Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி சாத்தியமானதா?

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி சாத்தியமானதா?
சி.அ.ஜோதிலிங்கம்

 

இன்றைய தமிழ் அரசியல் சூழலில் மூன்று முக்கிய விடயங்களைப் பற்றி கலந்துரையாட வேண்டியது அவசியமாகிறது. அதில் முதலாவது ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியை ஏற்பது, இணக்க அரசியலைத் தொடர்வது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு. இரண்டாவது வடக்குக்-கிழக்கு இணைப்பையும் சமஷ்டியையும் ஏற்பதில்லை என்ற கிழக்கு முஸ்லிம்கள் சம்மேளனத்தின் தீர்மானம். மூன்றாவது தமிழ் அரசியலின் மாற்று அரசியல் இயக்கத்தையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர முனையும் இந்தியாவின் நகர்வுகள்

இந்த மூன்று விடயங்களும் தமிழ் அரசியலின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பதால் இவை பற்றிய ஆழமான விவாதங்கள் அவசியம் என்பது பத்தியாளரின் கருத்தாகும். முதலாவது விடயத்தைப் பொறுத்தவரை கூட்டமைப்பின் தலைமை இதுவரை காலமும் பேசாப் பொருளாக வைத்திருந்த விடயத்தை மக்களை அதற்குத் தயார்படுத்த வேண்டும் என்பதற்காக துணிந்து களத்திற்கு கொண்டுவந்துள்ளது. 'தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?' என்ற தலைப்பில் மன்னாரில் இடம்பெற்ற கருத்தரங்கில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அவருடைய கருத்தின் சாராம்சம் இதுதான். புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தமிழ் மக்களின் பங்களிப்புடன் வர இருக்கின்றது. அது ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி முறை பற்றியதாக இருக்கும். 'ஒக்லாண்ட்' இதற்கு உதாரணம். விகாரைகளை அமைத்தல், காணிகளைப் பறித்தல் என்பன மகிந்தரின் ஆதரவாளர்கள் செய்யும் வேலை. ரணிலுக்கும் மைத்திரிக்கும் இவ்விடயங்களில் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இவற்றிற்கு எதிராகப் போராடினால் மகிந்தர் அணி பலமாகிவிடும். தமிழ் மக்கள் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கக்கூடாது. சுருக்கமாகக் கூறினால் ஒற்றையாட்சியே தீர்வு, இணக்க அரசியல் தொடரும் என்பதே இதன் சாராம்சமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சம்பந்தன் மிகத் தெளிவாக முன்வைத்ததன் பின்னர் இந்த வெளிப்பாடு சரியானதா? சரியல்லவெனின் மாற்று வெளிப்பாடுகள் எவை என்பவை பற்றி தெளிவான உரையாடல்கள் என்பது அவசியம். மொத்தமாகக் கூறின் தமிழ் மக்கள் இது வரைகாலம் பின்பற்றி வந்த அரசியலைத் தொடர்வதா? அல்லது கைவிட்டு சம்பந்தன் கூறும் பாதையில் பயணிப்பதா? என தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இங்கேதான் மீளவும் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது. இது பற்றி இப்பத்தியாளர் முன்னரும் பல தடவை கூறிய போதும் இக்கட்டுரைக்காக திரும்பவும் கூறப்படுகின்றது. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவதால் ஏற்பட்ட பிரச்சினையே. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அழிவுகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு தேச அங்கீகாரம், அத்தேசத்திற்குரிய இறைமையின் அங்கீகாரம், இறைமையின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமை, சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தும் சமஷ்டிப் பொறிமுறை என்பன அவசியம்

சம்பந்தன் முன்வைக்கும் 'ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி' என்ற அரசியல் தீர்வின் மூலம் இவற்றை அடைந்துகொள்ள முடியுமா? 'ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி' என்பது உலகில் நடைமுறையில் இல்லை. இது சம்பந்தனின் புதிய கண்டுபிடிப்பு. ஒக்காலண்டில் 'சமஷ்டி' என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் ஒற்றையாட்சியே நடைமுறையில் உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, சிங்கள பௌத்த கருத்து நிலையே ஆதிக்கத்தில் உள்ளது. இதனை நடைமுறையில் பாதுகாப்பது ஒற்றையாட்சியே. இனப்பிரச்சினையின் மைய விவகாரம் சிங்கள பௌத்த கருத்தியலைப் பாதுகாக்கும் ஒற்றையாட்சியே. மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் எந்த அதிகாரக் கையளிப்பு முயற்சியும் நடைமுறையில் வெற்றியைத் தரப் போவதில்லை இது கடந்தகால வரலாறு. மத்திய அரசு ஒரு கூட்டு அரசாக இருக்கும் போதே இவற்றில் ஏதாவது வெற்றிகளைக் காண முடியும்.

