Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புகலிடத் தமிழர்களிடம் ரஜினிகாந்தின் பாதிப்பு

புகலிடத் தமிழர்களிடம் ரஜினிகாந்தின் பாதிப்பு
யமுனா ராஜேந்திரன்

 

நடிகர் எனும் அளவில் அரசியல், பண்பாடு, திரைத்தொழில், வெகுமக்கள் நினைவு என பன்முகப்பட்ட வெளிகளில் மிகப்பெரும் தாக்கத்தினை உருவாக்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். திரைவெளியில் அவரை ஒப்பீட்டு நிலையில் வைத்துத்தான் இன்று எவரதும் தாக்கத்தை நாம் பேசமுடியும். எம்.ஜி.ராமச்சந்திரனது தாக்கத்தினையும் கூட திரையெனும் ஊடகத்தில் நட்சத்திரநிலை எனும் பிம்பவழிபாடு எவ்வாறு மிகையதார்த்தமாக உருவாக்கப்படுகிறது எனும் அடிப்படைகளில் இருந்துதான் நாம் துவங்க வேண்டும்.

கிளின்ட் ஈஸ்ட்வுட்டும், சூவர்ஸ்நேக்கரும் உலகில் சூப்பர்ஸ்டார்களாக உருவாகி வந்த அதே அளவுகோள்கள் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் ரஜினிகாந்திற்கும் பொருந்தும். இன்றைய அரசியல், பண்பாட்டு, பொருளியல் கருத்துக்கள் எவ்வாறாக பகாசுர ஊடகங்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பகுதியினரின் இலாப நலன்களுக்குத் தக்கவாறு பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்குகிறதோ, அது போலவே திரைநாயகர்கள் குறித்த மிகையதார்த்த கருத்துக்கள் என்பதும் திரைத்தொழில் எனும் ஊடகவெளியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப்பகுதியினரின் இலாப நலன்களுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

திரைவெளி என்பதும் அது தரும் இலாபம் என்பதும் திரும்பத் திரும்ப உற்பத்தி செய்யப்பட வேண்டுமானால் சூப்பர்ஸ்டார்கள் குறித்த விநோதக் கதைகளும், ஐதீகங்களும், அவர்களது சொந்த வாழ்வு குறித்த பரபரப்புச் செய்திகளும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும். கிளின்ட் ஈஸ்ட்வுட் அமெரிக்காவில் துப்பாக்கிப் பலத்துடன் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிய வெள்ளை அமெரிக்கர்களின் கவ்பாய் வீரனாகவும், சூவர்ஸ்நேக்கர் உலக ஆயுத வல்லரசாகின அமெரிக்காவின் வெல்லப்படமுடியாத வீரனாகவும் வெகுமக்கள் நினைவுகளில் செலுத்தப்படுகிறார்கள். அவர்களது குளோசப் காட்சிகள் திரும்பத்திரும்ப உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு அரசியல் மற்றும் தேசபக்தச் செயல்பாடு.

இதே மாதிரித்தான் அரசியல் அதிகாரம் பெறுதல், அதற்காக நிலவும் சமூக முரண்களைப் பயன்படுத்துவது எனும் நோக்கில் தூயபிம்பமாக, திராவிட சாகச வீரனாக எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிறுத்தப்பட்டார். அடுத்து வந்த தலைமுறையினரில் வடக்கில் எவ்வாறு அமிதாப்பச்சன் கோபக்கார இளைஞனாக எதிர்மறைப் பாத்திரங்களில் எழுச்சி பெற்றாரோ, அவ்வாறுதான் தெற்கில் ரஜினிகாந்த் எழுச்சி பெற்றார். ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து, மிகப்பெரும் பணக்காரராக ஆகியவராக கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் ஆதர்ஷமாக, உழைத்து முன்னேறுவதன் ஆதர்ஷமாக ஆகினார்.

