Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 1   

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 1   
பா.செயப்பிரகாசம்

 

காலத்தின் கவி

2015, மார்ச், 11- புதனன்று மாலை பெங்களூரில் உறவினர் வீட்டுத் திருமண வரவேற்பு. அடுத்த நாள் காலை திருமணம். வரவேற்பில் கலந்து கொள்கையில் இன்குலாப்பிடமிருந்து ஒரு தொலைபேசி. இன்குலாப் தன் இரண்டாவது மகனுக்கு தனது பெயரை இட்டிருந்தார். இப்போது பேசியது மகன்.

'மாமா, எஸ்.ஆர்.எம். பல்கலை மருத்துவமனையிலிருந்து பேசுகிறேன். அப்பாவுக்கு வலது காலில் புண் வந்திருந்தது. நீரழிவு நோயால் வலது சுண்டுவிரலுக்கு அடுத்திருக்கும் விரலை எடுத்தாகிவிட்டது. எடுத்தாலும் வேதனை குறையவில்லை. புண்ணும் ஆறவில்லை. ஹோமியோ மருந்து கொடுத்தால் சீக்கிரம் குணமாகும் என்று சொல்கிறார்கள். நீங்கள் ஹோமியோ மருத்துவரிடம் சொல்லமுடியுமா?'

ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் என் மைத்துனர். அவருடைய துணைவியார் ஜெகதாவும் ஹோமியோபதி மருத்துவர். கவிஞர் இன்குலாபும் அவர்களை நன்கு அறிவார். வெங்கட்ராமனை தொலைபேசியில் தொடர்பெடுத்து 'இன்குலாப்பை பார்க்க மருத்துவமனைக்கு உடனே போகமுடியுமா' எனக் கேட்டேன்.

'நானும் திருமணத்துக்கு வந்து கொண்டிருக்கிறேன் மாமா. இப்போது பெங்களூரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஜெகதா சென்னையில் இருக்கிறார். அவரை மருந்து எடுத்து வைக்கச் சொல்கிறேன். யாராவது ஒருவர் போய் நேரில் வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்' வெங்கட்ராமன் சொன்னார். மகன் இன்குலாப்பிடம் தகவல் தெரிவித்தேன்.

பழைய சோறு போல் மனசு எந்தப் பிடிமானத்துக்கும் வராமல் உளைந்தது. திருமண வரவேற்பில் முழுமையாய்ப் பங்கேற்க முடியாமல், இன்குலாபின் மகள் ஆமீனாவுடன் பேசினேன். முழங்காலுக்குக் கீழே எடுத்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசிப்பதாகவும் 'இப்போது காலை இழப்பதால் வாழ்க்கை முழுதும் நடமாடிக் கொண்டிருக்கலாம், காலிழப்பு இல்லையென்றல் உயிருப்புக்கு தொடர்ந்து ஆபத்து' என மருத்துவர்கள் தெரிவித்ததாக ஆமீனா சொன்னபோது அந்த நெஞ்சம் வேதனை நீரில் புரளும் பஞ்சாகியிருப்பது உணர முடிந்தது. இல்லையெனில் எதுவும் நிகழலாம் என்பதை ஏண்ணி மகள் ஆமீனாவும் அவள் அண்ணன்களும் கவலைப்படுவது தெரிந்தது. 

'நீ அண்ணன்களுடன் கலந்து ஆலோசித்து தெளிவான முடிவு எடுத்து வைத்திரு. (ஆமினா ஒரு மருத்துவர். ஆங்கில மருத்துவம்) நான் காலையில் புறப்பட்டு மதியம் வந்து விடுவேன்' என்று கூறினேன். விடிகாலையில் பெங்களூரிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் மூன்று மணியளவில் மருத்துவமனையை அடைந்தபோது அவர்கள் முடிவெடுத்திருந்தனர்- காலை நீக்கம் செய்து விடுவதென்று முடிவு செய்தபோதே, அறுவை மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப 'குலோபல்' மருத்துவமனைக்கு மாற்ற முடிவு எடுத்தனர். ‘குலோபல்’ மருத்துவமனையில் சேர்க்க அவர்களுடன் சென்றேன். அடுத்த நாள் பிற்பகல் அறுவைச் சிகிச்சை முடிந்தது. ஆமீனா சொன்னாள் 'வெற்றிகரமாக முடிந்தது மாமா. அப்பா நலமாக இருக்கிறார்'