மேலும் சம்பந்தன் அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிராகப் போராடக் கூடாது என்கின்றார். ஆக்கிரமிப்புக்கள் உறுதியான பின் எவ்வாறு அவற்றைத் தடுக்க முடியும். உதாரணத்திற்கு நயீனாதீவில் புத்தர் சிலையைக் கட்டிய பின் அவற்றை அகற்ற முடியுமா? அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடியுமா?

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி சாத்தியமானதா?

மைத்திரியையும், ரணிலையும் நான் நம்புகிறேன் என மேலும் சம்பந்தன் கூறுகிறார். மைத்திரியையும் ரணிலையும் நம்புவதற்கு அவர்களது கடந்தகாலம் நம்பிக்கைக்குரியதாக இருந்ததா? சரி அவர்களை நம்பினாலும் தென்னிலங்கையின் அரசியல் சூழலை மீறி அவர்களினால் ஏதாவது செய்து விட முடியுமா? தென்னிலங்கை அரசியல் சூழலை மாற்றுவதற்கு அவர்கள்தன்னும் ஏதாவது செய்கின்றார்களா? தென்னிலங்கை அரசியல் சூழலை மாற்றுதல் என்பது சிங்கள பௌத்த கருத்து நிலையின் ஆதிக்கத்தை மாற்றுவது என்பதே

உண்மையில் தமிழ் அரசியல் தலைமை இன்று செய்ய வேண்டியது தமிழ் அரசியல் நியாயப்பாடுகளை சர்வதேச மட்டம் வரை பேசுபொருளாக்கல், தொடர்சியாக இடம்பெறும் சிங்கள ஆக்கிரமிப்புக்களைத் தடுத்து நிறுத்த சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், பொதுமக்களின் நலன்களைப் பேணுவதற்கு விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டங்களை உருவாக்கிச்  செயற்படுத்தல் என்பனவேயாகும். ஆனால் இவை எவற்றிலும் தமிழ்த் தலைமை கவனம் செலுத்தவில்லை.

இரண்டாவது கிழக்கிலங்கை முஸ்லிம் சம்மேளத்தின் தீர்மானமாகும். வட-கிழக்கை இணைக்கக்கூடாது, சமஷ்டிமுறை தீர்வு வேண்டாம் எனத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. அதில் முதலாவது வட-கிழக்கு இணைப்புக்குள் முஸ்லிம்கள் வரவிரும்பவில்லை. சமஸ்டித் தீர்வை முஸ்லிம்கள் ஏற்கவில்லை எனக் கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு. வட-கிழக்கு இணைப்பு வேண்டாம், சமஸ்டித் தீர்வு தேவையற்றது என தமிழ் மக்களுக்கும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இது முழுக்கமுழுக்க தமிழ் மக்களின் இதுவரை கால போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயற்பாடு. சக தேசிய இனம் தொடர்பாக எந்தவித பொறுப்பும் இல்லாமல் அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். வட- கிழக்கு இணைப்பும், சமஷ்டித் தீர்வும் முஸ்லிம்களுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு மிக மிக அவசியமானது.

இரண்டாவது விடயம் 'தமிழ் பேசும் மக்கள்' என தமிழ் தலைமை நீண்டகாலமாக உச்சரித்து வரும் கோட்பாடு நடைமுறையில் தோற்றுப் போவது மீண்டும் ஒரு தடவை வெளிக்காட்டப்பட்டமையாகும். அந்தக் கோட்பாட்டிற்குள் தாம் வரத் தயாரில்லை என்பதை நீண்டகாலமாக முஸ்லிம்கள் வெளிப்படுத்தி வருகின்றபோதும் தமிழ்த் தலைமை திரும்பத் திரும்ப கெஞ்சிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கெஞ்சல் காலப்போக்கில் கிழக்குத் தமிழ் மக்களுக்கு ஒரு விலங்காகி விட்டது. முஸ்லிம்கள் பல வழிகளினாலும் தமது பிரதேசங்களை வலுப்படுத்தியபோது தமிழ் மக்களினால் தமிழ்ப் பிரதேசங்களை வலுப்படுத்த முடியவில்லை.

