நேர்காணல்: பார்த்திபன்
மதி கெட்ட - மதங்கொண்ட - இனவாத அரசான மஹிந்த அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது. தமிழர்களை அடக்கியொடுக்கி ஆளவே இந்த அரசு முயற்சிக்கின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த அரசுடனான பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறி பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சாத்வீக வழியில் போராட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே உள்ளன.
எனவே, கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும். அகிம்சை வழியில் உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்று திரட்டும் நடவடிக்கையை கூட்டமைப்பு உடன் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்.
இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் தமிழின அழிப்பிற்கு எதிராகவும் தென்னிலங்கையிலிருந்து எழும் ஒற்றைக் குரலுக்கு சொந்தக்காரரான அவரின் செவ்வியை இங்கே முழுமையாகத் தருகிறோம்
***
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில தினங்களின் பின்னர் மட்டக்களப்பில் நான்கு பெரியார்களின் சிலைகள் விஷமிகளினால் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து உங்கள் கருத்தென்ன?
இலங்கையில் சிலையாக நிற்பதற்குக் கூட பெரியார்களுக்கு உரிமை இல்லை என்பதையே சர்வதேசத்துக்கு இந்த சிலை உடைப்புகள் காட்டி நிற்கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி திருகோணமலையில் தமிழினத்தின் தலைவராக, தந்தை என மதிக்கப்பட்ட செல்வாவின் சிலை மஹிந்த அரசின் காடையர் கும்பலினால் காட்டுமிராண்டித்தனமான முறையில் உடைக்கப்பட்டது. அதன்பின்னர் அதாவது ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் மகாத்மா காந்தி, விபுலானந்தர், பெரியதம்பிப்பிள்ளை, பேர்டன் பவல் ஆகிய பெரியார்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் இராணுவக் காவலரணுக்கு அருகில் இந்தச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் இனவெறி நடவடிக்கைகளே ஆகும். இந்த சிலை உடைப்புகள் மஹிந்த அரசின் ஆதரவுடன்தான் செய்யப்பட்டுள்ளன என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றன.
சர்வதேசத்துக்கு தமிழினத்தின் பிரச்சினைகளைக் கொண்டு சென்றதைச் சகிக்க முடியாத மஹிந்த அரசின் குழுக்கள் இந்தக் கோழைத்தனமான ஈனச் செயலை செய்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழினத்தை அச்சறுத்த முடியாது என்று மஹிந்த அரசுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்.
ஜெனிவா தீர்மானத்தை நிராகரிக்கும் போக்கில் அரசு செயற்படுமானால், எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏதாவது சிக்கல் நிலைமைகள் ஏற்படுமா?
இலங்கை ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறு ஏற்றுக்கொண்ட அரசு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமுல்படுத்துமாறே ஜெனிவா தீர்மானம் வலியுறுத்துகின்றது. அப்படியானால் அதற்கு ஏன் எதிர்ப்பை வெளியிட வேண்டும்?
தனது கடமைகளை அரசு உரிய வகையில் செய்து முடிக்காததன் காரணமாகவே இன்று உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகளுக்கு இந்த மஹிந்த அரசே வழிசமைத்துக் கொடுத்துள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை அரசு நிராகரிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் கடும்போக்கைக் கையாளும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குள் தள்ளப்படும். அத்துடன், இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளும் வந்துகுவியும்.
சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு வெளித்தலையீடுகள் அவசியமில்லை எனக் கூறும் அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்துமா அல்லது காலத்தை இழுத்தடிக்குமா?
பொய்களைக் கூறி காலத்தைக் கடத்துவதே மஹிந்த அரசின் கொள்கைகளாக உள்ளன. சர்வதேச சமூகத்தை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கவே அது நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. மாறாக சுயவிருப்பின் பேரிலல்ல.
எனவே, அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை மஹிந்த அரசு உரியவகையில் அமுல்படுத்தும் என எம்மால் நம்பமுடியாது. கடும்போக்குடைய அமைச்சர்களின் கொக்கரிப்பு எமக்கு இதனையே உணர்த்துகின்றது.
மஹிந்த அரசு தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு தீர்வை வழங்குமா?
மதி கெட்ட - மதங்கொண்ட - இனவாத அரசான மஹிந்த அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது. தமிழர்களை அடக்கியொடுக்கி ஆளவே இந்த அரசு முயற்சிக்கின்றது. தமிழர்களுக்குத் தற்போதைய அரசு தீர்வை வழங்காது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கடும்போக்குடைய சிங்களத் தலைவர்கள் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, மேர்வின் சில்வா ஆகியோர் இனவாதத்தை கக்கித் திரிகின்றனர். இவர்களை ஜனாதிபதி மஹிந்தவே தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்.
எனவே, இனவாதத்தை தலையில் தூக்கி வைத்தாடும் இந்த அரசு தமிழர்களின் நலன் குறித்து துளியளவேனும் அக்கறை கொள்ளாது என்பதை தமிழர்கள் கட்டாயம் உணர்ந்திருப்பர் என்றே நான் நம்புகின்றேன்.
