுங்கோண்ணை. உங்கை எவனுக்காவது தோழமை உணர்வு இருக்கா? 'தோழர்' எண்டு உவங்கள் கூப்பிடேக்கை எனக்கு 'டேய் அதைக் கொண்டு வா இதைக் கொண்டுவா' எண்டு அதட்டிற மாதிரி இருக்கு. அங்கை புலிகளைப் பாருங்கோண்ணை. அவன் மச்சான் எண்டிறான். அம்மான் எண்டிறான். அவங்களிட்டை இருக்கிற தோழமை உணர்வு எங்களிலை ஆரிட்டையாவது இருக்கா? சொல்லுங்கோ பாப்பம். சும்மா இவங்கள் தோழர் தோழர் எண்டு சனத்தைப் பேய்க் காட்டுறாங்கள்.
'சரி வந்த விசயத்தைச் சொல்லடாப்பா?'
'அண்ணை ஒருக்கால் பூம்புகாருக்குப் போகவேணும். அங்கை கொஞ்சம் பொடியங்களைச் சந்திக்க இருக்கு. அமைப்பிட்டைக் கேட்டன். உங்களைக் கூட்டிக் கொண்டு போகட்டாம். எனக்கும் வலு புளுகம். உங்களோடையும் கனக்கக் கதைக்கக் கிடக்கு....'
'அமைப்பைத் திட்டிறாய். பேந்தென்னெண்டெடாப்பா வேலை செய்வாய்?'
'அண்ணை என்னை நீங்கள் விளங்கிறியள் இல்லையண்ணை. அமைப்பை நான் எங்கை திட்டினான்? எங்களை ஆடு மாடு மேய்க்கிற மாதிரி அதிகாரம் செலுத்திக் கொண்டு கொஞ்சப் பேர் திரியினமே. அவையளிலைதான் எனக்குக் கோபம். ஜனநாயக மத்தியத்துவம் அது இதெண்டு கதைக்கினம் எல்லோ? அதெல்லாம் வெறும் புண்ணாக்குக் கதையண்ணை. உவங்களிட்டை ஜனநாயகமும் இல்லை. மத்தியத்துவமும் இல்லை. உவங்கள் கொஞ்சம் சிவப்புப் புத்தகங்களைத் திண்டு போட்டு திண்டது செமியாமல் கதைக்கிறாங்கள் அண்ணை....'
'இவ்வளவு கறாரான விமர்சனம் வைக்கிற நீ அமைப்புக்காக மனப்பூர்வமா எப்படி உழைக்க முடியும்?'
'இவையள் கொஞ்சப் பேர் தானண்ணை எங்களைப் போட்டு சிப்பிலியாட்டினமண்ணை. எங்கன்ரை அமைப்பிலை எந்தப் பிழையுமில்லை. தமிழீழம்தான் தமிழரின்ரை பிரச்சினைக்கு ஒரேயொரு தீர்வு. அது புதிய ஜனநாயகப் புரட்சியாலை மாத்திரம்தான் சாத்தியம். இதிலை எங்கையண்ணை முரண்பாடு வரப்போகுது,? மற்றது நான் தோழர் விசுவை முழுமையாக நம்பிறன். அவரை மாத்திரம்தான் தோழர் எண்டு சொல்லுவன். உங்களையும் 'தோழர்' எண்டு சொல்லமாட்டன். உங்களிலையும் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு...'
'என்னிலை என்ன பிரச்சினை இருக்கு சொல்லன்டாப்பா...' 'அதைப் பின்னேரம் கதைக்கிறன். வாங்கோ ஒரு பிளேன்ரீ குடிப்பம்...' குருநகரின் தேத்தண்ணிக் கடையில் ஒரு ரொட்டி உண்ணாமல் பிரான்சிசுடன் பிளேன் ரீ குடிக்க முடியாது.
பூம்புகாருக்குப் போவதற்கான குச்சொழுங்கைகள் எல்லாம் பிரான்சிசுக்கு தெரிந்திருந்தது. அவன் குருநகர் இராணுவ முகாமைக் கடக்கிறபோதும் ஒன்றுக்கும் அஞ்சவில்லை. 'வாறன் அண்ணை' என்று ஒரு சிங்கள இராணுவத்தானுக்குக் கைகாட்டினான். 'ஓவ்' என்று அவனும் கைகாட்டினான்.
