Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்புக்குள் அதிகரித்துவரும் உள்முரண்பாடுகள் மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை ஏற்படுத்துமா?

கூட்டமைப்புக்குள் அதிகரித்துவரும் உள்முரண்பாடுகள் மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை ஏற்படுத்துமா?
யதீந்திரா

 

கடந்த பத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது ஒரு குரலில் ஒலிக்கும் என்னும் கேள்வியுடன் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தேன். த.தே.கூட்டமைப்பின் அரசியல் போக்கு குறித்தும், கூட்டமைப்புக்கள் வலுவடைந்து வரும் உள் முரண்பாடுகள் மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை எற்படுத்துமா, அதற்கான ஏது நிலைகள் எவ்வாறுள்ளன போன்ற விடயங்களை இப்பத்தியில் ஆராய முயல்கிறேன். முதலில் பிறிதொரு விடயத்தை இவ்விடத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தற்போது த.தே.கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இராஜவரோதயம் சம்பந்தன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைவரா? கடந்த பத்தியில் கூட்டமைப்பின் குரல் என்பது இன்றைய சூழலில் சம்பந்தனின் குரலாக இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தது பற்றி ஒரு நண்பர் இவ்வாறு கேட்டிருந்தார் – எல்லோரும் சம்பந்தன் பின்னால் இழுபட்டுக் கொண்டிருப்பது சரியானதா? முன்னர் பிரபாகரன் விடயத்தில் இதுதானே நடந்தது. இவ்வகை ஆதங்கங்களை இப்பத்தி விளங்கிக் கொள்கின்றது. சம்பந்தன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர் என்று இப்பத்தி கருதவில்லை. சம்பந்தன் மட்டுமல்ல எவருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல.

காலம் இன்றைய சூழலை கையாளும் பொறுப்பை சம்பந்தன் தோளில் இறக்கியுள்ளது. ஆனால் இன்றைய காலத்தை சம்பந்தன் முறையாக கையாளுவதற்கும் சிறிது அவகாசம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. சம்பந்தன் பற்றி எனது பத்திரிகை நண்பர் ஒருவர் சுவாரசியமாக ஒரு விடயத்தைக் கூறுவார் – 25 வருடங்கள் நாங்கள் பிரபாகரனுக்கு ஒரு பிளாங் செக் புத்தகத்தை எழுதிக் கொடுத்திருந்தோம். பிரபாகரன் பேச்சுவார்த்தை என்றால் நாங்கள் ஆகா என்று தலையசைத்தோம். அவர் சண்டை என்றாலும் ஆகா என்று தலையசைத்தோம். இப்படியெல்லாம் சிந்தித்த நாம் ஏன் சம்பந்தனுக்கு ஒரு ஐந்து வருடங்களை கொடுத்துப் பார்க்கக் கூடாது. அதில் என்ன தவறு இருக்க முடியும்? சற்று ஆழமாகப் பார்த்தால் இதில் உண்மை இருக்கிறது. எனவே இன்றைய உள்ளக - வெளியக அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டுதான் நான் கடந்த பத்தியில் அவ்வாறு கூறியிருந்தேன். எனினும் சம்பந்தன் குறிப்பான இன்றைய சூழலை சரியாக கையாளாது விட்டால் மாற்றுத் தலைமை ஒன்று அவசியப்படலாம்.

இப்போது விடயத்திற்கு வருவோம் - தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று, இதற்கு முன்னரும் பல தடவைகள் நான் எழுதியிருக்கிறேன். ஆயினும் அதற்கான முயற்சியில் பெரியளவில் முன்னேற்றங்கள் எவுதும் இதுவரை ஏற்படவில்லை. இறுதியில் செவிடர் காதில் சங்கூதி என்னபலன் என்னும் சலிப்பே ஏற்படுகின்றது. சமீபத்தில் இரா.சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜந்து கட்சிகளின் தலைவர்களும் சந்தித்திருந்தனர். இதன் போது கூட்டமைப்பை ஒரு கட்டுறுதியான அரசியல் அமைப்பாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் இடம்பெற்று சில நாட்களிலேயே தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை கூட்டமைப்பில் அனுமதிக்க முடியாது என்று மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியினர் கையெழுத்திட்டு சம்பந்தனுக்கு அனுப்பியுள்ளதாக அரியநேந்திரன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் புளொட் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றது. என்று தீரும் கூட்டமைப்பினரின் இவ்வகை ஊடல்?

