Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பயிர் விளைஞ்ச மண்ணில சாவல்லோ விளைஞ்சிது..

பயிர் விளைஞ்ச மண்ணில சாவல்லோ விளைஞ்சிது..
நேர்காணல் - அன்ரனி றோய்

 

முள்ளிவாய்க்காலைச் சொந்த இடமாகக் கொண்ட இராசலிங்கம் நாகேஸ்வரி (வயது 40) என்ற பெண்ணை அவர் தற்பொழுது குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் கிராமமான புதுக்குடியிருப்பு – திம்பிலியில் சந்தித்தேன். இந்தத் தற்காலிகக் கிராமம் அதிரடியாக அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கேதான் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை, மாத்தளன் பகுதிகளைச் சொந்த இடமாகக் கொண்ட சனங்கள் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குடியமர்வு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று யாருக்குமே தெரியாது. ஆனால், ஒரு நிரந்தரக் கிராமமாக இந்தப் பகுதியை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மிகத் துரிதமாக நடக்கின்றன. புதிய வீதி அமைப்பு, பாடசாலை, மின்னிணைப்புக்கான ஏற்பாடுகள் எனக் காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா அமர்வுக்கு – இலங்கைக்கு எதிரான ஜெனிவா நெருக்கடிக்கு - முன்பாக வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்த இவர்கள் இங்கே அழைத்து வரப்பட்டுள்ளனர். 'இடைத்தங்கல் முகாம்களில் இருந்த அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்' என்று ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது.

ஆனால், இப்படி அழைத்து வரப்பட்ட சனங்கள் உரிய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் இவர்களுக்குத் தொழில் இல்லை, முறையான இருப்பிடம் இல்லை, உதவிகள் இல்லை. இதைப் பற்றி அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளைக் கேட்டால், 'கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த நல்லநாள் எப்போது, எப்படி வரும் என்று இவர்களுக்குத் தெரியவில்லை.

தங்களின் கதையையும் இன்றைய நிலையையும் சொல்கிறார் இராசலிங்கம் நாகேஸ்வரி.

***

இந்தப் பகுதிக்கு எப்ப வந்தீங்கள்? யார் அழைத்து வந்தது? எப்படி வந்தீங்கள்?

சண்டை ஓய்ஞ்சு கொண்டிருந்த (2009) மே 17 ஆந் திகதி முள்ளிவாய்க்கால்ல இருந்து உள்ளுக்குள்ள (இராணுவத்திடம்) போனம். பிறகு, வவுனியா கதிர்காமர் முகாமில இருந்தம். அங்க இருந்த மற்றாக்களை அவையின்ரை இடங்களுக்கு ஏத்தியிட்டாங்கள். மிஞ்சியிருந்த ஆக்களில நாங்கள் 58 குடும்பங்கள். அதில முள்ளிவாய்க்கால், மாத்தளன், பொக்கணை, அம்பலவன், இரட்டைவாய்க்கால் பகுதி ஆட்கள்தான் கூடுதலாக இருந்தம்.

பங்குனி மாதம் ஒரு நாள் திடீரெண்டு ஒரு அறிவித்தல் வந்திது. 'நீங்கள் எல்லாம் சொந்த இடத்துக்குப் போகலாம்' எண்டு. இந்த அறிவிப்பைக் கேட்ட எங்களுக்கு நல்ல சந்தோசம். சொந்த ஊருக்குப் போறதெண்டால் ஆருக்குத்தான் சந்தோசம் வராது?

பயிர் விளைஞ்ச மண்ணில சாவல்லோ விளைஞ்சிது..

அப்ப நாங்களும் அதுக்காக ஆயத்தப்படுத்தினம். ஆனால், இடையில ஒரு கதை வந்திது. 'இப்போதைக்கு எங்கட பக்கத்துக்கு (முள்ளிவாய்க்கால், மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளுக்கு) சனங்களைக் கொண்டுபோறதில்லை எண்டும், கொஞ்ச நாளைக்கு புதுக்குடியிருப்புப் பக்கத்தில எங்கயோ ஒரு இடத்தில தற்காலிகமாக இருத்திறது எண்டும் சொன்னார்கள். இந்தக் கதையைக் கேள்விப்பட்ட சனங்கள் குழம்பீட்டுதுகள்.

