Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நான் விட்ட கண்ணீருக்கு என்ன நிவாரணம்?

நான் விட்ட கண்ணீருக்கு என்ன நிவாரணம்?
நேர்காணல்: அன்ரனி றோய்

 

முல்லைத்தீவுக் கடலோரத்தில் 44 வயதுடைய மேரியை 2012 ஜுலை மாதத்தில் ஒரு பின்னேரம் சந்தித்தேன். முல்லைத்தீவுக் கடலில் மீன்பிடி, முல்லைத்தீவு மீனவர்களின் நிலைமை போன்றவற்றைப் பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பக்கமாக வந்தார் மேரி. அந்த நண்பரே மேரியை அறிமுகப்படுத்தினார்.

மிகக் கலகலப்பாகப் பேசினார் மேரி. வாய் நிறைய வெற்றிலைச் சிவப்பு. வெற்றிலைச் சிவப்பை மீறி மேரியின் சிரிப்பு. ஆனால், அவர் சொன்ன விசயங்களைக் கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். மேரிக்கு வயது 44. சிறு வயதிலிருந்தே கடின உழைப்பாளி.  குடும்பம் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டது. அவருடைய மூன்று பிள்ளைகளும் (மூன்றும் பெண்கள்) சுனாமியில் கொல்லப்பட்டு விட்டனர். இந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கணவர் மனச் சிதைவுக்குள்ளாகி விட்டார். அதனால், ஒரு குழந்தையைப் போலக் கணவரைப் பராமரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. அப்படியே பராமரிக்கிறார் மேரி.

இப்போது மேரியும் அவருடைய கணவரும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றனர். மேரி, கடற்கரையில் மீன் தெரியும் தொழிலைச் செய்கிறார். இதுதான் அவருடைய தொழில். இருபத்தைஞ்சு வருசமாக இதையே செய்கிறார். இப்பொழுது குடும்பத்தின் தொழிலே, குடும்பத்தைக் காப்பாற்றுகின்ற வாழ்வாதாரமே இதுதான். முன்னர் கணவரும் உழைத்தார்.  அதனால் குடும்பத்தின் பொருளாதாரமும் வாழ்க்கையும் ஓரளவுக்குச் சுமாராக இருந்தது. இன்று அதெல்லாம் கிடையாது. 

ஆனால், துயரமும் சிக்கலும் நிறைந்த வாழ்க்கையைத் தொடர்ந்தும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிற மேரி, இவற்றினுள்ளும் துடிப்பாகவே இயங்குகிறார்.

மேரிக்கு கடலும் அதனுடைய நேசமும் தெரியும். அதோடு வாழ்கின்ற சனங்களின் இதயம் புரியும். மேரி அவர்களுக்காக வாழ்கிறாள். அவர்களோடு வாழ்கிறாள். சனங்களும் மேரியை நேசிக்கிறார்கள். கடல், மனிதர்களை விடவும் மூத்த கடல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அலைகளின் முன்னே, மேரி தன்னுடைய கதையையும் கடலில் நடக்கின்ற இன்றைய கதைகளையும் சொன்னார். இறுதியாக மேரியின் புன்னகை மெல்ல அடங்கி, அவருடைய முகம் இருண்டு கறுத்துச் சோர்ந்தது. நான் உரையாடலை முடித்துத் திரும்பியபோது பொழுதும் இருண்டிருந்தது.

00

முல்லைத்தீவில் நிலைமை எப்பிடி இருக்கு? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறியள்? எப்படி இருக்கு உங்களுடைய வாழ்க்கை?

இங்க (முல்லைத்தீவில்) இப்பதான் ஆட்கள் வந்து கொண்டிருக்கினம். ஆனால், காசிருக்கிறவன் 'டக்'கெண்டு முன்னுக்கு வாறான். இல்லாதவன் கஞ்சிதான். ரவுணைப் பாத்தாத் தெரியும், கடகடவெண்டு கடைகள் எழும்புது. வங்கி, கடை, சந்தை, எண்டு எல்லாம் படபடெண்டு முளைச்சுக் கொண்டிருக்கு. வெளிநாட்டுக் காசு (புலம்பெயர்ந்தோரின் பணம்) நல்லா வேலை செய்யுது. காசிருக்கிறவன் கடையைக் கட்டிறான். வீடுகளைக் கட்டிறான். காணிகளையும் வாங்கிறான்.

