Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் மக்கள் எழுச்சியைக் காட்டிய மாவீரர் தினம்

<p>தமிழ் மக்கள் எழுச்சியைக் காட்டிய மாவீரர் தினம்</p>
சி. அ. ஜோதிலிங்கம்

எதிர் பார்த்ததற்கு மேலாக மாவீரர் தினம் எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக நடந்துள்ளது. போர் முடிவுக்குப்பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அரசு அனுமதிக்கவில்லை. படையினரின் கெடுபிடி அதிகமாக இருந்தது. அனுஷ்டித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்குக்கூட அனுப்பப்பட்டனர் மாவீரர் துயிலுமில்லங்களும் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. பல துயிலுமில்லங்கள் படையினரின் முகாம்களாக இருந்தன. இரகசியமாக வீடுகளிற்குள் அனுஷ்டிக்கும் நிலையே இருந்தது. கதறி அழும் உரிமைகூட மக்களிற்கு வழங்கப்படவில்லை. மாவீரரின் பெற்றோருக்கு துயிலும் இல்லங்களுக்கு சென்று அழும் போதும், அஞ்சலி செலுத்தும் போதும் ஒரு ஆற்றுப்படுத்தல் இருந்தது அதனையும் பறிதெடுத்தனர்.

இந்தத் தடவை இது விடயத்தில் நெகிழ்ச்சி இருந்தது என்று கூறுவதை விட நெகிழ்ச்சியைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருந்தது. அதற்குப்பல காரணங்கள் இருந்தன.

ஒன்று ஜனநாயக வெளியைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம். மைத்திரி - ரணில் அரசாங்கமும் அதற்குப் பின்னாலிருக்கின்ற இந்திய அமெரிக்க சக்திகளும் தங்களது நலன்களுக்காக ஜனநாயக வெளியை உருவாக்கினர். சீனாவின் செல்வாக்கை இலங்கைத் தீவிலிருந்து அகற்றுவதற்கும் கேந்திர இடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இவ் ஜனநாயக வெளி அவசியமாக இருந்தது. இந்த அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்குக்கிடைத்த ஒரேயொரு நன்மை இந்த ஜனநாயக வெளியாக இருந்தமையினால் தமிழ் மக்களின் ஆதரவினை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு இதனைத் தக்க வைக்க வேண்டிய தேவையுமிருந்தது.

பயிருக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசிவது போல ஆட்சியாளர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களும் தங்கள் நலன்களுக்காக உருவாக்கிய ஜனநாயகவெளி தமிழ் மக்களுக்கும் சிறிதும் பயன்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொலீசார் யாழ் பல்கழைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் செய்த போதும் பல்கலைக்கழக சமூகமே துணிந்து மாவீரர் தினம் அனுஷ்டிக்க முன்வர சற்று பின்வாங்கி அடக்கிவாசித்தது. புலனாய்வுப்பிரிவினர் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனரே தவிர, நெருக்கடிகள் எதனையும் கொடுக்கவில்லை.

இரண்டாவது காரணம் உயிர் நீத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவு கூருவது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமை. இது விடயத்தில் ஆட்சியாளர் மீது சர்வதேச சமூகத்தினாலும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களுக்கு சர்வதேச சமூகத்தின் பல கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் இதிலும் கைவைக்க தயக்கம் இருந்தது. ஏனெனில் இந்தத்தடவை அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை மீறுவதற்கு மக்கள் தயாராகவே இருந்தார்கள் இந்நிலையில் அச்சுறுத்தல், கைதுகள் சர்வதேச மட்டத்தில்; அரசின் பெயரை மேலும் மாசுபடுத்தும் என்ற அச்சம் இருந்தது.

மூன்றாவது புதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவதற்கு தமிழ் மக்களினதும் ஆதரவு தேவையாக இருந்தது. இலங்கைத் தீவினை ஒரு புதிய அரசியல் ஒழுங்கிற்குள் கொண்டுவர வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பு மிக மிக அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு என பெரிதாக எதுவும் புதிய யாப்பில் இருக்கப்போவதில்லை ஆனாலும் மகிந்த தரப்பு புதிய யாப்பினை எதிர்க்கப்போவது நிச்சயம். சர்வஜனவாக்கெடுப்பும் அதற்குத் தேவை. இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் போல புதிய அரசியல் யாப்பிற்கான வாக்கெடுப்பிலும் தமிழ் மக்களே தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கப்போகின்றனர். ‘மகிந்த பீதியைக்’ காட்டித்தான் தமிழ் மக்களின் ஆதரவினைப் பெறவேண்டியுள்ளது. எனவே தமது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் சில அடைவுகளைப் பெற்றிருக்கின்றனர் என்ற தோற்றம் தெரிய வேண்டும். இறந்தவர்களை நினைவு கூருவதை தடுத்தால் அந்தத் தோற்றமும் இல்லாமல் போய்விடும்

