Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எனது நூல் ராஜீவ் காந்தி கொலையின் முடிச்சுகளை அவிழ்க்கும்!

எனது நூல் ராஜீவ் காந்தி கொலையின் முடிச்சுகளை அவிழ்க்கும்!
நேர்காணல்: பா.ஏகலைவன்

 

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல இருப்பதாக தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் திருச்சி வேலுச்சாமி அவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமியையும் சந்திரசாமியையும் இப்படுகொலையில் நேரடியாகவே தொடர்புபடுத்தி ஜெயின் விசாரணைக் கமிஷனில் இவர் கொடுத்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், ஜெயின் கமிஷனின் பரிந்துரைக்கு மாறாக, பல்நோக்கு புலன் விசாரணைக்குழு இவர்கள் இருவரையும் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன் என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார் திருச்சி வேலுச்சாமி

ஈழ அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராஜீவ் படுகொலை குறித்து தனது சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்வைத்து இவர் எழுதியுள்ள 'ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்' எனும் நூல் 24.11.12 சனிக்கிழமை சென்னையில் வெளியிடப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களை பொங்குதமிழுக்காக சந்திந்து உரையாடினோம்

***

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 21 வருடங்களுக்கு மேலாகி விட்டன. தற்போது இந்நூலை வெளிக்கொண்டுவருவதன் நோக்கம் என்ன?

21 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராஜீவ்கொலையில் பொய்கள் புத்தக வடிவில் தாண்டவம் ஆடத் தொடங்கியது. அநீதியான ஒரு விசாரணை, உண்மையின் பக்கம் போகாத ஒரு விசாரணை நடத்தியதை பெருமையோடு புத்தகமாக கொண்டுவருகிறார்கள். கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் பொய்களை மக்கள் மத்தியிலே விதைப்பதை தடுக்கவேண்டும். இனியாவது தடுப்பு காரியத்தை செய்யவில்லை என்றால் இந்த தமிழ் சமூகத்தின் மீது நஞ்சுக்கொடி பற்றிப் படரும். இனியும் விட்டுவிடக்கூடாது என்பதே இந்த புத்தகத்தின் நோக்கம்.

'தூக்குக்கயிற்றில் நிஜம்' வெளிவருவதற்கு இத்தனை காலம் எடுத்தது ஏன்?

இத்தனை காலமும் நான் என் பணியை கடமையை செய்துவந்தேன், வெறும் பேச்சுவாயிலாக பொதுக்கூட்டங்களில். கூடவே மனம் இருந்த அளவிற்கு பணம் இல்லாதது. இதில் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் தாம் புனைந்த பொய்களை புத்தகமாக கொண்டுவந்துவிட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்களும் நாங்கள் நிரபராதி, குற்றமற்றவர்கள் என்று நடந்தவைகளை ரத்தம் தோய்ந்த வரிகளோடு புத்தகமாக எழுதிவிட்டபோது - ஒரு வகையில் முக்கியமாக சம்பந்தப்பட்ட நாமும் இதை ஒரு பதிவாக செய்தாக வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டது. தாமத்திற்கான காரணம் இதுதான்..

எனது நூல் ராஜீவ் காந்தி கொலையின் முடிச்சுகளை அவிழ்க்கும்!

ராஜீவ் கொலை வழக்கின் மர்மங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறீர்கள். இது தொடர்பான சந்தேகங்கள் உங்களுக்கு எப்போது ஏற்பட்டன?