'இஞ்ச முகாமில இருந்து ஏத்திறதெண்டால், நேர எங்கட ஊருக்கு அனுப்புங்கோ. இல்லாட்டி, இஞ்ச முகாமலயே இருக்க விடுங்கோ' எண்டு ஒரே பிடியாக எல்லாரும் நிண்டம்.

இதைப் பார்த்த அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆமிக்காரருக்கும் கொஞ்சம் குழப்பம் வந்திட்டுது. அப்ப எங்களைக் கூப்பிட்டுச் சொல்லிச்சினம், 'கொஞ்சநாளைக்கு நீங்கள் புதுக்குடியிருப்பில இருங்கோ. அதுக்கேத்தமாதிரி அங்க ஏற்பாட்டைச் செய்து தாறம். பிறகு, உங்கட இடங்களில கண்ணிவெடி அகற்றித் துப்பரவாக்கிவிட்டு எல்லாரையும் அங்கே குடியிருத்துவோம்' எண்டு.

ஆனால், இதுக்குப் பெரும்பாலான ஆட்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதுக்கு உடன்பட்டால் பிறகு இப்போதைக்கு எங்கட சொந்தக் ஊர்களுக்குச் செல்லமுடியாது எண்டு இந்தத் திட்டத்தை மறுத்திட்டம்.

பிறகு?

பிறகென்ன? அவங்கள் தண்ணியை நிற்பாட்டினாங்கள். கரண்டைக் கட் பண்ணினாங்கள். நிவாரண வெட்டு நடந்தது. கட்டுப்பாடுகளும் சட்டங்களும் இறுகின.

நாங்கள் அங்க, முகாமில இருக்க முடியாது எண்ட நிலைமை வந்தது. அங்க இருந்தால் இன்னும் கஸ்ரப்பட வேணும் எண்டு பேசாமல் பஸ்ஸில ஏறினம். அதை விட வேற என்ன வழி எங்களுக்கு இருக்குச் சொல்லுங்கோ!

ஏறி?

ஏறி, இஞ்ச வந்திறங்கினம். இஞ்ச வந்திறங்கும்போது இந்தப் பகுதியெல்லாம் காடாகக் கிடந்துது. இதுக்க என்ன செய்யிறது? பிள்ளைகளை வைச்சுக்கொண்டு எப்பிடி இதுக்குள்ள வாழுறது எண்டு பெரிய குழப்பமாக இருந்துது. சனங்கள் நல்லாக் குழம்பிச் சத்தம் போட்டுதுகள். 'இஞ்ச இருக்கேலாது, எங்களைக் கொண்டுபோய் எங்கட சொந்த ஊரில விடுங்கோ, இல்லாட்டி முகாமுக்குக் கொண்டு போங்கோ' எண்டு. ஒரே பிரச்சினையாகிப்போட்டுது. இந்தக் காட்டுக்க இருக்கிறதை விட என்ன கஸ்ரமெண்டாலும் ஊருக்குப் போய்ச் சமாளிக்கலாம் எண்டு நினைச்சம்.

ஆனால், 'ஊருக்குப் போறதுக்கு இன்னும் அங்க நிலைமை சரியில்லை. கண்ணிவெடிகளை அகற்ற வேணும். அனுமதியும் வரோணும்' எண்டார்கள். 'முகாமுக்குத் திரும்பிப் போகேலாது. இஞ்ச வேண்டிய உதவிகளைச் செய்து தரலாம்' எண்டினம். கச்சேரிக்காரரும் ஏ.ஜீ.ஏயும் (உதவி அரசாங்க அதிபர்) தான் இந்த இடத்தை எங்களுக்குத் தந்தது.

