Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அந்த தீபாவளி நாளில்…

<p>அந்த தீபாவளி நாளில்…</p>
ஆதிலட்சுமி சிவகுமார்

 

தீபாவளி என்றால் சின்னவயதில் புதுச்சட்டையும் பலகாரங்களும்தான் எங்களுக்கு முதன்மையாக இருந்தன...

நண்பிகளுக்கும் மனதுக்குப் பிடித்த ஆசிரியைகளுக்கும் நீர்கொழும்பிலிருந்த மாமாவுக்கும் தீபாவளி வாழ்த்து அனுப்புவதிலும் கொஞ்சக்காலம் ஆர்வமிருந்தது.

எங்கள் வீட்டில் தீபாவளிக்கு அதிக முக்கியத்துவம் இல்லையென்றாலும், அண்ணனுக்கும் தம்பிகளுக்கும் புலிப்டம் போட்ட 'வட்டப்பெட்டி' வெடி வாங்கித் தருவதில் அப்பா தவறியதில்லை. அப்பாவின் சயிக்கிளில் ஏறிச்சென்று மருதனார்மடம் சந்தையில் வெடிப்பெட்டிகள், பூந்திரிகள் வாங்கிக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள்...

எனக்கு ஒருபோதும் வெடிச்சத்தங்களில் ஆர்வம் இருந்ததில்லை. வீட்டுக்குள்ளே அமைதியாக இருந்துவிடுவதாகதான் தீபாவளி நாள் என்று இருந்தது.

அன்று வெடிக்கடைகளையும் சந்தையையும் தவிர மற்ற கடைகள் எல்லாம் பூட்டிக்கிடக்கும்.

இந்திய வானொலியில் நடைபெறும் சிறப்புப் பட்டிமன்றம், சிறப்புக் கவியரங்கம் என்பவற்றை ஒலிக்கவிட்டு, கண்களை மூடியபடி அவற்றை கேட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பார் அப்பா. அப்பாவுடன் சேர்ந்து அவற்றை நாங்களும் கேட்போம்.

கதிர்காமக் கந்தனின் வீபூதி கமகமக்க, செருப்புச்சத்தம் சடக்சடக்க நெய்மணக்கும் சர்க்கரைப் பொங்கலை பெரியப்பா கொண்டுவந்து தந்துவிட்டுப் போவார்.

கோயில்களில் தீபாவளி சிறப்புப் பூசைகள் நடக்கும். அம்மா எங்களுக்காக வடையும் புக்கையும் செய்து வைத்துவிட்டு, பிள்ளையார் கோயில், கந்தசுவாமியார் கோயில், சிவகாமி அம்மன் கோயில், காரைக்கால் சிவன்கோயில் என்று போய்விட்டு வீபூதி சந்தனத்துடன் வருவார்.

<p>அந்த தீபாவளி நாளில்…</p>

தீபாவளி வெடிச்சத்தத்துக்கு அஞ்சி வளர்ப்புநாய்கள் எல்லாம் மூலைகளுக்குள் முடங்கிக்கிடக்கும்.

அது ஒரு காலம்.. ஆனால் 1987 தீபாவளியைதான் வாழ்க்கையில் எவராலும் மறக்கமுடியாது. அந்தத் தீபாவளி ஒக்ரோபர் 21ஆம் நாளில் வந்தது.

இந்திய அமைதிப்படை வந்திறங்கியதை தொடர்ந்து சனங்களிடையே அமைதி நிலவியது.

'எங்களைப் பாதுகாக்கத்தான் அவையள் இருக்கினமே... இனியென்ன..?' என்ற நினைப்பில் சந்தோசம் கொண்டாடிக்கொண்டிருந்தபோதுதான், சிலநாட்களுக்கு முன் இந்திய அமைதிப்படை சாரம் கட்டிய பெடியளுக்கெதிராக பெரும்போரை ஆரம்பித்திருந்தது.

போர் என்னவோ புலிகளுக்கு எதிரானதென்று இந்திய வானொலி சொல்லிக்கொண்டிருந்தாலும், சனங்கள்தான் பெரியளவில் செத்துக்கொண்டும் காயப்பட்டுக்கொண்டுமிருப்பதாக கதை பரவிக்கொண்டிருந்தது.