இன்று கூட்டமைப்புக்குள் இடம்பெற்றுவரும் முரண்பாடுகளை இப்பத்தி இரண்டு வகையில் பார்க்க முயல்கிறது. ஒன்று கூட்டமைப்பிற்கு சட்டரீதியாக தலைமை தாங்கிவரும் இலங்கை தமிழசுக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள். அடுத்தது, ஐந்து கட்சிகளின் கூட்டு முன்னணி என்னும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைக்குள் நிலவும் முரண்பாடுகள். இதுவரை தமிழரசுக் கட்சிக்குள் எநதவொரு முரண்பாடும் இல்லை என்னும் தோற்றமே தெரிந்தது. ஆனால் சம்பந்தன் சிங்கக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும், பின்னர் அதனை மறுத்து அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என இரா.சம்பந்தன் கூறியதும் முதல் முதலாக தமிழரசுக் கட்சிக்குள் நிலவிவந்த முரண்பாட்டை வெள்ளிடைமலையாக்கியது. உண்மையில் தமிழரசுக் கட்சிக்;குள் ஏலவே ஒரு முரண்பாடு நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது. அது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டு முன்னுக்கு கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட முரண்பாடு ஆகும்.

சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியல் பின்னணி கொண்ட ஒருவரல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணி வழக்கு விவகாரத்தில் ஆனந்தசங்கரிக்கு எதிராக, சம்பந்தன் சார்பில் நீதி மன்றத்திற்குச் சென்றவர். இதன்போது ஏற்பட்ட தொடர்பின் காரணமாகவும் சம்பந்தனின் தனிப்பட்ட விருப்பின் பேரிலும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். முன்னர் சம்பந்தனுக்கு நீலன் திருச்செல்வம் உதவியது போன்று இப்போது சுமந்திரன் உதவியாக இருக்கின்றார். ஆனால் சம்பந்தனுக்கான உதவி என்பது இறுதியில் சுமந்திரனை மற்றவர்கள் அனைவரைக் காட்டிலும் முதன்மையானவராக தரமுயர்த்தியிருக்கிறது. இன்று பலரும் சம்பந்தனுக்கு அடுத்த தலைவராக சுமந்திரனையே பார்க்க முயல்கின்றனர், குறிப்பாக ராஜதந்திர வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி என்றால் சம்பந்தன் இல்லாவிட்டால் சுமந்திரன் என்னும் நிலைமையே உருவாகியிருக்கிறது. இதுவே தமிழரசுக் கட்சி வட்டாரங்களுக்குள் புகைந்து கொண்டிருக்கும் முரண்பாட்டின் பின்னணியாகும். இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் தமிழரசுக் கட்சி சம்பந்தனுக்கு அடுத்த தலைவர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

அடுத்த முரண்பாடு, த.தே.கூட்டமைப்பை ஓர் அரசியல் அமைப்பாக பதிவு செய்வது தொடர்பான முரண்பாடுகள். விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் அரசியலில் இருந்து அகற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், மேற்படி முரண்பாட்டுக்கு ஒரு இணக்கமான தீர்வைக் காண முடியவில்லை. இவ்வகை முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் த.தே.கூட்டமைப்பு பிளவுறுவதிலேயே முடிவுறலாம். மாகாணசபை தேர்தலின்போது வேட்பாளர் தெரிவில் மேற்படி முரண்பாடுகள் மிகவும் தீவிரமடையலாம். அது இறுதியில் கூட்டமைப்பு இரு அணிகளாக உடைவுறும் நிலைமையை தோற்றுவிக்கலாம். இது பற்றி முன்னரும் இந்த பத்தியாளர் எச்சரித்திருக்கின்றார்.

