நேர்காணல்: ரூபன் சிவராஜா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உருப்பினருமான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான நேர்காணல் - பகுதி 2
***
விரைவில் கிழக்கு மாகாணத்திற்குரிய தேர்தல் நடாத்தப்படவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடடென்ன?
கிழக்கு மாகாணத் தேர்தல் அடுத்த ஆண்டு (2013) மே மாதம் தான் நடைபெற வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் கிழக்கு மாகாணத்திற்கும் வேறு இரு மாகாணங்களுக்குமான தேர்தலை முன்னதாகவே நடாத்தவுள்ளது. முக்கியமாகத் தனக்குத் தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் பரவலான செல்வாக்கு இருப்பதாக அனைத்துலக சமூகத்திற்குக் காட்ட விரும்புகின்றது. அவ்வாறு காட்டுவதன் மூலம் தன்மேலுள்ள அழுத்தங்களைத் தணிக்க முனைகின்றது. ஆகவே திடீரென இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடாத்தப்படலாம். மாகாணசபை சார்ந்த தேர்தல் சட்டத்தின்படி முதலமைச்சர் ஆணை வழங்கினால் மட்டுமே, தேர்தல் காலத்திற்கு முன்பு, மாகாண சபை கலைக்கப்பட்டு புதிய தேர்தலை அறிவிக்க முடியும். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருப்பவர் முதலில் தான் அதனை ஏற்கவில்லை என்றார். பின்னர் ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் தான் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
தேர்தல் வருமாயின் அதில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இன்றைய சூழலில் இலங்கை அரசாங்கம் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும், தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானையும் உள்ளடக்கித் தேர்தலில் குதிக்க இருக்கின்றது. அவ்வாறான சூழலில் முஸ்லிம் மக்கள், அரசாங்கத்துடன் இணைந்து நிற்கக்கூடிய சிங்கள மக்கள் என நோக்கும் போது, கிழக்கு மாகாணத்திலிருக்கக்கூடிய 36 மாகாண சபை இருக்கைகளில் பெரும்பான்மையை அவர்கள் பெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. இப்புறநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆளும்கட்சியாக அங்கு வருவது கடினமானதாகும். முழுத் தமிழ் மக்களினது வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் பெறப்படும் பட்சத்தில்கூட எமக்கு 12-13 இருக்கைகளே கிடைக்க வாய்ப்புள்ளது. முஸ்லிம், சிங்கள மக்களைக் கூட்டாகப் பார்க்கும் போது அவர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு இணைப்பு, ஆட்சியதிகாரத்தில் பங்கு ஆகியவற்றைக் கவனத்திலெடுத்து, சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சியுடன் கூட்டாக இணைவதன் மூலம், ஆட்சிக்காலத்தைப் பங்கீடு செய்வது மாத்திரம் அல்லாமல், எதிர்காலத்தில் வடகிழக்கு இணைப்பு விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முகாந்திரமாக அமையும் என்றதொரு சிந்தனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் இருக்கின்றது.
இது விடயம் தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் திரு. ஹக்கீமுடன் பேசியிருக்கின்றேன். திரு.சம்பந்தன் அவர்களும் ஹக்கீமுடன் பேசியிருக்கின்றார். முஸ்லிம் ஒருவர் கிழக்கு முதலமைச்சராக வருவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது ஒரு கணிப்பீடு உள்ளது. முஸ்லிம் கொங்கிரசைப் பொறுத்தவரையில், அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் ஒப்புதலின்றிச் செயற்பட்டால் அமைச்சுப் பதவிகளுக்கு என்ன நேருமென்ற கேள்விகளும் அவர்கள் மத்தியில் எழலாம்.
எனவே இவ்வாறான சூழலில் முஸ்லிம் கொங்கிரஸ் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருமென்ற கேள்வி நிலவுகின்றது. நாம் இப்பொழுது ஆரம்பக்கட்டப் பேச்சுக்களைத்தான் நடாத்தியிருக்கின்றோம். மாகாண சபை கலைக்கப்படுமாக இருந்தால், காத்திரமான பேச்சுவார்த்தைகளை முஸ்லிம் தரப்புடன் நடாத்த வேண்டியிருக்கும். இது ஒரு காலத்தின் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது. எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றனவா? வடமாகாண தேர்தல் நடைபெறுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும்?
