Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பூம்புகார் எண்ட கடற்கரைக் கிராமத்திலை..

பூம்புகார் எண்ட கடற்கரைக் கிராமத்திலை..
அ.இரவி

 

வீடு நெடும் தூரம் - தொடர் 15

42. கைவிடப்பட்ட கிராமம் 

1984 முதுவேனிற்காலம்

'தோழர் நாங்கள் தொடங்குவம்' என்றான் பிரான்சிஸ். 'தோழர்' என்ற சொல்லில் துணுக்குற்று பிரான்சிஸைப் பார்த்தேன். அவன் ஓர் இணக்கமான சிரிப்பு வைத்தான். என்னுடன் தோழமை பூண விரும்புகிறான் அவன்.

தென்னந்தோப்பில் பரந்திருந்த புல்தரை கடற்கரை வரை பரவியிருந்தது. கடற்கரையிலும் புல்தரையை இங்குதான் கண்டேன். கைதேர்ந்த ஓவியன் ஒருவனின் கலாபூர்வமான படைப்பு அது. 'காயலும் கயறும்' என்ற மலையாளப் படத்தில் வந்த கிராமமாக பூம்புகார் இருந்தது.

இரவு எங்கும் போக முடியாது. ஊரடங்குச் சட்டம் இருளை ஆண்டு கொண்டிருந்தது. பூம்புகாரை விட்டு வெளியே ஒரு பாதையே இருந்தது. மழைக்காலத்தில் நுளம்புகளைப் போல சிங்கள இராணுவம் ஊர்களை மொய்த்துக் கொண்டு திரிகின்றது. பூம்புகார் ஒரு கைவிடப்பட்ட கிராமம்.

ஸ்ரனி சிவானந்தண்ணர் வீட்டில் சாப்பாடு. மீனில் எல்லாமும் இருந்தன. சுறாமீன் புட்டு, விளைமீன் குழம்பு, அறக்குளாமீன் பொரியல், திருக்கை வறை, கணவாய்ப் பிரட்டல், றால் சொதி, எதை உண்ண? எதை விட?

பிரான்சிஸ், சுறாமீன் புட்டுக்கு றால் சொதி மாத்திரம் விட்டு உண்டான். மீனுடன் பிறந்து, மீனுடன் வளர்ந்து, மீனுடன் நீந்தி மீனுடன் வாழ்பவன் பிரான்சிஸ். அவன் கறுத்த உடலும் கைகளின் இறுக்கமும் அதைச் சொல்லும். கடலை கயிறு கட்டி மத்தால் கடைந்தவர்களுடன் காலம் போரிட்டு வென்றிடல் முடியாது.

நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தேன். 'நல்லாச் சாப்பிடுங்கோ தம்பியவை. திண்டவன் பயில்வான்' என்றார் ஸ்ரனி சிவானந்தண்ணை.

'நீங்கள் எங்களுக்காக உழைக்கிறனியள். நல்லாச் சாப்பிட்டு இந்தா உடம்பை இந்த மாதிரி வைச்சிருக்க வேணும்.....' என்று தன் உடம்பை இறுக்கிக் காட்டினார்.

ஸ்ரனி சிவானந்தண்ணரின் பாடல்கள் ஓய்ந்தன. அவர் முன்னர் இசைக்குழுவில் பாடகனாக இருந்தவர். இராச் சாப்பாட்டின் பிறகு ஒரு மணித்தியாலம் அவருடைய பாடல்கள் கடற்காற்றில் மிதந்து திரிந்தன. பிறகு ஆவேசம் வந்ததுபோல் அவர் சொன்னார்:

'மறவர்படைதான் தமிழ்ப்படை

குலமானம் ஒன்றுதான் அடிப்படை

வெறிகொள் தமிழர் புலிப்படை

அவர் வெல்வர் என்பது வெளிப்படை.....

தம்பியவை புலிப்படை வெல்லும். நீங்கள் வெல்லுவியள். உங்கன்ரை கண்ணிலை அது தெரியுது...