1991- மே- 21 இரவு 10.15 மணிக்கு மனித குண்டுவெடித்தது. ராஜீவ்காந்தி படுகொலையாகிறார். அந்த இரவு முழவதும் உறங்கவில்லை. காலை நாளேடுகளை வாங்கிப் பார்க்கிறேன். நம்பமுடியாத அதிர்ச்சி மரணமாக இருந்ததைத் தாண்டி ஏதும் தோன்றவில்லை. 22-ம் தேதி மாலை நாளேட்டை வாங்கி பார்க்கிறேன். அதில் ராஜீவ்காந்தியை முதன்முதலாக அடையாளம் காட்டியவர் என்று ஜெயந்தி நடராஜனின் பேட்டி, முக்கியத்துவம் கொடுத்து போட்டிருந்தார்கள். விரிவாக வேண்டாம். அந்த பேட்டியில் அவர் விவரித்திருந்ததை வைத்து குண்டுவெடிப்பு 10.15 எனவும் அதிலிருந்து சடலத்தை கண்டுபிடிக்க 30 நிமிடத்திற்கு மேலாகியது எனவும் அறிய முடிந்தது. அதாவது சுமார் இரவு 10.50-குதான் உறுதியான தகவல் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கே தெரியும்.

ஆனால் நான் 21-ம் தேதி இரவு 10-25 மணிக்கு டெல்லியில் இருந்த சுப்ரமணியசாமிக்கு போன் செய்தேன். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக 22-ம் தேதி மதுரை வரவேண்டி இருந்தது. அது குறித்து கேட்கதான் நான் ’ஹலோ’ என்றேன். அந்த நொடியிலேயே 'என்ன ராஜீவ்காந்தி செத்துட்டா அதைத்தானே சொல்ல வர்றேள்' என்றார் சுப்ரமணியசாமி.

சம்பவ இடத்தில் இருந்த ஜெயிந்தி நடராஜன் சொன்னதை வைத்துதான் சந்தேக அலைகள் எழுந்தன. இதனை புத்தகத்தில் மிக விரிவாக விவரித்துள்ளேன்.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமியையும் சந்திரசாமியையும் இக்கொலையின் அவிழ்க்கப்படாத மர்மங்களோடு தொடர்புபடுத்தி பேசி வருகிறீர்கள். இதற்கான அடிப்படை என்ன?

அடிப்படை காரணம் எனக்கு அவர்கள் மீது ஏற்பட்ட வலுவான சந்தேகங்கள். தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் நான் தனிமனிதனாக தெருத்தெருவாக, ஊர்ஊராக சுற்றி அலைந்து அவர்கள் மீதான சந்தேகங்களை மேலும் வேலுப்படுத்திகொண்டது, உறுதி செய்துகொண்டது ஆகியவற்றை கூறவேண்டும். தவிர எனக்கு அவர்கள்தான் குற்றவாளிகள் என்ற அசைக்க முடியாத, அதீதமான நம்பிக்கை ஏற்பட்டதையும் அடிப்படைக் காரணமாக சொல்லலாம்.

ராஜீவ் கொலையின் மூலம், சுப்பிரமணிய சுவாமி மற்றும் சந்திரசாமி ஆகியோர் அடைந்திருக்கக்கூடிய இலாபம், நன்மைகள் என்ன?

முக்கியமான கேள்விதான். காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பே இல்லாத, அந்த கட்சியையே சாராத சுப்ரமணியசாமி ராஜீவ் படுகொலைக்கு பிறகுதான் உலகளாவிய வர்த்தக ஒப்பந்தமான ’காட்’ (GATT) கமிட்டிக்கு தலைவராகிறார். ஒரு மத்திய கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி அது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்தில் அதுதான் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவி. பல சீனியர் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கே கிடைக்காத அந்த பதவியை, அந்த கட்சியை சேராத சுப்ரமணியசாமி அனுபவித்ததும், அதன்மூலம் சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்திகொண்டதும்தான் லாபம்.

சந்திரசாமியை எடுத்துகொண்டால் ஓய்ந்துபோய் வீட்டில் உட்கார்ந்துகிடந்த ஒருவரை கொண்டுவந்து பிரதமராக உட்காரவைத்ததே நான்தான். அந்த பிரதமர் நரசிம்மராவ் என் பாக்கெட்டில் இருப்பவர். அவரின் ஆஸ்தான ஆலோசகரே நான்தான் என்று சர்தேச மாபியாக்களிடம் ’கித்தாப்பாக’ சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு. அதுதான், அடுத்து அப்படியான கைப்பாவை பிரதமரை வைத்துகொண்டு ராஜீவ்படுகொலை குற்றத்திலிருந்து தப்பிக்க தாம் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை சாதித்தது. இப்படி நிறைய சொல்லலாம். புத்தகத்தில் விரிவாக இருக்கிறது.

