அ.இரவி
வீடு நெடும் தூரம் - தொடர் 12
37. நீதியரசர் சிறி
1984 இளவேனிற்காலம்
தார் வீதி எனக்கு இப்போ எதற்கும் ஆகாது. திடுமென முடக்கில் இராணுவம் நிற்கும். இராணுவத் தொடரணி குறுக்கே வரும். என்னிடம் சுடும் அல்லது வெடிக்கும் கருவிகள் ஏதும் இல்லாவிடினும், அரசியல் புத்தகங்கள் சிலவும் துண்டுப் பிரசுரங்களும் இருந்தன. ஒளித்துப் படுக்கப்போகும் இடங்களில் ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசியாது என் நித்திரை இல்லை.
வாசித்த புத்தகத்தை வைத்துவிட்டு, இன்னொரு புத்தகம் எடுக்கப்போன இடத்தில் எனக்கு ஒரு துண்டு காத்திருந்தது. நடுக்கடலில் வைத்து சிறியின் முகத்தில் குத்தியதற்கான விசாரணை. அதற்கு முகம் கொடுக்க தோழர் ஞானத்தின் அறைக்கு இன்ன நாள், இன்ன நேரம் போக வேண்டும்.
தோழர் ஞானம் அறையில் இல்லை. அறையின் திறப்பு, பூச்சாடியின் கீழ் இருந்தது. அறைக்குள் தோழர் லெனினின் நூல் திரட்டுக்கள், தோழர் மாசேதுங்கின் புதிய ஜனநாயகம், மார்க்சிம் கார்க்கியின் தாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ஜமீலா ஆகிய புத்தகங்கள் இருந்தன. ஜமீலாவைப் புரட்டினேன்.
'ஒரு மனிதன் தன்னிலும், மக்களிலும், சமூகத்திலும் இருக்கக்கூடிய சிறப்பான எல்லாவற்றையும் பற்றி அறியவும் நேசிக்கவும், கவலைப்படவும் செய்வதற்காக இலக்கியம் தனது சிலுவையைத் தியாகத்தோடு எடுத்துச் செல்லவும், வாழ்வின் சிரமங்களுடன் தலையிடவும் வேண்டும். இதையே கலையின் உண்மையான நோக்கமாகக் கருதுகிறேன். சிங்கிஸ் ஜத்மாத்தவ்' என்று முன் பக்கத்தில் இருந்தது.
இதை வாசித்து பக்கங்களைப் புரட்டுகிற நேரத்தில் சிறி வந்தான். எனக்கும் சிறிக்குமான பிரச்சினையின் விசாரிப்பில் சிறி இருக்க வேண்டும். அது நல்லது. குமாரும் இருந்தால் மிக நல்லது. விசாரிக்கப் போகிறவர் யார்? தோழர் விசு இங்கில்லை. தோழர் சண் தீவுக்கரையில் ஒதுங்கிக் கிடக்கிறார். தோழர் இராகவனாகத்தான் இருக்க வேண்டும். அவரிடம்தான் இப்பொழுது அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. தேவன் வெற்றிகரமாக இராகவனைக் கடத்திவிட்டிருந்தான். இராகவன் பாதுகாப்புக் கருதி தன் பாதங்களை பூனை அடியாக வைத்து நகர்கிறான். நகர்ந்து இங்குவர சில மணி நேரங்கள் ஆகலாம். மற்றும் நேரத்திற்கு நிற்பதும் ஒரு விதத்தில் ஆபத்து.
'தொடங்குவோமா?' என்று திடுமென சிறி கேட்டான். எதைத் தொடங்குவது? என்ன இது? எனக்கும் சிறிக்குமான சதுரங்க விளையாட்டா? அல்லது கார்ட்ஸ் அடியா? எதைத் தொடங்குவது? என்ன கேட்கிறான் இவன்? அவனுடன் முகம் கொடுக்காமல் இருந்தேன். இது இவனுக்கும் எனக்கும் இடையிலான கருத்து முரண்பாடு அல்ல. அதுவெனில் கதைக்கலாம். இது செயல் முரண்பாடு.
