Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பம்பாயில் தமிழரை விரட்டிய சிவசேனாவுக்கு எமது மண்ணில் செங்கம்பள வரவேற்பு! 

பம்பாயில் தமிழரை விரட்டிய சிவசேனாவுக்கு எமது மண்ணில் செங்கம்பள வரவேற்பு! 
ஞானி

 

தமிழ்த் தேசியத்தை நொறுக்க சதி!

'மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே' என்ற கோஷத்துடன் மதராஸ்களை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையிலிருந்து (அன்றைய பம்பாய்) விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும், மறவன்புலவு சச்சிதானந்தமும்.

தமிழரின் ஆயுதப்போராட்டம் தோற்றிருக்கலாம், ஆனால் சுமார் நாற்பதினாயிரம் மறவர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இரத்தம் சிந்தியதால் வலுவடைந்த தமிழ்த் தேசியம் என்ற பலமான அரசியல் சக்தியை வெடிவைத்து தகர்க்கும் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் கருவிகளாக இவர்கள் இருவரும் செயற்படுகின்றனர்.

கடந்த பொதுத்தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் அதனை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமல்ல. தமிழரின் ஒன்று திரண்ட சக்தி சிதறிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் தான் தமது வாக்கைச் செலுத்தினர்.

இந்திய அரசியலும் இலங்கைத் தமிழர் அரசியலும் நேரெதிரானவை. இதை விளங்காமல் இந்திய அரசியலில் எந்தெந்தக் குப்பைத்தனங்கள் எல்லாம் உள்ளனவோ அதையெல்லாம் எமது மண்ணில் இறக்குமதி செய்ய முயல்கின்றனர் யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும்.

இந்தியாவில் நேருவுக்குப்பின் இந்திரா, அவருக்குப் பின் ராஜீவ், அதற்குப் பின் ராகுல் என தலைமுறைத் தலைமைகளை கட்சிகள் அறிமுகப்படுத்தும். அதேபோல் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், கனிமொழி என தமிழகத்திலும் நிலைமை தோன்றியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் அப்துல்லா தலைமுறை மூன்று, உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் என்றும் கர்நாடகத்தில் தேவகவுடா, குமாரசாமி என்னும் நிலைமை தோன்றியது. கண்ணை மூடிக்கொண்டு பரம்பரை விசுவாசத்தில் மக்கள் வாக்களிப்பர். ஆனால் ஈழத்தமிழரின் எண்ணவோட்டம் 2009 வரை வேறுமாதிரியே இருந்தது.

இலங்கையில் தமிழரின் தலைமைத்துவம் சேர்.பொன்.இராமநாதன், சேர். பொன்.அருணாசலம் என பிரவுத்துவக் குடும்பங்களின் வசம் இருந்தது. இவர்களுக்கு பின் இவர்களது வாரிசுகளை (குறிப்பாக மகாதேவாவை) தமது தலைமையாக தமிழர் தெரிவு செய்யவில்லை.

அடுத்த தலைமுறையாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையே தேர்ந்தெடுத்தனர். ஜீ.ஜீக்குப் பின்னர் அவரது வாரிசு குமார் பொன்னம்பலத்தை தமது தலைமையாக ஏற்கவில்லை. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வாவையே ஏற்றனர். செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரகாசனை ஏற்கவில்லை அமிர்தலிங்கத்தையே ஏற்றனர்.

பம்பாயில் தமிழரை விரட்டிய சிவசேனாவுக்கு எமது மண்ணில் செங்கம்பள வரவேற்பு! 

ஆயுதப் போராட்டம் தலைதூக்கிய பின்னர் 36 குழுக்களில் ஒன்றான தமிழீழ தேசிய இராணுவத்தை வழிநடத்திய அமீரின் மகன் பகீரதனையோ அல்லது தன்னை ஒரு காலத்தில் தீவிரவாதியாக இனங்காட்டிக்கொண்ட காண்டீபனையோ ஏற்கவில்லை, புலிகளின் தலைவர் பிரபாகரனையே ஏற்றனர்.