சிறந்த தகப்பன், அரசியலில் அகிம்சையுடன் கருத்துச் சொல்லும் பொறுப்பான இந்திய தேசியக் குடிமகன் எனும் பிம்பத்தை அவர் திரைப்பிம்பத்திலும் சொந்த வாழ்விலும் உருவாக்கி கொண்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அதற்காகவே ரஜினிகாந்தைப் பாராட்டினார். இந்தக் காரணம் கருதியே இலண்டன் மேடம் துசாத் மெழுகுப் பொம்மை அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்தின் சிலை வைக்கப்பட வேண்டும் எனக் கையெழுத்து இயக்கமும் தமிழகத் தமிழர்களால் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்மறைப் பாத்திரங்கில் பெரும் வெற்றி குவித்த ரஜினிகாந்த் பின்னாளில் குடும்பங்கள் முழுவதும் நேசிக்கும் ஒரு சாகசக்காரனாக தன்னை உருவாக்கிக் கொண்டார். ரஜினிகாந்த் எனும் உலக அளவில் வளர்ந்த நிதிமூலதன பிம்பம் உலக மக்களது இடப்பெயர்வினதும் உலகவயமாதலினதும் விளைவுகள்தான். ஹாலிவுட் படங்கள் எங்கெங்கு சென்று சேர்ந்ததோ அங்கெல்லாம் கிளின்ட் ஈஸ்ட்வுட்டும் சூவர்ஸ்நேக்கரும் திரைவழி இலாபம் என்பதனைக் குவிக்கும் உற்பத்திகளாகவே ஆகினார்கள். திரைப்படத்துறைகள் வளர்ச்சி பெறாத ஆப்ரிக்க நாடுகளில் அமிதாப்பச்சனின் திரைப்படங்கள் இந்த இடத்தை எடுத்துக் கொண்டன. குடும்பம், வீட்டுப் பெண்கள், பொறுப்பான குடும்பத்தலைவன் போன்ற மதிப்பீடுகளை மேன்மையாகக் கருதிய சீனா, ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளில் ரஜினிகாந்தின் படங்கள் பெருவெற்றி பெற்றதில் ஆச்சர்யமும் இல்லை.

அமிதாப்பச்சன், ரஜினிகாந்த படங்கள் மட்டுமல்ல, இந்தி-தெலுங்கு-தமிழ் படங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்று வசூலில் டாப் 10 இடத்திற்கு வருவதில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை. இந்த நாடுகளிலுள்ள இந்தி-தெலுங்கு-தமிழ் மொழி பேசுபவர்களால் விநியோகிக்கப்பட்டு, இந்த நாடுகளுக்குக் கணிசமாகக் குடிபெயர்ந்திருக்கிற இந்தி-தெலுங்கு-தமிழ் பேசுபவர்களால்தான் இந்தப்படங்கள் பாரக்கப்படுகின்றன. இந்தப் படங்களின் பிரதான பார்வையாளர்கள் அதே இந்தி-தெலுங்கு-தமிழ் மொழி பேசும் பார்வையாளர்களேயல்லாது, அவர்கள் பாரம்பர்ய வெள்ளையின அமெரிக்க-ஐரோப்பியப் பார்வையாளர்கள் இல்லை. இந்த வகையில் அமெரிக்க-ஐரோப்பிய டாப் 10 பட வரிசையில் ரஜினிகாந்த் படங்களை வைத்து உருவாக்கப்படும் பிம்பங்கள் மிகை யதார்த்தமானவை. இவ்வகையில், அமெரிக்காவிலும்-ஐரோப்பிய நாடுகளிலும் வசூல் குவிக்கும் ரஜினிகாந்த படங்கள் ஹாலிவுட் பகாசுர சினிமாவுக்குச் சவால் விடும் படங்களாக உருவாவது என்பது சாத்தியமில்லை.

