Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பான் கீ மூன்களின் மொழி தமிழருக்கு தெரியுமா?

பான் கீ மூன்களின் மொழி தமிழருக்கு தெரியுமா?
தெய்வீகன்

 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனது இலங்கை விஜயம் வழமைபோன்று சம்பிரதாயபூர்வமான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும் ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன் நூலக கட்டடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார்.

இந்த இரு பகுதியினரையும் தமிழர் தரப்பாக முன்வைத்து நடைபெற்று முடிந்த சந்திப்பினையும் இவர்களது எதிர்கால சந்திப்புக்கள் குறித்தும் ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கமாகும்.

எந்த ஒரு வெளிநாட்டு அதிகாரியும் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஒரு நாட்டுக்கு செல்கின்றபோது அந்த நாட்டின் சார்பில் அந்த அதிகாரியின் பின்புலம் சார்ந்து இயங்கும் அமைப்புக்கள் அல்லது தூதரகங்கள் மிகவும் வேகமான முன் ஆயத்தங்களில் ஈடுபடும். தங்களது வழக்கமான நடவடிக்கைகளிலும் பார்க்க மேலதிக பணிகளை மேற்கொண்டு வரப்போகும் அதிகாரிக்கு முன்கூட்டியே அவரது விஜயம் சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அவரும் தனது விஜயத்தின்போது சந்திக்கப்போகும் தரப்பினரின் முக்கியத்துவம் கருதி, அந்த அறிக்கைகளை வடிகட்டி தேவையானவற்றை மிகத் தரமாக பேசக்கூடிய வகையில் எடுத்துக்கொள்வார். இவ்வாறு அவர் பேசுவதற்கு தீர்மானித்துக்கொள்ளும் விடயங்கள், அக்காலப்பகுதியின் அரசியல் - இராணுவ - இராஜதந்திர விவகாரங்களை மையப்படுத்தியதாக அமையும். அத்துடன் அந்த நாட்டின் உள்விவகாரங்கள் மற்றும் பல்வேறு புறக்காரணிகளும் அந்த வடிகட்டிய பேசுபொருளில் செல்வாக்கு செலுத்தியிருக்கும்.

இப்படியான தயார்படுத்தலோடு வருகின்ற இந்த வெளிநாட்டு அதிகாரிகள் அநேகமாக எந்த சிக்கலுமின்றி தாங்கள் சந்திக்கும் தரப்போடு சரளமான பேசிவிட்டு சென்றுவிடுவார்கள்.

ஆனால், இவ்வாறு பேசவருகின்ற தரப்புக்களை தமது தேவைகளுக்கு ஏற்றவாறு திசைதிருப்பும் வகையில் மாற்றிக்கொள்ளுவதும் அவர்களின் வடிகட்டிய பேசுபொருளின் பாதையை மாற்றி எமக்கு தேவையான விடயங்களை நோக்கி அவர்களை அழைத்து செல்வதிலும்தான் அநேக தருணங்களில் இந்த அதிகாரிகளை சந்திக்கும் மறுதரப்பின் வெற்றி தங்கியிருக்கும்.

முக்கியமாக, விடுதலைப்புலிகளின் காலத்தில் சமாதான பேச்சுக்காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களை எடுத்து பார்த்தால் இந்த விவகாரங்களை சற்று ஆழமாக புரிந்துகொள்ளமுடியும்.

விடுதலைப்புலிகளின் சகல முடிவுகளையும் நகநுனியில் வைத்து பேசுவதற்கு முன்னிறுத்தப்பட்டவர் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் அவர்கள். அதேபோல, அவருக்கு ஈடு இணையாக விடுதலைப்புலிகளின் சார்பில் வன்னிக்கு வரும் வெளிநாட்டு தரப்புக்களை சந்தித்தவர் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

பான் கீ மூன்களின் மொழி தமிழருக்கு தெரியுமா?