ராஜீவ் கொலை நடந்தவேளை நீங்கள் சுப்பிரமணியசாமி தலைமையிலான ஜனதா கட்சியில் இருந்தீர்கள். கட்சியைவிட்டு எப்போது விலகினீர்கள்?

சுமார் இரண்டு இரண்டரை ஆண்டுகாலம் கழித்துதான் நான் அந்த கட்சியில் இருந்து விலகினேன். 91-ம் ஆண்டு ராஜீவ் கொலை நடக்கிறது. எனக்கு சாமி மீது சந்தேகம். அதனால் அவருடன் இருந்தே பல தகவல்களை தேடுகிறேன். அறிந்துகொள்கிறேன். சந்திரசாமியின் பங்கு என்ன என்பதுவரை தகவல் சேகரித்தேன். அவரும் என்னை கட்சியை விட்டு நீக்குவதில் தயக்கம் காட்டுகிறார். விட்டால் சிக்கலாகுமோ என்று? எனக்கு பிரிந்துபோனால் கொன்றுவிடுவாரோ என்ற பயம். கடைசியாக இறப்பதற்கு முன்பாக இந்த உண்மைகள் மக்களிடம் போய் சேரட்டும் என்று ஜெயின் கமிஷனுக்கு போக முடிவெடுத்தபோதுதான் கட்சியை விட்டு நானாக துணிந்து விலகினேன்.

ஜெயின் கமிஷனில் சுப்பிரமணிய சுவாமியை குற்றம்சுமத்தி நீங்கள் ஒரு மனு கொடுத்திருந்தீர்கள். அதன் பின்னர் என்ன நடந்தது?

அதன் பிறகுதான் எல்லாமும் நடந்தது. அதற்கு முன்பு அந்த ஜெயின் கமிஷன் கோமாளிகள் மடமாக இருந்தது. சந்திரசாமியும், சுப்ரமணியசாமியும் அதை ஒரு பொழுதுபோக்கு மையமாக பாவித்தார்கள். நக்கலும் நையாண்டியுமாக கடத்தினார்கள். இந்த ஜெயின் கமிஷனே நாம் போட்ட அரட்டை அரங்கம் என்ற நினைப்பு அவர்களுக்கு. என் மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் முதன் முதலாக ராஜீவ்குடும்பத்து உறுப்பினரான பிரியங்கா அங்கே வருகிறார்.

அதன் பிறகுதான் அந்த கமிஷன் ஒரு நிலைக்கு வருகிறது. இறுக்கமான விசாரணை நடந்தது. ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்து விசாரித்தது. முடிவாக 5 ஆவணங்களை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறது கமிஷன். அதில் நான்கு ஏட்டளவில் உள்ள ஆவணங்கள். உயிருள்ள நபராக என்னுடைய சாட்சியம் மட்டுமே. அதன் முடிவில்தான் சந்திரசாமியும் சுப்ரமணியசாமியும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் என்று மத்திய அரசுக்கு அறிக்கை தந்தது கமிஷன். பிறகுதான் இந்த பல்நோக்கு புலன்விசாரணை குழு அமைக்கப்பட்டது. இது இன்றளவில் விசாரித்தபடியே..... இருக்கிறது?

இந்த மனுவை ஜெயின் கமிஷனில் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு திருமதி சோனியா காந்தி மறைமுகமாக உதவியதாகவும் அவரை நேரடியாக சந்தித்து இது தொடர்பில் உரையாடியதாகவும் பல செவ்விகளில் சொல்லியுள்ளீர்கள். அவருடைய உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் என்ன?

