Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை

தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை
முத்துக்குமார்

 

சம்பந்தன் டிசெம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய சக்திகளின் கோபத்தை நன்றாகவே கிளறிவிட்டிருக்கிறது. இதற்கான எதிர்வினைகள் புலம்பெயர் இணையத்தளங்களில் அதிகமாக வந்தன. உள்ளூர் பத்திரிகைகளில் ஆதரவாகவும், எதிராகவும் பல கட்டுரைகள் பதிவாகியிருக்கின்றன. அரசியல்கட்சிகள் என்றவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதற்கு பலத்த கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் 'அது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தேயொழிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது கருத்தல்ல' எனக் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சம்பந்தனைப் பாராட்டியிருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடமிருந்து எந்தவித பகிரங்கக் கருத்தையும் காணவில்லை. சம்பந்தனின் அருட்பார்வை கிடைக்காமல் விடலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

சம்பந்தனின் கடந்தகால வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இக்கருத்து பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சம்பந்தன் அடிப்படையில் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. அவர் ஒரு இலங்கைத் தேசியவாதி. இலங்கைத் தேசியம் என ஒன்று நடைமுறையில் இல்லை என்பது வேறுகதை. இல்லாத இலங்கைத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் ஒருவராகவே சம்பந்தன் விளங்குகிறார். இலங்கையில் நடைமுறையில் இருப்பதெல்லாம் சிங்களத்தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத்தேசியம் என்பனவே. இலங்கைத்தேசியம் என்பது இந்த நான்கு தேசியங்களையும் சமத்துவமாக இணைத்த ஒன்றாக வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். சிங்களத்தேசியம் மற்றைய எல்லாத் தேசியங்களும் தனக்குள்ளே கரைந்து விடவேண்டும் என எதிர்பார்ப்பதால் இலங்கைத்தேசியம் என ஒன்று உருவாகவில்லை. இப்போது இருக்கின்ற ஆபத்துகளெல்லாம் சிங்களத் தேசியத்திற்குள் ஏனைய தேசியங்களைக் கரைத்துவிடுவதற்கான முயற்சிகள் அதிகளவில் நடைபெறுகின்றன என்பதுவே.

சம்பந்தனின் உரை அம்முயற்சிகளுக்கு தீனிபோடுவதாகவே உள்ளது. தமிழ்த்தேசியத்தை தூக்கிப்பிடித்தால் போராட்ட நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும். அதற்கு சம்பந்தன் தயாராக இல்லாத நிலையும் இவ் உரைக்குக் காரணமாக இருக்கலாம். சம்பந்தனின் தற்போதைய கவலையெல்லாம் தனது நிலைப்பாட்டிற்கு தமிழ்மக்களை எவ்வாறு கொண்டுவருவது என்பதே! இதனால்தான் தேவையற்ற, பொருத்தமற்ற உரைகளை எல்லாம் நிகழ்த்த முற்படுகின்றார்.

சம்பந்தனின் உரையிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம். அவரது மூன்று கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், ஜனநாயகமின்மையாலும், மனித உரிமைகளை மீறினபடியாலும் புலிகள் தாங்களாகவே அழிந்துபோனார்கள். வடக்கில் இராணுவப் பிரச்சன்னத்தை நீக்கத் தேவையில்லை, குறைத்தால் போதுமானது என்பவையே அக்கருத்துக்கள். இம்மூன்று கருத்துக்களும் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராகவே உள்ளன.

புலிகள் பயங்கரவாத இயக்கம் என்ற சொல்லாடல் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட சொல்லாடல். அதனைத்தான் சம்பந்தன் தனது கையிலெடுத்திருக்கின்றார். தமிழ்த்தேசிய நிலைநின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் இலங்கை அரசிற்கும், தமிழ்மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பொறுத்தவரை புலிகளின் பாத்திரம் முற்போக்கானது என்றே கூறுகின்றனர். விலைபோகாமை, அளவிடமுடியாத தியாகம் என்பவற்றை இதற்கு காரணமாகக் கூறுகின்றனர். தமிழ்த்தேசியப் போராட்டத்தை அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக மாற்றியவர்கள் அவர்களே!. இந்தவகையில் தமிழ்த்தேசிய வரலாற்றின் ஒரு காலகட்டம் அவர்களுக்குரியது. தந்தை செல்வாவிற்கு பின்னர் அதன் தொடர்ச்சியைப் பேணியதலைவர் பிரபாகரனே!