வட மாகாணத் தேர்தலைப் பொறுத்தவரையில் அது ஒரு இழுபறி நிலையில்தான் உள்ளது. தேர்தலை நடாத்தப்போவதாக வெளியில் சொல்லிக் கொள்கின்றபோதும் உடனடியாக நடாத்துகின்ற உத்தேசம் அரசாங்கத்திடம் இல்லை. மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுமாயின் இப்போது இடம்பெறுகின்ற தமிழ் மக்களுக்கெதிரான பல அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மாகாண அரசிற்கு கிடைக்கும். உதாரணத்திற்கு ஆளுனர், தான் விரும்பியபடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதவாறு கட்டுப்படுத்தப்படும். இராணுவமோ ஏனையோரோ தாம் விரும்பியபடி காணி நிலங்களை அபகரிக்க முடியாது. அவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேபோல புதிய (புத்த) கோவில்களோ, குளங்களோ கட்ட முடியாது. ஏனெனில் அவற்றுக்கான அனுமதிகளைப் பெறுவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் நேரும்.
மாகாண அரசு ஒன்று உருவானால் அதற்குப் பெரிய அதிகாரங்கள் வந்துசேருமென நான் கூறவில்லை. ஆனபோதும் அரசாங்கத்தினுடைய தமிழரெதிர்ப்பு நிகழ்ச்சிநிரலை ஓரளவேனும் நிறுத்துவதற்கும், தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்குள் இட்டுச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும் மாகாணசபை வாய்ப்பினை நாங்கள் பயன்படுத்த முடியும். இது தீர்வல்ல. ஆனால் இப்புறநிலைகளில் வடமாகாணத் தேர்தலை நோக்கும் போது சில வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பின்னால் அணிதிரள்வார்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனைய நாடுகளின் ஒத்தாசையோடு மீள்குடியேற்றம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே வட மாகாணத் தேர்தலைப் பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சில இடங்களில் கண்ணி வெடிகளை அகற்றவில்லை, தேர்தல் பதிவேடுகள் முழுமைப்படுத்தப்படவில்லை போன்ற காரணங்களால் தற்போது தேர்தலை நடாத்த முடியாது என்று அரசாங்கத் தரப்பால் கூறப்படுகின்றது.
ஆனால் போருக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. எனவே அவற்றிற்கு இல்லாத பிரச்சினை மாகாணசபைக்கு உள்ளதெனக் கூறுவது பொய். மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் நடாத்த விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில் அது நடைபெற்றால் பல விடயங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற அச்சமே அரசாங்கத்தின் இந்த இழுபறிக்கான மூலமாகும்.
வட கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டின் அடிப்படை. வடக்குக் கிழக்கிற்கு தனித்தனியாக நடாத்தப்படுகின்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதென்பது தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பிற்கான ஆதரவை இழக்கச் செய்துவிடுமென்று நீங்கள் கருதவில்லையா?
கொள்கை நிலைப்பட்டு பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரி. அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்பதுதான் தமிழ் மக்களினுடைய அடிப்படைக் கோட்பாடு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இன்று நாங்கள் இந்திய அரசுடன் பேசும் போது கூட ’North East merger is the corner stone of any peace process ' என்பதை இந்தியப் பிரதமருக்கும் சொல்லியிருக்கிறோம். எனவே வட கிழக்கு இணைப்பு என்பதில் எவ்வித கேள்விக்கும் இடமில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. நாங்கள் போட்டியிடவில்லை. அரசாங்க சார்பானவர்கள் அதில் போட்டியிட்டு அங்கு பல்வேறு விடயங்கள் நடந்தேறிவிட்டன. நாளை வட மாகாணத் தேர்தல் நடைபெற்று நாங்கள் போட்டியிடாது விட்டால், அரசாங்கத்திற்குச் சார்பானவர்கள் அதனைத் தமது கையிலெடுப்பார்கள். தாம் விரும்பிய சகலதையும் செய்வார்கள். அவ்வாறு நிகழ்கையில் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்ட நிலைக்கு நாங்கள் இட்டுச் செல்லப்படுவோம்.
மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்கள் அதிகரிக்கும். மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் முன்பிருந்தவை அல்ல. பிரச்சினைகள் இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆகவே நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல அவற்றை ஒரு முடிவுக்கு, கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் சில அதிகாரங்கள் எமது கைகளுக்குத் தேவை. அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் பங்கெடுப்பது அவசியமென்று கருதுகின்றேன். இதன் மூலம் வட கிழக்கு பிரிப்பதை ஏற்றுக் கொள்கின்றோம் என யாரும் வாதிடக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் கொள்கையைக் கைவிட்டு விட்டோம் என்று அர்த்தமில்லை. எந்தவொரு தீர்வும் வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வாக அமையவேண்டும். கிழக்கு மாகாணத்தில் 37 விழுக்காடு முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். வட கிழக்கு இணைப்பு விடயத்தில் அவர்களது பங்களிப்பு பாரிய அளவில் தேவை. எனவே முஸ்லிம் தரப்புடன் நாம் பேசி ஒரு முடிவுக்கு, இணக்கப்பாட்டுக்கு வருவோமாயின் வட கிழக்கு இணைவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.
இலங்கைத் தீவினுடைய இன்றைய அரசியல் யதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டும், அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டினைக் கருத்தில் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதியதானதொரு மூலோபாய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதற்கான புதிய மூலோபாயத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு வகுத்துள்ளது?
நீங்கள் கூறிய விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இன்னமும் விவாதத்திற்குரிய விடயமாகத்தான் உள்ளது. முழு இலங்கையையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல். எமது நிகழ்ச்சிநிரல் எவ்வாறிருக்க வேண்டுமென்ற கேள்வி இருக்கின்றது. அரசாங்கம் உலகத்தை ஏமாற்றுவதற்குரிய ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தி வந்தது. இப்போது அதுவும் இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் பேச்சுவார்த்தை அற்றுப்போயுள்ள நிலையில் அடுத்தது என்ன? நாம் எதை நோக்கி எப்படிப் போகப் போகின்றோம்.? அதற்கான வழிவகைகள் என்ன? மூலோபாயம் என்ன? போன்ற பல்வேறு விவகாரங்கள பற்றி நாம் ஆலோசிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
நான் நோர்வேக்கு வந்தபோது கூட, பல கல்வியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்குரிய காத்திரமான கலந்துரையாடல்களைத் தனக்குள்ளும் மக்கள் மத்தியிலும் நடாத்த வேண்டும். புலம்பெயர் மக்கள் மத்தியிலிருந்தும் அதற்கான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். இவற்றினுடைய நடைமுறைச் சாத்தியமான சரியான தொகுப்பாகத்தான் நீங்கள் கூறுகின்ற மூலோபாய நடவடிக்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
ஆனால் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அவ்வாறான நிலை இல்லை. எமக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாத சூழலில் நாம் சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் செல்லவேண்டியுள்ளது.
இது விடயம் தொடர்பாக திரு.சம்பந்தன் மற்றும் த.தே.கூ நாடாளுமன்றக் குழுவிற்குள்ளும் பேசப்பட்டிருக்கின்றது. ஐந்து கட்சிக் கூட்டமைப்பில் இது விவகாரம் வலுவாகப் கலந்துரையாடப்பட வேண்டுமென்பதைப் பல தடவைகள் நானும் வலியுறுத்தியிருக்கின்றேன்.
