Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நீங்கள் எனை விட்டு நீள்தூரம்...

நீங்கள் எனை விட்டு நீள்தூரம்...
அ.இரவி

 

வீடு நெடும் தூரம் - தொடர் 17

45. சக்தி 

1984 முதுவேனிற் காலம்

ஒரு துண்டு வந்திருந்தது. உதயன் அதைக்கொண்டு வந்தான். 'தோழர், எமது நூலகத்தில் நீங்கள் எடுத்திருந்த 'ஜமீலா' நூலை உடன் அனுப்பி வைக்கவும். உங்களுக்கு அதை வாசிக்கத் தந்த கால அவகாசத்தில் மேலும் மூன்று நாட்கள் முடிந்து விட்டன என்பதைத் தங்களுக்கு நினைவூட்டுகிறோம் - தோழர் வள்ளி'

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'ஜமீலா' நூலில் ஐம்பத்தொராம் பக்கத்தில் அடையாளமிட்டிருந்தேன். இன்னும் வாசிக்க இருப்பது முப்பத்து மூன்று பக்கங்கள்.

'வண்டித்தடம் பதிந்த மெத்தென்ற பாதை வழியே நாங்கள் ஸ்தெப்பி வெளியைக் கடந்து கொண்டிருந்தோம். தானியாரின் குரல் மென்மேலும் ஓங்கி ஒலித்துப் புதிது புதிதான இசைகளைப் பொழிந்தது. அவை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த இரவு இருக்கிறதே....'

பின்வரும் பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருக்கும்? தானியாருக்கு என்ன நடந்தது? ஜமீலா என்ன ஆனாள்? காற்றில் எழுதப்பட்ட அல்லது ஆற்றில் கரைக்கப்பட்ட வார்த்தைகள் அவை. 'சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை' என்றார் கண்ணதாசன். வாசித்து முடித்துவிடாத பக்கங்களுக்கு என்ன விலை வைத்திருக்கிறாள் வள்ளி?

'அவையள் நெடுந்தீவுக்கு ஒரு பிக்னிக் தானே போட்டு வந்திருக்கினம் எண்டு சொல்லி நக்கலடிக்கிறான் சிறி' என்றான் பிரான்சிஸ். சிறியின் கடைவாயில் சுழித்து நெளிகிற நக்கல் என் கண்ணுள் வந்தது. 'உவங்களை 'தோழர்' எண்டு என்னென்டண்ணை சொல்லலாம்?' என்று மேலும் கறுவினான்.

'அதை விடடாப்பா. என்னோடை வள்ளியும் நாச்சியாரும் வந்தவைதானே? அது அவனுக்குப் பிக்னிக் மாதிரிப் பட்டிருக்காக்கும்..'

'இல்லையண்ணை, அரசியல் வேலைகளை இப்பிடிக் கொச்சைப்படுத்தக் கூடாது.'

என் மனதில் சரிந்து விழுந்திருந்தது சமாதானம். நெடுந்தீவில் அரசியல் வகுப்பை முடித்துவிட்டு வந்திருக்க வேண்டியது தானே? நிலவையும் கடலையும் தேடி ஏன் இருவருமாய் நடந்தோம்? சிறி சொன்னதில் என்ன பிழை காணமுடியும்?

வள்ளியுடன் உடனடியாகப் பேச வேண்டும். அவளையும் பார்த்து எவ்வளவு நாளாயிற்று? தோட்டங்களைக் கடந்து சூத்திரக் கிணறு ஒன்றைத் தாண்டி அவள் வீட்டில் சைக்கிள் வைத்தேன். 'வாங்கோ வாங்கோ கனகாலத்திற்குப் பிறகு...' என்ற வள்ளியின் முகத்தில் மிகுந்த மலர்ச்சி இருந்தது. புத்துணர்ச்சி மிக்க கறுத்தப் பெண்ணை அங்கு கண்டேன்.