புலி அப்பிடியே இரையைக் கவ்விறத்துக்குக் கூர்ந்து பார்க்கும். அந்தப் பார்வை உங்களிட்டை அப்பிடியே இருக்கு. நீங்கள் அந்த இந்த அரசியல் வகுப்பெண்டு இங்கை வராதையுங்கோ. வந்து வீணா சிங்களவனிட்டை மாட்டுப் படாதையுங்கோ. உங்களுக்கு கனக்க வேலைகள் இருக்கு. உங்களுக்குப் பெடியங்கள் தேவையெண்டால் சொல்லி விடுங்கோ. அனுப்பிவிடுறன். என்ரை மோனை அனுப்பேல்லையே? சரி நான் அலட்டிக் கொண்டிருக்கிறன். நீங்கள் போய்ப் படுங்கோ....'

கடற்கரை ஓரம் இருந்த கொட்டிலில் கயிற்றுக் கட்டில்கள் இரண்டு இருந்தன. கடலுக்குள் நிலா இரண்டு பனை ஏறியிருந்தது.

'அண்ணை பாத்தீங்களே? எங்களையும் புலிகள் எண்டுதான் அவையள் நினைக்கினம். எங்களை எண்டில்லை. இங்கை போராடுறவை எல்லாரும் இவையளுக்குப் புலிகள். முந்தி தந்தை செல்வா. அவரின்ரை சின்னம் வீடு. பிறகு அமிர்தலிங்கம் அவரின்ரை சின்னம் உதயசூரியன். இப்ப போராடுறவை எல்லாரும் புலிகள். எனக்கென்னவோ அண்ணை சனம் எல்லாம் தெளிவா இருக்கு. நாங்கள்தான் அவையளை வீணாப் போட்டு குழப்புறம் போலை. புதிய ஜனநாயகப் புரட்சி, நாம் ஈழவர், இந்தச் சொற்கள் எல்லாம் இவையளுக்குத் தேவையாண்ணை? சிங்களவன் அடிக்கிறான். அவையளுக்கு நாங்கள் திருப்பி அடிக்கவேணும். அவையோடை சேர்ந்து வாழ ஏலாது. எங்களுக்கு ஒரு நாடு வேணும். அந்த நாட்டின்ரை பெயர் தமிழீழம். இவ்வளவும் தான் இவையளுக்கு வேணும்.'

'.....அரசியல் தெரிஞ்ச நாங்கள் இவையளிலும் பார்க்க ஒரு படி மேலை நிக்கிறம் எண்டது உண்மை. அவையளை இன்னும் நாங்கள் மேலை ஏத்திவிட வேணுமே ஒழிய குழப்பக் கூடாது..... எங்கன்ரை கொள்கைகள், புதிய ஜனநாயகப் புரட்சி எண்டதைப் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கிறியள். நாளைக்கு ஈரோஸ் வந்து வகுப்பு எடுக்கும், நாம் ஈழவர் மலையகத் தமிழரையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கிறது தான் தமிழீழம் எண்டு அவையள் சொல்லுவினம். பிறகு அடுத்தநாள் வந்து மலையகத் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் விருப்பம் இல்லாமல் அவர்களுக்கு நாங்கள் தமிழீழத்தைத் திணிக்க முடியாது எண்டு நாங்கள் வகுப்பு எடுப்பம். இது தேவையாண்ணை....?'

அவன் கதைக்கட்டும் என்று நான் பேசாதிருந்தேன். இருட்டுக்குள் பிரான்சிஸின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அவனது ஆதங்கமும் ஆற்றாமையும் தெரிகிறது.

'வாவன், கடற்கரைப் பக்கம் உலாத்துப் போட்டுக் கதைச்சிட்டு வருவம்' என்றேன். அவன் உடனேயே கட்டிலை விட்டுக் குதித்தான்.

நிலவு கடலின்மேல் காலித்துக் கிடந்தது. அலைகள் நிலவினில் தளும்பித் தளும்பி தன் நூறுநூறு கரங்களால் ஊர்ந்து ஊர்ந்து எங்கள் கால்களைத் தொட வந்தன. நல்லன எவையும் தோல்வி அடையக்கூடாது. நான் கால்களை அலைகள் தின்னக் கொடுத்து நின்றேன். மேலே நிலாப்பெண். கீழே அலைக்குஞ்சுகள். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்? வள்ளியிடம் போய் இதைச் சொல்லவேண்டும்.

பிரான்சிஸ் என் குதூகலத்தைக் கண்டு வியந்தான். அவன் ஏறாத கடல் இல்லை. அவன் மீது மேவாத நிலவும் இல்லை. கடலின் குழந்தை அவன். நிலாவின் அண்ணன் அவன்.

'என்னில் உள்ள வெறுமை எல்லாம் நீங்கி சந்தோசமா இருக்கிறன்ரா' என்றேன்.