<p>தமிழ் மக்கள் எழுச்சியைக் காட்டிய மாவீரர் தினம்</p>

நான்காவது அடுத்த ஜெனீவாக் கூட்டத் தொடர் விரைவில் இடம்பெறவிருக்கின்றது. அமெரிக்க சார்பு அரசுகள் சற்றுப் பின்வாங்கினாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்க இருக்கின்றன. பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளில் சிறிய முன்னேற்றம்கூட காணப்பபடவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. இந்நிலையில் தமிழ் மக்கள் சார்பாக நாம் பலவற்றைச் செய்திருக்கின்றோம் எனக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு உண்டு.

ஐந்தாவது காரணம் ஜனாதிபதி மைத்திரி புதிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்மிடம் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளிலிருந்து இலங்கையை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கு பிரதிபலனாக தாமும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தோம் என்று காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இவையெல்லாம் சேர்ந்து அரசாங்கத்தைச் சற்று அடக்கி வாசிக்க வைத்ததினால் தமிழ் மக்கள் பெரிய நெருக்கடிகள் இல்லாமல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முடிந்தது.

 மாவீரர் தினத்தில் தமிழர் அரசியல் தலைமைகளின் பங்களிப்பு இந்தத் தடவை சற்று அதிகமாக இருந்தது எனலாம். இதில் பங்களித்தவர் மூன்று பிரிவினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமுகத்தவர் என்போரே அம்மூன்று பிரிவினருமாவர். துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் பேரவை உத்தியோக பூர்வமாக இதில் பங்கெடுத்திருக்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்கெடுத்தது என்பதை விட பங்கெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது எனலாம்.

“எழுகதமிழ்” நிகழ்விற்குப்பின்னர் தமிழ் அரசியல் சூழல் தமது கையை விட்டுப் போகின்றது என்ற அச்சம் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டது. மாவீரர் தின நிகழ்வையும் கைவிட்டால் விலகிப் போகும் போக்கு அதிகரிக்கலாம் என நினைத்தது. இதனால் அண்மைக்காலமாக இரு முகங்களைக் காட்ட முற்பட்டது. ஒரு பக்கத்தில் இணக்க அரசியல் முகத்தையும் மறுபக்கத்தில் எதிர்ப்பு அரசியல் முகத்தையும் காட்ட முற்பட்டது. இது வரவு செலவு திட்டவாதத்தின் போது தெளிவாகத் தெரிந்தது. வரவு செலவுத் திட்டத்தைக் கண்டித்து மிகவும் காரசாரமாக சுமந்திரன் உட்பட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். தமிழ் மக்களை சிறிதளவேனும் திருப்திப்படுத்தப்படவில்லை எனக் கூறினர். இறுதியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கு மாவை சொன்ன விளக்கம் “நாம் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை அரசாங்கத்தை  ஆதரிக்கின்றோம்” என்பதே! “இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியிருப்பதால் அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம்” என மேலதிக விளக்கம் கொடுத்தார்.

உண்மையில் கூட்டமைப்பின் நிலை இருதலைக் கொள்ளி நிலை. இணக்க அரசியலையும் குழப்பக்கூடாது. தமிழ் அரசியல் சூழல் தங்கள் கைகளை விட்டுப் போகவும் கூடாது.  மாவீரர் தின நிகழ்வில் கூட்டமைப்பினர் கலந்து கொண்டமைக்கு இது தான் பிரதான காரணம். இதிலும் புத்திசாலித்தனமாக சம்பந்தனும் சுமந்திரனும் மாவீரர் தினநிகழ்வுகளை தவிர்த்துக் கொண்டனர்.

கிழக்கில் தமிழ் அரசியல் சூழல் தங்கள் கையை விட்டுச் செல்லும் நிலை குறைவாக இருப்பதால் அங்கு மாவீரர் தின நிகழ்வை நடாத்துவதில் பெரிய அக்கறைகாட்டவில்லை. அங்கு முஸ்ஸீம் விவகாரம் அவர்களை எப்போதும் பாதுகாக்கும். இதனால் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் தமது அலுவலகங்களில் ஒரு சடங்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மேற்nகொண்டனர். துயிலும் இல்லங்களில் தலைகாட்டவேயில்லை. அரியநேந்திரன் மட்டும் ஒரு 05 பேருடன் துயிலும் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினார். அம்பாறை மாவட்டத்தில் அதுவும் இல்லை. கிழக்கில் சிவில் நிறுவனங்களும் பலவீனமாக இருப்பதனால் மக்கள் தன்னெழுச்சியாக அனுஷ்டிப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கவில்லை.