'இருங்கோ வாறன்' உள்ளே ஓடி பளிச்சென்று வெளியில் வந்தாள். அப்போதுதான் கவனித்தேன். அவள் முகத்தில் மூக்குத்தி மின்னவில்லை. நெற்றியில் பொட்டும் இடப்படவில்லை. வேதக்காரப் பிள்ளை மாதிரி இருந்தாள்.

அவள் முற்றுமுழுதாக அரசியலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டாள் போலும். 'சரி, தோழர் சொல்லுங்கோ' என்றாள். ஓமோம், முழுதாக ஒப்புக் கொடுத்து விட்டாள்தான்.

'எப்பிடி இருக்கிறீங்கள்?' என்று தொடங்கினேன்.

'பார்த்தால் தெரியேல்லையோ?' என்று உடன் சிரித்தாள்.

'எனக்கு உங்களைத் 'தோழர்' எண்டு கூப்பிட முடியேல்லை. வள்ளி எண்டு கூப்பிடத்தான் விருப்பம்' என்றேன்.

'அது அவரவர் விருப்பம். ஒன்றையும் யாரும் திணிக்க முடியாது' என்றாள்.

நான் 'பழைய' வள்ளியைக் காண்பதற்கு இனிச் சந்தர்ப்பம் இல்லை என்று தெரிந்தது. 'மரங்கொத்திக் கவலை' என்னைக் கொத்திக் குடைந்து என்னுள் வலியை ஏற்படுத்துகிறது.

தேநீர் வந்தது. 'எப்பிடியம்மா இருக்கிறீங்கள்?' என்று இருந்த இடத்திலிருந்து எழும்பி வள்ளியின் தாயாரிடம் கேட்டேன்.

'நல்ல சுகமாத்தான் இருக்கிறன். தம்பியைத்தான் கனகாலமாக் காணேல்லை' என்றார்.

'அவர் இப்ப பெரிய ஆள் எல்லோ?' என்றாள் வள்ளி. எதற்குச் சொல்கிறாள் இதை?

'பயமாயிருக்குத் தம்பி. நெடுகக் கடலிலை இருந்து பீரங்கியாலை அடிக்கிறான் சிங்களவன். போன கிழமையும் பங்கார் அந்த வீட்டிலை விழுந்து வெடிச்சிருக்கு. இஞ்சை இனி இருக்கேலாது தம்பி. நாங்கள் உங்காலை சுண்ணாகப் பக்கமா வெளிக்கிடப் போறம். இவர் வீடு பார்த்துத் திரியிறார்...'

யாவற்றுக்கும் 'ஓமோம்' என்றேன். கடலிலிருந்து அரை மைலுக்கப்பால் உள்ள வீடு வள்ளியினுடையது. அந்த இடத்திற்கும் கடலில் இருந்து பீரங்கியால் அச்சுறுத்தல் வருகின்றது. ஊர் மனைக்குள் சிங்கள இராணுவம் புக அஞ்சுவதால் இப்படி நிகழ்கிறது போலும்.

'நீங்கள் இருந்து கதையுங்கோ தம்பி. நான் சமைக்க வேணும். தம்பி இருந்து சாப்பிட்டுத்தான் போகவேணும்' என்றார். 'ஓமோம்'

'உங்கன்ரை 'சக்தி' சஞ்சிகை பார்த்தன். நல்லாத்தான் வந்திருக்கு. அடுத்த இதழ் எப்ப?' என்று கேட்டேன்.

'நாங்கள் ஆயத்தமா இருக்கிறம். ஒரு 'ஆர்ட்டிக்கிளும்' வருதில்லை. எல்லாப் பக்கங்களையும் நாங்களே எழுதி நிரப்புறதும் சரியில்லை. நீங்கள் ஏதும் எழுதித் தரலாமே?' என்றாள் வள்ளி.

'அய்யோ என்னை விடுங்கோ....கட்டுரை ஏதும் எழுதுற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. மற்றது மனமும் எனக்கு இப்ப சோர்வா இருக்கு.'