வெளிநாட்டுத் தரப்புக்களுடன் இவர்கள் நடத்திய சந்திப்புக்கள் மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பார்த்தோமானால், அவற்றில் உச்ச தயார்படுத்தல்கள் காணப்படும். லண்டனுக்கும் வன்னிக்கும் இடையில் இடம்பெற்ற பல மணிநேர உரையாடல்களின் விளைவுகளை இந்த சந்திப்பின் பின்னர் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுக்களில் காணலாம். லண்டனில் அன்டன் பாலசிங்கம் அவர்களை சந்தித்த பின்னர் சொல்ஹெய்ம் விடுகின்ற அறிக்கையையும் வன்னியில் தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்த பின்னர் கொழும்புக்கான நோர்வே தூதுவர் விடுத்த அறிக்கையையும் எடுத்துப்பார்த்தால் அவற்றில் எந்த வித்தியாசங்களையும் காணமுடியாது. நோர்வேயின் இரண்டு தரப்பினருக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் இருவேறு உறுப்பினர்களால் இருவேறு இடங்களில் நடைபெற்ற சந்திப்பிக்களிலும் ஒரே விடயம்தான் கூறப்பட்டிருக்கும்.

அதேபோல, சமாதான பேச்சுக்கள் ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டையும் பேச்சுக்களின் தொடக்கப்புள்ளியை எவ்வாறு தயார்படுத்தவது என்பதனை கலந்தாலோசிப்பதற்கு லண்டனிலிருந்த அன்டன் பாலசிங்கம் அவர்கள் மிகுந்த சிரமங்களின் மத்தியில் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நேரடியாக பேசவேண்டியிருந்தது.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதன் ஆரம்பகாலம் முதல் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அனுபவஸ்தர் என்ற அடிப்படையில் அன்டன் பாலசிங்கம் அவர்கள் நன்கு தெரிந்துகொண்டிருந்தாலும் -

தன்னுடன் பேச வரப்போகின்ற சிறிலங்காவின் அரசுத்தரப்பினர் தன்னைவிட அரசியல் மற்றும் இராஜதந்திர ஞானத்தில் குறைந்த அனுபமே கொண்டவர்களாக இருந்தாலும்கூட -

மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அமைதிப்பேச்சுக்கள் குறித்து தான் சார்ந்த அமைப்பின் தலைவரை நேரில் சந்தித்து அந்த பேச்சுக்களுக்கான உரிய தயார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் விரும்பினார். விடுதலைப்புலிகளின் தலைமையும் அந்த பேச்சு நடவடிக்கைக்கு எவ்வாறான ஒரு குழுவை அனுப்புவது அதில் யார் யாரையெல்லாம் பங்குபெறச்செய்வது? ஒவ்வொரு சுற்றுப் பேச்சிலும் என்ன விடயங்களை பேசுவது என்ற வியூகங்களை தயாரித்தது.

இவ்வாறு நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்களையும் உற்று அவதானித்தால் ஒரு விடயத்தை அறிந்துகொள்ளலாம்.

அதாவது, ஆரம்ப கட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் போகப்போக அரசியல் பிரச்சினைகளையும் பேச்சு மேசைக்கு எடுத்துச்சென்ற விடுதலைப்புலிகளின் பேச்சுக்குழு –

அடுத்தடுத்த கட்டங்களில் எதிர்த்தரப்பை தமது வழியை நோக்கி இழுத்துக்கொள்ளும் வகையில் உபாயங்கள் நிறைந்த வியூகங்களை கையாண்டது.

இதைத்தான் பேச வரப்போகிறார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்த விடயங்களின் ஊடாக நுழைந்து எதிர்த்தரப்பினர் எதிர்பாராத திசையில் அவர்களை அழைத்து சென்று ஒரு முடிவை எடுக்கும் புள்ளியை நோக்கி அழுத்தம் கொடுத்தார்கள். சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் ஒரு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்ற புரிதலின் வெளிப்பாட்டை இது காண்பித்தது.

மேலே குறிப்பிட்டதுபோல, ஒவ்வொரு சந்திப்புக்களுக்கும் வருகின்ற வெளிநாட்டு தூதுவர்கள் முற்கூட்டியே ஒரு தயார்படுத்தலுடன் சந்திப்புக்களில் பங்குபற்றுவார்கள். தங்களின் விஜயத்தின்போது இதைத்தான் எதிர்தரப்பினர் பேசுவார்கள். ஆகவே, அதற்கு இப்படியான பதில்களை தாங்கள் வழங்கலாம் என்று ஏற்கனவே ஒரு பரந்த மாதிரி கேள்வி – பதில் கொத்துக்களுடன்தான் இந்த சந்திப்புக்கள் நடைபெறும்.