பிறகும் சிறி கேட்கிறான் 'தொடங்குவமா?' முழி விழித்தபடி 'எதை?' என்றேன். சிறி சொன்னான். 'அண்டைக்கு கடலுக்கை நடந்த பிரச்சினை பற்றி உம்மை விசாரிக்கச் சொல்லி அமைப்பு என்னை அனுப்பியிருக்கு' 'உம்மை' அது எனக்கு உறுத்தலாக இருந்தது. தோழமை எப்பொழுதும், 'நீர்', 'உம்மை' என்று மரியாதை ஒருமையில் அழைக்கிறது. அப்படி அழைத்து அடிக்கிறது. நட்பு எப்பொழுதும் நீ, நான், உன்னை என்று உரிமை ஒருமையில் அழைக்கிறது. அழைத்து அணைக்கிறது.
'அதெப்படி? உமக்கும் எனக்கும்தான் பிரச்சினை. அதை விசாரிக்க நீர் என்னெண்டு வரலாம்?'
'அதை நீர் போய் அமைப்பிட்டைக் கேளும். தோழர் எனது கடமையை நான் செய்ய வேணும். நீர் ஒத்துழைப்புத் தருவீரா இல்லையா? இல்லையென்றால் சொல்லும்'
உட்கட்சி செயல் முரண்பாடு பற்றி விசாரிக்க, மார்க்ஸோ, ஏங்கெல்ஸோ, லெனினோ, ஸ்ராலினோ, மாசேதுங்கோ யாராவது ஏதாகிலும் சொன்னார்களா? மூளையைப் போட்டுக் குடைந்தேன். நெட்டுருப் போட்ட யாவற்றையும் அலசினேன். ம்கூம் எந்த ஒரு வரியும் சடக்கென வரவில்லை. இது குறித்த 'வெள்ளைப் பயங்கரவாதம்' என்ற சொல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. அதைச் சொன்னது யார்? தோழர் மாசேதுங்கா?
'சொல்லும், உம்முடைய சக தோழருக்கு ஏன் வன்முறையைப் பாவித்தீர்?'
'நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வாறன். குறிப்பிட்ட அந்த நபர் தொடர்ந்து என்னை நக்கலடித்துக் கொண்டு இருந்தார்'
'அமைப்பு விதியின்படி சக ஊழியரை 'தோழர்' என்றுதான் குறிப்பிட வேண்டும். நபர் என்று குறிப்பிடுவது அமைப்பு விதிமுறையை மீறிய முரண்பாடான சொல்'
'தோழமை உணர்வு இல்லாதவர்களை என்னால் தோழர் என்று சொல்ல ஏலாது'
'சரி அப்படி குறித்துக் கொள்கிறேன். சரி, நீர் நக்கல் என்ற சொல்லை அப்போது பாவித்தீர். சரி, சக தோழர் நக்கலடித்தார் என்று எதை வைத்துச் சொல்வீர்?'
'உன்ர மண்டையை' என்று மனசு சொல்லிற்று. 'என் மனசு நோகும்படியாக கேலி, கிண்டலுடன் அந்த நபர் கதைத்தார். அதனால்தான் நான் அதை நக்கல் எண்டன்' என்று வாய் சொல்லிற்று.
'மனசு நோகும்படியாக அப்படி என்னதான் நடந்தது?'
ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினேன்.
'சரி அதற்கு வன்முறையைப் பாவிக்கலாமா?'
வன்முறையைப் பாவித்தது போதாது என்றும் மனசு சொல்லிற்று. மூஞ்சையிலை குத்து விழுந்திருக்க வேண்டும். இரத்தம் கண்டிருக்க வேண்டும். அந்த நாக்கு இனி நக்கலை உரைக்காமல், நக்கல் தொங்கின அந்த நாக்கை வெட்டி எறிந்திருக்க வேண்டும்.
'அந்த வன்முறையை நோக்கி என்னை நகர்த்திய விதத்தை அமைப்பு விளங்க வேண்டும். அந்த நபரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.'
'நீர் 'கொம்பிளையின்ற்' குடுத்தால் அந்தத் தோழரையும் அமைப்பு விசாரித்திருக்கும்'
'...............'
'இப்ப சொல்லும். அந்த வன்முறையை நீர் பாவித்தது சரியென்று நினைக்கிறீரா?'
