சர்வே தர்மா
நோர்வேயின் அனைத்துலக மேம்பாடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்துறை அமைச்சராக இருந்த எரிக் சூல்கெய்ம் (Eric Solheim) அமைச்சர் பதவியில் இருந்து 23.03.2012 வெள்ளிக்கிழமையன்று அவரது விருப்பத்துக்கு மாறாக விலகிக் கொண்டார்.
எரிக் சூல்கெய்ம் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது? அல்லது இன்னும் பச்சையாகச் சொல்லப் போனால் அவர் ஏன் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பதனை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலகப் பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலருக்கும் இருக்கக்கூடும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் நோர்வேயின் ஈடுபாடும் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சார்பில் சிறப்பு சமாதானத் தூதராக அவர் வகித்த பாத்திரமும் காரணமாக எரிக் சூல்கெய்ம் தமிழுலகம் நன்கு அறிந்த ஒரு மனிதராகி விட்டார். இலங்கைத்தீவில் ஒரு காலகட்டத்தில் சிங்கள தேசத்தால் பெரிதும் வெறுக்கபட்ட மனிதாகவும் தமிழர் தேசத்தால் விரும்பப்பட்ட ஒரு மனிதராகவும் அவர் இருந்தார். ஆனால் மே 2009 க்கு பின்னர் தமிழர் பலரதும் அதிருப்திக்குரிய மனிதராகவும் அவர் ஆகிவிட்டார். இருந்தபோதும் ஈழத்தில் வாழும் தமிழர் மீது எரிக் சூல்கெய்ம் ஒரு நட்பு கலந்த அக்கறையினை தற்போதும் கொண்டிருக்கிறார் என்பதனை அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
எரிக் சூல்கெய்ம் நோர்வேயின் அமைச்சரவையில் இருந்து ஏன் வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது? ஒரு அமைச்சராக எரிக் சூல்கெய்ம் தோல்வியடைந்தாரா? அல்லது ஒரு கட்சி அரசியல்வாதியாகத் தோல்வியடைந்தாரா? நோர்வேயின் தோல்வியில் முடிவடைந்த இலங்கையின் சமாதான முயற்சிக்கும் எரிக் சூல்கெய்ம் பதவி விலகவேண்டி வந்தமைக்கும் தொடர்புகள் ஏதும் உண்டா?
இக் கட்டுரை நோர்வேக்கு வெளியே புலம்பெயர்ந்தும் ஈழத் தாயகம், தமிழகம் மற்றும் உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழ்மக்களைக் கவனத்திற் கொண்டுதான் எழுதப்படுகிறது. நோர்வேயில் வாழும் தமிழ் மக்களுக்கும் நோர்வேயின் அரசியலை அறிந்தவர்களுக்கும் இக் கட்டுரை புதிய தகவல் எதனையும் தரமாட்டாது. இதனை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டுகிறேன்.
எரிக் சூல்கெய்ம் ஒரு அமைச்சராகத் தோல்வியடையவில்லை. நோர்வேயின் அமைச்சர்களுள் திறமையாகச் செயற்பட்டு வந்த ஒருவராகவே சூல்கெய்ம் கணிக்கப்பட்டார். சிறிய நாடான நோர்வேயினை அனைத்துலக அரங்கில் சுற்றுப்புறச் சூழல் மற்றும் மேம்பாட்டுத் தளங்களில் ஒரு முக்கிய பங்காளராக வெற்றிகரமாக அவர் நிலைநிறுத்தி வந்ததாக பலரும் அவரைப் பாராட்டவே செய்தார்கள்.
