Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலக்குத் தவறும் அம்புகள்

இலக்குத் தவறும் அம்புகள்
மட்டுநேசன்

 

தமிழர் அரசியல் பெரும்பாலும் இலக்குத் தவறியதாகவே இருந்திருக்கிறது. பிரச்சினையின் மையத்தைக் கவனத்திலெடுக்காது வேறு விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இதனால் மறுதரப்பு தமது கடமையைச் செய்யவேண்டிய தேவை ஏற்படாமல் போகின்றது. இதனால் எந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டதோ அது மறைக்கப்பட்டதாகி விடுகிறது. பிரச்சினையின் கவனம் வேறு பக்கம் திரும்ப ஊடகங்களுக்கு ஒரு நாள் தீனி. அந்த வகையில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி கந்தசாமி கோயிலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் அமைந்துவிட்டது.

'ஜே.வி.பி பொதுமன்னிப்பு ஜெனிபனுக்கு பொதுமன்னிப்பு எங்கள் பிள்ளைகளுக்கு எதுவுமில்லையா? என்பதை எழுதி காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதில் மற்றவர்கள் சிறையில் இருக்க ஜெனிபனுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்தது தவறு என்ற அர்த்தம் மறைமுகமாகத் தொனித்தது. சிறையில் இருப்பவர்கள் அனைவரும் எங்கள் பிள்ளைகள். அவர்கள் எந்த வழியிலாவது விடுதலையாகிவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருக்க வேண்டும். அதைவிடுத்து ஜெனிபர் மீது ஏன் எரிச்சற்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலை முயற்சி தொடர்பான வழக்கில் ஜெனிபர் தண்டனை பெற்றார். பொலனறுவை மாவட்ட நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது. இவர் மீது யாழ் உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தன்மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவரைக் கூட தான் மன்னித்தேன் என்று காட்டவோ அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவோ ஜெனிபனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி. இந்நிலையில் எமது கவனம் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, ஜெனிபனை மட்டும் விடுதலை செய்தது தவறு என்று சொல்லும் வகையில் இருக்கக் கூடாது. தனது விடுதலையின் பின்னர் ஏனைய கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார் ஜெனிபர். அச்சமயம் 'திறப்பு என்னிடம் இல்லையே' என்று பதிலளித்தார் திரு சம்பந்தன். பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்பதைவிட அன்றைய நாளிதழைப் படித்து விடயங்களை அறிவதிலேயே கூடிய கவனம் செலுத்தினார். தமது வாக்கு என்னும் திறப்பினைக் கொடுத்து பாராளுமன்றக் கதவினைத் திறந்து மீண்டும் அங்கே செல்ல வைத்தவர்கள் எமது மக்கள். சேர்.பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர், பிரபாகரன் என எமது இனத்தின் அடுத்த தலைவராக எமது மக்களால் கருதப்பட்டவர் சம்பந்தன். அவரிடமிருந்து இப்படியான பதில் வரும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

'மைத்திரி கடவுளை நம்புகிறவர், நான் மைத்திரியை நம்புகிறேன், என்னை நம்பி உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்' என்று அரசியல் கைதிகளிடம் கூறிய சம்பந்தன் தான் இப்போது இவ்வாறு கூறுகிறார். இறுதி யுத்தத்தின் பின் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 'இவர்களை இப்போதைக்கு விடுதலை செய்ய வேண்டாம் என்று தமிழ்த் தரப்பிலிருந்து என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்களின் பெயரைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று கூறினார். டக்ளசோ, கருணாவோ இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர் இவ்வாறு கூறியிருக்கமாட்டார் என்பது மட்டும் நிச்சயம். நிலமை இவ்வாறு இருக்கையில் ஜெனிபனின் விடுதலையைக் கேள்விக்குறியாக்குபவர்கள் யாருடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்? மட்டையில் இதனைக் காட்சிப்படுத்திய அரசியல் கைதியின் பெற்றோருக்கு இந்த சூத்திரம், குள்ள அரசியலெல்லாம் தெரிந்திருக்காது. சிறைக்குள்ளேயும் இதே பிரச்சினை இருந்தது. பெரும்பாலும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் அறிக்கைகள் மகஜர்களைத் தயாரிப்போர் நீண்டகாலமாகச் சிறையில் இருக்கும் கைதிகளே. அவர்கள் ஒவ்வொரு தடவையும் 'இறுதி யுத்தம் முடியும் வரை இருந்தவர்கள் விடுதலையாகியும் புனர்வாழ்வுக்கும் செல்கையில் நாம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுகிறோம்' எனக் குறிப்பிடுவார்கள். அவர்களின் வேதனையும் வலியும் விரக்தியும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆயினும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

