Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீண்டும் உயிர்த்தெழும் மகிந்தர்

மீண்டும் உயிர்த்தெழும் மகிந்தர்
சி.அ.யோதிலிங்கம்

 

கடந்த தை 27 ஆம் திகதி நடைபெற்ற மகிந்தரின் நுகேகொட பேரணியினால் மைத்திரி – ரணில் அரசாங்கம் முழுமையாக ஆடிப்போயுள்ளது. அரசாங்கம் மட்டுமல்ல, ஆட்சிமாற்றத்திற்கு பின்னால் நின்று செயற்பட்ட இந்திய – அமெரிக்க சக்திகளும் ஆடிப்போயுள்ளன. லட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்தனர். இந்த ஆட்சியை வீழ்த்துவோம் என மகிந்தர் சூழுரைத்திருந்தார். சிங்கள மக்களில் பெரும்பான்மை அவருக்கு பின்னாலேயே நிற்கின்றது என்பதை பேரணி காட்டியிருந்தது. பேரணி நடாத்தி எம்மை அச்சுறுத்த முடியாது என ரணில் அறிக்கை விட்டாலும் முழு அரசங்காமுமே ஆடிப்போயுள்ளது.

நுகேகொடவிற்கும் மகிந்தருக்கும் நல்ல இராசி உள்ளது போலவே தெரிகின்றது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அரசியலில் தொடரப் போகின்றேன் எனத் தெரிவித்த இடமும் நுகேகொடதான். தற்போது தன்னை வலுவாகப் பலப்படுத்திய நிலையில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனக் கர்ச்சிக்கும் இடமும் நுகேகொடதான்.

தேர்தல் தோல்வி ஏற்பட்ட காலம் தொடக்கம் மிக நேர்த்தியாக காய்நகர்த்தியே மகிந்தர் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். தேர்தல் தோல்வி ஏற்பட்டதும் அவர் அன்றிருந்த பலமான நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவும் இருந்த நிலையில் அதிகாரத்திலிருந்து விலக மறுத்திருக்கலாம். அன்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியின் அச்சுறுத்தலினால்தான் ஆட்சியை ஒப்படைத்தார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் தான் அரசியலில் தொடரவேண்டும் என்பதற்காகவே அவர் பின்வாங்கியிருந்தார்.

அன்றிலிருந்து அவர் மிக நேர்த்தியாக காய்நகர்த்தினார். மிகக் கவனமாக தனது அரசியல் செயற்பாட்டின் மையமாக விகாரைகளை மாற்றினார். அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் எல்லாவற்றையும் பொது எதிரணியின் கீழ் ஒன்று திரட்டினார். மக்களை இணைப்பதற்கு தொடர்ச்சியாக பேரணிகளை நடாத்தினார். சிங்கள மக்களில் முப்பெரும் சக்திகளான மக்களையும், பௌத்த மதகுருமார்களையும், படையினரையும் தன்பின்னால் திரட்டினார். பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவியை மையமாக வைத்துச் செயற்பாட்டார். அன்றைய சூழலில் அது தனக்குக் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். எனினும் தொடர் அரசியல் செயற்பாட்டிற்காக அதனை இலக்காகக்கொண்டார்.

பெருந்தேசியவாதத்திற்கு பின்னால் மகிந்தர் நிற்பதனாலும், யுத்த வெற்றியின் கதாநாயகனாக அவர் மதிக்கப்படுவதனாலும் அவர் எழுச்சியடைவார் என்பதும் மைத்திரி – ரணில் கூட்டிற்கும் அவருக்கு பின்னால் இருக்கும் இந்திய – அமெரிக்க சக்திகளுக்கும் தெரியும். அவரைப் பலவீனப்படுத்துவதற்காக பசில் ராஜபக்ச மீதும், அவரது பிள்ளைகள் மீதும் பல்வேறு வழக்குகளை அரசாங்கம் தொடுத்து சிறையில் அடைத்தது. பிள்ளைகள் சிறைப்பட்டதால் மகிந்தர் சிறிது ஆடினபோதும் விரைவிலையே சுதாகரித்துக்கொண்டு அக் கைதுகளையும் அரசியல் முதலீடாக்கினார். சிங்களக் கூட்டு மனம் இந்தக் கைதுகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் விரைவிலேயே அவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

தற்போது மகிந்தர் மீதோ அவரது பிள்ளைகள் மீதோ கைவைக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. அதனால் விமல் வீரவன்ச போன்ற சில்லறைகளை சிறையில் அடைத்து பலவீனப்படுத்த முற்படுகின்றது.