'ஏன் தோழர் என்ன பிரச்சினை?'

'பிரச்சினை எண்டு ஒண்டும் இல்லை. அமைப்பு என்னை ஒதுக்குதோ அல்லாட்டில் நான் தான் ஒதுங்கிறனோ தெரியேல்லை. இப்ப அரசியல் வகுப்பு எடுக்கவும் எனக்கு அழைப்பு வாறதில்லை. அமைப்பு என்னைக் கைவிட்டிட்டுது எண்டு நினைக்கிறன். ஆனால் ஆர்மி என்னைக் கைவிடுறதா இல்லை. அடிக்கடி வீட்டை வந்து தேடுறாங்கள்....'

வள்ளி அனுதாபமாக ஒரு சிரிப்புத் தந்தாள். நெஞ்சு நோவை அது தடவிவிட்டது. 'நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது தோழர். எங்களை எல்லாம் அமைப்புக்குள்ளை சேர்த்து விட்டதும் அரசியல் வகுப்பு எடுக்க என்னைப் பழக்கிவிட்டதும் நீங்கள்தான். எனக்கு அமைப்புக்குள்ளை முக்கிய பொறுப்புக்கள் தரீனம் எண்டால் அதுக்குக் காரணம் நீங்கள்தான். அமைப்பை விட்டு நீங்கள் ஒதுங்கக் கூடாது தோழர்'

'சரி நான் ஒதுங்கேல்லை. ஒதுக்கிறாங்களே அதுக்கு நான் என்ன செய்ய?'

'நீங்கள் அரசியல் வகுப்புகளுக்கு உங்களை கூப்பிடேல்லை எண்டதைச் சொல்றீங்களா? இப்ப அமைப்பு அரசியல் வகுப்புகளை வைக்கிறேல்லைத் தோழர். கட்டப்பட்ட அமைப்பை இறுக்கமாகப் பேணுறதும், இராணுவக் கட்டமைப்பை உருவாக்கிறதும் அனைத்துத் தோழர்களும் அரசியலைக் கற்றுத் தேர்வதும் தான் முக்கியம் என்று அமைப்பு கருதுது. எவராலும் ஊடுருவ முடியாத ஒரு வலைப்பின்னல் கட்டுப்படுது. வேறு எந்த இயக்கத்தாலும் குறிப்பா புலிகளாலை எங்கன்ரை அமைப்புக்குள்ளை ஊடுருவ முடியாதபடி மிக இறுக்கமான அமைப்பை வைச்சிருக்கினம். அதாலை அரசியல் வகுப்புகளிலை இப்ப அமைப்பு மினைக் கெடுறேல்லை.'

'உதையெல்லாம் கேட்க உண்மையிலேயே சந்தோசமா இருக்கு. ஆனால் அரசியல் வேலை செய்யாமல் அமைப்பு கட்டாமல் அடுத்த கட்டத்துக்கு எப்பிடி நகர்றது?'

'அரசியல் வேலை செய்யேல்லை எண்டு ஆர் சொன்னது? நாங்கள் இப்ப களத்திலை இறங்கியிருக்கிறம். மக்களோட மக்களாப் போய் அவர்களின்ரை துன்ப துயரங்களிலை பங்கேற்கிறம். மண்டாண் எண்ட கிராமத்திலை வறிய கூலி விவசாயிகளின்ரை கூலி உயர்வுப் போராட்டத்திலை நாங்கள்தான் முன்னணிப் படையா நிக்கிறம். அங்கை நிலப்பிரபுகளுக்கு ஆதரவா 'ரெலோ' நிக்குது. வறிய கூலி விவசாயிகளைக் கொண்டுபோய் அடிக்கிறதும் சித்திரவதை செய்யிறதுமா அத்தனை அட்டூழியங்களும் 'ரெலோ' செய்யுது. ஆனால் வறிய கூலி விவசாயிகள் தளரேல்லை. வலு உறுதியா நிலப் பிரபுகளுக்கு எதிராப் போராடுறாங்கள். அவையளுக்கைதான் நாங்கள் இப்ப அமைப்பு கட்டுறம். அவையளுக்கு நெஞ்சுரத்தையும் வலிமையும் குடுக்கிறது நாங்கள் தான்...'