அவர்களின் விலைபோகாத போராட்டமே தமிழ்த்தேசிய அரசியலை இன்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டிருக்கின்றது. இன்றைய தேவை சர்வதேச அரசியலை எவ்வாறு வெற்றிகாண்பது என்பதே! இந்தக் கட்டத்திற்குரிய அரசியலை நகர்த்தக்கூடிய தலைவராக சம்பந்தன் உள்ளாரா? என்பது சந்தேகமானதே!

அடுத்தவர் தயவில் அரசியலை நடாத்திய மரபு, தமிழ் அரசியலின் பிரதான போக்கில் இருக்கவில்லை. இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், பிரபாகரன் என வரலாற்றை நகர்த்திய தலைவர்கள் எவரும் அடுத்தவர் தயவில் நின்று அரசியலை நடாத்தவில்லை. தமிழ்மக்களின் சொந்தப் பலத்திலிருந்து அரசியலை நடாத்தினர். அவர்களுக்கென சொந்தமாக இலக்கு, கொள்கை, வேலைத்திட்டங்கள் என்பன இருந்தன. ஆனால் சம்பந்தனின் நிலை அவ்வாறானதல்ல. அவர் இந்தியாவின் தயவிலும், மேற்குலகின் தயவிலுமே அரசியலை நடாத்த முனைகின்றார். இதனால்தான் தெளிவான இலக்குகளோ, கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ இன்றி இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் பின்னால் இழுபட்டுச் செல்கின்றார்.

மற்றவர்களுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைவன் தேவையில்லை. மற்றையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சொந்த நிகழ்ச்சி நிரலையும் புகுத்தி அதனைப் பொது நிகழ்ச்சி நிரலாக்குவதற்குத்தான் தலைவன் தேவை. மற்றையவர்களின் நிகழ்சிநிரலில் மட்டும் பயணிக்கும்போது அவர்களது தேவை நிறைவேறிவிட்டால் நடுத்தெருவில் நிற்கவேண்டிய அபாயம் ஏற்படலாம். சம்பந்தன் முன்னெடுக்கும் அரசியலினால் அந்த அபாயம் வருவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. இலங்கை அரசு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் சாதகமான சில திட்டங்களை அறிவிக்கும்போது தமிழ் அரசியலே பலவீனப்பட்டுப் போகக்கூடிய சூழலை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை

தமிழ்த்தேசிய நிலை நின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் தமிழ்மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவில் புலிகள் பிற்போக்கான பாத்திரத்தை வகித்தனர் எனக் கூறுகின்றனர். இந்த விடயத்தை பொறுத்தவரை இரண்டு தவறுகள் புலிகளிடம் இருந்திருக்கின்றன. ஒன்று தேசிய இனப்போராட்டம் என்பது அவ்இனத்திற்கு புறத்தேயிருந்து வருகின்ற ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும். எனவே அவ் இனம் முழுவதையும் இணைத்ததாக அப்போராட்டம் இருந்திருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்துக்குள் பல்வேறு பிரிவுகள் இருப்பது சாத்தியம் என்பதால் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றினை அமைத்து போராடுவதன் மூலம் அனைவரையும் இணைக்கக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும். எதிர்ச்சக்திகளினது உளவுப் பிரிவுகளின் ஊடுருவல்களுக்கு வாய்ப்பு இருப்பதால் வலிமையான ஐக்கிய முன்னணி அமைப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் அது மட்டுமே சரியான மார்க்கமாக இருந்திருக்கும்.

