செந்தூரன்
காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரணப் முகர்ஜி ஓர் அரசியல் வியூகத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கான பதிலில் பிரணப் முகர்ஜியின் பெயரும் ஒன்றாகும். ஆனால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதன் மூலம் பிரதமர் பதவி அவருக்கு இல்லை என்கின்ற நிலை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பிரதமர் பட்டியலிலிருந்து இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அகற்றப்படும் இடத்தில் முதலாவது பெயராக பிரணப் முகர்ஜியும், இரண்டாவது பெயராக ப.சிதம்பரமும் வரலாம் என்கின்ற ஊகங்கள் உண்டு. அடுத்த தடவையும், ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்குரிய சமிக்ஞைகளை இன்னும் காட்டாத நிலையில் காங்கிரசின் பிரதமர் பட்டியலில் முறையே மன்மோகன் சிங், பிரணப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகிய மூவர்களின் பெயர்களே விளங்கமுடியும். மன்மோகன் சிங் நேரு குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்திற்கு இடையூறானவர் அல்ல என்கின்ற நிலையில் அவர் பிரதமர் ஆக்கப்பட்டார்.
இந்தியாவின் மொத்த சனத்தொகையில் ஒரு விகிதத்தினரே சீக்கியராவர். அதுவும், சீக்கிய இனத்தில் அரசியல் செல்வாக்கற்ற ஒருவராகவே மன்மோகன் சிங் உள்ளார் என்பதால் அவரால் நேரு குடும்பத்திற்கு சவால்விட முடியாது. இந்நிலையிற்தான் அவர் பிரதமர் ஆக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாக இருந்த நிலையில் ராஜ்சபா உறுப்பினராக்கப்பட்டு அதன் மூலம் பிரதமர் கதிரையில் அமர்த்தப்பட்ட மன்மோகன் சிங் ஒருபோதும் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு சவால் விடக்கூடிய நிலையில் இருக்க முடியாது. இந்நிலையிற்தான் படித்தவர், சிரேஸ்ர அமைச்சராக இருந்தவர், முன்னணி அமைச்சுப் பதவியை வகித்தவர் என்கின்ற ஏனைய தகுதிகளின் அடிப்படையில் அவர் பிரதமராக்கப்படுவது இலகுவாக அமைந்தது. அரசியலில் மக்கள் சக்தி உள்ள ஒருவர்தான் நேரு குடும்பத்திற்கு சவால்விட முடியும். பல்வேறு சிறப்பான தகுதிகளும், அங்கீகாரங்களும் மன்மோகன் சிங்கிற்கு இருந்த போதிலும், அவர் மக்கள் சக்தியற்ற ஒரு தலைவன் என்பதால் நேரு குடும்பம் அவரைப் பிரதமராக்கத் தயங்கவில்லை. இப்பின்னணியில் மன்மோகன் சிங்கும் நேரு குடும்பத்திற்கு விசுவாசம் மிக்க ஒரு பிரதமராய் இருப்பதும் தவிர்க்க முடியாது.
திருமதி. சோனியா காந்தி ஓர் ஐரோப்பியப் பெண் என்பதால் அவர் இந்தியாவின் பிரதமராய் வரக்கூடாது என்ற பாரதீய ஜனதாக் கட்சியின் தீவிர எதிர்ப்பின் மத்தியில் சோனியா காந்தி அதிலிருந்து பின்வாங்கினார். ராகுல் காந்தி இளையவராயும், அரசியல் அனுபவம் அற்றவராயும் காணப்படும் பின்னணியில் அவர் பிரதமராக முடியாத நிலை காணப்பட்டது. இத்தகைய அரசியல் வெற்றிடத்திற்தான் நேரு குடும்பத்திற்கு விசுவாசமான ஒரு தலைவரைத் தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரசியலில் விசுவாசம் என்பதற்கு இடமில்லை. வாய்ப்புள்ள ஒருவன் விசுவாசத்தை மீறி தன் பிடியை இறுக்கிக் கொள்வான். ஆனால் வாய்ப்புக் குறைந்த ஒருவன்தான் விசுவாசம் என்பதன் பெயரில் ஒட்டிக்கொள்வான். ஆதலால் வாய்ப்பும், பலமும் மிக்க ஒருவனை மன்னன் தனக்கு அடுத்த இடத்தில் வைத்திருப்பதில்லை. அப்படி வைத்திருக்கக் கூடாதென்பதையே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமும், மாக்கிய வல்லியின் இளவரசன் என்னும் நூல்களும் போதிக்கின்றன.