'போதாது என்று நினைக்கிறன்'
எழுதிக் கொண்டிருந்த சிறி நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்தான். கண்ணின் கோபம் அவன் நெற்றிப்பொட்டில் சுட்டிருக்கும். வன்முறையை இந்த அறைக்குள் நான் பிரயோகிக்கலாம் என்று அவன் நினைத்தானோ என்னவோ?
'விசாரணை முடிந்தது. நான் இந்த அறிக்கையை அமைப்பிட்டைக் குடுக்கிறன்' என்று எழுந்தான்.
இன்னமும் கொஞ்சமேனும் ஆச்சரியம் என்னை விட்டு அகலவில்லை. பிரச்சினை எனக்கும் சிறிக்கும். அமைப்பு சிறியையே என்னை விசாரிக்க அனுப்புகிறது. இது என்ன அமைப்பு? இதுவா ஜனநாயகம்? மற்றைய இயக்கத்தவர்களை தனிநபர் பயங்கரவாதிகள், அராஜகவாதிகள் என்று அழைக்கிறார்களே! இது அராஜகம் இல்லையா? கேட்டால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பார்களோ?
தோழர் விசு இங்கிருந்திருக்க வேண்டும். வரட்டுத்தனம் ஏதும் இல்லாத, களத்திற்கும், காலத்திற்கும் ஏற்ற மார்க்சீயம் பேசுகிறவர் அவர். செயலும் அதனுடன் சேரும். தமிழீழம் ஏன் வேணும்? எப்படி அதை அடையலாம்?
அளவெட்டியிலிருந்து காங்கேசந்துறைபோய் தோழர் விசுவையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை வீதியால் கீரிமலை போனேன். இரண்டு ரூபாவுக்கு கச்சான் கடலை வாங்கிக் கொண்டு சேந்தாங்குளம் கடற்கரை வரை நடந்து மணலில் குந்தினோம். பொழுது பட்ட நேரத்திற்கு மீன் பிடிக்க வள்ளங்கள் புறப்பட்டன. தேவாலயத்திலிருந்த மாதாவின் சுருவம் கையை உயர்த்தி செம்படவர்களை வழியனுப்பி வைத்தது. தோழர் விசு சொன்னார்' 'அங்குலம் அங்குலமாப் போனாலும் ஆழமாக் காலை ஊண்டிக் கொண்டு போவம்....'
39. வெய்யிலோ புழுங்கும்
1984- இளவேனில் காலம்
வெய்யிலினால் என்னைச் சுட்டெரிக்க முடியவில்லை. மத்தியானம் என்றாலும் சாடையான குளிர் பரவிக் கிடந்தது. இன்று ஜான்மாஸ்ரரைச் சந்தித்த இடம் வேறு. கேதீஸ் அழைத்துப் போனான். ஜான் மாஸ்ரரே காத்து நின்றார். 'வாங்கோ' என்று எழும்பி என் கையைப் பிடித்தார். அவருடன் வேறு மூன்று பேர் இருந்தனர்.
'வேறை எப்பிடி. எப்பிடி இருக்கிறீர்கள்? உங்களைச் சந்திக்க கொஞ்ச நாளாகிப் போச்சு. வேலைகள் கொஞ்சம் கூட. அன்றைக்கு செழியன் என்ன சொன்னார்?' என்று கேட்டார்.
'அவர் திருப்தியிலை போனார். அவருடைய மனம் பூரிச்சுக் கிடந்ததை நான் உணர்ந்தேன்.' என்றேன். 'அப்படியா?' என்று முகம் மலரச் சிரித்தார் ஜான் மாஸ்ரர். பேச்சு, விக்கி உடனேயே உள்ளே இறங்கிற்று. 'நான் நேரே விசயத்திற்கு வாறன்' என்றார்.