நோர்வேயின் தோல்வியடைந்த சிறிலங்கா சமாதான முயற்சிக்கும் இவரது பதவி விலகலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நோர்வேயின் சமாதான முயற்சி அனுபவங்களில் ஒன்றாக இது எடுத்துக் கொள்ளப்படுகிறது, அவ்வளவுதான். சமாதான முயற்சியின் தோல்வியின் பின்னரும் எரிக் சூல்கெய்ம் ஒரு வெற்றிகரமான அமைச்சராகவே நோர்வேயில் பார்க்கப்பட்டார். உண்மையில் சமாதான முயற்சி தொடர்பான ஒரு மதிப்பீட்டினைச் செய்து இதன் தோல்விக்கு விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையின் அரசியற்சூழலைக் குற்றம் சாட்டி, தோல்விக்கான பொறுப்பில் தனது பாத்திரத்தை நோர்வே கழுவிக் கொண்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். சமாதான முயற்சியின் தோல்வியில் தனது பாத்திரம் குறித்த சரியான ஒரு சுயவிமர்சனத்தை நோர்வே மேற்கொள்ளவில்லை.
சூல்கெய்மின் தோல்வி ஒரு கட்சி அரசியல்வாதியின் தோல்வியாகத்தான் பார்க்கப்படவேண்டும். இவர் சார்ந்திருந்த சோசலிச இடதுசாரிக்கட்சியின் (SV) புதிய தலைவராக 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் திகதி தெரிவு செய்யப்பட்ட Audun Lysbakken, எரிக் சூல்கெய்ம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என முடிவு செய்து விட்டார். இதனால்தான் எரிக் சூல்கெய்ம் தனது அமைச்சர் பதவியை இழக்க வேண்டி ஏற்பட்டது. இந்த சோசலிச இடதுசாரிக் கட்சியில் 1987 ஆம் ஆண்டில் இருந்து 1997 ஆம் ஆண்டுவரை தலைவராக இருந்து கட்சியினை வளர்ப்பதற்கு எரிக் சூல்கெய்ம் முக்கிய பங்காற்றியிருந்தார். 1989 முதல் 2001ஆம் ஆண்டுவரை சோசலிச இடதுசாரிகட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.

சோசலிச இடதுசாரிக் கட்சியின் புதிய தலைவர் 20.03.2012 அன்று எரிக் சூல்கெய்ம் உடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இச் சந்திப்பில் 23.03.2012 அன்று வெள்ளிக்கிழமையுடன் எரிக் சூல்கெய்மை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். சூல்கெய்ம் எதிர்பாராத வகையில் எடுக்கப்பட்ட இம் முடிவு உண்மையில் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். திடீரென குறுகிய காலம் கொடுத்து எடுக்கப்பட்ட இம்முடிவை ஜெயலலிதா பாணி முடிவு என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டுக் கொண்டார்.
இந்த நிலைமை ஏன் தோற்றம் பெற்றது என்பதனை நோக்க நாம் சற்று நோர்வேயின் அரசியற் சூழலையும் அதில் சோசலிச இடதுசாரிக் கட்சியின் பாத்திரம் பற்றியும் பார்க்க வேண்டும்.
நோர்வேயின் பாராளுமன்றத்தில் மொத்தம் 169 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 150 பேர் மாகாணங்களில் இருந்து நேரடியான வாக்கெடுப்பின் ஊடாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மிகுதி 19 பேர் தேசிய அளவில் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேசிய மட்டத்து வாக்குகளின் ஊடாக உறுப்பினரைப் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 4 வீதமான வாக்குகளை ஒரு கட்சி தேசிய மட்டத்தில் பெற்றிருக்க வேண்டும்.
நோர்வேயின் தற்போதய அரசாங்கம் தொழில் கட்சி (AP) தலைமையில் எரிக் சூல்கெய்ம் சார்ந்திருந்த சோசலிச இடதுசாரிக் கட்சி (SV), விவசாயிகள் கட்சி எனக் கருதப்படும் மத்திய கட்சி(SP) ஆகியன இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இவ் அரசாங்கம் தன்னை சிவப்பு-பச்சை அரசாங்கம் என அழைத்துக் கொள்கிறது. 2005 ஆம் ஆண்டில் முதலில் பதவிக்கு வந்த இந்தக் கூட்டரசாங்கம் 2009 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றிபெற்று தற்போது இரண்டாவது தடவையும் ஆட்சியில் இருக்கிறது.
