சந்திப்பு: எஸ். கோபாலகிருஷ்ணன்
இடிந்தகரை போராட்டக் களத்திலிருந்து
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 450 நாட்களை நெருங்கிவிட்டது. இத்தனை நாட்கள் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் பங்கேற்கும் அகிம்சைவழிப் போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறலாம்.
அணு உலை அமைய இருக்கும் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்தப் போராட்டம் இடிந்தகரை என்ற பகுதியில் மையம்கொண்டிருக்கிறது.
தமிழகமெங்கும் நடக்கும் குழந்தைகள் உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய பொதுவிசாரணை ஒன்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடிந்தகரையிலிருந்து வந்திருந்தவர்களிடம் பேசினோம். போராட்டம் நடக்கும் பகுதிகளின் உண்மை நிலவரத்தை அறிய முடிந்தது.
மலர் (50)- இல்லத்தரசி, இடிந்தகரை
"அணு உலையை எதிர்த்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவருகிறோம். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டுகொள்வதில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டுப் பேசத் தொடங்குகிறார். இவரது கணவர் ஒரு மீனவர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறீர்கள். உங்கள் வாழ்நிலை இதனால் பாதிக்கப்படவில்லையா?
ஆண்கள் காலையில் மீன் பிடிக்கச் செல்வார்கள். நாங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காலை 11 மணிக்கு போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவோம், மாலை 4 மணிவரை அங்கு இருப்போம். ஆண்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பெண்கள்தான் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
மீன்பிடித்துக் கொண்டுவரும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். அவர்கள் கொண்டுவரும் பணத்தில் கஞ்சி முதலான எளிமையான உணவைத்தான் சமைத்துக் கொள்கிறோம்.
மீன்பிடித் தொழில் நன்கு நடக்கும் நேரமிது. ஆனால் ஆண்களால் மீன்பிடியில் முழுவதாக ஈடுபடமுடியவிலை. போராட்டத்தில் கலந்துகொள்வதால் வேலைக்குச் செல்லும் பெண்களும் வேலைக்குப் போவதில்லை.
குழந்தைகளில் படிப்பு பாதிக்கிறது. எல்லாவற்றுக்கும் ,மேலாக உயிர் முக்கியம் என்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் மின்சாரப் பற்றாக்குறைக்கு கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதுதான் தீர்வு என்று நம்புகிறார்களே?
அணு உலையிலிருந்துதான் மின்சாரம் பெற வேண்டும் என்பதில்லை. அணு உலையிலிருந்து அணு குண்டுதான் தயாரிக்க முடியும்.
எங்கள் மக்களுக்கு மீன் பிடிக்கும் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது. அணு உலை திறக்கப்பட்டுவிட்டால் கடலில் உள்ள மீன்கள் அழிந்துவிடும்.
மின்சாரத்துக்கு வேறு வழிகளை யோசிக்க முடியும். ஆனால் எங்கள் வாழ்க்கையை நடத்த மீன்பிடித் தொழிலைத் தவிர வேறெதுவும் உதவாது. எனவே தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், அணு உலை திறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய நாட்டில் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள் என்றும் சில கிறிஸ்துவ மதப் பாதிரியார்கள் உங்களை இந்தப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுவதாகவும், போராட்டக் குழு தலைவர் எஸ்.பி. உதயகுமார் ஒரு அமெரிக்க உளவாளி என்றும் உங்கள் போராட்டம் பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றனவே?
இவை அனைத்தும் பொய் என்று சொல்வதைத் தவிர வேறென்ன இருக்கிறது. போராட்டத்துக்கு எப்படிப் பணம் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் எல்லாரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இந்தப் போராட்டத்துக்கு வழங்குகிறார்கள். 1000 ரூபாய் சம்பாதித்தால் 100 ரூபாய் வழங்குகிறார்கள். அதன் மூலம்தான் போராட்டம் நடக்கும் இடத்தில் உணவு தயாரிக்கிறோம்.
கிறிஸ்துவர்கள் மட்டுமே நடத்தும் போராட்டம் என்று கூறுவது தவறு. 1000த்துக்கு மேற்பட்ட இந்துக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அனைத்து மதத்தவரும் இணைந்துதான் போராடுகிறோம்.
உதயகுமாரை அமெரிக்க உளவாளி என்று சொல்வதுதான் எங்களை மிக அதிகமாகப் புண்படுத்துகிறது. அவர் எங்கள் சகோதரர். எங்கள் சந்ததியினரின் நலனுக்காகப் போராடுபவர். அவரை தயவுசெய்து இழிவுபடுத்தாதீர்கள்.