வள்ளியிடம் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தேன் நான். அம்மாள் கோயில் திருவிழாவிலை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் இப்படியொரு பிரசங்கத்தை நிகழ்த்தினார். 'எனவே அம்மாள் உங்களுககு சகல சௌபாக்கியங்களையும் நெஞ்சுரத்தையும் வலிமையையும் தருவாள்...'

தளர்ந்து கொண்டு நான் போகிறேன். வள்ளியின் கன்னத்தில் வியர்வை ஒழுகியது. குளிர்மையான அந்த வீட்டில் வியர்வை ஒழுகச் சந்தர்ப்பம் இல்லை. வள்ளி வெப்பமுறுகிறாள். அவள் தின்றது செமிக்கவில்லை. வள்ளி கையை எறிந்து நெட்டி முறித்தாள்.

வள்ளியின் 'ஒழுக்கக்கோவை'க்கும் இப்பொழுது அவள் பேசும் வார்த்தைகளுக்கும் நான் சம்பந்தம் தேடிக் கொண்டிருந்தேன். மூக்குத்தி மின்னிய முகம், திலகம் சுடர்ந்த நெற்றி, 'பீடிக்கள்ளர்' என்ற படிமம், யாவும் என் நெஞ்சில் அலைமோதிற்று. என்றாலும் நான் பின்வருமாறு பேசலாயினேன்.

'வள்ளி உங்கள் அளவு எனக்கு அரசியல் தெரியாட்டிலும் தெரிஞ்சதை வைச்சு என்ரை மனசிலை பட்டதை நான் சொல்லலாம் எண்டு நினைக்கிறன்' என்று தொடர்ந்தேன்.

'நக்கலடிக்காதையுங்கோ. நீங்கள்தான் எனக்கு அரசியல் சொல்லித் தந்தனீங்கள். இப்ப நான் கொஞ்சம் அரசியல் கதைக்கிறன் எண்ட உடனை உங்களுக்குப் பொறுக்குதில்லை. இதைத்தான் ஆணாதிக்கம் எண்டு சொல்லுறது' என்று படபடத்துக் கோபித்தாள் வள்ளி.

'இல்லை வள்ளி, நான் நக்கலடிக்கேல்லை. உண்மையைத்தான் சொல்லுறன். நீங்கள் களத்திலை நிக்கிறீங்கள்... இஞ்சை பாருங்கோ நான் தாடியையும் வளர்த்துக் கொண்டு பரதேசியாத் திரியிறன். சரி அதை விடுங்கோ. மாசேதுங் 'முரண்பாடுகள்' பற்றி நல்லதொரு கருத்துச் சொன்னவர். பிரதான முரண்பாடு, பகை முரண்பாடு நேச முரண்பாடு, சிறுசிறு முரண்பாடுகள், அரசியல் முரண்பாடு என்று எல்லா முரண்பாடுகளையும் வகைப்படுத்தி விளக்கியிருந்தார்.