ஒரு மன்னனோ ஒரு பிரதமரோ அல்லது ஒரு ஜனாதிபதியோ அரச கட்டிலில் அமரும் எவராவது தனக்கு அடுத்த இடத்தில் அரசியல் பலமிக்க ஒருவர் அமர்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தவகையில் ஒரு தேசத்தின் இரண்டாவது பதவியில் இருப்பவர் அநேகமாக ஆபத்து விளைவிக்க முடியாத அளவிற்கு பலவீனமானவராக அமைய வேண்டும் என்பதே அரசியல் வரலாறு காட்டும் ஓர் உண்மையாகும். மூன்றாவது தடவையும் மன்மோகன் சிங் பிரதமர் ஆகக்கூடாது என்கின்ற கருத்தோட்டம் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நேரு குடும்பத்திற்கு வாய்ப்பான பிரதமராகக் காணப்படும் மன்மோகன் சிங் அதிலிருந்து தவிர்க்கப்படுமிடத்து பிரணப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர்களே பிரதமர் பதவிக்கான முன்னணிக்குரியவர்களாக முடியும்.
இந்நிலையில் பிரணப் முகர்ஜியின் பிரதான எதிரி ப.சிதம்பரமாகவே அமையலாம். ஆதலால் ப.சிதம்பரத்தை இத்தகைய பதவிக்கான அரங்கிலிருந்து அகற்றுவதற்கான முன்முயற்சிகளில் பிரணப் முகர்ஜி ஈடுபடத்தொடங்கியதன் மூலம் நேரு குடும்பத்திற்கு பிரணப் முகர்ஜி தனது தலையெடுப்பை அறிவித்துவிட்டார். குறிப்பாக ஸ்பெக்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு உண்டு என்று கோடிகாட்டவல்ல தகவல்களை பிரணப் முகர்ஜி வெளியிட்டார். இந்நிலையில் பிரணப் முகர்ஜியின் காய்நகர்த்தலைப் புரிந்துகொண்ட நேரு குடும்பம் உடனடியாக உசார் அடைந்தது. இதில் ப.சிதம்பரத்தைப் பாதுகாக்கத் தவறினால் பிரணப் முகர்ஜியின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதை நேரு குடும்பம் சரியாகவே உணர்ந்தது. அதாவது ஸ்பெக்ரம் ஊழலில் சிதம்பரம் மாட்டுப்பட்டுவிட்டால் அவர் பிரதமராக முடியாது என்பதே பிரணப் முகர்ஜியின் மதிப்பீடு. இந்நிலையில் நேரு குடும்பம் தனது கையை சிதம்பரம் பக்கம் உயர்த்தியது. பிரணப் முகர்ஜி பின்வாங்கிக் கொண்டார். இதை இன்னொருவகையில் கூறுவதனால் ப.சிதம்பரத்தால் தூக்கி பிரணப் முகர்ஜியின் வலது தோள் பட்டையை நேரு குடும்பம் தாக்கியது. பிரணப் முகர்ஜி தோள் உடைந்து போனார்.

பிரணப் முகர்ஜி ஒரு வங்காளி. அவர் திறமையும், கட்சிக்குள் செல்வாக்கும் கொண்ட ஒரு தலைவர். வங்காளத்தில் அவருக்கு பெரும் பலமில்லையே ஆயினும் அவர் வங்கத்தில் கால் ஊன்றக்கூடிய அடிப்படைப் பலம் கொண்டவர். தேசிய மட்டத்தில் நன்கு அறியப்பட்டவரும், திறமையும் கூடவே அனுபவமும் கொண்டவர். தெளிவான அபிலாசைகளையும் தனக்கென ஒரு தனி இடத்தையும் கொண்டவர் அவர். பிரணப் முகர்ஜி பிரதமராவாரே ஆனால் நேரு குடும்பத்தை பொருட்படுத்த மாட்டார், அல்லது ஓரம் கட்டிவிடுவார் என்கின்ற அச்சம் நேரு குடும்பத்திடம் உண்டு. எனவே அவரைப் பிரதமராக வராது தடுப்பதற்கான முயற்சிகளே நேரு குடும்பத்தின் முதன்நிலை அரசியலாய் அமையும்.
2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும், அல்லது அடுத்த லோக் சபாவிற்கான பொதுத்தேர்தலில் நேரு குடும்பத்தின் கை பலவீனமடையும் என்றால் அப்போது பிரணாப் முகர்ஜி கட்சிக்குள் பெரிதும் தலையெடுத்து விடுவார் என்கின்ற அச்சம் நேரு குடும்பத்திற்கு உண்டு. இந்நிலையில் பிரணப் முகர்ஜியை இலகுவாக உதாசீனம் செய்துவிட முடியாது. ஆதலால் அவரை அணைப்பது போல் அணைத்து அதிகாரமற்ற இந்திய ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவன் மூலம் அவரால் எழக்கூடிய சவாலை முடிவிற்கு கொண்டுவர நேரு குடும்பம் தீர்மானித்து விட்டது.
