இரவி பரமேஸ்வரி
திரைக்கதை எவ்வாறு எழுதப்படுகிறது? என்பதுடன் இம்முறை தொடங்கலாம். மழை மேலிருந்து பொழிவது என்பது உலகை ஊட்டிச் செழுமைப்படுத்தும். இத்தகைய மழையைப் போன்றதே படைப்பாற்றலும் புனைவுத்திறனும். ஒரு வித்து ஒருவரிடம் சட்டென கருக்கொள்கிறது. இனித்தேவையானது மழை. அது சரியாய்ப் பொழிந்தால் போதும், உன்னதமான திரைக்கதைப் பிரதி வந்துவிடுகிறது.
உதாரணம் வேண்டுமெனில் ஒன்றைச் சொல்கிறேன். 'பைசிக்கிள் தீவ்ஸ்' (Bicycle Thieves) என்றொரு உன்னத திரைப்படம். உலகத்தரமான திரைப்படங்களில் முதல் பத்து இடங்களில் இதுவும் ஒன்றாகும். 1948இல் வெளியான இத்தாலியத் திரைப்படமான இதனை விற்றோரியோ டி சிகா (Bicycle Thieves) என்பவர் திரைக்கதை எழுதி நெறியாள்கை செய்திருந்தார். சினிமா பற்றிச் சிந்திக்கின்ற எவரும் பார்த்தாக வேண்டிய திரைப்படம் இது.
பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் மேற்குறித்த 'பைசிக்கிள் தீவ்ஸ்' திரைப்படத்தை அவர் பார்த்தபோது அவருக்குள்ளே ஒரு விதை விழுந்திருக்கும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கை என்னுள் உருவாகக் காரணம் வெற்றிமாறனின் நெறியாள்கையில் உருவான 'பொல்லாதவன்' திரைப்படத்தைப் பார்த்தமையே காரணம். தனுஷ், தான் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை நிரூபித்த படங்களில் இதுவும் ஒன்று.
'பைசிக்கிள் தீவ்ஸ்' இன் கால்தூசிக்கும்கூட வராது இத்திரைப்படம். என்றாலும் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலுக்கும், தமிழ்த்திரைச் சூழலுக்கும் இயைந்தவாறு நியாயம் செய்திருக்கிறார் வெற்றிமாறன். அது கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றிமாறன் தான் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை நிரூபித்த படமும் அதுவே. மேலும் அதனை நிரூபித்தமையாலேயே 'ஆடுகளம்' திரைப்படத்திற்காக திரைக்கதை, நெறியாள்கை ஆகிய இரண்டுக்குமாக இந்திய ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.
படைப்பூக்கத்தினூடாகப் பயணம் செய்து ஒரு திரைக்கதை வெளிவருவது என்பது வேறு. இதனைத் தழுவல் என்ற வரையறைக்குள் வைத்திடல் முடியாது. ஓர் அகத்தூண்டுதல் (inspiration) படைப்பாளியின் உட்கிடக்கையைத் தூண்டிவிட பொருமி, கிளர்ந்து படைப்பு வெளிவருகிறது. அதிலுள்ள களிமண்ணை இரு கைகளாலும் ஏதோ 'மாயம்' செய்தவாறு பிடித்திருக்க ஒரு பானையோ, கூஜாவோ, பூச்சட்டியோ, சட்டியோ கலைநேர்த்தியுடன் வருமே. அதுபோலத்தான் வருகிறது ஒரு படைப்பு.
அப்பட்டமான தழுவலையும், அச்சடித்த பிரதியாக வருவதையும் படைப்பு என்று கூறிவிடமுடியாது. அது படைப்பாளி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது. என்ன செய்வது? அவரும் வாழவேண்டுமே.
இந்த அகத்தூண்டுதல் என்பது உள்ளூரிலேயும் நிகலழாம். சேர்ட்டில் (Shirt) ஒட்டியிருந்த தூசியைப் போல படைப்பாளி அறியாமல் அவர்கூடப் பயணிக்கலாம். அவர் அறியாமல் 'நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி'யாக வளர்ந்து கொண்டும் செல்லலாம்.
மூன்று சோடித் தமிழ்த் திரைப்படங்களை உதாரணத்திற்கு எடுக்கின்றேன்.
1. குணா - காதல் கொண்டேன்
2. விருமாண்டி - பருத்திவீரன்
3. அன்பே சிவம் - நான் கடவுள்
ஆச்சரியப்படும்படியாக, மூன்று சோடிகளிலும் முதலில் நிற்பது கமல்காசனின் திரைப்படங்களாக அமைந்து விடுகிறது. மூச்சும் பேச்சும் சினிமா என்று உழன்று கொண்டிருக்கின்ற ஒருவரால் இது சாத்தியமே.