முன்னதாக இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் வெளியாகிக்கொண்டிருந்த ஈழமுரசு, முரசொலி பத்திரிகை நிறுவனங்களையும், நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் குண்டுவைத்து அழித்துவிட்டிருந்ததால் பெரும்பாலும் செய்திகள் வாய்வழியாகவே உலாவத் தொடங்கியிருந்தன. 

சனங்களை பாதுகாக்கவென்று வந்த இந்திய அமைதிப்படை அதே சனங்களை இலங்கை இராணுவத்தைவிடவும் மோசமாக ஏன் தாக்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் பலர் தவித்தனர்.

வந்த புதிதில் சனங்கள் வெயிலில் நடந்துபோகும் வழியில், முகாம் வாசலில் நின்று ‘யூஸ்’ கொடுத்த தலைப்பாகைகளின் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருந்த கோரப்பசியை சனங்கள் பலர் அப்போது புரிந்திருக்கவில்லை. அமைதிப்படையினரை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

தலைப்பாகையும் நீண்டதாடியும் நீட்டிய துவக்குமாக கண்ட இந்திய அமைதிப்படையினர் பலரின் தோற்றம் இப்போது எல்லாச்சனங்களையும் பீதியடையச் செய்தது.

எங்கள் வீடு றோட்டுக்கரையில் இருந்ததால் பகலில் வீட்டிலிருக்கும் நாங்கள், இரவில் எங்கள் வீட்டிலிருந்து உட்புறமாக உள்ள உறவினர் வீட்டிற்கு போய்விடுவோம்...

அங்கு நான்கைந்து குடும்பங்களைச் சேர்ந்த எல்லோரும் ஒன்றாக தங்குவோம்... இரவுநேரச் ‘செல்’ அடி வயிற்றைக் கலக்கும். சாவு ‘செல்’ வடிவில் அடிக்கடி தலையைக்கடந்து போகும்...

உறவினர் வீட்டு அடுப்படிக்குள் அடுப்பின்கீழ் விறகுகள் மற்றும் தட்டுமுட்டுச் சாமான்கள் வைக்கும் பகுதியை (அடுப்புப்புகடு) துப்பரவாக்கிவிட்டு, அதன்கீழ்தான் எம்மிற் சிலர் படுப்போம்.

தலையில் 'செல்' பட்டால் செத்துவிடலாம். பிரச்சினையில்லை. கால்களில் 'செல்' பட்டு கால்களை இழந்தால் உயிர்வாழக் கஸ்டம் என்பது அப்போதைய எங்கள் எண்ணமாக இருந்தது. அதற்காகவே, கால்களை உள்ளே வைத்துக்கொண்டு, தலை வெளியே தெரியப் படுத்திருப்போம். எக்கணத்திலும் சாவதற்கு எங்கள் வாழ்க்கை எப்போதும் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தச் ‘செல்’ அடிக்குள்கூட பகிடிகளும் சிரிப்புமாகத்தான் இரவுகள் கழிந்தன. காதுகேட்காத அன்னம்மாக்காவின் கதைகளை கேட்டு வயிறுவெடிக்க சிரிப்போம்.

'ஒழுங்கையால போற ஆமி பொம்பிளையள் இருக்கினமெண்டு வீட்டுக்கை வரப்போறான்...சிரிக்காதேங்கோ...' என்று அம்மாமார் சொல்வார்கள்

தீபாவளிக்கு முதல்நாள் இரவு இந்திய அமைதிப்படையின் கடுமையான 'செல்'களால் ஊரெல்லாம் அதிர்ந்துகொண்டிருந்தன. அவ்வளவு நாட்களையும்விட அன்றைய நாள் வித்தியாசமாக இருந்தது.

தீபாவளி நாள் விடிந்தது. வழக்கம்போல காலையில் வீட்டுக்குவந்து எங்கள் கடமைகளை முடித்தோம். அம்மா அவசரமாக சோறும் ஏதோ கறியும் சமைத்து முடித்தா.