எதையும் வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசிப் பழக்கப்பட்டவர் இன்குலாப். ஒரு விசயத்தை, பிரச்சினையை 'ஒருக்காலும்' என அவர் பேசிக் கண்டதில்லை. ஈரெட்டாகப் பேசுகிறவர்களுக்கே அந்த 'ஒருக்காலும்' சொல் உரித்தானது. 'இடுப்பொடிஞ்ச கோழிக்கு உரலடியே சொர்க்கம்' என்பது போல் மனசளவில் ஒடிந்து போனவர்கள் அந்த வார்த்தையாடலை விட மாட்டார்கள். ஒருக்காலும் என உச்சரிக்காதவர்- நேர்வழி நடந்தவர் - இன்று வலது முழங்காலுக்குக் கீழ் 'ஒருகால்' எடுபட்டு இருந்தார். இன்குலாப் இருந்தார்.'ஒரு கால்' அவரை விட்டு நீங்கியிருந்தது.                             

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 1   

அவருடைய கவிதைகள் இருந்தன.

அவர் வழிநடத்திய கருத்து இருந்தது.

அவர் நடந்த பாதம் மறைந்திருந்த போதும், பதித்த சுவடுகள் தொடர்கின்றன.

மருத்துவமனையிலிருந்து வீடடைந்த மறுநாள் சென்று கண்டபோது- 'எங்கே போய்விடும் காலம்' எனக் கேள்வி எழுப்பி காலத்தை நடத்திய கவி, நாளை இந்தக் காலத்தினூடாக காலில்லாது நடக்கப் போகிறார் என்பதை, நோயினால் களைத்திருந்தாலும் களைப்புறா மனசு எனக்குத் தெரிவித்தது.                                                       

பேச்சினிடையில் யாழ்ப்பாணம் அருகிலுள்ள 'கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தைப்' பராமரித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் ஒரு இளம் போராளியை நான் நினைவு கூர்ந்தேன்.

கவிஞராக இன்குலாப், எழுத்தாளராக நான், ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி, அரசியலாளராக தொல்.திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மானுடத்தின் தமிழ்க் கூடல்' மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும், விடுதலைப் புலிகளின் 'கலைப் பண்பாட்டுக் கழகம்' பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டது. கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலரான கவிஞர் புதுவை இரத்தினதுரை விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் எங்களை ஆரத்தழுவி வரவேற்றார். இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

நான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தோம். யாழ்நகருக்கு சில கி.மீ. அருகிருந்த கோப்பாய் 'மாவீரர் துயிலும் இல்லத்துக்கு' ஒருநாள் காலை எங்களை அழைத்துச் சென்றார்கள். 1987-ல், 'இந்திய அமைதிப் படை' என்ற பெயரில் (விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் என்ற பெயர் நினைவு வருகிறது) 'இந்திய சாத்தான் படை' தமிழர் பகுதிகளில் நுழைந்தபோது, கேப்டன் மாலதி தலைமையில் பெண்புலிகள் முதல் தாக்குதலைத் தொடங்கிய இடம் கோப்பாய். கேப்டன் மாலதியும் மற்ற பெண் போராளிகளும் வீரமரணம் எய்திய மாறாத வரலாற்றுப் பெருமையை தன்மேல் பதித்துக்கொண்ட மண். நாங்கள் சென்ற காலையில் லேசாய் பொசும்பல் போட்டுக் கொண்டிருந்தது. மிதியடிகளில் ஈரமண் பிசுபிசுப்பு. ஆயிரங்கால் மண்டபம் போல் வரிசையாய் கல்லறைகள். இங்கே போராளிகள் விதைக்கப்பட்டிருந்தார்கள். அறுநூறுக்கும் மேலான கல்லறைகளை ஒரு இளம் போராளி பராமரிப்புச் செய்து கொண்டிருந்தார். களப்போரில் காயமுற்று, நீண்டநாள் நோயுற்றிருந்த ஒருபெண் போராளி முதல்நாள் மரணமடைந்திருந்தார். போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட சமாதி, மலர் தூவி ஈரம் மாறாது இருந்தது. புதை மேட்டை தீத்துப் பலகையால் தட்டி சமன் செய்துகொண்டிருந்தார் அந்த இளம் போராளி. எந்த விடுதலை இலட்சியத்திற்காக இழந்தாரோ அந்த ஒருகால், முடமாக்கப்பட்ட பின்னும் விடுதலை இலட்சியத்தினை ஏந்திச்செல்வேன் என சூளுரைத்து கடமையாற்றும் இளம்போராளியைக் கண்டு உறைந்து நின்றோம். ஒளியைச் சுவாசிப்பதற்காக வளைந்து முண்டி மேல் நோக்கித் தலைநீட்டும் ஒரு கொடியின் பயணத்தை  அந்தப் போராளி நினைவுபடுத்தினார்.