A Bird in the hand is better than two in the bush என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. பற்றைக்குள் தெரியும் குருவிகளை விடவும், கையில் இருக்கும் ஒரு குருவி மேல் என்பதே இதன் பொருள். பிரணாப் முகர்ஜியின் நிலையும் இதுவே. பற்றைக்குள் தெரியும் பிரதமர் பதவியை விடவும், கைக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி நாற்காலி மேல் என்கின்ற நிலையே யதார்த்தமானது. இங்கு மேற்கொள்ளப்படும் காய்நகர்த்தல்கள் எதுவும் பிரணப் முகர்ஜிக்கு விளங்காத ஒன்றல்ல. கையில் கிடைத்த ஒரு குருவியின் நிலைதான் பிரணப் முகர்ஜியின் கண்முன் தெரியும் யதார்த்தமாகும்.
இந்நிலையில் அடுத்த பிரதமர் பதவிக்கான காங்கிரசின் பட்டியலில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகிய இருவர்களின் பெயர்களே உள்ளன. ராகுல் காந்தியால் அரசியலில் சோபிக்க முடியாத இடத்தில் இவ் இருவரில் ஒருவர் தவிர்க்கப்பட முடியாதவர்களாவர். இதில் முதலாவது நபர் நேரு குடும்பத்திற்கு பாதகமற்றவர் என்பதை கடந்தகால நடைமுறை வரலாறு நிரூபித்துள்ளது. ஆனால் மன்மோகன் சிங்கை கதிரையில் தொடர்ந்தும் பேணமுடியாத நிலை அரசியல் அரங்கில் காணப்படுமிடத்து ப.சிதம்பரம் ஒரு மாற்றீடாக அமைவது சாத்தியம். அதாவது ப.சிதம்பரம் திறமைமிக்க, சிரேஸ்ர தலைவர்களில் ஒருவராக இருக்கும் அதேவேளையில் மக்கள் அரசியலில் பலமற்றவராயும் இருக்கிறார். அதாவது தமிழகத்தில் அவர் அரசியல் செல்வாக்கற்றவராய் உள்ளார். ஆதலால் அவர் கட்சிக்குள் நேரு குடும்பத்திற்கு சவாலாக இருக்க முடியாது. ஒரு தென்னிந்தியன் என்கின்ற வகையிலும், ஒரு தமிழன் என்கின்ற வகையிலும் அவரது அரசியற் தளம் பலவீனமானது. அதாவது முழு இந்தியாவும் தழுவிய கண்ணோட்டத்தில் நேரு குடும்பத்திற்கு சவாலாய் ஒருபோதும் இருக்க முடியாது. எனவே பிரணப் முகர்ஜி அகற்றப்படும் நிலையில் மன்மோகன் சிங்கோ, ப.சிதம்பரமோ நேரு குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை பாதிக்க முடியாதவர்களாயே இருப்பர். எனவே பிரணப் முகர்ஜியை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவதன் மூலம் நேரு குடும்பம் தனது அரசியல் காய் நகர்த்தலில் தனது முக்கியத்துவத்தைப் பேணிக்கொண்டு விட்டதென்றே கூறலாம்.
இந்திய ஜனாதிபதிப் பதவி என்பது ஒரு சம்பிரதாயபூர்வ தலைமைப் பதவி மட்டுமே. ஆனாலும் அதற்கொரு முக்கியத்துவம் ஒரு கட்டத்தில் உண்டு. அறுதிப் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் ஒருகட்சி பெறாத இடத்தில் அரசாங்கத்தை அமைக்குமாறு பிரதமர் கதிரையில் அமர்ந்து அரசாங்கத்தை அமைக்குமாறு ஒருவரைக் கோரவேண்டிய இக்கட்டான நிலையில் ஜனாதிபதிப் பதவி முக்கியத்துவம் உள்ளதாக மாறுகிறது.
மத்திய அரசில் தனிக்கட்சி பதவிக்கு வரும் வரலாறு முடிவடைந்து பல தசாப்தங்களாகி விட்டன. இப்போது இந்தியாவில் நிலவுவது கூட்டு அரசாங்கக் கலாச்சாரமாகும். காங்கிரசும், பாரதிய ஜனதாவும் கூட்டுச்சேர்வதைத் தவிர, பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் கூட்டுச்சேர்வதைத் தவிர எக்கட்சிகளும் எக்கட்சிகளுடனும் கூட்டுச் சேரக்கூடிய அரசியல் கலாச்சாரமே இந்தியாவிலுள்ளது. ஆனால் ஒரு தேசிய நெருக்கடியான கட்டத்தில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் கூட்டுச் சேர்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற கட்டத்தில் அந்தக் கட்சிகள் கூட கூட்டுச்சேர முடியும். இவ்வாறான ஒரு கட்டத்தில் ஜனாதிபதியே இந்திய தேசத்தின் கதாநாயகன் ஆவார். இப்படிப்பட்ட ஒரு கட்டம் இந்திய அரசியலில் எழமுடியும் என்பதால் ஜனாதிபதிப் பதவிக்கென்று ஒருகட்ட முக்கியத்துவம் இருக்கவே செய்கிறது.