'தெரியுதண்ணை. பயமில்லாமல் சுதந்திரமா வாழ எங்களுக்கு ஒரு தேசம் வருமண்ணை. நான் நம்பிறன்.'

'நம்பித்தானே தோழர் இதிலை இறங்கிறம்...'

'நீங்கள் நம்பிறியள். உங்களை அவையள் நம்பேல்லையே?'

'என்ன சொல்லுறாய்? எனக்கு விளங்கேல்லை.'

'பயணம்' எண்ட உட்கட்சிப் பத்திரிகை ஒன்றை அங்கத்தவர்களுக்காக அமைப்பு விட்டிருக்குத்தானே?'

'எனக்குத் தெரியாது'

'உண்மையாவோண்ணை?'

'ஓமெடாப்பா எனக்குத் தெரியாது.'

'அதிலை உங்களைப் பற்றித் தாறுமாறா எழுதியிருக்கிறாங்கள். நீங்கள் ஒரு குட்டி பூர்ஷ்வா எண்டும், ஒரு குறுந் தேசியவாதி எண்டும், வெள்ளைப் பயங்கரவாதி எண்டும் இன்னும் என்னென்னவோ எழுதியிருக்கிறாங்கள்....'

'அப்பிடியா? எனக்குத் தெரியாது. அப்பிடி எண்டால் என்னை என்னெண்டு அரசியல் வகுப்புக்கள் வைக்கச் சொல்லி அனுப்பிவினம்?'

'அண்ணை எங்கன்ரை அமைப்பிலை கொஞ்சப் பேர் இருக்கினம். ஒவ்வொருவரையும் அமைப்புக்கு எப்பிடிப் பயன்படுத்துகிறது எண்டுதான் அவையள் யோசிப்பினம். 'பயன்படுத்துறது' எண்ட சொல்லே ஒரு மோசமான சொல் அண்ணை. இது ஒரு விதத்திலை முதலாளித்துவ சிந்தனைதான். அவங்கள் உங்களைக் குட்டி பூர்ஷ்வா எண்டிறாங்கள். இதென்னண்ணை பூர்ஷ்வா, வெள்ளைப் பயங்கரவாதம்? இந்தச் சொற்கள் எல்லாம் எங்களுக்குத் தேவையா? எங்கன்ரை மண்ணிலை இருந்து நாங்கள் முளைக்கவேணும். இவையள் எங்கன்ரை மண்ணிலை இருந்தும் முளைக்கேல்லை. வேற்று மண்ணின்ரை வளத்தையும் உள்வாங்கின மில்லை. சும்மா சொற்களைப் போட்டு ஆக்களை வெருட்டினம்...'

'தோழர் இதை நீ அமைப்புக்குள்ளை கதைக்கலாம் தானே?'

'அண்ணை நான் அமைப்புக்குள்ளை எந்த இடத்திலை நிக்கிறன் எண்டே எனக்குத் தெரியாதண்ணை. இராணுவ வேலைகளுக்கும் கூப்பிடுறாங்கள். ஒரு இடத்திலை அமைப்புக் கட்ட வேணுமெண்டால் அதுக்கும் அனுப்புவாங்கள். எல்லாத்துக்கும் உத்தரவுகள் வரும். உத்தரவுகள் கொண்டு வாறவனிட்டை ஏதும் கதைச்சால் 'எனக்கொண்டும் தெரியாது, நீ சென்றல் கொமிற்றியிலை கதை, எண்டிறான்.'

'அதென்ன இராணுவ வேலைகளுக்குக் கூப்பிடுவாங்கள் எண்டு சொல்லுறாய்? இராணுவத் தாக்குதல் ஒண்டையும் எங்கன்ரை அமைப்புச் செய்யேல்லையே?'