கமல்காசனின் குணா, செல்வராகவனின் காதல் கொண்டேன் என்ற இரு திரைப்படங்களையும் அருகருகே வைத்துப் பார்க்கிறபோது இதனை உணர்வீர்கள். 'குணா' என்ற திரைப்படத்தின் அகத்தூண்டுதலே 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படம் என நான் உணர்கிறேன். வெவ்வேறு சம்பவங்கள், வெவ்வேறு வகை மாதிரிப் பாத்திரங்கள், வெவ்வேறு வகையான காட்சி அமைப்புக்கள், திரைக்களங்கள் என்று போயினும், 'காதல் கொண்டேன்' திரைப்படம் முடிந்தவுடன் என்னுள் சாறாகத் தேங்கி நின்றது என்னவென்றால் 'இது குணா மாதிரி இல்லையா?' என்பதே.
'பைசிக்கிள் தீவ்ஸ்' இல் சைக்கிள் களவு போகிறது. 'பொல்லாதவன்' இல் மோட்டார் சைக்கிள் களவு போகிறது. 'பைசிக்கிள் தீவ்ஸ்' இல் சைக்கிள் வாங்கப்பட்ட பாடு, அவர்களின் குடும்ப சூழ்நிலை, இனி என்ன செய்வதென்ற இன்னோரன்ன பிரச்சினைகள். 'பொல்லாதவன்' இல் இவையெல்லாம் மாறுபடுகின்றன என்றாலும் ஒற்றை வரியில் கதை சொல்ல வேண்டுமென்றால், அதில் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. அதேபோல 'குணா'வையே 'காதல் கொண்டேன்' என்று சொல்வேன்.
'விருமாண்டி' (2003) வெளியாகி நான்கு வருடங்களின் பிறகு வெளியான திரைப்படம் அமீரின் 'பருத்திவீரன்' (2007). நான்கு வருட வித்தியாசத்தைத் தவிர, திரைக்கதையில் எவ்வித வித்தியாசமும் காணமுடியாது. 'விருமாண்டி'யின் அகத்தூண்டுதலே 'பருத்திவீரன்' என நான் நம்புவதற்கு தோதான காட்சியமைப்புக்கள் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கையில் யாபேரும் உணரலாம்.
இவ்வாறு நான் தெரிவிக்கையில் செல்வராகவன் (கால் கொண்டேன்), அமீர் (பருத்திவீரன்) ஆகிய இருவரும் அதனை அறிய நேர்ந்தால் என்னுடன் சண்டைக்கு வரலாம். ஆனால் பாலாவால் (நான் கடவுள்) அவ்வாறு சண்டைக்கு வரமுடியாது. 'அன்பே சிவம் திரைப்படத்தின் பாதிப்பிலேயே 'நான் கடவுள்' திரைப்படத்தை நான் எடுத்திருந்தேன்' என்று உரையொன்றில் பாலா குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாலா ஒரு நுட்பமான கலைஞர் என்றபடியால் 'நான் கடவுள்' திரைக்கதையை முற்றாக எவ்வித ஒப்புமையும் இல்லாது வேறுபடுத்தியிருந்தார்.
'அன்பாக'ச் சொன்னதும் 'ஆங்காரமா'ச் சொன்னதும் முக்கிய வேறுபாடு. உலகமயமாக்கல் மீது கொண்ட அன்பு தான் கடவுள் என்று சொன்னதற்கும், நியாயத்தை நிலைநிறுத்த, அநீதியை அழிக்க நான் கடவுளாவேன் என்று சொன்னதற்கும் வேறுபாடு உண்டு. அவரவர் கலை ஆளுமை அவரவர் திரைக்கதையைப் பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
பாலா தனது அனைத்துத் திரைப்படங்களிலும் (சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்) தன்னைக் 'கோபக்காரனாகவே' காட்டியிருந்தார். மை தெறித்தாற் போல, அவரது திரைக்கதைப் பிரதிகளிலும் கோபமே தெறித்துக் கிடந்தது. கோபம் கொண்டு, வேகம் கொண்டு ஓடுகின்ற ஒருவகை அவரது திரைக்கதைப் பிரதிகள் யாவற்றிலும் காணலாம். ஓட்ட வேகத்தில் திரைக்கதைப் பிரதிகள் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் எனக்குண்டு.