மகிந்தரை கட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக மாகாண முதலமைச்சர் குழு மகிந்தரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியது. மைத்திரி தலைமையை ஏற்று சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டு ராஜபக்ச செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மகிந்தர் இரண்டு நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்தார். ஒன்று ஐக்கிய தேசியக் கட்சி பிரதான பங்கினை வகிக்கும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டும். இரண்டாவது கட்சியில் முடிவெடுக்கக்கூடிய பொறுப்பு தனக்குத் தரப்படல் வேண்டும். மைத்திரி இரண்டு நிபந்தனைகளுக்கும் இணங்க முடியாத நிலையில் இருப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போது மைத்திரி – ரணில் மட்டுமல்ல, அமெரிக்க - இந்திய சக்திகளும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக்கொண்டு நிற்கின்றனர்.

மகிந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என அமெரிக்க - இந்திய சக்திகள் வற்புறுத்தியதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரம் இந்தச் செய்தியும் அரசியலரங்கில் பலமாக அடிபட்டது. தேர்தல் அரசியலிலும் எதுவும் செய்ய முடியாமல், வழக்குகள் தொடுத்தும் எதுவும் செய்ய முடியாமல் அமெரிக்கவும் - இந்தியாவும் இந்தக் கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கலாம். கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பினைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில் தான் மகிந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. அவர் ஒதுங்கிக்கொள்ளாவிடின் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் வருகின்றன. முன்பு பிரபாகரனுக்கு விடுக்கப்பட்ட அதே எச்சரிக்கை தற்போது மகிந்தருக்கு விடுக்கப்படுகின்றது.

மீண்டும் உயிர்த்தெழும் மகிந்தர்

புலிகள் திருமலையில் யுத்தத்தினை தொடங்கியபோது பலம் பொருந்திய இலங்கைப் படையைச் சந்திக்க வேண்டிவரும் என அமெரிக்க தரப்பினால் புலிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அதன் அர்த்தம் இலங்கைப் படையை நாமும் இணைந்து பலப்படுத்துவோம் அந்தப் படையை உங்களால் வெல்லமுடியாது என்பதே,

மகிந்தருக்கு பதிலாக நாமல் ராஜபக்ச அரசியல் ரீதியாக வளர்வதற்கு அமெரிக்க ஆதரவு தரும் எனக் கூறப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. மகிந்தர் அளவிற்கு சிங்கள மக்களை அணிதிரட்டும் ஆற்றல் நாமல் ராஜபக்சவிற்கு இல்லை என அமெரிக்காக கருதியிருக்கலாம்.

இந்திய புலனாய்வு அமைப்பான றோ கூட்டு எதிரணிப் பிரமுகர் ஒருவரிடம் மகிந்தர் அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும், அவ்வாறு ஒதுங்கினால் யோசித, நாமல் மீதான வழக்குகளையும் வாபஸ்பெற நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் செய்திகள் வந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பல இதனை உறுதிப்படுத்தும் பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.

