Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அலசல்: திணறும் சிறிய பட்ஜெட் படங்கள்

அலசல்: திணறும் சிறிய பட்ஜெட் படங்கள்
அரவிந்தன்

 

தமிழில் வரும் படங்களை ஏகதேசமாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நட்சத்திர பலம் கொண்ட படங்கள். நட்சத்திர பலம் என்றால் பெரிய நடிகர்கள் என்றில்லை. பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்ற நட்சத்திர பலம்தான். இந்தப் படங்கள் பெரிய அளவில் தயாராகின்றன. அதே நேரத்தில் பெரும்பான்மையான அளவில் இத்தகைய படங்கள்தான் வியாபாரம் ஆகின்றன. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களின் நிலைதான் பரிதாபம். அவர்களுக்கு நட்சத்திர பலம் இல்லாததால் எளிதில் வியாபாரம் ஆவதில்லை. சில படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே பெட்டிக்குள் முடங்கிவிடுகின்றன. இருப்பினும் சிறிய பட்ஜெட் படங்கள் உருவாகவே செய்கின்றன. எத்தனையோ சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் அதிர்வுகளை எழுப்பிய ஒரு களத்தில், இன்று ஏன் அத்தகைய படங்கள் வெற்றிபெறுவதில்லை என்பது முக்கியமான ஒரு கேள்வியாக உள்ளது.

பணபலம் பெற்ற தயாரிப்பாளர்கள், வெற்றிபெற்ற நட்சத்திரங்கள், நிலையான இடம்பிடித்துவிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், அதி தீவிரமான மார்க்கெட்டிங் ஆகியவை அனைத்தையுமோ அல்லது ஏதேனும் ஒன்றையோ பயன்படுத்திப் படம் பார்க்க நினைப்பவர்களின் கவனத்தைத் தங்கள்பால் ஈர்த்துவிடுகிறார்கள். இதற்கு அந்தப் படங்களில் நட்சத்திர பலமும் பட்ஜெட்டும் ஒத்துழைக்கின்றன. ஆனால் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு இந்தச் சாதகம் கிடைப்பதில்லை. 

ஆனால் இதற்கு பட்ஜெட்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. சிறிய பட்ஜெட் படங்களுக்குப் போதிய விளம்பரம் கிடைக்காது என்பதெல்லாம் பழங்கதை. 1999இல் வெளியான படையப்பா மாபெரும் வெற்றிபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சொந்தத் தயாரிப்பான அந்தப் படத்துக்கு விளம்பரங்களுக்காக ஒரு கோடி வரை செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதைப் பற்றி பல படங்களின் மொத்த பட்ஜெட்டே ஒரு கோடிக்கு குறைவாக இருப்பதை ஒரு பேட்டியின்போது சுட்டிக்காட்டினார் இயக்குநர் சேரன்.

தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கலைப்புலி.எஸ்.தாணு ஆகியோர் விளம்பரங்களுக்காகவே புகழ் பெற்றவர்கள். இவர்களோடு சின்ன பட்ஜெட் படங்களால் போட்டிபோட முடியாத நிலை இருந்தது உண்மைதான்.

அதிக செலவில் உருவாக்கப்படும் படங்கள் பெரும்பணத்தை விளம்பரங்களுக்கு செலவழிப்பது சகஜம்தான். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டில் கணணியும் இணையமும் வந்துவிட்டன. திரைப்படங்கள் பற்றிய செய்திகளைத் தர பல வலைதளங்கள் இருக்கின்றன. அவை, அனைத்துத் திரைப்படங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தையே தருகின்றன. முன்னணி பத்திரிகைகள் முதல் சிறு பத்திரிகை வரை அனைத்துப் பத்திரிகைகளும் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு படத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே செய்கின்றன. அதுவும் வித்தியாசமான படம் என்றால் பட்ஜெட் எப்படி இருந்தாலும் அது சட்டென்று கவனத்தை ஈர்த்துவிடுகிறது. அழகர்சாமியின் குதிரை முதல் மதுபானக் கடை வரை பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

இவற்றுக்கு மேல் ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்றவை மூலம் ரசிகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் வசதியும் இன்று படமெடுப்பவர்களுக்கு இருக்கிறது.