நான் சோனியாகாந்தி அவர்களிடம் பேசியது அனைத்தையும் இங்கே குறிப்பிடுவது நாகரீகமல்ல. ஆனால் விடுதலை புலிகள் இந்த படுகொலையை செய்யவில்லை. வேறு நபர்கள், அதற்கு காரணமானவர்கள் சந்திரசாமி, சுப்ரமணியசாமி என்று தொடங்கி அவர்கள் மீது எங்கெங்கே சந்தேகம். எப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள். அதற்கான காரணம் என்ன? சர்வதேச தொடர்பு என்ன. அதில் இந்த இரண்டு சாமிகளின் பங்கு என்ன என்று நான் அறிந்து வைத்ததை எல்லாம் விவரித்தேன். அடுத்து நானாக சென்று சோனியாக அவர்களை சந்திக்கவில்லை. உதவி என்று எதையும் கோரவில்லை. தகவல் தெரிந்து அழைத்தார்கள். சென்றேன். அனைத்தையும் விவரித்தேன். பிறகு எனது விசாரணை மனுவை ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொண்டதில் அவரின் பங்கு இருந்ததாக என்னால் உணரமுடிந்தது.

சுப்பிரமணிய சுவாமி மற்றும் சந்திரசாமி மீதான உங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்கள் பெரியளவு முக்கியத்துவம் கொடுத்காததன் பின்னணி என்ன?

கொலைச்சம்பவம் நடந்தபிறகு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது. இந்து, ’ப்ரண்ட்லைன்’ போன்ற தேசிய நாளேடுகள் எல்லாம் இந்த படுகொலையை புலிகள் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று எழுதியதோடு அதற்கான காரண காரியங்களையும் எழுதியது. பிறகுதான் அத்ந நாளேட்டின் அதிபர்கள் மீது சி.பி.ஐ. பாய்ந்து மிரட்டியது. ராஜீவ் படுகொலையில் உங்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று பயமுறுத்தியது. அதன் பிறகுதான் தேசிய நாளேடுகளின் போக்கு மாறியது. தவிர பொதுவாகவே தேசிய ஊடகங்கள் தமிழர்களை ஒரு போக்காக நடத்திவருவதும் காரணமாக கூறலாம்.

இக்குற்றச்சாட்டுகளை நீங்கள் பேசிவருவதன் காரணமாக உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதா? யாரிமிருந்து இந்த நெருக்குதல்கள் ஏற்பட்டன?

அண்ணன் பழ.நெடுமாறன் அவரது அணிந்துரையில் சொன்னது போல் எனக்கு மிரட்டல் உருட்டல்கள் எல்லாமும் இருத்தது. பேரம் பேசியதும் நடந்தது. அந்த பேரம் பேசிய நபர்கள் யார் என்றும் தெரிந்தது. ஆனால் மிரட்டியவர்கள் யார் என்று தெரியாது. முகம் தெரியாவர்கள் மிரட்டியதைப்போல் என்னை பாதுகாக்க முகம் தெரியாதவர்களும் உதவியாக இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுவேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துவருகின்ற நிலையில், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீங்கள் மீண்டும் சோனியா அவர்களை சந்தித்து வலியுறுத்தினீர்களா?

நான் சோனியா அவர்களை முதன்முதலாக சந்தித்தபோதே அனைத்து விவரங்களையும் தெளிவாக கூறிவிட்டேன். அதில் உள்ள சதிவலைகளைப் பற்றி விவரித்தேன். அப்படி எல்லாமும் தெரிந்துகொண்ட ஒருவரிடம் மீண்டும் நான் வலியப்போய் சந்தித்து வலியுறுத்த விரும்பவில்லை. இடைப்பட்ட காலத்தில் என்னை இரண்டுமுறை சந்திக்க விரும்பி சோனியாக அவர்கள் விசாரித்ததாக அறிந்துகொண்டேன். அந்த இரண்டு சந்தர்ப்பமும் ஏனோ நழுவிப்போனது. எதற்கு சந்திக்க விரும்பினார் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் வலியுறுத்துவேன்.