இவ்வாற பேசுவதற்கு செல்பவர்களும் அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதேவிடயங்களை பேசிவிட்டுவந்தால், அந்த வெளிநாட்டு அதிகாரிகளுக்கு அதைவிட ஒரு மனத்திருப்தி வேறொன்றுமாக இருக்காது. (பேச்சுக்கள் முடிவுற்றபின்னர் ஊடகவியலாளர்களுடன் சந்தித்து பேசும்போது இதைத்தான் 'சந்திப்பு திருப்தியாக அமைந்தது' – என்று கூறுகிறார்களோ என்னவோ)

விடுதலைப்புலிகளின் தரப்பு சந்திப்புக்கள் முன்னர் இவ்வாறான முரண்போக்கு வித்தைகளால் நிரம்பியிருந்தது. லண்டனிலும் வன்னியிலும் அவர்களை சந்திப்பதற்கு சென்ற நோர்வே மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு ஒவ்வொரு தடவையும் அழுத்தங்களை கொடுக்கும் வகையில் காய்கள் நகர்த்தப்பட்டன. அவர்கள் பேசுவதற்கு எதிர்பார்த்து வந்த விடயங்களுக்கு முற்றிலும் மாறான – அதேநேரம் அந்த பேசுபொருளுடன் தொடர்புடைய – விவகாரங்களின் வெவ்வேறான முனைகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது.

இதனை விடுதலைப்புலிகள் மாத்திரமல்ல, அரச தரப்பில் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பேச்சுக்குழுவும் பின்னர் வந்தவர்களும் தவறாது கைக்கொண்டார்கள். இந்த பேச்சுக்குழுவினரை தயார்படுத்துவதற்கு சர்வதேச மட்டத்தில் பல குழுக்கள் ஓயாது செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் பேச்சுக்குழுவை எவ்வாறாவாது தங்களது நிபந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கும் தங்களது தீர்மானங்களுக்கு தலையாட்ட வைப்பதற்கும் தாங்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பம் வாங்கி செல்வதற்கும் இந்த தரப்புக்கள் பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டன.

ஆனால், இவை எல்லாவற்றையும் மக்கள் தரப்பிலிருந்து சிந்தித்து – ஒரு போராட்ட இயக்கத்தின் தலைமையின் பக்குவத்தின் ஊடாக முடிவெடுத்து – அதேவேளை இந்த அரசு தரப்பினரை வேறு வழியில் தங்களை நோக்கி திருப்புவதற்கான – அசுரத்தனமாக பேச்சுப்போர் எனும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தார்கள் விடுதலைப்புலிகள்.

இவ்வாறான விடுதலைப்புலிகளின் அணுகுமுறையில் எல்லா நகர்வுகளும் வெற்றி பெற்றது என்றும் கூறமுடியாது. அதேவேளையில், போராட்டம் தோல்வியடைந்தமைக்கும் அந்த பேச்சுக்களின் தோல்விதான் காரணம் என்றும் கூறிவிடமுடியாது.

பேசப்பட்ட விடயங்களிலும் பார்க்க அந்த பேச்சுக்களின் கட்டமைப்பு எனப்படுவது வரலாற்றில் தமிழர் தரப்புக்கு ஒரு உயரிய பாடத்தையும் அனுபவத்தையும் கற்பித்திருக்கிறது.

இதன் பின்னணியில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பான் கீ மூனின் சந்திப்பினை எடுத்துப்பார்த்தால் -

யாழ் நூலகத்தில் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் முதலமைச்சர் குழுவினர் தரப்பின் கரிசனைகளை பான் கீ மூன் செவிமடுத்தார். சந்திப்பில் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த விடயங்களையும் பான் கீ மூன் கூறிய விடயங்களையும் வைத்து பார்த்தால் -

இதைத்தான் கடந்த ஏழு வருடங்களாக வித்தியாசம் வித்தியாசமாக தமிழர் தரப்பு வெளிநாடுகளுக்கு சொல்லி வருகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளலாம்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமற்போனோர் விவகாரம், நல்லிணக்கப் பொறிமுறை என்று தங்களது வழமையான வாய்ப்பாடுகளை தமிழர் தரப்பினர் எடுத்துக்கூறியுள்ளனர். காணாமற்போனவர்கள் நாலாயிரம் பேரது விவரங்களையும் முதலமைச்சர் பான் கீ மூனிடம் கொடுத்திருக்கிறார்.