செப்டம்பர் மாதம் நடந்த அணு உலை முற்றுகைப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்
முதல் நாளான 9ஆம் தேதி எல்லாம் அமைதியாகத்தான் இருந்தது. இரண்டாம் நாள்தான் போலீஸ் தாக்குதல் ஆரம்பித்தது.
இந்தப் போராட்டத்தில் பெண்கள்தான் முன்வரிசையில் நின்றோம். எங்கள் கையில் எந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை. ஆண்கள் சிலர்தான் கம்புவைத்திருந்தார்கள். அணு உலையை நெருங்கியபோது கண்ணீர்புகை விசினார்கள்.
என் கால்கள் சரியாகச் செயல்பாடாதவை.. என்னால் ஓட முடியவில்லை. கண்ணீர் புகை வீசப்பட்டதால் உதடெல்லாம் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கண்ணீர் புகைத் தாக்குதலுக்குப் பயந்து ஓடியவர்களிடையே சிக்கி தன் குழந்தையைத் தொலைத்துவிட்ட ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் போனபோது அவர் பாலியல் வசவுகளை வீசியிருக்கிறார்கள். ‘உதயகுமார் கூப்பிட்டா மட்டும்தான் போவியா, நாங்க கூப்பிட்டா வர மாட்டியா’ என்று கேட்டிருக்கிறார்கள். இதே போல்தான் கணவனைத் தொழிலுக்கு அனுப்பிவிட்டு வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம், சோதனை நடத்த வரும் போலீசார். ‘புருஷன அனுப்பிட்டு இங்க எவன்கூட இருக்க’ என்று அசிங்கமாகப் பேசுகிறார்கள்
பதிலுக்கு நாங்களும் அவர்களைப் பார்த்து இதே போன்ற கேள்விகளைக் கேட்க முடியும். ஆனால் நாங்கள் கண்ணியம் தவற விரும்பவில்லை.
கண்ணீர் புகை வீசப்பட்ட நாளில்தான். போராட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத மணப்பாடைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் சுடப்பட்டிருக்கிறார். அவர் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல ஷேர் ஆட்டோவுக்குக் காத்திருந்தபோது சுடப்பட்டிருக்கிறார்.
நாங்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் அம்மன் கோவில் திருவிழாக்களுக்கு ஊர் மக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நாங்களும் பின்பற்றுவோம். தெருக்களில் அம்மன் ஊர்வலம் வந்தால் நாங்களும் வணங்குவோம். ஆனால் போலீஸார் தேவாலயத்தில் புகுந்து நாங்கள் போற்றி வணங்கும் மாதா சிலையை உடைத்திருக்கிறார்கள். தேவாலயத்தில் அசிங்கம் செய்திருக்கிறார்கள்
ஆனால் இவற்றால் எங்கள் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. இத்தனையையும் பொறுத்துக்கொண்டிருக்கும் மேரிமாதாதான் எங்களுக்கு போராட்டத்துக்கான சக்தியை வழங்குகிறார். அவரது ஆசியுடன் இந்தப் போராட்டட்தில் வென்றே தீருவோம்.
இந்தப் போராட்டம் சம்பந்தமாக முதலமைச்சரைச் சந்திக்க முயற்சித்திருக்கிறீர்களா?
ஆகஸ்ட் மாதம், அணு உலையை நிறுவியிருக்கும் ரஷ்ய நாட்டின் தூதரகத்துக்கு ஒரு கடிதம் வழங்குவதற்காக சென்னைக்கு வந்தோம் .அப்போது தமிழக முதல்வரிடமும் ஒரு கடிதம் வழங்க இருந்தோம்.
25 குழந்தைகளும் சில பெரியவர்களும் ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். எங்கள் பேருந்தைத் தடுத்து நிறுத்திய போலீஸார், நாங்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நினைத்துக்கொண்டு ’அம்மா கழுத்த நெறிக்கறதுக்காகதானே இங்க வந்தீங்க” என்று கேட்டார்கள். நாங்கள் கடிதம் கொடுப்பதற்காகத்தான் போகிறோம் என்று சொல்லியும் நம்பவில்லை. பல மணிநேரம் எங்களை பேருந்துக்குள்ளேயே பிடித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் உடபட யாரையும் சிறுநீர் கழிககச் செல்லக்கூட அனுமதிக்கவில்லை
எங்களுக்குத் தெரிந்த ஒரு வக்கீலை வரவைத்து நிலமையைப் புரிய வைத்த பிறகே ஊருக்குள் செல்ல அனுமதித்தாகள்.
