Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புலம்பெயர் சமூகம் தனியான அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது!

புலம்பெயர் சமூகம் தனியான அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது!
நேர்காணல்: ரூபன் சிவராஜா

 

நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம் மற்றும் நோர்வே தமிழர் கற்கை மையம் ஆகியனவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 'போர் முடிவடைந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னரான இலங்கைத் தீவு' என்ற தலைப்பில் மே 15ஆம் நாள் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. நாடாளுமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நோர்வேஜியர்கள், வெளிநாட்டுப் பின்னணியுடையோர், தமிழர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். நோர்வேயின் முன்ளாள் அனைத்துலக மேம்பாடு மற்றும் சூழலியல்துறை அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதுவராகக் கடமையாற்றியவருமான எரிக் சூல்ஹைம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை ஆற்றியிருந்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் நோர்வேயில் தங்கியிருந்தபோது, பொங்குதமிழுக்காக அவருடன் விரிவானதொரு நேர்காணலை மேற்கொண்டிருந்தோம்.

***

நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றிய உங்களது பார்வை என்ன?

இலங்கை அரசாங்கத்திற்கென ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது. எந்தவகையான கொள்கை அடிப்படையில் தனது நிகழ்ச்சிநிரலை அது முன்னெடுத்துச் செல்கின்றது என்பது தொடர்பாக நோர்வேயின் அரச தரப்பினருக்கும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோருக்கும், தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தவேண்டும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த அடிப்படையில் தமிழர் தாயகத்தில் இன்று நிலவுகின்ற உண்மையான நிலவரங்களை நோர்வேஜிய மற்றும் தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

அதேவேளை அங்கு உரையாற்றிய எரிக் சூல்ஹைம் அவர்களும் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும், சர்வதேச ரீதியாக எமக்கு எந்தவகையான ஆதரவுகள் இருக்கின்றன போன்ற பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார். ஆகவே அவற்றையும் நாம் கருத்திலெடுத்து எதிர்காலத்தில் எவ்வகையான கொள்கைகளை முன்வைத்து எமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், எவ்வாறு நாம் ஒரு தீர்வினை எட்ட முடியும் போன்ற விடயங்களுக்கு வழிகாட்டக்கூடிய கருத்தரங்காக அது அமைந்தது. இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான கருத்தரங்காகவே நான் அதனைக் கருதுகின்றேன்.

நோர்வே வருவதற்கு முன்னர் கூட நீங்கள் வன்னி மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களுக்குச் சென்று வந்ததாக அறிகின்றோம். போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழர் தாயகப்பகுதியின் இன்றைய நிலை என்ன?

இதை நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கென்று ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். நாம் எல்லோரும் முதலில் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சிநிரல் என்பது இன்று நேற்று ஆரம்பித்ததன்று. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிநிரல். அதன் அடிப்படையில் அந்த நிகழ்ச்சிநிரல் முன்னர் மறைமுகமாகவும் குறைந்த அளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்ந நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் தான் அம்பாறையில், திருகோணமலையில் சிங்களக் குடியேற்றம் கொண்டுவரப்பட்டது. பல்வேறுபட்ட சிங்கள மாவட்டங்கள் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. வடகிழக்கில் எமது குடிசன விகிதாசாரம் (Demographic Pattern) மாறுபடுத்தப்பட்டது.

புலம்பெயர் சமூகம் தனியான அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது!

அதனுடைய தொடர்ச்சியாக இன்று போர் முடிவடைந்ததற்குப் பிற்பாடு இவை மிக வேகமாகவும், மிக வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட மாகாணம் முழுவதும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிரந்தரமான இராணுவமுகாம்கள் பலநூறு இருக்கின்றன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவ முகாம்களுக்காக கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதைவிட தெருவுக்குத் தெரு வீதிக்கு வீதி புத்த கோயில்கள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே கலாச்சார ரீதியாகவும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். சிங்கள மக்கள் இல்லாத பகுதிகளில் புத்த கோயில்கள் வருவது என்பதும், அப் புத்தகோயில்கள் இராணுவத்தினால் நிறுவப்படுவது என்பதும் படிப்படியாக தமிழ்மக்களைப் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு உட்படுத்துகின்ற போக்காகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

