சந்திப்பு: என். ரமேஷ் குமார்
ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் தீவிரமான தலித் செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர். தருமபுரி வன்முறை நடைபெற்ற பகுதிகளில் உண்மை அறியும் குழு மூலம் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். கல்லூரி விரிவுரையாளர். தருமபுரி வன்முறை தொடர்பாகவும் தலித் இயக்கங்களின் செயல்பாடுகள், தலித்துகளுக்குள் இருக்கும் பிரிவுகள், பாகுபாடுகள் ஆகியவை பற்றியும் இவரிடம் விரிவாகப் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
தருமபுரி வன்முறையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை என்ன?
அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். பலர் தப்பிவிட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை சரியாக இனம் கண்டு கைது செய்யப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்து நேரிடையாக வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்து வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து சொத்துகளை நேரிடையாக பறிமுதல் செய்து இவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும். அப்போதுதான் வன்முறை வேறெங்கும் நிகழாமல் இருக்கும். இந்த வன்முறை நிகழ்வை சிபிஜ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றத்தைப் போல இந்த வன்முறைச் சம்பவத்தையும் அதிவிரைவாக விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும். காதல் பற்றியும் கலப்பு திருமணம் பற்றியும் சட்டத்திற்குப் புறம்பான, வன்முறையைத் தூண்டும் விதமான பேச்சுகளை தடுத்து அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தருமபுரி வன்முறைக்குப் பிறகு பா.ம.க. நடிவடிக்கையை எப்படி நோக்குகிறீர்கள்?
மிகப் பெரிய இந்த வன்முறை சம்பவத்துக்கு பா.ம.க. குறைந்தபட்ச வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமின்றி பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தியும் கூட்டங்கள் நடத்தியும் வன்முறையை நியாயப்படுத்தி வருகிறார். அவர் நெய்வேலி இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார். அதனை தொடர்ந்து அருகே உள்ள குறிஞ்சிப்பாடியில் 6 தலித் வீடுகள் உள்ளிட்ட 2 கொட்டாய்கள் கொளுத்தி சூறையாடப்பட்டிருக்கிறது. அத்தோடு நில்லாமல் சில தினங்களுக்கு முன் தருமபுரியிலேயே கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் பேசியுள்ளார். அவருடைய நடவடிக்கை வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.
தருமபுரி வன்முறை சம்பவத்தை ஊடகங்கள், தலித் அமைப்புகள், அரசாங்கம் கையாண்ட விதம் திருப்தியளிக்கிறதா?
அரசாங்கமோ, மீடியாக்களோ, ஏன் தலித் இயக்கங்கள்கூட தருமபுரி வன்முறைக்கு எதிராக பலமான நகர்வுகளை முன்னெடுக்கவில்லை. இந்த வன்முறை நிகழ்வை ஒரு கமிட்மெண்டாகக்தான் மீடியாக்கள் பார்த்தன. செய்திகளில் காட்டப்பட்டன. இவற்றிற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் போதுமானதாக இல்லை. மேலும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் அதிதீவிரம் காட்டவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்களா என்றால் இல்லை. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களின் இழப்பு குறைவான மதிப்பிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை தொடுக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியான பல வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை. மேலும் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தலித் மீதான அக்கறையின்மையையே இது காட்டுகிறது.

தலித் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தை நிர்பந்திக்கும் எந்த நிகழ்வுகளையும் தலித் இயக்கங்கள் பெரிதாக முன்னெடுக்கவில்லை. மேலும் எந்தவித அழுத்தமோ எதிர்ப்பையோ தலித் கட்சிகள் நேரிடையாக அரசுக்கே இந்த ஜனநாயக அமைப்பின் மீது கொடுக்கவில்லை. குழுவாக முதல்வரை சந்திப்பது, தனி நீதிமன்றம் அமைப்பது குறித்தான கோரிக்கை வைப்பதே, சிபிஐ கோரி வழக்கு தொடுப்பது போன்ற எந்த வித காரியங்களிலும் ஈடுபடாதது போன்ற நடத்தைகளால் தலித் மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருக்கிறார்கள். தலித் அமைப்புகள் வன்முறைக்கு எதிராக கண்டனங்கள் விடுத்தும் அறிக்கை வாசித்தும் வெறும் சடங்காக இவற்றை கடந்து சொன்றுவிட்டார்கள். மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கையையும் அவ்வாறாகத்தான் உள்ளது.
கலப்பு திருமணங்களால் வன்முறைதான் நிகழ்கிறது. இது தெரிந்தும் இவ்வளவு ஆபத்தாக காதல் திருமணம் இளைஞர்களுக்கு தேவைதானா?