அப்ப உள்ளுக்குள்ள ரண்டு பெரிய கொட்டகைகள் இருந்தன. முந்தி இயக்கம் பயன்படுத்தின கொட்டகைகள். ஏதோ பயிற்சி முகாமாக இருந்ததாம் இந்தப் பகுதி. அதுக்குப் பயன்படுத்தியதுதான் இந்தக் கொட்டகைகள். அதைத்தான் இப்ப பள்ளிக்கூடமாக்கியிருக்கிறாங்கள். அதுக்குள்ள ஒரு கிழமை இருந்தம். தண்ணி, சாப்பாடெல்லாம் தந்தார்கள். அதுக்குள்ள இந்தப் பகுதியைத் துப்புரவாக்கி, தற்காலிக வீடுகளைப் போட்டுத் தந்திருக்கினம். தண்ணிக்கு ஏற்பாடு செய்திருக்கினம். நாங்களும் கிணறுகளை வெட்டியிருக்கிறம்.

நீங்கள் இங்கே வந்த பிறகு எப்படியான உதவிகள் கிடைச்சிருக்கு?

நாங்கள் இஞ்ச வந்தபிறகு, நிவாரணம் தந்தினம். உலர் உணவு நிவாரணந்தான். (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேங்காய் எண்ணெய், கருவாடு ஆகிய பொருட்கள்). தற்காலிக வீட்டைப் போட்டுத் தந்திருக்கினம். அது எங்கட புழக்கத்துக்குப் போதாது. அதால, இந்தப் பத்தியை (மேலதிகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இணைப்புப் பகுதியைக் காண்பிக்கிறார்) போட்டிருக்கிறம்.

மற்றப்படி உதவிகள் எண்டு எதுவுமில்லை. 'நீங்கள் ஊருக்குப் போனாற் பிறகு அங்க எல்லா உதவிகளும் கிடைக்கும். கெதியில ஊருக்குப் போயிடுவியள்' எண்டு கச்சேரிக்காரர் சொல்லுகினம்.

'இல்லை நீங்கள் இங்கதான் இருக்க வேண்டிவரும் எண்டு' வேற ஆட்கள் கதைக்கிறார்கள். 'இல்லாட்டி எதுக்காக இந்த றோட்டையெல்லாம் இப்பிடிப் புதுசாகப் போடுறாங்கள்? ஒவ்வொருத்தருக்கும் கால் ஏக்கர் வீதம் காணி அளந்து தந்திருக்கிறாங்கள் எண்டால், இஞ்ச நிரந்தரமாக இருக்க வேணும் எண்டுதானே!' எண்டு சொல்லுகினம் சிலபேர்.

ஆனால், இதைப் பற்றி ஜி.எஸ்சிட்ட (கிராம அலுவலரிடம்) கேட்டால், அவர் சொல்லுறார், 'அப்படித் எனக்கு ஒருதரும் சொல்லயில்லை' எண்டு. 'இந்தக் காணி இனி எங்களுக்குத்தான் சொந்தம்' எண்டு ஊருக்குள்ள சொல்லுகிற ஆட்களும் இருக்கினம். என்ன நடக்குது? எது உண்மை எண்டு ஒண்டுமாத் தெரியேல்ல.

ஆனால், எங்களுக்கு முதல்ல வந்த புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி போன்ற இடங்களில இருக்கிற ஆட்களுக்கு வாழ்வாதார உதவிகள், தொழில் உதவிகள் எல்லாம் கிடைச்சிருக்கு... அவை தோட்டம் செய்யினம். ஆடு, மாடு, கோழி வளர்க்கினம். சிலர் நெல்லு விதைச்சிருக்கினம்.

இந்தக் காணிகள் யாருடையவை? இங்கே குடியமர்த்தும்போது என்ன சொன்னார்கள்? இந்தக் குடியிருப்புக்குப் பொறுப்பாக யார் இருக்கிறார்கள்?

இது அரசாங்கக் காணி. அதுதான் முன்னமே சொன்னேனே, இது நாங்கள் வரேக்க காடாகக் கிடந்த இடமெண்டு. 'இஞ்ச கொஞ்ச நாளைக்கு இருங்கோ. மூண்டு, நாலு மாதத்தில ஊருக்கு ஏத்தலாம்' எண்டு ஒருக்காற் சொல்லுகினம்.