இன்று முஸ்லிம்களின் நிலைப்பாடு உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை பின்பற்றுவதா? அல்லது அதனைக் கைவிட்டு 'தமிழர்களும் முஸ்லிம்களும்' என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதா? என தீவிரமான உரையாடல் தேவையாக உள்ளது. 'தமிழர்களும் முஸ்லிம்களும்' என்ற கோட்பாட்டைத்தான் பின்பற்றுவதாயின் முஸ்லிம்களையும் இணைத்த வடகிழக்கு இணைப்பு என்பதைக் கைவிட்டு தமிழர்களை மட்டும் இணைத்த வட- கிழக்கு இணைப்பு என்ற வகையில் கோட்பாட்டை முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம்களின் விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். தமிழ்த் தலைமை தமிழர்களின் விவகாரத்தை பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமானது.

மூன்றாவது தமிழ் அரசியலில் மாற்று அரசியல் இயக்கத்தையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர இந்தியா முயற்சிக்கின்றமையாகும். தென்னிலங்கை அரசியல் நிலை தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வுக்கு சாதகமாக இல்லை. ஆனாலும் தங்களிற்குச் சார்பான ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலேயே இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் உள்ளன. ஆட்சிமாற்றத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் அரசியல் மேல் நிலைக்கு வரக்கூடாது. இதற்காகத்தான் கூட்டமைப்பை இவை இணக்க அரசியலுக்குள் தள்ளின.

தற்போது அரசியல் தீர்வு சாத்தியமில்லாத நிலையில் மாற்று அரசியல் இயக்கத்தின் தேவை முன்னரை விட அதிகமாக தமிழ் அரசியலில் உள்ளது. இந்தியா-அமெரிக்கா நிகழ்ச்சி நிரலிற்குள் ஒரு பொம்மையாக கூட்டமைப்பு சென்றுள்ளதால் நிலத்திலும், புலத்திலும் தமிழகத்திலும் உள்ள பிரக்ஞைபூர்வ சக்திகள் மாற்று அரசியல் இயக்கமொன்றை கட்டுவதற்கு முயற்சிக்கின்றன. அது அரசியல் கட்சிகளையும், சிவில் நிறுவனங்களையும் இணைத்த தேசிய அரசியல் இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் கருதின. அதற்கான ஒரு பரிசோதனை முயற்சியே தமிழ் மக்கள் பேரவை. இதனால் பேரவை வெளிப்பட்டவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மட்டுமல்ல இந்திய-அமெரிக்க சக்திகளும் பதற்றமடைந்தன. புவிசார் அரசியல் போட்டி மைதானத்திற்கு வெளியே தள்ளப்பட்ட தமிழர்கள் மீண்டும் உள்ளே வரப்போகின்றார்கள் என்பது தான் பதட்டத்திற்குக் காரணம்.

இந்த சக்திகள் துரிதமாகச் செயற்பட்டதன் விளைவு விக்கினேஸ்வரன் திரும்பவும் கூட்டமைப்பின் மைதானத்திற்குச் சென்றுவிட்டார். கூட்டமைப்பின் மைதானம் சுயாதீனமான மைதானமல்ல. அது இந்திய- அமெரிக்க சக்திகள் தங்களது நலன்களுக்காக உருவாக்கிய மைதானம். அந்த மைதானத்தில் நின்று கொண்டுதான் தமிழ்த் தேசியக் கருத்துக்களை விக்கினேஸ்வரன் வெளிப்படுத்தி வருகின்றார். தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் இருவர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நெடுஞ்சாண் கிடையாக படுக்கின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன.

இந்தியாவுடன் உறவு கொள்வது தவறானதல்ல. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரலிற்குள் பொம்மையாகச் செல்வது தான் தவறானது. சுயாதீன நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் பொம்மையாகச் செயற்படுவது இன்னோர் கூட்டமைப்பை உருவக்குமே தவிர மாற்று அரசியல் இயக்கத்தை ஒரு போதும் உருவாக்காது.

மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்போருக்கு இது சமர்ப்பணம்.

8/13/2016 1:07:23 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்