தற்போதய பாராளுமன்றத்தில் தொழில் கட்சிக்கு 64 ஆசனங்களும் சோசலிச இடதுசாரிக்கட்சி மற்றும் மத்தியகட்சி ஆகியவற்றுக்கு தலா 11 ஆசனங்களுமாக 86 ஆசனங்கள் அரசாங்கக் கட்சிகளிடம் இருக்கின்றன. 169 ஆசனங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 85 ஆசனங்களை விடக்கூடுதலாக ஆளும் கட்சிகளிடம் இருப்பதால் அரசாங்கம் பெரும்பான்மை அரசாங்கமாகவும் உள்ளது. நோர்வேயின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சிறுபான்மை அரசாங்கங்களும் அமைய முடியும்.
சோசலிச இடதுசாரிக் கட்சி நோர்வேயில் ஒரு பெரிய கட்சி அல்ல. சராசரியாக 6 - 9 வீதமான வாக்காளர்களைக் கொண்ட கட்சியாக இது இருந்து வந்திருக்கிறது. குழந்கைளையும் இளையவர்களையும் முன்னிலைப்படுத்தி கட்சி எடுத்த நிலைப்பாடு பயனளிக்க 2001, 2003 தேர்தல்களில் முறையே 12.5, 13 வீதமான வாக்குக்களை எடுத்து முக்கியமான கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. வரலாற்று நோக்கில் பார்த்தால் தனது இடது அரசியல் மூலம்தான் சோசலிச இடதுசாரிக் கட்சி தனக்கென வாக்காளர்களைத் தேடிக் கொண்டது. இவ் இடது அரசியலில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை முன்வைத்து செயற்பட்டு வந்தது.
எரிக் சூல்கெய்ம் தலைவராக இருந்த காலகட்டத்தில் இக்கட்சி கணிசமான வளர்ச்சியும் பெற்றுக் கொண்டது. இருந்துபோதும் எரிக் சூல்கெய்ம் பிற்காலத்தில் கட்சிக்குள் உள்ள வலதுசாரிச் சிந்தனை கொண்டவராக நோக்கப்பட்டதால் அவரது செல்வாக்கில் கட்சிக்குள் வீழ்ச்சி ஏற்பட்டது. இவருக்குப் பின்னர் கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட Kristin Halvorsen எனும் அம்மையார் கட்சியின் வளர்ச்சியில் காத்திரமான பாத்திரம் ஆற்றி செல்வாக்குடன் இருந்தமையும் அவர் சூல்கெய்ம் மீது நன்மதிப்பு கொண்டிருந்தமையும்தான் சூல்கெய்ம் நோர்வேயின் அமைச்சராக வழிகோலியது.
2005 ஆம் ஆண்டில் முதற்தடவையாகவும் 2009 ஆம் ஆண்டு இரண்டாம் தடவையாகவும் ஆளும் கட்சி கூட்டணியில் ஒன்றாக இயங்கத் தொடங்கிய சோசலிச இடதுசாரிக் கட்சி, அரசாங்கக்கட்சியாக ஆகிய பின்னர் மெல்ல மெல்ல தனது வாக்காளர்களை இழக்கத் தொடங்கியது. சோசலிச இடதுசாரிக் கட்சியின் வாக்குகளை பறித்தெடுக்கும் பிரதான போட்டியாளரான தொழிற் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து இவர்கள் அமைத்த அரசாங்கம் சோலிச இடதுசாரிக் கட்சிக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுத்த போதும், வாக்காளர் பலத்தை சிதைக்கத் தொடங்கி விட்டது. மேலும் அரசாங்கத்தின் சிறுபான்மை அங்கமாக இருக்கும்போது கட்சியின் கொள்கைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் இடையில் முறுகல் நிலைகள் ஏற்பட்டபோது கட்சியின் கொள்கைகளில் சமரசங்கள் செய்தவாறுதான் அரசாங்கத்தில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் நடைமுறையில் தொழிற்கட்சிக்கும் சோசலிச இடதுசாரிக் கட்சிக்கும் இடையே பெரிய வேறுபாடுகளை வாக்காளர்களால் உணர முடியவில்லை. இது தொழிற்கட்சிக்கு சாதகமான நிலையாக அமைந்து விட்டது. சோசலிச இடதுசாரிக் கட்சியின் வாக்காளர்களில் ஒரு பகுதி தொழிற்கட்சிக்கு வாக்களிப்பவர்களாக மாறத் தொடங்கினர். புதிய வாக்காளர்களையும் தமது கொள்கை சார்ந்து இவர்களால் பெரிய அளவில் கவரவும் முடியவில்லை.
