Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பந்தன் காணப்போகும் தீர்வு?

<p>சம்பந்தன் காணப்போகும் தீர்வு?</p>
யதீந்திரா

 

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த ஏழு வருடகால அரசியல் நகர்வுகள் என்பவை அதன் உண்மையான அர்த்தத்தில் சம்பந்தனின் நகர்வுகள்தான். அதேவேளை கடந்த ஏழு வருடங்களில் சம்பந்தன் அளவிற்கு எவரும் விமர்சிக்கப்படவுமில்லை. அண்மையில் எனது புலம்பெயர் நண்பரொருவர் வழமைபோல் பேசிக்கொண்டிருக்கும் போது, சம்பந்தன் மீதான விமர்சனங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பினார். ஏன் அவரை தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள் என்றார். ஆனால் இதே நண்பர் நாங்கள் விடுதலைப் புலிகளை விமர்சனமின்றி ஆதரிப்பதாக முன்னர் குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர்களில் ஒருவர்தான். முன்னர் விமர்சனம் இனிப்பதாக கூறியவர்கள் இப்போது கசப்பதாக கூறுகின்றனர். இவ்வாறானவர்கள் ஒரு வகை என்றால், இன்னொரு வகையினர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை விமர்சிப்பவர்கள் அனைவரும் தீவிர நிலைப்பாடுள்ளவர்கள் - கடும்போக்குவாதிகள் என்கின்றனர். தீவிர நிலைப்பாடு அல்லது கடும்போக்குவாதம் என்றால் என்ன? அண்மையில் தெற்கின் சிங்களவாத கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்கி பெரமுன வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பொதுபலசேனாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தது.

இது எவ்வளவு அபத்தமான வாதம்! சிங்கள ஊடகங்களும் அவ்வாறானதொரு படத்தைத்தான் சிங்கள மக்களுக்கு காண்பித்து வருகின்றன. அதாவது தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் - கடும்போக்காளர்கள் ஆவர். அவ்வாறாயின் நான் மேலே குறிப்பிட்டவாறான தமிழ் எழுத்தாளர்களுக்கும் சிங்களவாதிகளுக்கும் என்ன வேறுபாடு? அண்மையில் மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான உதய கம்மன்பில என்னும் அரசியல்வாதி, இந்தியா ராமர் பாலத்தை கட்டுமாக இருந்தால் வெடிவைத்து தகர்ப்போம் என்று பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் உதய கம்பன்பிலவை எவருமே தீவிரவாதி என்றோ கடும்போக்குவாதி என்றோ கூறத் துணியவில்லை. ஏன்? - ஏனெனில் அவர் ஒரு சிங்களவர். ஆனால் ஒரு தமிழர் இவ்வாறு குண்டுவைக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தால் அவர் நிலைமை என்னவாகியிருக்கும்? எனவே சம்பந்தனை விமர்சிப்பவர்களை தீவிரவாதிகள் (தீவிர நிலைப்பாட்டாளர்கள்) என்று கூறுவதற்கு முன்னர் தீவிர நிலைப்பாடு என்றால் என்ன? – கடும்போக்குவாதம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சரியான வரைவிலக்கணத்தை தர முயற்சிக்குமாறு இப்பத்தி அவ்வாறானவர்களை அழைக்கின்றது.

சம்பந்தன் விடயத்திற்கு வருவோம். சம்பந்தன் இவ்வாண்டுடன் தனது அரசியல் பயணத்தை முடிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அது முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் நோக்கிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழரசு கட்சியின் அடிமட்ட தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சம்பந்தனின் சரியான கூற்று: அவர் (கஜேந்திரகுமார்) ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கப் போவதாக குறிப்பிடுகின்றார், நானோ பயணத்தை முடிக்கப் போகின்றேன். இதன் பின்னர் பல மேடைகளில் 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் சம்பந்தன். அவர் இந்தக் கருத்தை கூறும்போது அதனை நேரடியாக கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இந்த பத்தியாளரும் ஒருவர். ஆனால் பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும்போது, 2016 இல் ஒரு தீர்வு கிடைக்குமென்பது தன்னுடைய ஊகம் மட்டுமே என்று, தனது முன்னைய நிலைப்பாட்டில் நழுவல் போக்கை காண்பித்தார்.

