Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் சினிமாவின் பீஷ்மர் கே.பாலசந்தர்

தமிழ் சினிமாவின் பீஷ்மர் கே.பாலசந்தர்
பொன் மாதவன்

 

தமிழ் சினிமாவின் பீஷ்மர் என அழைக்கப்படும் கே.பாலசந்தரின் பிறந்த நாள் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி என அண்மையில் எங்கோ படித்திருந்தேன்.

இச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது 'நீர்க்குமிழி' என்ற திரைப்படம்தான். இந்தப் படத்தை நான் பார்த்த போது எனக்கு பதின்ம வயதிருக்கும் என நினைக்கிறேன். என் வாழ்வில் பத்துத் தடவைக்கு மேல் பார்த்த திரைப்படம்.

மேடை நாடகங்களை இயக்கி வந்த பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமும் இதுவே. நாகேஷ் என்கிற அற்புதமான கலைஞரை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு வெளிவந்த படம் 'நீர்க்குமிழி'.

மனித உணர்வுகளுக்கு இடையில் இருக்கின்ற சிக்கல்கள் குறித்து மையம்கொண்ட இப் படம், தமிழ் சினிமாவின் போக்கில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. இப் படத்துக்கு நாகேஷின் இயல்பான நடிப்பும் உயிர் கொடுத்திருந்தது.

இப் படத்தில் மத்தியதர வர்க்க மக்களின் சிக்கல்களை பேசிய பாலசந்தர் தன்னுடைய இறுதிப்படம் வரை அதனையே அதிகமாகப் பேசியிருந்தார். 

தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இவர், தஞ்சை மாவட்டத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தவர்.

'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்' போன்ற நாடகங்கள் மூலம் புகழ் பெற்ற இவரை தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு கதை, வசனம் எழுதுவதற்காக தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர்.

1965இல் இயக்குநராக அறிமுகமான இவர், 45 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

தமிழில் 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'தாமரை நெஞ்சம்', 'மேஜர் சந்திரகாந்த்', 'நாணல்', அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'நான் அவன் இல்லை', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'அச்சமில்லை அச்சமில்லை', 'தண்ணீர் தண்ணீர்', 'தில்லு முல்லு', 'நிழல் நிஜமாகிறது', 'நூல் வேலி', 'மனதில் உறுதி வேண்டும்', 'சிந்து பைரவி', 'உன்னால் முடியும் தம்பி', 'வானமே எல்லை' உள்ளிட்ட இவரின் பல படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சமூக, அரசியல் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இத்தகைய படங்களை உருவாக்கிய இவர்,

தொலைக்காட்சிக்காக சிறந்த தொடர்களையும் இயக்கியுள்ளார். திரைப்படங்களில் காட்டிய அதே நுணுக்கத்தை தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பாலசந்தரின் கதாநாயகர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை உயிரோட்டமாக தனது படங்களில் வெளிப்படுத்துவதில் பாலசந்தர் வெற்றி பெற்றிருந்தார். இவரின் கதை மாந்தர்கள் பலர் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

நாடக இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட பாலசந்தரின் அறிமுகங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிதாமகனான பாலசந்தரை இன்றைய இயக்குநர்கள் பலரும் தமது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளமைக்கு அவருடைய எளிமையும், கதை சொல்லும் பாணியும், திறமையானவர்களை அடையாளம் கண்டு பாராட்டும் குணமும்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.

இவரின் 'இரு கோடுகள்', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றவை. தெலுங்கில் வெளியான 'ருத்ரவீணா' எனும் படம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருதைப் பெற்றிருந்தது. 'ஒரு வீடு இரு வாசல்' என்ற படம் சமூகப் பிரச்சினையை சொல்லும் சிறந்த படமாக மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்டது.

1973இல் தமிழக அரசின் கலைமாமணி விருது, 1987இல் இந்திய அரசின் பத்மசிறீ விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்ற பாலசந்தருக்கு 2010ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்தமைக்காக அவருக்கு இவ் விருது வழங்கப்பட்டிருந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர், தமிழ் திரையுலகில் இவ் விருதைப் பெற்ற இரண்டாவது நபராகவும், முதலாவது இயக்குநராகவும் பாலசந்தர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

7/29/2012 3:22:29 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்