இதன் விளைவு 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 4 வீதத்துக்கும் சற்றுக் கூடுதலான வாக்குகளையே சோசலிச இடதுசாரிக் கட்சியால் பெற முடிந்தது. இச் சூழலில் 1997 ஆம் ஆண்டில் இருந்து கட்சித் தலைவியாக இருந்து வந்த Kristin Halvorsen தான் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் ஒரு புதிய தலைவரை தெரிவு செய்யுமாறும் தனது கட்சியினரைக் கோரினார். இதன் அடிப்படையில் Audun Lysbakken புதிய தலைவராக மார்ச் மாதம் 10ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்ட்டார்.
நோர்வேயின் தற்போதய அமைச்சரவையில் பிரதம மந்திரி உட்பட 19 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் சோசலிச இடதுசாரிக் கட்சிக்கு 4 அமைச்சர் இடங்களும் மத்திய கட்சிக்கு 4 அமைச்சர் இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி உட்பட ஏனைய 11 அமைச்சர்களும் தொழில் கட்சியினைச் சார்ந்தவர்கள். சோசலிச இடதுசாரிக் கட்சியின் 4 அமைச்சர்களில் இருவர் ஆண்களாகவும் இருவர் பெண்களாகவும் இருப்பது என்பது கட்சியின் பாற்சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடு.
இந்த நான்கு அமைச்சர்களில் கல்வி அமைச்சராக கட்சித் தலைவி Kristin Halvorsen, சுற்றுச் சூழல்துறை மற்றும் அனைத்துலக மேம்பாட்டுத்துறை அமைச்சராக எரிக் சூல்கெய்ம், உயர் கல்வி மற்றும் ஆய்வுத்துறை அமைச்சராக Tora Aasland எனும் 69 வயது நிரம்பிய மூத்த அம்மையார், குழந்தைகள், சமத்துவ மற்றும் இணைத்தவாழ்வுத் துறை அமைச்சராக தற்போது புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள Audun Lysbakken ஆகியோர் இருந்தனர். இருந்த போதும் தனது அமைச்சில் இடம்பெற்ற நெறிமுறை தவறிய நிதி உதவி வழங்கல் தொடர்பான குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து Audun Lysbakken விலகிக் கொண்டார்.
கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட Audun Lysbakken தனது கட்சியின் சரிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பினைத் தனது கையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரைக் கட்சித் தலைவராகத் தெரிவுசெய்த கட்சி மாநாட்டில் கட்சியினை மீளக் கட்டியெழுப்புவது முக்கியமான ஒரு விடயமாகக் கொள்ளப்பட்டது. கட்சியினை மீளக் கட்டி எழுப்புதற்கு புதிய தலைமை வகுத்த திட்டங்களில் முக்கியமானது அமைச்சரவைக்குள் புதிய இரத்தத்தினைப் பாய்ச்சுவது. கட்சியின் கொள்கைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை, தமது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யக்கூடிய வகையில், கூடுதலான அளவு அசாங்கத்துக்குள் இருந்து போராடுவது என்றும் சோசலிச இடதுசாரிக் கட்சி முடிவெடுதிருக்கிறது.