'நாங்கள் ஒரு சஞ்சிகை தொடங்கப் போறம். நாங்கள் என்றால் 'புளொட்' என்று நீங்கள் நினைப்பீங்கள். அப்பிடி இல்லை. புளொட் அதுக்கு நிதி உதவி செய்யும். அதுதான் உண்மை. ஆனால் இந்த சஞ்சிகை புளொட்டின்ரை பிரச்சாரத்துக்காக நடத்தப் போறதில்லை. தமிழ்த் தேசிய விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கக் கூடியதாக, தரமான இலக்கியம் வெளிவருவதற்கான தளமாக, இதைப் பயன்படுத்தலாம் என்றுதான் இதை யோசிக்கிறம். அரசியல் தளத்திலும், இராணுவத் தளத்திலும் வேலை செய்கிற அதே நேரம், கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்திலும் நாங்கள் ஆழமாகக் கால் வைக்க வேண்டும். மக்களிடம் வளமான சிந்தனைகளை உருவாக்குவது கலை இலக்கியங்கள்தான். மாதம் ஒருக்காலாவது அதற்கான சஞ்சிகை வருவது அவசியம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'
'உங்களுடைய கருத்து எதிலும் சிறு முரண்பாடு கூடக் கிடையாது' என்றேன்.
'நல்லது. நேரை விசயத்திற்கு வந்திடலாம். அந்தச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக நீங்கள் இருப்பதற்கு உங்களுக்கு என்ன தடை இருக்க முடியும்? 'புதுசு' சஞ்சிகை நடாத்துகிற அனுபவம் இருக்கு. நீங்கள் வேறை அமைப்பைச் சேர்ந்தவர் என்று யோசிக்கலாம். திரும்பச் சொல்லுறன். புளொட் இதற்கு நிதி உதவி அளிக்கிறதே ஒழிய இதன் கருத்துகளிலேயோ, வெளியீட்டிலேயோ புளொட் எந்த விதத்திலும் தலையிடாது. அமைப்புச் சாராது, அமைப்புக்கு அப்பால் பரந்து விரிந்து செல்கிற தளம்தான் இது. செழியனும் நல்ல கவிஞர். அவரையும் கூட இதிலை இணைத்துக் கொள்ளலாம். இது புளொட்டின்ரை சஞ்சிகை என்று நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. நீங்கள் யோசித்துச் சொல்லுங்கோ.'
'என்னாலை இதைப் புரிய முடியுது. ஆனால் என்னுடைய அமைப்போடை இதைப்பற்றிக் கதைக்க வேணும். பிறகுதான் என்ரை முடிவைச் சொல்லலாம். தனிப்பட்ட முறையிலை என்னைக் கேட்டால் இது நல்ல யோசினை எண்டுதான் சொல்லுவன். இப்படி ஒரு நல்ல யோசினை எங்கன்ரை அமைப்பிலை இருந்தோ, வேறை அமைப்பில இருந்தோ எழாமல் உங்களிட்டை இருந்து வந்திருக்கு. என்னுடைய சந்தோசத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். எனக்கென்னவோ நாங்கள் நீண்ட தூரம் நடக்க வேணும்போலை தெரியேல்லை. நல்ல சக்திகள் கைகோர்த்துக் கொண்டால், வலுகெதியிலை எங்கன்ரை வீடு வந்திடும். நல்ல சந்தோசமாயிருக்கு உங்களைச் சந்தித்ததிலை.'
சின்னப் புன்னகையுடன் மெல்ல மெல்லக் கண் இமைத்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜான் மாஸ்ரர். இப்பொழுது என்னைச் சூழ மகிழ்வுகள் மின்னிக் கொண்டிருந்தன. என்னுள் ஒரு திருப்தி நிலவியதைக் கண்டேன். ஆயிரம் சிங்கள இராணுவம் என்னைச் சூழ்ந்தால்தான் என்ன? என்னை அவற்றால் என்ன செய்து விடமுடியும்? இறப்பின் வருகை அடிக்கடி இருக்கட்டும். அதனால் என்ன? செய்கின்ற காரியம் நல்லன நோக்கி நகர்ந்தால் போதும். இப்போது நான். என் பிறகு வேறுயாரோ ஒருவர் என் காரியத்தைக் தன்கையில் எடுப்பர்.
எனக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது மனது. செழியன், ஜான் மாஸ்ரர், கேதீஸ், சத்தியமூர்த்தி, சிவரஞ்சித் என எனக்குத் தெரிந்த வேறு வேறு அமைப்புக்களில் இருப்போர் எவ்வளவு சத்தியத்துடன் இயங்குகின்றனர். எவ்வளவு நேர்மைத் திறத்துடன் வழி நடக்கின்றனர். கடும் உழைப்பு, உன்னதத்தியாகம் இவையே இவர்களை ஆள்கின்றன. இப்படி இன்னும் எத்தனை ஆயிரம்பேர்! நம்புகின்றேன். நம் வீடு வெகு தூரம் இல்லை.
