Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இரண்டாவது சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட தமிழ்த் தலைமைகள்

இரண்டாவது சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட தமிழ்த் தலைமைகள்
சி.அ.யோதிலிங்கம்

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது தோற்கடிக்கப்படும் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் இந்திய-அமெரிக்கச் சக்திகளினால் மிகச் சிரமப்பட்டு கொண்டுவரப்பட்டது. இதில் அச்சக்திகளின் புவிசார் அரசியல் நலன்கள் இருக்கின்றன. பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் அவை தீவிரமாக செயற்பட்டன. கொழும்பில் இருந்த இந்நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

ஆரம்பத்தில் பிரேரணை தொடர்பாக கடும் போட்டி நிலையே நிலவியது. ரணிலுக்கு ஆதரவாக 107 என்ற நிலையும் எதிராக 101 என்ற நிலையும் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை இருந்ததினால் ரணிலின் ஆதரவு நிலை 100 இனை விட குறையலாம் எனவும் கருதப்பட்டது. இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தரப்பாக கருதப்பட்டது. பொது எதிரணியைச் சேர்ந்தவர்கள் கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவான நிலையினை எடுக்கக் கூடாது என தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தனர்.

ரணில் இது விடயத்தில் சற்று முந்திக் கொண்டார். அமெரிக்கா, இந்தியாவின் காய் நகர்த்தல் மூலமும், தனது தனிப்பட்ட காய்நகர்த்தல்கள் மூலமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை சேமிப்பு வாக்குகளாக தனது பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டார். இதன் மூலம் தனது வெற்றியை தக்க வைத்துக் கொண்டு மேலதிக வெற்றிக்காக காய்களை நகர்த்தினார். கூட்டமைப்பினருக்கு இந்தியத் தூதுவரும் அமெரிக்கத் தூதுவரும் நேரடியாகவே அழுத்தம் கொடுத்தனர். புதுடில்லியில் இருந்த அமெரிக்கத் தூதுவரும் நேரடி அழுத்தம் கொடுத்தார்.

கூட்டமைப்பின் ஆதரவை சேமிப்பு வாக்குகளாக வைத்துக்கொண்ட ரணில் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களை தன்னுடன் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். தொடர் பேச்சுவார்த்தைகள் இதற்காக மேற்கொள்ளப்பட்டது. சாம பேத தான தண்டம் அனைத்தும் இதற்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

மலையகத்தில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கட்சிகள் குறிப்பாக தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்தவர்கள் இது விடயத்தில் பேரங்கள் பற்றி மூச்சே விடவில்லை. பிரேரணை வருவதற்கு முன்னரே வெற்றுக் காசோலையில் கையெழுத்து வைத்துக் கொடுத்து விட்டனர். ஒரு ஒப்புக்காகவாவது கோரிக்கைகளை முன்வைக்க இவர்கள் விரும்பவில்லை. ஆறுமுகம் தொண்டமான் மைத்திரியும் மகிந்தரும் தமது இரண்டு கண்கள் எனக் கூறியிருந்தாலும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கூட்டுச் சேர வேண்டி ஏற்படும் என்பதற்காக நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு சென்றார்.

பிரேரணை தொடர்பாக ரணிலுக்கு நெருக்கடியாக இருந்தவை முஸ்லிம் தரப்பும், மைத்திரியுடன் இருந்த சுதந்திரக் கட்சி தரப்பும் தான். முஸ்லிம் தரப்பு கூட்டமைப்பை போலல்லாது இரண்டு சிங்களக் கட்சிகளிடம் இருந்து சமதூரத்தில் நின்றது. ஆட்சி அதிகாரத்துடன் இணைந்து செயற்படுகின்ற அரசியலே வரலாற்று ரீதியாக அவர்கள் பின்பற்றுகின்ற அரசியல். யார் ஆட்சியில் அதிகாரம் செலுத்தக் கூடிய நிலை வருகின்றதோ அவர்களுடன் முஸ்லிம் நலன்கள் தொடர்பாக பேரம் பேசுவதற்கும் அதன் வழி கூட்டு சேரவும் தயாராக இருந்தனர். முஸ்லிம் மக்களும் அந்த அரசியலுக்கு பழக்கப்பட்டு இருந்ததனால் இந்த அணுகுமுறை தொடர்பாக சங்கடங்கள் பெரிதாக இருக்கவில்லை.

