Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இன்னும் திறக்காத சிறைக் கதவுகள்

இன்னும் திறக்காத சிறைக் கதவுகள்
கருணாகரன்

 

கடந்த வாரம் எதிர்பாராத விதமாக நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இயக்கமொன்றில் முன்னர் போராளியாக இருந்தவர். போராளியாக இருந்த காலத்தில் மட்டக்களப்புச் சிறையை உடைத்து, அங்கிருந்த அரசியற் கைதிகள் மீட்கும் நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தவர். ஆனால், பின்னொரு காலம் அவரே சிறையிருக்க வேண்டியதாகி விட்டது. அவர் சிறையிலிருந்தபோது யாரும் அவரைச் சிறையிலிருந்து மீட்க முயற்சிக்கவில்லை. குறைந்தபட்சம் அவருடைய விடுதலையைப் பற்றிக்கூட பெரிய அளவில் பேசியதாக இல்லை. இதையிட்டு அவர் வருத்தப்படவுமில்லை. எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞான நிலையில் சிரித்துப் பேசினார். அப்படியே விடைபெற்றுச் சென்றார்.

ஆனால், அரசியற் கைதியாகச் சிறையிருப்பதொன்றும் இலகுவான காரியமல்ல. அது வலி தரும் விசயம். அரசியல் என்பது ஒரு வகையில் அதிகாரத்துக்கான போட்டியேயாகும். அதில் சிறையிருக்க வேண்டி நிகழ்வது நிச்சயமாக அதிகாரத்துக்கான போட்டியின் விளைவே. இந்த அதிகாரம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று ஆட்சியிலிருக்கும் தரப்பினுடைய அதிகாரம். மற்றது அந்த அதிகாரம் இழைக்கின்ற தவறுகளைச் சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருப்பெற முனையும் அதிகாரம். ஆட்சியிலிருக்கும் அதிகாரம் எப்பொழுதும் பலமானது. அது தனக்கு வாய்ப்பான வகையில் சட்டங்களையும் நீதி அமைப்பையும் வைத்துக்கொள்ளும். அதற்கேற்றவாறே அதனுடைய விசாரணைகளும் தீர்ப்புகளும் தண்டனையும் அமையும். மாற்றுத் தரப்பானது அதிகாரமற்ற நிலையில், அதிகாரத்தைக் கோரிச் செயற்படுவதனால், அது எப்போதும் பலவீனமாகவே இருக்கும். பலமடையும் வரையில் அது வெறுங்கையின் நிலைக்குச் சமம். இதனால்தான் அரசியற் கைதிகள் எப்பொழுதும் கையறு நிலையில் இருக்க வேண்டியேற்படுகிறது. பழிகளை அனுபவிக்க வேண்டியவர்களாகின்றனர்.

உலகெங்கும் அரசியற் கைதிகளே மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர். இது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையைப் போலாகிவிட்டது. அரசியற் கைதிகளை உடைய பல சிறைக்கூடங்கள் வதைமுகாங்களாகவும் படுகொலைக்களன்களாகவும் இருந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் இதில் முதலிடம் வகிக்கின்றன. வெட்கமில்லாமலே இந்தக் காரியங்களில் அனைத்துத் தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன. அமெரிக்கச் சிறைகளில் நடந்த மிகமோசமான சித்திரவதைகளைப் பற்றிய சேதிகள் கடந்த ஆண்டுகளில் உலகை அதிர வைத்தன. முக்கியமாக ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறையில் நடத்தப்படும் சித்திரவதைகளும் படுகொலைகளும். அரசுகள் மட்டுமல்ல விடுதலை இயக்கங்கள் கூட கைதுகளிலும் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் தாராளமாக ஈடுபட்டிருக்கின்றன. இதனால்தான் இது அரசியல் அதிகாரத்திற்கான போட்டியின் விளைவு என்று சொல்லப்படுகிறது.