இதன் பின்னர் மன்னாரில், தடம்மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்னும் தலைப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசுகின்றபோது, ‘யுனிட்டரி பெடரலிசம்’ என்னும் புதியதொரு அரசியல் தீர்வு முறை தொடர்பில் பேசியிருந்தார். அதாவது ஒற்றையாட்சியும் இல்லை, பெடரலிசமும் இல்லை. ஆனால் இரண்டும்தான் என்றவாறான ஒரு அர்த்தநாரிஸ்வர முறைமை பற்றி பேசியிருந்தார். ஆனால் தற்போது சுயநிர்யண உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு பற்றி பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் பெண்கள் அமைப்புக்கள் சிலவற்றை அவரது திருகோணமலை இல்லத்தில் சந்தித்த போதே இவ்வாறு கூறியிருக்கிறார்.

இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா செயலாளர் பான் கீ மூனை சந்தித்த போது சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் உற்றுநோக்கப்பட்டிருந்தது. அதாவது, அரசியலமைப்பு வரைவில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால், இதில் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது இருக்குமாக இருந்தால், நாம் மீண்டும் ஒரு முறை ஆயுதம் ஏந்த மாட்டோம். ஆனால் எம்மை அவர்கள் ஆழமுடியாத நிலைமையை ஏற்படுத்துவோம் - என்று சம்பந்தன் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகிருந்தன. எம்மை அவர்கள் ஆழ முடியாத நிலைமையை ஏற்படுத்துவோம் - எப்படி? இதனை கேட்டுவிட்டு ஒரு நண்பர் கேட்டர், சம்பந்தன் முன்னர் ஏதாவது ஆயுத விடுதலை இயக்களில் பயிற்சி எடுத்தவரா – அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏனெனில் நாங்கள் மீண்டும் 'ஆயுதம் எடுக்க மாட்டோம்' என்று ஆணித்தரமாக கூறுகின்றார்!

<p>சம்பந்தன் காணப்போகும் தீர்வு?</p>

சம்பந்தன், இவ்வாறு ‘யுனிட்டரி பெடரலிசம்’, சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் மறுபுறத்தில் அரசாங்கமோ, 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருகிறது. இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் பேசுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில்தான் சம்பந்தனின் முன்னுக்கு பின் முரண்பாடான பேச்சுக்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றன. சம்பந்தன் உண்மையிலேயே எத்தகைய இலக்கின் அடிப்படையில் செயற்படுகின்றார் அல்லது இலக்கின்றி ஏதோ நடக்கட்டும் என்றவாறு செயற்படுகின்றாரா?

சம்பந்தன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான செயற்பாடுகளையும் விரும்பவில்லை. அவ்வாறு செயற்படுவர்களை குழப்பவாதிகள் என்கிறார். ஆனால் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் தெளிவாக சொல்லுவதில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் தற்போது சுயநிர்யண உரிமை தொடர்பில் பேசியிருக்கிறார். சம்பந்தன் எவ்வாறானதொரு சுயநிர்யண உரிமை தொடர்பில் பேசுகின்றார்? தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவான ஒஸ்லோ பிரகடனத்தில் குறிப்பிட்டவாறான உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமஸ்டி அரசியல் தீர்வுதானா சம்பந்தனதும் எதிர்பார்ப்பு? ஒஸ்லோ பிரகடனத்தில் இந்த விடயம் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வரலாற்று ரீதியான பகுதியில் உள்ளக சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி ஒன்றை கோருதல். தற்போது சம்பந்தன் கூறும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வும் அத்தகைய ஒன்றுதானா?