ரணில் முஸ்லிம் தரப்பு தொடர்பாக தான, தண்ட இரண்டு வழிமுறைகளையும் பின்பற்ற முயற்சித்தார். கூட்டமைப்பு எனது பொக்கற்றுக்குள் உள்ளது. நீங்கள் ஆதரவு தந்தாலும் எனக்கு வெற்றிதான். தராவிட்டாலும் எனக்கு வெற்றிதான் என்பதை சொல்லாமல் புரிய வைத்தார். ஆட்சி அதிகாரம் உள்ள கட்சிகளுடனேயே இணைந்து செயற்படும் மரபைக் கொண்ட முஸ்லிம் தரப்பிற்கு ரணில் ஆதரவு நிலை எடுப்பதைத்தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. எதிர்க்கட்சி அரசியல் முஸ்லிம் அரசியலின் மரபில் எப்பொழுதுமே இருந்ததில்லை. மறுபக்கத்தில் அவர்களால் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றுவதாக ரணில் உறுதி வழங்கினார்.

ரணிலுக்கு இது விடயத்தில் மீதியாக இருந்தவர்கள் சுதந்திரக் கட்சியின் மைத்திரி பிரிவினர் தான். இவர்கள் விடயத்தில் ஒரு பகுதியினர் நடுநிலை வகித்தாலே அவருக்கு போதுமாக இருந்தது. கூட்டமைப்பு தனது பொக்கற்றுக்குள் உள்ளது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. கூட்டமைப்பின் ஆதரவுடன் மட்டும் வெற்றி பெற்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டி வரும் என்பதும் உணர்த்தப்பட்டு இருக்கலாம். இதன் அர்த்தம் 'என்னை நெருக்கடிக்குள் தள்ளி விடாதீர்' என்பது தான். மறுபக்கத்தில் நீங்கள் ஆதரவு தராவிட்டாலும் நான் வெற்றியடைவேன். எனது ஆட்சி தொடரும். அமைச்சர் பதவிகளை அநியாயமாக இழக்க வேண்டாம் என்பதும் உணர்த்தப்பட்டு இருக்கலாம். விளைவு 16 பேர் மட்டும் பிரேரணைக்கு ஆதரவளித்தனர். ஏனையோர் நடுநிலை வகித்தனர். 46 பெரும்பான்மை வாக்குகளால் அவர் வெற்றி பெற்றார்.

இரண்டாவது சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட தமிழ்த் தலைமைகள்

இன்னோர் பக்கத்தில் தனியாட்களாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவையும் சிவசக்தி ஆனந்தனையும் கூட கவனிப்பதற்கு ரணில் தவறவில்லை. சிறு குச்சியும் பல்லுக்குத்த உதவும் என்பதே அவரது நினைப்பாக இருந்தது. டக்ளசுக்கு அமைச்சர் பதவி உத்தரவாதம் வழங்கப்பட்டது. இது பற்றிய டீலிங் ஏற்கனவே சுமந்திரன் மூலம் முடிக்கப்பட்டது. டக்ளசை அமைச்சராக்க ரணிலுக்கு அரசாங்கத்தை அமைத்த ஆரம்ப காலங்களிலேயே விருப்பம் இருந்தது. சந்திரிக்காவிற்கு ரணிலை விட அதிகம் விருப்பம் இருந்தது. ஆனால் கூட்டமைப்பினரே தடையாக இருந்தனர். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க உதவினால் அமைச்சர் பதவி பெற ஒத்துழைக்க தயார் என தோழருக்கு சுமந்திரன் பச்சைக்கொடி காட்டினார். இந்த பச்சைக்கொடி ரணிலுக்கு டக்ளசை இணைப்பதை இலகுவாக்கியது. டக்ளஸ் ரணிலின் காலில் விழுந்தார்.