மன்னாரிலும் பெரிய அக்கறை காட்டவில்லை. சிவகரன் பொது நிறுவனங்களின் ஒன்றியத்தின் சார்பில் அனுஷ்டிப்பு ஒழுங்குகளை மேற் கொண்டார். யாழ்ப்பாணம், வவுனியாவிலும் பெரிய அக்கறை காட்டினர் எனக் கூறமுயாது. யாழ்ப்பாணம் சாட்டி துயிலும் இல்லத்தில் சரவணபவன் மட்டும் 05 பேருடன் சென்று அஞ்சலி செலுத்தி புகைப்படமெடுத்துவிட்டு உடனே திரும்பி விட்டார். உடுத்துறை துயிலுமில்லத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியே அஞ்சலி நிகழ்வை நடாத்தியது.

அஞ்சலி நிகழ்வு பெரிய அளவில் இடம்பெற்றதென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் தான். அங்கு தான் அதிகபோராளிகள் இறந்தனர். கனகபுரம் துயிலுமில்லத்தை இராணுவம் விடுவித்தும் மக்கள் தன்னெழுச்சியாக அவற்றைத் துப்பரவாக்கும் பணியில் இறங்கினர். வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மாவீரரின் தந்தை என்ற வகையில் இதில் அக்கறை காட்டினார். நிலமை தன்னை மீறிச் செல்லக் கூடும் என சிறீதரன் நினைத்ததினால் நிகழ்வை தன்கையில் எடுத்துக் கொண்டார். புலிகள் அனுஷ்டிப்பது போன்ற முறையில் அங்கு நிகழ்வு இடம்பெற்றது சிறீதரன் நல்ல ஒழுங்கமைப்பாளர் என்ற நிலையில் அவரது முயற்சிகளும் கைகொடுத்தது. மாவீரர் தின நிகழ்வில் பொதுச் சுடரை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஏற்றுவது வழக்கம் இதனை நிராகரித்து சிறீதரன் தானே ஏற்றினார். பலர் சுட்டிக்காட்டிய போதும் இவர் தானே ஏற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக நின்றார். இது பல்வேறு விமர்சனங்களையும் சிறீதரனுக்குக் கொண்டு வந்துள்ளது. மாவீரரின் குடும்பத்தவர் ஒருவரை ஏற்ற விட்டு சிறீதரன் சற்று ஒதுங்கியிருந்தால் அவரது மதிப்பு உயர்ந்திருக்கும். அவர்கள் தானாகவே தன் மதிப்பை கீழிறக்கியுள்ளார். தமது அலுவலகங்களில் தாம் ஏற்றுவது வேறு. பொது இடத்தில் வழமையைப் பின்பற்றுவதே நாகரீகமானது. இந்தச் செயல் மூலம் சிறீதரனும் மாவையும் மாவீரர் தின நிகழ்வை கட்சிஅரசியலாக்கிவிட்டனர். கட்சியின் பாவங்களைக் கழுவுவதற்கான சலவைத் தூளாக மாவீரர் தினத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அலுவலகத்திலேயே மாவீரர் தின நிகழ்வை நடாத்தியது. அது உணர்வு பூர்வமாக இருந்தது. அங்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது போராளிகளைக் கொண்டு பொதுச் சுடரை ஏற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தவிர துயிலுமில்லத்திற்குச் சென்று அஞ்சலியைச் செலுத்தியிருக்கலாம். படையினரின் கெடுபிடிகள் வரலாம் என்பதால் தவிர்த்தனர். அவர்களது அலுவலகத்தில் வைத்தே கட்சியின் செயற்பாட்டாளர் அலெக்ஸ் அரவிந் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கும் சில தயக்கம் இருந்தது. அரசியல் தீர்வைப் பிரச்சாரப்படுத்தும் முயற்சி, கிழக்கில் “எழுகதமிழ்” என்பவற்றை கைதுகள் பாதிக்கக் கூடும் என அவர்கள் கருதியிருக்கலாம். மொத்தத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் உணர்வு பூர்வமாக நிகழ்வு நடந்ததென்றே கூறவேண்டும்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது என்பது பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் முதலாவது தேசத்திற்காக விதையாகிய மாவீரர்களை என்றும் நாம் மறக்க மாட்டோம் என்பதை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு மறக்காமல் நினைவில் வைத்திருப்பதன் மூலம் தான் மாவீரர்களின் வரலாறுகளை அடுத்தசந்ததிக்கும் நாம் கடத்துகின்றோம். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை மீண்டும் ஒரு தடவை உலகத்திற்கு பறைசாற்றுகின்றோம்.

