அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 4
10. உமா மகேஸ்வரன்
1979 முதுவேனிற் காலம்
சைக்கிளில் நான் - கைபிடித்து இரண்டு சைக்கிள்களில் இந்திரனும் பாலனும் வந்தனர். அளவெட்டித் தெரு தாண்டி, தெல்லிப்பளைச் சந்திக்குச் சைக்கிள் ஏறியது. முதுகுச் சேர்ட்டை நனைக்கப் பண்ணிக் கொண்டிருந்தது இறங்கு வெய்யில்.
தெல்லிப்பளை ரெயில்வே ஸ்ரேசன் தேத்தண்ணிக் கடையில் மூவரும் பிளேன் ரீ குடித்தோம். இந்திரன் 'கோல்ட் லீவ்' பத்தினான். வாயிலிருந்து சிகரெட் மணம் போக வேண்டும். வாயை அவித்து விடுகிற வீறுடன் இருந்த 'செஸ்ரோ' வை நாங்களும் உமிழ்ந்தோம். சிகரெட் புகைத்தவனே பிளேன் ரீக்கும் செஸ்ரோவுக்குமான செலவைக் கட்டினான்.
'பெரியவர்' உங்களை ஒருக்கால் சந்திக்க விரும்புகிறார், என்று தேவதாஸ் சொல்லியிருந்தான். தேவதாஸ் இப்பொழுது வந்து விடுவான். அதற்கிடையில் இந்த மண்ணாங்கட்டி சிகரெட் எதற்கு? சிகரெட் மணந்தால் பெரியவர் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்?
தண்டவாளத்தை ஒட்டி அந்த கையொழுங்கை ஊர்ந்தது. தேவதாஸ் கூட்டிப் போனான். ஒதுங்கி இருந்த ஒரு வீட்டின் கதவு தட்டப்பட முன்னரே ஒரு குரல் கேட்டது.
'மாறன், ஆக்களை உள்ளை கூட்டிக் கொண்டு வா'
ஓகோ, அப்படியென்றால் தேவதாசின் இயக்கப்பெயர் மாறனா?
தேடப்படுபவர்கள் என்ற படங்களில் பார்த்த உமா மகேஸ்வரன் கதிரையில் இருந்தார்.
'வாங்கோ தம்பியவை'
பத்து இலட்சம் ரூபாவுக்குத் தேடப்படுகின்ற நால்வரில் உமா மகேஸ்வரன் ஒருவர். நால்வரின் புகைப்படங்களும் பொதுச் சுவர்களிலும், பஸ் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.
மேயர் துரையப்பா கொலை, இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை கொலை என்று பல தாக்குதல்களுக்கு உரிமை கோரி, க. உமாமகேஸ்வரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கையெழுத்திட்ட பிரசுரம் ஒன்று வீரகேசரி பத்திரிகையில் வந்திருந்தது.
ஒரு வருடத்திற்கு முன்னர் அப்பிரசுரத்தில் கையெழுத்திட்டவர் இப்பொழுது எங்கள் முன் அதே கைகளை ஆட்டியபடி இருக்கிறார். அவ்வளவு சாகசங்களும் செய்த ஓர் அமைப்பின் தலைவர் இவரா? நம்ப முடியவில்லை.
பிரமிப்புடன் இருந்தேன். அவரைக் கண்டதில் எனக்குச் சிறு புன்னகை வரப்பார்த்தது. இந்திரன் பிடித்த சிகரெட் இவருக்கு மணத்திருக்குமோ? நான்தான் புகைத்தேன் என்று அவர் நினைப்பாரோ? என்முகம் அதைத்தான் சொல்லும் அவருக்கு. 'அதை மறைக்கத்தான் புன்னகைக்க முயல்கிறானோ இச்சிறுவன்?'
'சொல்லுங்கோ தம்பியவை என்ன நடக்குது?' தொடங்கினார் பெரியவர்.
சொல்ல எங்களிடம் ஒன்றும் இல்லை. அவர்தான் ஏதும் சொல்ல வேண்டும். நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம். பிறகு தேவதாசனைப் பார்த்தோம்.
'நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்கள் தானே?' என்று தொடர்ந்தார்... சாகசங்களின் நாயகனை நான் கண் வெட்டாது பார்த்தேன். சுருள் மயிர் ஸ்பிரிங் போல் நெற்றியில் விழுந்து துள்ளியது. தமிழ்மகனுக்குரிய அடர்த்தியான மீசை அவரிடம் இல்லை. அதனால் என்ன, அவரிடம் வீரம் இருக்கிறது. ஓர் உதைபந்தாட்ட வீரனின் கால்கள் அவருடையவை. வீறும், வேகமும், விவேகமும் மாத்திரமே உதைபந்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். சாகசங்களை, பந்தை உதைப்பது போல் உருட்டிக் கொண்டு ஓடுவார் அவர்....
சுவாரஸ்யங்களில் கரைந்து கனவுகளில் மிதந்து கொண்டிருந்தேன் நான். சுவரில் பல்லி ஒன்று வால் துடித்து அசைந்து சிறுசிறு பூச்சிகளை 'லபக்' கென்று பிடித்து விழுங்கியது.
இந்திரனின் கடைவாயில் மெல்லிய நகையொன்று இழையோடியது. கண்கள் விரிய பார்வையில் பூரித்துப்போய் இருந்தான் பாலன். நூற்றி எட்டாவது முறை இதைக் கேட்பவனாகத் தேவதாஸ் இருக்கலாம். அஃதொன்றும் தேவதாசின் முக விகசிப்பில் தெரியவில்லை. இப்பொழுது தான் அவன் கைகட்டி புதிதாகக் கதை கேட்கிறான்.
திடுதிப்பென்று 'ஒப்பிறேசன் டே பிறேக், படம் பார்த்தீர்களா?' என்று கேட்டார் பெரியவர். சினிமாவிலும், நாடகத்திலும், இசையிலும், இலக்கியத்திலும், அரசியலிலும், பெண்களிலும் அதீத ஆர்வமுற்ற நாங்கள் இத்திரைப்படத்தை எவ்வாறு தவற விட்டிருப்போம்?
இவ்வளவு நேரத்திலும் இந்த ஒன்றுதான் நாங்கள் இரசித்ததும், பதில் தெரிந்ததும், பெரியவரை நெருங்க வைத்ததுமான கேள்வி. அது எங்களுக்குத்தான். எதிலும் ஆர்வமற்றவன் பாலன். அரசியலை மாத்திரம் கைகளுள் பொத்தி வைத்திருந்தான்.
எங்கள் இருவரின் முகம் விகசித்து 'ஓம்' என்ற சிரிப்பைத் தந்தது. 'ஒப்பிறேசன் டே பிறேக். படத்திலை அந்தப் போராளிகள் எப்படி இயங்கினார்களோ அப்படித்தான் நாங்களும் இயங்கினம். அந்தப் படத்திலை இராணுவ அதிகாரியைக் கொல்ல போராளிகள் போகிறார்கள். ஞாபகம் இருக்கா? இராணுவ அதிகாரி வாற பாதையை ஒருவன் பார்த்துச் சொல்கிறான். திடீரென்று இராணுவ அதிகாரியின்ரை வாகனத்திற்கு முன்னாலை இரண்டு போராளிகளும் பாயினம். ஒருவன் றிவோல்வரை எடுத்துச் சுடுகிறான். அது வெடிக்கேல்லை. திகைச்சுப் போயினம். மற்றவன் சடக்கெண்டு கிரனைட்டை எடுத்துக் கிளிப்பைக் கழட்டிப் போட்டு வீசுறான். அது வெடிக்குது... ஞாபகமிருக்கா உங்களுக்கு அது?...'
உடல் சிலிர்க்கச் சிலிர்க்கக் கேட்டுக் கொண்டிருக்கிறன். பெரியவர் அதைச் சொல்கிற விதம் என் உடலைத் திமிலோகப் படுத்துது. என் கை உடனேயே பாரம் கூடிய ஒரு துவக்கைப் பற்றிப் பிடிக்க வேண்டும்.
'....அப்பிடித்தான் எங்களுக்கும் ஒரு சம்பவம் நடக்குது.... பொத்துவில் கனகர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலை தமிழீழம் கேட்டு பார்லிமெண்ட் போறார். போன கொஞ்சக் காலத்திலை அவர் யூ.என்.பிக்கு மாறிறார். தமிழர்களைப் பார்த்து ’போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று சொன்ன ஜே.ஆரிட்டைப் போறார்..... எதிர்க்கட்சி வரிசையிலை இருந்திட்டு எல்லாரையும் கைவிட்டு கழுத்தறுத்திட்டு எழும்பி நடந்து ஆளுங்கட்சி வரிசைக்குப் போறார்... எப்படி இருக்கும் எங்களுக்கு? 'உவர் வாழக்கூடாது' எண்டு அந்தக் கணமே முடிவெடுத்திட்டம்...'