அப்படியானால் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது?
இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த அரசுடனான பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறி பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சாத்வீக வழியில் போராட வேண்டும்.
உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பாரிய கூட்டங்களை தெற்கில் நடாத்த வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே உள்ளன. எனவே, கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.
அகிம்சை வழியில் உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்று திரட்டும் நடவடிக்கையை கூட்டமைப்பு உடன் ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்.
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் ஜெனிவா மாநாடு நடந்துகொண்டிருந்தபோது புதிய வீடியோக் காட்சியொன்றை வெளியிட்டது. இந்தப் போர்க்குற்ற வீடியோ குறித்து உங்கள் கருத்தென்ன?
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் அன்று தமிழ் மக்கள் ஐயோ என இட்ட மரண ஓலத்தின் எதிரொலியே இன்று உலகமெங்கும் ஒலிக்கின்றது. இங்கு நடந்த கொடூரங்களை சனல் 4 வீடியோவைப் பார்த்து புரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. இறுதியுத்தத்தில் அரங்கேறிய கொடூரங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இதற்கு முன்னர் வெளியிட்ட யுத்தக்குற்ற வீடியோக் காட்சி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மஹிந்த அரசு செய்யவேண்டும்.
பொது எதிரணியின் மே தின நிகழ்வு யாழில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வமான எதனையும் அறிவிக்கவில்லையே?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மே தின நிகழ்வுகளை அங்கு நடத்துவதற்கு கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என அறிய முடிகின்றது.
பொது எதிரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கம் வகிக்கின்றது. எனவே,யாழில் நடைபெறும் நிகழ்வுக்கு கூட்டமைப்பு தலைமை தாங்கினால் நாம் சந்தோசமடைவோம். எதிர்ப்பை வெளியிடமாட்டோம்.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை முன்கதிரையில் இருத்துவதற்கு எதிர்ப்பை வெளியிடும் அரசியல்வாதிகள் நாங்கள் அல்லர்.
தெற்கில் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்று அதிகாரப் பகிர்விற்கும் இணங்கியுள்ளார். அவர் ஜனநாயக ரீதியாக செயற்படும் தலைவராகத் தோற்றமளிக்கின்றார். அதனால்தான் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும்.
யார் நிகழ்வை வைக்கின்றனர் என்பது முக்கியமில்லை. அந்நிகழ்வின் ஊடாகப் பலன் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமானதொரு முடிவை எடுக்கும் என நாம் நம்புகின்றோம். அதேவேளை, தமிழர்களின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள கட்சியான கூட்டமைப்பின் தலைமையில் நிகழ்வை முன்னெடுப்பதுதான் நியாயமாகும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு தற்போது நடத்தவுள்ளது எனவும், வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு பின்னடிப்பை மேற்கொள்கின்றது எனவும் தகவல் கசிந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்தென்ன?
கிழக்கில் மூவின மக்களும் இருப்பதால் அங்கு தாம் தேர்தலில் வெற்றியடைவோம் என்ற துணிச்சலுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கின்றது போலத் தெரிகின்றது.
அதேவேளை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மோதி மஹிந்த அரசு படுதோல்வியடைந்தது. எனவே, மாகாண சபையையும் இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மஹிந்த அரசு தேர்தலை நடத்துவதில் காலம் கடத்துகின்றது.
வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினால் அரசுக்கு சர்வதேச அரங்கில் சில சிக்கல்கள் ஏற்படும். அது மட்டுமின்றி, கூட்டமைப்பு ஒருபோதும் வளைந்து கொடுக்காத கட்சி. அரசின் அடாவடிகளைத் துணிகரமாகச் சுட்டிக்காட்டும். இவ்வாறான காரணிகளைக் கருத்திற்கொண்டே வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு பின்னடிக்கின்றது.
இலங்கை வாழ் மூவின மக்களுக்கும் இறுதியாக நீங்கள் கூற விரும்புவது என்ன?
பொருட்கள், சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் வாழ்க்கைச்சுமை அதிகரித்து மக்கள் வாழ்வதற்கு வழியின்றித் திண்டாடுகின்றனர்.
நாட்டின் எதிர்காலத்தைப் படுபாதாளத்தை நோக்கி அழைத்துச் சென்றது தற்போது ஆட்சியில் இருக்கும் மஹிந்த அரசுதான். இந்த மஹிந்த அரசின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நிலைமைகள் மேலும் மோசமாகிவிடும்.
அரசு தனக்குத் தேவையேற்படும் போதெல்லாம் பெரும் வட்டிக்கு சர்வதேசத்திடம் கடன் வாங்குகின்றது. ஆனால் மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்டியே கடன்தொகையை அது செலுத்துகின்றது.
இலங்கையில் நாளுக்கு நாள் ரொக்கெட் வேகத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது. மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டையாகவே மஹிந்த அரசு செயற்படுகின்றது. இந்த அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவேண்டும்.
மஹிந்த அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.