இரண்டாவது கூட்டு அடையாளத்தை வெளிப்படுத்துவதிலும் மாவீரர் தினம் பங்களிப்புச் செய்கின்றது. ஏனெனில் தமிழ் மக்கள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் கடந்து இந்த நிகழ்வில் ஒன்றுசேர்கின்றனர். இது சாதி, மத, பிரதேச, பால் வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒரு இனமாக நிற்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது.

மூன்றாவது, மாவீரர்களை நினைவு கூருவது என்பது அவர்களின் இலட்சியங்களை நாம் முன்னெடுப்போம் எனப் பிரகடனம் செய்வதே! இங்கு இலட்சியமென்பது இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே. உண்மையில் மாவீரர்களின் இலட்சியங்களை முன்னெடுக்காதவர்கள் அல்லது அது பற்றி அக்கறையில்லாதவர்கள். தமிழ் அரசியலை அந்த இலட்சியத்திலிருந்து விலக்கி கீழிறக்குபவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றே கூறவேண்டும். வெறுமனவே இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் மாவீரர்களின் நினைவுகூருவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. சாதாரணமாணவர்களை நினைவு கூரும் போது தமிழ் மக்களின் கூட்டு இலட்சியத்தை நினைவு கூறவேண்டியதில்லை.

நான்காவது மாவீரர் குடும்பங்கள், போராளிகள் குடும்பங்கள் தொடர்பான பொறுப்புணர்வை மாவீரர் தினம் வலிமையாக நினைவூட்டுகின்றது. இவர்கள் பொது இலட்சியத்திற்காகவே தமது உயிர்களைத் துறந்தவர்கள். எனவே அவர்களைப் பராமரிப்பது, அவர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவது தமிழ் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இதனை தமிழ்ச் சமூகம் மேற்கொள்ளாவிடின் தமிழ்ச் சமூகத்தைப் போல நன்றிகெட்ட சமூகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சுருக்கமாகக் கூறினால் மாவீரர்களில் அக்கறை அற்ற சமூகம் விடுதலைக்குத் தகுதியற்ற சமூகம்.

இந்த அடிப்படைகளில் பார்க்கும் போது இந்த மாவீரர் தினம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

அதில் முதலாவது எந்த நெருக்கடிகள் வந்தாலும் மாவீரர்களை நாம் கைவிட மாட்டோம் என மக்கள் சபதமெடுத்தமையாகும். கனகபுரம் துயிலுமில்லத்தில் இதனை நேரடியாகவே தரிசிக்க முடிந்தது. இளைஞர்கள் தாமாக திரண்டு சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர். பெரிய வேண்டுகோள்கள் எதுவும் இல்லாமல் மாவீரர் தின நிகழ்வில் மாவீரர் தின ஒழுக்க விதிகளை தாமாக பின்பற்றினர். அதுவும் பாடல் ஒலிக்கும் போது தொலைபேசிகளை நிறுத்தி தீபத்தைக் கையில் ஏற்றியபடி நிற்பார்களே அது மறக்க முடியாத உணர்வுக்காட்சி. நாம் ஒரு தேசமாக எழுந்து நிற்கின்றோம் என்பதை அது காட்டியது.

இரண்டாவது என்ன நெருக்கடி வந்தாலும் இலட்சியத்தைக் கைவிட மாட்டோம் என வெளிப்படுத்தியமையாகும். இந்த வெளிப்படுத்துகை இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ்த் தேசிய அரசியலை கீழிறக்கி அரைகுறைத் தீர்வுக்குள் அரசியல் தீர்வை முடக்கும் முயற்சியும் அதற்கு எம்மவர்களே துணை போகும் நிலையும் வளர்ந்துள்ள ஒரு சூழலில் இலட்சியங்களைக் கைவிடமாட்டோம் என பிரதிக்ஞை செய்வது மிகவும் முக்கியமானது.

இது விடயத்தில் மூன்றாவது தமிழ்த் தேசியம் என்கின்ற தமிழ் மக்களின் கூட்டு பிரக்ஞை  பலப்படுகின்றமையாகும். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பாதுகாப்பது அவசியம். தமிழ்த் தேசியம் இருக்கும் வரைதான் கூட்டுக் கோரிக்கையும் பலமாக இருக்கும். இந்தக் கூட்டுப்பிரக்ஞை தாயகம் கடந்து புலம், தமிழகம், ஏன் தமிழர் வாழும் உலக நாடுகளில் எல்லாம் வளர்கின்றது. இனிவரும் காலங்களில் நிலம், புலம், தமிழகத்திற்கப்பால் உலகில் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முன்வர வேண்டும். இந்த வகையில் உலக ரீதியில் தமிழ் அரசியலைப் பலப்படுத்துவதற்கும் மாவீரர் தின நிகழ்வு பங்களிப்புச் செய்கின்றது.

12/8/2016 6:09:02 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்