இலங்கையில் அரசியற் கைதிகள் சந்தித்த வதைகளும் தண்டனைகளும் மரணங்களும் அதிகம். ஆண், பெண் என்ற பேதங்களில்லாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளில்லாமல் அரசியற் கைதிகள் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள், 1970களில் ஜே.வி.பி கிளர்ச்சியில் தொடங்கிய இந்தப் பெரும் பாரம்பரியம் இப்போது விடுதலைப்புலிகளின் போராளிகள் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையில் 1983 இல் நடந்த வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை இதில் உச்சம். இவற்றைப் பற்றிய பதிவுகள் பலவும் கைதிகளாக இருந்தவர்களால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாடு எதற்காக அரசியற் கைதிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது? என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை. அரசியல் எதிராளிகளை கைதிகளாக்குவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதுமில்லை அல்லது எல்லாமே சரியாகி விடும் என்றுமில்லை. ஆனால், அரசு அப்படித்தான் சிந்திக்கிறது. அதனால்தான் அது எதிராளிகளைச் சிறையிலடைக்கத் துடிக்கிறது அல்லது சிறையிலடைக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக்காலத்தை நீடிக்கிறது. இது தவறான ஒரு அணுகுமுறை. தன்னுடைய தவறுகளையும் குற்றங்களையும் மறைப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இப்படிச் செய்கிறது. பதிலாக அரசியல் எதிராளிகள் உருவாகும் காரணங்களை இல்லாமலாக்க வேண்டும். அந்தக் காரணங்களை இல்லாமலாக்குவதற்குப் பதிலாக அரசியல் எதிராளிகளை இல்லாமலாக்கும் அல்லது பலவீனப்படுத்தும் நோக்கமே அரசுகளிடம் உள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையையும் நோக்கையுமே அரசாங்கங்கள் தங்களின் பிரதான வாய்ப்பாடாக வைத்திருக்கின்றன.

இத்தகைய ஒரு அரசியல் மற்றும் கைது மற்றும் சிறைத்தண்டனை முறைகளைக் கொண்ட சுருக்கப் பின்னணியிலே நாம் தமிழ் அரசியற் கைதிகளின் விடுலையைப் பற்றிப் பேசலாம்.

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக கடந்த வாரம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் கரைந்து போயிருக்கின்றன. 31.08.2016 புதன்கிழமை ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று சொல்லப்பட்டது. இது தொடர்பான தீர்மானம் 26.08.2016 வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கைதிகள் குறித்த நாளில் விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து, கைதிகளின் விடுதலையைக் குறித்து, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டிருக்கிறார். கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டதை ஏற்றுக்கொண்ட சுவாமிநாதன், விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் எதிர்வரும் 15.09.2016 அன்று வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக ஒரு குழப்பமான மனநிலை கைதிகளிடத்திலும் அவர்களுடைய உறவினர்களிடத்திலும் உருவாகியிருப்பதாக அறிய முடிகிறது.

இன்னும் திறக்காத சிறைக் கதவுகள்

தங்களின் விடுதலை தொடர்பாக எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்களுக்கு அது நடக்காது போகுமிடத்து உண்டாகும் தாக்கம் சாராணமான ஒன்றல்ல. இதைப் புரிந்துகொள்வதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது. அரசியல் அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் அரசியற் கைதிகளை எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றனர்? எந்த நிலையில் நோக்குகின்றனர் என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. தமிழ் அரசியற் கைதிகள் என்பது முடிவுற்ற அரசியலின் தரப்புப் பிரதிநிதிகள் அல்லது அந்த அரசியலின் ஆட்கள் என்று சந்தேகப்படுவோர்.

புலிகள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அந்த அமைப்பைச் சேர்ந்த பன்னிரண்டாயிரம் பேரை மறுபடியும் சமூகத்துடன் இணைத்திருப்பதாகச் சொல்லும் அரசு அவர்களுக்கு வழங்கியது ஒரு வகையில் பொது மன்னிப்பே. ஆனால், இந்த மன்னிப்பை அது உத்தியோகபூர்வமாக அப்படிப் பிரகடனப்படுத்தவில்லை. அதனால் இது பொது மன்னிப்பு என்று சொல்லப்படவும் இல்லை. இருந்தாலும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்தல் என்பது வேறு எப்படியான அர்த்தத்தில் அமையும்?

