Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்

<p>இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்</p>
பா.செயப்பிரகாசம்

 

சாகாத வானம் - பகுதி 4   

தமிழ்நாட்டில் 1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல் வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு முழுதும் மாணவர்கூட்டம் நடத்தி உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கைதாகியவர்களில் கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள். நான் அப்போது இளங்கலை இறுதியாண்டு முடித்ததால், முதுகலை தமிழ் அதே கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தேன். சேரவிடாமல் பாதுகாப்புச் சட்டம் குறுக்கே தடுத்தது. இரண்டு மாதம் கழித்து விடுதலையாகி, பின்பு மிகப் பெரிய தள்ளுமுள்ளு, தடைகளுக்கிடையில் முதுகலை தமிழ் வகுப்பில் சேர்ந்தேன்.

பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது. வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகினர். கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், கன்னியப்பன், இரா.முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர்) போன்றோர் ஏற்றுச் செய்தனர். 

1965 ஆகஸ்டு 15 -ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம். கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாப், ஐ.செயராமன் போன்றவர்களை இழுத்துச் சென்று போலீஸ் தாக்கியது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் இன்குலாப், ஐ.செயராமன், கன்னியப்பன், இரா.முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்) ஆகியோர் நடத்தினார்கள். 'இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (வெடிகுண்டு தயார் செய்வது)' என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். 1967-க்குப் பின்னர் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோதுதான் ஆயுதப் போராட்டக்   கருத்து தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் போன்ற இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுதிட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றதுதான் உண்மை.

வெள்ளையாய் இல்லை எந்தச் சொல்லும் 

கருத்துருவாக்கத்திலும், உருவாக்கப்பட்ட கருத்துக்களை நிலைப்படுத்தலிலும் சொல்லாடல்கள் முக்கியத்துவம் உடையவை. அடக்குமுறை சக்திகள் காலகாலமாய் நம்முன் நடமாடவிட்டிருக்கும் சொல்லாடல்களை எந்தச் சுரணையுமற்று பொதுப்புத்தியில் சுமந்து கொண்டிருக்கிறோம். காவல்துறை என்ற சொல் மக்களைக் காப்பதற்காக என்னும் உள்ளடக்கத்துடன் வெளிப்படுகிறது. ஆதிக்க சக்திகளுக்கு காப்பாய் மக்களை அடக்கிட இயங்கும் ஆயுததாரி காவல்துறை என சமூக அறிவியல் செப்புகிறது. மக்களை ஒடுக்குதற்காக இயங்கும் அரசு என்ற அமைப்பினை   நான்கு பக்கமும் காத்து நிற்கும் ஒரு வன்முறைக் கருவியின் உண்மையான குணம் மறைக்கப்பட்டு, மக்களைக் காப்பதற்காக இயங்குவது என்ற பொய்மை அச்சொல்லில் போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லாடல்களை அம்பலப்படுத்தி அவைகளின் சீழ்பிடித்த புரையோடிய பக்கத்தை பிதுக்கிக் காட்டிய கவிகளில் இன்குலாப் முதலில் வருகிறார்.

                'வெள்ளையாய்த் தோன்றும்

                எந்தச் சொல்லும்

<p>இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்</p>

                வெள்ளையாய் இல்லாததால்

                இல்லை எனது சொல்லும்

                வெள்ளையாய்' 

என்று கருத்தியலில், கருத்துருவாக்கத்தில் மேலாண்மை புரிவோரின் ஆதிக்கச் சொல்லாடலை அம்பலப்படுத்தினார்.

'ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் இருக்கின்றது' என்ற தர்க்க பூர்வ மார்க்சிய உள்ளடக்கம் இங்கு கவிதையாகிறது.

தமிழனுக்கு 'வீரயுகப் பெருமிதம்' மிகுதியும் உண்டு. வில், வாள் ஏந்தி ஆயுதப்போரிட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர் பரம்பரை என்ற பெருமிதம் தமிழரின் தற்கால உளவியலாக மாறியுள்ளது. அகம், புறம் போன்றவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கால வாழ்வியல் முறைகள் என்ற ஆய்வு நோக்கில் கையாளாது, சமகால வாழ்வுக்கும் வழிகாட்டியாகக் கொள்வது என்னும் திசைபிறழ்வுக்கு ஆளாகியுள்ளது தமிழ்ச் சமூகம்.

தமிழன் குணம் யாது எனக் காட்டியவை வீரயுகப் புகழ் பேசிய கவிதைகளோ, கட்டுரைகளோ, சொற்களோ அல்ல. தமிழன் எனப்படும் மனிதனின் இயல்பான குணவாகுகளை, மிகச்சரியாக வெளிப்படுத்தியவை நாட்டுப்புற மக்களின் சொலவடைகள் தாம். சொலவடைகள் என்ற கண்ணாடிகளை ஏந்தி மக்கள் தம் முகம் பார்த்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் கண்ணாடியை மாற்றிப் பிடித்து மற்றவர் முகம் காட்டினார்கள். இவை உண்மை பேசிய மக்கள் கவிதைகள்.

'அரண்மனைக்கு என்ன ஆயிரம் செல்லும்

குடியானவன் என்ன செய்வான்'

ஒற்றைச் சொல்லால் வீசியெறிந்து நடந்தார்கள். மக்களின் இந்த மரபிலிருந்தும் மார்க்ஸீயமெனும் சமூக அறிவியலிலிருந்தும் தனது சிந்தனையை, எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டவர் இன்குலாப்.