அந்த மூலோபாயம் என்பது தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வினை அடையும் நகர்வில் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படப் போகின்றது? புலம்பெயர் தமிழ்மக்கள் எப்படிச் செயற்பட வேண்டும்? அனைத்துலக சமூகத்தினை எவ்வாறு அணுகப் போகின்றோம்? எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை எவ்வாறு கொண்டுவரப் போகின்றோம்? இதில் நேரக்கூடிய தவறுகளுக்கான மாற்று நடவடிக்கைகள் என்ன? போன்றவற்றை உள்ளடக்கியதாக மூலோபாயங்கள் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் அது ஒரு கலந்துரையாடல் நிலையில்தான் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஜனநாயகக் குறைபாடு நிலவுவதான குற்றச்சாட்டு சில மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது. முடிவுகளை எடுக்கும் போது ஏனைய உறுப்பினர்களுடன் உரிய முறையில் கலந்துரையாடுவதில்லை. ஒரே குரலில் பேசுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளின் கூட்டாக இருக்கின்றது. அந்தக்கூட்டு என்பது மிகத் தளர்வானதொரு கூட்டணி (It’s a very loose alliance). அது இப்பொழுது ஒரு கட்சியாகச் செயற்படவில்லை. ஒரு கூட்டாகத்தான் இன்னமும் இருக்கின்றது. முன்பு தமிழரசுக் கட்சி, கொங்கிரஸ் கட்சி போன்றன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவானது. பிற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணியே ஒரு கட்சியாகப் பரிணமித்தது. அந்நிலையில் தமிழரசுக் கட்சி, கொங்கிரசுக்கான செயற்பாடுகள் இல்லாமல் போயின.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு கட்சியாகப் பரிணமிக்க வேண்டும். ஒரு கட்சியாக அதற்குரிய கட்டமைப்பு (Structure) முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கானதொரு மத்தியகுழு, செயற்குழு, தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்டச் செயற்குழு போன்ற கட்டமைப்பு உருவாக்கம் பெறவேண்டும். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் த.தே.கூ ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாக, இயக்கமாக மாற்றப்பட வேண்டும். என்போன்றவர்களால் இதன் முக்கியத்துவம் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சி இதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்சியாகப் பரிணமிப்பதை அவர்கள் விரும்பவில்லை.
இது பெரிய பலவீனமான நிலையாகும். தனித்தனிக் கட்சியாக இயங்குகின்ற நிலையில், கூட்டமைப்பிற்குள் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். தத்தமது கட்சியின் வளர்சியைக் கருத்தில் கொண்டு, இத்தகு குறைபாடுகள் தான் முன்னிலைப்படுத்தப்படும். இந்நிலை தொடருமானால் கூட்டமைப்பாக இயங்குவதில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
இன்றைய காலகட்டம் என்பது வெறுமனே ஒரு பாராளுமன்ற அரசியலுக்கானதொரு காலகட்டம் இல்லை. பாராளுமன்ற அரசியல், தேர்தல் அரசியலென்பது அந்தந்தக் காலகட்டங்களை எமது தேவைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்துதல் என்ற மூலோபாயமே தவிர, அதுவே தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையாது. இப்புறநிலையில் ஜனநாயகம் தழுவிய காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, மக்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், இலங்கை அரசாங்கத்துடனும் அனைத்துலக சமூகத்துடன் ஒருமித்த குரலில் பேசுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியாகப் பரிணமிக்க வேண்டியது அவசியானதாகும்.
அவ்வாறு தோற்றம் பெறுவதன் ஊடாகத்தான் எமக்கான கலந்துரையாடல்கள், வடிவங்கள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான களங்கள் கிடைக்கும். தற்போதைய சூழலில் பாராளுமன்றத்குழுவில் சில கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றது என்பதைத் தவிர, முக்கியமான முடிவுகள் ஓரிருவரால் எடுக்கப்படுகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்தும், புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களால் மிகக்கடுமையான விமர்சனங்கள் த.தே.கூட்டமைப்பினை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைமையில் யாழில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் குறியீடாகத் தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்ற சிங்கக் கொடியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா. சம்பந்தன் அவர்கள் கையிலேந்தியமை பெரும் சர்ச்சைக்குரியதாகியுள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துகளும் முன்னுக்குப்பின் முரணானதாக வெளிவந்ததோடு, அதனைத் தான் தெரிந்தே செய்ததாகவும் சம்பந்தன் தரப்பில் தெரிவிக்கபபட்டது. இந்நிலைப்பாடானது யாருக்கும் பொறுப்புக் கூறத் தேவையில்லை என்ற தொனியில் கூட்டமைப்பு செயற்படுவதான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு விவகாரத்தில் யாருடைய குரல் எதிரொலிக்கப்போகின்றது என்ற கேள்விகளையும் எழுப்புகின்றது.
