முத்துக்குமார்
இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார். இக்கட்டுரை வெளிவரும்போது அவரது பயணம் பூர்த்தியாகும் நிலை வந்திருக்கும். அவரது வருகை இலங்கை அரசினால் விரும்பிக் கேட்கப்பட்ட வருகையல்ல. இந்தியாவாகவே கால நிர்ப்பந்தத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட வருகை. நிச்சயமாக அவரது வருகையை இலங்கை விரும்பியிருக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாத் தீர்மானதிற்குப் பின்னர் இந்தியாவுடன் ஒரு பகைமை உறவினையே இலங்கை பின்பற்ற முனைந்திருந்தது. இந்திய அரசாங்கம் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமைதான் இதற்கு காரணம். பிரேரணையின் கனதியைக் குறைக்க நாம்தான் காரணமாக இருந்தோம் என்ற இந்தியாவின் சமாதான வாசகங்களை ஏற்கும் நிலையில் இலங்கை இல்லை.
இலங்கையைப் பொறுத்தவரை பெரியண்ணனுக்குரிய பொறுப்போடு இந்தியா செயற்படவில்லை என்பதே கருத்தாக உள்ளது. இந்தியா முயற்சித்திருந்தால் பிரேரணையை தடுத்திருக்கலாம் என்பது இலங்கையின் வாதம். இதனால் சமாதானமான வாசகங்களை இந்தியா வெளியிட்டாலும், குற்றம் குற்றமே என்பதே இலங்கையின் உறுதியான நிலைப்பாடு. இது விடயத்தில் இந்தியா சந்திக்கும், நெருக்கடிகள் பற்றி எந்தவித அக்கறையும் இலங்கை கொண்டிருக்கவில்லை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலத்தில் இருந்த அச்சம் எதுவும் இப்போது இலங்கைக்கு கிடையாது. இந்தியாவிற்கு பிடிகள் எதுவும் இல்லாததுதான் அதற்கு காரணம். புலிகள் ஆயுத பலத்துடன் இருக்கும்வரை இந்தியாவிற்கு ஒரு பிடி இருந்தது. தற்போது அந்தப் பிடியைத் தானாகவே தொலைத்துவிட்டு இந்தியா முழுசிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் இந்தப் பலவீனம் நன்கு தெரிந்துதான் இலங்கை எகிறிக் குதிக்கின்றது. ஜெனிவாத் தீர்மானத்திற்கு பிறகு இலங்கை இன விவகாரம் அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிட்டதால் அமெரிக்காவை எப்படிக் கையாள்வது என்பதில்தான் இலங்கை கவனத்தைக் குவித்திருக்கின்றதே தவிர இந்தியாவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதற்கு நல்ல உதாரணம் இலங்கை வெளிநாட்டமைச்சர் இந்தியாவுடன் எந்தவித கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமல் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஹிலரி கிளின்டனிடம் செயல்திட்ட அறிக்கையைக் கையளித்தமையாகும்.
இது இதுவரைகால மரபுக்கு எதிரானது. ஏதோ ஒருவகையில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதுதான் மரபு. யுத்த நிறுத்த காலத்தில்கூட நோர்வேயின் சமாதானத்தூதுவர் சமாதானச் செயற்பாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உடனுக்குடன் இந்தியாவிற்கு கூறிவந்தார். ஆனால் தற்போது அவை எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இலங்கை மட்டுமல்ல அமெரிக்காகூட இது விடயத்தில் இந்தியாவை பெரியளவிற்கு கணக்கெடுப்பது கிடையாது. இந்தியாவின் உள்வருகை தனது அழுத்தச் செயற்பாட்டின் கனதியைப் பலவீனமாக்கிவிடலாம் என அது நினைத்திருக்கக் கூடும். இலங்கையின் தற்போதைய அணுகுமுறை அமெரிக்காவிற்கு வளைந்து கொடுத்து, இந்தியாவிற்கு நிமிர்ந்து நிற்பதே.
ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பிறகு இதன் வெளிப்பாடுகள் பகிரங்கமாகத் தெரியத்தொடங்கின. சம்பூர் அனல் மின்னிலைய ஒப்பந்தத்தினை வாபஸ் பெற்றமை, பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பினை இலங்கையே மேற்கொள்ள முடிவுசெய்தமை, திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப்பெற முயற்சித்தமை, நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகள் பற்றி செயற்திட்ட அறிக்கையை இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் அமெரிக்காவிடம் கையளித்தமை, ஜனாதிபதியின் G20 மாநாட்டு உரை, ஈரானுடன் உறவினை வளர்த்துக் கொள்ளல் என அடுத்ததடுத்த நிகழ்ச்சிநிரல் எல்லாம் இந்தியாவிற்கு எதிராக நிமிர்ந்து நிற்பதன் வெளிப்பாடே!
போர் முடிவடைந்தமையைத் தொடர்ந்து இந்தியாவிற்கு உள்நாட்டில் பல சலுகைகளை இலங்கை வழங்கியமைக்கு காரணம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து சர்வதேச ரீதியாக இந்தியா தனக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் என்றும், அரசியல் தீர்வு தொடர்பாக அதிக அழுத்தங்களைத் தராமல் இருக்கும் என்றும் கருதியமையேயாகும். போர்க்காலத்திலேயே எதிர்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தனக்கு எதிராக கிளம்பும் என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும். எனினும் போர்க்காலத்தினைப் போல மேற்குலகத்தின் அழுத்தங்களைக் குறைக்க இந்தியா கவசம்போல எதிர்காலத்திலும் உதவும் என்றே இலங்கை எதிர்பார்த்தது.
போரை இந்தியாவும் சேர்ந்து நடாத்தியமை, இலங்கை விவகாரத்தில் வேறு நாடுகள் தலையிடுவதை விரும்பாமை, சீனச் செல்வாக்கின் அச்சம் போன்ற காரணங்கள் தனது நிகழ்ச்சிநிரலுக்குள் இந்தியாவை என்றுமே வைத்திருக்க உதவும் என்றே இலங்கை கருதியது. இந்தியா, அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று தனக்கு எதிராக வாக்களிக்கும் என இலங்கை கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கடைசிவரை இந்தியா பிரேரணையை வெல்வதற்கான ஆலோசனையையே இலங்கைக்கு கூறிவந்தது. கடைசி நேரத்தில் மாறியதால் இலங்கைக்கு இரட்டிப்புக் கோபம்.
தற்போது இலங்கையின் வியூகம் எப்படியாவது அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்குள்ளிருந்து இந்தியாவை கழட்டி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வருவதே! அமெரிக்காவை சமாளிக்க சிறிதுகாலம் வளைந்து கொடுத்து அந்தக் காலஅவகாசத்திற்குள் இந்தியாவை தனது பக்கம் திருப்பலாம் என நினைக்கிறது. படிப்படியாக இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த வியூகமே காரணம். இதுவிடயத்தில் இலங்கை முதல்நிலையில் வெற்றி கண்டுள்ளது என்றே கூறவேண்டும். இந்தியாவைத்தேடி இலங்கை சென்ற நிலை மாறி இலங்கையைத் தேடி இந்தியா வந்தமை இலங்கைக்கு ஒரு முதல் நிலை வெற்றிதான்.
இலங்கை இந்தப் பிரதான வியூகத்திற்கு அப்பால் துணைவியூகத்தையும் வகுத்துள்ளது. இந்திய மாநிலங்களைக் கைக்குள் போடுவதுதான் அந்த வியூகம். மாநில அரசியல் சக்திகளுக்கும், மத்தியில் செல்வாக்கு இருப்பதே இதற்கு காரணம். இலங்கை அமைச்சர் ஒருவர் கேரளா சென்று முதலமைச்சர் உம்மான் சாண்டியை சந்தித்தமையும் இந்த வியூகத்தின் அடிப்படையில்தான். கேரளாவுடன் தொடர்புகளைப்பேண இலங்கை விரும்பியமைக்கு சில சிறப்புக் காரணங்களும் உண்டு. அதில் ஒன்று இந்திய வெளிவிவகார கொள்கை வகுப்பின் மையமான சவுத் புளொக்கில் கேரள பிராமணர்களின் செல்வாக்கு அதி உச்சநிலையில் இருப்பதாகும். பாதுகாப்புச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் ஒரு கேரளக்காரர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நாராயணனும் கேரளக்காரர். சிவ்சங்கர் மேனன் போர்க்காலத்தில் வெளியுறவுச் செயலாளராக இருந்தவர். அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் நாராயணன். இந்த இரு கேரளக்காரர்களுக்கும் போரை நெறிப்படுத்தியதில் பெரும் பங்குண்டு. ஒருவகையில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா என்பவர்களுடன் போர் வெற்றியின் சொந்தக்காரர்களாக இவர்களையும் குறிப்பிடலாம்.