'அண்ணை உவங்களை சினேகம் பிடிச்சு வைச்சிருக்க வேணும். எல்லாத்துக்கும் உதவும். நீங்கள் தான் முழுசி முழுசி எல்லாத்தையும் காட்டிக் குடுக்கப் போறியள்...'
'எடேயப்பா, என்னை ஆர்மி தேடுறது உனக்குத் தெரியும் தானே? நான் முழுசாமல் என்னெடாப்பா செய்யிறது?'
'அண்ணை நீங்கள் வேளைக்கு ஆமியிட்டைப் பிடிபடுவியள் பாருங்கோ. உடம்பும், தாடியும்... அந்த ஆமிக்காரன் உங்களைத்தான் பாத்துக் கொண்டு நிக்கிறான்... அண்ணை போய் தாடியை வெட்டுங்கோ. 'சிமார்ட்டா' இருங்கோ பாப்பம். உங்களுக்குத் 'தோழர்' எண்டு சொல்லிக் கொண்டு தாடியையும் வளர்த்தால் 'கொம்மியுனிஸ்ற்' எண்ட நினைப்பு. அண்ணை கொம்மியுனிசம் என்டது மனசிலையும் செயலிலையும் இருக்க வேணும். நீங்கள் பெரியாக்கள் அண்ணை. உங்களுக்கு நாங்கள் அரசியல் படிப்பிக்கக் கூடாது....'
'பிரச்சினை இல்லையெடாப்பா. நீ சொல்லு. யதார்த்தமா நீ சிந்திக்கிறாய். உன்னட்டை இருந்தும் கற்க நிறைய இருக்கு...'
'சும்மா பகிடி விடாதையுங்கோண்ணை. அண்ணை நாங்கள் புலிகளிட்டை இருந்தும் கற்க நிறைய இருக்கண்ணை. அவங்களிட்டை அரசியல் இல்லையெண்டு நாங்கள் நினைக்கிறமே தவிர, அவங்களுக்கு எண்டும் ஒரு அரசியல் இருக்கு. அவங்களுக்கு தங்களுடைய இலக்கு, பாதை எல்லாம் தெளிவா இருக்கு....'
'நீ சொல்லுறது பிழையெடாப்பா. புலிகளிட்டை அராஜகம், தனிநபர் பயங்கரவாதம், ஜனநாயக மறுப்பு எல்லாம் இருக்கெடாப்பா. இதுகளை வைச்சுக் கொண்டு மக்களைத் திரட்டவோ, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவோ முடியாது. மக்களின் பலத்தைத் திரட்டி நாங்கள்தான் முன்னணிப் படையா இருப்பம்...'
'சும்மா பூச்சாண்டி காட்டாதையுங்கண்ணை, அராஜகம், தனிநபர் பயங்கரவாதம், ஜனநாயக மறுப்பு இதொண்டும் மற்ற அமைப்புகளிட்டை இல்லையா? ஏன், எங்களிட்டையே இருக்கு. என்ன எங்களிட்டை ஆயுதம் போதியளவு இல்லை. மற்றது நாங்கள் செயல்படேல்லை. சும்மா கதைச்சுக் கொண்டிருக்கிறம். எங்களிட்டை ஆயுதமும் இருந்து ஓர்மமாகச் செயற்படவும் தொடங்கி இருந்தால் அராஜகத்திலையும் நாங்கள் முன்னணிப் படையா இருந்திருப்பம்....'