புலிகள் அழிக்கப்படாமலிருந்தால் செயற்திறனுடைய புலிகளின் அடுத்த மட்டத் தலைமை ஒன்றையே ஏற்றிருப்பார் தமிழர். யுத்தத்தின் பின்னர் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திடம் தலைமை கைமாறியுள்ளது. அடுத்த தலைமை நிச்சயம் சம்பந்தன் ஐயாவின் பரம்பரையல்ல. ஒருவர் பிறப்பால் எந்தக்  குலத்தைச் சேர்ந்தவர் என்பதையோ பிரதேசம், மதம் என்பனவற்றையோ எமது மக்கள் கருத்தில் கொள்வதில்லை. இந்த உறுதியான நிலைப்பாட்டை சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அசைத்துப் பார்க்க முயன்றதன் பலனைக் கடந்த பொதுத்தேர்தலில் அனுபவித்துவிட்டார்.

தமது கட்சியின் சார்பாக தனது சகோதரன் சர்வேஸ்வரனின் பெயரை அமைச்சரவைக்குச் சிபாரிசு செய்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆனால் அந்தப் பதவிக்கு யார் பொருத்தமானவரோ அவரையே தேர்ந்தெடுத்தார் முதல்வர். இன்று வடக்கு மாகாணசபையில் நிலவும் அத்தனை கோளாறுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது பிரேமச்சந்திரனே. பகிரங்கமாக முதல்வரைக் குற்றம் சாட்டப்போக முதல்வர் தனது சகோதரனின் பெயரைத்தான் சுரேஷ் முன்மொழிந்தார் என்ற விடயத்தைப் போட்டுடைத்தார்.

சூழலியலில் அக்கறையும், ஆர்வமும் மிக்கவரை விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதை உணர மறுத்து சுரேஷ், ஐங்கரநேசனைக் கட்சியிலிருந்து விலத்தினார்.

மட்டக்களப்பில் தமிழாசிரியர் சங்கத் தலைவர் வணசிங்கா உட்பட பலரின்  கொலைகளுக்கு காரணமானவரும் ஒரு முஸ்லிம் யுவதியை (ரிபாயா) காணாமற் போகச் செய்தவருமான இரா.துரைரத்தினம், வவுனியாவில் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட குமுதனின் (சேமமடு) குடும்பத்தினர் உட்பட பலரை இம்சைப்படுத்தியவருமான சிவசக்தி ஆனந்தன் போன்றோர்தான் தனது கட்சியில் இருக்க முடியும் என நிரூபித்தார் அவர். இந்தத் திமிருக்காகவேதான் வாக்கால் அடித்துத் துரத்தினர் யாழ் மக்கள்.

தமிழரின் அடுத்த துரதிஷ்டம் சுமந்திரன். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில்  நாவாந்துறை போன்ற பகுதிகளில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரே ஒரு கிறிஸ்தவர் சுமந்திரனே என்ற செய்தி பரப்பப்பட்டது. பாசையூர், குருநகரில் 'என்ன இருந்தாலும் அவர் யேசுவைக்  கும்பிடுகிறார்' என்ற கருத்தை முக்கிய பிரமுகர் ஒருவர் பரப்பினார். இக்கருத்து எடுபட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இவ்வளவு காலமும் மதம் என்பதை மக்கள் கருத்தில் கொள்ளவில்லை. கிறிஸ்தவரான செல்வநாயகத்தைத் தந்தை என அழைத்தது இந்துக்களை  பெரும்பான்மையினராகக் கொண்ட தமிழ்ச் சமூகம். அவரது சடலத்தை எரித்ததை கிஸ்தவர்களும் தவறாகக் கொள்ளவில்லை. அப்போதெல்லாம் நாம் தமிழர், செல்வா எங்கள் தலைவர் என்ற உணர்வே மேலோங்கியிருந்தது. அந்த இறுக்கமான நிலையை தகர்த்து விட்டனர் சுமந்திரனின் ஆதரவாளர்கள். இன்று 30 வருடமாக என்ன செய்யமுடிந்தது என்று திமிர்த்தனமாக வவுனியாவில் கேட்கிறார் சுமந்திரன்.

இந்தத் தமிழ்த் தேசியத்தின் விளைவாகவே தான் தேசியப் பட்டியல் மூலம் முதன்முதலாகப் பாராளுமன்றம் சென்றதையும் அவர் மறந்துவிட்டார். இதுவரை வன்னி, மட்டக்களப்பில் விருப்பு வாக்குகளை செலுத்தியபோது மக்கள் கவனத்தில் கொள்ளாத ஒரு விடயத்தை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியாயிற்று.