'வெளியிலை சொன்னால் வெட்கம். உங்களோடை இருக்கட்டும். இராணுவ வேலைகள் எண்டிறது உங்கினேக்கை செய்யிற சில்லறைக் கொள்ளைகள்தான். முந்தி கொள்ளையடிக்கிறது பிழை எண்டு கதைச்சம். இப்ப தேவை வருது. அடிக்கிறம். அடிக்கிறது பிழை எண்டு நான் நினைக்கேல்லை. அவசரமான காசுத் தேவைக்கு எங்கை போறது? அரசாங்க அமைப்புகளிலதான் கொள்ளையடிக்கிறம். இந்தக் கொள்ளையடிப்பிலை மக்கள் எந்தவிதமாகவும் பாதிப்படையேல்லை. ஆனால் என்ரை கவலை என்னெண்டால் கொள்ளை அடிக்கிறது பிழை எண்டு போட்டு இப்ப நாங்களும் அதைச் செய்யிறம். இன்னும் என்னென்ன அப்பிடிச் செய்யப்போறமோ தெரியேல்லை. ஆகக்கூடின கவலை என்னெண்டால், மற்ற எல்லா இயக்கங்களும் இராணுவத் தாக்குதல் ஏதோ சிலதையாவது செய்யுது. நாங்கள் என்னண்ணை செய்யிறம்? முதல் தற்காப்பு யுத்தம், தாக்குதல் கட்டம் எண்டு வாய்கிழியக் கதைச்சம். இப்ப இராணுவ வேலை எண்டு கொள்ளையடிச்சுக் கொண்டு திரியிறம்...'

நிலவு, பிரான்சிஸின் முகத்தில் படர்ந்து அவன் கசப்பைக் காட்டியது. நாங்கள் மணலில் அமர்ந்தவாறு இருந்தோம். பிரான்சிஸ் தன் அயலில் இருந்த சிறு கற்களை எல்லாம் கடலில் எறிந்து கற்களை முடித்துவிட்டிருந்தான். இப்பொழுது மணலை ஒரு கையில் எடுத்து மறு கையில் ஊற்றினான். மணல் துகள்கள் கடற்காற்றினால் வாய்க்குள் புகப்பார்த்தது.....

'நிப்பாட்டு' என்றேன்.

'என்ன கதையையோ?' என்றான்.

'இல்லை உந்த மணல் விளையாட்டை'

'அண்ணை உங்களோட இதையெல்லாம் கதைக்க வேணுமெண்டுதான் இண்டையான் நாளை விரும்பினான். இவ்வளவு நாளும் நான் நினைச்சன் அண்ணை நீங்கள் சென்றல் கொமிற்றி மெம்பர் எண்டு. இப்ப கிட்டடியிலைதான் அறிஞ்சன் நீங்கள் ஆதரவாளர் மட்டத்திலைதான் இருக்கிறீங்களாம். அப்பிடிச் சொல்லிட்டு விட்டாலும் பரவாயில்லை. உங்களோடை எந்தத் தொடர்பும் வைத்திருக்கத் தேவையில்லை. அரசியல் வகுப்பு வைக்க மாத்திரம் கூட்டிக்கொண்டு போனால் காணும் எண்டும் சொல்லுறாங்கள்.

'அப்பிடிச் சொல்லுறாங்களா?' என்று கேட்டேன். நெஞ்சு கசந்தது. இடதுபக்க நெஞ்சுக்குள் குத்திக்குத்தி தொண்டை வரை வந்தது ஒரு கேவல். வாய் விட்டுக் கதறினால் அந்தக் கேவல் போகும். ஆனால் கடலும் நிலவும் அதற்குச் சம்மதிக்காது. ஒரு சோகியை எடுத்து சுழட்டி கடலுள் எறிந்தேன்.

'என்னண்ணை பேசாமல் இருக்கிறியள்?' என்றான் பிரான்சிஸ்.

'என்னத்தையெடாப்பா சொல்ல? அன்ரனி குயின் நடிச்ச 'டொக்ரர் ஷிவாக்கோ' படம் பார்த்தனியோ?'

'என்ன படமண்ணை அது?'

'டொக்ரர் ஷிவாக்கோ'

'சிவாஜி நடிச்ச டொக்ரர் சிவா படம் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறன்.'

'அது நல்லதெடாப்பா. நீ யதார்த்தமா இருக்கிறாய். யதார்த்தமா சிந்திக்கிறாய். நாங்கள் தேவையில்லாததை பார்த்து, தேவையில்லாததைச் சிந்திச்சு, மனம் வெதும்பிறம்...'

'அப்பிடிச் சொல்லாதையுங்கோ அண்ணை. நான் நிறையப் படிக்க முடியேல்லையே எண்டு கவலைப்படுறன் அண்ணை...'

ஏனோ இப்பொழுது அவனின் முகத்தைக் கூர்ந்து பார்க்க வேணும் போலை இருந்தது. சின்னச் சின்னதா தாடி முளைத்திருந்தது. கத்தையாக மீசை. நெற்றியில் அரைவாசியையும் மறைத்து சுருள் மயிர். ஆள் கறுவல் கண்களில் ஒரு காந்தம் இருந்தது.