அமெரிக்க - இந்திய சக்திகள் எவ்வாறு வற்புறுத்தினாலும் மகிந்தர் அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதில்லை. மகிந்தர் இவ்வளவு தூரம் வந்தபின் அவர் நினைத்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட முடியாது. அது அவரது சுயமரியாதைக்கு இழுக்கைத் தரும் விடயம். அமெரிக்க - இந்திய சக்திகள் நெருக்கடி கொடுக்க கொடுக்க அவர் மேலும் மேலும் பெருந்தேசியவாதத்திற்குள் சரணடைவார். பெருந்தேசியவாதம் சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக இருப்பதனால் சிங்களப் பெரும்பான்மையும் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும். இது மைத்திரி – ரணில் அணியை மேலும் மேலும் பலவீனப்படுத்தும்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்று மைத்திரியின் ஆதிக்கத்தில் இல்லை. முன்னர் மகிந்தரின் பேரணிக்கு செல்வோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என மைத்திரி அணி பயமுறுத்தலைச் செய்தது. தற்போது அதுபற்றி வாய் திறப்பதில்லை. மைத்திரியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சுந்திரக்கட்சி அமைச்சர்கள் பதவிகளுக்காகவே நிற்கின்றனர். மகிந்தர் பலமான நிலைக்கு வந்து சிங்களக் கூட்டுமனம் மகிந்தரை வலுவாக ஆதரிக்குமாயின் அவர்களும் ஒவ்வொருவராக கழன்று மகிந்தர் அணி நோக்கிச் செல்லத் தொடங்குவர். தற்போது கிராம மட்டங்களில் உள்ள சுதந்திரக் கட்சிக்காரர்கள் எல்லாம் மகிந்தர் அணியிலேயே உள்ளனர். வடமத்திய மாகாணம் மைத்திரியின் சொந்த மாகாணமாக இருப்பதனால் அங்கு மைத்திரிக்கு ஆதரவு உள்ளது. அதுவும் பொலனறுவை மாவட்டத்திலுள்ள ஆதரவு போன்று அனுராதபுர மாவட்டத்தில் ஆதரவு கிடையாது.

மரபு ரீதியாகவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கருத்தியல் தளம் சிங்களப் பெருந்தேசியவாதமே. இதனால் கட்சியின் பெரும்பான்மை அதற்கே ஆதரவாகவே இருக்கும். ரணிலுக்கும் இந்திய – அமெரிக்க சக்திகளுக்குமுள்ள பெருங்கவலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி பற்றியதல்ல. மாறாக பெருந்தேசியவாதம் எழுச்சி கண்டால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் பலர் கழன்றுவிடுவார்கள் என்பதே! இந்த வருட நடுப்பகுதிக்கிடையில் இந்தப் போக்குகளின் அடையாளம் தெளிவாகத் தெரியத்தொடங்கும் என்று நான் நினைக்கின்றேன்.

இங்கு எழும் மிகப்பெரும் கேள்வி மகிந்தர் விடயத்தில் அமெரிக்க - இந்திய சக்திகள் தொடர்ந்து என்ன செய்யப் போகின்றன என்பதே. அவை ஏதோ ஒருவகையில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தைப் பலப்படுத்தலையும், மகிந்தரை பலவீனப்படுத்தலையும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டேயிருக்கும். அரசாங்கத்திற்கான சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படலாம். ஜெனிவாவில் கலப்பு நீதிமன்றம் போன்ற சில உறுதிப்பாடுகள் தொடர்ந்தாலும் அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்படும். அரசியல் யாப்பு முயற்சிகள், காணாமல் போனோர் ஆணைக்குழு அறிக்கை என்பவற்றிற்காக அரசாங்கத்திற்கு நற்சான்றிதழும் வழங்கப்படும். G.S.P பிளஸ் சலுகையும் சில மாதங்களில் வழங்கப்படும். இது விடயத்தில் 27 சர்வதேச பிரகடனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறினாலும் அழுத்தங்களைக் கொடுக்காது. ஒட்டாவா கண்ணிவெடி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்கின்ற ரோம் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும்படி கேட்கலாம். இலங்கையும் சிலவேளை கையெழுத்திடலாம். மகிந்தர் ஆட்சிக்கு வந்தால் அவரை மடக்குவதற்கு இவை உதவலாம் என்பதற்காக அதனை வலியுறுத்தலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்படி எந்தவித வலியுறுத்தல்களையும் செய்யப்போவதில்லை.