இவை அனைத்துமே கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகத்துக்கு அத்துப்படியாக தெரிந்த ஒரு விடயம். இவ்வளவு காலமாக இந்த தூதுரகம் குறைந்தது ஐம்பது தடவைகளாவது இப்படியான அறிக்கைகளையும் ஆவணங்களையும் தனது தலைமையகத்திற்கு அனுப்பியிருக்கும். அதுதான் அதன் வேலையும்கூட. அதேவேளை, பான் கீ மூனின் விஜயத்தை ஒட்டி இந்த தூதரகம் மேற்கொண்ட தயார்படுத்தல்களும் இதைத்தான் செய்திருக்கும். தமிழ் தலைவர்களை சந்திக்கும்போது அவர்கள் இப்படியான கோரிக்கைகளைத்தான் முன்வைப்பார்கள் என்று கூறி அதற்கான பதில்களையும்கூட பான் கீ மூனிடம் தயார் செய்து வழங்கியிருக்கும். அதைத்தான் அவரும் யாழ் நூலகத்தில் தன்னை சந்தித்தவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

தற்போது இந்த சந்திப்பின் பலாபலன் என்ன? பான் கீ மூனிடம் எமது மக்களின் பிரச்சினைகளை ஒப்புவித்துவிட்டோம் என்று திருப்தி மட்டும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா? ஒப்புவித்த விடயங்களை பான் கீ மூன் நிறைவேற்றுவார் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?

சொல்லப்போனால், பான் கீ மூன் மட்டுமல்ல, நாளை பான் கீ மூன் வீட்டு வேலைக்காரி இங்கு வந்தாலும் 'உங்கள் எஜமானிடம் இப்படி சொல்லுங்கள்' என்று ஒப்பாரி வைப்பதற்குத்தான் தமிழர் தரப்பு பழகியிருக்கிறது. இப்படியான சந்திப்புக்களின்போது வெளியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை தயார் செய்து அதில் தங்களது பலத்தை காண்பிக்கவேண்டும் என்றவரைக்கும்தான் தமிழர் தரப்பின் அரசியல் வளர்ந்திருக்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வந்துபோனவர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒப்பாரி வைப்பதில் எந்த பயனில்லை. தமிழர் பிரச்சினைகள் குறித்து இன்று எல்லோருக்கும் தெரியும். பேச்சுக்களின்போது அவற்றை ஆவணங்களின் ஊடாக அவற்றை பேசலாம்.

இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானதெல்லாம், அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி என்ன என்பதே. அதற்கான உபாயங்கள் என்ன? சிங்கள தரப்பிடம் பேசி தீர்ப்பதற்கான வியூகங்கள் என்ன? இதுதான் இன்றைய தேவை.

தம்மை சந்திக்க வந்த பான் கீ மூனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்திருக்கவேண்டும்.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான நழுவல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தாங்கள் முழுயான நாடாளுமன்ற பகிஷ்கரிப்பையோ அல்லது உண்ணாநிலை போராட்டம் ஒன்றிலோ இறங்கப்போவதாக அறிவித்திருக்கவேண்டும். அல்லது அதற்கு சமமான இறுக்கமான முடிவை தெரிவித்திருக்கவேண்டும்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் துரிதமாக நிறைவேற்றப்படாத இந்த நிலைமாறு காலகட்டத்தில் தமிழர் தரப்பு சர்வதேசத்துடன் உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்கு அரசாங்கம் அல்லாத ஒரு தரப்பை அல்லது ஒரு அதிகாரியை நியமித்து அவருடன் அவ்வப்போது தொடர்பு கொள்வதற்கு ஒரு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருக்கவேண்டும்.

அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஊடாக நழுவல் - தழுவல் போக்குகளை கடைப்பிடிக்காமல் இறுக்கமான ஒரு முடிவை இம்முறை எடுத்திருக்கவேண்டும். அதற்கு பான் கீ மூன் போன்றவரின் சந்திப்பு பெறுமதி உடையது என்பது தமிழர் தரப்புக்கு தெரியாதது அல்ல.

ஆனால், தமிழர் தரப்பு செய்தது என்ன? 

9/5/2016 2:58:40 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்