இன்குலாப் அவர்களே! இப்போது நீங்கள் ஞாபகத்தின் அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள். 'ஒருகால்' இல்லாதிருந்த அந்தப் போராளியை நாம் நினைவு கூர்ந்தோம். ஒருகால் இழந்த நிலையில் ஊன்று கோலை கக்கத்தில் இடுக்கி புதைமேட்டைச் சீர்படுத்தியபடி நம்மிடம் உரையாடிய 'இளம் பையன்' நம்மை அசையாதபடி ஆக்கிவிட்டிருந்தார். இளமையானாலும் முதுமையானாலும் செயற்பாட்டாளருக்கு ஊனம் ஒரு பொருட்டில்லை என்று உணர்த்திய முதன்மைப் போராளிக்கு தலை வணங்கினோம்.

'கோப்பாய் இளம்போராளி, உங்களில் வாழுகிறான். இனியும் வாழுவான்' என்று அப்போது குறிப்பிட்டேன்.

1983- ஜூலை, இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி, ஆகஸ்டு, செப்டெம்பர் 'மனஓசை' இதழ்களைக் கொண்டுவந்தோம். செப்டம்பர் இதழில் 'கரையில் இனியும் நாங்கள்.... ' என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள். 

'காற்று ஈழத்தின்

கனலாய் வீசுகிறது.

கரைகளில்

இனியும்

நாங்கள் கைகட்டி நிற்கவோ?'

உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.

'ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்

இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!

ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்

எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!

ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்

இங்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!

ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்

இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க!'

மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என உலகு தழுவும் குரலைப் பெய்தீர்கள். அந்தக் குரலை அடையாளம் கண்டு, கவிதை எழுதிய கரத்தைத் தடவி மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்கள்.

மாநாடு முடிந்து, போரினால் சிதைக்கப்பட்டிருந்த பூமியைப் பார்த்துப் பின்னர் புறப்பாடு நிகழுகையில் கிளிநொச்சி சென்றடைந்தோம். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் சு.ப. தமிழ்ச்செல்வன், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், ஆண்டன் பாலசிங்கம், போராளித் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்தோம். பிரபாகரனுடன் பகல் உணவு கொண்டோம். விடைபெறுகையில் கூட்டாகவும், தனித்தனியாகவும் பிரபாகரனுடன் படங்கள் எடுத்துக் கொண்டோம். தங்களுடன் படம் எடுத்துக் கொள்கையில் பிரபாகரன் சொன்னார் 'வாளும் பேனாவும்'.

விடுதலைப் போருக்குத் தலைமை கொடுத்த போராளி உதிர்த்த வாசகம் அந்தக் காட்சியின், அச்சூழலின் குறியீடாக வெளிவந்தது! 'பேனாவும் வாளும்'- வாசகம் அப்பிரதேசத்தை பிரகாசப்படுத்தியபடி பயணித்ததை நீங்கள் கவனித்ததுண்டா, இன்குலாப். 

யாரல் காணப்பட வேண்டுமோ அவர்களால் காணப்படுவதும்-

எவரால் அங்கீகரிக்கப்படவேண்டுமோ அவர்களால் அங்கீகரிக்கப்படுவதும்-

அவர்தான் இன்குலாப்.

நேற்று நீங்கள் நடந்தீர்கள்

இன்று நீங்கள் நடக்கிறீர்கள்

நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.

***

தொடரும்..

1/6/2017 11:46:28 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்