நீங்கள் சொல்வது ஒரு நியாயமான விடயம். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள், நாடாளுமன்றத் குழுவிற்குள் பேசப்பட்டது. திரு.சம்பந்தனுடன் ஓரிருவரைத் தவிர ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அது தவறென்று சுட்டிக்காட்டியிருந்தோம். மே நாள் நிகழ்விற்கும் அந்தக் கொடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதைத்தவிர திரு.சம்பந்தன் அவர்கள் அக்கொடியினைத் தூக்கியிருக்கத் தேவையில்லை என்பதும் அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ் மக்களின் உடனடி விமர்சனங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் திரு.மாவை சேனாதிராஜா கூட பகிரங்க மன்னிப்புக் கோரி அறிக்கையினை விடுத்திருந்தார். ஆனால் திரு.சம்பந்தன் அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. தான் செய்தது சரியானது, தவறாகப் பார்க்கத் தேவையில்லை என்ற சாரப்படக் கூறியிருந்தார்.
சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற உளப்பூர்வமாகத் தயாராக இருக்கின்றோம் என்ற சமிக்ஞையை அனுப்பும் நோக்கில் அவ்வாறு செய்ததாக அவர் சொல்கின்றார். ஆனால் இவ்வாறு செய்வதால் இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால், அது எப்பவோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். தந்தை செல்வாவினுடைய காலத்தில், அமிர்தலிங்கம் காலத்தில், அல்லது முப்பதாண்டுகள் போர் நடைபெற்ற பிரபாகரன் காலத்தில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினை கொடியை உயர்த்தி ஒரு சமிக்ஞையைக் காட்டுவதனூடாக, சிங்கள மேலாதிக்கத்தினுடைய சிந்தனை மாறிவிடுமென்று கருதுவோமானால் நாம் தவறான ஒரு கணிப்பீட்டில் உள்ளோம் என்பதாகிவிடும். எனவே இது தவறென்பதை அவருக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அவர் விடாமலிருக்கக்கூடுமென நான் நம்புகின்றேன்.
இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமானதாகியுள்ளது. ஆனால் அனைத்துலக சமூகம் சிறிலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தான் அதீத முனைப்புக் கொண்டுள்ளது என்ற ஒரு கருத்து சில மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது. எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா போன்றன உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றனவா?
அனைத்துலக சமூகத்திற்கு அவர்களுடைய சொந்த நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சொந்த நலன்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் தனது அண்டை நாடான இலங்கையில் தனது பாதுகாப்பிற்குக் குந்தகமான எந்த நிகழ்வுகளும் நடந்துவிடக்கூடாது, தனது எதிரி நாடுகள் அங்கு தளம் அமைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது. இவற்றின் பாற்பட்டுத்தான் அவர்களுடைய செயற்பாடுகள் அமையும்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தமக்குச் சாதகமாக இருக்குமானால், குறிப்பாக இலங்கைத் தீவில் ஏனைய நாடுகளின், சக்திகளின் பிரசன்னத்தைத் தடுப்பதற்கு அரசியல் தீர்வு வழிவகுக்குமெனில் இந்தியா அவ்வாறானதொரு தீர்வினை வலியுறுத்தும். ஏனெனில் இனப்பிரச்சினையைச் சாட்டாகக் கொண்டு இலங்கைக்குள் வேறு நாடுகள் காலூன்றிவிடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதை இந்தியா விரும்புகின்றது. அந்தத் தீர்வு தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வா இல்லையா என்பது கேள்விக்குறி.
அதேபோல அமெரிக்காவும் கூட ஒரு தீர்வினை வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் தத்தமது நலன்கள் முதன்மையாக உள்ள போதும், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சீனா போன்ற நாடுகளின் ஊடுருவலைத் தடுக்க உதவுமென அவர்கள் நம்புகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் ஒரு தீர்வினை வலியுறுத்துகின்றார்கள் என்பது உண்மை.
வட கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய, (சில சமயங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளாக இருக்கலாம்) ஒரு தீர்வினைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். அனைத்துலக சமூகம் உண்மையாகவே ஒரு தீர்விற்காக அக்கறை கொள்வார்களா இல்லையா என்பதற்கு அப்பால், தீர்வு என்பது அவர்களினது நலன்கள் சார்ந்து நோக்கும் போது அவசியமெனக் கருதுவார்களாயின் தீர்வினை அவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் அந்தத் தீர்வு எம்மைத் திருப்திப்படுத்தக்கூடிய தீர்வாக அமைவதற்கு நாம் தான் முன்னின்று உழைக்க வேண்டும். எமக்கான தீர்வு தொடர்பாக அழுத்தம் திருத்தமாக முன்மொழிந்து அதற்கான ஆதரவினை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.