எனவே இப்பிராமணர்களின் செல்வாக்கினைக் கொண்டு இந்தியாவை தனது நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு வரலாம் என இலங்கை கருதுவது போல் தெரிகின்றது. இரண்டாவது கேரளா மாநிலத்துக்கும், தமிழ்நாடு மாநிலத்திற்குமிடையே முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக பகைமை உறவு நிலவுகின்றமையாகும். இதுவிடயத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலையினை இலங்கை எடுத்திருக்கக் கூடும்.
கேரளாவுடன் உறவுகளைப் பேணும் முயற்சியில் இறங்கியிருந்தாலும் தமிழ்நாட்டுடன் உறவினைப் பேணும் முயற்சிகளையும் இலங்கை கைவிடவில்லை. முன்னர் மிலிந்த மொரகொட மூலம் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு வர்த்தகர் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல். அரசின் இந்த முயற்சிக்கு தடையாக இருப்பது தமிழ்நாட்டின் கள யதார்த்தம்தான். சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சிங்கள புத்திஜீவிகள்கூட தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடிய நிலை அங்கு இல்லை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபம் உணர்வு ரீதியாக இவர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகின்றது. எனினும் முயற்சிகளைக் கைவிடுவது இராஜதந்திரத்தின் அடிப்படையல்ல. இந்தவகையில் இலங்கை அரசு தொடர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் வியூகங்கள் இலங்கையின் வியூகங்களுக்கு முழுமையாகவே மாறுபட்டது. இலங்கை விவகாரத்தில் இவ்வளவு காலமும் பின்பற்றிய அணுகுமுறையினை இந்தியாவினால் இனிமேல் பின்பற்ற முடியாது. அதற்கேற்ற அகப், புறச்சூழல் இந்தியாவில் இல்லை. இனிவரும் காலங்களில் இந்தியா, இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல், பிராந்திய, சர்வதேச அரசியல், இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பவற்றைக் கவனத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முன்னரைப் போல மாநிலங்களைப் புறந்தள்ளிவிட்டு மத்திய அரசினால் தனித்து தீர்மானங்களை எடுக்கமுடியாது. மாநிலக் கட்சிகள் மட்டுமல்ல தேசியக் கட்சிகளின் மாநிலப் பிரிவுகூட இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஜெனீவாத் தீர்மானம் தொடர்பாக தமிழக அரசியல் சக்திகளின் அழுத்தம் இதற்கு நல்ல உதாரணம். திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவும் காங்கிரஸ் அரசிற்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. ஜெனிவாவில் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா தீர்மானம் எடுக்காவிடின் முழுத் தமிழ்நாடுமே மத்திய அரசிலிருந்து விலகிவிடக்கூடிய அபாயம் இருந்தது.
தற்போது இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்பது, ஆளும் கட்சியினையோ, எதிர்க்கட்சிகளினதோ நிலைப்பாடு அல்ல. மாறாக முழுத் தமிழ்நாட்டு மக்களினதும் பொதுக்கருத்து இதுவாகும். பொதுக்கருத்தினை புறந்தள்ளுவது என்பது மத்திய அரசிற்கு இலகுவான ஒன்றல்ல. அதுவும் முன்னராவது தனது நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு புலிகளைக் காரணமாகக் காட்டலாம். தற்போது அதனையும் காட்டமுடியாது.