ஜெனின் கமிஷன் முன்வைத்த ஆலோசனையைப்படி பல்முனை நோக்கு புலன் விசாரணைக் குழு இதுவரை சுப்பிரமணிய சுவாமி மீது விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்?

இந்த கேள்வியை நான் மட்டும் அல்ல, நீங்கள் உட்பட எல்லோருமே கேட்டுவருகிறோம். கடந்த ஆண்டு நான் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆள்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டிருந்தேன். பிரபல சீனியர் வழக்கறிஞர் கருப்பன்தான் வாதாடினார். அந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் வந்திருந்த வழக்கறிஞரிடம் நீங்கள் கேட்ட கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நீதியரசர் எலிப்பி தர்மாராவும் அதே கேள்வியை கேட்டார். சி.பி.ஐ. தரப்பு பதில் ஏதும் சொல்ல முடியாமல் அப்படியே தலைகுனிந்து நின்றது. பிறகு எழுத்துபூர்வமான பதில் வேண்டும் என்று நீதிபதி கூறினார். அதன்படி எழுத்துபூர்வமாகவும் எழுதிக் கொடுத்தார்கள். அதாவது சி.பி.ஐ-யின் பல்நோக்கு புலன்விசாரணை குழு இன்னும் சந்திரசாமி, சுப்ரமணியசாமி ஆகியோரை அழைத்து விசாரிக்கவில்லை. அழைப்பாணையும் அனுப்பவில்லை என்று. அதே பதில்தான் இந்த கேள்விக்கு.

உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உங்கள் பயணத்தில் 'தூக்குக்கயிற்றில் நிஜம்' என்ன வகையான பங்கை ஆற்றும் என நம்புகிறீர்கள்?

இத்தனை காலமும் வெறும் மேடைப்பேச்சளவிலேயே இருந்துவிட்டேன். பேசியது அனைத்தும் காற்றில் கரைந்துவிட்டது. அதன் வலியாகதான் இந்த புத்தக பதிவு. வரும் தலைமுறையினருக்கு ஓர் ஆவணமாக இருக்கும். இதில் ராஜீவ் படுகொலையை வைத்து வீரம் செறிந்த தமிழினத்தின் மீது, இயக்கத்தின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன எப்படி என்பதையெல்லாம் மேலும் விவரித்துள்ளேன். இத்தனை ஆண்டுகாலமும் சொல்லாமல் வைத்திருந்த ரகசியங்களையும் பதிவு செய்துள்ளேன். அனைத்தையும் இளைய தலைமுறை படித்துப் பார்க்கும். உண்மைகளை புரிந்துகொள்ளும். ஏன் என்ற கேள்வியை உரியவர்களை நோக்கி எழுப்பும்.

எந்தப் படுகொலையை காரணமாகக் காட்டி சர்வதேச அரங்கில் விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடை செய்தார்களோ, எந்தப் படுகொலையை வைத்து முள்ளிவாய்க்கால் படுகொலையை சர்வதேசம் வேடிக்கைபார்த்து நிற்கும்படி வைத்தார்களோ, இந்த ராஜீவ் படுகொலையில் உண்மை என்ன என்பதை இளைய தலைமுறை சர்வதேசத்திடம் எடுத்துச்செல்லும். கேள்விகளை எழுப்பும். நம்மீது விழுந்த, சுமத்தப்பட்ட பழியை துடைக்கும். ஈழத்தின் விடுதலைக்கு தடையாய் இருந்த தடையை உடைக்கும். எந்த சம்பந்தமும் இல்லாமல் தூக்குக் கயிற்றின் நிழலில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மரண கொட்டடியில் இருக்கும் மூன்று பேர் உட்பட அனைவரையும் விடுவிக்கும். அதற்கு இந்த புத்தகமும் ஒரு காரணமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

11/23/2012 5:47:02 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்