சம்பந்தன் அவ்வப்போது பிறிதொரு விடயத்தையும் வலியுறுத்தி வருகிறார் அதாவது, கடந்த காலங்களில் போலல்லாது தமிழ் மக்களின் சம்மதத்தோடு புதிய அரசியல் யாப்பொன்று வரவுள்ளது. வரப்போகிறதுதான், ஆனால் என்ன வரப்போகிறது? அந்த அரசியல் யாப்பு ஒஸ்லோ பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு அல்லது அதனையும் தாண்டிச் செல்லும் வகையிலான அதிகாரங்களை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு அரசியல் யாப்பாக அமைந்திருக்குமா? இவ்வாறான கேள்விகளுக்கு சம்பந்தன் தெளிவான பதிலை சொல்லாத வரையில் சம்பந்தன் சென்று கொண்டிருக்கும் பாதை தொடர்பான சந்தேகங்கள் தீரப் போவதில்லை. சம்பந்தன் இன்றைய சூழலில் அரசாங்கத்தின் நம்பிக்கையை வென்ற தலைவராக இருக்கின்றார். ஒரு தமிழ் தலைவர் அரசாங்கத்தின் நன்மதிப்பை வென்றவராக இருக்கின்றார் என்றால் அவர் மறுபுறமாக தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்றே பொருள். ஆனால் இந்த நிலைமைகளை விளங்கிக் கொண்டதாலோ என்னவோ, சம்பந்தன் அண்மைக் காலமாக தனது தொனியை மாற்றி வருகின்றார். அதன் விளைவுதான் தற்போது அவர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசியிருப்பதும் கூட. ஆனால் சம்பந்தன் என்ன துணிவில் இவ்வாறு பேசுகின்றார்? அவர்கள் எங்களை ஆழ முடியாத நிலைமையை ஏற்படுத்துவோம் - என்று சம்பந்தன் கூறியதாக வெளிவந்த செய்தியை படித்துவிட்டு ஒரு ஊடக நண்பர் பதைபதைப்புடன் கேட்டார் – இந்தியா ஏதும் திட்டம் வைத்திருக்குமோ – அதுதான் சம்பந்தன் இந்தளவு துணிவாக பேசுகின்றாரா? ஆனால் அண்மைக்காலமாக சம்பந்தன் அவர்கள் மத்தியிலும் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார் என்பதாகவும் தகவலுண்டு. உண்மையில் சம்பந்தனிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. ஆனால் அவர் தன்னிடம் திட்டம் இருப்பதான ஒரு ஒப்பனையை பேணிப் பாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்.

உண்மையிலேயே சம்பந்தன் இப்போது செய்யவேண்டியது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அனைவரையும் ஒரணிப்படுத்தி தமிழ் ஜனநாயக அரசியலை பலப்படுத்துவதுதான். அவ்வாறு சம்பந்தன் முயற்சித்தால் நிச்சயம் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்குவார்கள். ஆனால் சம்பந்தன் செய்வாரா? சம்பந்தன் 'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பில் காண்பித்த எதிர்ப்பை உற்று நோக்கினால், அவர் தமிழரசு கட்சியில் தனியாகச் செல்ல விரும்புவதாகவே தெரிகிறது. உண்மையில் அதுதான் சம்பந்தனின் விரும்பமென்றால் அதனையாவது அவர் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும். சிங்கள தேசத்தின் கருணையினால் ஒரு தீர்வு கிடைக்குமென்று சம்பந்தன் எதிர்பார்த்தால் அது அவரின் தவறாகும். ஆனால் சம்பந்தன் சொல்லுவது போன்று வரவுள்ள புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி, இணைந்த வடகிழக்கு என்னும் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அது ஒரு சாதாரண விடயமல்ல. சம்பந்தன் சாதித்துவிட்டார் என்பதை வரலாறு பதிவு செய்யும். அதன் பின்னர் அனைவரும் அவரது காலடியில் அரசியல் தஞ்சம் கோரும் நிலை உருவாகும். அவ்வாறு நிகழாவிட்டால்? இப்போதே சம்பந்தன் தன்னுடைய இயலாமையை தெளிவாக குறிப்பிடுவாராக இருந்தால் வரலாற்றில் அவர் பெயர் மதிப்புப்பெறும். அவ்வாறில்லாது தப்பிக்கொள்ளும் ஒரு உக்தியாக கருத்துநிலை குத்துக்கரணங்களில் அவர் ஈடுபடுவாராக இருந்தால் அவர் பரிகசிக்கப்படுவது திண்ணம். 

9/30/2016 3:24:59 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்