அபிநயன்
புலம்பெயர் சமூகத்தின் பெரும்பாலான தமிழர் இல்லங்களில் தென்னிந்தியத் திரைப்படமும், தொலைக்காட்சித் தொடர்களும் முகாமிட்டுள்ள நிலையில், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் விம்பம் அமைப்பு 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
சமகால கலை, இலக்கிய, ஓவிய, நாடக மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமாக புதிய தேடலில் ஆர்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது.
கலை, இலக்கியம், விமர்சனங்கள், நூல் வெளியீடுகள், நவீன ஓவியங்கள், புகைப்படங்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற துறைகளில் விம்பம் தனது கவனத்தைக் குவிக்க முற்பட்டுள்ளது.
இவ்வகையில் 2004ஆம் ஆண்டு விம்பம் அமைப்பின் முதலாவது குறுந்திரைப்பட விழா இடம்பெற்றபோது அதற்கு கிடைத்த ஆதரவு அவர்களை மேன்மேலும் நம்பிக்கையுடனும், உற்சாகத்தோடும் பயணிக்க வைத்தது.
இந்நிலையில், தமது ஏழாவது குறுந்திரைப்பட விழாவை விம்பம் அமைப்பு இவ்வாரம் நடத்தவுள்ளது. இதற்காக 104 குறும்படங்கள் இலங்கை, இந்தியா, நோர்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் இருந்து வந்திருக்கின்றன. இலங்கையில் இருந்தும் பிரான்ஸில் இருந்தும் வந்த சில படங்கள் தங்களை வியக்க வைப்பதாக விம்பம் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
கனவுத் தொழிற்சாலையான தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, புதிய சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட பல தமிழ் குறும்படங்கள் விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருந்தன.
புலம்பெயர்ந்த வாழ்வுச் சூழலில் செழுமைமிகு பயிராக புலம்பெயர் சினிமா உருவாகலாம் என்ற நம்பிக்கையை தமிழ் குறும்படங்கள் ஏற்படுத்தியுள்ளதாக மு.புஸ்பராஜன் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் பல தமிழ் குறுந்திரைப்படங்கள் விம்பத்தின் குறுந்திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளதாக விம்பம் அமைப்பின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள பல திரைப்படச் சங்கங்களும், இந்தச் சங்கங்களால் நடாத்தப்படும் குறுந்திரைப்படப் போட்டிகளும் குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தின.
இந்த நம்பிக்கையும், உற்சாகமும் ஒன்றுசேர ஈழம், புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியா என பல்வேறுபட்ட நாடுகளில் இருந்து அவர்களின் வாழ்வியல் சூழலை மையமாகக் கொண்டு பல குறுந்திரைப்படங்கள் விம்பத்தின் குறுந்திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளன.
விம்பத்தின் ஐந்தாவது குறுந்திரைப்பட விழாவில் தேசத்தின் எல்லைகளைக் கடந்து இலங்கை, இந்தியா, கனடா, இலண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்றிருந்த குறுந்திரைப்படங்கள் தமிழ் குறுந்திரைப்படங்கள் தொடர்பில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக ஈழத் தமிழர்களின் குறுந்திரைப்படங்கள் இந்த நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டியிருந்தன.
இக்குறுந்திரைப்பட விழாவில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் ’பசி’ என்ற சிறுகதையை இந்தியப் படைப்பாளி இமயவர்மன் குறுந்திரைப்படமாக படைத்திருந்தார். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ந்திருந்த இக்குறுந்திரைப்படம் பார்வையாளர்கள் தெரிவு செய்த சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதைப் பெற்றிருந்தது.
2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற விம்பத்தின் ஐந்தாவது குறுந்திரைப்பட விழா போட்டிக்கென வந்திருந்த 31 படங்களில், முதல் சுற்றில் 19 படங்கள் தெரிவாகின. இரண்டாவது சுற்றில், அந்த 19 படங்களினுள் 11 படங்கள் மட்டும் விழாவில் திரையிடப்பட்டன. அவற்றுடன் யாழ்ப்பாணம் ஜெய்பூர் நிலையத்தில் இருந்து வந்திருந்த ’இவர்கள் வாழ்வும் இனிதே அமைய...’ 30 நிமிட ஆவணப் படமும் திரையிடப்பட்டது.
