யதீந்திரா
1977 ஆம் ஆண்டு. இடம் மட்டக்களப்பு – தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளம் தலைவர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார் – இளைஞர்களே வெகுண்டெழுங்கள் - நாங்கள் ஒரு காலத்தில் சிறப்பான போராடும் இனமாக இருந்தவர்கள் - நாங்கள் கட்டாயமாக எங்களது தாய் நிலத்தை மீளவும் உறுதிப்படுத்த வேண்டும் (we were once a great warrior race, we must reclaim our mother land – Learning politics from Sivaram, P:52) - 2012 ஆண்டு. இடம் அதே மட்டக்களப்பு – தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஐவரோதயம் சம்பந்தன் அவர்கள் பேசியிருக்கின்றார்
'நாம் தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்புகளைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்தவர்கள் நாம்'
தனிநாட்டுக் கேரிக்கையை முன்வைத்து, அதற்காக போராடுமாறு தூண்டிய கட்சியின் வழிவந்த இரா.சம்பந்தன் எவ்வாறு இவ்வாறு சொல்ல முடியும்? இது தூண்டப்பட்டோரின் கேள்வியாக இருக்கிறது.
இந்த பத்தியில் இரா.சம்பந்தனின் மேற்படி கூற்று குறித்தும் அதன் பின்புலங்கள் குறித்தும் சில விடயங்களை பதிவு செய்ய முயல்கிறேன். ஈழத் தமிழர் அரசியலின் ஒரு பகுதி சாத்வீகப் போராட்டத்திலும், பிறிதொரு பகுதி ஆயுதப் போராட்டத்திலுமாக கழிந்திருக்கிறது. இதுதான் நமது பொது புத்தி அவதானம். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றை சுட்டிக் காட்டும் நோக்கிலேயே இத்தகையதொரு வகைப்படுத்தலை நாங்கள் செய்துகொள்வதுண்டு. ஆனால் இந்த வகைப்படுத்தலையே சிலர் தங்களுக்கு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டனர். இந்த பத்தி ஒரு கேள்வியை வெளிப்படையாக முன்வைக்க விளைகிறது? உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பிரதிபலித்துவந்த தமிழரசுக் கட்சியினர், பின்னர் அதன் வழி வந்த மிதவாதத் தலைவர்கள் என்போர் வடகிழக்கில் ஒரு உறுதியான சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனரா? மிதவாதத் தலைவர்கள் சாத்வீகப் பாதையில் அர்ப்பணிப்புடன் இருந்திருப்பின் ஈழத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறை அரசியல் வேர்கொண்டிருக்குமா? அது இந்தளவு தூரம் விரிவு பெற்றிருக்குமா?
சமஸ்டி, தனிநாடு, மாவட்ட சபை என்றெல்லாம் காலத்திற்கு காலம் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் கோரிக்கைகளை சுருக்கியும், பெருப்பித்தும் கொண்டிருந்த மிதவாதத் தலைமைகள் எக்காலத்திலுமே சாத்வீகப் போராட்டத்தை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல எத்தனித்திருக்கவில்லை. தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்க எத்தனித்திருக்கவில்லை. இலங்கையில் தமிழரசுக் கட்சியினர், சாத்வீகப் போராட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்த காலத்தில் இந்தியாவையே உலுக்கியெடுக்கும் வகையிலான சாத்வீகப் போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆந்திரத் தலைவரான பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து, 1952இல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்கள் அதிகரித்துச் செல்ல, கூடவே வெகுசனப் போராட்டமும் வளர்ந்து சென்றது. ஆனால் தனது கோரிக்கையில் இம்மியளவும் தடுமாறாத ஸ்ரீராமுலு 58ஆவது நாள் இறந்து போனார். அவரது இறப்பு ஆந்திரா முழுவதும் கிளர்சிப் போராட்டங்களை பரப்பியது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா கண்ட மிகப்பெரிய வெகுசன எழுச்சியாக இது அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. பொட்டி ஸ்ரீராமுலு இறந்து, நான்காம் நாள் இந்திய மத்திய அரசு ஆந்திர மாநிலக் கோரிக்கைக்கு இணங்கியது. இதன் தொடர்ச்சியாகவே 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தனது கோரிக்கைக்காக தன்னை இழந்து மக்களை வெற்றி பெறச் செய்த பொட்டி ஸ்ரீராமுலு போன்றதொரு தலைவரை ஈழத் தமிழ் மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆகக் குறைந்தது அத்தகைய முனைப்புள்ள தலைவர்களைக் கூட ஈழத் தமிழ் மக்கள் பெற்றிருக்கவில்லை.