இவை தவிர உதாரணமாகச் சொல்வதானால், போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கின் 24 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டிருக்கக்கூடிய பகுதிகளில் 41 000 இற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை. அவர்கள் மீள் குடியேறுவதற்குரிய புறநிலைகள் தோற்றுவிக்கப்படவில்லை. அந்த மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதேபோன்று முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, திருகோணமலையில் சம்பூர் போன்ற பல பகுதிகளில் மக்கள் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படவில்லை.

மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில், உதாரணமாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய விளைநிலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலையுள்ளது. சிங்கள விவசாயிகளால் அவர்களது நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. சிங்கள விவசாயிகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்குகின்றது. அதேபோன்று அப்பகுதி மக்கள் மீன்பிடியில் ஈடுபடமுடியாத சூழலும் உள்ளது. சிங்கள மீனவர்கள் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். நாளாந்தம் இந்நெருக்கடிகள் மோசமடைந்து செல்கின்றன.

போருக்குப் பின்னர் வட மாகாணத்தில் எந்தவொரு மாவட்டமும் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்ற மூலோபாயத்துடன் தனது நிகழ்ச்சி நிரலை சிறிலங்கா அரசாங்கம் நகர்த்துகின்றது. சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ விஸ்தரிப்புகளுக்குள் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்களினது வீடுகளிலும் தங்கியுள்ளனர். ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வெளிகூட அங்கு இல்லை. எனவே இவ்வாறாக மிகவும் மோசமானதொரு நிலைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே இலங்கை அரசாங்கமானது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை விட, தமிழ் மக்களை எவ்வாறு முழுமையாகத் தமது பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு உட்படுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கலாம் என்ற போக்கில் மிகத் துரிதமாகச் செயற்படுகின்றது.

நீங்கள் கூறுகின்றவற்றை வைத்து நோக்கும் போது இது நீண்டகால அடிப்படையில் மட்டுமல்ல, குறுகிய கால அடிப்படையில்கூட தமிழ் மக்களின் இருப்பினை அச்சத்திற்கு உள்ளாக்கக்கூடியது. இதனைத் தடுப்பதற்குரிய மூலோபாயம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் உள்ளதா?

இதனைச் சர்வதேச நாடுகளுக்கு, குறிப்பாக இநதியா மற்றும் அமெரிக்காவிற்குத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். இந்த விடயங்கள் உடனடியாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றோம். அதேவேளை இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிராக ஒரு உண்ணாநிலைப் போராட்டத்தையும் நாம் ஆரம்பித்தோம். ஆனால் அது தொடர்ந்து நடைபெறவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களை அணிதிரட்டிய போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அவ்வாறான போராட்டங்களால் அவை நிறுத்தப்படுமா என்ற கேள்வி இருக்கலாம். ஆனாலும் கூட இலங்கை அரசாங்கத்திற்கு சில நெருக்குவாரங்களை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனத்திலெடுக்கப்படவேண்டும், இராணுவ ஆக்கிரமிப்பு, மக்களின் மீள் குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து அந்தந்த நாடுகளின் அரச பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்படவேண்டும். இவற்றைச் சரிசெய்வதற்கான முன்முயற்சிகளும் முன்னுரிமையும் அவசியமென்று கருதுகின்றேன்.

இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தான் போராட்டங்களை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகியிருக்கின்றது. போராட்டங்களுக்கு இராணுவம் இடம் அளிக்காத சூழல்தான் நிலவுகின்றது.

