Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சினிமா துறைக்கு இந்திய சினிமா ஆற்றிய பங்கு என்ன?

சினிமா துறைக்கு இந்திய சினிமா ஆற்றிய பங்கு என்ன?
அரவிந்தன்

 

இந்திய சினிமாவுக்கு வயது நூறு - பகுதி 2

அரசியல், இசை, சமூகம் ஆகிய அம்சங்களின் தாக்கம் மெல்ல மங்கி, இந்திய சினிமாவில் மசாலா படங்கள் எனப் புதியவகை எழுபதுகளில் உருவானது. பொழுதுபோக்கு என்பதே இதன் மையம். இந்தப் படங்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசாது. பேசினாலும் தீவிரமாகப் பேசாது. அழகான நடிகர்கள், அருமையான இடங்கள், இனிமையான பாடல்கள், நடனங்கள், கவர்ச்சி, சண்டை, நகைச்சுவை, சென்டிமெண்ட் என்று பல விஷயங்களின் கலவையாக இந்தப் படங்கள் இருக்கும்.

இந்த மாற்றம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளித்தாலும் சினிமாவிலிருந்து கலையம்சத்தைக் குறைத்திருப்பதற்கு இதைத்தான் முக்கியக் காரணமகச் சொல்ல வேண்டும்.

இந்தியில் ராஜேஷ் கன்னா, சஞ்ஜீவ் குமார், வாஹீதா ரஹ்மான் என்று பலர் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். பிறகு தர்மேந்திரா, அமிதாப்பச்சன், முகேஷ் கன்னா என்று இது தொடர்ந்தது. ஷாரூக்கான், சல்மான் கான், அமீர் கான் என்று இதன் அடுத்த கட்டம் வளர்ந்தது. இன்று இந்தப் போக்கிற்குப் பல வாரிசுகள் இருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களின் சிகரம் என்று ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலேயைச் (1975) சொல்லலாம். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி, ஜீனத் அமன், கப்பார் சிங் ஆகியோர் நடித்த இந்தப் படம் இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் சர்வதேச அரங்கிலும் புகழ்பெற்றது. வணிக ரீதியான படங்களில் செவ்வியல் அந்தஸ்துப் பெற்றுவிட்ட படம் இது.

சினிமா துறைக்கு இந்திய சினிமா ஆற்றிய பங்கு என்ன?

தமிழில் எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் போன்றவர்கள் இதுபோன்ற படங்களில் நடித்தார்கள். சிவாஜியின் படங்களில் சண்டைக்குப் பதில் சென்டிமெண்ட் தூக்கலாக இருக்கும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு இதில் மாபெரும் வெற்றி பெற்றவர் ரஜினிகாந்த். இந்த மரபு விஜய், அஜித், விஷால், கார்த்தி, ஜீவா என்ற இன்றளவும் தொடர்கிறது. சிறுத்தை, கோ, மங்காத்தா, துப்பாக்கி என்று பெரிய அளவில் வெற்றி பெறும் படங்கள் இதே வகையின் வெவ்வேறு வடிவங்கள்தான்.

வணிக சினிமா இப்படி ஒருபுறம் மாற்றம் அடைந்தாலும் இந்தியாவில் சினிமாவைக் கலையாகப் பார்த்து அதில் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்திய இயக்குநர்களும் இருக்கிறார்கள். வணிகப் படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருந்தாலும் கலைப் படங்களும் கண்டுகொள்ளாமல் விடப்படவில்லை. ரித்விக் கடக், அரவிந்தன், சத்யஜித் ராய், ஷாஜி கருன், அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தியத் திரைப்படங்களுக்கு சர்வதேசப் புகழையும் பெருமையையும் பெற்றுத்தரும் கலைப் படங்களை வழங்கியிருக்கிறார்கள்.