'என்னடாப்பா நீ - அப்போதை 'எங்கன்ரை அமைப்புத்தான் நல்ல அமைப்பு, தோழர் விசுவை நம்பிறன் எண்டெல்லாம் சொன்னாய். இப்ப இப்பிடியெல்லாம் கதைக்கிறாய். முரண்பாட்டு மூட்டையா இருக்கிறாய்'
'நீங்கள் என்னைப் புரிய முயற்சிக்கவும் இல்லை எண்டுதான் நான் நினைக்கிறன். கொஞ்ச நேரத்திற்கு முன்னம் தான் சொன்னியள் 'நான் யதார்த்தமாச் சிந்திக்கிறன்' எண்டு. இப்ப சொல்லுறியள் முரண்பாட்டு மூட்டை எண்டு. இப்பிடிக் கதைக்கிற உங்களையும் நான் அப்பிடிச் சொல்லலாம்தானே. ஆனால் அப்பிடிச் சொல்ல மாட்டன். அண்ணை நான் தோழர் விசுவை உண்மையா நம்பிறன். அமைப்பையும் நம்பிறன். ஆனால் அமைப்புக்குள்ளை ஜனநாயக மத்தியத்துவம் வரவேணும். அராஜகவாதிகளைத் தூக்கி எறியவேணும். மற்றது தோழர் விசு இங்கை தளத்திற்கு வரவேணும். தனிநபராலை பெரிசா ஒண்டும் செய்யமுடியாட்டிலும் அவரிட்டை ஒரு ஆளுமை இருக்கு. உண்மையாண்ணை மனசைத் திறந்து உங்களுக்குச் சொல்லுறன்... நான் புலியிலை சேர்ந்திருக்க வேணுமண்ணை. என்னர உழைப்பெல்லாம் இஞ்சை வீணாப் போகுது.... இந்த வறட்டுவாதிகளுக்கு வீணா வேலை செய்ய வேண்டி இருக்கு.... பாப்பம்....'
'ஏன்ராப்பா நீ புலியிலை சேர்ந்திருக்கலாமே? இவ்வளவு புலியின்ரை புராணம் பாடுறாய்....'
எனக்கு ஒரு சந்தேகம் தொற்றிக் கொண்டது. புலிதான் இவனை அனுப்பியதோ?
'அண்ணை எல்லா இயக்கங்களிலையும் சேர்ந்த எல்லாரும் அந்தந்த இயக்கங்களின்ரை கொள்கைகள் பிடிச்சுக் கொண்டா சேர்ந்தவையள்? சொல்லுங்கோ பாப்பம்... ஒவ்வொருத்தருக்கும் எந்தெந்த இயக்கக்காரரோடை தொடர்பிருந்துதோ அந்தந்த இயக்கத்திலை சேர்ந்தினம். ஏனண்ணை உங்களுக்கும் தோழர் விசுவின்ரை தொடர்பு கிடைக்காட்டில் இந்த இயக்கத்திலை சேர்ந்திருப்பியளே? இதுக்குள்ளை கொள்கையும் மண்ணாங்கட்டியும். அண்ணை உந்த இயக்கங்கள் எதுக்கெண்டாலும் கொள்கை இருக்காண்ணை...?
நாங்கள் புதிய ஜனநாயகப் புரட்சி எண்டிறம்.... ஐக்கிய முன்னணி எண்ட பெயரிலை எல்லாரையும் இணைச்சுப் போராடுவம் எண்டு சொல்லிறம்? மக்களைத் திரட்டி அதன் முன்னணிப்படையா நாங்களே நிப்பம் எண்டும் சொல்லிறம். தங்களுடைய தலைமை ஆர் எண்டதை மக்களே தீர்மானிக்கட்டும் எண்டும் சொல்லுறம். இப்பிடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறம். ஒண்டையும் செய்யக் காணம்... சரி பரவாயில்லை. எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கெண்டு சொல்லலாம். இதுவும் தோழர் விசுவின்ரை ஆளுமையிலை இருந்து வருதே ஒழிய எங்களது பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்று அறிவிக்கிறம் இல்லை....'
'எங்கன்ரை அரசியல் அறிக்கையிலை இதைப் பற்றி தெளிவாச் சொல்லியிருக்கிறம் தானே?'
