Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி திரைக்கதைப் பிரதியா?

ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி திரைக்கதைப் பிரதியா?
பொன். மதிவாணன்

 

'பிரதி - திரையில் எழுதும் ஒப்பற்ற ஓவியம்' எனும் தலைப்பில் பொங்குதமிழில் வெளியான நான்கு தொடர்கள் தொடர்பிலும் எனது பதிவை இங்கே முன்வைக்கின்றேன்.

திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. இக் கூட்டுமுயற்சியில் திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கமெராக் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் எனப் பலர் பங்குவகிக்கின்றனர்.

ஒரு திடைப்படத்திற்கு அடித்தளமிடுவது ஒரு கரு. அக் கருவே பின்னர் திரைக்கதையாகின்றது. அவ்வகையில் ஒரு திரைப்படத்திற்கு அடித்தளம் இடுவது திரைக்கதை என்று கூறலாம். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதையும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு நல்ல உதாரணங்களை பொங்குதமிழில் வெளியான தொடர்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி திரைக்கதை மட்டும் எனக் கொள்ளலாமா? ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை சில சமயங்களில் திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குனர்களும் ஒருவராகவே அமைந்து விடுவதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் இயக்குனர் தனது மனப்பதிவுகளை இலேசாக வெளிக்கொண்டு வரலாம்.

ஆனால், திரைக்கதை ஆசிரியரும், இயக்குனரும் இரு வேறுபட்ட நபராக இருக்கின்றபோது அங்கே இயக்குனரின் பணி இன்னும் அதிகமாகின்றது. வேறு ஒருவரால் எழுதப்பட்ட திரைக்கதையை முழுமையாக உள்வாங்கி, அதனை வெற்றிகரமான திரைப்படமாக படைக்க வேண்டிய அதீத பொறுப்பு இயக்குனரின் தலையில் விழுந்து விடுகின்றது.

ஒரு திரைப்படத்தை இயக்குகின்ற இயக்குனர்கள் முதலில் திரைக்கதைக்குரிய சூழலையும், நடிகர்களையும் தெரிவு செய்கின்றனர். இங்கே நடிகர்களின் தெரிவு என்பது மிகவும் முக்கியமானது.

குறிப்பாக, 'நீர்க்குமிழி' எனும் திரைப்படத்தின் கதாநாயகனான குணச்சித்திர நடிகர் நாகேஷ் இயக்குனர் கே.பாலச்சந்திரனால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இது மிகச்சிறந்த தேர்வு. நாகேஷை விட இக் கதாபாத்திரத்தை வேறு எவராலும் செய்திருக்க முடியாது. அந்தளவுக்கு தன் குணச்சித்திரத்தால் அப் பாத்திரத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கே நாகேஷின் நடிப்புத் தான் அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது. அத் திரைப்படத்தை பார்த்த அனைவரையும் நாகேஷ் குலுங்கி அழ வைத்திருந்தார். இத் திரைப்படத்துக்காக நாகேஷை தெரிவு செய்த இயக்குனர் பாலச்சந்தர் இங்கே தனது ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கின்றார். இத் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு பாலச்சந்தரின் ஆளுமையும், நாகேஷின் நடிப்பும் முக்கிய பங்கு வகித்தது.

இயக்குனர் பாலச்சந்தர் தான் இயக்கும் திரைப்படங்களுக்கு நடிகர்களைத் தெரிவு செய்யும்போது எப்போதுமே அதிகம் கவனம் செலுத்துவார். அதுவே அவரின் ஆளுமைமிக்க இயக்கத்துடன் அத் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைகின்றது. இதற்கு நிறைய உதாரணங்களை நீங்கள் காணலாம்.