'.....திட்டம் தீட்டியாச்சு. நானும் பிரபாகரனும் செல்லக்கிளியும் போறம்.... இலக்குப் பார்த்துச் சுடுறதிலை பிரபாகரன் வலு விண்ணன். அவன்தான் கை பிடிச்சு என்னை சுடப் பழக்கினவன். அவனிலை நம்பிக்கை வைச்சு நாங்கள் போறம்.... நான் கொழும்பு தமிழ் இளைஞர் பேரவைத் தலைவரா இருந்ததிலை பொத்துவில் கனகர் எனக்கு ஏற்கனவே நல்ல பழக்கம். என்னை கண்ட உடனை 'வா ராசா இரு' எண்டுதான் முதல் வசனம் வரும். அதுக்காக அவரின்ரை துரோகத்தை மறக்க ஏலுமே? முந்தி 'ஒரு சிங்களவனையும் நம்ப ஏலாது, எண்டு நெடுகச் சொல்லுறவர் எலெக்சனிலை வெண்டாப் பிறகு என்ன சொல்லுறார்? 'எனக்கு ஜே. ஆரிலை நம்பிக்கை இருக்கு, எண்டு சொல்லுறார். இந்தத் துரோகத்துக்குப் பதில் குடுக்க வேணும்......'
'நாங்கள் போனம். கனகர் வெளியாலை வாறார்.... என்னைக் கண்டிட்டார். 'என்ன உமா இங்கால் பக்கம்?' எண்டு கேட்டுக் கொண்டு வந்தார். நான் 'துரோகியைச் சுடுங்கோடா' எண்டு கத்தினன். பிரபாகரன் முதல் வெடி வைச்சான். அது அவரிலை படேல்லை. அது எனக்குப் பக்கத்தாலை சீறிக் கொண்டு போய்ச்சு. நானும் வைச்சன் வெடி. ம்கூம். அதுவும் அவரிலை படேல்லை. எங்களுக்கு ஒரே பதகளிப்பா இருந்தது. பார்த்தா செல்லக்கிளி., சடசடவெண்டு வைச்சான். அந்தக் குண்டுகள் தான் அவரிலை பட்டுது.... நாங்கள் ஓடத் தொடங்கீட்டம்....'
'ஆஸ்பத்திரிக்கு ஆளைக் கொண்டு போயிருக்கினம்.. ஆள் தப்பீட்டார்.... கொஞ்ச நாள் தான். ஆள் முடிஞ்சுது... நாங்கள் இனிக் கொழும்பிலை இருந்தால் ஆபத்தெண்டு யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்திட்டம்... 'ஒப்பிறேசன் டே பிறேக்' படத்திலையும் அதுதானே நடக்குது. முதலிலை ஆள் தப்புது... பிறகு முடியுது....'
பெரியவர் சொல்லி முடித்து எங்கள் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்..... ஈர்க்குச்சி ஒன்று எடுத்துப் பல்லுக்குள் குடைந்தார். இப்பொழுது பெரியவரின் முகம் விரிந்திருந்தது. அவரது சாகசச் சொற்கள் அறையை நிரப்பி விட்டிருந்தன. மின் மினிப்பூச்சிகள் போல அவ்வறை முழுவதும் அலைந்து கொண்டிருந்தன அவரது கண்கள்.
கண்மூடி இருந்தார் பெரியவர். 'போவம்' என்று கண்ணால் சைகை காட்டினான் தேவதாஸ். எழும்பினார் பெரியவர். 'உங்கன்ரை பெயரைக் கேட்க மறந்து போனன். அறிஞ்சும் என்ன பிரயோசனம்? பெயரிலை என்ன இருக்கு?' அதற்கு நாங்கள் அசட்டுச் சிரிப்பொன்றை அறையில் விட்டோம்....
வழி அனுப்ப வந்த பெரியவர் சொன்னார்: 'ஆயத்தமா இருங்கோ.... லெபனான் றெயினிங்குக்குப் போக வேணும்....'