நான் விட்ட கண்ணீருக்கு என்ன நிவாரணம்?

கொழும்பிலயோ புத்தளத்திலயோ இருந்து வந்திருக்கிற முஸ்லிம் ஆட்களும் ரவுணில கடைகளைத் திறந்திருக்கிறாங்கள். எல்லாத்தையும் பாக்கச் சந்தோசமாத்தானிருக்கு. நாலுபேர் வந்து, சந்தி நிறையிறதைப் பாக்க முந்தி நாங்கள் இருந்த காலந்தான் நினைவுக்கு வருது.

முந்தி, நான் சின்னப் பெட்டையாக இருக்கேக்க, முல்லைத்தீவில இருந்து ராப்பகலாக கொழும்புக்கு லொறி ஓடும். கடற்கரையில இருந்து சம்மாட்டிமார் ஆரையாவது கொழும்புக்கு அனுப்பிக் கொண்டே இருப்பினம். அந்தளவுக்குத் தொழில் இருந்தது. பிறகு ஒண்டுமே இல்லை. இப்ப திரும்ப அப்பிடியொரு நிலைமை வந்திருக்கு.

ஆனால், நாங்கள் என்ன செய்யேலும்? கொட்டிலுக்குள்ளதான் எங்கட வாழ்க்கை. இஞ்ச இருந்து போருக்குள்ள சிக்கி எல்லாத்தையும் துலைச்சுப் போட்டிருக்கிறம். போதாக்குறைக்குச் சுனாமியும் வந்து எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு போட்டுது. பிள்ளையளையும் துலைச்சுப்போட்டுத் தனிமரமா நிக்கிறன். இவருக்கும் மனம் பிழைச்சிட்டுது. சுனாமி அடிச்சுப் பிள்ளைகளைக் கொண்டு போட்டுது. இவரும் (கணவர்) செத்துப் பிழைச்ச ஆள்தான். அதுக்குப் பிறகு இப்படி மனக்குழப்பம். 

இப்ப போர் முடிஞ்சாப்பிறகு, திரும்பவும் (முல்லைத்தீவுக்கு) வந்திருக்கிறம். எனக்குச் சொந்தக் காணியில்ல. அதால வீட்டுத்திட்டம் இல்ல. காணி இருந்தால் வீட்டைக் கட்டிக் குடுக்கிறாங்கள். எனக்கும் ஒரு வீடு கிடைச்சிருக்கும். இப்ப நாங்கள் ஒரு தெரிஞ்ச ஆட்களின்ரை வீட்டிலதான் இருக்கிறம். வீடெண்டால் ஒரு பெரிசா ஒண்டுமில்ல, கொட்டில்தான். வாடிக்குக் கிட்டப்போட்டுக் கொண்டு, அதில இருக்கிறம்.

நிவாரணம் குடுத்தினம். இப்ப அதையும் நிப்பாட்டிப் போட்டாங்கள். ஒரு மாசமா இல்லை. அதுக்கு முந்தி, 16 கிலோ அரிசி, ஒரு மரக்கறி எண்ணெய்த் தகரம் (4 லீற்றர்), சீனி ஒரு கிலோ தந்தாங்கள்.

இனிச் சமுர்த்தி முத்திரைதானாம். அதுக்கும் இப்பிடித்தான் உதவியாக் கொஞ்சச் சாமான்களைத் தருவினம். அது வந்தால் கொஞ்சம் உதவியாயிருக்கும்.

மற்றும்படி தொழிற்பாடு பெரிசா இல்லை. கடலுக்குப் போற யோசினை ஆட்களுக்கு நல்லாக் குறைஞ்சு போய்ச்சு. அப்பிடிப் போனாலும் மீன் பாடில்லை. கடலிலயும் பிரச்சினை. அதால எங்களுக்கும் உழைப்பில்லை.

எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஏதோ வாழுறம். வேற என்னத்தத்தான் செய்யிறது?

ஏன், என்ன பிரச்சினை? என்ன நடக்குது?

நல்லாத்தான் கேட்டியள்.... முந்திய மாதிரி இல்ல இப்ப நிலைமை. இப்ப ஒரு பக்கத்தில இந்தியன் வள்ளங்கள் வருகுது. மற்றப் பக்கத்தில சிங்கள ஆட்கள் சங்கு பிடிக்கிறாங்கள். இதால எங்கட ஆட்களுக்குத் தொழிற்பாடில்லை. போரால பாதிக்கப்பட்டனாங்கள் எண்டு ஆருமே யோசிக்கினமில்லை. சுனாமி வேற எங்களை அழிச்சது. இப்பதான் வந்து எதையாவது செய்யலாம் எண்டு கடலில இறங்கினால், அங்க இப்பிடி நிலைமை.

இந்தியன் றோலர்களைக் கட்டுப்படுத்திறதுக்கு வழியே இல்லையெண்டு சொல்லினம். அதால ஆரும் உயரப்போறேல்ல. போய்தான் என்ன கிடைக்கும்? அவங்கள் வந்து வலையை வெட்டிப் போட்டுப் போறாங்கள். பெரிய வள்ளங்களும் மடிவலையும் எண்டால் இந்தப் பிரச்சினைதான். இதால எங்கட மீன் பாடுகள் பாழாகிட்டுது. கீழ்வலை எங்கட கண்டமேடையைக் கலக்கிப் போட்டுது. 

இப்ப ஒரு வள்ளம் கடலில இறங்கினால் பத்துப் பதினைஞ்சு கிலோ மீனோடதான் வருது. சில வள்ளங்களுக்கு அதுகும் இல்லை. அப்ப ஆர்தான் தொழில் செய்வான்? இதெல்லாத்தையும் ஆர்தான் யோசிக்கினம்? நாங்கள் என்ன செய்யேலும்?

மற்றப்பக்கத்தில சிங்கள போட்டுகள். அவங்கள் வந்து சங்கு குழிக்கிறாங்கள். சங்கு குழிச்சால் மீன் பாடிருக்காது. இதைச் சொன்னால், அவங்களுக்கும் இடம் குடுங்கோ எண்டு சொல்லினம். அந்தா தெரியுது, அந்த வடக்கு வாடிக்கு பக்கத்தில அவங்களுக்கு இறக்கம் ஒதுக்கியிருக்கு. ஆனால், அவங்கள் அங்கால இங்கால எண்டு ஆடி அசைவாங்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்குள்ள நிண்டு தொழில் செய்யிறதக் காட்டிலும் வேற சோலி பாக்கலாம் எண்டு கனபேர் ஒதுங்கீட்டினம். இதால எங்களுக்குத்தான் வயிற்றடி. முந்தியெண்டால் நாளொண்டுக்கு நான் மட்டும் 1000, 1200, 1500 ரூபாயெண்டு உழைப்பன். வலை தெறிக்கிறதெண்டு கரையெல்லாம் ஆட்கள் நிற்பினம். பின்னேரத்தில கடற்கரை நீளத்துக்கு வலை பொத்திறதுக்கெண்டும், சீராக்கிறதுக்கெண்டும் தலைக்கறுப்புகளைக் காணேலும். இப்ப பாருங்கோ, ஆர் தெரியிறான்.

கடற்கரை வெளிச்சுப் போயிருக்கு. இப்பிடியா இந்தக் கரை இருந்திது?

இதைப் பற்றி நீங்களோ அல்லது உங்கள் பக்கத்தில இருக்கிற மீனவர் சங்கங்களோ பொறுப்பான அதிகாரிகளிடம் அல்லது அரசியற் தலைவர்களிடம் பேசவில்லையா?