பிரணப் முகர்ஜி எடுப்பார் கைபிள்ளையாக இயங்கக் கூடியவரல்ல. இது நேரு குடும்பத்திற்கு நன்கு தெரியும். அவர் ஜனாதிபதிக் கதிரையில் அமருமிடத்து நெருக்கடியான கட்டங்களில் ஆங்காங்கே தனது அதிகாரத்தை நிலைநாட்டக்கூடியவர். ஆதலால் அவர் கதிரையில் அமர்வது நேரு குடும்பத்திற்கு ஒரு குறைந்தபட்ச சவாலாகவே அமைய முடியும். ஆயினும் இதனைத் தவிர நேரு குடும்பத்திற்கு வேறு மாற்று வழியில்லை. அதேவேளை காங்கிரசால் முன்நிறுத்தப்படும் பிரணப் முகர்ஜி குறைந்தபட்சம் கட்சியின் நலனுக்குப் பாதகமாய் நடக்க முடியாத ஒரு இருப்பு நிலையைக் கொண்டிருப்பார். எனவே அவர் அதிக தூரம் காங்கிரசுக்கு பாதகமாக செயற்படுவராய் இருக்க மாட்டார் என்ற மன ஆறுதலில் இப்போது அவர் ஜனாதிபதி வேட்பாளராய் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் நாம் ஒரு அரசியல் யதார்த்தத்தை சரிவர எடைபோட வேண்டும். சொந்த ஆளுமைத்திறனும், அரசியல் அபிலாசைகளுமிக்க பிரணப் முகர்ஜி ஜனாதிபதிக் கதிரையில் அமரும்போது அதுவும் பிரதமர் பதவிக் கனவிலிருந்த ஒருவர், கனவு கலைந்து ஜனாதிபதிக் கதிரையில் வீற்றிருக்கும்போது தனக்குரிய பலத்தைப் பிரயோகிக்கத் தவறமாட்டார். தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருக்காத ஒரு கட்சியோ அல்லது ஒருவரோ பிரதமர் நாற்காலியில் அமருமிடத்து பிரணப் முகர்ஜி அந்தப் பிரதமருக்கு சவாலாய் இருப்பது தவிர்க்க முடியாது. அதேவேளை தன்னை காயப்படுத்திய நேரு குடும்பத்திற்கு அவ்வப்போது சவாலாய் இருப்பதும் தவிர்க்க முடியாது.
வரப்போகும் தேர்தலில் எக்கட்சியும், அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாத அல்லது பலமான கூட்டரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையில் பலம்வாய்ந்த ஒருவர் ஜனாதிபதிக் கதிரையில் அமர்வது இந்திய அரசியலில் புதிய அனுபவங்களைத் தரவல்லதாய் அமையும். பிரதமர் கதிரையை பிரணப் முகர்ஜிக்கு கிடைக்காதவாறு தட்டிப்பறித்ததில் நேரு குடும்பம் வெற்றி பெற்றுள்ளதேயாயினும் இன்றைய சூழலில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்திற்கு காணப்படும் பலவீனத்தின் பின்னணியில் பிரணப் முகர்ஜியால் ஜனாதிபதிக் கதிரையிலிருந்தவாறே சாத்தியமான சவால்களை நேரு குடும்பத்திற்கு விட முடியும். இதில் நேரு குடும்பத்தின் உற்ற நண்பனாய் மன்மோகன்சிங் வகிக்கும் பாத்திரத்தை ப.சிதம்பரத்தால் பலமூட்டி வகிக்க முடியுமா என்ற கேள்விதான் இந்திய அரசியலின் அடுத்தகட்ட நாடகக் காட்சியாய் அமைய முடியும்.
இவ்வாறு இந்திய அரசியலில் உள்நாட்டு நெருக்கடிகள் ஸ்திரமின்மைகள் மலியும் போது இலங்கைத் தீவின் அரசியலும், தமிழீழ அரசியலும் ஒரு முக்கிய விடயமாய் அமையமுடியும். ஆதலால் இதனை வெறுமனே இந்தியாவின் உள்நாட்டு அரசியல் என்று புறம்தள்ளிவிட்டு இருக்காமல் இதன் பின்னணியில் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கான வாய்ப்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும், அதற்கேற்ப தமிழீழ அரசியலை நகர்த்த வேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழர் பக்கமுண்டு.