வெற்றிச்செல்வியின் நூலில் கூட விடுதலையாகி விடுவார்கள் என்று கருதப்படுபவர்கள் தொடர்பாக சிலர் அதிருப்தி வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் எனக் கூறப்படும் ஒருவருக்கு புனர்வாழ்வு கிடைக்கவிருந்த போது, பூசாமுகாம் விசாரணையாளர்களிடம் வலிந்து சென்று தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தார் ஒருவர். இதனால் புனர்வாழ்வுக்கு அனுப்பும் முடிவை பல மாதம் ஒத்திவைத்தனர் விசாரணையாளர்கள். என்னையும் விடுதலை செய்யுங்கள் எனக் கூறுவது வேறு, ஏன் மற்றவரை விடுதலை செய்கிறாய் எனக் கேட்பது வேறு. மொத்தத்தில் பிரச்சினை எப்போதும் திசைதிருப்பப்படுகிறது.

இலக்குத் தவறும் அம்புகள்

'குற்றம் புரிந்தவர்கள் அரசுடன் இன்று இணைந்திருக்கையில் குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது நீதிக்குப் புறம்பானது' என்று கிளிநொச்சி நிகழ்வில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். குற்றங்களை வகைப்படுத்துவது எமது வேலையல்ல. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். இவர் குற்றவாளிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் செய்த பங்களிப்பு தொடர்பாகவும் சொல்கிறார் போல இருக்கிறது. இதுவும் பிரச்சினையைத் திசை திருப்பும் கூற்று. அத்துடன் 'ஒரு அரசியல் கைதிக்குக் கூட ஜனாதிபதியின் பொது மன்னிப்புக் கிடைக்கவில்லை.' என்று கூறியதும் இந்த விடயத்தில் அவர் எந்தளவு தூரம் அந்நியப்பட்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 'ஜெனிபனுக்கு பொது மன்னிப்பு' என்று எழுதிக் காட்சிப்படுத்தியதைக் கூட வாசிக்காமலா கருத்துரைத்தார் அவர்.

முன்னாள் போராளி தமிழ்க்கவி 'தமிழ்ப் பகுதிகளில் சிங்கள உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். சரணடைந்த பெண் போராளிகள் தொடர்பாக வெளிவரும் வதந்திகள் பற்றிக் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார். முன்னாள் பெண் போராளிகள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது தான். அவர்களின் எதிர்கால வாழ்வுக்குப் பாதகமானது தான். விடயம் அந்தளவோடு நின்றிருக்க வேண்டும். அதனைத் தாண்டி சிங்கள உயர்அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிட வேண்டிய அவசியம் என்ன?