இதன் விளைவு இறுதிக்காலத்தில் புலிகள் நன்றாக தனிமைப்பட்டுப்போயிருந்தனர். போராட்டத்திற்கென வந்த பலர் போராட்டத்திற்கு வெளியில் நின்றதோடு சிலர் எதிரிகளாகவும் மாறியிருந்தனர். இதனால் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தவேண்டிய போராட்டம் புலிகளின் போராட்டமாக மட்டும் சுருங்கியிருந்தது. பரந்துபட்ட மக்கள் வெறும் பார்வையாளர்களாக்கப்பட்டனர். இப்போக்கு ஒருவகையான குத்தகை உணர்வையும் மக்கள் மத்தியில் வளர்த்திருத்தது. நாங்கள் போராடுவோம், நீங்கள் ஆதரவு தந்தால் போதும் என்பதே புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. இந்தக் குத்தகை மனோபாவம்தான் புலிகள் தோல்வியடைந்தபோது பலருக்கு புலிகள் மீது கோபம் வருவதற்கும் காரணமாகியிருந்தது. குத்தகை வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

இரண்டாவது, போராடும் மக்களுக்கு ஜனநாயம் அவசியமானதாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் வரலாறு முழுவதும் இந்த ஜனநாயத்திற்கு பஞ்சமே இருந்தது. இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம் என பழைய தலைவர்கள் எவருமே இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஒப்பீட்டு ரீதியில் தமிழரசுக்கட்சியிடம் சிறிதளவு ஜனநாயம் இருந்தாலும் அது போதியதாக இருக்கவில்லை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்கின்ற மோசடித்தனமான ஜனநாயகமே அதனிடம் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் மோசடித்தனமான ஜனநாயகத்தினால்தான் ரணில் விக்கிரமசிங்கா தற்போதும் கதிரையில் இருக்கின்றார்.

ஜனநாயகத்தின் அடிப்படையே மக்கள் பங்கேற்புதான். அங்கு மக்கள்தான் முடிவுகளை எடுக்கின்றார்களே தவிர தலைவர்கள் எடுப்பதில்லை. தலைவர்களுடைய கடமைகள் எல்லாம் நல்லமுடிவுகள் எடுப்பதற்கான ஆற்றலை மக்களுக்கு வழங்குவதும், மக்களின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான். தமிழர் அரசியலில் தலைவர்கள் தமது முடிவுகளை மக்கள் மீது திணித்தார்களே ஒழிய மக்கள் முடிவுகளை எடுப்பதற்கு விடவில்லை.

மூன்றாம் உலக நாடுகளின் சமூகங்கள் வளர்ச்சி குன்றிய சமத்துவமற்ற சமூகம்தான். தமிழ்மக்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தமிழ்ச் சமூகம் ஒரு அதிகாரப்படிநிலைச் சமூகமாக இருந்தது. அதிகாரப்படிநிலைதான் தமிழ்ச்சமூகத்தின் ஒழுங்குநிலையாக இருந்தது. இது ஜனநாயக சமூகம் வளர்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் அரசியல் இயக்கங்களும் ஜனநாயகம் அற்றவையாகவே இருந்தன. ஒழுங்கைப் பேணுவதற்கு ஜனநாயகத்தினை விட அதிகாரப்படிநிலை இலகுவாக இருந்தது. ஜனநாயக சமூகத்தை உருவாக்குவது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. இந்த ஜனநாயகமற்ற அதிகாரப்படிநிலைச் சமூகம்தான் புலிகள் அரசியலுக்கு வந்தபோது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களும் மரபு ஒழுங்கினைப் பேணினார்களே ஒழிய அதனை மாற்ற முயலவில்லை. அவர்கள் மாற்ற முயன்றிருந்தால் வெற்றியடைந்திருப்பார்கள் எனக் கூறமுடியாது. ஏனெனில் ஜனநாயகம் பேசிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழத் தேசிய முன்னணி போன்ற இயக்கங்கள் பாரிய தோல்விகளையே தழுவியிருந்தன. இங்கு ஜனநாயகமின்மை என்பது பிரபாகரன் உருவாக்கிய ஒன்றல்ல. அது முன்னோர்களிடமிருந்து அவருக்கு முதுசமாகக் கிடைத்த ஒன்று.