நல்லாத்தான் விட்டம். ஜீ.ஏயிட்ட (அரசாங்க அதிபர்), ஏ.ஜீ.ஏயிட்ட (உதவி அரசாங்க அதிபர்) கடற்றொழிலுக்கு பொறுப்பாக இருக்கிற பெரியவரிட்ட (மாவட்டக் கடற்றொழில் அபிவிருத்தி, நீரியல் வளத்துறை அதிகாரி) அமைச்சர் எண்டு எல்லாரிட்டயும் சொல்லீட்டம். சமாசம் இருக்கு. சங்கம் (மீனவர் சங்கம்) இருக்கு. எல்லாரும் எழுதிக் குடுத்திருக்கிறாங்கள்.

இந்தா பாக்கிறம். அந்தா கதைக்கிறம். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கோ எண்டுதான் சொல்லிறாங்களே தவிர, எதுக்கும் ஒரு முடிவும் வருதில்ல.

போனமாதம்கூட ஜீ.ஏ சொன்னார், சங்கு குழிக்கிறதுக்குக் கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. மீனவரின் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் எண்டு. ஆனால், நிலைமையைப் பார்த்தா அப்படியெல்லாம் நடக்கும் எண்டு தெரியேல்ல.

இதுக்க, கரைவலைப் பாடுகளின்ர பிரச்சினை வேற இருக்கு...

ஏன், என்ன பிரச்சினை அது? கரைவலைத் தொழில் இப்போது எப்பிடியிருக்கு?

கரைவலைப் பாடுகளில கனக்கப் பிரச்சினை. முந்திப் பங்கு வைச்சிருந்த ஆட்களுக்கே பாடுகளைக் குடுக்கிறதில கனக்க இழுபறி. இதுக்குள்ள புதிசாகச் சிலபேருக்கு புதிய பங்குகளைக் குடுக்க வேணும் எண்டொரு கதையிருக்கு.

மற்றது, கரைவலைப் பாடும் இன்னும் செழிக்கேல்ல. மீன் கொழிச்சா தொழில் செழிக்கும். இன்னும் அந்த மாதிரி ஒண்டும் நடக்கேல்ல.

இப்ப எத்தனை வள்ளங்கள் தொழிலுக்குப் போகின்றன? எத்தனைபேர் கடற்றொழில் செய்கிறார்கள்?

300 பேர் வரையில தொழிலுக்குப் போகினம். ஆனால், இப்ப ஆயிரம்பேர் தொழில் செய்ய வேணும். தொழிற்பாடு சீரில்லை எண்டதால எல்லாரும் பின்னடிக்கினம்.

இதால எங்கட பாடுதான் நல்லாப் பாதிக்கப்பட்டிருக்கு. இப்ப நாளொண்டுக்கு எனக்கு 150, 200 ரூபாய்க்கு மேல உழைக்கிறதே பெரிய பாடு. தொழிற்பாடு பிழைச்சிருக்கிறதால இதைப் போய் சம்மாட்டிமாரிட்டக் கேட்கேலாது.

இந்தக் காசை வைச்சுக் கொண்டு, என்னதான் செய்யேலும்?  ஒரு கிலோ அரிசி 55 ரூபாய் விக்குது. கோதுமை மா 80 ரூபாய். ஒரு கிலோ சீனி 100 ரூபாய். இப்பிடிச் சாமான்களின்ரை விலை உச்சத்தில இருக்கு. ஆனால், வருமானம் எப்பிடியிருக்குப் பாத்தியளா?

இப்பிடியிருந்தால் எப்பிடித்தான் நாங்கள் வாழுறது? ஆனால் என்ன செய்யிறது?

உங்களுடைய கணவர் ஏதாவது தொழில் செய்கிறாரா? அவருடைய செயற்பாடுகள் எப்படி இருக்கு? இந்த நிலையில் அவரோடு உங்களுடைய வாழ்க்கை எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது?

அவரால இப்ப தொழில் செய்யேலாது. நல்லா உழைச்சவர்.