போர்க்குற்ற விசாரணை விடயத்தையும் மூடப்போவதில்லை. மகிந்தர் ஆட்சிக்கு வந்தால் அதனை தூசி தட்டி எழுப்ப முயலும். போர்க்காலத்தில் பிரபாகரன் சந்தித்த அனைத்து சர்வதேச அழுத்தங்களையும் மகிந்தர் தொடர்ச்சியாக சந்திப்பார். மறுபக்கத்தில் தமிழ்த்தேசிய சக்திகள் எழுச்சியடைவதையும் எப்படியும் தடுக்கப் பார்க்கும். இந்திய – அமெரிக்க சக்திகளுக்குள்ள பெரிய பிரச்சினை தீர்வு என்ற பெயரில் தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய நிலை இருப்பதே. புதிய அரசியல் யாப்பு மூலம் அதற்கே முயற்சிக்கப்பட்டது. சமஸ்டியும் இல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லாமல் மகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதுபோல ஒரு தோற்றம் கொடுக்கவே முயற்சிக்கப்பட்டது, கூட்டமைப்பும் அதற்கு முழுமையான சம்மதத்தை வழங்கியிருந்தது. அதனைக்கூட மகிந்தர் அணி தடுத்துவிட்டது என்பதுதான் அவற்றிற்கு கவலை.

தற்போது தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலையில் தமிழ்த்தேசிய எழுச்சி மீண்டும் உருவாகும் என இவை அஞ்சுகின்றன. இந்த எழுச்சிகளையோ தமிழ்ச் சூழலில் தங்களது பொம்மைகள் அல்லாத சுயாதீன சக்திகள் வளர்வதையோ இவை அறவே விரும்பவில்லை. இதன் அடிப்படையில்தான் எழுக தமிழையும் அவை விரும்பவில்லை. தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னர் தமிழர்கள் உலகரீதியாக ஒருங்கிணைவது தெளிவாக உணரப்பட்டது. இது முன்னர் போர்க்காலத்தில் கூட அடையாளம் காணப்பட்டாலும் தெளிவாகப் புலப்பட்டிருக்கவில்லை. இந்த அணிதிரளுகையை இந்தியா ஒருபோதும் விரும்பப்போவதில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் தமது கூட்டுக்கோரிக்கைகளில் இலங்கை தமிழ் விவகாரத்தையும் முன்வைத்திருந்தனர்.

இதைவிட தமிழ்த்தேசிய எழுச்சி பொருள்தேசிய வாதத்தையும் எழுச்சியடையச் செய்யும். இதனால் தென் இலங்கையிலும் தமது பொம்மைச் சக்திகள் பலவீனப்படும் என்றும் அஞ்சுகின்றன. ரணில் பலவீனமடைவதை இந்தச் சக்திகள் ஒருபோதும் விரும்பப்போவதில்லை.

தமிழ்த்தேசிய சக்திகள் மகிந்தரின் எழுச்சியை மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். மகிந்தரின் எழுச்சி தமிழ் மக்களுக்கு பலவழிகளிலும் ஆபத்தானது. அதில் முதலாவது புறரீதியான ஒடுக்குமுறை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகும். சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்காலத்தில் எப்போதுமே புற ஒடுக்குமுறை அதிகமாகவே இருக்கும். இதன் ஆட்சிக்காலத்தில் இராணுவ நெருக்கடிகள், அரச அடாவடித்தனங்கள் அதிகமாக இருத்தல், சிங்கள மயமாக்கல் அதிகமாக இருத்தல், ஜனநாயக வெளி சுருங்குதல் என்பன வலுப்பெறுவது வழமையானது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் இவை இருந்தாலும் அதன் வெளிப்படைத்தன்மை குறைவாக இருக்கும். அது எல்லாவற்றையும் இரகசியமாகச் செய்யும்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து தமிழ் அரசியலை அகரீதியாக சிதைப்பதாகும். அதன் ஒடுக்குமுறை கண்ணுக்குப் புலப்படுவது குறைவாக இருப்பதனாலும், தமிழ் மேட்டுக்குடி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொஞ்சிக்குலாவ வெளிக்கிடுவதாலும் இவ் அகரீதியான சிதைவு ஏற்படுகின்றது.