1956ஆம் ஆண்டு காலிமுகத் திடலில் நடைபெற்ற சில மணித்தியால சத்தியாக்கிரகமும், 1956 இல் மேற்கொள்ளப்பட்ட திருமலை யாத்திரையும், 1961ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரு மாத சத்தியாக்கிரகப் போராட்டமும்தான் தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்களாகும். இந்த பின்னணியில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. சமஸ்டிக் கோரிக்கைக்காக ஒரு ஸ்ரீராமுலு போன்று செயலாற்ற முடியாமையின் கையறு நிலையை மறைக்க தனிநாடு என்னும் சுலோகத்தை கையிலெடுத்தனர் கூட்டணியினர்.
மிதவாதிகள் முன்வைத்த கோரிக்கை உண்மையானதென்று அப்பாவி இளைஞர்கள் நம்பினர். இதுதான் ஈழத் தமிழர்களின் பிற்கால அரசியல் வரலாறாக பரிணமித்தது. அன்று தோற்றம் பெற்ற அனைத்து விடுதலை இயங்கங்களும் மிதவாதிகளின் தமிழீழ சுலோகத்தையே தாங்கியிருந்தனர். இறுதியில் ஏனைய இயங்கங்களை தடைசெய்து, செல்வாவின் கனவை தன்னால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியுமென்று நம்பியவர் பிரபாகரன். 2002ஆண்டு, நீண்ட காலத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு முன் தோன்றிய பிரபாகரன் - இப்போதும் நீங்கள் தமிழீழம் என்னும் கோரிக்கையில்தான் இருக்கின்றீர்களா அல்லது மாற்று தீhவு குறித்து யோசிப்பீர்களா, என்று ஒரு ஊடகவியலாளர் கேட்டதற்கு - இவ்வாறு பதிலளித்திருந்தார் - இது எங்களின் கோரிக்கை அல்ல - இது தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டு, 1977ஆம் ஆண்டு தேர்தலில் எங்களது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அந்த மனுவைத்தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஆனால் 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய புதிய தலைமுறையினருக்கும் தமீழீழ கோரிக்கைக்கும் எந்தவொரு ஜனநாயக ரீதியான தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
தமிழரசுக் கட்சியினர் சாத்வீகப் போராட்டத்தை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்திருந்தால், 1976இல் தனிநாட்டு கோரிக்கையை தந்தை செல்வா முன்வைக்காது இருந்திருந்தால் - இத் தீவில் தமிழ் இளைஞர்கள் வன்முறை அரசியலை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. 1977ஆம் ஆண்டு தாங்கள் ஒரு மிகப் பெரிய சாத்வீகப் போராட்டத்தை நடாத்தியிருந்தால் இளைஞர்கள் வன்முறையின் பக்கமாகச் செல்வதை தடுத்திருக்க முடியும், அதில் தானும் ஒரு குற்றவாளிதான், என்பதை சம்பந்தன் முன்னர் எனக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒப்புக் கொண்டுமிருக்கிறார். (பார்க்க- புதினப்பலகை நேர்காணல்) ஆனால் இன்று வன்முறை அரசியலை தூண்டியவர்களே, வன்முறை அரசியலுக்கான அடித்தளத்தை உருவாக்கியவர்களே, தங்களால் உசுப்பப்பட்டு அள்ளுண்டு போனவர்களைப் பார்த்து நீங்கள் இரத்தக்கறை படிந்தவர்கள், நீங்கள் எங்களது புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி உங்களை சுத்தமாக்கிக் கொள்ள முயல்கின்றீர்கள் - என்று சொல்லும்போது அதனை கேள்விக்குள்ளாக்க வேண்டிய பொறுப்பு இப்பத்தியாளருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இது உண்மைகளை உரத்துச் சொல்ல வேண்டிய காலம்.