நாங்கள் சென்னையில் இருந்தவரை சில போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தார்கள். முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. அன்று சிவகாசியில் தீவிபத்து நடந்திருந்ததால் “அம்மா யாரையும் சந்திக்கும் மூடில் இல்லை” என்று கூறிவிட்டார்கள். முதல்வரின் பி.ஏவிடம் எங்கள் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தோம்.
நாங்கள் சென்னையை விட்டுக் கிளம்பியபோது “நாங்க எங்க மேலதிகாரிங்க சொல்றதத்தான் செய்தோம். உங்கள் புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க” என்று அந்த அதிகாரிகள் கூறினார்கள்.
போராட்டக் குழுவினர் சார்பாக நீங்கள் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் சொல்ல விரும்பும் செய்தியென்ன?
இது எங்கள் வாழ்வாதாரத்தையும் சந்ததியினரையும் பாதுகாத்துக்கொள்வதறகாக நடக்கும் போராட்டம். கூடங்குளம் அணு உலை திறப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைப்பவர்கள் எங்களுடன் வந்து வாழ்ந்து பாருங்கள். உங்களை நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்வோம். எங்கள் பிரச்சினையையும் புரியவைக்கிறோம்.
அப்படியும் நீங்கள் அணு உலையைத் திறந்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், எங்கள் உயிர் போகும்வரை அதை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் ஊர் மாதா எங்களை காத்துக்கொண்டிருக்கிறார்.
ரிஷிதா (13), பாஸ்டைன் (12):
சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வுகளை உங்களால் பிரச்சினையும் இல்லாமல் எழுத முடிந்ததா?
எழுதினோம். ஆனால் பல சப்ஜக்ட்டுகளில் ஃபெயில் ஆகிவிட்டோம். இதற்கு முன் எல்லா சப்ஜக்டிலும் பாஸாகிவிடுவோம். ஆனால் இப்போது, எங்கள் அப்பா அம்மாவை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. தினமும் 15 நேவிக் கப்பல்களாவது கடலில் சுற்றுகின்றன, மீனவர்கள் ஐந்துபேர்கொண்ட குழுவாகத்தான். அதில் ஒருவர் கரையில் நின்று பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் எங்கள் பயம் அதிகரிக்கிறது
நீங்களும் போராட்டத்தில் பங்கேற்கிறீர்களா? அதனால் உங்கள் படிப்பு பாதிக்கிறதா?
எங்களை போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் பள்ளி முடிந்தவுடன் போராட்டம் நடக்கும் பந்தலுக்கு சென்று உட்கார்ந்துகொள்வோம். வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிடுவோம்.
பந்தலில் இருக்கும் பெரியவர்கள் எங்களை அங்கே உட்கார்ந்துகொண்டே படிக்கத்தான் சொல்வார்கள். ஆனால் பயத்தின் காரணமாக எங்களால் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை.
கல்வியை பாதிக்கும் இந்தப் போராட்டத்தின் அவசியம் என்ன என்று நினைக்கிறீகள்?
எங்கள் வாழ்வாதாரம் பாதிக்குமே. அதற்காகத் தான் போராடுகிறோம். அணுக் கழிவு வெளியேறினால் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கும் என்கிறார்கள் எங்கள் வருங்காலம் பாதுகாப்பானதாக இருப்பதற்காகப் போராடுகிறோம்.
போராட்டப் பந்தலில் சாப்பிட என்ன கொடுப்பார்கள்?
ரசமும் முட்டையும் கொடுப்பார்கள். மீன்பிடிக்கச் செல்பவர்கள் 1000 ரூபாய் சம்பாதித்தால் அதில் 100 ரூபாய் போராட்டத்துக்குக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் காசில்தான் சாப்பாடு சமைத்துத் தருவார்கள்.
பலத்த கட்டுப்பாடுகள் இருப்பதால் குறைவான மீன்களையே பிடிக்க முடிகிறது. மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாகிறது.
சரி மின்சாரத்துக்காகத் தானே அணு உலை திறக்கப்போகிறார்கள். உங்களுக்கு மின்சாரம் தேவையில்லையா?
அந்தக் காலத்தில் மின்சாரமில்லாமல்தானே மக்கள் வாழ்ந்தார்கள்? உயிரைவிட மின்சாரம் முக்கியமா?
அணு உலையை மூடுவதுதான் எங்கள் நோக்கம். அதற்கு எங்களுக்கு உதவுங்கள்.
நன்றி:
* பேட்டியை ஏற்பாடு செய்துகொடுத்த நித்யானந்த் ஜெயராமன்
* குழந்தைகளின் புகைப்படத்தை வழங்கி உதவிய மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (Human RIghta Advocacy and Research Foundation)