இனக்கவர்ச்சி மற்றும் தேவை சார்ந்த இதுபோன்ற விஷயத்தில் ஈடுபடும் இவர்கள் எல்லையையும் தொடுவார்கள். காதலுக்கு சாமி மதம் கிடையாது. காதலிப்பவர்களுக்கு அந்த காதல் மட்டுமே கண்ணுக்கு தெரியும். எதையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். இது மட்டுமின்றி தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகளை நாம் கேட்டிருக்கிறேம். எல்லா சமூகத்தினரும்தான் காதலிக்கிறார்கள். இது மனித இயல்பு. நாம் கண்டிக்க வேண்டியது சாதி துவேசத்தையும் அடக்குமுறை, வன்முறைகளைத்தானே ஒழிய காதலை அல்ல. காதல் மற்றும் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது என்பது உரிமை. சட்டத்தின் படி நியாயமானது. பாதுகாப்பு தர வேண்டியது சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமை.
தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினர் காட்டிவரும் பாகுபாட்டைப் போன்று தலித்துகள் தங்களுக்குள் உள்ள உட்பிரிவு பாகுபாடு மற்றும் அடக்குமுறை செலுத்துவதாகச் சொல்லப்படுகிறதே?
இந்துக்களுக்குள் உள்ள சாதி அடையாளத்தைப் போன்றே தலித்துகளுக்குள்ளும் இது போன்ற பிரிவுகள் இருக்கின்றது. இது இயல்பானதுதான். மற்றைய சமூகம் தலித்துகளின் மீது அடக்குமுறை செலுத்துவது போன்றே வன்முறை செய்வது போன்ற போக்கையே தலித்துகள் தங்களுக்குள் செலுத்திக்கொள்வதில்லை. வெறும் சாதி ரீதியான அடையாளப் பிரிவுகள் மட்டுமே. தலித் அமைப்புகள், இயக்கங்கள் இந்த பிரிவுகள் அடிப்படையிலும் அவற்றின் வளர்ச்சிக்காக சில குறிக்கோளை திட்டங்களை முன்னெடுக்கின்றன. அவ்வளவுதான். அதை பெரிய ஒரு பிளவு என்றெல்லாம் சொல்ல முடியாது.
இது போன்ற தலித் உள் அரசியல் என்று சொல்லி தலித்துகளுக்கு இருக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சில சலுகைகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் தொடுக்கும் வாதங்கள் இவை. அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பா.ம.க ஏன் எம்.பி.சியில் உள்ள குறவர்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசவில்லை. இந்த அடையாள உள்சாதிப் பிரிவைப் பயன்படுத்தி தலித்துகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.
தலித்துகள் தங்களுக்கு இருக்கும் உள்சாதிப் பாகுபாட்டைக் களைய வேண்டும், ஒற்றுமையாக அரசியல் களத்தில் நின்று தனது பலத்தை காட்ட வேண்டும் என்று சொல்லும் அறிவுரையை நிறுத்திக் கொண்டு சாதி வெறியைக் களைந்து மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தலித் இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளால் தலித் மக்களுக்கு நன்மை இருக்கிறதா?
மக்களுக்கு இது போன்ற அமைப்பு மற்றும் கட்சிகள் ஓரளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் தலித்துகள் அணியில் ஒன்றுதிரள களம் கிடைத்திருக்கிறது. பொதுவெளிக்கு வர வாய்ப்புகளை இது போன்ற இயக்கங்கள் தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. உளவியல் ரீதியாக பலத்தை தந்து இருக்கின்றன. தங்கள் மீதான அடக்குமுறையை தவறானது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இன்னும் நிறைய கடமைகள் கட்சிகள், இயக்கங்களுக்கு இருக்கின்றன.
தலித்துகள் கிராமத்தில் நடத்தப்படுவதும் நகரத்தில் நடத்தப்படுவதிலும் உள்ள வேறுபாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கிராமங்களில் தலித்துகள் நடத்தப்படும் விதம் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. இன்னும் தலித் மக்களிடம் விழிப்புணர்வு வளர வேண்டியிருக்கிறது. மேலும் சாதி இந்துக்களின் மனநிலையும் மாற்றம் அடையவில்லை. நகரத்தில் இது போன்ற பாகுபாடுகள் ஒளிந்திருக்கின்றன. முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாது. அவை வெளிப்படும் இடங்களில் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அரசியல் மற்றும் அரசுப் பணியில் இருக்கும் தலித்துகள் வேலையை சரியாகச் செய்வதில்லை என்றும் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
தலித்துகளுக்கென்று தனித்து இயல்பு என்று ஒன்றும் கிடையாது. மனிதர்களுக்கு உள்ள அனைத்து அழுக்குகளும் அவர்களுக்குள்ளும் உள்ளது. பொதுச் சமூகத்தில் இருப்பது போல பொறுப்புகள் வந்தவுடன் பலர் செய்வது போல தவறான நடவடிக்கைகளில் இவர்களும் ஈடுபட்டுவிடுகிறார்கள். மற்றவர்கள் தவறு செய்யும்போது விட்டுவிடுகின்றனர். தலித்துகள் தவறு செய்யும் போது அதைப் பெரிதுபடுத்திவிடுகிறார்கள். தலித்துகளை மட்டும் சாதிய ரீதியாகவும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். இதற்குப் பின்னால் இருக்கும் சகிப்புத் தன்மையின்மையையும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அணுகுமுறை தெளிவாக தெரிகிறது. தலித்துகள் தவறு செய்கிறார்கள் என்பதால் அவர்களுக்குச் சலுகை தர நான் சொல்லவில்லை. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் இயக்கங்கள், கட்சிகள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்றால் கலந்துகொள்ளும் தலித்துகள் வன்முறையில் ஈடுபடுகிறார்களே?