பிறகு சொல்லுகினம், 'இது உங்களுக்கான காணி. இதில நீங்கள் நிரந்தரமாக இருக்கலாம்' எண்டு. ஆனால், ஒண்டுக்கும் உத்தரவாதம் இல்லை. இந்தக் காணிக்குரிய ஆவணங்கள் எதையும் தரேல்ல. ஏ.ஜீ.ஏ (உதவி அரச அதிபர்) தான் இந்தக் குடியிருப்புக்குப் பொறுப்பு. ஆனால், நிலைமைகளை ஜி.எஸ்ஸே பார்த்துக் கொள்கிறார். இது கோம்பாவில் ஜி.எஸ் பிரிவில இருக்கிறதால அவரே பாத்துக் கொள்கிறார்.

இராணுவத்தினரின் தலையீடுகள் இங்கே எப்படியுள்ளன? அவர்களால் ஏதாவது பிரச்சினைகள்?

இராணுவம் இங்கே நேரடியாக எதிலயும் தலையிடயில்லை. ஆனால், இந்தப் பகுதியில அவை இருக்கினம். உள்ளுக்குள்ள நிறையக் 'காம்ம்' இருக்குப் போல. இந்தக் காட்டைத் துப்பரவாக்கும்போது அவையள்தான் அதைச் செய்தினம். இந்தப் பகுதிக்குக் கிழக்குப் பக்கமாக முந்தி இயக்கத்தின்ரை (விடுதலைப் புலிகளின்) பெரிய முகாம்கள் இருந்திருக்கு. அந்த இடங்களில எல்லாம் இப்ப இராணுவந்தான் இருக்கு. அதுக்குள்ள போய் வருவினம். காடுகளில இன்னும் கிளேமோரும் கண்ணிவெடிகளும் இருக்கு. கண்டபடி காட்டுக்கு விறகு கூட எடுக்கப்போகேலாது. அதோட இராணும் இருக்கிறதால சனங்கள் கொஞ்சம் விலத்தித்தான் நடக்குதுகள். ஏன் வீண் சோலியெல்லாம் எண்டு.

இஞ்ச இருக்கிற தற்காலிக பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில கூட பெரிய ஒரு ஷெல் (ஆர்.பி.ஜி. றொக்கற்) வெடிக்காத நிலையில் மரத்தில இன்னும் இருக்கு.

மற்றும்படி நேரடியாக இதுவரையில பிரச்சினை இல்ல. ஆனால், என்னதானிருந்தாலும் நாங்கள் ஊரில இருக்கிற சந்தோசம் இஞ்ச வருமா?

உங்களுடைய ஊருக்குப்போய் அங்கே என்ன நிலைமை என்று பார்க்கவில்லையா? அங்கே கைவிட்ட பொருட்களைச் சிலர்  போய் எடுக்கிறார்களே! அதற்காக நீங்கள் ஏதாவது முயற்சித்தீங்களா?

முள்ளிவாய்க்காலுக்குப் போனோம். ஆனால், வீட்டுக்குப் போக முடியேல்லை. அதுக்கு இன்னும் அனுமதியில்லை. அந்தப் பகுதியில இருக்கிற இராணுவ அதிகாரியிடம் போய் நிலைமையைச் சொன்னோம். அவர் பெயரைப் பதிஞ்சு போட்டு எங்கட ஒழுங்கைக்குக் கூட்டிக் கொண்டு போனார். எங்கட வீடு கடற்கரைப்பக்கமெண்டபடியால கிட்டப்போக முடியேல்ல. நாங்கள் எங்கட வீட்டை ஒழுங்கையில நிண்டு பார்த்தம்.

வீடு ஒரு பகுதியால் உடைஞ்சிருக்கு. சிலபேற்ற வீடுகள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கு. சில வீடுகள் அப்பிடியே அழிஞ்சு போய்ச்சு.

சில ஆக்கள் தங்கட வீட்டுக்குப் போய்ப் பாத்திருக்கினம். வலைஞர் மடம் பகுதி ஆக்கள் தங்கட வீடுகளுக்குப் போய் வந்திருக்கினம். ஆனால், இன்னும் எங்கட பொருட்களை நாங்கள் எடுக்கயில்லை. அதுக்கு கச்சேரியில பதியோணுமாம். இப்பதான் ஜி. எஸ்ஸிட்டப் பதிஞ்சிருக்கிறம்.