மகிந்தரின் எழுச்சியினால் பெருந்தேசியவாதம் தன்னைப் புறக்கணித்துவிடும் எனக் கருதி ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்கள மயமாக்கலை தொடரலாம். மகிந்தரின் பெருந்தேசியவாதத்திற்கு தான் எந்தவகையில் குறைந்தவன் அல்ல எனக் காட்டவேண்டிய தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு.

இரண்டாவது ஆபத்து மகிந்தரின் எழுச்சி மைத்திரி – ரணில் அரசாங்கத்தை பலவீனப்படுத்திவிடும் என்பதால் சர்வதேச சக்திகள், குறிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ்மக்கள் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதை நிறுத்திவிடும் நிலை இருப்பதாகும். தற்போது அந்த நிலை இருக்கின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். முன்னரே கூறியது போல ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுக்கப்படும். G.S.P சலுகையையும் ஐரோப்பிய யூனியன் வழங்கும்.

இங்கு பெருந்தேசியவாதிகளின் தந்திரோபாயம் அபாரமானது. மகிந்தரை எழுச்சி பெற வைப்பதன் மூலம் பெருந்தேசியவாதத்தையும் பாதுகாக்க முடிகின்றது. மறுபக்கத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் தப்ப முடிகின்றது. அவர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் எனலாம். அதேவேளை புவிசார் அரசியல் போட்டியில் ஒரு அணியுடன் மட்டும் நிற்காது. அமெரிக்க - இந்திய அணியுடனும், சீனாவுடனும் உறவுகளைப் பூண்டு தமது நலன்களை அடைந்துகொள்ள முடிகின்றது. இருதரப்புக்களையும் தமக்கு எதிராக செல்லாதவாறு தற்காத்துக் கொள்ளவும் முடிகின்றது.

மூன்றவாது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் கைதி நிலையில் இருக்கவேண்டிய அபாயம் ஏற்படுவதாகும். கூட்டமைப்பு இன்று அமெரிக்க - இந்திய சக்திகளின் கைதியாகவே உள்ளது. எந்த வித உத்தரவாதமும் இல்லாமல் இணக்க அரசியலுக்கு சென்றதும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதும் இதனால்தான். மகிந்தர் மேலெழும்பி விடுவார் என்பதற்காக அமெரிக்க - இந்திய சக்திகள் தொடர்ந்தும் கைதி நிலையிலேயே கூட்டமைப்பை வைத்திருக்கும்.

இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் தமிழ்மக்களுக்கு சாதகமான நிலையும் உண்டு. தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைக்கு கிடைக்கப்போவதுமில்லை என்ற நிலையில் கட்டமைப்பு சார் இன அழிப்பிலிருந்து தப்புவதற்கு சர்வதேசப் பாதுகாப்பை கோரவும், இடைக்கால நிர்வாகத்தை கோரவும், சர்வதேச நீதி கோரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. எழுக தமிழ் போன்ற எழுச்சிகளுக்கு நியாயமும் ஏற்படுகின்றது.

மக்கள் போராடத் தொடங்கினால் கூட்டமைப்பும் அதைச் சாட்டி கைதிநிலையில் இருந்து விடுதலை பெறலாம். புவிசார் அரசியலில் எங்களுக்கு இருந்த பங்கினை இந்தியாவும், அமெரிக்காவும் தட்டிப் பறித்தன. அதுவும் மீண்டும் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.

ஒருவகையில் நெருக்கடியான காலம் தான். சாதுரியத்துடன் முன்னேறினால் இலக்கை நோக்கி மெதுவாகத்தன்னும் தமிழ்மக்களினால் நகரமுடியும்.

2/4/2017 3:01:10 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்