அண்மையில் இடம்பெற்ற மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில்கூட மாநிலங்களின் நலன்களை மத்திய அரசு புறந்தள்ளக்கூடாது. மத்திய அரசின் நலன்களுக்கும், மாநில அரசுகளின் நலன்களுக்குமிடையே சமநிலை பேணப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மாநில முதலமைச்சர்களில் பலர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இரண்டாவது, புவிசார் அரசியல். இலங்கையில் சீனாவின் அதிகரித்த பிரசன்னத்தை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார தந்திரோபாயங்களுடன் தொடர்புபட்ட விடயம். பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு தென்மாநிலங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். மேற்கு, வடக்கு, வட-கிழக்கு அனைத்திலும் இந்தியாவிற்கு பாதுகாப்புப் பிரச்சினை உண்டு. அதனால் தனது முக்கியமான பாதுகாப்பு மையங்கள், அணு மின்நிலையங்களை தென்மாநிலங்களிலேயே அமைத்துள்ளது. இலங்கையில் சீனாவின் அதிகரித்த பிரசன்னம் இவற்றிற்கெல்லாம் ஆபத்தை உருவாக்கும்
ஜெனிவாவிற்குப் பின்னர் இலங்கை படிப்படியாக இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த போது, இந்தியா ஆரம்பத்தில் மௌனமாக இருந்தது. ஆனால் திருகோணமலையில் இந்திய நலன்களுக்கு இலங்கை ஆப்பு வைக்க முயன்றபோது மௌனத்தைக் குலைப்பதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்டமை, சீனன் குடா எண்ணெய்க் குதங்களை பொறுப்பேற்றமையெல்லாம் வெறுமனவே பொருளாதாரக் காரணிகளுக்காக அல்ல. பாதுகாப்புக் காரணிகளும் அதற்குள் அடங்கியிருந்தன.
பொருளாதார காரணிகளைப் பொறுத்தவரை இலங்கை தூரகிழக்குப் போக்குவரத்துப் பாதையில் கேந்திர இடத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இலங்கைக்குள் தனது பொருளாதார நலன்களை பாதுகாத்தல் என்புதற்கு அப்பால் இந்தியா தனது சர்வதேச பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மீதான செல்வாக்கு அவசியம். சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால் பதித்ததிலிருந்து இந்த அபாயம் அதிகமாகவே வெளித்தெரியத் தொடங்கியிருந்தது.
அடுத்தது அமெரிக்காவின் தென்னாசிய நலன்களாகும். அமெரிக்க தனது சர்வதேச போட்டியாளனாக சீனாவையே பார்க்கின்றது. அதனால் தென்னாசிய பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கினை அது விரும்பவில்லை. இதற்கு இடைஞ்சலாக இருப்பது மியன்மாரும், இலங்கையும் தான். மியன்மரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயற்பாட்டில் அது ஓரளவு வெற்றிபெற்றுவிட்டது. தற்போது அதன் இலக்கு இலங்கைதான். இதற்காகவே போர்க்குற்ற விவகாரத்தையும், போருக்குப் பின்னரான நல்லிணக்க விவகாரத்தையும் அது கையிலெடுத்துள்ளது. ஜெனிவா தீர்மானம் இந்த இலக்கில் உருவான ஒன்றுதான். மகிந்தரை பணியச் செய்து தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது அல்லது ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது என்பதுதான் அதன் நோக்கம். இந்தச் செயற்பாட்டில் இந்தியா மீது நம்பிக்கை குறைந்ததினால் முழு விவகாரத்தையும் தன்கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வியூகங்களோடு இந்தியா ஒத்துப்போகவில்லை என்றால் முழுமையாகவே அந்நியப்படக் கூடிய சூழல் ஏற்படும். அதனை இந்தியா விரும்பவில்லை. இதனால் அமரிக்க நிகழ்ச்சி நிரலிற்கு பின்னால் இழுபட்டுச் செல்லவே அது தீர்மானித்தது. அமெரிக்கா இதனைக் கையில் எடுத்திருக்கவில்லை என்றால் இலங்கையின் விருப்பிற்கேற்ப இந்தியா ஆட முனைந்திருக்கும். சீன நெருக்கடிக்கு முகம்கொடுக்க அமெரிக்காவின் துணை வேண்டியிருப்பதால் அதன் உறவினை இந்தியாவினால் இலகுவில் முறித்துக் கொள்ள முடியாது.
இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னத்தையும் இந்தியா விரும்பியிருக்கவில்லை என்பது உண்மைதான். இலங்கை விவகாரம் எப்போதும் தனது செல்வாக்கிற்குட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை. ஆனால் பிடியினை விட்டதால் அமெரிக்காவிற்கு பின்னால் ஓடவேண்டிய நிலை இந்தியாவிற்கு.