எந்திரன் படம் குறித்து இரு பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. ஹாலிவுட் சினிமா இயக்குனர் ஆலிவர் ஸ்டோன் இந்தியாவில் எந்திரனைப் பார்த்துப் பாராட்டினார் என்று பரவலாகப் பத்திரிக்கைகளில் பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின ஆலிவர் ஸ்டோனை ஒரு இயக்குனராக அறிந்தவர்களுக்கும், அவரது பிளட்டூன், ஸால்வடோர், லுக்கிங் பர் பிடல், ஜே.எப்.கே போன்ற திரைப்படங்களையும் அவைகளது அரசியலையும் அறிந்தவர்களுக்குத் தெரியும், அவரது கருத்துக்கள் என்பது பிறிதொரு நாட்டின் படம் குறித்த பெருந்தன்மையான ஒரு அபிப்பிராயம் அன்றி வேறில்லை. ரிட்லி ஸ்காட்டின் பிளேட் ரன்னர் திரைப்படத்தினுடன் ஒப்பிட, ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் ஷங்கரின் அதே காதலும் துரத்தலும் கொண்ட, ஹாலிவுட் கிரேபிக்ஸ்கள் நிறைந்த ஒரு டிஜிட்டல் இந்தியன் படம் என்பதற்கு அப்பால் பிறிதொன்றும் இல்லை.

புகலிடத் தமிழர்களிடம் ரஜினிகாந்தின் பாதிப்பு

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப கணிணி யுகத்தலைமுறையின் இடப்பெயர்வினால் கணிசமான தமிழகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்கிற தமிழகத் தமிழர்கள் ஐரோப்ப முழுமையிலுமாக ஒரு இலட்சம் பேராக இருக்க முடியும். கனடா, ஐரோப்பா, அமெரிக்கா என இன்று வாழும் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் அரசியல், பண்பாட்டு மற்றும் திரை வாழ்வில் ரஜினிகாந்தின் தாக்கம் என்பது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அதற்கான காரணமாக அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்த முப்பதாண்டு காலப் போர்வாழ்வும், இடப்பெயர்வும், ஈழ விடுதலைப் போராட்டம் அவர்களிடையில் தோற்றுவித்த அரசியல் விழிப்புணர்வும் என்று சொல்ல முடியும். இந்தக் குறிப்பிட்ட முப்பதாண்டு காலம்தான் ரஜினிகாந்த் ஒரு திரைநாயகராக உருவாகிவந்த காலகட்டம் என்றும் சொல்லலாம்.

ஈழத்தில் முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவும், ஐரோப்பிய நாடுகள் நோக்கிய புலப்பெயர்வின் விளைவாகவும் உருவான பிறிதொரு வளர்ச்சி, புலத்திலும் புகலிடத்திலும் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட வந்த கணிசமான குறும்படங்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்கள். புலத்தில் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியின் அனுசரணையில் நூற்றுக் கணக்கிலான குறும்படங்கள் மற்றும் முழநீளத் திரைப்படங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். புகலிடம் வந்தவர்களாலும் கணிசமான குறும்படங்களும் முழநீளப்படங்களும் உருவாக்கப்பட்டன. இந்தத் திரைப்படங்களை உருவாக்கியவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு புதிய தலைமுறை இயக்குனர்களாக இருந்தார்கள்.

இந்தப் படங்களில் புலத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் ஹாலிவுட் சாகசப் படங்களின் பாதிப்பும், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா அதனோடு மனோரதிய தமிழ் சினிமாவின் பாதிப்பும்தான் இருந்ததேயொழிய ரஜினிகாந்த், விஜய், அஜீத், போன்றவர்களின் சாகசப் படங்களின் பாதிப்புத் துப்பரவாக இருக்கவில்லை. இன்னும் பிரபாகரனின் திரைநாயகர்களாக எம்.ஜி.ராமச்சந்திரனும் குறிபார்த்துச் சுடுவதில் வல்லவரான கிளின்ட் ஈஸ்ட்வுட்டும்தான் இருந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் உருவாக்கிய குருதிச் சன்னங்கள் எனும் திரைப்படம் பிரெஞ்சுத் திரைப்படமான லியோனின் கதாநாயக நடிகரான ழான் ரெனோவின் பாதிப்பைத்தான் கொண்டிருந்தது. 1999 எனும் கனடிய முழுநீளத் திரைப்பட இயக்குனரான லெனின் சிவத்தின் ஆதர்ஷமாக சிட்டி ஆப் காட், அமரோஸ் பெரோஸ் போன்ற இலத்தீன் அமெரிக்க கேங்க்ஸ்டர் படங்களினது நடிகர்களின் பாதிப்புத்தான் இருந்தது.