அடுத்தது சிவசக்தி ஆனந்தன் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் யாருடைய தாழ்வாரத்தில் ஒதுங்குவது என்ற நிலை அவருக்கும் அவருடைய தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிற்கும் இருந்தது. ரணில் சந்திக்கக் கேட்டதும் இருவரும் ஓடோடிச் சென்றனர். சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த ஒரே ஒரு கோரிக்கை 'பாராளுமன்றத்தில் என்னை பேச விட வேண்டும் என்பது தான்'. மற்றைய கோரிக்கைகள் பத்திரிகைகளுக்காக தயாரிக்கப்பட்டதே தவிர ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உருவாக்கப்படவில்லை. ரணில் 'நம்பிக்கையில்லா பிரேரணை வாதத்தின் போதே நீங்கள் பேசலாம்' என்றார். சிவசக்தி ஆனந்தன் சந்தோச மிகுதியால் ரணிலின் காலை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டார். ரணில், டக்ளஸ், சிவசக்தி ஆனந்தன் என்ற இரண்டு குச்சிகளையும் மேலதிக சேமிப்பாக கூட்டமைப்புடன் சேர்த்து பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டார். ரணில் வெற்றி கொண்ட கதை இது தான்.

மக்களின் பெரும்பான்மை ஆதரவு மகிந்தருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு ரணிலுக்கு என்ற விசித்திர அரசியலை இலங்கை பிரதிபலித்தது. 'நம்பிக்கையில்லா பிரேரணை எப்படிப் போகும்' என்று எனது அரசியல் நண்பனைக் கேட்டேன். 'இந்தியாவும் அமெரிக்காவும் உயிரைக் கொடுத்தாவது ரணிலை பாதுகாப்பர்' என்றான் அவன். அதுவே உண்மையாகி விட்டது.

இங்கு எழும் இன்னோர் கேள்வி பொது முன்னணி ஏன் இந்த பிரேரணையை கொண்டு வந்தது என்பதாகும். மகிந்தர் பிரேரணையில் கையொப்பமிடவில்லை. கூட்டமைப்பு ரணிலின் பொக்கற்றுக்குள் இருக்கும் வரை பிரேரணை வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதைவிட ரணில் விலகுவதை அவர் பெரிதாக விரும்பவில்லை. பிரதமர் பதவியில் இருந்து விலகினால் கட்சி பதவியில் இருந்தும் விலக வேண்டும். ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் கட்சி பதவியில் இருந்து விலகக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை தான் தனக்கு பாதுகாப்பு இருக்கும் என அவர் கருதுகின்றார்.

ஜெனீவா ஆபத்துக்களில் இருந்து மகிந்தரை தொடர்ந்தும் பாதுகாத்தவர் தற்போதும் பாதுகாத்து கொண்டு இருப்பவர் ரணில் தான். அவர் எப்போது கட்சி தலைமையில் இருந்து விலகுகிறாரோ அன்று மகிந்தரின் கழுத்தில் கத்தி தொங்கக் கூடும். ரணில் இருக்கும் வரை ஊழல் நெருக்கடிகளில் இருந்தும் கூட அவர் தப்ப முடியும். இது விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது என்பது அவர்களிடையே எழுத்தில் இல்லாத ஓர் ஒப்பந்தம் ஆகும். கட்சிக்குள் இருந்து பல தடவை நெருக்கடி வந்த போதெல்லாம் அவரை காப்பாற்றியவர் மகிந்தரே. மகிந்தரின் ஜனாதிபதி பதவி பறிபோன போது பதவியில் இருந்து நீங்க மகிந்தர் தயங்கினார். ஜெனீவா கத்தியும் ஊழல் பயமும் அவருக்கு இருந்தது. 'நீ தயங்காமல் போ உனக்கு எதுவும் வராமல் நான் பார்ப்பேன்' என ரணில் உறுதியளித்து வழி அனுப்பினார். அந்த உறுதி மொழியிலிருந்து ரணில் ஒருபோதும் விலகியது கிடையாது. ஜெனீவாவிலிருந்து மகிந்தரை காப்பாற்றியதல்லாமல் ஊழல் விசாரணையில் இருந்தும் அவரை காப்பாற்றினார். 