இந்தப் பின்னணியில் இருந்து தான் எரிக் சூல்கெய்ம் தனது பதவியினை இழக்கவேண்டி வந்த சூழலையும் நாம் நோக்க வேண்டும்.
சோசலிச இடதுசாரிக் கட்சி அமைச்சரவைக்குள் புதிய இரத்தம் பாய்ச்சத் தீர்மானித்தவுடன் மூன்று புதிய அமைச்சர்களை நியமிக்கும் முடிவை எடுத்தது. Inga Marte Thorkildsen (35) என்ற பெண்மணி, Bård Vegar Solhjell (40), Heikki Holmås (39) ஆகியோர் அமைச்சர்களாகுவது எனத் தீர்மானிக்கப்பட்டனர். இம் மூவரும் 35-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்கள். இவர்கள் மூவரையும் அமைச்சரவைக்குள்குள் கொண்டுவருவதானால் Kristin Halvorsen தவிர்ந்த ஏனைய இருவரையும் (Lysbakken ஏற்கனவே பதவி விலகியிருந்தார்) அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும். இதனால் எரிக் சூல்கெய்ம் மற்றும் Tora Aasland ஆகியோர் தமது அமைச்சர் பதவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எரிக் சூல்கெய்ம் தான் அமைச்சரவையிலிருந்து தூக்கப்படுவேன் என்பதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கட்சியின் புதிய தலைவர் போட்டியின் போதும் எரிக் சூல்கையம், Lysbakken ஐ உறுதியாக ஆதரித்திருந்தார். சுற்றுப்புறச் சூழல், அனைத்துலக மேம்பாடு என்ற இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்த அவர், இரண்டில் ஒரு பதவியைத் தன்னிடமிருந்து மீளப் பெறுவார்கள் என்றே எதிர்பார்த்தார். அவ்வாறு முயற்சி எடுத்தாலும் இவ் இரண்டு துறைகளும் இணைந்து இருக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி வாதிட்டு இவற்றைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றே தனக்குள் நினைத்திருப்பார். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி புதிய கட்சித் தலைவர் தன்னோடு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தபோது இரண்டில் ஒரு துறைக்கு அமைச்சராக இருக்கும்படி தன்னைக் கோருவார் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால் முற்றிலும் எதிர்பாராத வகையில் கட்சியின் முடிவு இருந்ததாகவும் தனது அதிருப்தியை சூல்கெய்ம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமைச்சர் பதவியில் இருந்து விலகிய 23 ஆம் திகதியன்று எரிக் சூல்கெய்ம் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்தினார். இதில் தனது அதிருப்தியினை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். 'அப்பா, உன்னை அமைச்சர் பதவியில் இருந்து கலைத்து விட்டார்கள்' என்று தனது மகன் கூறியதாகவும் அவர் இம் மாநாட்டில் கூறினார். புதிய அமைச்சர்கள் அனுவபம் குறைந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். அனுபவம் பெரிதா அல்லது புதிய இரத்தம் பாய்ச்சுவது முக்கியமா என்பது அர்த்தமுள்ள ஒரு வாதம்தான் எனக் குறிப்பிட்ட அவர், அனுபவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நாடா அல்லது கட்சியா என்று வரும்போது நாட்டுக்குத்தான் தனது முக்கியத்துவம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக புதிய தலைவர் Lysbakken நாட்டை விட கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதனை வெளிப்படுத்தினார். நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் தன்னைப் போல அனுபவம் உள்ள சிறப்பாகச் செயற்பட்டு வந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியிருக்க மாட்டார்கள் என்பதே சூல்கெய்மின் கருத்தாக இருந்தது.
சோசலிச இடதுசாரிக் கட்சித் தலைவர் Lysbakken ஏன் மூன்று புதியவர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வந்தார்? இருவரை மட்டும் புதிதாகக் கொண்டு வந்து, திறமையாக இயங்குபவர் என்று கருதப்பட்ட எரிக் சூல்கெய்மை அமைச்சர்களில் ஒருவராக வைத்திருந்திருக்க முடியாதா? இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன.