80களில் பெண் இயக்குநர்களின் வருகை நிகழ்ந்தது. அபர்ணா சென், பிரேமா காரந்த், மீரா நாயர் போன்றவர்கள் முத்திரை பதித்தார்கள். புதிய பார்வையுடன் இந்திய சினிமாவில் சில சலனங்களை ஏற்படுத்தினார்கள். ரேகா என்னும் அற்புதமான நடிகை தன் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய உம்ராவோ ஜான் என்னும் படம் வெளியானதும் எண்பதுகளில்தான். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை எண்பதுகளைப் பெண்கள் எழுச்சி பெற்ற காலகட்டம் என்று சொல்லலாம். இதுபோன்ற சலனங்கள் எதுவும் தமிழிலோ தெலுங்கிலோ ஏற்படவில்லை.

சினிமா துறைக்கு இந்திய சினிமா ஆற்றிய பங்கு என்ன?

ஆரோக்கியமான சலனங்கள் 

ஆனால் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் (77-84) தமிழில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. குடும்பம், வீடு என்று சிறிய வட்டத்துக்குள் சுழன்றுகொண்டிருந்த தமிழ் சினிமா மெல்ல அதிலிருந்து விடுபடத் தொடங்கியது. ஸ்டூடியோவுக்குள்ளேயே எடுக்கப்பட்டுவந்த படங்கள் வெளிப்புறத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி என்னும் இரு பெரும் நட்சத்திரங்களின் ஒளி திரைவானில் மங்கத் தொடங்கிய காலகட்டத்தில், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா ஆகிய இளைஞர்கள் பிரகாசிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்கே உரிய விதத்தில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் பங்களித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்னும் அம்சத்தைக் கொண்டுவந்ததில் இவர்கள் பங்கு முக்கியமானது. ஓரிரு படங்களில் மட்டுமே என்றாலும் ஜெயகாந்தனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இவர்களை விடச் சற்றே மூத்தவரான கே. பாலசந்தர் ஓரளவு நாடக பாணியிலேயே படங்களை எடுப்பவர். ஆனால் ஒரு விதத்தில் இவர் இவர்களுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்ல வேண்டும். சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகக் கையாண்டது, புதிய கருத்துக்களைத் துணிச்சலாகச் சொன்னது, அதுவரை யாரும் கையாளாத விஷயங்களை தைரியமாகக் கையாண்டது, நட்சத்திரங்களை நம்பாமல் கதையையும் திரைக்கதையையும் நம்பிப் படம் எடுத்தது என்று பல பெருமைகள் இவருக்கு உண்டு. நடிகர்களை உருவாக்குபவர் என்னும் பெருமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாகேசுக்குள் இருந்த குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தியவர் இவர். ரஜினிகாந்த் என்னும் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர். உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ளச் சொன்ன கமல்ஹாஸனுக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டெடுத்தவர்.

இயக்குநர் என்னும் முறையில் தன் ஆளுமையை நிலைநிறுத்தியவர்களில் ஸ்ரீதருக்கும் முக்கிய இடம் உண்டு. இவரும் பெரிய நட்சத்திரங்களை அதிகம் நம்பாமல் தன் இயக்கத்தையும் திரைக்கதையையும் நம்பிப் பல வெற்றிப் படங்களை எடுத்திருக்கிறார்.

70களின் இறுதியில் பாரதிராஜா, மகேந்திரன் முதலானோரால் தொடங்கப்பட்ட புது அலை அதன் பிறகு வந்தவர்களால் அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று தமிழ் சினிமா உலக அரங்கில் பேசப்படும் நிலையை எட்டியிருக்கும். ஆனால் சினிமா என்பதை லாபம் சம்பாதித்துத் தர வேண்டிய ஒரு தொழிலாக மட்டுமே பார்த்த சிலர் தமிழ் சினிமாவை மீண்டும் மசாலா பாதைக்குள் தள்ளினார்கள். பழைய மசாலா படங்களில் ஏதேனும் ஒரு பரந்துபட்ட நோக்கம் இருக்கும். மசாலா படங்களை எடுப்பவர்களும் அதை அர்த்தபூர்வமான பொழுதுபோக்குப் படமாக ஆக்க வேண்டும் என்று கொஞ்சமாவது மெனக்கெடுவார்கள். ஆனால் எண்பதுகளின் மத்தியில் உருவான மசாலா அலை வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டது. இந்த அலை தமிழ் சினிமாவைப் பின்னுக்குத் தள்ளியது என்பதில் ஐயமில்லை.