இவ்விழாவில் தமிழ் குறுந்திரைப்படங்கள் பற்றிய மீளாய்வினை நிகழ்திய ’எதுவரை’ சஞ்சிகை ஆசிரியர் எம்.பௌஸர்,
’தமிழ் குறும்படத் தயாரிப்பாளின் உழைப்பினை ஊக்குவிக்கவும், கௌரவிக்கவும் தமிழில் குறும்படங்களுக்கான உரையாடல் களமாகவும், விளைநிலமாகவும் குறும்பட நிகழ்ச்சியை விம்பம் நடத்திவருகின்றது. நமது பன்முகமான பண்பாட்டுத் துறையில் திரைப்பட உருவாக்கம், சாதனம் வகித்து வரும் பங்கு அளப்பரியது’ எனவும், ’தமிழில் குறுந்திரைப்படமென்பது இன்று முக்கிய புறக்கணிக்க முடியாத துறையாக வந்துவிட்டது. தமிழ்ச் சூழலில் குறுந் திரைப்படத்தின் உருவாக்கம், நல்ல தமிழ் மொழி திரைப் படங்களுக்குப் பங்காற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விம்பம் போட்டிக்கென வந்திருந்த படங்கள் இதைக் கோடிட்டுக்காட்டி நிற்கின்றன’ என குறிப்பிட்டுப் பேசினார்.
அதேவேளை, விம்பத்தின் 2010ஆம் ஆண்டுக்கான குறுந்திரைப்பட விழா தொடர்பில் விமர்சகர் மு.நித்தியானந்தன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
ஈழத்தின் அநாதரவாகிப்போன தமிழர்களின் நடைமுறை அவலங்கள் விரித்திருக்கும் சோகச்சித்திரத்தின் பின்னணியில், நம் கலாசார முயற்சிகள் தொடர்கின்றன. இத்தகைய கலாசார பேணுகை பற்றிய சிந்தனை ஏக்கப்பெருமூச்சில் முகிழ்க்கிறது. சிதறுண்ட நெஞ்சில் விகாசம் கொள்கிறது.
சமூக வீழ்ச்சிகள், அவலங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள், அரசியல் சூறாவளிகள் மத்தியிலும் கலை இலக்கிய முயற்சிகள் பெரும் சிகரங்களைக் கண்டிருக்கின்றன. சேற்றிலே பிறக்கும் செந்தாமரை போல. அழிவுகளின் மத்தியிலும் பெரும் சாதனைகளை மனிதகுலம் சாதித்திருக்கிறது. விம்பமும் அந்த சரித்திர சாதனையின் வழியில் நம்பிக்கையோடு பயணிக்கிறது.
விம்பம் கம்பீரமான மனவலிமை கொண்ட மனிதர்களின் தார்மீக பலத்தில் இயங்குவது. ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்களுக்கு அப்பால் அமைதியாகப் பணிசெய்ய விரும்பும் நல்ல இதயங்களின் ஒன்றியம் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்குறுந்திரைப்பட விழாவிற்கு பிரதம விருந்தினராகத் தமிழகத்திலிருந்து திரைப்பட இயக்குநர் திரு அம்ஷன்குமாரும், அவரது துணைவி தயாரிப்பாளர் தாரா அம்ஷன்குமாரும் வருகை தந்திருந்தார்கள். திரு அம்ஷன்குமார் அவர்கள் தமிழ் ஆவணப்படத் தயாரிப்பில் கவனத்திற்குரிய ஒருவராவார்.
அதேவேளை, விம்பத்தின் ஆறூவது குறுந்திரைப்பட விழா தொடர்பில் ஜெயன் தேவா குறிப்பிடுகையில், சினிமா என்ற கலை வெளிப்பாட்டின் மீதான ஆர்வமும் வித்தியாசமான முறையில் செய்து முடிக்க விளையும் மனோபாவமும் சேர்ந்து புலம்பெயர் தமிழரிடையே பல முயற்சியாளர்களை உருவாக்கியிருந்ததை நான் விம்பம் விழா மூலமே அறிந்து கொண்டேன்.
ஆறாவது குறும்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் கூடிய முறையில் அவர்களது படங்கள் அமைந்திருந்தன என்றே தோன்றியது..
இப்படங்களினூடே தமிழ் இளையோரின் இன்னொரு முகத்தை நான் காண முடிந்தது. ஒவ்வொரு படத்தின் பின்னணியிலும் தனிநபராகவும், ஒத்த ஆர்வம் கொண்ட நண்பர் குழுவாகவும் அவர்களது அயராத உழைப்பு வெளிப்பட்டுள்ளது. அவர்கள் நவீன சினிமாவின் மொழியில் பரிச்சயம் கொண்டிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிக்கல்களையும், மன அவலங்களையும் சொல்ல முயற்சிக்கிறார்கள். நவீன சினிமாவின் உத்திகளுடன் அவர்கள் எமது சமூகத்தின் பிரச்சனைகளை காட்சிப் பொருளாக்கியுள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்க் குறுந்திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு விம்பம் ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் அமைப்பாகச் செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ்க் குறுந்திரைப்படங்களுக்கான பரந்த ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்குவதிலும், இப்படங்களை உலகு தழுவிய அளவில் எடுத்துச் செல்வதற்கும் விம்பம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.