'சும்மா விடுங்கோண்ணை கதையை, அறிக்கையிலை என்ன சொல்லியிருக்கிறம்? ஈழத்தமிழரின் அரசியல் வரலாறு, பௌத்த சிங்கள அரசின் ஒடுக்குமுறை, அதற்கு எதிராக மக்களைத் திரட்டி தற்காப்பு யுத்தம் நடாத்துதல், அது பிறகு தாக்குதல் யுத்தமாக பரிணமித்தல்... வேறை என்னண்ணை அறிக்கையிலை சொல்லியிருக்கிறம்? அறிக்கையைப் பார்த்தால், யூ.என்.பி.யின் ஜே.ஆர். அரசு இல்லாமல் போனால் எங்கன்ரை பிரச்சினையிலை அரைவாசி தீர்ந்திடும் போலையும் இருக்கு.... சரி அதை விடுங்கோ....'
எனக்கு அதைவிட மனமில்லை. ஆனால் விடவேண்டும். அவனே சைக்கிள் உழக்குகிறான். நான் 'பாரில் குந்தி இருக்கிறேன். டபிள் பெடல் போடுகிறேன் தான். என்றாலும், மூசி மூசி சைக்கிள் உழக்குகிறபோது கதைப்பது இன்னும் களைப்பைக் கொடுக்கும்... பின்னேரத்தின் ஐந்து மணி வெய்யிலிலும் கன்னத்திலிருந்து வியர்வை ஒழுகுகிறது. மணியந்தோட்டத் தென்னந்தோப்பின் கைஒழுங்கையில் சைக்கிள் வேகமாக உருண்டது....
'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கெடாப்பா...?'
'அஞ்சாறு மைல்தான். அரை மணித்தியாலத்திலை போயிடலாம்...'
'விடு நான் சைக்கிள் உழக்கிறன். நீ முன்னுக்கு இரு....'
'ஓமண்ணை நல்லாக் களைச்சுப் போனன்...'
தென்னைகளுக்கூடாக மஞ்சள் சூரியன் தெரிந்தான். 'சூரியனைப் பாருங்கோண்ணை.... என்ன வடிவாய் இருக்கு.... சுதந்திரமான ஒரு தேசத்திலை இருந்து எப்ப இதையெல்லாம் இரசிக்கப் போறமோ?'
நான் சைக்கிளை எடுத்தேன். 'என்ரை கவலை வேறையெடாப்பா...'
சைக்கிள் ஓடஓட அவன் 'பாரில்' ஏறிக் குந்தினான்.
'என்னண்ணை....?'
'நீ கதைக்கிறதைப் பார்க்க நிரம்பக் கவலையா இருக்கு.... எங்கன்ரை பயணம் எதை நோக்கிப் போகுது?'
'எனக்கும் இதுபற்றி நிரம்பக் கவலை இருக்கண்ணை. நாங்கள் கொள்கை கோட்பாடு எண்டு சும்மா மயிரைப் பிளந்து கொண்டிருக்கிறம்.. என்னண்ணை கொள்கையும் கோட்பாடும்...? ஈரோஸ், ’நாம் ஈழவர் நமது மொழி தமிழ். நமது தேசம் ஈழம்’ எண்டு சொல்லுது. ஈழவர் எண்டதுக்கை மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்க்கினம். உதே கருத்தைத்தானே ஈ.பி.ஆர்.எல்.எப்வும் முன்வைக்குது. அப்ப ஏன் இரண்டாப் பிரிஞ்சிருக்கினம்...?
புளொட்டுக்கு கொள்கை, கோட்பாடு எண்டு என்ன கோதாரி இருக்கு? 'சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவம்' எண்டினம். உது ஒரு கொள்கையே அண்ணை? உதை எல்லாரும் தானே சொல்லலாம். ஜே.ஆர். 'சோசலிசம்' எண்டு சொல்லேல்லையே? அப்பிடித்தானண்ணை இதுவும்... தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எண்ட மாதிரி ஆயிரத்தெட்டு இயக்கங்கள் துவங்கியிருக்கு. இதுகளுக்கு எல்லாம் என்ன கொள்கை கோட்பாடு இருக்கு? கோழி களவெடுத்தவனையும் சமூக விரோதி எண்டு போஸ்ற்றிலை கட்டிட்டு மண்டையிலை போடுறாங்கள்... இது எங்கையண்ணை போய் முடியப்போகுது? நாங்கள் என்னெண்டால் உதொண்டையும் பார்க்கிறம் இல்லை. வலு சிம்பிளா புலிகள் 'சுத்த இராணுவக் கண்ணோட்டத்திலை' இயங்கினம் எண்டு 'பிரகடனப்படுத்திப்போட்டு 'சப்ரரை' 'குளோஸ்' பண்ணுறம்....'