தொண்ணூறுகளில் தொடங்கிய மாற்றம்

தொண்ணூறுகளில் உலகமயமாதல், தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் இந்திய சினிமாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காட்சிகளின் செறிவு, இசையில் உலகளாவிய தன்மை, நடனத்தில் புதுமை ஆகியவை இந்தக் காலகட்டத்தின் அடையாளங்களாயின. வெளிநாட்டு சேனல்கள் உள்படத் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை பெருகியதால் திரையரங்கிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே திரையரங்கிற்கு வருபவர்களை அசத்தும் அளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமான காட்சிகள், எம்.டி.வி., வி.டி.வி. போன்ற சேனல்களில் வரும் பாடல்களுக்கு இணையான பாடல் காட்சிகள், உலகளாவிய ரசனையுடன் ஒத்துப்போகும் இசை, காட்சிகள் மூலம் கதை சொல்லும் திறன், ஒரு படத்துக்குள் உலகச் சுற்றுலாவையே ஏற்பாடு செய்யும் உத்திகள் ஆகியவை அரங்கேறத் தொடங்கின. கதை என்பது முக்கியமல்ல. பார்ப்பவர்களை அசர வைக்க வேண்டும். அவர்களை அலுப்பிலாமல் உட்காரவைக்க வேண்டும். இதுதான் முக்கியம் என்று ஆனது. இன்றுவரை இந்தப் போக்கு தொடர்கிறது.

மணி ரத்னம், ஷங்கர் ஆகிய இருவரையும் இந்தப் போக்கின் இருவேறு விதமான முன்னோடிகள் என்று குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் மாறிவரும் காலத்தைத் தனக்கே உரிய விதத்தில் பிரதிபலித்து வெற்றிபெற்றார்கள். அடிப்படையான பார்வையிலோ தன்மையிலோ பெரிய மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒரு படத்தைத் திரையில் வழங்கும் விதத்தைப் பெருமளவில் மாற்றியமைத்தார்கள். மணி ரத்னம் தமிழ்ப் படங்களுக்கான இந்தியச் சந்தையை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். இந்தியாவின் எந்தப் பெரிய நட்சத்திரத்தையும் தங்கள் படங்களில் நடிக்கவைக்க முடியும் என்னும் அளவுக்கு இவர்கள் இருவரும் இந்திய அளவில் புகழ்பெற்றிருக்கிறார்கள்.

மசாலா, ஹீரோவை சூப்பர் மேனாகக் காட்டுவது, பொழுதுபோக்கு என்னும் பெயரால் முட்டாள்தனமான காட்சிகளை அமைப்பது, தர்மத்தின் பெயரால் நாயகன் செய்யும் கொலைகளைச் சமய ரீதியான படிமங்களுடன் மகிமைப்படுத்துவது, பாஸிசத் தன்மையுடன் விபரீதமான முறையில் சட்டம் ஒழுங்கையும் பொது வாழ்வில் தூய்மையையும் தூக்கிப் பிடிப்பது ஆகிய பொதுவான போக்குகளுக்கு மத்தியில் முக்கியமான பிரச்சினைகளை ஓரளவு யதார்த்தமாகக் கையாளும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். இந்தியில் மதுர் பண்டார்க்கர், சஞ்சய் லீலா பன்சாலி, தமிழில் சசிக்குமார், சுசீந்திரன், அமீர், வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் என்று சிலரைச் சொல்லலாம். மலையாளத்தில் ஒரு காலத்தில் அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள் செயல்பட்டுவந்தார்கள். ஆனால் இப்போது மலையாள சினிமா புதிய திறமைகள், புதுமைகள் ஏதுமின்றித் தரம் இழந்துவருகிறது.