அவர் பிம்பங்கள் கடந்து சிந்தனை செய்தார். அந்த இடம்தான் நீர் பெய்து வளர்க்கும் தாவரச் செழிப்பு போல் சுயசிந்தனையை மேல்வளர்ச்சியடைய வைக்கிறது. ஒரு கருத்துருவாக்கம் அல்லது அக்கருத்தினை உருவாக்கிய உருவம் காலப்போக்கில் பிம்பங்களுக்குள் அடங்கிப் போகிற இந்தப் புள்ளியில் சுயசிந்திப்பும் முடங்குகிறது. தலைமைத்துவ வழிபாட்டுக்கும் இது துணை செல்கிறது. கருத்துரு அல்லது கருத்துருவாக்க ஆசான்கள் நம்மூளைகளில் பதிவாகியுள்ளார்கள். வகுப்பறை தாண்டிய கற்கையாய் நம்முன் விரிந்துகிடக்கும் உலகப் பாடப் புத்தகம், கற்றுச்சொல்லிகளைக் கடந்து யதார்த்தத்தை அறியச்செய்திடும் வாழ்வனுபவம், முந்தைய, சமகால ஆசான்களை மீறிய தேடல் போன்றவை சுயசிந்தனைப் பாதைகள்.   

ராச ராசனின் சிலை மலையிலே நனைகிறதாம். இங்கு சிலருக்கு ரத்தமும் சதையும் துடிக்கின்றன. மழையில் நனையும்

                'இராசராச சோழனின் சிலையின் உள்ளே

                நரம்புகள் உண்டா?

                நாளங்கள் உண்டா?

                இதயத்துடிப்பையேனும் கேட்டதுண்டா?'

இராசராசனை மையமாகக் கொண்டு இன்றைய சோழ அரசர்களால் விரிக்கப்பட்ட மாயை கண்டு நொந்து போகிறார். ஆனால் பீட்டர்ஸ் சாலையில் பெய்த மழையால் கண்மணி ராஜம் கோணிப்பைக் கூடாரத்தில் நனைந்து குளிரில் குக்கிப் போனாள்.  

                'மக்களாட்சியின் மகோன்னதம் பேசும்

                மாண்புகள் எல்லாம் மழையில் நனைந்த

                ராஜாராஜனின் சிலைக்காக வருந்தினர்'

சிலைக்காக வருந்தியவர்கள் பல்கலைக்கழகப் பாடகத்திலிருந்து 'இன்குலாப் கவிதைகளை' நீக்கினார்கள்.

அப்போதைய சட்டமன்றத் துரைமார்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுபோய்ப் போட்டுக் கொடுத்தவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். இது தம்மைச் சாடுவதாய் ' தத்தக்கா புத்தக்கா' குதிகுதித்து, இன்றைய சோழ அரசர்கள் பல்கலைக்கழகப் பாடத்திலிருந்து நீக்கினார்கள். 'என்னுடைய இன்குலாப் கவிதைகளுக்கு அன்று சட்டப் பேரவையிலும் மேலவையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தன. முதன்முதலாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று சேர்ந்தது என் கவிதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான்'

அதுபற்றிய இன்குலாப்பின் பதிவும் விமர்சனமும் இராசராசனின் சிலைக்கு மட்டுமல்ல, சுயசிந்தனையற்ற இச்சமூகத்திற்குத் தான்.

'சொல்லுங்கள்,

ராஜத்தின் தந்தைக்கு ராஜம் ஒரு பிரியதர்சினி தானே'

என பிரியதர்சினி இந்திரா காந்தியையும் இராசராசனையும் ஒருசேர கேவலப்படுத்திவிட்டதாய் இன்குலாப் மன்னிப்புக் கோரவேண்டுமென்றனர்.

கிளர்ச்சி செய்யும் கருத்துக்களை விதைத்து சிந்திப்பு விவசாயம் செய்த   சாக்ரடீஸை கிரேக்க அரசு விசாரித்தது. அன்றைய கிரேக்க நீதிமன்றம்   நஞ்சருந்திச் சாகும் மரணதண்டனை விதித்தது. 'நீ தெரிவித்த கருத்து, ஆற்றிய சொற்பொழிவுகள் பிழையானவை என மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்யப்படுவாய் சாக்ரடீஸ்' என நீதிமன்றம் ஒரு 'க்' கன்னா வைத்து முடிவு சொன்னது. நீதிபதிகள் வழங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நண்பர்கள் வலியுறுத்தினர். 'மன்னிப்புக் கேட்டு உயிர் வாழலாம்' என மனைவியும் வற்புறுத்தினார். இந்த மன்றாட்டுகளுக்கு சாக்ரடீஸின் பதில்:

'என்னைப் புதைத்து என் கருத்தை வாழவிடுவதா அல்லது என் கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா என்று கேட்கிறீர்கள், உங்களின் கேள்விக்கு என் பதில் - என்னைப் புதையுங்கள், என் கருத்தை வாழவிடுங்கள்'

மன்னிப்புக் கோரல் என்பது யாது? தான் முன்னிறுத்திய கருத்தைத் திரும்பப் பெறுவது அன்றி அது வேறொன்றும் இல்லை. இன்குலாப் சொன்னார். 'இன்குலாப் கவிதைகள் நூலை பல்கலைப் பாடத்திட்டத்தில் வைத்ததற்காக நான் மகிழ்ச்சியடையவுமில்லை. நீக்கியதற்காக வருத்தப்படவுமில்லை. ஏன் மன்னிப்புக் கோர வேண்டும்'.

தொடரும்..

1/27/2017 1:28:02 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்