சரி, இப்பிடி நீங்கள் அவசர அவசரமாக இங்கே கொண்டுவரப்பட்டது எதற்காக? அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

நாங்கள் முகாமில இருந்து ஏத்தப்பட்டது, ஜெனிவாவில அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்போகுது எண்டுதான் எனப் பேப்பர்களில வந்தது. அப்பிடித்தான் ஏதோ காரணம் எண்டு நினைக்கிறன். இல்லாட்டி இப்பிடி அவசர அவசரமாக ஏன் ஏத்திப் பறிக்கோணும்?

ஒரேயடியாக முகாமில இருந்து ஊருக்கு ஏத்தியிருக்கலாமே! இப்ப பாருங்கோ இது ரண்டு அலைச்சல். இஞ்ச ஒருக்கா இருந்து, பிறகு இதையெல்லாம் பிடுங்கிக் கொண்டுபோய், அங்க ஊரில திருப்பிப் போட்டு...

ஆனால் ஒண்டு, இஞ்ச ஊருக்குக் கிட்டத்தில இருக்கிறதால அடிக்கடி ஊரைப் போய்ப் பாக்கலாம். வெளியில தொழிலும் செய்யலாம். சந்தைக்குக் கடைக்கு எண்டு போய்வரலாம். அறிஞ்ச தெரிஞ்ச ஆக்களிட்டப் போய்வரலாம். ஒரு நன்மை தீமை எண்டாலும் அதில கலந்து கொள்ளலாம்.

இங்க உங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது? தொழில் ஏதாவது செய்கிறீங்களா? பொதுவாக இங்க உள்ள ஆட்கள் என்ன செய்கிறார்கள்?

அவை அவையின்ர வசதிக்கு ஏற்றமாதிரி வாழுகினம். சிலபேர் சொந்தமாகத் தொழில் செய்யினம். அந்தா, அந்த முன்வீட்டுக்காரர் (எதிரேயுள்ள வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்) ஓட்டோ வைச்சிருக்கினம்.

சில ஆக்கள் கூலிக்குப் போகினம். இப்ப றோட்டு வேலை, கட்டிட வேலை, கரண்ட் குடுக்கிற வேலை எண்டு வேலைசெய்யக் கூடிய கொஞ்ச வசதி கிடைச்சிருக்கிறதால கொஞ்சம் பரவாயில்லை.

நாங்கள் இந்தா, இந்த வீட்டோட சேர்த்துக் கொஞ்சக் கீரை போட்டிருக்கிறம். மரக்கறிப் பயிரும் கொஞ்சம் வைச்சிருக்கிறம். (அவர் தாங்கள் அமைத்திருக்கின்ற சிறு தோட்டத்தைக் காண்பிக்கிறார்). இவர் (கணவர்) வேலைக்குப் போவார். மேசனுக்கு உதவியாகத்தான் வேலை செய்யிறார். முந்தி ஊரில தோட்டம் செய்தவர். இஞ்ச அந்தளவுக்குச் செய்யேலாது. அதால இந்த வேலைக்குப் போறார்.

பிள்ளைகளின் படிப்பு, போரிலே பாதிக்கப்பட்டவர்களின் நிலை – அதாவது, உங்களுடைய ஊரில்தான் கடுமையான இறுதிக்கட்டப்போர் நடந்தது. அதனால் பாதிப்பைச் சந்தித்தவர்களின் நிலைமை எல்லாம் எப்பிடி இருக்கு?

பிள்ளைகளின்ரை படிப்புத்தான் பிரச்சினையாக இருக்கு. வளர்ந்த பிள்ளையள் புதுக்குடியிருப்புக்குப் போகினம். அங்கதான் பெரிய பள்ளிக்கூடம் இருக்கு. மற்றப் பிள்ளையளுக்கு இங்க இருக்கிற பள்ளிக்கூடத்தில படிப்பு நடக்குது. அங்க, புதுக்குடியிருப்புக்குப் போற பிள்ளையள், இஞ்ச இருந்து நடந்து போய், பஸ்ஸேறிப்போகவேணும். சில பிள்ளைகள் நடந்தே போகினம்.