புலிகளிடம் ஜனநாயகம் இருக்கவில்லை என சம்பந்தன் கூறுகின்றார். சம்பந்தனிடம் அந்த ஜனநாயகம் இருக்கின்றதா? பிரபாகரன் தீர்மானங்களை எடுக்கும் போது குறைந்தபட்சம் தளபதிகளுடனாவது கலந்தாலோசிப்பார். சம்பந்தன் தீர்மானம் எடுக்கும்போது எவருடனும் கலந்தாலோசிப்பதில்லை. சிங்கக்கொடி விவகாரம் இதற்கு நல்லசான்று. சம்பந்தன் சிங்கக்கொடி தூக்கியமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதோ, தமிழரசுக்கட்சியினதோ முடிவல்ல. அது சம்பந்தனின் தனிப்பட்ட முடிவு. குறைந்தபட்சம் அதற்கு மன்னிப்பு கேட்பதற்குகூட சம்பந்தன் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் புலிகளின் ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்கு சம்பந்தனிடம் என்ன யோக்கியதை இருக்கின்றது? புலிகளை வேண்டுமானால் தவறுகளைக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் எனக் கூறலாம். பயங்கரவாத இயக்கம் என ஒருபோதும் கூறமுடியாது. பயங்கரவாத இயக்கம் எனக் கூறுபவர்கள் தமிழ்த்தேசிய அரசியலை நிராகரிப்பவர்கள் என்றே கூறவேண்டும்.

சம்பந்தனின் இரண்டாவது கருத்து புலிகள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பின்பற்றாததினால் அழிந்து போனார்கள் என்பது. இதுவும் மிகத் தவறானதாகும். புலிகள் அழிக்கப்பட்டமைக்கான காரணங்கள் வெளிப்படையானவை. அதில் முதலாவது சர்வதேச வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களாகும். இலங்கைத் தீவு சர்வதேச வல்லரசுகளின் நலன்களுக்கான கேந்திர இடத்தில் இருக்கின்றது. இதனால் இலங்கைத் தீவு முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தவேண்டிய தேவை அவற்றிற்கு இருந்தது. பிராந்திய வல்லரசான இந்தியா இதில் முன்னணியில் நின்றது. இந்தியாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்திற்கு புலிகள் ராஜீவ் காந்தியை கொன்ற கோபமும் வேறு இருந்தது. இந்தியாவிற்காக இலங்கை நடாத்திய போர் என மகிந்தர் கூறியதையும் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையில் உறுதியாக நின்றமை இவ்வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

இரண்டாவது புலிகள்தான் அரசியல் தீர்விற்கு தடையாக இருக்கின்றார்கள் என வல்லரசுகள் நம்பியமையாகும். இதில் வரலாற்று அனுபவங்களை அவை கவனத்தில் எடுக்கவில்லை. வரலாற்று ரீதியாக அரசியல் தீர்விற்கு தமிழ்த்தரப்பு ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. சிங்களத்தரப்புத்தான் தடையாக இருந்தது. பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பன இவற்றிற்கு நல்லசான்று.

இலங்கையின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் எனக் கூறப்படுகின்ற பலர் இந்த நம்பிக்கையைக் கொடுப்பதில் முன்னின்றனர். சம்பந்தனுக்கும் அதில் ஒரு பங்கிருந்தது. இப்போதுதான் வல்லரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை தரிசிக்கத் தொடங்கியுள்ளன.

மூன்றாவது, புலிகள் எதிர்பார்த்த தீர்வைவிட மிகக் குறைந்த தீர்வுக்கு குறிப்பாக 13வது திருத்தத்திற்கு சம்பந்தன் தயாராக இருந்தமையாகும். 13வது திருத்தம் ஏற்கனவே யாப்பில் இருந்தமையினாலும், ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஏற்கும் நிலையில் இருந்தமையினாலும் வல்லரசுகள் மிக இலகுவாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என நம்பின. சம்பந்தன் புலிகளைப்போல வலுவான தீர்வில் உறுதியாக நின்றிருந்தால் புலிகளை வைத்துக்கொண்டே பிரச்சினையை தீர்க்க முற்பட்டிருப்பார்கள். இந்தியா தனது உள்நாட்டுக் காரணிகளுக்காக 13வது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு செல்லக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. குறைந்தபட்சம் வலுவான சமஸ்டி ஆட்சிமுறை உருவாகினால் கூட அந்தக் கோரிக்கை தனது நாட்டிலும் மேலெழும்பும் என இந்தியா அஞ்சியிருந்தது.