எல்லா இடங்களிலும் அவர்களின் மீது அடக்குமுறையை இச்சமூகம் செலுத்துகிறது. பொதுவெளியில் பாரபட்சத்தோடு நடத்தப்படும் போக்கால் ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் தலித்துகள். வணிகத் தலங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் நிகழும் உடல், மனரீதியான தாக்குதல்களைத் தனித்தனியாக அனுபவித்த அவர்கள் கூட்டமாகத் திரளும்போது எதிர் நிகழ்வாகக் கடைகளை உடைப்பது கல்லெறிவது போன்ற வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இது உளவியலோடு சம்பந்தப்பட்டது. நான் இதனை நியாயப்படுத்திவில்லை என்றாலும் இதில் இருக்கும் நியாயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
பெரிய கட்சிகளைப் போன்ற தலித் கட்சிகளும் வன்முறை போக்கை மூலதனமாகக் கொண்டு செயலாற்றி வருகிறதே. அதற்கு தீர்வுதான் என்ன?
பிரதான கட்சிகள் வன்முறைப் போக்கை பிரதானமாக அப்பட்டமாகவே கடைபிடிக்கின்றன. ஆனால் ஒரு சில இடங்களில் தலித்துகளும் கட்சிகளை இது போன்று பயன்படுத்தி பஞ்சாயத்து, ரவுடியிசத்தை செய்துவருகின்றனர். போட்டா போட்டியில் குதித்த பின் அவர்களால் பின்நோக்கி வரமுடியாமல் போகின்றது. ஒப்பிடும்போது ஏனைய கட்சிகளுக்கு இருப்பது போன்று தீவிரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக இதுபோன்ற போக்கை நியாயப்படுத்த முடியாது. இது கண்டிக்கத்தது.
ஆரம்ப காலகட்டத்தில் அடிதடி மூலம் அடக்குமுறையினை நிகழ்த்துபவர்களுக்கெதிரான பிரச்சாரமாக 'அடிச்சா திருப்பி அடி' என்ற கோஷத்தின் காரணமான எழுச்சியுற்ற தலித்துகள் அதன் போக்கை திசைமாறி ஆரம்பித்துவிட்டனர். இந்த கோஷத்தின் அடிப்படை உண்மைகளைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளாமல் லூம்பனாக மாறி பலம் பெற ஆரம்பித்துவிட்டார்கள்.
சிலர் வேறு வேறு இயக்கங்கள் அமைப்புகள் என்று மாறி மாறியும், பொறுப்பிற்கு ஆசைப்பட்டு தவறான புரிதலுடன் வன்முறைப் போக்கைத் தவறாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர். தலித் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் இவற்றில் கவனம் செலுத்தி அவர்களைச் சரியாகக் கையாள வேண்டும். ஆக்கப்பூர்மான முறையில் அவற்றைப் பயன்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டும். தலித் கட்சிகளை மட்டும் குற்றம் சுமத்தாமல் எல்லா சாதி மற்றும் பிரதானக் கட்சிகளும் இதனை பின்பற்ற வேண்டும்.
தலித்துகள் கல்வி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளால் முன்னேற்றம் கண்டுள்ளார்களா? விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்களா?
கல்வி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறது. இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் சமூக விழிப்புணர்வுக்கு ஏகப்பட்ட காரியங்களை செய்திருக்கின்றனர். பறை அடிப்பது, பிணம் எரிப்பது உள்ளிட்டவற்றிற்காக தொடர்ந்து அடிமைபடுத்தும் சூழல் உருவாகும் நிலையை உணர்த்தி அவற்றைக் கைவிடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வந்திருக்கிறது.
காலங்காலமாக அடிமைப்படுத்தி வந்த இச்சமூக வளர்ச்சிக்காக செய்யப்பட்ட சலுகைகள் மற்றும் அரசின் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவில்லை. சட்டம், சலுகை இருக்கிறது அவர்களுக்குதான் தெரியவில்லை என்று சொல்லாமல் அவற்றைத் தெரியப்படுத்தும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. தலித் இயக்கங்கள் தாங்களாகவே முன்வந்து அவற்றை செய்ய வேண்டும்.