மூன்றாவது இலங்கைத் தமிழர்களின் அரசியல், அது எப்போதும் தனது செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. புலிகளை அழிக்க முனைந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். இதனை முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கிறேன். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றது. தமிழ்மக்களிற்கு சிறிய வெற்றிகளாவது கிடைக்கவில்லை என்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செல்வாக்கும் கீழிறங்கிவிடும். அதற்கான அடையாளங்களும் தெரியத்தொடங்கியுள்ளன. இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த மேதினத்தையும், சிங்கக் கொடியேற்றத்தையும் நடாத்தி கூட்டமைப்பு மூக்குடைபட்டு கிடக்கின்றது.
தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளங்கள் மூன்று. தாயகம், புலம், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். இவற்றில் புலமும், தமிழகமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இல்லை. தாயகத்திலும் தலைமைப் பிரதேசம் குடாநாடே. அங்கு கூட்டமைப்பு தொடர்பான அதிருப்தி நன்கு வளரத்தொடங்கியுள்ளது. கஜேந்திரகுமார் தலமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாற்றுக்கட்சியாக எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. அண்மையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அது தொடக்கிவைத்த போராட்டம் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் இளைஞர்கள், பிரக்ஞைபூர்வ தேசிய சக்திகள் அதனை நோக்கி தமது கவனத்தை குவிக்கத் தொடங்கியுள்ளன. அவர்களது தடுமாற்றமற்ற உறுதியான கொள்கையும் மக்களைக் கவர்ந்துள்ளது. இதைவிட புலத்தினதும், தமிழகத்தினதும் கொள்கைகள் இவற்றின் கொள்கைகளோடு ஒத்துப் போவதும் இவர்களை சர்வதேச ரீதியாக வலுப்படுத்தியுள்ளது.
வன்னியில் கூட்டமைப்பின் மாற்றுக்குழுவினரே செல்வாக்கான நிலையில் உள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு அங்கு பெரிய செல்வாக்கு கிடையாது. கூட்டமைப்பிற்குள் உட்கட்சிப் போர் இன்று உச்ச நிலைக்கு வந்துள்ளது. தமிழரசுக் கட்சியினரின் 60:40 கொள்கையினை மாற்றுக் குழுவினர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, பாராளுமன்றத் தெரிவுக்குழு செல்வதையும் மாற்றுக்குழு விரும்பவில்லை. அதனையும் மீறி சென்றால் மாற்றுக்குழுவினர் கூட்டமைப்பினை விட்டு வெளியேறலாம்.
கிழக்கில் முஸ்லிம், சிங்களப் பிரச்சினை இருப்பதனால் தமிழரசுக் கட்சியே செல்வாக்கு நிலையில் உள்ளது. ஆனால் சம்பந்தனின் சிங்கக் கொடியேற்றம் கிழக்கு மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எதிர்காலத்தில் அவர்களும் மாற்றங்களை விரும்பலாம்.
மொத்தத்தில் கூட்டமைப்புக்கு தற்போது இறங்குமுகம்தான். ஊடகங்கள் மோசமாக கீழே விழாதவாறு கூட்டமைப்பினைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பினைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு. தமிழ் அரசியலில் கூட்டமைப்பு விழுந்தால் இந்தியாவும் விழும் என்பதுதான் யதார்த்தம். எனவே முன்பு போல தமிழ் அரசியலில் பாராமுகமாகவும் இந்தியாவினால் இருக்கமுடியாது.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை எச்சரிக்கையும், அணைப்பும்தான். ஆனால் இலங்கை அணைப்பை மட்டுமே எதிர்பார்க்கின்றது. சிவ்சங்கர் மேனன் அணைக்கப் போகின்றாரா? அல்லது எச்சரிக்கப் போகின்றாரா? என்பதே தற்போது அனைவரதும் கேள்வி.
இந்த நிலையில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது? அவனவன் தங்கள் தங்கள் நலன்களுக்கான அரசியலைச் செய்யும்போது தமிழ்த்தரப்பு மட்டும் அவர்களுக்கு பின்னால் ஓடும் அரசியலையா செய்யப் போகின்றதா?
மகிந்தருக்கும், பிரபாகரனுக்கும்தான் வளையிறதா? முறியிறதா? என்ற பிரச்சினை. சம்பந்தனுக்கு அந்தப் பிரச்சினை எதுவும் கிடையாது. அவருக்கு முதுகு இருந்தாலல்லவா வளைவதற்கும், முறிவதற்கும்.