நான்காவது, தமது எடுபிடியான ரணிலின் வெற்றியைப் பறித்து மகிந்தர் ஆட்சிக்கு வர புலிகள் காரணமாக இருந்தார்கள் என்ற கோபமாகும். புலிகள் மகிந்தரை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் மூலம் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலையே பலவீனமாக்கியிருந்தார்கள். சீனா வலுவாக இலங்கையில் காலூன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருந்தார்கள். தங்களைச் சுற்றி தந்திரமாக பின்னப்பட்ட சர்வதேச வலைப்பின்னலை அறுத்தெறிந்தார்கள். இவை சகிக்க முடியாத கோபத்தினை வல்லரசுகளுக்கு ஊட்டியிருந்தது.

ஆனால் மறுபக்கத்தில் இந்த ஆட்சிமாற்றமே இலங்கையுடன் வல்லரசுகள் முரண்படுவதற்கான களத்தினை திறந்துவிட்டிருந்தது. இன்று தங்கள் நலன்களுக்காக இனவிவகாரத்தை கைவிட முடியாதநிலையில் வல்லரசுகள் இருக்கின்றன. புலிகள் தாங்கள் அழிந்தாலும் இனவிவகாரம் தொடர்ந்து சூடாக இருப்பதற்கான களத்தினை இதன்மூலம் திறந்துவிட்டிருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

இந்தக் காரணங்கள் எல்லாம் சம்பந்தனுக்கு தெரியாததல்ல. சம்பந்தன் இன்று அரசியலை நடாத்துவதே புலிகள் உருவாக்கிய அரசியலில் மேல்நின்றுதான். இந்நிலையில் யாரைக் காப்பாற்ற இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

சம்பந்தனின் மூன்றாவது கருத்து வடக்கில் இராணுவத்தை அகற்றத் தேவையில்லை, பிரசன்னத்தை குறைக்கவேண்டும் என்பதாகும். இங்கு இராணுவத்தின் எண்ணிக்கை ஒரு லட்சமா? ஐயாயிரமா? என்பது பிரச்சினையல்ல. மாறாக என்ன நோக்கத்திற்காக இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பதே பிரச்சினையாகும். தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருப்பதை திட்டமிட்டு அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே இராணுவம் நிலைகொண்டுள்ளது. அது நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, கலாச்சாரப்பறிப்பு எனப் பல வேலைத்திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கினறது. இந்த வேலைத்திட்டங்கள் முற்றுப்பெறுமானால் சம்பந்தன் அரசியல் செய்வதற்கே களம் எதுவும் இருக்காது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருக்கோணமலைக்கு ஏற்பட்ட நிலைதான் வடக்கிற்கும் ஏற்படும். சம்பந்தனின் வயது காரணமாக அவரது வாழ்நாள் குறுகியதாக இருப்பதனால் தனக்கு பின்னர் தமிழ் அரசியற்களமே இருக்கக்கூடாது என சம்பந்தன் நினைக்கின்றாரோ தெரியாது.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் என்பது தமிழ்த்தேசத்தை அழிப்பதற்கானது. அது தமிழ்த்தேசத்தை மதிப்பதில்லை. இந்த இராணுவம் முழுமையாக வெளியேறவேண்டும். அரசியல் தீர்வு வந்த பின்னர் தமிழ்த் தேசத்தை மதித்து அதனைப் பாதுகாப்பதற்காக இராணுவம் நிலை கொள்வதில் தவறில்லை.

ஜெனிவாவில் நெருக்கடி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிந்தரை ஓடிச்சென்று பாதுகாப்பதே சம்பந்தனின் செயற்பாடாக உள்ளது. இந்தத் தடவையும் வருகின்ற மார்ச்சில் இலங்கை அரசு நெருக்கடியினை சந்திக்க இருப்பதால் மகிந்தரைப் பாதுகாப்பதற்காகத்தான் சம்பந்தன் இவ்வாறான கருத்துக்களைக் கூறுகின்றார். சுருக்கமாகக் கூறினால் சம்பந்தன் ஜெனிவாவில் மகிந்தரைப் பிணையெடுக்க முற்படுகிறார்.

பேரினவாதத்திடமிருந்து தமிழ்த்தேசிய அரசியலை பாதுகாப்பதற்கு முன்னர் சம்பந்தனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என யோசிப்பது நல்லது.

12/26/2012 3:58:32 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்