ஆகவே அது ஒரு அரசியற் தீர்மானமல்லவா. அத்தகைய ஒரு அரசியற் தீர்மானத்தை தற்பொழுது சிறைகளில் இருக்கும் அரசியற் கைதிகளின் விசயத்திலும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பவை விதிக்கும் கால நீட்சிக்குள்ளேயே இந்தக் கைதிகள் சிக்குண்டிருக்க வேண்டியிருக்கும். இப்பொழுதே 25 ஆண்டுகள் கடந்த நிலையில் 10 வரையான அரசியற் கைதிகள் உள்ளனர். நெல்சன் மண்டேலா கூட 26 ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகி விட்டார். ஆனால், இந்தக் கைதிகளின் விடுதலை பற்றிய எந்தத் தகவலும் இல்லாதிருக்கிறது. இதைவிட ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பல கைதிகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஒரு அரசியல் நடவடிக்கையின் விளைவாகச் செயற்பட்டவர்கள். அந்த அரசியல் இன்றில்லை. அதனுடைய பிதாமகர்களும் இல்லை. பிரதானிகள் மன்னிக்கப்பட்டு விட்டார்கள். ஆகவே இவர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. 

ஆகவே, இதை அரசியல் தீர்மானமாக, அரசியல் அணுமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டியதே இன்றுள்ள வேலையாகும். இதைச் செய்ய வேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. நடைமுறையிலிருக்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாக உறவைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம். ஆனால், அவர்களுக்கு இதில் அவ்வளவு நாட்டமிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு நீண்டுகொண்டிருக்காது.

அரசியற் கைதிகளின் விவகாரம் தொடர்பாக சம்பந்தனும் கூட்டமைப்பும் அக்கறையோடிருப்பதால்தான், அரசாங்கத்துடன் அது தொடர்பாக அவ்வப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சப்பைக்கட்டு நியாயத்தை சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது சட்டப்பெட்டிக்குள் சிக்குண்டிருக்கும் பாம்பு படமெடுத்துக் காட்டுவதைப் போன்றது.

உண்மையில் இதுவரை கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் கூட கைதிகளினதும் கைதிகளின் உறவினர்களின் மீதும் கொண்ட அக்கறையின் பாற்பட்டு நடப்பதல்ல. மாறாக கைதிகள் நடத்தும் போராட்டம், அவர்களுடைய உறவினர்கள் கொடுக்கின்ற அழுத்தங்களின் நிமித்தமாக நடந்த, நடக்கின்ற முயற்சி. இந்த முயற்சியை செம்மையாக, அர்ப்பணிப்புணர்வுடன் மேற்கொண்டால் இதுவரையில் அரைவாசிக்கு மேலான கைதிகளை விடுவித்திருக்க முடியும். சிலவேளை, முழுக்கைதிகளுமே விடுவிக்கப்பட்டிருக்கவும் கூடும்.

இதை அரசியல் ரீதியாக அணுகப்படாத வரையில் சட்டப் புத்தகமே வலுவாக இருக்கும். சட்டத்துக்கு இரக்கமோ, மனிதாபிமானமோ கிடையாது. அது தன்னுடைய கோடுகளிலும் எல்லைகளிலுமே உறுதியாக இருக்கும். ஆகவே சட்டப்புத்தகத்தைப் பற்றிச் சிந்திக்காமல், இதை அரசியல் ரீதியாக அணுகுவதைப் பற்றிச் சிந்திக்க முன்வர வேணும்.