அதேபோன்று இன்னுமொரு மிகச்சிறந்த இயக்குனர் நம்மவரான பாலு மகேந்திரா. இவர் தனது கமேராவைக் கொண்டே திரைக்கதையை நகர்த்திச் செல்லக்கூடிய ஆளுமை மிக்கவர். குறிப்பாக, 'மூடுபனி', 'அழியாத கோலங்கள்' மற்றும் 'மூன்றாம் பிறை' போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம். இத் திரைப்படங்களின் பிரதியைவிட அத் திரைக்கதையை கமெரா நகர்த்திச் சென்ற விதமே முக்கியமானது. இதே பாலு மகேந்திரா வர்த்தக ரீதியில் சமரசம் செய்து இயக்கிய திரைப்படமான 'நீங்கள் கேட்டவை' தோல்விப் படமாக அமைந்திருந்தது.

இன்னொரு வகையில் பொங்குதமிழில் குறிப்பிட்டிருந்தது போன்று திரைக்கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்'. 'முள்ளும் மலரும்'. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தமையும் இக்கட்டுரை மறுப்பதற்கில்லை.

அதேவேளை, தற்போதைய மேற்கத்தேய திரைப்படங்களில் தொழில் நுட்பம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் பிரதிபலிப்புக்களை தமிழ் திரைப்படங்களிலும் நாங்கள் காணலாம்.

நடிகர் மற்றும் இயக்குனர் கமல்காசனின் அண்மைய திரைப்படங்கள் தொழில் நுட்பத்தில் அதிகம் கவனம் செலுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. குறிப்பாக, அவரின் 'ஆளவந்தான்', 'தசாவதாரம்' போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம். அவர் திரைப்படத்தில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அதில் அவர் சிலவிடங்களில் வெற்றியும், சிலவிடங்களில் தோல்வியும் கண்டுள்ளார். இதேபோன்று இயக்குனர் சங்கர், ரஜனிகாந்தை வைத்து இயக்கிய 'இயந்திரன்' திரைப்படத்தையும் ஓர் உதாரணமாக இங்கே குறிப்பிடலாம்.

இவை எல்லாவற்றையும் விட இரசிகர்களின் இரசனையும் ஒரு திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு ஒரு திரைப்படத்தை எடுக்கின்றபோது இரசிகர்கள் அத் திரைப்படத்தை நிராகரிப்பார்களாயின், அந்த தயாரிப்பாளரால் மீண்டுமொரு திரைப்படத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதற்கு தயாரிப்பாளர் குஞ்சுமேனனை நல்ல உதாரணமாகக் கொள்ள முடியும்.

ஆனால், அண்மைக் காலங்களில் மிகக்குறைந்த செலவில் மிகச் சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம். இத் திரைப்படங்ககளை இளைய இயக்குனர்களே இயக்கியிருந்ததுடன், அதில் புதுமுகங்களே நடித்துமிருந்தனர். இத் திரைப்படங்களின் வெற்றிக்கு அத் திரைப்படங்களின் யதார்த்தத் தன்மையும், இயல்பான நடிப்பும் முக்கிய பங்கு வகித்துள்ளன. கூடியளவு யதார்த்தத் தன்மைக்கும். இயல்பான நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதை நாம் காணலாம். மலையாளத் திரைப்படங்கள் கூடியளவு யதார்த்தத் தன்மைக்கும். இயல்பான நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றமையை நாம் காணலாம்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இரகசிகர்கள் இரசனையிலேயே தங்கியுள்ளது. அது என்ன படம் என நாங்கள் திரையரங்குகளில் வெதும்பிக் கொண்டிருந்தபோது, அத் திரையரங்கை இரசிகர்களின் விசிலடிச் சத்தம் அதிரவைக்கின்றதை நாங்கள் காணலாம். ஆனால் அத் திரைப்படத்தில் உப்புச்சப்புக் கூட இருக்காது. இதனை என்னவென்று சொல்வது?

மொத்தத்தில் ஒரு நல்ல திரைப்படம் என்பது எது? ஒரு நல்ல திரைப்படத்தின் வெற்றிக்கான காரணிகள் என்னவென்பது தொடர்பில் ஒரு ஆழமான விவாதம் தேவை என்பதே உண்மை.

3/9/2012 4:18:48 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்