இந்திய சினிமாவின் நூறாண்டுப் பயணத்தில் வேறு சில முக்கியமான அம்சங்களும் உள்ளன. இசை, நகைச்சுவை, திரையைப் பிரகாசிக்கவைக்கும் அழகிகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நாயகர்கள் ஆகியவற்றை இந்திய சினிமாவின் வலுவான அம்சங்கள் என்று சொல்ல வேண்டும். வளமான இசை மரபு கொண்ட இந்தியாவில் திரை இசை சிறந்து விளங்குவதிலும் புதிது புதிதாக அதில் பல திறமைசாலிகள் வந்தவண்ணம் இருப்பதிலும் ஆச்சரியமில்லை. அதுபோலவே மதுபாலா முதல் ஐஸ்வர்யா ராய் வரையிலும் எண்ணற்ற அழகிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியத் திரையின் தவிர்க்க முடியாத சக்திகளாகத் திகழ்கிறார்கள். ராஜ் கபூர் முதல் ரஜினிகாந்த் வரை பல நாயகர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறார்கள். சினிமாவைப் பொழுதுபோக்கு ஊடகமாவே பார்க்கும் இந்தியாவில் இதுபோன்ற அம்சங்கள் மக்களுக்குப் பெரும் கேளிக்கையை வழங்கிவருகின்றன என்பதில் ஐயமில்லை.

சாதனைகளும் பங்களிப்பும்

இந்திய சினிமாவின் நூறாண்டுப் பயணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதன் பெரும்பாலான சாதனைகள் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே இருப்பதை உணர முடியும். தரம் என்று பார்க்கும்போது பெரிதாக மெச்சிக்கொள்ளும் தன்மை அதிகம் இல்லை. இந்திய சினிமா உலக சினிமாவுக்குப் பெரிதாக எதுவும் பங்களிக்கவில்லை என்று திரைப்பட விமர்சகரும் இயக்குநருமான அம்ஷன் குமார் குறிப்பிடுகிறார். 'சினிமாவில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன. சினிமாவில் வண்ணம் சேர்ந்தது முதல் முப்பரிமாணத் தொழில்நுட்பம்வரை பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் எதுவுமே இந்தியாவின் பங்களிப்பு அல்ல. இந்திய சினிமா மாற்றங்களை இறக்குமதி செய்கிறது. எதையும் தானாகக் கண்டுபிடிக்கவில்லை' என்கிறார் அம்ஷன் குமார். பிரான்ஸில்தான் சினிமா கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் பல மொழிப் படங்கள் சினிமாவுக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. சினிமாவை வளர்க்க உதவியிருக்கின்றன. அதுபோல இந்திய சினிமா எதையும் செய்யவில்லை என்கிறார்.

இந்திய சினிமாவைக் கொண்டாடுபவர்களால்கூட அம்ஷன் குமாரின் வாதத்தை மறுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களுக்கு சவாலாக இருக்க வேண்டும் என்பதே வணிகப் பட இயக்குநர்களின் குறிக்கோளாக இருகிறது. வெளிநாட்டுப் படம் என்றாலே ஹாலிவுட்தான் என்பதே பலரின் புரிந்துணர்வாக இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டுடன் போட்டிபோட நினைக்கும் இந்திய சினிமா கதையம்சத்திலும் திரைக்கதை நேர்த்தியிலும் காட்சி அமைப்பிலும் அதன் அருகில் நெருங்கக்கூட முயற்சிப்பதில்லை. ஹாலிவுட் படங்களை மட்டுமே முன்னோடியாகக் கொள்ளும் இந்திய சினிமா அதையும் அர்த்தபூர்வமாகப் பிரதிபலிக்க முயற்சிப்பதில்லை.

2011இல் வெளியான் இன்சப்ஷன் (Inception) என்னும் திரைப்படம் மிக வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்டது. தன் கனவிலிருந்து மற்றொருவரின் கனவுக்குள் புகுந்து அவரது சிந்தனையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலையில் கைதேர்ந்தவனைப் பற்றிய கதை அது. அதுபோன்ற படத்தை இந்திய மொழிகளில் எடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று திரையுலகத்தினர் சொல்வார்கள். ஆனால் இன்சப்ஷன் இந்தியாவில் பெற்ற வெற்றி இந்த வாதத்தை நீர்த்துப்போக வைத்துவிட்டது. இன்சப்ஷன் போன்ற படங்கள் இந்தியாவில் எடுக்கப்படாததற்கு ரசிகர்கள் காரணமல்ல என்பது தெளிவாகிறது.