மகிந்தரின் தற்போதைய இலக்கு தேசிய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதும் மைத்திரியை தனிமைப்படுத்துவதுமே. அந்த இலக்கில் அவர் வெற்றி கண்டுள்ளார். மைத்திரி தரப்பு சுதந்திரக் கட்சியில் இருந்து 16 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களை அமைச்சர் பதவிகளிலிருந்து விலக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களிடமிருந்து அழுத்தம் வர தொடங்கியிருக்கிது. நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது. தேசிய அரசாங்கம் ரணிலின் இருப்பிற்கு அவசியமாக இருப்பதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதை ரணில் தடுத்திருக்கிறார். இது ஜனாதிபதி தீர்மானிக்கும் விடயம் எனக் கூறுகிறார். அந்த 16 உறுப்பினர்களில் பலர் எதிரணி வரிசையில் இருப்பதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர்கள் எதிரணி வரிசைக்கு சென்றால் மகிந்தருக்கு அதுவும் வெற்றிதான். இந்த போக்கு மைத்திரியையும் பலவீனப்படுத்தும். தேசிய அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும்.

மகிந்தரை பொறுத்தவரை தற்போது ஆட்சியை கைப்பற்றுவதில் அவசரம் காட்டவில்லை. அவரது தற்போதைய அணுகுமுறை தோழர் மாசேதுங்கின் 'ஈரடி முன்னால் ஓரடி பின்னால்' என்பதே. மகிந்தரின் தற்போதைய இலக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான். இதுதான் அவரது முதலாம் கட்ட நகர்வு. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் மகிந்தர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முழு ஆதிக்கத்தையும் தனக்கு கீழ் கொண்டு வர விரும்புகிறார். இதன் பின்னர் மூன்றாவது கட்டத்திலேயே ஆட்சியை கைப்பற்றுதல் நோக்கி நகர்வார். இதற்காக 2020 வரை பொறுமை காக்கவும் அவர் தயாராக இருக்கின்றார். அந்த ஆட்சியை கைப்பற்றுதல் ஆட்சி கவிழ்ப்பாக இருக்கக் கூடாது. இயல்பான தேர்தல் முறையாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார். அப்போதுதான் ரணிலின் கட்சி தலைமை பதவியை அவரால் பாதுகாக்க முடியும்.

தற்போது மகிந்தர் தான் செல்லும் பாதையிலுள்ள தடைகளை எல்லாம் அகற்றி விட்டார். இனி அவரது பணி அந்த பாதையில் செல்வது மட்டும் தான். அவர் மீது சிறிய கல்லைப் போட துணிவு கூட இன்றைய ஆட்சியாளர்களுக்கு கிடையாது. உண்மையில் இந்த சூழலை தக்க வைப்பதைத் தான் அவர் தற்போது எதிர்பார்க்கின்றார். பெருந்தேசியவாதம் இன்று முழுமையாக அவர் பக்கத்தில் இருக்கின்றது. பெருந்தேசிய வாதம் இன்று அவருடன் இருக்கும் வரை இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல எந்த கொம்பன் வந்தாலும் அவரை அசைக்க முடியாது.

மகிந்தரின் வளர்ச்சி இயல்பாகவே தமிழ்த் தேசியவாதத்தையும் வளர்த்தெடுக்கும். இரண்டும் ஒன்றை ஒன்று பலப்படுத்துவதாகும். இன்றுவரை தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பது தமிழ் அரசியல் தலைமைகளல்ல. மாறாக பெருந்தேசியவாதமே. தமிழ்த் தேசியவாதிகள் மகிந்தருக்கு கோயில் கட்ட முயற்சித்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 

