Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வடக்கு – கிழக்கு இணைப்பும் அரசியல் தீர்வும் ?

<p>வடக்கு – கிழக்கு இணைப்பும் அரசியல் தீர்வும் ?</p>
யதீந்திரா

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது உடனடியாக சாத்தியமான ஒன்றல்ல என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் சார்பில் அரசியல் யாப்பு விவகாரங்களை கையாளுபவருமான சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இன்றைய நிலையில் சுமந்திரன் கூறும் கருத்துக்கள் மிகவும் உன்னிப்பாக நோக்கத்தக்கவை ஏனெனில் கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல எவரையும் விடவும் அதிக விடயங்களை அறிந்தவர் சுமந்திரன் ஒருவர்தான். உண்மையில் புதிய அரசியல் யாப்பு விவகாரங்களில் சம்பந்தனை விடவும் அதிகம் தெரிந்தவர் சுமந்திரன். ஏனெனில் அதன் சார்பில் அரசாங்கத்துடன் தொடர்ச்சியான உரையாடல்களில் அவரே ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் சுமந்திரனின் கூற்றின் படி, வரப்போவதாக சொல்லப்படும் அரசியல் தீர்வில் வடக்கு – கிழக்கு இணைப்பு இடம்பெறப் போவதில்லை என்பது வெள்ளிடைமலை. 

வடக்கு – கிழக்கு இணைப்பு என்னும் கேரிக்கை என்பது தமிழர் தாயகக் கோட்டுப்பாட்டுடன் தொடர்புடைய ஒன்று. அன்று தமிழ் மக்களின் உரிமையை முன்வைத்து இயங்கிய அனைத்து இயக்கங்களும், மிதவாத தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கைதான் வடக்கு – கிழக்கு இணைப்பு. இதில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்பதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக நின்றதன் காரணத்தினால்தான் அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்குள் மேற்படி இணைப்பு உள்வாங்கப்பட்டது. அந்த வகையில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்று இன்றும் பேச முடிகிறதென்றால் அதற்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம்தான் காரணம். அன்று இந்தியா இந்த விடயத்தில் உறுதியாக தலையீடு செய்யாது இருந்திருந்தால், அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதுமே உடன்பட்டிருக்காது. ஆரம்ப பேச்சு வார்த்தைகளின் போது, ஜே.ஆர் வடக்கு – கிழக்கு இணைப்பு விடயத்தில் இணங்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கான இரு நாடுகளும் நிறைவேற்ற வேண்டிய நேர அட்டவணை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென, 1986ம் ஆண்டு, இந்திய அமைச்சர்களான சிதம்பரம் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் இலங்கைக்கு வந்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டது. 

இந்த விடயங்களில் ஒன்றாகவே வடக்கு- கிழக்கு இணைப்பும் இருந்தது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறையை நீக்க வேண்டும் (Exclusion) என்னும் நிபந்தனையை இந்தியா உறுதியாக அழுத்தியது. ஆரம்பத்தில் இதற்கு இணக்கம் தெரிவிக்காத ஜே.ஆர். பின்னர் இந்திய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இணங்கினார். இரண்டு தெரிவுகளில் ஒன்றான வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு இணக்கம் தெரிவித்தார். ஆனால் இதிலும் ஜே.ஆர் ஒரு கைதேர்ந்த ராஜதந்திரியாக நடந்துகொண்டார். இரண்டாவது நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தை கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்குதல் என்னும் நிபந்தனையை கிழக்கு மாகாணத்திற்குள் அப்பாறையும் உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு இணைப்பாக மாற்றிக் கொண்டார். இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியவாறு புதிய கிழக்கு மாகான சபையொன்று உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஜே.ஆர் இணைப்பிற்கு இணங்கிய போதிலும் கூட, கிழக்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை காரணம் காட்டி அதனை ஒரு தற்காலிக இணைப்பாக பேணிக்கொள்வதில் வெற்றி பெற்றார். ஒரு வருடத்திற்குள் கிழக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதன் மூலம், அதனை நிரந்தரமாக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது. இவ்வாறு தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 1988 நவம்பர் மாதத்தில் இடம்பெற்று, இணைந்த வடக்கு கிழக்கின் முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் பொறுப்பேற்றார்.  

ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் தலையீடு தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான முரண்பாட்டை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார். அதன் பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தமும் அதன் மூலமான வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையும் முடிவுக்கு வந்தது. மேற்படி ஒப்பந்தம் முடிவுக்கு வந்த போதிலும் கூட, வடக்கு – கிழக்கு இணைப்பு நிர்வாக ரீதியாக ஒரு அலகாகவே தொடர்ந்தது. இந்தக் காலத்தில் இணைந்த நிர்வாகத்தின் கீழ்தான், தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்கள் நிர்வகிக்கப்பட்டனர். ஆனால் நிர்வாகம் என்பது வேறு அரசியல் அலகு என்பது வேறு. இந்த நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு – கிழக்கு மகாணங்களை இணைக்க முடியாது என்னும் வாதத்தையே அரசாங்கம் முன்வைக்கும். இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு மகாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழின் போது, வடக்கு – கிழக்கு இணைப்பு மீளவும் உரத்து வலியுறுத்தபபட்டது. அது போன்று கிழக்கிலும் ஒரு எழுக தமிழ் கோரிக்கையை முன்வைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் மக்களின் கோரிக்கையை ஓங்கியொலித்தல் என்;னும் இலக்கில் முக்கியமானதுதான் ஆனால் அப்படி ஒலிப்பதால் மட்டும் வடக்கு – கிழக்கு இணைந்துவிடப் போவதில்லை. மேலும் கிழக்கின் எழுக தமிழின் போது, ஏற்பாட்டுத் தவறுகளால் ஒரு வேளை, தமிழ் மக்கள் அதிகளவு பங்குகொள்ளாது விட்டால், அது ஒரு வேளை இணைப்புக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவில்லை என்பதாவும் உருமாற்றப்படலாம். இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 

இதற்கிடையில் திருகோணமலையை விட்டுவிட்டு வடக்கு – கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்களுக்குமான ஒரு தனியலகுடன் கூடிய வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தொடர்பிலும் சிந்திப்பதாக முன்னர் சில தகவல்கள் கசிந்தன. பிறிதொரு தகவலின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டமொன்று தொடர்பிலும் சிந்திக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை அறியமுடியவிட்டாலும் கூட, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை தமிழரின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான எந்தவொரு இடைவெளியையும் அரசாங்கம் விட்டுவைக்காது. இந்த நிலையில் இந்த விடயங்களை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது? இதில் எதனை விட்டுக் கொடுத்து, எதனை பாதுகாப்பது? 

இந்திய - இலங்கை ஒப்பத்தத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான காலத்தை எடுத்து நோக்கினால், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது ஒரு அரசியல் கோரிக்கையாக இருக்கவில்லை மாறாக அது தமிழர் தாயக கோட்பாட்டின் அடிப்படையாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் அரசியல் பரப்பு முற்றிலுமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் மட்டும் இருந்ததாலும், அவர்களது நிலைப்பாடு ஒரு தனிநாட்டை உருவாக்குவதாக இருந்ததாலும் வடக்கு – கிழக்கு இணைப்பை அரசியல் ரீதியாக வலியுறுத்த வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அப்போதும் கூட நாடாளுமன்ற தேர்தல்கள் ஒவ்வொன்றின் போதும், தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடையான வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகப்பகுதி என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டே வந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் இந்த விடயத்தை எதிர்க்கவில்லை. இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும், இணைந்த வடக்கு – கிழக்கு என்னும் அடிப்படையில்தான் அரசியல் தீர்வு அமைந்திருக்கும் என்பது தெட்டத்தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அரசியல் தீர்விற்கான உள்ளடக்ககளில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமில்லை என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் பிறிதொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு மட்டும்தான் சாத்தியமில்லையா அல்லது ஒன்றுமே சாத்தியமில்லையா? 

<p>வடக்கு – கிழக்கு இணைப்பும் அரசியல் தீர்வும் ?</p>

சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பை தீர்மானிப்பவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன், அரசியல் யாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவை கோரியிருக்கிறார். இதன் போது ரணில் விக்கிரமசிங்கவும் சென்றிருக்கிறார். அரசியல் சம்பிராதங்களின் படி ஒரு நாட்டின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் போது, அந்த நாட்டின் அனைத்து தரப்புக்களினதும் ஆதரவை கோருவதும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஒரு அரசியல் நடைமுறைதான். ஆனால் சம்பந்தன் வெறும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல மாறாக தமிழ் மக்களின் தலைவருமாவார். சம்பந்தனுக்கு பதிலளித்திருக்கும் மகிந்த, முதலில் விடயங்களை முன்வையுங்கள் பின்னர் நான் அது பற்றி கூறுகிறேன் என்று தெரிவித்திருக்கின்றார். தான் விரும்பும் ஒன்றிற்காக மகிந்தவின் ஆதரவை பெறமுடியுமென்று எவ்வாறு சம்பந்தனால் நம்ப முடியும்? இதிலிருந்தே சம்பந்தன் ஆட்சி மாற்றத்தின் போது தென்னிலங்கையின் அரசியல் சூழலை துல்லியமாக மதிப்பிட்டு, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்கவில்லை என்பது தெட்டத்தெளிவாகிறது. 

மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே முதன்மையான பங்குண்டு. ஏனெனில் அன்றைய சூழலில், கூட்டமைப்பின் ஆதரவின்றி இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை எந்த வகையிலும் ஏற்படுத்த முடியாதென்னும் நிலைமையே இருந்தது. இந்த நிலைமைகளின் போது கூட்டமைப்பிடம் இரண்டு தெரிவுகள்தான் இருந்தன. ஒன்று, பொது எதிரணியுடன் பேரம்பேசி, அவர்களை கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்துவது. இரண்டு, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகளின் போது நடுநிலைமை வகிப்பது. இதில் வெல்லுபவர் எவராயினும் அவருடன் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி பேசுவது. ஆனால் மகிந்தவின் அதீத சீனச்சார்பால் ஏற்பட்டிருந்த பதட்ட நிலையில் இந்திய – அமெரிக்க கூட்டு நலன்களுக்கு ஒரு ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. அவர்களின் உதவி கூட்டமைப்பிற்கு தேவை என்பதால் அவர்களை விரோதிக்கவும் முடியாது என்னும் நிலைமை இருந்ததும் உண்மைதான். இந்த இடத்தில் பொது எதிரணிக்கான ஆதரவை மிகவும் புத்திசாதுர்யமான ஒரு பேரம்பேரல் அரசியலாக மாற்றியிருக்க முடியும். ஆனால் அப்படி சம்பந்தன் செய்யவில்லை. மகிந்த ஒரு கொடுங்கோலன் எனவே அவரை அகற்றுவதே முதல் வேலையாக இருக்க வேண்டும் என்பதே சம்பந்தனின் வாதமாக இருந்தது. எதிர்பார்த்தது போன்றே, மகிந்தவும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இன்று அதே கொடுங்கோல் மகிந்தவிடம் சென்று சம்பந்தன் அரசியல் யாப்பிற்கு அதரவு தருமாறு கோருகின்றார். ஒருவரை தோற்கடித்துவிட்டு, அவரிடமே சென்று எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்பது எந்தளவிற்கு அரசியல் முதிர்ச்சிமிக்கது?

உண்மையில் ஆட்சி மாற்றம் மகிந்தவை அதிகாரத்திலிருந்து இறக்கியது போன்று மகிந்தவை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. இதன் காரணமாகவே இன்று மகிந்தவின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது? மகிந்த வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு ஆதரவளிப்பார் என்று சம்பந்தன் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மகிந்த சமஸ்டி தீர்விற்கு ஆதரவளிப்பார் என்று சம்பந்தன் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மகிந்த ஒற்றையாட்சியை நீக்குவதற்கு ஆதவளிப்பாரென்று சம்பந்தன் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மகிந்த பவுத்தத்தை விட்டுக்கொடுப்பார் என்று சம்பந்தன் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அரசியல் தீர்வு விவகாரம் என்னும் ஒன்றைக் கொண்டுதான் தன்னை ஒரு வலுவான சக்தியாக முன்னிறுத்தலாம் என்பதே மகிந்தவின் திட்டமாக இருக்கிறது. தான் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்படவில்லை மாறாக திரைமறைவு சதி முயற்சிகளால் தோற்கடிப்பட்டதாக நம்பும் மகிந்த ராஜபக்ச எந்த வகையில் அந்தச் சதிக்கு முண்டுகொடுத்த கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். ஏற்கனவே அரசாங்கம் தொடர்பில் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்திகள் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு அரசாங்கம் கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முன்னேற்றங்கள் எதனையும் காண்பிக்காமையே காரணமாகும்.

<p>வடக்கு – கிழக்கு இணைப்பும் அரசியல் தீர்வும் ?</p>

இந்த நிலையில் கனிந்துவரும் சூழலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றே மகிந்த ராஜபக்ச யோசிப்பார். மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்று விரும்பும், அதற்கு முயற்சிக்கும் ஒரு நபர் எப்படி யோசிப்பாரோ அப்படித்தான் மகிந்த யோசிப்பார். மகிந்த ஒரு சூடுகண்ட பூனை. அது இனி எப்படி அடுபங்கரைக்கு வாருங்கள் என்னும் அழைப்புகளுக்கு ஆதரவாக இருக்கும். இதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. இதில் ஆச்சிரியப்பட வேண்டியது சம்பந்தனின் நம்பிக்கை தொடர்பில்தான். எவரை தோற்கடிப்பது நல்லதென்று சம்பந்தன் சொன்னாரோ தற்போது அவரிடமே சென்று உதவும் படி கேட்கிறார். இந்த நிலைமைகளை சம்பந்தன் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்? வடக்கு - கிழக்கு இணைப்பை எப்படி சாத்தியப்படுத்தப் போகிறார்? சமஸ்டி தீர்வை எப்படி சாத்தியப்படுத்த போகிறார்? ஒரு வேளை இதற்கெல்லாம் ஒரு பதில் சம்பந்தனிடம் இருக்கலாம் - அதுதான் நாங்கள் முயற்சித்தோம் ஆனால் மகிந்த எல்லாவற்றையும் குழப்பிவிட்டார். அரசாங்கம் இப்படித்தான் சொல்லப் போகிறது- அரசாங்கத்தின் அனுகுமுறைதானா சம்பந்தனின் அனுகுமுறையும்? 

12/17/2016 1:35:42 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்