பாய்ஸ் டோண்ட் க்ரை என்னும் படம் ஆணாகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் சூழல் சார்ந்த நெருக்கடிகளைப் பற்றிய படம். மிக நுட்பமாகவும் யதார்த்தமாகவும் இந்தப் பிரச்சினையை அணுகிய இந்தப் படம் வெகு ஜன ரசனைக்கான படம்தான். இதுபோன்ற படங்களை இந்திய சினிமாவால் இன்னமும் யோசிக்கக்கூட முடியவில்லை. மிஸஸ் டவுட்ஃபயர் என்னும் படத்தின் ஆதாரமான அம்சத்தைத் தழுவி எடுக்கப்பட்ட அவ்வை சண்முகி சிறந்த பொழுதுபோக்குப் படம்தான். ஆனால் மிஸஸ் டவுட்ஃபயர் படம் வெகுஜன ரசனை என்னும் சட்டகத்துக்குள் நுட்பமான சில உணர்ச்சிகளை அற்புதமாகக் கையாண்டிருந்தது. கணவன் - மனைவிக்கிடையேயான உறவின் நுட்பமான சில அம்சங்களை மிக மெல்லிய குரலில் அழகாகக் கையாண்டது. ஆனால் அவ்வை சண்முகியை உருவாக்கியவர்களால் நகைச்சுவையைத் தாண்டி எதையும் யோசிக்க முடியவில்லை.

அப்படி யோசிக்கக்கூடிய சிலரும் சினிமா இன்று பெற்றுள்ள வணிகப் பரிமாணத்தினால் அதை நெருங்க முடியாதவர்களாக இருக்கிரார்கள். ப்ளாக், சாவரியா, தாரே ஜமீன் பர், பா, பர்ஃபி என்று சில படங்கள் இந்த வகையில் முக்கியமான சில உடைப்புகளை ஏற்படுத்தினாலும் இதிலும் பெரும்பாலான படங்கள் வணிக நிர்ப்பந்தங்களால் நீர்த்துப்போவதைப் பார்க்க முடிகிறது. தவிர, பல படங்கள் வித்தியாசமான படங்கள் என்னும் தோற்றத்தை மட்டுமே கொண்டுள்ளன. சற்றே ஆழமான பார்வையில் இவற்றின் சாயம் வெளுத்துவிடுகிறது.

இந்நிலையில் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் (ஈரான்), சிட்டி ஆஃப் காட் (பிரேசில்) போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை எப்போது இந்தியப் படங்கள் ஏற்படுத்தப்போகின்றன என்ற நினைவே ஆயாசத்தைத் தருகிறது.

தொழில்நுட்ப ரீதியில் இந்திய சினிமா வளர்ந்திருக்கிறது என்றும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்கள் இங்கே உருவாகின்றன என்றும் சொல்லப்படுவதையும் அம்ஷன் குமார் மறுக்கிறார். ஹாலிவுட் கலைஞர்களை அழைத்துவந்து இங்கே வேலை செய்ய வைப்பதால் இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டது என்று சொல்ல முடியாது என்கிறார். 'ஒரு குறிப்பிட்ட வகையில் பெரிதாகப் பேசப்படும் இந்தியப் படத்தையும் அதே வகையில் உள்ள ஹாலிவுட் படத்தையும் பாருங்கள், வித்தியாசம் புரியும்' என்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுக்கிறார். 'பிரம்மாண்டம் என்பது கதையின் தேவையை ஒட்டி உருவாகும் அம்சமாக இருக்க வேண்டும். டைட்டானிக் போன்ற ஒரு படத்தை எடுக்கும்போது அதன் கதையே அதற்கான பிரம்மாண்டத்தைக் கோருகிறது. அவதார் போன்ற படங்களும் அப்படியே. ஆனால் சாதாரணமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு பாடல் காட்சியில் மட்டும் பனத்தை வாரி இறைத்து எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டுவதெல்லாம் பிரம்மாண்டம் ஆகாது' என்கிறார் அவர்.