'என்னண்ணை அப்பிடிப் பாக்கிறீங்கள்?'

'உண்மை மனிதன் எண்ட ஒண்டு உனக்குள்ள ஒளிஞ்சிருக்கு.'

'அதை விடுங்கோண்ணை. உங்களோடை இன்னொரு விசயமும் கதைக்க வேணும் எண்டு யோசிச்சனான். எங்கன்ரை அமைப்பு இப்ப கூலி விவசாயிகளைத் தேடிப் போய்க் கொண்டிருக்கு. அது தெரியுமோ அண்ணை?'

'ஓமோம் தெரியும்'

'ஏனண்ணை அப்பிடிப் போக வேணும்? தேசிய விடுதலைப் போராட்டத்திலை கூலி விவசாயிகளுக்கும் பெரும் பங்கு இருக்கு. அது வேறை விசயம். ஆனால் அவையள் தலைமைச் சக்தி ஆகலாம் எண்டு நினைக்கிறீங்களோ? ஈழத்திலை கூலி விவசாயிகள் எவ்வளவு வீதம் பேர் இருப்பினம்? சரி அந்தக் கூலி விவசாயிகளை ஆருக்கு எதிராக அணிதிரட்டப் போறம்? சின்னச் சின்னத் தோட்டம், வயல் செய்யிறாக்களுக்கு எதிராக. அந்தத் தோட்டக்காரரும் வயல்காரரும், ஈழம் கேட்டுப் போராடத் தயாரா இருக்கினம். அப்ப என்னண்ணை எங்கையோ இடிக்குதே? என்னெண்டால் அண்ணை, சீனாவிலை மாவோ கூலி விவசாயிகளை அணி திரட்டினார் எல்லோ? அதைப் பார்த்திட்டு இவையளும் தங்களுக்குத் தாங்களே சூடு போடினம். அங்கை கோடிக்கணக்கிலை கூலி விவசாயிகள் இருந்தினம். அவையளாலை தலைமை தாங்கவும் முடியும். இஞ்சை அப்பிடியா? ஏதோ கொஞ்சப் புத்தகங்களைக் கரைச்சுக் குடிச்சிட்டு நாங்களும் வேலை செய்யிறம் எண்டதுக்காகச் செய்யினமண்ணை'

'இவ்வளவும் நீ அமைப்போடையெல்லோ கதைக்க வேணும். இவ்வளவு முரண்பாடான கருத்துக்களை வைச்சுக்கொண்டு என்னெண்டு உன்னாலை அமைப்போடை வேலை செய்யக்கூடியதா இருக்கு?'

'எல்லாம் ஒரு நம்பிக்கைதான். உந்த வரட்டுத்தனம் விரைவிலை நீங்கும். நல்ல சக்திகள் முன்னுக்கு வரும். தோழர் விசுவும் வந்திடுவார். இருந்து பாருங்கோண்ணை, ஆகலும் வரட்டுத்தனத்துக்கை இவையள் போனால் அமைப்பு இரண்டா உடையும்'

அதை என் மனது ஏற்கவில்லை. 'அப்பிடி ஒண்டு நடக்கக் கூடாது' என்றேன்.

'அண்ணை எல்லாத்தையும் காலம் தீர்மானிக்குது. காலத்தோடை ஒத்து நாங்கள் ஓட வேணும். இல்லாட்டில் காலம் எங்களைக் கைவிட்டுவிட்டு ஓடிவிடும்....' அவனது அத்தனை வார்த்தைகளையும் கேள்விகளையும் கடல் விழுங்கிக் கொண்டிருந்தது. கண்ணை மூடி கடற்கரை மணலில் சரிந்தேன். பிரான்சிஸ் எழுந்து நடக்கும் அரவம் கேட்டது... என்ன நடக்கப் போகிறது இங்கே?

'பூம்புகார் எண்டு வடிவான கடற்கரைக் கிராமத்திலை....' என்று வள்ளிக்குச் சொல்ல சில சங்கதிகளை ஆயிரம் ஆயிரம் அலைகள் எறிந்து, நிலவைச் சுமந்து கடலன்னை என்னிடம் கொணர்ந்து தந்தாள்.

12/7/2012 1:40:49 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்