ரணிலின் வெற்றிக்கு கூட்டமைப்பே பிரதான காரணம் கூட்டமைப்பு. ரணிலின் பொக்கற்றுக்குள் இருந்ததினால் தான் பொது எதிரணியின் முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியடைந்தன. பொது எதிரணி கட்டம் கட்டமாக பணிகளை நகர்த்த முயன்றது. 1ம் கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிருப்தியாளர்களை உருவாக்க முனைந்தது. பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவும் அவரைச் சேர்ந்தவர்களும் பிரதான அதிருப்தியாளராக இருந்தனர். சஜித் பிறேமதாசாவிற்கு அடுத்த பிரதமராகும் கனவு இருந்தது. இரண்டாவது கட்டத்தில் மைத்திரியுடனிருக்கும் சுதந்திரக்கட்சிக்காரர்களை பிரித்தெடுக்கும் திட்டம் இருந்தது. மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைக்குள் போடத்திட்டம் இருந்தது. அண்மைய வன்செயல்களினால் முஸ்லிம் தரப்பும் கடும் அதிருப்தியில் இருந்தது. மகிந்தரின் கை மேலோங்குமாக இருந்தால் சாய்வதற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாராக இருந்தனர். நான்காம் கட்டத்தில் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை குறைந்த நடுநிலைக்கட்டத்திற்கு தள்ளுவது என்ற நோக்கத்தில் இருந்தது. முன்னரே கூறியது போல ஆறுமுகம் தொண்டமான் மகிந்தரும் மைத்திரியும் கண்கள் எனக் கூறினாலும் நடுநிலை வகித்தார். திகாம்பரம் பிரிவு ஐக்கிய தேசியக்கட்சியுடன் நின்றதால் அதனைப் பெரிதளவுக்கு கணக்கெடுக்கவில்லை.

இதில் முதல் மூன்று கட்டங்களின் வெற்றி நான்காவது கட்டமான கூட்டமைப்பை நடுநிலைப்படுத்துவதிலேயே தங்கியிருந்தது. இதுதான் பொது முன்னணியினருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம். நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே ரணில் சம்பந்தனை பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு நடமாடியதால் முதல் மூன்று கட்டத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ரணில் ஒரு நமட்டுச்சிரிப்புடன் பொக்கற்றுக்கள் சம்பந்தனை தெரியத்தக்கதாகவே வலம் வந்தார். அது சொன்ன செய்தி 'நீங்கள் என்னதான் கூத்தாடினாலும் சம்பந்தன் என்னுடன் இருக்கும் வரை நான் வெற்றி கொள்வேன்.' என்பது தான். சம்பந்தன் பொக்கற்றுக்கள் இருந்ததினால் அடுக்கடுக்காக பொதுமுன்னணியின் முயற்சிகள் தோல்வி கண்டன. ஐ.தே.க அதிருப்தியாளர்கள் முதலில் ரணிலிடம் சரணடைந்தனர். சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பு உறுப்பினர்களின் 16 பேர் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரேரணை அறிமுகப்படுத்துவதற்கு கையொப்பமிட்ட பலர் கூட நடுநிலை வகித்தனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்போதும் அரசுடன் இணைந்து பதவி வகித்து அரசியல் செய்வதே வழக்கம். பிரேரணை வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு இல்லாததினால் பதவிகள் பறிபோய்விடும் என தயங்கி பின்வாங்கினர்.

கூட்டமைப்பு இரண்டு தரப்புடனும் பேரம் பேசுதல் என்ற முடிவை எடுத்திருந்தால் கடும் போட்டிநிலை உருவாகியிருக்கும். மைத்திரி தரப்பு சுதந்திரக் கட்சியினர் முழுமையாகவே பிரேரணைக்கு வாக்களித்திருப்பர். முஸ்லிம் தரப்பும் மகிந்த தரப்புடன் அமைச்சுப் பதவிகள் பேசிக்கொண்டு ஆதரவு நிலை எடுத்திருப்பர். பல்லுக்குத்த உதவும் குச்சியாக ரணில் பொக்கற்றுக்கள் வைத்திருந்த டக்ளசும் ஆதரவு நிலை எடுத்திருப்பர். நடுநிலை வகித்த ஆறுமுகம் தொண்டமானும் ஆதரவு நிலை எடுத்திருப்பர். இது ரணிலை தோற்கடிக்கும் நிலையை நோக்கி விவகாரங்களை நகர்த்தியிருக்கும்.