இப்ப நடக்கிறது தேசிய விடுதலைப் போராட்டம். வர்க்கப் போராட்டம் இல்லை. இதிலை பிரதான முரண்பாடு அல்லது பகை முரண்பாடு சிங்கள பௌத்த பேரினவாதத்தோடும் அதனைக் கட்டிக்காக்கிற அரசோடும் தான். தமிழ்த்தேசிய இனம் என்கின்ற அளவில் வறிய கூலி விவசாயிகளும், நிலப்பிரபுக்களும், கடற் தொழிலாளர்களும், சம்மாட்டிமாரும், தொழிலாளர்களும், முதலாளிமாரும் ஓரணியிலைதான் நிக்க வேணும். மற்றது நிலப் பிரபுக்கள் என்று யாரும் இங்கை இருக்கிறதா நான் நினைக்கேல்லை. அது சீனாவிலை கோடிக்கணக்கான மக்களிலை இலட்சக் கணக்கான வறிய கூலி விவசாயிகள் இருப்பினம். அவையளை சில ஆயிரக்கணக்கான நிலப்பிரபுக்கள் சுரண்டுவினம். அங்கை வறிய கூலி விவசாயிகளின்ரை போராட்டம் தேவையா இருக்கும். அதுக்காக இஞ்சை அந்தப் போராட்டம் பிழையெண்டு நான் சொல்லேல்லை. என்ரை கவலை என்னெண்டால் பகை முரண்பாட்டைக் கையாளாமல் நேச முரண்பாடுகளுக்காக போராடுகிறோமோ எண்டதுதான். இதாலை தமிழ்மக்களிட்டை இருந்து நாங்கள் அந்நியப்படப்போறம். அதுதான் நடக்கப்போகுது.... இருந்து பாருங்கோ. இப்பிடி ஒரு இயக்கம் இருக்கெண்டே தமிழ் மக்களுக்குத் தெரியாமல் போகப்போகுது...'

தொடர்ந்து தலையை தாறுமாறா ஆட்டி மறுத்துக் கொண்டி ருந்த வள்ளி, வாயைத் திறந்தாள். 'தோழர் கதைச்சு முடிச்சுட்டீங்களா? நீங்கள் ஒரு குறுந்தேசியவாதியா நிண்டு கதைக்கிறீங்கள். நீங்கள் அந்த வறிய கூலி விவசாயியாக இருந்து பார்த்தால் மாத்திரம்தான் உங்களுக்கு அவர்களுடைய வலியைப் புரிய முடியும். நீங்கள் வெறும் 'புத்தகப்பூச்சி'யா இருந்து கொண்டு மக்களிட்டை இறங்கி வேலை செய்யாமல் திரிஞ்சால் இப்பிடித்தான் கதைப்பியள். கடுமையான வார்த்தைகளைப் பாவிச்சிடுவனோ எண்டு பயமாயிருக்கு. நீங்கள் என்னுடைய குரு. எனக்கு வழிகாட்டியா இருந்தனீங்கள். நாங்கள் வேறை ஏதாவது கதைப்பம். சொல்லுங்கோ இப்ப என்ன செய்யிறீங்கள்?'

'செய்ய என்ன வேலை இருக்கு? சும்மாதான் இருக்கிறன். ஆமிக்கு ஒளிச்சுத் திரியிறதுதான் இப்ப பெரிய வேலையா இருக்கு'

'எங்களோட நீங்களும் வாங்கோ. மண்டான் கிராமத்துக்குப் போவம். அந்த மக்களே உங்களைக் காப்பாத்துவினம்.'

'அய்யோ வேண்டாம் வள்ளி. நெடுந்தீவுக்குப் போயிட்டு வந்த கதை கேள்விப் பட்டிருப்பியள் தானே? நாங்கள் ஏதோ பிக்னிக் போனம் எண்ட மாதிரி...'

'ஓம் கேள்விப்பட்டனான். அது நடந்து இப்ப ஒரு வருசமாச்சே? நெடுந்தீவிலை என்ன நடந்தது எண்டு அமைப்பு என்னை விசாரிச்சது. ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாத்தையும் சொன்னான். ஒண்டைத் தவிர.'

'எதை?'

'நீங்கள் என்னை அழகி எண்டு சொன்னதை'

'ஏன், அதைச் சொல்லியிருக்கலாம் தானே?'

'சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அந்தச் சொல்லிலை ஒரு மர்மம் இருக்கு. அதாலை வீணா உங்களுக்கு ஒரு கெட்ட பெயர் வரும். மற்றது அவங்கள் 'பிக்னிக்' எண்டு சொன்னதும் சரிஎண்டு ஆகிப் போயிடும்'

வள்ளியின் கண்களைப் பார்த்தேன். மாயச்சிரிப்பு அவளிடம் இன்னமும் எஞ்சி இருக்கிறது. என் கண்களைத் தவிர்த்து அவள் சுவரைப் பார்த்தாள். எங்கள் இருவரிடையேயும் மௌனக்கடல் பெருகித் தளும்பிக் கொண்டிருந்தது. அதை உடைத்தாள் வள்ளி.

'அமைப்புக்கு எண்டொரு நூலகம் தொடங்கியிருக்கிறம். என்னைத்தான் பொறுப்பாய் போட்டிருக்கு. வந்து பாருங்கோ'

அறைக்குள் புதிதான அலமாரியில் நிறையப் புத்தகங்கள் அடுக்கியிருந்தன. 'இன்னும் ஒழுங்கு படுத்தேல்லை' என்றாள். நான் நிறைய நாள் தேடியிருந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'ஜமீலா' புத்தகம் இருந்தது. ஏலவே அவரது குல்சாரி, அன்னைவயல் புத்தகங்களை வாசித்து முடித்திருந்தேன். அதன் சுவைப்பில் 'ஜமீலா' வைத் தேடிப்படிக்க அலைந்தேன்.

'வாசிச்சிட்டுத் தரட்டோ?' என்று வள்ளியிடம் கேட்டேன். 'தாராளமாக' என்றாள். 'ஆனால் நாள் முக்கியம். மூன்று நாளிலை திரும்பி வர வேணும். இதிலை கொஞ்சம் கண்டிப்பா இருப்பம்'

'மூண்டு நாளிலை எப்பிடித் தாறது? நான் ஆமிக்கு ஒளிச்சு ஓடிக்கொண்டு திரியிறன். இரவிலைதான் வாசிக்கிறது. தங்கிற இடத்திலை லைற் இல்லை யெண்டால் ஒண்டும் வாசிக்க ஏலாது'

'சரி உங்களுக்காக ஐந்து நாள்'

'நீங்கள் எனை விட்டு நீள்தூரம் செல்கின்றீர். போங்கள்' என்ற முபோவின் கவிதை வரி அசைந்து கொண்டிருந்தது என்னிடம்.

வள்ளி என்னை விட்டு வெகுவேகமாகத் தூர ஓடிப் போகிறாள். ரீச்சர் வீட்டில் முட்டை பொரித்துத் தந்த வள்ளி அல்ல இவள். ஆணென்றால் எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் தேடியவள் அல்ல இவள். பேருந்து நிலையத்தில் மூக்குத்தி மின்ன எனக்காக விழி எறிந்து காத்திருந்தவள் அல்ல இவள். கண்டவுடன் கண் சரிதது வெட்கம் வழி ஓட மலர்ந்து நின்றவள் அல்ல இவள். மீன்சாப்பாடும் சொக்கிப் போன நித்திரையும் ருசிக்கப் பேசியவள் அல்ல இவள். 'இனி எப்ப வருவீங்கள்' என்று இனி ஒருபோதும் அவள் கேட்கப்போவதில்லை.

இவள் வள்ளி இப்பொழுது உதயனிடம் துண்டு கொடுத்து விடுகிறாள். 'தோழர் எமது நூலகத்தில் நீங்கள் எடுத்திருந்த 'ஜமீலா' நூலை உடன் அனுப்பி வைக்கவும். உங்களுக்கு அதை வாசிக்கத் தந்த கால அவகாசத்தில் மேலும் மூன்று நாட்கள் முடிந்து விட்டன என்பதைத் தங்களுக்கு நினைவூட்டுகிறோம் - தோழர் வள்ளி'

இற்றுப்போக இருந்த உறவின் சிறு இழையையும் அறுத்து 'ஜமீலா' வுடன் வள்ளிக்கு அனுப்பி வைத்தேன்.

12/31/2012 2:24:49 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்