இன்னொரு உண்மையையும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது – கொலை அரசியலை தொடக்கி வைத்தவர்களே மிதவாதத் தலைவர்கள்தான். அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் வரக்கூடாது என்று சொன்னவர்கள் இயக்க இளைஞர்கள் அல்ல – இந்த சட்டம் படித்த நாகரீகமான தலைவர்கள்தான். தங்களது அரசியலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அல்பிரட் துரையப்பாவை அகற்ற வழியின்றி தடுமாறிய மிதவாதிகள், அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் வரக் கூடாது என்று மேடைகளில் அறை கூவினர். அன்றைய மேடைகளில் காசி ஆனந்தனும், வண்ணை ஆனந்தனும் தங்களது பெருந்தலைவர்களான செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோரின் ஆசியுடன், அல்பிரட் துரையப்பாவை எவராவது கொல்லுங்கள் என்று மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கு இயற்கை மரணம் வரக் கூடாது எனின் அதன் பொருள் என்ன? பின்னர் இதுவே புலிகளின் முதலாவது தாக்குதலாக பதிவு செய்யப்பட்டது.
அழித்தொழிப்பு அரசியல் ஆரம்பமாகியது. தூண்டியவர்கள் ஒதுங்கிக் கொள்ள, தூண்டப்பட்டவர்கள் தாம் எதற்காக வந்தோம், ஏன் தங்களுக்குள் அடிபடுகின்றோம் என்று தெரியாமலேயே அழிந்து போனார்கள். மக்கள் எல்லாவற்றினதும் பார்வையாளர்களானார்கள். இரா.சம்பந்தன் தனது பேருரையில் குறிப்பிட்டிருப்பது போன்று, 'அடைய முடியாத அசாத்தியமான அந்த ஒன்றுக்காக' தூண்டப்பட்டவர்கள் எல்லாம் வீழ்ந்து போக, மீண்டும் தூண்டியவர்கள் களத்தில் நின்று தங்களை சரியானவர்களாக காண்பிக்க முயல்கின்றனர். இது எந்தவகையில் நியாயம் - இவர்களால் தூண்டப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறுகளுக்கும் ஆட்பட்டு, பின்னர் ஜனநாயக வழிக்கு வந்தவர்களின் கேள்வியாக இருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கானதாகச் சொல்லப்படும் கடந்த அறுபது வருட கால அரசியலில், பங்கு கொண்டவர்கள் எவருமே தங்களை அப்பழுக்கில்லாதவர்களாகக் காட்டிக் கொள்ள முடியாது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் ஆனால் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த புரிதல் இருக்கும் போதும் மட்டும்தான் மக்கள் நலனை முன்னிறுத்தி மட்டும் சிந்திக்கக் கூடியதொரு கூட்டு அரசியல் சாத்தியமாகும்.
இரா.சம்பந்தனின் பேருரை அகநிலையில் இத்தகைய பல்வேறு விமர்சனங்களுக்குரியதாக இருக்கும் அதேவேளை தெற்கின் சூழலிலும் மாறுபட்ட வகையிலேயே நோக்கப்படுகிறது. தந்தை செல்வநாயகம் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் முன்வைத்துச் சென்ற தனிநாட்டுக் கோரிக்கை எப்படி கடந்த மூன்று தசாப்தங்களாக ஏழை மக்களின் துயரங்களுக்கு காரணமாகியதோ, அதே போன்று சம்பந்தன் ஐயா தனது இறுதிக் காலத்தில் முன்வைக்கும் அரசியல் சுலோகங்களும் விபரீதங்களின் அடிப்படையாக இருந்துவிடக் கூடாது. ஐயா சம்பந்தனின் உரையை மதிப்பிட்டிருக்கும் கலாநிதி தயான் ஜெயதிலக, பிரபாகரனின் மாவீரர் தின உரையில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் அப்படியே சம்பந்தன் உரையில் இடம்பெற்றிருப்பதை ஆதார பூர்வமாக நிரூபித்திருக்கின்றார். இது ஆபத்தான விளையாட்டு.