13. யாழ்தேவி
1980 முதுவேனிற்காலம்
சூரியன் கடலுள் வீழ்கிற பொழுதோடும், நாரைகள் பறக்கிற பின்னணியோடும், கதை இருந்தது. இரண்டு ரூபா கச்சான் கடலை இன்னும் நாலைந்து கொட்டைகளுடன் முடிந்துவிடும். சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்தோம்.
கதை ஒன்றும் முற்றுப் பெறவில்லை. இருண்டு இனி சிங்கள நேவியால் தொல்லை என்றான பிறகும் கூட கதை முற்றுப் பெறவில்லை.
காங்கேசந்துறை சீமேந்துப் பக்றறியின் கன்ரீனிலும் தோழர் விசுவின் குவார்ட்டசிலும் அது தொடர்ந்தது. யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் வளவில், முத்தவெளியில், பரந்தன் சாள்சின் ரியூட்டறியில், பாணைப் பருப்புடன் தொட்டுத் தின்று கொண்டிருக்கையில், கிளிநொச்சி திருநகர் பற்றைகள் தாண்டிய சித்திவிநாயகம் பிள்ளையின் வீட்டுப் படலையடியில், கனகாம்பிகை குளக்கரையில் மரவள்ளிக் குழம்புடன் சோறு உண்கையில் அப்பால் காட்டுக்குள்ளால் ஓர் எட்டு எடுத்து வைக்கையில், நிலவு தொடர்ந்து வர யாழ்தேவியின் படிக்கட்டில் பயணம் செய்கையில், நெடுந்தீவின் கரையில் ஒதுங்கி இருக்கையில், என் வீட்டு முற்றத்தில் நட்சத்திரங்களும் ஒளிர அஞ்சிய இருளில்.... தோழர் விசு சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொன்றாய்க் கேட்டேன். அறிய இருந்தன ஆயிரம். தோழர் செந்தில் வகுப்பு எடுத்தது மாதிரி அல்ல. தோழமை உணர்வு இதில் தெறித்தது. தோழர் விசுவின் கைபிடித்து சகலமும் கேட்கலாம். 'என்னடாப்பா' என்று முதுகு தட்டி, சாறுகள் பல அருந்தத் தந்தார்.
சீனக் கொம்மியுனிஸ்ற் கட்சியிலிருந்து வந்திருந்தார்
தோழர் விசு. 'இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் அவர்கள்' என்றார். சலிப்புற்று 'உது சரிவராது' என்று விலகினார்.
வேகம் எடுக்க விரும்பினார் தோழர் விசு. யாழ்தேவியின் வேகம் அது. மெயில் றெயின் மாதிரி ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று போகக்கூட அவர் விரும்பவில்லை. உருப்போட்ட மார்க்சிசத்தை ஒப்புவிக்க விரும்பவில்லை அவர். புது இரத்தம் பாய்ச்ச வேண்டும். அவர் புறப்பட்டார். எதிர்ப்பட்டோரில் ஒருவன் நான்.
விசு கள்ளத்தோணி எடுத்து தமிழ்நாட்டின் கரை அடைந்தார். தனியனாய் அவர் பயணம் தமிழ்நாட்டை ஊடறுத்தது. வட இந்தியாவின் முனை அடைந்து கால் வைத்த இடம் பாகிஸ்தான். குறுக்கு வெட்டிப் பாய்ந்து ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தார்.
மூன்று மாதங்கள் அங்குள்ள கொரில்லாப் போராளிகளுடன் பயிற்சி.
சென்ற வழியில் மீள்கிறார். சாகசமா அவரது நோக்கம்? 'எனக்கு வேறை வழி தெரியேல்லையெடாப்பா. நான் வேறை எங்கை றெயினிங் எடுக்கலாம்? சொல்லு.' கேட்கிற போது நிலவு அவர் முகத்தில் பட்டுத் தெறித்தது. 'தடக் தடக்' என்று பெருவேக மெடுத்த யாழ்தேவியின் மிதிபலகையில் நாம் அமர்ந்தவாறிருந்தோம். அவர் சொல்லிக் கொண்டேபோனார். 'அங்குலம் அங்குலமாப் போனாலும் நாங்கள் ஆழமாக் காலை ஊண்டிக் கொண்டு போவம்'.
தொடரும்...