முல்லைத்தீவுக்கு ஆமி வந்தாப்பிறகு (1985 க்குப் பிறகு) கூட நாங்கள் நல்லாத்தான் இருந்தம். இயக்கம் (விடுதலைப் புலிகள்) முல்லைத்தீவைக் கைப்பற்றினதுக்குப் பிறகும் வந்து தொழில் செய்தம். இடிஞ்சது, அழிஞ்சது எல்லாத்தையும் மெல்ல மெல்லக் கட்டிக் கொண்டு வரச் சுனாமி வந்திது.

அதோட எல்லாம் போச்சு. என்ரை மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் போயிட்டுதுகள். மூத்தவளுக்கு அப்ப பதின்னாலு வயசு. மற்றதுக்கு பத்து. அடுத்ததுக்கு எட்டு. அப்பிடியே கடல் அள்ளிக் கொண்டு போட்டுது. அதோட இவர் நல்லாக் குழம்பீட்டார். பிள்ளையளில இவருக்கு உசிர். அதுகளை நினைச்சு நினைச்சு அழுது கொண்டேயிருந்தார். அப்படியே இந்த மாதிரி ஆகீட்டார்.

இதற்காக வைத்திய உதவியை நீங்கள் நாடவில்லையா? பொது அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதுக்கு என்ன சொல்கிறார்கள்?

டொக்ரரிட்டப் போறம். ஆறு வருசமாக மருந்து குடிக்கிறார். இந்த மருந்தால ஆள் மெலிஞ்சே போயிட்டார். சில காலம் நித்திரையே கொள்ள மாட்டார். சில காலம் ஒரே படுக்கைதான். கிளினிக்குக் கொண்டு போய்க் காட்டிறன். எப்பவும் யோசினைதான். ஆனால், இப்பிடியெண்டாலும் பரவாயில்லை. இவராவது தப்பிப் பிளைச்சு என்னோட இருக்கிறார். இதுக்கு ஆண்டவருக்குத்தான் நன்றி.

அவரைச் சந்தோசமாக வைச்சிருங்கோ எண்டு டொக்ரர் சொன்னார். குடும்பத்தில வெறுப்பைக் காட்டாமல் அவரோடு இணங்கி இருங்கோ. அவரைச் சந்தோசப் படுத்திறதில பின்னுக்கு நிற்காதையுங்கோ எண்டு ஒளிவு மறைவில்லாமல் சொல்லுவார் டொக்ரர். அதைத்தான் நானும் செய்யலாம். அவரை நான் முந்திப் பாத்த மாதிரி, முந்தி நாங்கள் எப்பிடிக் குடும்பத்தில இருந்தமோ அத மாதிரி இருக்க வேணுமெண்டு கவனமாக இருக்கிறன். இதில அவருக்கும் கொஞ்சம் ஆறுதல். காசு பணம் இருக்கா என்னவாவது செய்யிறதுக்கு? நாலு இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போறதுக்கு? மடு மாதாவிட்ட ஒரு நேத்தி வைச்சிருந்தன். ஆனால், பத்து வருசமாகிது. இன்னும் போக விதியில்லை.

தொண்டு நிறுவனங்கள்.... சில நிறுவனங்கள் வந்து உதவிகள் செய்திது. கொஞ்சம் பொருட்களைத் தந்தினம். ஆனால், சுனாமிக்குப் பிறகு நல்ல உதவி கிடைச்சுது. இப்ப வெறுங்கையோட நிற்கிறன்.

ஒருக்கால் வெள்ளைக்காரர் வந்து என்ன நடக்குது? எப்பிடி இருக்கிறியள் எண்டு கேட்டுக்கொண்டு போச்சினம். பேப்பர்காரராக இருக்க வேணும். நாங்களும் சொல்ல வேண்டியதைச் சொன்னம். என்னதான் நடந்திதோ?

உங்களுடைய வாழ்க்கை, நீங்கள் இருக்கிற இடம், தொழில் செய்யிற பகுதி இந்த மாதிரியான இடங்களில படையினரின் கெடுபிடிகள், தொந்தரவுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் எப்பிடியிருக்கு?