அனைத்துலக நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழ் மக்கள் இதில் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அந்தந்த நாடுகளுக்கு இவற்றை எடுத்துரைத்து, இவை நிறுத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் மீண்டும் பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து கூறுங்கள்

2011 தை மாதம் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் முதற்கட்டமாக ஒரு ஆண்டு நடைபெற்று, 2012 தை முடிவுக்கு வந்தது. இடையில் சில காலங்கள் பேச்சுக்கள் நடைபெறாமலும் இருந்தது. ஏறத்தாழ 14-15 தடவைகள் பேசியிருக்கின்றோம். இந்தப்பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட போது 'முழுமையான தீர்வுத்திட்டம்' (Comprehensive  Proposal) ஒன்றினை அரசாங்கத்திற்குக் கொடுத்திருந்தோம்.

அந்தத் தீர்வுத்திட்டத்தை வெளிப்படையாக முழுமையாக நாங்கள் வெளியிடவில்லை. சிங்களக் கடும்போக்காளர்களால் அது உடனடியாகச் சீர்குலைக்கப்படும், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிடும், சற்றுக் காலம் தாழ்த்தி வெளியிடலாம் என்று சொல்லப்பட்ட அடிப்படையில் நாங்கள் அதனை வெளியிடவில்லை. ஆனால் அதில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. வடகிழக்கு இணைப்பு, நிலம், காவல்துறை, நிதி சார்ந்த முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கிய அதிகாரப்பகிர்வு பற்றி அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அவை தவிர கல்வி, அபிவிருத்தி உட்பட்ட அனைத்து விவகாரங்களிலும் எமக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் வெளிவிவகாம், பாதுகாப்பு உட்பட்ட விவகாரங்களைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் எமது தீர்வுத்திட்டத்தினை முன்வைத்திருந்தோம்.

இலங்கை அரசாங்கம் இத்தீர்வுத்திட்டம் தொடர்பாக சரியான முறையில் எம்முடன் பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை. அது தொடர்பான அவர்களது கருத்துகளும் எமக்குத் தெரிவிக்கப்படவில்லை. அரசாங்கம் அதற்கான பதிலை வழங்குமென எதிர்பார்த்து 5 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் தீர்வுத்திட்டம் தொடர்பாக எதையும் சொல்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.

அடுத்த பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு முன்னர், தீர்வுத்திட்டம் தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமெனக்கூறி கடந்த ஓகஸ்ட் மாதம் பேச்சுக்களை நிறுத்தும் முடிவினை எடுத்தபோது, மகிந்த ராஜபக்ச திரு.சம்பந்தனை அழைத்துப் பேசினார். அதன் பிரகாரம் பேச்சுவார்த்தை மேசையில் பல தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. 1995, 1997 மற்றும் 2000இல் சந்திரிகா பண்டாரநாயக்கா முன்வைத்த தீர்வுத்திட்டம், அதற்கு முன்னதாக மங்கள முனசிங்க தெரிவுக்குழு முன்வைத்த தீர்வுத்திட்டம், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வினைக் காணவேண்டுமென்ற அடிப்படையில் இத்தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கம் எந்தவொரு தீர்வுத்திட்டத்தினையும் முன்வைக்கப்போவதில்லை என்று கூறிய அடிப்படையில் தான் இத்தீர்வுத்திட்டங்கள் மேசைக்குக் கொண்டுவரப்பட்டன.