ஏரிக் சூல்கெய்ம் கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உதவ மாட்டார் என்ற கருத்து புதிய தலைமைக்கு இருந்திருக்க வேண்டும். நோர்வே அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து வெளியிடும் அளவுக்கு இடதுசாரிப் போக்குக் கொண்ட புதிய தலைவர், வலதுசாரித் தன்மை கொண்டராகக் கருதப்பட்ட எரிக் சூல்கெய்மிடம் எதனையும் பெரிதாக எதிர்பார்த்திருக்க மாட்டார். மேலும் அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் தற்போது உள்ள ஆளும் கூட்டணி தோல்வியடையும் என்று கணிப்பு இருப்பதால், புதிய தலைமை 2017 இல் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெறுவதற்குத்தான் திட்டமிட்டுச் செயற்படுகிறது. இதனால் 2017 இல் எரிக் சூல்கெய்ம் கட்சிக்கு பெரிதும் தேவைப்படமாட்டார் என்ற கருத்தும் புதிய தலைமைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் அடுத்த மட்டத்தில் உள்ள வெவ்வேறு போக்குகள் கொண்ட மூன்று பேரையும் அமைச்சர்களாக்கியதன் ஊடாக கட்சிக்குள் இருக்கக்கூடிய முறுகல் நிலையைத் தவிர்த்து கட்சியின் செயற்திறனை அதிகரிக்க முடியும் எனவும் புதிய தலைமை திட்டமிட்டிருக்க வேண்டும். கட்சிக்குள் தனது பிடியினை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருந்த கட்சித் தலைவர் இவ் அதிரடி நடவடிக்கையின் ஊடாக அதனைச் செய்துள்ளதாகவும் கருதப்படுகிறது. மேலும் அரசாங்கத்துக்குள், அமைச்சரைக்குள் கட்சி சார்பான போராட்டங்களை நடாத்துவதற்கு கட்சியினை விட நாட்டை முதன்மைப்படுத்தும் போக்குடைய, சமரசம் செய்ய வலியுறுத்தக்கூடிய எரிக் சூல்கைம் தடையாக இருப்பார் என்றும் புதிய தலைவர் Lysbakken சிந்தித்திருப்பதற்கு வாய்ப்புக்குள் உண்டு.
நாட்டின் மீது எவ்வளவு விவுவாசம் இருந்தாலும் கட்சி என்ற குதிரை ஓடினால்தான் அரசியலில் உயிர்வாழ முடியும். இதனால் கட்சி அரசியலில் காத்திரமான பாத்திரத்தை தற்போதய சூழலில் வகிக்காதமையால் திறமையான ஒரு அமைச்சரின் சேவையினையும் கட்சி நிராகரித்திருக்கிறது. இது எரிக் சூல்கெய்ம்க்கு இழப்பா? சோசலிச இடதுசாரிக் கட்சிக்கு இழப்பா? நோர்வேக்கு இழப்பா? என்பதனை காலம்தான் கணிக்க வேண்டும்
எரிக் சூல்கெய்ம் தனக்கிருக்கும் தொடர்புகள் காரணமாக ஏதாவது செல்வாக்குள்ள புதிய வேலையினைப் பெற்றுக் கொள்வார் என்றே நம்பப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் தமிழர் தொடர்பாகவும் அக்கறை உள்ளவரான ஒருவர் அமைச்சராக இல்லாது போனமை காரணமாக நோர்வே அரசுடனான தமிழர் தரப்புத் தொடர்புகள் பாதிக்கப்படாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.
எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் தமிழர் பண்பின் அடிப்படையில் சூல்கெய்மை வாழ்த்தும் அதேவேளை ஈழத் தமிழர் தேசத்துக்கு நீதி கிடைக்க இவர் தன்னால் முடிந்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக் கட்டுரை கோருகிறது.