முன்னரே கூறியது போல சம்பந்தனுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் நேரடி அழுத்தம் கொடுத்தது. இந்திய, அமெரிக்கத் தூதுவர்கள் சம்பந்தனை நேரடியாகச் சந்தித்து ரணிலுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுள்ளனர். புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் சம்பந்தருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆதரவுக்கு அழுத்தம் கொடுத்தார். சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பாதுகாக்கும் தேவையும் இருந்தது.

சம்பந்தனுக்கு இருந்த பயம் கூட்டமைப்பின் 16 வாக்குகளையும் எவ்வாறு ஆதரவாக கொடுப்பது என்பதே! சிவசக்தி ஆனந்தனைத்தான் பார்ப்பதாக ரணில் கூறியமையினால் ஏனைய 15 வாக்குகளையும் திரட்டுவதிலேயே கவனமாக இருந்தார். இவ்வாறான நெருக்கடி தரும் விடயங்களில் சம்பந்தன் கடைசி நேரத்தில் நடவடிக்கைகள் எடுப்பதுதான் வழக்கம். புதன்கிழமை பிரேரணை விவாதத்திற்கு வர இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையே அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அதற்கு முன்னரே அவர் ரணிலுக்கு ஆதரவாகக் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.

சித்திரை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் 9 வெகுஜன அமைப்புக்கள் கூடி இது பற்றி ஆலோசித்தன. இந்தத் தடவையும் பேரம் பேசலுக்கான சந்தர்ப்பத்தை நழுவவிடப்போகிறார்கள் என்ற கவலைகள் எழுந்தன. தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பசுமை எதிர்காலத்திற்கான நிலையம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு, மலையக சமூக ஆய்வு மையம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு என்பன இதில் பங்கு பற்றின. நேரடியாக வராத அமைப்புக்கள் தொலைபேசி மூலம் விவாதத்தில் கலந்து கொண்டன. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் இதுபற்றி உரையாடிய போதும் ரணில் - மகிந்தர் விவகாரத்தில் நாங்கள் பங்குபற்ற விரும்பவில்லை. மக்கள் விவகாரமாயின் பங்கு பற்றலாம் எனக்கூறி நிராகரித்தனர். கோரிக்கைக் கடிதத்தில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பெயரை முதலாவதாகப் போட்டபோதும் அவர்களுக்கு முன்னாலேயே இணைப்பாளர் அதனை வெட்டினார். முதலில் 10 கோரிக்கைகள் எழுத்தில் வைக்கப்பட்டன.

1) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

2) தமிழரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல்     உடனடியாக விடுதலை செய்வதுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்வைத்து அமுல்படுத்த வேண்டும்.

3) வடபகுதியை நோக்கிய மகாவலிக் குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.

4) மாவட்ட செயலகங்களின் அதிகாரங்கள் மீளவும் மாகாணசபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

5) வன பரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், என்பவற்றின் அத்துமீறல்கள் தமிழ் பிரதேசங்களில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

6) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.

7) தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த்தரப்பின் பங்களிப்புடுடன் மட்டும் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

8) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9) வவுனியா, மன்னார் அரச அதிபர்களாக உடனடியாக தமிழர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

10) கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவு உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

என்பவையே அவையாகும். பின்னர் 11வது கோரிக்கையான 'சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து இராணுவம் விலக வேண்டும்' என்ற கோரிக்கை தமிழ் சிவில் சமூக அமையத்தின் வேண்டுதலின் பேரில் சேர்க்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில் தான் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். வெற்றுக் காசோலையில் கையெழுத்து வைக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இக் கோரிக்கையில் ஒரு சிலவற்றையாவது நம்பிக்கை இல்லாப் பிரேரணை விவாதத்திற்கு முன்னர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. வெகுஜன அமைப்புக்களில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கமும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேலும் வெகுஜன அமைப்புக்களின் சார்பில் கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினர். கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