இவற்றின் தொடர்ச்சியாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகத் தீர்வினைக் காணவிருப்பதாகவும், அத்தெரிவுக்குழுவிற்கு எம்மைச் செல்லுமாறும் ஜனாதிபதி எம்மைக் கேட்டுக்கொண்ட போது நாம் அதனை மறுதலித்தோம். முதலில் இருதரப்பிற்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு எட்டப்படுமாயின், அந்தத் தீர்வினைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைத்து ஒப்புதலைப் பெற முயற்சிக்கலாம். அவ்வாறில்லாது நாம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் செல்வோமேயானால், அது பல கட்சிகளைக் கொண்ட ஒரு தளம், அங்கு விமல் வீரவன்ச முதல் சம்பிக்க ரணவக்க வரையான பல கடும்போக்காளர்கள் உள்ளனர். அவ்வாறானதொரு தளத்தில் தீர்வை எட்டுவது என்பது மிகமிகக் கடுமையானதாகும். ஆகவே அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதைக் கூறியிருந்தோம். அதனையும் ஏற்றுக்கொண்டு இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென்று கூறியிருந்தார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிற்பாடு பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது நாங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் செல்லவேண்டுமென்ற நிர்ப்பந்தம் பல்வேறு தரப்புகளாலும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவிடயம் தொடர்பான திட்டவட்டமான முடிவினைக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை தொடர்பாக கொழும்பிலுள்ள சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறி வருகின்றோம். அதேவேளை அப்பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தால் சர்வதேச சமூகம் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் என்பதனை அறிய ஆவலாக உள்ளோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு ஊடாகத் தீர்வு வருகின்றதோ இல்லையோ, நாங்கள் அதற்குள் செல்வதன் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தத்தினை அதிகரிக்கச் செய்ய முடியுமென்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. அவ்வாறு செல்வதன் மூலம் இந்த அரசாங்கம் எந்தவிதத் தீர்வினையும் முன்வைக்காது என்பதை வெளிக்கொணர முடியும்.

ஏற்கனவே ஜெனீவாத் தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. பேச்சுவார்த்தைகளைச் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. எனவே இந்த விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்குச் சர்வதேச ரீதியில் அடுத்தங்களை ஏற்படுத்தக்கூடியவையாகச் சர்வதேசத்தால் பார்க்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்த்தின் இந்தப் போக்கினைச் அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியா அமெரிக்கா போன்ற சக்திகள் புரிந்து கொண்டுள்ளனவா?

நிச்சயமாக. கொழும்பிலிருக்கக்கூடிய அனைத்துலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் தொடர்பான முழுவிபரங்களையும் கடந்த காலத்தில் விளக்கிக் கூறியிருக்கின்றோம். ஆகவே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம், அதன் தன்மைகள் பற்றி அனைத்துலக நாடுகள் புரிந்திருக்கின்றன. இருந்தபோதும் இன்று சிறிலங்கா அரசாங்கமானது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, நாம் எமது கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வருவதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்' என்று தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது. இப்புறநிலை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் என்ன என்ற கேள்வியினை அனைத்துலக சமூகத்தின் மத்தியில் எழுப்பியுள்ளதை எம்மால் அறியமுடிகின்றது. எனவே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இந்தியா, அமெரிக்கா மற்றும் அனைத்துலக சமூகத்தின் ஏனைய அமைப்புகளுடன் கலந்து பேசிய பிற்பாடுதான் இதுதொடர்பான முடிவுகளை எடுக்கமுடியும்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச்சமூகத்தின் குரலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கின்ற முக்கியத்துவம் என்ன? புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கும் தாயகச் சமூகத்திற்குமிடையிலான இணைந்த செயற்பாட்டிற்குரிய தொடர்பாடலை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது, எமது தமிழ் மக்கட்தொகையில் கணிசமானதொரு பங்காகும். எனவே அவர்களைப் புறமொதுக்கிவிட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பது முடியாத காரியம். கடந்தகாலத்தில், குறிப்பாகப் போராட்ட காலத்தில் புலம்பெயர் தமிழ் மக்களினுடைய பங்களிப்பு காத்திரமாக இருந்தது. போராட்டத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டுசென்றது என்பது பலரும் அறிந்ததே.

இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய பங்களிப்பு இன்னுமொருபடி மேலாக, இனப்பிரச்சினைக்குத் தீரவை எட்டுவதற்கு அனைத்துலக சமூகம் ஆற்றவேண்டிய பணிகளை புலம்பெயர் சமூகம் தான் முன்னகர்த்திச் செல்லவேண்டும். அந்தந்த நாடுகளிலுள்ள அரசுகளை எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் பால் ஈடுபடுத்துவதற்குரிய கடினமான நீண்ட பாதையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் சமூகத்திற்கு உள்ளது.