எனவே இந்தப் படங்கள் கவனம் பெறாமல் போவதற்குக் காரணம் இவற்றின் உள்ளடக்கத்தின் மீது மக்களுக்கிருக்கும் அவநம்பிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றில் உள்ளடக்கம் நன்றாக இருக்கும் படங்களைப் பற்றி மக்களுக்குச் சொல்ல ஆளில்லை. எனவே பல நல்ல படங்கள் வந்த சுவடே தெரியாமல் போகின்றன என்று சில தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். ஊடகங்கள் ஓரளவு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் பல படங்களுக்கு இந்த அனுகூலம் கிடைப்பதில்லை. 'படத்தில் நட்சத்திர பலம் இல்லையென்றாலும் புதுமையாக, வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா? அப்படி எதுவுமே இல்லாத படங்களைப் பற்றி ஊடகங்கள் என்ன பேச முடியும்?' என்று கேட்கிறார் பிரபல ஊடகம் ஒன்றின் திரைப்பிரிவில் பணியாற்றும் மூத்த இதழியலாளர் ஒருவர்.

உள்ளடக்கம் சிறப்பாக இருக்கும் படங்களை பத்திரிகைகளும் வலைதளங்களும் கொண்டாடவே செய்கின்றன. 2011இல் வெளியான் ஆரண்ய காண்டம் படம் இதற்கான சிறந்த உதாரணம். தேர்ந்த இயக்கம், தொய்வில்லாத திரைக்கதை, உலகத் தரமான பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என அனைத்து விஷயங்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தன. இதற்கு ஊடகங்களிலும் கவனம் கிடைத்தது. என்றாலும் அந்தப் படம் வியாபார ரீதியாகத் தோல்வியைத் தழுவியது.

அலசல்: திணறும் சிறிய பட்ஜெட் படங்கள்

மதுபானக்கடையை இதற்கு அண்மைய உதாரணமாகச் சொல்லலாம். ஒரு டாஸ்மாக் கடையின் பின்னணியில் சமூக அவலங்களைச் சாடிய இந்தப் படத்தை முன்னணி பத்திரிகைகளான விகடனும் குமுதமும் வெகுவாகப் பாராட்டின. இருப்பினும் இந்தப் படம் ஒரு வாரத்தில் திரையரங்குகளை விட்டு வெளியேறியது.

பல மாதங்கள் காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான லீலை படமும் விமர்சகர்களிடம் நல்ல பெயரெடுத்தாலும் வியாபார வெற்றிபெறவில்லை.

இந்த மூன்று படங்களும் தோற்றதற்குக் காரணம் விளம்பர, பட்ஜெட், நட்சத்திர பலம் முதலான காரணங்கள் அல்ல. இவை முழுமையான திரைப்பட அனுபவம் தராததால் ரசிகர்களிடம் எடுபடவில்லை என்று தோன்றுகிறது. ஆரண்ய காண்டத்தில் வன்முறை அதிகம். பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. லீலை சென்னை இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய படமாக இருந்தது. மதுபானக்கடை நல்ல முயற்சி என்றாலும் ஆவணப்படம் பார்த்த உணர்வைத்தான் கொடுத்தது.

பல சின்ன பட்ஜெட் படங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி ஒரு முழுமையான திரைப்பட உணர்வை ஏற்படுத்தத் தவறுவதே இந்தப் படங்கள் வியாபாரத் தோல்வியைத் தழுவுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று படங்களும் தோற்றாலும் நல்ல பெயர் எடுத்தன. ஊடகங்கள் கவனித்தன. ஆரண்ய காண்டம் விருதுகளை வாங்கியது. மதுபானக் கடைக்கும் விருது கிடைக்கலாம். ஆனால் பெரும்பாலான சிறிய பட்ஜெட் படங்கள் பொருட்படுத்திப் பேசவே அருகதை அற்றவையாக உள்ளன என்பதுதான் சோகம்.