நமது உள்ளடக்கத்துக்கு ஏற்ற நமது சினிமா மொழி ஒன்று இங்கே உருவாகவில்லை என்றும் அம்ஷன் குமார் ஆதங்கப்படுகிறார். சத்யஜித் ராய், ரித்விக் கட்டக் போன்ற சில அற்புதமான கலைஞர்கள் இங்கே தோன்றினாலும் வேறு மொழிகளில் ஏற்பட்ட அளவு கலை ரீதியான ஆக்கங்கள் இங்கே உருவாகவில்லை என்று வருத்தப்படுகிறார். இங்மாக் பெர்க்மேன், தார்க்கோவ்ஸ்கி முதலான கலைஞர்களை ஒவ்வொரு மொழியிலும் ஏராளமாகக் காண முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தாலும் இந்திய சினிமா பெரிதாகப் பக்குவம் அடைந்துவிடவில்லை. ஒரு பெண் எவ்வளவுதான் திறமைசாலியாக, மகத்தானவளாக இருந்தாலும் அவள் ஆணுக்கு அடங்கிப்போகத்தான் வேண்டும், கற்பும் தாலியும் ஒரு பெண்ணுக்கு உயிரைவிட மேலானவை, சிவப்பு உயர்ந்தது, கருப்பு வெறுக்கப்பட வேண்டியது என்பதுபோன்ற கற்பிதங்களை வலுப்படுத்தி அதன் மூலம் பயன் பெற்ற பெருமை(!) அனைத்து மொழி வணிகப் படங்களுக்கும் உண்டு. மதம், சாதி ஆகியவற்றால் பிரிந்திருக்கும் இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மதம், சாதி சார்ந்த கோட்பாடுகளைச் சாடாமல் அவற்றால் விளைந்த வேறுபாடுகளை ஊக்குவிக்கும் படங்களும் வணிகம் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.

'தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே,' அண்டை நாடான பாகிஸ்தான் தீவிராவாதிகள் மட்டுமே வாழும் நாடு, அது இந்தியாவின் எதிரி' - இவை இந்திய வணிகப் படங்கள் தொடர்ந்து முன்னிறுத்தும் பிம்பங்கள்.

இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் இன்று இந்திய சினிமா உலக அரங்கில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளதை மறுக்க முடியாது. கான் போன்ற திரைப்பட விழாக்களில் இந்திய சினிமா இடம்பெறுகிறது. ஆஸ்கர் விருதுகளையும் இந்திய சினிமா பெற்றுவிட்டது. உலகம் போற்றும் இசைக் கலைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்திய சினிமாவின் சந்தை விரிவடைந்திருக்கிறது. ஷாருக் கான், அமிர் கான், லதா மங்கேஷ்கர், ஏ.ஆர். ரஹ்மான், ரஜினிகாந்த் போன்றவர்கள் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்கள். ஒரு படம் ஒரே நாளில் சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மட்டுமின்றி நியூ யார்க், வாஷிங்டன், லண்டன், டோக்கியோ போன்ற நகரங்களிலும் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராய் போன்ற இந்திய நட்சத்திரங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அழைக்கப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சினிமாவில் முதலீடு செய்கின்றன.

நூறாண்டு கண்ட இந்திய சினிமா உலக சந்தையில் கால் பதித்திருப்பதை அதன் பெரும் சாதனைகளில் ஒன்றாகச் சொல்லலாம். இதே ஊக்கத்தை உள்ளடக்கத்திலும் கலை அம்சங்களிலும் முற்போக்கான அம்சங்களிலும் காட்டினால் வரும் நூற்றாண்டில் அது உலக அரங்கில் தலைமை ஏற்கும் நிலை உருவாகலாம். அதற்கான படைப்புத் திறன் இங்கே பலரிடம் உள்ளது. வணிக நெருக்கடிகளும் மெனக்கெடலுக்கான முனைப்பின்மையும். சமூக, அரசியல் குறுக்கீடுகளும் அந்தப் படைப்புத் திறன் வெளிப்படத் தடைக்கற்களாக உள்ளன. இதுதான் இந்திய சினிமாவின் பெரிய பிரச்சினை. இதைச் சரிசெய்தால் இந்திய சினிமா உலக அரங்கில் மதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

11/23/2012 12:14:44 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்