'என்னடாப்பா அவசரமாச் சந்திக்க வேணும் என்று தகவல் அனுப்பியிருந்தாய். என்ன விசயம்?' என்று கேட்டார் தோழர் விசு.
'ஒம் அவசரம் தான்...' என்று சொல்லத் தொடங்கினேன். சகலவற்iயும் கேட்டவாறு நின்றார். சற்று நாட்களுக்கு முன் மழை பெய்ததில் வான்வெளியில் உள்ள தூசுகள் கரைந்து வடிந்து வீழ்ந்திருந்தன. இப்போது மிகச் சுத்தம். அதன் தூய நீலத்தோடு திகழ்ந்தது வான்வெளி.
'சந்தோசமாயிருக்கெடாப்பா. நாங்கள் சரியான திசை வழி போகிறோம் எண்டது தெரியுது. மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் சம்பந்தமான உங்களுடைய அணுகு முறை மெச்சத்தக்கது. இதுவெல்லாம் ஐக்கிய முன்னணிக்கான ஒரு படிமுறை. அதின்ரை இன்னொரு கட்டமாத்தான் இதையும் பாக்கிறன். புளொட் நிதி உதவி செய்யுது. அதாலை என்ன பிரச்சினை வரப்போகுது?
நிதி எங்கை இருந்து வருது எண்டது முக்கியம்தான். இது இன்னொரு போராட்ட சக்தியிட்டை இருந்துதான் வருது. அது பாதகமில்லை. உனக்குத் தெரியும் தானேயெடாப்பா, சீமேந்து பக்றியின்ரை தேர்ட் சைற்றை உடைக்கிற இராணுவ வேலைக்கே புளொட்டோடை கூட்டுச் சேர்ந்தனாங்கள். இது இலக்கியம். கருத்து நிலையிலை உள்ள வேலை. இதிலை என்ன முரண்பாடு வரப்போகுது? ஆசிரியர் குழுவிலை நீ இருக்கிற படியாலை உனக்கு மாற்றாவோ, உன்னை மீறியோ எந்தக் கருத்தும் வந்துவிடப் போவதில்லை. அப்பிடி பாரிய முரண்பாடு வந்தால் நீ விலகிக் கொள்ளலாம்தானே? நீ ஒண்டுக்கும் யோசியாதை. ஓமெண்டு சொல்லு. ஜான் மாஸ்ரர் எப்பிடி இருக்கிறார்? ஆளைக்கண்டு கனகாலம். நான் விசாரிச்சதாச் சொல்லி விடு' தோழர் விசுவின் தாடி மயிர்களுக்குள் இருந்து தெளிவாக, குழப்பம் இல்லாத வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.
'ரீ ஒண்டு குடிக்க வேணும் போலை இருக்கு. என்னிடம் ஒரு சதம் காசில்லையெடாப்பா' என்றார் விசு.
'சுவர்' என்பது அச்சஞ்சிகையின் பெயர். ஒன்றுக்கு நான்கு சைஸ் முப்பத்தியிரண்டு பக்கங்கள் 'சுவரொட்டி' என்று அதில் ஒரு பத்தி, வழமைபோல் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம்.
இதுதான் எனக்கான வேலை. புளுக்கமாக இருந்தது 'இப்படியே எழுதிக் கொண்டே இரு. ஒரு பறவையின் தீராத சிறகடிப்பு அது. எந்நேரமும் வாசி. மீன்குஞ்சுகளின் ஓயாத நீச்சல் தரும் சுகம் அது. சஞ்சிகை நடத்து. அருமையான படைப்புகளை வெளியே கொண்டுவா. உலகத்துக்கு அதனை விரித்துக் காட்டு. என்னவோ எதுவாயினும் எழுத்திலேயே அமிழ்ந்துபோ. ஓய்ந்து போய் ஒருநாளும் இராதே. ஓய்வு தேவையெனின் கண் மூடு. கனவில் மித. கால நதியிலும் நீந்தி நீந்தி காண வேண்டியதைக் காண்...' இப்படிச் சொல்ல ஒருவர் வேண்டும் எனக்கு.