'....அண்ணை இருந்து பாருங்கோ கடைசி மட்டும் புலிகள் தான் இருந்து போராடப் போகினம்.... அவங்கள் தங்கன்ரை இலக்கிலை தெளிவா இருக்கிறாங்கள்.... உறுதியா இருக்கிறாங்கள், ஒருக்காலமும் புலிகள் அமைப்பு உடையச் சந்தர்ப்பம் இல்லை. உதிரியாச் சிலபேர் விலகலாம். அதுக்கு அங்கை ஜனநாயக மத்தியத்துவம் இல்லாததும் ஒரு காரணம்... ஜனநாயக மத்தியத்துவத்திலை என்னண்ணை இருக்கு? ரஷ்யாவிலை ஸ்ராலின் செய்தால் சரி. இங்கை இவர்கள் செய்தால் பிழையோ? மற்றக் குட்டிக்குட்டி இயக்கங்கள் அழிஞ்சு போக பெரிய இயக்கங்கள் இரண்டு மூண்டா உடைஞ்சு, சிதறி சில்லம் வல்லமாக வெடிச்சு அப்படியே இல்லாமல் போயிடும்.... கொஞ்சப் பேர் செத்துப்போக, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுறவன் தப்பிப்போக, உதிரியாகச் சிலபேர் அலைஞ்சு கொண்டு திரிவினம்... அதிலை நானும் ஒருத்தனா இருப்பன்....'
'எங்கன்ரை அமைப்புக்கும் அப்பிடி நடக்கும் எண்டு நினைக்கிறியோ?'
'ஓமண்ணை அதிலை என்ன சந்தேகம்...? ஆனால் நாங்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கலாமண்ணை. புலிகளைப் போலை எங்கன்ரையும் கட்டுக்கோப்பான இறுக்கமான அமைப்பு. இரகசியத்தைப் பேணுறதிலையும், 'நெற்வேர்க்கிலை'யும் கவனமா இருக்கிறம்.... புலிகளிட்டை இல்லாத ஒண்டு எங்களிட்டை இருக்கு. அது மக்களை நம்பிற அரசியல்.... ஆனால் இன்னொண்டும் இருக்கு. அது வரட்டுத் தனம்...'
அரசியல் வகுப்புக்களை நானே நடத்திக் கொண்டு திரிகிறேன். பிரான்சிஸ் அல்ல. அவன் ஊழியனாக நின்று என்னைக் காவித்திரிகிறான். இப்பொழுது அவனிடம் நான் பாடம் கேட்கிறன்.....
சூரியன் விழுந்தாலும் வெளிச்சம் இருக்கிறது. கூட்டம் கூட்டமாக நாரைகள் மேற்கு நோக்கிப் பறக்கின்றன. விழுந்த சூரியனை இழுத்து எடுத்து வரவா அவை பறக்கின்றன? ஒன்றும் சொல்லத் தோன்றாது அமைதி காத்தேன்.
சைக்கிள் ஓடிப்போக முடியாத இடம் வந்தது. கும்பி மணல் சைக்கிளை 'சிலீக்' பண்ணிப் புரட்டியது. சைக்கிளை பிரான்சிஸ் வாங்கி உருட்டினான். அழுகை வரும் போல இருந்தது. எங்கு தவறு விட்டோம்? விசாலமானதும் ஆழமானதுமான பார்வை எனக்கு வாய்க்கவில்லையா? யாரும் என்னைக் கொண்டு காவித்திரிய வேண்டுமா? யார் என்ன சொன்னாலும் அந்தக் கணத்தில் அது சரி போல இருக்கிறதே!
பிரான்சிஸ் பாடிக்கொண்டு சைக்கிள் உருட்டினான் 'வாழும்வரை போராடு வழிஉண்டு என்றே பாடு' அந்த வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடினான்....