இன்றைய சூழலில் வடக்கு கிழக்கில் வலுவான தமிழ் அரசியல் அமைப்புக்கள் இரண்டுதான் உண்டு. ஒன்று த.தே.கூட்டமைப்பு. இரண்டு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி. ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் காணப்படும் அடிப்படையான வேறுபாடு – அரசுடன் இணைந்திருப்பதும் - அரசுக்கு வெளியில் இருப்பதும்தான். சம்பந்தன் அரசுக்கு வெளியில் இருந்து சிங்கக் கொடியை பிடித்திருக்கின்றார். டக்ளஸ் தேவானந்தா சிங்கக் கொடியின் கீழ் இருக்கும் அரசாங்கத்துடன் இருக்கின்றார். ஆனால் அரசுக்கு வெளியில் இருப்பதே கூட்டமைப்பின் பலமாகவும் அரசுடன் இருப்பது டக்ளஸ் தேவானந்தாவின் பலவீனமாகவும் இருக்கின்றது. ஒருவேளை டக்ளஸ் தேவானந்தா (வீணையில்) தனித்து நின்று அரசியல் செய்யும் முடிவை எடுப்பாராயின் வடகிழக்கில் த.தே.கூட்டமைப்பிற்கான ஒரு வலுவான மாற்றுத் தலைமையாக ஈ.பி.டி.பி ஆல் கொடுக்க முடியும். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி தனித்து நடாத்திய மேதின நிகழ்வில் சுமார் 8000 – 10000 வரையான மக்கள் பங்குகொண்டிருந்தனர் என்பது ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியிராத விடயம் ஆகும். இவ்வாறான நிலைமைகள் எத்தகைய செய்தியை செல்லுகின்றன? மக்கள் மாற்றுத் தலைமை ஒன்றை விரும்புகின்றனர் என்பதையா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் த.தே.கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று அத்தகையதொரு மாற்றுத் தலைமை ஒன்றை வழங்க  முற்பட்டிந்தார். எனினும் அவரின் யதார்த்தமற்ற அரசியல் கோசங்கள் அவருக்கான இடத்தை கொடுத்திருக்கவில்லை. எனவே யதார்த்தபூர்வமான அரசியல் அணுகுமுறை, அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைமைகளின் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதொரு சிறந்த வேலைத்திட்டம், இவற்றுடன் ஒரு தரப்பு முயற்சிக்குமாயின் மக்கள் அத்தகையதொரு அணியின் பக்கமாக திரும்ப மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அத்தகையதொரு மாற்றுத் தலைமை த.தே.கூட்டமைப்பின் உடைவிலும் வரலாம் அல்லது த.தே.கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்தும் வரலாம். 

5/31/2012 1:37:28 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

தமிழர் விடுதலௌக் கூட்டமைப்பு உடையக்கூடும் என்று நான் கருதவில்லை. இன்றய வராளாற்றுப் பணியின் பெரும்பங்கு சம்பந்தன் தலைமையில் செய்யப் படவேண்டி உள்ளது. இணைந்த வடகிழக்கு மக்களின் அடையாளமாகவும் வடகிழக்கு முஸ்லிம்களோடு நல்லுறவுள்ள ஒருவராகவும் இலங்கை அரசியலில் செயல்படும் சர்வதேச இராசதந்திரத்தைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியவராகவும் சம்பந்தன் இருக்கிறார். சிஙக் கொடியை ஏற்றினாலும் அரசாங்கம் எமக்கு எதையும் தராது என்ற அவரது சேதி மேன்கின் சர்வதேச அரங்கில் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது.
சம்பந்தரைத் தோற்கடிப்பதன்மூலம் விடுதலை விரும்பும் வடகிழக்கு மக்களின் இணைந்த ஆணையை தோற்கடிக்கவும் திருகோணமலையை கைப்பற்றவும் அரசு சதிசெய்தது. அந்தத்தருணத்தில் அவருக்கு எதிராக ஒரு வேட்ப்பாளரை நிறுத்திய கொழும்புத் தமிழ் மேலோர் அரசியல் தொடர்பாக வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் சம்பந்தர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். .
சம்பந்தன் தமிழரசு மற்றும் கூட்டமைப்புக் கட்சிகளின் மக்கள் தெரிவு செய்த பிரதி நிதிகள் ஊடாக செயல்படவேண்டும். அதற்கான மக்கள் ஆணையை மட்டுமே அவர் பெற்றிருக்கிறார். அரசியலுக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் எம்.திருச்செல்வம் போன்ற கொழும்புவாசிகள் தேவைப்படலாம். ஆனால் அவர்களுக்கு பின்னே செல்வது ஆபத்தானது என்பதையே வரலாறு காட்டுகிறது. இது சுமந்திரனுக்கு மட்டுமல்ல க்ஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் பொருந்தும்.
கூட்டமைப்பை மக்கள் பிரதி நிதிகளது அனுசரணையோடு முன்னெடுத்துச் செல்வது என்கிற தனக்கு மக்கள் வளங்கிய ஆணைக்கு நீண்டகால அடிப்படையில் சம்பந்தர் புறக்கணிக்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். மீண்டும் ஒரு வளக்கறிஞர்களின் அரசியல் தலைமை நமக்கு வேண்டாம்.

வ.ஐ.ச.ஜெயபாலன், சென்னை
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்