அச்சகம் ஏறுதலும், அச்சுக் கோர்த்தலும், அந்த மைமணமும் சடசடவென்று அச்சியந்திரங்கள் உருள்வதும், பூ விரிந்தாற்போல ஒவ்வொரு 'போர்ம்' வருவதும், ஓர் இதழாக்கி அதை 'கிளிப்' பண்ணுவதும், 'சடாங்' கென்று ஒரு வாள் வந்து அதன் ஓரங்களை நறுக்கிச் சரிப்படுத்துவதும்...
பிறந்த முதல் குழந்தையைத் தூக்குவது போல் ஓர் இதழைக் கையில் எடுத்து, அதன் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி பரவசப்பட்டு, அதன் மணத்தை மூக்கில் வைத்து முகர்ந்து..... யாரினால் இவற்றைப் புரிய முடிகிறது?
என்சொல் கேட்டனர் 'சுவர்' ஆசிரியர் குழுவின் ஏனையோர். 'சுவரி'னுடாக நீண்டபயணம் நான் போவேன் என்றுதான் இருந்தேன். சொல்லத் துக்கம். ஓர் இதழுக்குப் பிறகு ஆசிரியர் குழுவின் ஒருவரைக் காணக்கூட எனக்கு நீண்டநாள் ஆயிற்று.
அச்சம் தரும் இரவுகள் மிக மிக நீண்டு போயிற்று. 'மைச்சான் பொழுதுபட எப்பிடியோ யூனிவேர்சிற்றிக்குள்ளை வந்து சேரு. இரவு அங்கை படுக்கலாம். ஆமி உள்ளுக்கை நுழையாது' என்றான் கேதீஸ்.
பகலிலும் அரசியற் பணியில்லாதவேளை பல்கலைக்கழகத்துள் இருந்தேன். சிற்றுண்டிச் சாலையில் மதியம் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு இருந்தது. இரண்டு ரூபாய்க்கு இரவுணவு உண்ணலாம். இராப் படுக்கைக்கு அரசியற் புதினம் பேசிப்பறைய கேதீஸ் இருந்தான். அவன் தயாரிக்கிற இரவுப்படுக்கைக்கு நுளம்பு வரவில்லை. காற்று வந்தது. பகலில் விரிவுரைச்சத்தம் கேட்கும் இடங்களை இரவுகளில் ஆக்கிரமித்துக் கொண்டது எங்கள் குறட்டைச் சத்தம். கேதீசிடம் கேட்கலாம். கேட்க வேண்டும் 'சுவர் வராதா?'
வெய்யில் புழுங்கிய மதிய நேரம் பல்கலைக்கழக நூலகத்தினுள் புகுந்தேன். மின்விசிறியின் கீழ் இருக்கையில் கண்களில் சாடையான மொய்ப்பு வருகிறது. என்றாலும் கண்களை அகல விரித்தபடி இந்திரா பார்த்தசாரதியின் 'சுதந்திரபூமி' வாசித்தேன்.
சடாரென ஒரு குண்டுவெடிப்பின் சத்தம். நூலகத்தின் கண்ணாடி யன்னல்கள் அதிர்ந்து சிதறின. நிமிர்ந்து பார்த்தன புத்தகத்துள் இருந்த தலைகள். எழுந்து வெளியில் எங்கும் செல்லக்கூடாது. அப்படியே இருந்தேன்.
இரவுப் படுக்கைக்குக் கேதீஸ் வரவில்லை. என்னால் அவன் மாதிரி படுக்கை தயார் செய்ய முடியாது. ஒரு கண் துஞ்ச நுளம்பு விடவில்லை. அன்றிரா மிக மிக அனாதரவாக உணர்ந்தேன்.
காலையில் பல்கலைக்கழகத்தினுள் கதை வந்து விட்டது நாவலர் வீதி தண்டவாளத்தருகில் இரண்டு எரிக்கப்பட்ட உடலங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று கேதீசினுடையது. அருகில் கிடந்த மூக்குக் கண்ணாடியே அதைச் சொல்லிற்று.
அச்சம் தரும் நீண்ட இரவுகள் மீண்டும் தொடர்ந்தன....