ஆமியும் நேவியும் இருக்கு. கடற்கரையில் கூடுதலாக நேவிதான். ஆனால், இப்ப பிரச்சினை குறைவு. அநேகமாக ஒரு கரைச்சலும் இல்லையெண்டு சொல்லலாம்.

ஆனால், சனங்களிட்ட ஒரு பயம் இருக்கு. எனக்கும் அதிருக்கு. அவங்கள் ஒண்டும் செய்யாட்டிலும் எங்களுக்கு பயம்தான். அது என்னவோ தெரியாது, அப்பிடி ஆகீட்டுது.

மற்றது ஆமியும் நேவியும் இருக்கிறதால சிங்கள ஆட்களோட நாங்கள் ஒண்டும் கதைக்கேலாமல் இருக்கு. அப்பிடி ஏதும் கதைச்சால், அவங்கள் ஆமியைக்கொண்டோ நேவியைக் கொண்டோ ஏதும் செய்தாலும் செய்யலாமெண்டு எல்லாருக்கும் பயம். அதால நாங்கள் ஒண்டும் கதைக்கிறேல்ல. இது அவங்களுக்கு நல்ல வாசியாகப் போச்சு.

அமைச்சரிடம் கடிதம் குடுத்ததாகச் சொன்னீங்கள்? யார் அந்த அமைச்சர்? கடல் வளத்துக்குப் பொறுப்பானவரா? அவர் என்ன சொன்னார்?

இவர்தான் றிஷாத். (கைத்தொழில் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன்) அவரிட்டத்தான் சங்கக்கார் பேசியிருக்கினம். அவர் பார்க்கலாம். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கோ. எல்லாப் பிரச்சினையையும் தீர்த்துத்தாறன் எண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நிலைமை சீராக இல்லை. முல்லைத்தீவுக்கு கடல்தொழில் அமைச்சரும் (டொக்ரர் ராஜித சேனாரட்ண) வந்து போனார். அவரும் இப்பிடித்தான் சொல்லியிருக்கிறார். அவர் வந்து போனாப் பிறகு கொஞ்சம் மாற்றம் நடந்திருக்கு. ஆனால், தொழிற்பாடு சிறக்கோணும். அதுக்கு ஆராவது நல்ல முடிவுகளை எடுத்தாற்தான்.

உங்களுக்குக் காணி இல்லை என்றால், வீட்டுத்திட்டத்திலும் இடமில்லை என்றீங்கள். காணியில்லாத ஆட்களுக்குக் காணி குடுக்கிற ஏற்பாடுகள் இருக்கே. நீங்கள் இதுக்கு விண்ணப்பிக்கவில்லையா? காணியிருந்தால் இழப்பீடுகள் எதாவது கிடைக்குமே?

காணிக்காகப் பதிஞ்சு குடுத்திருக்கிறன். ஆனால், எங்க தருகினமோ தெரியாது. எங்களுக்குக் கடற்கரைக்குப் பக்கத்தில தந்தாத்தான் நல்லது. நல்லதோ கெட்டதோ கடலோட வாழ்ந்து பழகீட்டுது. என்ரை பிள்ளைகளைக் கடல் கொண்டு போனாலும் இந்தக் காத்துப் படாமல், கடல் சத்தல் கேட்காமல், அலையைப் பாக்காமல் என்னால இருக்கேலாது.

நட்ட ஈடு எண்டு என்னத்தைத் தரப்போகினம்? போன உயிரைத் தருவினமா? நான் விட்ட கண்ணீருக்கு என்ன நிவாரணம் கிடைக்கப்போகுது?

ஒரு காணித்துண்டு, கடற்கரைக்குக் கிட்டவாகக் கிடைச்சால், அதில ஏதாவது செய்யலாம். நான் சாகிறதுக்கிடையில அதொண்டு கிடைச்சால் பரவாயில்லை.

00

7/31/2012 4:08:53 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்