ஜோசெப் பரராஜசிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் விருப்பு வாக்கில் முன்னிலை வகித்தபோது மக்கள் எதனையும் கருத்தில் கொள்ளவில்லையே. இன்று வியாழேந்திரன் எம்.பி யாகத் தெரிவு செய்யப்பட்டதற்கு அவர் கிறிஸ்தவர் என்பதோ புளொட் சார்ப்பான வேட்பாளர் என்பதோ காரணமல்ல. இரா.துரைரத்தினம், கோவிந்தன் கருணாகரன் போன்ற கொலைகாரர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் போய்விடக் கூடாது  என்பதுதான்.

தமிழர் அரசியலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் செலுத்திய செல்வாக்கு இரகசியமானதல்ல. இந்துக்கள் அனைவருமே ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். எப்போதுமே தனது மனத்துக்குச் சரியெனப் பட்டதை துணிந்து செய்பவர் அவர். இத்தாலிக்குள் வத்திக்கான் எப்படித் தனிநாடகத் திகழ்கின்றதோ அப்படியே புலிகளின் காலத்தில் மடுப் பிரதேசம் தனித்துவமாக திகழ்ந்தது. இதற்கு இராயப்பு ஜோசப் ஆண்டகையே காரணம் என்பது மட்டுமல்ல, அவரது கருத்தை நிராகரிக்க முடியாதவர்களாகப் புலிகள் தரப்பு இருந்தது என்பதும் உண்மை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இராயப்பு ஜோசப் செலுத்தும் அக்கறையில் தசம் பூச்சியம் ஒரு வீதம் கூட சிவசேனா இறக்குமதியாளர்கள் காட்டவில்லை என்பதும் நிஜம்.

இந்தக் குழப்ப நிலைகளுக்கு தமிழரசுக் கட்சியின் செயலர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கமும் ஒருவகையில் காரணம். இறுதி யுத்தம் முடியும்வரை ரணிலின் செல்வாக்குக்குட்பட்டவராக இருந்த யோகேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். ஏற்கனவே ஒருதடவை எம்.பியாக இருந்த துரைராஜசிங்கம் 2010 தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்த விஷச்செடி விருட்சமாகியிருக்காது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த யோகேஸ்வரன் எப்படி நடந்துகொண்டார் என்பது துரைராஜசிங்கம் அறியாததல்ல. ஓரிரு தையல் இயந்திரங்களின் விவகாரத்தில் விடுதலை இயக்கத்துடனும், எழிலனுடனும் முரண்பட்டவரை தமிழர் நலன் பேணுபவராக எண்ணியது தவறு.

துரைராஜசிங்கம் இளைஞர் பேரவையில் இணைவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே தமிழரசுக் கட்சிக்காரனாகியவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம். அவரிடம் விளக்கம் கேட்பது போல எச்சரிக்கைக் கடிதம் அனுப்பத் தெரிகிறது துரைராஜசிங்கத்துக்கு. பேராசிரியருக்கு அனுப்பியது போல் சிவசேனாவா? தமிழரசுக் கட்சியா? இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவும், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பதாயின் இன ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவும் என யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுதத் தெரியாதா இந்தச் சட்டத்தரணிக்கு? கட்சியின் புதிய தலைவராக மாவையும் செயலராக இவரும் தெரிவுசெய்யப்பட்ட போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டுமே ஆசி கூறினார். முஸ்லிம் மதத்தலைவர்கள் எவரும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. தந்தை செல்வாவின் கட்சி இது என்பதை மறந்து முஸ்லிம் மக்களை புறக்கணித்தனர். தற்போது மத நல்லிணக்கத்திற்கு எதிரான சிவசேனாவின் செயற்பாட்டுக்கு யோகேஸ்வரனை அனுமதிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்தை உடைக்கும் சக்திகளின் கை மேலோங்க உள்ளது.

வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவர் தெரிவில் காட்டிய அவசரத்தை இதில் ஏன் காட்டவில்லை. எழுக தமிழ் நிகழ்வின் விளைவாகவே அனுராதபுரத்தில் இந்துக் கோயில் தாக்கப்பட்டது என விளக்கமளிக்க தெரிகிறது இவருக்கு. தமிழரை அடிப்பதும், ஆலயங்களை அழிப்பதும் சிங்களவரின் பாரம்பரியம் அதனால்தான் இவர் தமிழ் இளைஞர் பேரவையில் இணைந்தார் என்பது வரலாற்றை மறக்காதவர்களுக்கு தெரியும். மறதி கூட இவருக்கு வசதியாக சில விடயங்களில் மட்டுமே ஏற்படுகிறது.

அடுத்தவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இலங்கைக்கு மருந்து அனுப்பப் சதிசெய்தார் என்று கருணாநிதி தலைமையிலான அரசு இவர் மீது வழக்குப் போட்டது.

அதன் பின் இந்தியாவில் மத்திய அரசு எதைக் சிந்திக்க முனைகிறதோ அதை இலங்கையில் செயலாக்க வேண்டுமெனக் துடிப்பவர் இவர். இங்கே உள்ள நிலைமை, உணர்வுகள் இவருக்குத் தெரியாது.

பிரபாகரன் தனது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி எனப் பெயரிட்டதன் மூலம் எதை உணர்த்தினார் என்பதை அறியாதவர். லெப்.கேணல் விக்ரருக்கு (மருசலின் பியூஸ்லஸ்) அந்தியேஷ்டிக் கிரியைகள் செய்வதற்காக அரியாலை திருமகள் வீதிக்கு ஐயர் வந்து சென்றார் என்று சொன்னால் நம்ப முடியாமல் வாயைப் பிளக்கக் கூடியவர். களத்தில் காயமுறும் சக போராளி என்ன சமயமென்று எவரும் சிந்தித்ததில்லை. சமாதான காலத்தின் பின் நடந்த சமரில்  வட்டக்கச்சி இராமநாதபுரத்தை சேர்ந்த முஸ்லிமான போராளியின் வித்துடல் கிறிஸ்தவ, மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் வித்துடகளுக்கு நடுவேயே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது என்ற உண்மைகள் புரியாதவர். களத்தில் காயமுற்ற போராளியின் சமயத்தைப் பார்த்து மக்கள் குருதிக்கொடை வழங்கவில்லை. பொதுமக்கள் காயமடையும் போதும் மனித நேயமே பெரிதாகத் தெரிந்ததே தவிர மதங்கள் தெரியவில்லை.

காங்கிரஸ் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அணுமின் உலையால் ஈழத் தமிழருக்குப் பாதிப்பு இல்லை என பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். தற்போது மதவெறியால் கட்டியமைக்கப்பட்ட கட்சியின் ஆட்சிக் காலத்தில் சிவசேனையுடன் வந்துள்ளார். இவரது வயதுக்கு பம்பாயில் இருந்து தமிழர்கள் சிவசேனாவினால் அடித்து விரட்டப்பட்ட வரலாறு தெரியாமலிருக்குமா?

வந்தமா, புத்தக வியாபாரத்தை கவனித்தோமா, உறவினரைச் சந்தித்தோமா என்று இருப்பது நல்லது. ஆட்சியில் இருப்போரின் நிகழ்ச்சி நிரலை இங்கு இறக்குமதியாக்க வேண்டாம் என அவருக்கு இங்குள்ள நிலைமைகளை யாராவது விளக்குவது நல்லது.

யோகேஸ்வரனுக்கு எதிராக துரைராஜசிங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஒவ்வொரு மாவீரர் குடும்பத்தினரும் போராட்டத்தை நேசிப்பவர்களும் காத்திருக்கின்றனர். அரசியல் கைதிகளின் விடயத்தில் சம்பந்தன் ஐயா திறப்பு என்னிடம் இல்லை என்று கையை விரித்தார். அதேபோல் யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுத பேனா இல்லை என்று இவர் கை விரிக்கக் கூடாது. ஏனெனில் மாகாண சபைக்கோ பாராளுமன்றத்துக்கோ செல்வதாயின் அதற்கான திறப்பு தமிழ் வாக்காளரிடமே இருக்கிறது

11/6/2016 10:56:11 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்