கடந்த காலத்தில் ஜெனீவா தீர்மானம் போன்ற அழுத்தங்கள் கொண்டுவரப்படுவதற்குரிய காத்திரமான பணிகளை புலம்பெயர் தமிழ் மக்கள் செய்துள்ளனர். அதேபோன்று இனப்பிரச்சினைக்குரிய தீரவு விடயத்தில் கருத்துப்பரப்புரை சார்ந்து அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. வடகிழக்கில் செய்யவேண்டிய அபிவிருத்திப்பணிகள், அதற்கான நிபுணத்துவ ஆலோசனைகள் என பல்வேறு பணிகள் ஆற்றவேண்டி உள்ளன. இப்புறநிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குமிடையில் பலமான, நெருக்கமான தொடர்புகள் அவசியம்.

ஒரு விடயத்தை இங்கு காத்திரமாகக் கூற விரும்புகின்றேன். வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வு எட்டப்பட வேண்டும். ஆகவே அதனை மறந்துவிட்டு புலம்பெயர் சமூகம் வேறு ஒரு மட்டத்திலிருந்து அரசியல் செய்வதென்பது அர்த்தமற்றது. அவர்களுடைய அரசியல் என்பது இலங்கையில் தமிழ் மக்களுக்குச் சரியானதொரு தீர்வைக் காணவும், தமிழ் மக்களினுடைய நிலம், மொழி, பண்பாடு காக்கப்படுவதற்குரிய வழிவகைகளைக் கண்டறிந்து அந்தத் தீர்வை நோக்கிச் செல்வதையும் அடிப்படையாகக்கொண்டதாக இருக்க வேண்டும். இவற்றை விட்டு வேறு நோக்கங்களை முன்னிறுத்துவோமாயின், இத்தனை காலமும் போராடிவந்த ஈழத்தமிழ் மக்களின் விடியலுக்கான பணியிலிருந்து விலத்திப் போகின்றவர்களாகத்தான் நாம் இருக்கமுடியும்.

இலங்கையில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ்க்கட்சிகள், இயக்கங்கள் இணைந்து, சரி பிழைகளுக்கு அப்பால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இயங்கி வருகின்றன.புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறுபட்ட குழுக்கள் இயங்குகின்றன. பல்வேறு இடங்களில் இக்குழுக்கள் தங்களை நோக்கிய ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று, தங்களை முதன்மைப்படுத்திய வகையில் செயற்படுவதான தோற்றம் தெரிகின்றது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ்மக்களை நோக்கிய செயற்பாடுகளாக அவை தென்படவில்லை. ஆகவே அப்படியான அணுகுமுறைகள், எண்ணங்களைக் கைவிட வேண்டும்,

உண்மையாக தமிழ் மக்களின் மண்ணை மீட்க வேண்டுமென்ற சிந்தனை புலம்பெயர் தமிழ்மக்களிடம் இருக்குமாயின், தமக்குள் உள்ள கோஷ்டிப் பூசல்களை கைவிட்டு ஒருமுகமாகச் செயற்படுகின்ற நிலைக்கு வரவேண்டும். அதற்காக ஒரு பரந்துபட்ட ஒரு அமைப்பை உருவாக்கினால் கூட அது சிறப்பானதொரு முன்முயற்சியாக அமையுமென்று நான் கருதுகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் புலம்பெயர் தமிழ் மக்களை ஓரம்கட்டி, இலங்கைத் தமிழ்மக்களுக்கான தீர்வைக் காணமுடியாது. எனவே புலம்பெயர் தமிழ் மக்களை உள்ளடக்கியதாகவே எமது அனைத்துப் போராட்ட வழிமுறைகளும் அமையுமென்று நான் கருதுகின்றேன்.

5/28/2012 4:47:10 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

We agree with you on everything.but the past history shows sinhalese will not give anything to tamils.they will go on organising talks,or even sign agreements,thats all,nothingt will happen on theground,instead theywill go on colonising and carry on their genoside gradually.so only solution is Tamil Eelam,thats our country,they should give it.you may not be able to do it from inside as they may kill you.so its the organizations from outside will have to dom this.you give the moral support .
S.Thiagarajah, Toronto
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்