வேறு வகையான காரணங்களுக்காக, ஈழத்தமிழ் இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக நடிகர் விஜய், அஜீத் போன்றவர்கள் இருக்கிறார்கள். முப்பதாண்டு கால வன்முறை வாழ்வின் விளைவாக, உறவுகள் சிதறியதன் விளைவாகப் புகலிடத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களிடம் தொண்ணூறுகளிலும் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலும் வளர்ச்சி பெற்றிருந்த கேங்க்ஸ்ட்டர் குழுக்களின் ஆதர்ஷ நாயகர்களாக வன்முறையை மட்டுமீறி வெளிப்படுத்திய படங்களை கணிசமாகக் கொடுத்து, அதற்காக இளம் பெண்களால் காதலிக்கப்படும் பாத்திரங்களை ஏற்ற, விஜய்யும் அஜீத்தும் இருந்திருக்கிறார்கள். ரசனை எனும் அளவில் கார்ட்டூன் படங்களில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளின் விருப்புக்கு உரியவர்களாக ரஜினிகாந்தும் விஜய்யும் குறிப்பிட்ட காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். அதற்குக் காரணமாக கார்டூன் சித்திரங்களை ஒத்த உடல் மொழியை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதனை நாம் காணவியலும். 

தமிழகத்தில் இன்று எவ்வாறு ரஜினிகாந்தின் ரசிகர்களில் பெரும்பாலுமானவர்கள் 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்கிறார்களோ அதே மாதிரியிலான குடும்ப அமைப்பை அன்றாட வாழ்வில் பிரதான வாழ்முறையாகக் கொண்ட திரைப்படம் பார்ப்பவர்கள் ஈழத்தமிழர்களிலும் இருக்கிறார்கள் எனும் அளவில் மட்டும்தான் ரஜினியின் பாதிப்பு என்பது ஈழத்தமிழர்களிடம் இருக்கிறது.

தமிழக நடிகர்களில் புலத்திலுள்ள மற்றும் புகலிடத்திலுள்ள ஈழத்தமிழர்களிடம் பெரும்பாதிப்புச் செலுத்திய நடிகர் எனில் அவர் எம்.ஜி.ராமச்சந்திரன்தான். ஓடுக்கப்பட்ட மனிதரின் நாயகனாக அவர் உருவாக்கி வளர்த்த திரைப்பிம்பமும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர் போற்றியதும், விடுதலைப் புலிகளுக்கு அவர் அள்ளித்தந்த கோடிகோடியான நிதியும் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். இது குறித்து காலஞ்சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தனது விடுதலை எனும் நூலில் தனியாக ஒரு அத்தியாமே எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடலான அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும் எனும் பாடல் விடுதலைப்புலிகளின் முகாம்களில் பாடப்பட்ட முழக்கப் பாடலாக இருந்திருக்கிறது. எம்.ஜி.ராமச்சந்திரன் மரணமுற்றபோது அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கில் அந்த நிகழ்வு தேசிய துக்க நாளாகவே அனுஷ்டிக்கப்பட்டது. தொகுத்துக் கொள்கிறபோது, அரசியல், பண்பாடு, ரசிக மனோபாவம், புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களின் படைப்புகள் எனும் அளவில் ரஜினிகாந்தின் பாதிப்பு என்பது தமிழகத் தமிழர்களின் மீதானதைப் போல புகலிட ஈழத்தமிழர்களிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

12/10/2011 8:54:44 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்