ஏனென்றால், இந்த அரசியற் கைதிகள் தனிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில்லை. தங்கள் சுயநலன்களுக்காக சிறையிருப்பவர்களுமில்லை. பதவிகளுக்காகவும் அதிகாரச் சுவைக்காகச் செயற்பட முனைந்தவர்களுமல்ல. ஒரு மக்கள் கூட்டத்தில் அல்லது ஒரு சமூகத்தின் அரசியல் உணர்வுகளின் வழியாக சிந்தித்தவர்கள். அந்த மக்களின் விடுதலைக்காக அல்லது அரசியலுக்காக செயற்படும்போது எதிர் அரசியலினால் கைது செய்யப்பட்டவர்கள். ஆகவே, அரசியல் ரீதியாகவே இதை அணுக வேண்டும். இவர்கள் செயற்பட்ட அரசியலுக்கு மாற்றான அரசியலை முன்மொழியும் அரசும் தமிழ்த்தரப்பும் இவர்களைப் பொறுப்பெடுத்து, புதிய அரசியலுக்கு அறிமுகமாக்கலாம் அல்லது இவர்கள் அந்தப் புதிய அரசியலை அவதானிக்கும் வகையில் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம். எப்படியோ இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்பது மட்டும் உண்மையே.

ஆனால், இந்த அரசியற் கைதிகளின் விடுதலையில் எதற்காக இத்தகைய இழுத்தடிப்புகளும் பாராமுகமும் அலட்சியமும் என்பதே கைதிகளின் கேள்வியாகும். இந்தக் கேள்வியை அவர்களுடைய உறவினர்களும் கேட்கின்றனர். இருந்தும் இந்தக் கேள்விகள் பெறுமதியாக்கப்படவில்லை என்பதே துயரமாகும். சிறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது கொடுமையான விசயமாகும். அவர்கள் செய்த அல்லது செய்ய நேர்ந்த தவறுகள் அல்லது குற்றங்களை விடவும் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் தண்டனை அதிகமானது.

இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கப்போவது யார்? ஏனென்றால், சிறைகளில் இருப்பவர்கள் அரசியற் தலைவர்களோ கட்சிகளின் பிரமுகர்களோ அல்ல அல்லது செல்வாக்கான தலைகளுமில்லை. மிகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள். ஆனால், அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள். இவர்களைப்பற்றி யாருக்குத்தான் பெரிய அக்கறைகள் வரப்போகுது? இவர்களில் நாளைய அரசியற் தலைவர்களாக வரக்கூடியவர்கள் உள்ளனர். எனவே, அப்படி ஒரு தலைமை வந்தால் தமக்கு அச்சுறுத்தலாகி விடும் என்ற எச்சரிக்கை இவர்களுக்குண்டு. எனவேதான் இந்தக் கைதிகளின் விடுதலையைத் தாமதப்படுத்தி, இவர்களைப் பலவீனப்படுத்த முனைகின்றனர். இதில் அரசாங்கத் தரப்பும் ஒன்றுதான், தமிழ்த்தரப்பும் ஒன்றுதான். இரண்டு தரப்பிலும் நம்பிக்கை இழந்த நிலையிலேயே கைதிகள் இருக்கின்றனர்.

முன்னொரு காலம் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை மீட்ட அரசியல் இருந்தது. அந்த அரசியல் தற்போது சாத்தியப்படாதிருக்கலாம். பதிலாக தங்கள் புத்திக் கூர்மையாலும் அர்ப்பணிப்பான செயற்பாட்டினாலும் அரசியற் கைதிகளை விடுவிக்கும் அரசியலையாவது செய்யலாமல்லவா! அப்படி அர்ப்பணிப்பாகச் செயற்பட்டால் சில சந்தர்ப்பத்தில் நமது தமிழ் அரசியல்வாதிகள் சிறைசெல்லவும் நேரலாம். அப்படிச் சிறை செல்வதொன்றும் தவறல்லவே. தலைவர்களும் பிரமுகர்களும் எம்பிமாரும் சிறைசெல்லக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கிறதா என்ன? அப்படி இவர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டால், அதுவே பெரிய அரசியற் போராட்டமாக மாறும். அந்தப் போராட்டம் அனைத்து அரசியற் கைதிகளின் விடுதலையையும் சாத்தியமாக்கும். அதைச் செய்யத் தயங்குவதேன் இன்னும்?

9/17/2016 10:47:58 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்