கமல்காசன் வேறு பாதையில் நடையைக் கட்டுகிறார். முன்னுணர்ந்த, முற்போக்கு முகம் கொண்ட, சமூக உணர்வு அறிந்த திரைக்கதைப் பிரதிகளை ஆக்குகிறார் கமல்காசன். யாரும் தொட்டுப் பாராத, எட்டியும் பாராத இடங்களிலெல்லாம் தன் 'நுட்பமான கலைப்புலத்தால்' நுழைகிறார் அவர். தேவர் மகன், மகாநதி, நம்மவர், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம் என்ற திரைப்பிரதிகள் யாவும் தொட்டு அளாவிய பரப்பு விசாலமானது. ஆழமானதும் கூட. (ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய விரும்பவில்லை. அது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல).
ஆனால் கமல்காசனின் திரைப்பிரதி ஓட்டை விழுந்து, உடைசலாகி ஒன்றுக்கும் உதவாமல் எப்பொழுது போகிறதென்றால், கமல்காசன் தனது 'சகலகலாவல்லபத்தை'க் காட்ட முனைகின்ற போதே. அன்பையே தன் மந்திரமாகக் கொண்ட நல்லசிவம் (அன்பே சிவம்) சகலகலாவல்லபத்தை ஏன் காட்ட வேண்டும். அதனால் என்ன நிகழ்கிறது என்றால் கமல்காசனின் திரைக்கதைப் பிரதி தாறுமாறாக ஓடத் தொடங்குகிறது.
கமல்காசன் தன் திரைக்கதையில் பலவீனமான இன்னொன்றையும் கொண்டுள்ளார். திரைக்கதையில் மையம் சிதைகிறது. ஆங்கிங்கொன்றாக திரைக்கதை எறும்பு போல எங்கெங்கும் ஊர்கிறது. இந்தப் பலவீனம் அவரை தொழில்சார் கலைஞனாக தோல்விப் பாதைக்கு இட்டுச்செல்கிறது.
'மகாநதி' திரைக்கதையின் மையம் என்ன? கிராமத்தில் விவசாயம் செய்த ஒருவர் நகரத்தில் வியாபாரம் செய்யப்போய் அவ்லாடுவது தான் மையம் என்றால், அம்மையத்தில் மாத்திரம் பிரதி கட்டமைக்கப்பட்டுள்ளதா? சிறைச்சாலையில் நிகழும் ஊழல் அப்பிரதிக்கு ஏன் தேவைப்பட்டது? சிறிய வயது மகள் விபச்சார விடுதியில் இருந்து மீட்கப்படுவதன் வலியை அப்பிரதி ஏன் கொண்டிருக்க வேண்டும்? அடுத்தடுத்து நிகழ்கின்ற ஆற்றொணாக் கொடுமைகளின் வலியை இத்திரைக்கதைப் பிரதி தாங்கேலாமல் தாங்கி நிற்கிறதே! 'மகாநதி' திரைப்படத்தின் தோல்விக்கு அதுவல்லவா முக்கியமானதும், முதலுமான காரணம்.
'பிதாமகன்' திரைப்படத்திலும் சிறைச்சாலையின் ஊழல் வருகிறது. 'சிறைச்சாலையில் ஊழல் நிகழ்கிறது' என்ற செய்தியைச் சொல்ல அது வரவில்லை. 'உலகில் தன்மீது அன்பு செலுத்த ஒருவருமில்லை என்று வாழ்கின்ற சித்தனுக்கு (விக்ரம்) அன்பு செலுத்த ஒருவர் (சூர்யா) இருக்கிறான் என்று உணர்த்த திரைக்கதைப் பிரதியை சிறைச்சாலை ஊழலின் பக்கம் நகர்த்துகிறார் பாலா. ஆளுமைமிக்க கலைஞரால் தான் அவ்வாறு செய்ய இயலும். பாலாவிற்கு தனது 'சகலகலாவல்லபம்' இனைக் காட்டத் தேவை இருக்கவில்லை.
கமல்காசன் திரைப்படங்களின் (குணா, விருமாண்டி, அன்பே சிவம்) அகத்தூண்டலால் உருவான திரைப்படங்கள் (காதல் கொண்டேன், பருத்திவீரன், நான் கடவுள்) வெற்றி பெற கமல்காசன் தோல்வியுறுவதன் காரணம் என்ன? 'வித்துவத்தை'க் காட்ட முற்பட்ட கமல்காசனின் வலுவற்ற பிரதிகளே காரணம்.
கமல்காசனே விரும்பி அழைத்த பாலா, மிஷ்கின், செல்வராகவன் போன்ற சிறந்த திரைக்கதையாசிரியர்களுடன் கமல்காசனால் பணிபுரிய முடியாமல் போனமைக்கு காரணம், இவர்களின் திரைக்கதைக்குள் கமல்காசன் தனது பேனாவை நுழைத்தமையே. கமல்காசனின் பேனாவைப் பிடுங்கி, தூர எறிந்துவிட்டால் நமக்கு அற்புதமான ஒரு கலைஞன் கிடைப்பான்.