''புது இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க ஆசைதான். ஆனால் அவர்கள் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன கதையையே சொல்கிறார்கள். நான் தயாரித்து வெற்றிபெற்ற படமொன்றின் கதையை உல்டா செய்து என்னிடமே சொல்கிறார்கள்.' என்கிறார் ஒரு முன்னணித் தயாரிப்பாளர்.

இந்தப் படங்களின் மற்றொரு பிரச்சினை புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு ஒரு சின்ன பட்ஜெட் திரைப்படம் வெற்றிபெற்றுவிட்டது என்றால் அதேபோன்ற சாயலில் பல படங்களை எடுப்பது. சுப்ரமணியபுரம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மதுரையைக் கதைக் களமாகக் கொண்ட பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் அவற்றில் எதுவும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மைனா வெற்றிக்குப் பின், படிக்காமல் சண்டித்தனம் செய்து திரியும் இளைர்களின் காதலைப் பற்றிய படங்கள் வந்துபோயின. பாட்ஷா, கில்லி, தூள் ஆகிய ஆக்ஷன் படங்களும் பூவே உனக்காக, காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை போன்ற காதல் படங்களும் சில மாற்றங்களுடன் பல பிரதிகளைக் கண்டுவிட்டன.

புது இயக்குநர்களுக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருக்கும் பிரச்சினைகளும் அதிகம். அதை பத்திரிகையாளரும் சின்னத்திரைத் திரைக்கதை ஆசிரியருமான முருகேஷ் பாபு விவரிக்கிறார். ''கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் படம் எடுக்க ஒப்புக் கொண்டுவிடுகிறார்கள். ஆனால் பின்னாளில் அவர்களுக்கு அந்தக் கதையின் மீது பயம் வருகிறது. எனவே வெற்றிபெற்ற படங்களின் சாயலில் குத்துப் பாட்டு, காமடி ட்ராக் போன்றவற்றைச் சேர்க்கச் சொல்லி இயக்குநர்களை வற்புறுத்துகிறார்கள். இதுபோன்ற தேவையற்ற இடைச்செருகல்களுக்கு ஆகும் செலவு படத்துக்காகத் திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை பாதிக்கிறது. இயக்குநர் தான் எடுக்க நினைப்பதை எடுக்க முடிவதில்லை. ஓரளவுக்கு தன்னை நிரூபித்துவிட்ட இயக்குநர்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். புது இயக்குநர்களுக்குத் தான் நினைப்பதை எடுக்கும் சாத்தியம் மிகக் குறைவாகவே இருக்கிறது'' என்கிறார் அவர்.

''முன்னணித் தயாரிப்பாளர்கள், ஸ்டார் நடிகர்கள் அல்லது இயக்குநர்களை வைத்துத்தான் படம் தயாரிக்க முன்வருகிறார்கள். அவர்கள் புதுமுகங்களை வைத்து ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. ஆனால் ஒரு புதுத் தயாரிப்பாளர் ரிஸ்க் எடுத்துத் தயாரித்த படம் நன்றாக இருந்துவிட்டால் அதை வாங்கி வெளியிட பல தயாரிப்பாளர்கள் போட்டிபோடுகிறார்கள். இந்தப் போக்கைக் கைவிட்டு நல்ல கதையை நம்பிப் படங்கள் தயாரிக்க வேண்டும். ஸ்டார் நடிகர்கள், இயக்குநர்களைப் போல் பெரிய பேனர்களுக்கும் நன்மதிப்பு இருக்கிறது. திறமையுள்ள புதுமுகங்களுக்கு அது பயன்பட வேண்டும். இயக்குநர் ஷங்கர் இதைச் செய்தவர்களில் முக்கியமானவர்'' என்கிறார் பாபு.