யாழ்ப்பாண நகரப்பக்கமாக பெருஞ்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

'இந்தமுறை தீபாவளியை நிறைய வெடிகொளுத்தி இந்தியன் ஆமி இஞ்சை கொண்டாடுறாங்கள்...' தெருவில் நடந்துபோன ஒருவர் சொல்லிக்கொண்டு போனார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

பயத்தில் மதியமே பவளக்கா வீட்டுக்கு நாங்கள் போய்விட்டோம்.

'யாழ்ப்பாணத்தை பிடிக்கிறதுக்கு ஆமி சண்டை பிடிக்கிறானாம்...'

'யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கை புலியள் நிக்கிறாங்களெண்டு சொல்லி... இந்தியனாமி செல்லடிச்சு கன சனமும் டாக்குத்தர்மாரும் செத்துப்போச்சினமாம்...'

'நாங்கள் சனங்கள்... வருத்தத்திலை படுத்துக்கிடக்கிறம்... எங்களைச் சுடாதேங்கோ...எண்டு கும்பிட்ட சனத்தைக்கூட இரக்கமில்லாம  சுட்டவன்களாம்....செத்தமாதிரிக்கிடந்து தப்பிவந்த ஒராள் சொல்லுது...'

'எட சிங்கள ஆமியிட்ட இருந்து தமிழ்ச்சனத்தை காப்பாத்த வந்தம் எண்டு சொன்னாங்கள்....இப்ப தமிழ்ச்சனத்துக்கே அடிக்கிறாங்கள்..'

'சமாதானத்துக்கெண்டு வரேக்கையே உவளவு ஆயுதத்தையும் கொண்டு வந்தது ஏனெண்டு இப்பதானே விளங்குது.....'

சனங்கள் ஏதோ எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாகிஸ்தானிலை இருந்து பங்களாதேஷை பிரித்தமாதிரி இலங்கையிலிருந்து தமிழர் தாயகத்தை இந்தியா பிரித்துத்தரும் என்று வெகுளித்தனமாக நம்பிய விசுவாசிகள் சிலர் சோர்ந்துபோயினர்.

தீபாவளிநாள் வஞ்சகமில்லாமல் வெடிச்சத்தங்களுடனேயே கழிந்தது.

மறுநாளும் வழக்கம்போல நாங்கள் வீட்டுக்கு போனோம். தெருவில் காக்கை குருவிகூட இல்லை. இரவு பன்னிரண்டு மணியானால்கூட அடங்கிப்போகாத எங்கள்தெரு சனங்களற்று வெறிச்சோடிக்கிடந்தது.

'கெதியா எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு வாங்கோ.... பயமாக்கிடக்கு....'

நாங்கள் அப்பதான் முகங்கழுவிவிட்டு நின்றோம். வானத்தில் வந்த   ஹெலிகொப்டர் ஒன்று வித்தியாசமான மணிச்சத்தத்துடன் பலாலிப் பக்கமாகச் சென்றது.

சிறிது நேரத்தில் இரைந்துகொண்டு எமது பகுதியை நோக்கி செல்கள் வரத் துவங்கின. நாங்கள் அடுப்பு புகட்டுக்குள் பதுங்கினோம்.

வீட்டுக்கு பின்பக்கமாக பெண்கள், ஆண்கள் அவலமாகக் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடினோம்.

அங்கே......

கைலேசக்காவின் அழகான சிவந்த நிறமுடைய இரண்டு பிள்ளைகள், றமணனும் றயனியும் செல்லில் இறந்து கிடந்தனர்.

'ஐயோ...விளையாடிக்கொண்டிருந்த என்ரை குஞ்சுகள்.... தீபாவளிக்கு தைச்ச புதுச் சட்டையைகூட போடேல்லையே.....'

கைலேசக்காவின் அந்த அழுகுரல் நெஞ்சத்தை பிறாண்டியது. நாங்களும் அழுதபடியே அடுத்த செல்லுக்கு பயந்து பாதுகாப்புதேடி ஓடினோம்...

10/28/2016 10:33:34 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்