சித்திரை 03ம் திகதி பிற்பகல் 03 மணிக்கு யாழ் ஊடக அமையத்தில் 09 வெகுஜன அமைப்புக்களின் சார்பில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் பீடத்தலைவர் கே.ரி.கணேசலிங்கம், சி.அ.யோதிலிங்கம், சட்டத்தரணி சுபாகர் ஆகியோர் மாநாட்டை நடாத்தினர். இதில் 11 கோரிக்கைகளும் பகிரங்கமாக வலியுறுத்தப்பட்டது. முகப்புப்புத்தகத்திலும் இவை வெளியிடப்பட்டன. இலத்திரனியல் ஊடகங்களும், இணையத்தளங்களும் மாநாட்டுச் செய்திகளை ஒழுங்காக வெளியிட்டன. பத்திரிகைகளில் தினக்குரலைத்தவிர மற்றைய பத்திரிகைகளில் செய்தி வந்ததாக காணமுடியவில்லை. காலப்பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

சித்திரை 04ம் திகதி யாழ் பத்திரிகைகளில் கூட்டமைப்பு 10 கட்டளைகளை ரணிலுக்கு முன்வைத்தது என செய்தி வந்தது. அந்த 10 கட்டளைகளில் 07 கட்டளைகள் வெகுஜன அமைப்புக்களின் கோரிக்கைகளாக இருந்தன. 10 கட்டளைகளை வெளியிட்ட யாழ் பத்திரிகை முதல் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு பற்றி மூச்சே விடவில்லை.

இதற்கு முன்னரே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறு சிறு கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். என வேண்டினார். அதில் பிரதானமாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று வடபகுதியை நோக்கிய மகாவலி எல் வலயத்திட்டம் அகற்றப்படல் வேண்டும். இரண்டாவது அரசாங்க செயலகங்களின் நிர்வாகம் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

சித்திரை 03ம் திகதி சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலைச் சந்தித்தனர். அதில் 10 கட்டளைகள் அடங்கிய மகஜர் ரணிலிடம் கையளிக்கப்பட்டதாகவும் அது பற்றி எழுத்து மூல உத்தரவாதத்தை ரணில் வழங்கியதாகவும் சித்திரை 04ம் திகதி யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால் பின்னர் அவ்வாறான எழுத்துமூல உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என மனோ கணேசன் கூறினார். சுமந்திரனும் எழுத்துமூல உடன்படிக்கை எதுவும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். நாங்கள் ரணிலிடம் பேசிய விடயங்களில் இப் பத்துக் கட்டளைகளும் உள்ளடங்கியிருந்தன எனக் கூறினார். எழுத்து மூலம் 10 கட்டளைகள் ரணிலுக்கு உண்மையில் வழங்கப்பட்டதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. மக்களுக்கு மட்டும் இது விடயத்தில் பொய் கூறப்பட்டது. ஆனாலும் உண்மையைக் கூறியதற்காக சுமந்திரனின் நேர்மையை இதில் பாராட்ட வேண்டும்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உண்மையில் தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்த இரண்டாவது பெரிய சந்தர்ப்பம். இவற்றின் மூலம் இயல்பு நிலையுடன் தொடர்புடைய கோரிக்கைகள், ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய கோரிக்கைகளையாவது உறுதிப்படுத்தியிருக்கலாம். புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக ரணில் வெற்றி பெற வேண்டும் என்பதில் இந்திய – அமெரிக்கச் சக்திகள் கவனமாக இருந்தன. அவர்களுடன் வலுவான பேரம் பேசலை நடாத்தியிருக்கலாம். ரணிலுடனும் வலுவான பேரம் பேசலுக்கு சென்றிருக்கலாம். குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் விவகாரம், அரசாங்க அதிபர்கள் விவகாரம், சிங்களக் குடியேற்றங்கள் மீனவர்கள குடியேற்றங்கள், நிலப்பறிப்பு, மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுவாக்கல் என்பவற்றின் முன்னேற்றங்களைக் கண்டிருக்கலாம். அநியாயமாக இவை கோட்டை விடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் கோட்டை விடப்பட்டது. இது இரண்டாவது சந்தர்ப்பம்.

இக் கோட்டைவிடுதல் மேலும் தொடரப் போகின்றதா? இன்றைய முக்கிய கேள்வி இது தான்.

 

4/15/2018 1:09:28 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்