இந்தப் பிரச்சினை புதிதல்ல. இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொல்லிய விஷயம் அதை நிரூபிக்கிறது. அவர் ரஜினியை வைத்து எடுத்த முள்ளும் மலரும் வெற்றிபெற்றது. அதனால் வேற்றுமொழிப் படமொன்றின் உரிமையை வாங்கி ரஜினியை நாயகனாக வைத்து ஒரு முன்னனித் தயாரிப்பாளர் தயாரிக்க இருந்த கை கொடுக்கும் கை படத்தை இயக்கும் வாய்ப்பு மகேந்திரனுக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் கதாநாயகி கற்பழிக்கப்படுவதுபோல் இருக்கும் கதையமைப்பை ரஜினி மாற்ற விரும்புவதாகவும் அதனால் அதை மாற்றியே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர் வற்புறுத்தினாராம். அதனால் கதை மாற்றப்பட்டது, படம் தோல்வி அடைந்தது. பின்னாளில் அந்த மாற்றத்தைப் பற்றி ரஜினியிடம் மகேந்திரன் தெரிவித்தபோது, தான் எதையும் மாற்றச் சொல்லவில்லை என்றாராம் ரஜினி.

ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. ''எங்களைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு வியாபாரம். இது சூதாட்டம் போன்ற வியாபாரம். எது ஜெயிக்கும், எது தோற்கும் என்று கூற முடியாது. எனவே வெற்றிபெற்ற படங்களில் இடம்பெற்ற விஷயங்களை வைப்பதைத்தான் பாதுகாப்பானதாகக் கருத வேண்டியிருக்கிறது.' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

சேதுவில் அறிமுக இயக்குநரும் பிரபலமாகாத நடிகர்களும்தான் நடித்தார்கள். அதில் குத்துப்பாட்டு இல்லையா? கதையை விட்டுக் கொடுக்காமல் படமெடுத்ததால்தான் அந்தப் படம் ஓடியது. எனவே குத்துப்பாட்டு வைக்கச் சொன்னார்கள், என் க்ரியேட்டிவிட்டியே போய்விட்டது என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்கிறார் அவர்.

தன் படத்துக்கு இவ்வளவு பட்ஜெட் ஆகும் என்று தெரிந்தும் அதைவிட குறைவான செலவில் படத்தை முடிப்பதாக ஒப்புக்கொண்டு கடைசி நேரத்தில் அதிகப் பணம் கேட்டு கந்துவட்டிக்காரர்களிடம் மாட்டவைக்கும் இயக்குநர்களும் இருப்பதாக கூறுகிறார்கள், தயாரிப்பாளர்கள் பலர்.

ஆக, இன்று பிரச்சினை நட்சத்திர பலமோ பண பலமோ அல்ல. எல்லா நெருக்கடிகளையும் மீறி ஆண்டுக்கு ஏறத்தாழ 150 படங்கள் வருகின்றன. இதில் புது இயக்குநர்கள் 30 பேராவது வாய்ப்புப் பெறுகிறார்கள். இவர்களுடைய படங்களில் ஓரளவேனும் படைப்புத் திறனும் வித்தியாசமான அம்சங்களும் இருந்தால் அவர்களுக்குக் கவனம் கிடைக்கத்தான் செய்கிறது. கதையில் சமரசம் செய்துகொள்ளாமல் பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து கொடுக்கும் படங்கள் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தவறாமல் வெற்றி பெறுகின்றன.

எனவே, இயக்குநர்கள் உள்ளடக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது, படைப்பு வீரியத்தோடு செயல்படுவது, தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளையும் திறமையான புதுமுகங்களை ஊக்குவிக்க முன்வருவது ஆகியவையே சின்ன பட்ஜட் படங்கள் அதிகமாக வெற்றிபெறும் சூழலை உருவாக்கும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்னும் சிறு பாடலில் 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ' என்று கேட்டார் பாரதியார். படைப்பு வீரியம் இருந்தால், அதை வெகுஜன ரசனைக்கு ஏற்ப நேர்த்தியாக முன்வைக்க முடிந்தால், ஆர்வம் கொழுந்துவிட்டு எரியும் என்பதில் சந்தேகம் இல்லை.

9/15/2012 9:12:12 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்