கொக்குளாயில் தமது பாரம்பரிய நிலத்தில் வாடி அமைக்க முற்பட்ட தமிழ்க் கடற்தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள். அங்கே அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்களுக்கு காணியும் வீடும் வழங்கப்படுகிறது. தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் விகாரையும் அமைக்கப்படுகிறது. இதற்குப் படையினரின் பூரண ஒத்துழைப்பும் உண்டு. வடமாகாண சபையை இயக்க விடாமல் ஆளுநர் சந்திரசிறி செய்த கூத்துகள் கொஞ்சமா நஞ்சமா? வடமாகாண சபை நிதியை அவர் எப்படிக் கையாண்டார் என்பது பற்றித் தற்போது. பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. முதலமைச்சர் நிதியம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நிராகரித்திருந்தார். இந்த நிலையில் தமிழீழ நீதிமன்றின் பிரதம நீதியரசரின் தாயாரும் அவர் முன்னிலையில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்தவரும். மருமகளிடம் (பிரதம நீதியரசரின் துணைவி) ஜீனியராகப் பணிபுரிந்தவருமான தமிழ்க்கவி இப்படி ஒரு கோரிக்கை விடுத்ததை இவரது குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் ஆத்மாக்கள் மன்னிக்கமாட்டா. 'யாகாவாராயினும் நாகாக்க' என வள்ளுவர் கூறியதைத்தான் நினைவூட்ட வேண்டியுள்ளது. விடயத்துக்கு வெளியில் போனதால் தான் இசைப்பிரியாவும் சரணடைந்தவர்தானே என்ற கேள்விக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார் தமிழ்க்கவி.

சுன்னாகம் நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டதாக எழுந்த விவகாரமும் அப்படிப்பட்டதே. போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் வேகம் போதாதென்று சிலர் அதிதீவிரமாகப் போராட முனைந்தார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் நல்லூருக்குச் சென்று அவகாசம் கேட்ட போதும் இந்த உண்ணாவிரதிகள் மசியவில்லை. ஆனால் ஆளுநர் கேட்டதும் போராட்டத்தைக் கைவிட்டார்கள். அப்படியானால் யாருடைய நோக்கத்தை நிறைவேற்ற இந்தப் போராட்டம்?

இதுபோலத் தான் தமிழர்கள் நிர்வாகம் நடத்தத் தகுதியில்லாதவர்கள் என்று உலகுக்குக் காட்டும் வகையில் வடமாகாண சபையின் சில உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். விளங்கியோ விளங்காமலோ பலர் இவர்களுக்குப் பின்னால் இழுபடுகின்றனர். எங்களுக்கென்று எதிர்க்கட்சி தேவையில்லை. நாங்களே எதிர்க்கட்சி, ஆளும் கட்சியும் நாமே என்று சபையை நாறடிக்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் முடிந்த கையுடனே தொடங்கிய இந்தக் கோமாளிக் கூத்து சபை கலைக்கும் வரை தொடரும் போல உள்ளது. உள்ளுராட்சிச் சபைகளில் தொடங்கிய நாறடிப்புகளை மேற்கொண்டவர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்ததால் கட்சியும் கண்டும் காணாமல் இருக்க கட்சியில் ஆளுமையுள்ளவர்கள் இல்லையென்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்ததால் தான் எல்லோரும் கண்டபடி பேசுகிறார்கள். நடக்கிறார்கள். எல்லோருமே இலக்கை மறந்ததன் விளைவு தான்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மாலியன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால் அவர்களுக்கு வேறு சிந்தனை வந்திருக்காது. இதற்குக் காரணம் சபையில் யுத்தத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களைச் சேர்ந்தோரே பெரும்பான்மையினராக இருப்பது தான். நேர்மையானவர்கள், மக்கள் மதிப்புப் பெற்றவர்கள், முன்னாள் நீதிபதிகள், ஆளுமையுள்ள கல்விமான்கள் எவருமே இந்தச் சாக்கடை அரசியலுக்குள் வந்துவிடாதீர்கள் என்பது தான் வடமாகாண சபை உறுப்பினர்கள் சொல்லும் செய்தி. இனிமேலாவது பொது விடயங்கள் தொடர்பான அறிக்கைகள், மகஜர்கள், காட்சிப்படுத்தல்கள் மையப்புள்ளியை விட்டு வெளியே போகாமல் பார்க்க வேண்டும். செய்வார்களா?

9/16/2016 11:16:41 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்