எங்களுக்கு ஒரு சைக்கிளைத் தந்தாலாவது இந்தப் பிள்ளையள் கொஞ்சம் சுகமாகப் பள்ளிக் கூடம் போகுங்கள்.

மற்றது, முள்ளிவாய்க்கால்லதான் இந்தப் போர் நடக்குமெண்டும், அது அங்கதான் முடியுமெண்டும் நினைக்கேல்ல. இவ்வளவு தொகையாகச் சனங்கள் வந்து எங்கட ஊரில சேரும் எண்டும் நாங்கள் நினைச்சிருக்கயில்லை. கடவுளே, என்னமாதிரி எல்லாம் நடந்துது!

வந்த சனங்கள் பட்ட பாடும், அந்தரிப்பும்....

கடைசியில நாங்களும் தப்பிப் பிழைக்கப்பட்ட பாடு...

ஆரை ஆர் பாக்கிறதெண்டு தெரியாமல்...

காயும் பூவுமாகப் பயிர் விளைஞ்ச மண்ணில சாவல்லோ விளைஞ்சிது....

ஊரில் நீங்கள் இருந்த நிலைமையைப்பற்றிச் சொல்லுங்கள்?

எங்களுக்கு மூண்டு பிள்ளையள். நான் முள்ளிவாய்க்கால்லதான் படிச்சன். இவரும் அங்கதான் படிச்சவர். கிழக்கில இருக்கிற பள்ளிக்கூடத்தில. எங்களுக்கு நாலு ஏக்கர் வயல் இருக்கு. ஒரு போகம், காலபோகம் விதைப்பம். வெற்றிலைக் கொடி நட்டிருந்தனாங்கள். வெங்காயம், மிளகாய், போயிலை (புகையிலை), மரக்கறிப் பயிர் எண்டு தோதாக வைப்பம். பிரச்சினையில்லை ஏதோ சமாளிச்சுக் கொண்டிருந்தனம்.

எங்களுக்குக் கிழக்குப் பகுதியில இருந்த ஆக்கள் கடற்தொழிலுக்குப் போவினம். இப்ப அவைக்குத் தொழில் இல்ல. இஞ்ச இருந்து, தொழிலுக்குப் போகேலாது. அதால மந்துவில் களப்புக்கு – நந்திக்கடலுக்குப் போய்த் தொழில் செய்யினம். எல்லாரும் போறேல்ல. களப்பிலயும் மீன் பாடு குறைவெண்டு கதை. மற்றாக்கள், கூலியும் தோட்டமும் எண்டு ஏதோ தங்களுக்குத் தோதாக எதையோ செய்து கொண்டிருக்கினம்.

முள்ளிவாய்க்காலில் இரண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்று கரையா முள்ளிவாய்க்கால். மற்றது வெள்ளா முள்ளிவாய்க்கால் என்று. சாதியின் குறியீடாகத்தான் இப்பிடிச் சொல்லுவதாகச் சொல்லப்படுகிதே.

அது உண்மைதான். முந்தி அப்பிடித்தான் இருந்தது. அப்பிடித்தான் புழங்கினவை. காணி உறுதியிலும் அப்பிடித்தான் இருக்கு. மற்ற அரசாங்கப் பதிவுகளிலயும் அப்பிடித்தான் இருக்கு. சந்தையிலகூட அப்பிடித்தான் எழுதியிருக்கு.

ஆனால், இயக்கம் வந்தாப்பிறகு, அப்பிடிச் சொல்லிற பழக்கம் குறைஞ்சிட்டுது. இப்ப நாங்கள் கிழக்கு முள்ளிவாய்க்கால், மேற்கு முள்ளிவாய்க்கால் எண்டுதான் கதைக்கிறம். சில வயசு போனவையள் இன்னும் பழைய மாதிரியே வெள்ளா முள்ளிவாய்க்கால், கரையா முள்ளிவாய்க்கால் எண்டுதான் கதைக்கினம்.

பெரும்பாலும் இளைய தலைமுறை கிழக்கு மேற்கெண்டுதான் கதைக்கிது. எழுத்து ஆவணத்திலதான் பழைய மாதிரி இன்னும் இருக்கு.

6/30/2012 1:58:33 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்